உணவை ஆசையாக தட்டில் பரிமாறி ஹால் வந்தமர்ந்து சாப்பிட்டான். அப்படியே அவனது அம்மாவின் கைப்பக்குவம்.
“ஆஹா ஆஹா யசோ!” என சிலாகித்தவன் அவளை இன்னும் காணோமே என அவளது கைப்பேசிக்கு அழைத்து பார்த்தான். அது வீட்டிலேயே இருக்க, யோசனையோடே வேகமாக சாப்பிட்டான்.
நேரம் சரியாக இருந்தது, இனி ஒரு நிமிடம் தாமதித்தாலும் அலுவலகம் செல்லவும் தாமதமாகி விடும்.
“வந்த முத நாளே வாய்க்கு ருசியா சமைச்சி போட்டு அசத்துறா. அப்படிலாம் அக மகிழ்ந்து போயிடாதடான்னு இப்படி டென்ஷனும் பண்ணுறா” முணு முணுத்துவன் மொட்டை மாடிக்கு சென்றான். துணிகள் காய்ந்து கொண்டிருக்க, அவளை மட்டும் காணோம்.
ஒரு வேளை நான் லிஃப்டில் வந்த நேரம் படிகள் மூலமாக நடந்து வீட்டுக்கு சென்று விட்டாளோ என நினைத்து மீண்டும் வீட்டுக்கு சென்று பார்த்தான். அங்கேயும் அவள் இல்லை.
என்ன கண்ணாமூச்சி விளையாடுகிறாள் என அவனுக்கு கோவமாக கூட வந்தது.
தியாகுவின் வீட்டுக்கு சென்று விவரத்தை சொன்னவன், “இங்க ஏதும் வந்தாளா?” எனக் கேட்டான்.
“இல்லியேடா, ஒழுங்கா பார்த்தியா நீ? எதாவது வாங்க கடைக்கு போயிருக்க போறா” என்ற தியாகுவும் அவனுடன் தரை தளம் வந்து செக்யூரிடியிடம் விசாரித்தான்.
யசோவின் புகைப்படம் இருக்கிறதா, வெளியில் சென்றார்களா என பார்த்து சொல்கிறேன் என செக்யூரிட்டி கேட்க, தியாகு நண்பனை பார்த்தான். மறுப்பாக தலையாட்டிய கெளதம், சிசிடிவி ஃபுட்டேஜ் பார்க்கலாம் என்றான்.
அதற்கு அபார்ட்மெண்ட் செயலாளரின் அனுமதி வேண்டுமென்றான் செக்யூரிட்டி.
“தெரியாத இடத்துல எங்க போனான்னு தெரியலை டா” என பதற்றமாக சொன்னான் கெளதம்.
“நீ திரும்ப வீட்ல போய் பாரு, சிசிடிவி விஷயம் என்னன்னு நான் பார்க்கிறேன்” என சொல்லி நண்பனை அனுப்பி வைத்தான் தியாகு.
யசோவின் கைப்பேசிக்கு அழைத்துப் பார்த்து எடுக்க படாமல் போகவுமே வீட்டில் இருப்பாள் என்ற நம்பிக்கையை இழந்து விட்ட கௌதமுக்கு சற்றே பயமானது.
எண்பது வீடுகள் இருக்கும் அபார்ட்மென்ட் அது. பாதிக்கும் மேல் வாடகைக்கு குடியிருப்பவர்கள். சில வீடுகளில் இள வயதுக்காரர்கள் தனியாகவும் நண்பர்களோடு சேர்ந்து சிலரும் என வசிக்கிறார்கள். யார் என்ன எப்படி என என்ன சொல்ல முடியும்?
கேள்வி படும் விஷயங்கள் அவனை தாறுமாறாக சிந்திக்க வைத்தது.
அலுவலகத்திலிருந்து மேனேஜரின் அழைப்பு வேறு. முதல் அழைப்பை ஏற்காதவன் இரண்டாவது அழைப்பை ஏற்றுக்கொண்டான்.
இன்னும் ஏன் அலுவலகம் வரவில்லை என எடுத்த உடனே அவனுக்கு வசவுகள்தான் கிட்டியது. மேலோட்டமாக விவரத்தை சொன்னான் கெளதம்.
உனக்கு திருமணம் ஆகி விட்டதா என அதிர்ந்தவர், என்னவென பார், வேறு உதவி தேவைப்பட்டால் சொல், பின்னர் அழைக்கிறேன் என கூறி கைப்பேசியை வைத்தார்.
வீட்டுக்கு சென்று திரும்பிய கெளதம், நீச்சல் குளம், பார்க், ஜிம் என ஒரு இடம் விடாமல் பார்த்துக் கொண்டிருக்க, தியாகு அழைத்தான்.
