Advertisement

அபிராமி ஏற்றிய தீபம் – 1
அத்தியாயம் 1
“அபிராமி!அபிராமி! இன்னிக்குக் கோவில்ல உற்சவம் நீ வரலையா?”
பக்கத்து வீட்டு கீர்த்தனா தன் தோழியை ஆவலாய் கேட்டாள்.
“வரல கீர்த்தி! நீ வேணா போய்ட்டு வா!”
“ஏன்டி? என்னாச்சு?”
“என்ன ஆகணும் கீர்த்தி? பெரிய டாக்டராகணும்னு கனாக் கண்டேன். என் ஆசை எல்லாம் போச்சு. நீட் மார்க் பார்த்தே இல்ல? இந்தக் கோவில் குளம் எல்லாம் போய் என்ன புண்ணியம்? நியாயமான ஆசை எங்கே நிறைவேறுது?”
என்று சலித்தாள்.
கீர்த்தனா சிரித்தாள்.
“என்ன சிரிக்கிற?”
“பரிமள அழகர் மீதும் அம்பாள் மீதும் கோபம்னு சொல்லு.”
“ஆமா கோபம்தான் கடுங்கோபம்! எனக்கு திறமை இல்லையா? தகுதி இல்லையா? ஞானம் இல்லையா? என்ன இல்லை? அப்புறம் ஏன் எனக்கு வாய்ப்பு இல்லை? தரலை?”
அபிராமியின் மூக்கு விடைத்தது.
“இப்போ தரலைடி! ஆனா தர நேரத்துக்கு தருவாங்கடி!”
கீர்த்தனா மிருதுவான குரலில் சொன்னாள்.
அபிராமி சமாதானம் ஆகவில்லை.
“இப்போ பசிக்குது சோறு போடங்கனு சொல்றேன். பத்து பதினைஞ்சு நாள் கழிச்சு வடைப் பாயசத்தோடு விருந்து தரேங்கறாங்களா உன் அழகரும் அம்பாளும்? நான் பட்னியாவே கெடக்கிறேன். நீ போ!”
என்று கூறிவிட்டு விருட்டென உள்ளே நடந்தாள்.
கீர்த்தனா பட்டென்று அபிராமியின் கரத்தைப் பற்றினாள்.
“அப்போ! வரல?”
என்று சிறு அழுத்தமாய் கேட்டாள்.
அபிராமி அவளை முறைத்தாள்.
“இவ்வளவு நேரம் என்ன கதையா சொன்னேன்?”
கீர்த்தனா குபீரென சிரித்தாள்.
“சரி வர வேணாம். ஆனா நீ சொன்னத எல்லாம் சொல்லிடறேன்.”
“சொல்லேன்..! வேணும்னா எழுதியே தரேன்.”
என்றவளுக்குக் கோபத்திலும் சிரிப்பு வந்தது.
“அப்படியாக்கும் சரியம்மா! நானே போயிட்டு வரேன்.”
என்று கீர்த்தனா நடந்தாள்.
“என்ன கீர்த்தனா! உன் சினேகிதி வரலையா?”
என்று அபிராமியின் அம்மா துர்கா விசாரித்தார்.
“அவ..ளுக்கு ஏதோ வேலை போல அத்தை!”
என்று சொல்லிச் சமாளித்தாள்.
“என் மகளைப் பற்றி எனக்குத் தெரியாதா? பிடிவாதக்காரி வீம்புக்குனே வரமாட்டேனு சொல்லி இருப்பாள். நீ உன் தோழிய விட்டுத் தர மாட்டே. அதுக்குனு எனக்குப் புரிஞ்சுக்கத் தெரியாதா?”
கீர்த்தனா அசட்டு சிரிப்பு உதிர்த்தாள்.
“அ…வளுக்கு டாக்டர் கனவு நடக்கலையேனு வேதனை அத்தை!”
“வேதனைப்பட்டு என்னப் பண்றது? மார்க் வரலையே? அதுக்கு கடவுள் வரை கோபப்பட்டா எப்படி கீர்த்தனா? இவ்வளவு வீம்பு தேவையா? அவனுக்குத் தெரியாதா யாருக்கு என்ன தரணும்னு?”
என்று துர்கா அடுக்கினாள்.
கீர்த்தனா அமைதியாக நின்றாள்.
“சரி உனக்கு நேரமாகப் போகுது. ஒரு நிமிசம் இரு!”
என்றவள் உள்ளே சென்று திரும்பினாள்.
கையில் தொடுத்து வைத்திருந்த இரண்டு ஜாதிமல்லி சரங்கள் அழகாய் சிரித்தன.
