Advertisement

அபிராமி ஏற்றிய தீபம் – 2
அத்தியாயம் 2
“நான் வேணா உதவி செய்யட்டுமா?”
“அச்சச்சோ அதலாம் வேணாம்! நீங்க எதுக்கு சிரமப்படுணும்.”
“இதுல என்ன சிரமம் கீர்த்தனா! இதலாம் எங்க துணி தான? உனக்கு தான் நாங்க சிரமம் தந்து இருக்கோம்.”
கீர்த்தனா துணியை உதறி கொடியில் போட்டப்படி, அவனைப் பார்த்தாள்.
“வீட்டுக்கு வந்தவங்கல நல்ல படியா கவனிக்கணும். அதானே முறை! நாளைக்கே நாங்க உங்க வீட்டுக்கு வந்தா கவனிப்பிங்க தானே?”                      
என்று பட்டென்று கேட்டவள், நாக்கை கடித்துக் கொண்டாள். அவன் கொள்ளெனச் சிரித்தான்.
“அப்படினா இதலாம் கடனா! நாங்க திருப்பி கட்டணும்ங்கற! சரி தான்!”
அவன் அப்படி கேட்க, இவள் சற்று திகைத்து துணியை வேகமாய் உதறினாள். அவன் மீது நீர்த்துளிகள் சாரல் மாதிரி விழுந்தது. 
“அய்யோ! மன்னிச்சுடுங்க!”
என்றவள் திரும்பி துணியைக் கொடியில் போட்டாள்.
“எதுக்கு மன்னிப்பெல்லாம்?”
“ரெண்டுத்துக்கும்தான்! பேசினதுக்கு, தண்ணீர் தெளிச்சதுக்கு.”
அவன் அவளருகே வந்து , துணியை எடுத்துக் காயப் போடத் தொடங்கினான்.
அவன் மௌனமாய் வேலை செய்ய, இவளும் அமைதி காத்தாள். வேலை சீக்கிரமாய் முடிய ,அவள் அவனை நோக்கினாள்.
“நன்றி! நான் கீழே போறேன்! அம்மா எதிர்பார்ப்பாள்.”
என்று கூறி விட்டு, நடக்க தொடங்கினாள்.
“காய்ந்த பிறகு எடுக்க வருவாயா?”
என்று அவன் கேட்க, இவள் திரும்பி ஆச்சரியமாய் பார்த்தாள்.
“வரு…வேன்!”
லேசாக இழுத்துக் கூறியபடி, அகன்றாள்.
*****
இரண்டு நாட்கள் ஓடிவிட்டன. அபிராமி அங்கே வந்தாள்.
“அபிராமி! வா! வா!”
என்று உற்சாகமாய் கீர்த்தனா அழைத்தாள்.
“என்..னடி ஆளையே காணோம்! நான் கோவிலுக்கு வரலைனு கோவிச்சுட்டு வீட்டுக்கு வரலையா?”
“சீ… அதெல்லாம் ஒண்ணும் இல்லடி!”
என்று மற்றவள் காரணத்தை விளக்கினாள்.
“ஓ… அதானே பார்த்தேன்.”
“சரி சரி உங்கிட்ட ஒண்ணு சொல்லணும்டி!”
என்று கூறிய கீர்த்தனா குரலைத் தாழ்த்திக் கொண்டாள்.
“என்னடி?”
இவளும் கிசுகிசுத்தாள்.
கீர்த்தனா இவள் காதோரம் வந்து அன்று கோவிலில் கண்ட செய்தியைக் கூறினாள்.
“ஆங்… என்னது என்ன மாதிரியா?”
என்று அபிராமி வாயைப் பிளந்தாள்.
“சத்தியமாடி அச்சு அசல் உன்ன மாதிரியே!”
“பேரு என்ன சொன்னா?”
“ஜா..னகி!”
“எனக்கு பயமா இருக்குடி கீர்த்தி!”
“அடி லூசு பயப்படாத! நீ இப்படி முழிப்பனு தெரிஞ்சிருந்தா நா சொல்லியே இருக்க மாட்டேன்.”
“அ..ப்புறம் என்னதுக்கு சொன்னையாம்?”
என்று கேட்ட அபிராமியின் மூக்கு சிவந்தது.
“உம்! ரெண்டு நாளா மனசுலையே வச்சுட்டு இருந்து எனக்கு மண்டை உடைஞ்சுடும் போல இருந்துச்சு. அதான் கேட்டேன். அது இல்லாம ஒரு சந்..தேகம்.”
என்றவள் இழுத்தாள்.
அபிராமி சற்று நிமிர்ந்து அமர்ந்து அவளின் முகத்தைப் பார்த்தாள்.
“என்ன?”
“இல்ல அந்..த ஜானகியும் நீயும் ரெட்டை குழந்தையா இருப்பீங்களோனோ ஒரு சந்தேகம். எதாவது அப்படிக் கதை இருக்கா?”
கீர்த்தனா பேசப் பேச அபிராமி பயங்கரமாய் முறைத்தாள்.
“உன்னை!”
என்று கையை ஓங்கியபடி அடிக்கப் போனாள். கீர்த்தனா இலாவகமாய் தப்பித்து , வீட்டுத் தோட்டத்தை நோக்கி ஓடினாள். பின்னோடு இவளும் துரத்தினாள்.
கீர்த்தனா ஒரு மாமரத்தின் பின்னே பிடிபடாமல் நின்றாள்.
“வ..ந்துடுடி!” என்று அபிராமி இப்படிப் பாய்ந்தாள், இன்னொருத்தி அப்படிப் பாய்ந்தாள்.
மூச்சு இரைக்க, அபிராமி,
“ஒழுங்கா மரியாதையா வந்து ரெண்டு தோப்புக் கரணம் போடு விட்டுடுறேன்.”
என்று மிரட்டினாள்.
இவர்களின் கூச்சலில் அணில் ஒன்று மேலிருந்து குதித்தது. இருவரும் அண்ணாந்து பார்த்தனர். கொத்து கொத்தாய் பச்சை மாங்காய்கள் மெல்லிய தண்டை பிடித்துக் கொண்டு ஊஞ்சல் ஆடின. வாசம் மூக்கை தாண்டி அடி வயிற்றைத் தீண்ட, இருவருக்குமே நாவில் எச்சில் ஊறியது.
“அடியே! சண்டைய அப்புறம் வச்சுக்கலாமா?”
என்று கீர்த்தனா எச்சிலை விழுங்கியபடி கேட்டாள்.
“எனக்கும் அப்படிதான் தோணுதுடி! ஓடிப் போய் கத்தியும் மிளகாய்த் தூளும் கொண்டா!”
“இதோ!” என்று கீர்த்தனா பாய்ந்து வெளியே வர, அபிராமி வாட்டமாய் நின்று கீர்த்தனாவின் காதை திருகினாள்.
“மா..ட்டினியா? யாருகிட்ட?”
“விடுடி! மாங்காய்க்கு பொடி தர மாட்டேன்டி!”
அவள் முதுகில் செல்லமாய் அடித்த அபிராமி,
“போடி! எடுத்தா..” என்று கீர்த்தனாவை உந்தினாள்.
கீர்த்தனா மறைய அபிராமி சற்று எக்கி, பச்சையாய் தடியாக இருந்த இரண்டு மாங்காய்களை ஆசையாகப் பறித்தாள். மரத்திலிருந்து கையை அகற்றிய நேரம் சரியாக மறைவிலிருந்த ஒரு சர்ப்பம்,’ச்ச்ச்…!’ என்று சத்தம் எழுப்பியபடி இவளது கையைத் தீண்டியது.
பச்சை மாங்காய்கள் கீழே தொப்பென விழ,
“ஆ…….!”
என்று அலறியபடி, அபிராமி கீழே சுருண்டு விழுந்தாள்.
சத்தம் கேட்டு கீர்த்தனாவும் , ரகுவும் ஓடி வந்தனர்.
சரக்கென்று கொள்ளையின் சுவர் விளிம்பில் மறைந்த சர்ப்பத்தைக் கண்டவர்கள் உறைந்து போயினர்.
“அ..பிராமி! அபிராமி!”
என்று இவள் பதறியபடி தூக்கினாள்.
ரகுவும் அருகில் விரைந்து வந்தான்.
கருவண்டு விழிகள் மூடிய நிலையில், நீள் நாசி கத்தி மாதிரி நீண்டு இருக்க, அழுந்த மூடியிருந்த உதடுகளோடு காட்சி தந்த நங்கையைக் கண்டு ரகுவிற்கு இரக்கம் சுரந்தது.
“யாரிது ?”
“என் தோழி அபிராமி!”
“கையில் பாம்பு கடிச்சு இருக்கு! அந்தப் பாம்பு சாதாரணமானது இல்லை. உயிரு..”
அவன் கூறி முடிப்பதற்குள், இவள்,
“அ..ய்யயோ!” என்று அலறினாள்.
“ப்ச்! கத்தாத!”
“கத்தாம சிரிக்க சொல்றீங்களா? அபிராமி! அ..பிராமி!”
அவள் கண்களில் கண்ணீர் கொட்ட அரற்றினாள்.
அதற்குள்ளே ஒரு துணியைக் கிழித்து விஷம் பரவாத வகையில் இறுக்கமாய் கட்டினான். அவர்களது வண்டியை வேகமாய் எடுத்து வந்து நிறுத்தி, கீர்த்தனாவின் உதவியோடு பின்னே தூக்கிப் படுக்க வைத்தான். வண்டி மின்னல் வேகத்தில்  மருத்துவமனையை நோக்கி ஓடியது.