“உன் தோழி கட்டினதுதான்! இதை அம்பாளுக்கு தந்துடு. எங்கே திரும்..பு!”
என்றவள் மற்றொரு சரத்தை அவள் கூந்தலில் சொருகினாள்.
“சரிங்க அத்தை!”
என்று கூறி அவள் மகிழ்ச்சியோடு  நடந்தாள்.
*******
அம்பாள் அழகரோடு முத்து நகை அலங்காரத்தில் கண்களைக் கவர்ந்தாள். மேனி முழுவதும் ரோஜா மாலைகள் சூழ்ந்திருந்தன. இவள் அய்யரிடம் நீட்டிய ஜாதிமல்லி சரம் அம்பாளின் மார்பில் சேர்ந்தது.
கீர்த்தனா கண்களை மூடி சேவிக்கத் தொடங்கினாள். உடல் முழுவதும் ஒரு வித சக்தி பரவி மனம் நிறைவடைந்தது. 
தரிசனம் நிறைவாய் முடிந்து, சன்னதி தூண் ஒன்றில் அமர்ந்த கீர்த்தனா வருவோர் போவோரை எல்லாம் சற்று நேரம் வேடிக்கை பார்த்தாள்.
திடீரென அவள் கண்கள் அகலமாய் விரிந்து குளிர்ந்து போயின.
அங்கே பட்டுப்புடவை தகதகக்க நடந்து வந்தது சாத்சாத் அபிராமியே தான்!
ஓட்டமும் நடையுமாய் கீர்த்தனா அவள் எதிரே சென்று நின்றாள்.
“அடி திருடி! வர மாட்டேனு சொல்லிட்டு எங்கடி வந்தே? “
என்று கீர்த்தனா அவள் கையைப் பற்றி கிறீச்சிட்டாள்.
மற்றவளோ வியப்பாய் இவளை நோக்கி,
“யார் நீங்க?” என்று கேட்டாள்.
ஒரு அடிப் பின் நகர்ந்த கீர்த்தனா,
“நீ… நீங்..க அபிராமி இல்லையா?”
என்று திணறினாள்.
“இல்லையே! நான் ஜானகி !”
என்று கூறி சிரித்து விட்டு அவள் நடந்தாள்.
மலைத்துப் போய் கீர்த்தனா நின்று விட்டாள்.
******
“இது என்னடா வம்பா போச்சு! என் கண் எதாவது கெட்டுப் போச்சா!” என்று கீர்த்தனா கண்களைக் கசக்கினாள்.
“உலகத்தில் ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்களாமே! அப்படி அபிராமி மாதிரி இந்த  ஜானகி போல.”
என்று மனதைச் சமாதானம் படுத்திக் கொண்டாள்.
ஆனால் இதை யாரிடமாவது சொல்லவில்லை என்றால் அவள் மண்டை வெடித்து விடும் போல இருந்தது.
நேராக வீட்டிற்கு நடந்தாள்.
அங்கே ஒரு பெரிய கூட்டம் வந்திருந்தது. யாராக இருக்கும் என்று யோசித்தபடி, தாய் விசாலத்திடம் வந்தாள்.
“ஏன்டி இவ்வளவு நேரமா? அம்பாள பாத்தமா வந்தமானு இருக்கறது இல்ல.”
“அம்பாள பாத்தா நேரம் போறதே தெரியலேயேம்மா!”
என்று கூறி சிரித்தாள்.
“நல்ல பதில் சொல்லு!”
“அப்புறம் உன் பெண் ஆச்சே!”
“ம்ம்!”
“சரி யாரம்மா வந்து இருக்கா?”
என்று ஆர்வமாய் கேட்டாள்.
“அதுவாடி! டெல்லில இருந்து உங்க அப்பாவோட ஒண்ணுவிட்ட தங்கச்சி மதுரா, அவ வீட்டுக்காரர் நீலகண்டன் ,பையன் ரகுராம் எல்லாம் வந்து இருக்காங்கடி!”
என்று உற்சாகம் பொங்கப் பேசினாள்.
“ஓகோ! அப்படியா? நான் பாத்ததே இல்லையேமா!”
“அதுவாடி அவங்க நீ குழ்தையா இருக்கப்பவே டெல்லில போய் செட்டில் ஆகிட்டாங்க. மாமாவுக்கு மத்திய அரசாங்க வேலை. எங்க அவங்களுக்கு காஞ்சிபுரம் வர நேரம்?”
“ஓ…! அப்ப இப்போ எதுக்கு வந்து இருக்காங்க?”
“அதுவா? “ என்றவள் ஏதோ சொல்ல வந்துவிட்டு, அடக்கிக் கொண்டாள்.