அதற்குள்ளே கீர்த்தனா,
“சீக்கிரம் சீக்கரம்!” என்று ஆயிரம் தடவை சொல்லி இருப்பாள்.
“இதுக்கு மேல சீக்கிரம் போனா நாமும் போக வேண்டியதுதான்மா!”
“அய்யோ! இப்படி அபசகுனமா பேசாதிங்க.”
அவள் கண்களை இறுக மூடி சொல்ல, அவன் ஒரு கணம் அவளை ஆழமாய் திரும்பி பார்த்துவிட்டு, கவனத்தை சாலையில் செலுத்தினான். 
மருத்துவமனை வந்துவிட, அபிராமிக்கு உடனே சிகிச்சை தொடங்கியது. அதற்குள்ளே அபிராமியின் குடும்பமும், கீர்த்தனாவின் பெற்றோர்களும் தகவல் அறிந்து அங்கே ஓடி வந்தனர்.
“காலையில நல்லா இருந்த குழந்தை இப்படி இங்க வந்து படுத்துக் கிடக்கறாளே! பாம்பு கடிச்சுடுச்சாமே. அப்படி என்ன பாவம் செய்தோம்?”
துர்கா கண்ணீர் விட்டாள்.
“அழாதீங்க அத்தை! ஒண்ணும் ஆகாது.”
கீர்த்தனா தேற்றினாள்.
“கொள்ளைல என்னடி விளையாட்டு?” விசாலம் மகளைக் கடிந்தாள்.
“ஏம்மா நாங்க என்ன கண்டோம்? பதிமூணு வருசமா வெளையாடற எடம் தானே? இன்னிக்குனு இப்படி ஆயிடுச்சு. நானும் அங்க தான் நின்னேன். என்னைக் கடிக்கலையே!”
கீர்த்தனா புலம்பினாள்.
“அதையும் இதையும் பேசாதீங்க. அந்த அம்பாள வேண்டுங்க. அவ நிச்சயம் காப்பாத்துவா.”
மாதவன் சமாதானப்டுத்தினார்.
“சரிப்பா!”
என்றவள் கண்களை மூடி அம்பாளை வேண்டினாள்.
“அம்பாளே! அபிராமிய காப்பாத்திடு. அவள் நல்லபடியா பிழைச்சுட்டாள்னா அவ கையால சம்பங்கியும் ரோஜாவும் சேர்த்த மாலைய கட்ட வச்சு உன் கழுத்துல போட சொல்றேன்.”
அவள் நினைத்து முடித்த அதே நேரம் மருத்துவர் இவர்கள் அருகே வந்தார். எல்லோரும் அவர் முகத்தை ஆவலாகப் பார்த்தனர்.
“அபிராமி எப்படி இருக்கா?”
அபிராமியின் தந்தை சத்யவர்மா தவிப்போடு கேட்டார்.
“மன்னிக்கணும். கொஞ்சம் அபாயகரமா தான் இருக்காங்க. விசத்த நீக்கியாச்சு. இருந்தாலும் பாதிப்பு இன்னும் முழுசா நீங்கல. மூச்சு சீரான தான் எதையும் சொல்ல முடியும்.”
அவர் குண்டைத் தூக்கிப் போட எல்லோரின் முகங்களும் பேயறைந்த மாதிரி ஆயின.
“அம்பாளே! உன் சக்தி அவ்ளோ தானா? உன்னை நம்பினேன் பாரு.”
கீர்த்தனா கோபமாய் மனதுள் பேசினாள்.
“போச்சு ஒண்ணே ஒண்ணு. கண்ணே கண்ணுனு வளத்தேனே. இது என்ன சோதனை?”
துர்காவை அமைதிப்படுத்த வழி தெரியவில்லை. கீர்த்தனா நடந்து சென்று கதவின் சிறு கண்ணாடி துளை வழியே தோழியைப் பார்த்தாள். அபிராமி கண்களை மூடிப் படுத்திருந்தாள். கொஞ்சம் பார்வையின் இலக்கை மாற்றிப் பார்த்தவள், சில கணங்களிலே திகைத்துப் போனாள். அந்த ஜானகி அறையினுள்ளே அபிராமிக்கு வெகு அருகில் நின்று கொண்டிருந்தாள். இளமஞ்சல் சேலைக் கட்டியிருந்தவள்  மருத்துவர் அணியும் மேல் உடுப்பு தரித்திருந்தாள். கண்களை மீண்டும் மீண்டும் தேய்த்து பார்த்தாள்.
“ஆமாம். அபிராமியின் நகல். அன்று பார்த்தவள் தான்! இவள் என்ன இங்கே செய்கிறாள்??”

 

Advertisement