“அப்புறம் அதலாம் பேசலாம்! நீ போய் அத்தை மாமாகிட்ட நாலு வார்த்தை பேசு!”
“நாலு வார்த்தை பேசுனா போதுமாம்மா?”
என்று கேட்டு கீர்த்தனா சிரித்தாள்.
“அடி போடி!”
என்று கூறி விசாலமும் சிரித்தாள்.
******
கீர்த்தனா வெளியே வந்து எட்டிப் பார்த்தாள். அப்பா மாதவன் வந்தவர்களோடு வாய் கொள்ளா சிரிப்போடு பேசிக் கொண்டிருந்தார். மகளைக் கண்டதும் குளிர்ந்து போனவர் ,
“வா! வா! கீர்த்து!” என்று அழைத்து தன் அருகே சோபாவில் அமர்த்திக் கொண்டபடி,
“இதெல்லாம் யாருனு தெரியுதா?”
என்று கேட்டார்.
சின்ன கூச்சத்தோடு,
“தெரியும்பா! அம்மா சொன்னாங்க!”
என்று கூறியபடி எல்லோரையும் பார்த்தாள்.
“கீர்த்தனா! எப்படி இருக்க? அத்தைய அடையாளம் தெரியுதா? எனக்குத் தான் அடையாளமே தெரியல! ஜாடையே மாறி வளர்ந்துட்ட.”
என்று கூறி சிரித்தாள்.
“எ…னக்கும் நினைவு இல்ல அத்தை!”
“இனி தெரிஞ்சுக்கோ. அடிக்கடி ஊர் பக்கம் வருவோம். உங்கள எல்லாம் பார்க்கப் பிரியமா இருக்கு.”
என்றாள் மதுரா.
“ஆமா! மது! சரியா சொன்ன. சொந்த மண்ல இருக்க சுகம் வேறு எதுலையும் வராது. ரிடையர் ஆனா உடனே இங்க கிளம்பிட வேண்டியதுதான்.”
“சரி தான் நீங்களும் நானும் சொன்ன போதுமா? ரகு என்ன நினைக்கிறானோ!”
என்று கூறிய மதுரா மைந்தனின் வதனத்தை நோக்கினாள். அவள் மட்டுமில்லை எல்லோரின் பார்வையும் அங்கு தான் இருந்தது. கீர்த்தனாவும் ரகுவின் முகத்தில் கண்களைப் பதித்தாள்.
ரகு லேசாகச் சிரித்தான். அவன் கண்களும் சேர்ந்து சிரித்தன.
“மா! உங்களுக்கு பிரியம்னா எனக்கு என்ன ஆட்சேபனை! நீங்க வந்துடுங்க. ஆனா நான் அப்பப்ப வந்து பாத்துக்கறேன். எனக்கு போஸ்டிங் எங்க போடறாங்களோ!”
என்று கரகரப்பான குரலில் பேசினான்.
“அதுவும் சரி தான்.” என்று நீலகண்டன் மகனை ஆதரித்தார்.
“என்ன சரி? அவன பாக்காம எப்படி இருக்கறதாம்?”
என்று கேட்ட மதுராவின் மூக்கு விடைத்தது.
ரகு சிரித்தான்.
“அவனை மடியிலையே வைச்சுக்கோ மது!”
என்று நீலகண்டன் கூற அனைவரும் கொள்ளெனச் சிரித்தனர்.
“சும்..மா இருங்க!”
பிறகு விருந்து எல்லாம் சிறப்பாக நடக்க, ஒரு வாரம் அவர்கள் அங்கேயே தங்குவதாக இருந்தது.
கீர்த்தனாவால் அபிராமியின் வீட்டிற்குச் செல்லவே முடியவில்லை. அம்மா அந்த வேலை இந்த வேலை என்று படுத்தி எடுத்தாள். வெண்டைக்காயை அரி, வடைக்குப் பொடிசாகக் கொத்துமல்லி தழையை நறுக்கு, பாயசம் வை, மாடியில் துணியைக் காய வை என்று ஓயாமல் அடுக்கிக் கொண்டிருந்தாள்.
மற்ற நாட்களில் கூட ஏமாற்றி விடலாம்! எல்லோரும் இருக்கும்போது இவளால் மூச்சு கூட விட முடியவில்லை.
துணி டப்பை சுமந்து கொண்டு மாடிப் பறி ஏறினாள். அங்கே ரகு நின்று கொண்டிருந்தான். இவளைப் பார்த்துச் சிரித்தான். இவளும் சிரித்தாள்.

Advertisement