அவன் சொன்ன செய்தியில் கௌதமுக்கு கால்கள் வேரோடி விட்டன. எத்தனை மணிக்குடா என கேட்டறிந்து கொண்டவன், “ரெண்டு மணி நேரம் ஆகுதேடா” என பயந்து போனவனாக சொன்னான்.
“நீ உடனே வா, நாங்க அங்கதான் போயிட்டிருக்கோம்” என தியாகு சொல்ல, கௌதமும் விரைந்தான்.
நடந்து செல்ல நினைத்த யசோவின் பார்வைக்கு சற்று தள்ளி இருந்த இன்னொரு லிஃப்ட் தெரியவும் அதில் நுழைந்திருந்தாள். இரண்டாவது தளம் வரவும் அது ஸ்ட்ரக் ஆகி நின்று விட்டது. கையில் கைப்பேசியும் இல்லை.
கதவை தட்டி சத்தம் போட்டு பார்த்தாள். அந்த தளத்தில் இருந்த முக்கால்வாசி பேர் வேலைக்கு சென்றிருந்தனர், வீட்டில் இருந்த ஒரு சிலரோ வீட்டுக்குள்ளேயே இருந்தனர்.
வீடு, கீழே மேலே என கெளதம் அலைந்து கொண்டிருந்தாலும் அவன் வந்த நேரம் அவள் கதவை தட்டாமல் ஓய்ந்து போயிருந்தாள்.
லிஃப்டின் உள்ளே இருந்த குட்டி மின் விசிறியும் இயங்கவில்லை. அவளுக்கு வியர்த்து விறு விறுத்து விட்டது. முதலில் உதவி கிடைக்கும் எனதான் நினைத்தாள். நேரம் கடக்கவும்தான் பயம் வந்தது. கூடவே அழுகையும் வந்தது.
தாகம், பசி என எல்லாம் சேர்ந்து அவளை தளர வைத்திருந்தது.
ஆனாலும் கெளதம் வந்து விடுவான் என முழுதாக நம்பினாள். இடைவெளி கொடுத்து கதவை தட்டிக் கொண்டே இருந்தாள்.
கெளதம் அங்கு வந்த போது லிஃப்டை திறக்க முயன்று கொண்டிருந்தனர் ஆட்கள்.
“இதெல்லாம் பார்க்க மாட்டீங்களா ஸார்? மெயிண்டனென்ஸ்க்கு மட்டும் எவ்ளோ வாங்குறீங்க?” என செயலாளரிடம் கோவப்பட்டான் கெளதம்.
இப்படி கோளாறு இருப்பதே இன்றுதானே தெரிந்திருக்கிறது, இனி சரி செய்வோம், முதலில் உங்கள் மனைவியை பாதுகாப்பாக வெளியில் வர வைப்போம் என சமாதானமாக சொன்னார் செயலாளர்.
“உள்ள நல்லா இருக்காளா? பேசினாளா சத்தம் கேட்டதுதானே?” என தியாகுவிடம் கேட்டான் கெளதம்.
“கதவு தட்டுற சத்தம் கேட்டது, அமைதியா இரு நீ” என சொல்லி நண்பனை ஆதரவாக பிடித்துக்கொண்டான் தியாகு.
லிஃப்ட் திறக்கப்படவும் மற்றவர்களை விலக்கிக் கொண்டு உள்ளே சென்றான் கெளதம். மூலையில் சாய்ந்து அமர்ந்திருந்தவள் வியர்த்து வழிந்து மூச்சுக்கு சற்றே சிரமப் பட்டு கொண்டிருந்தாள்.
அவளை தூக்கிக் கொண்டு வெளியில் வந்தான், அனைவர் முன்பும் அவன் அப்படி தூக்கியிருந்தது அவளுக்கு கூச்சமாக இருந்தது.
“நான் நல்லாதான் இருக்கேன், இறக்கி விடுங்க” என சின்ன குரலில் சொன்னாள்.
அவன் அவளின் முகத்தை பார்க்க, அவளும் அவனைத்தான் பார்த்திருந்தாள். கலங்கி சிவந்திருந்த அவனது கண்களை கண்டு கொண்டவளுக்கு பேச்சே வரவில்லை.
அருகிலிருந்த அசோசியேஷன் உறுப்பினர் ஒருவரின் வீட்டுக்கு கொண்டு செல்லும் படி சொன்னார் செயலாளர்.
அந்த உறுப்பினரின் மனைவி காஃபி கலந்து கொடுத்தார். அதை பருகியதும் இயல்புக்கு திரும்பினாள் யசோ.
அவளை முறைத்துப் பார்த்த கெளதம், “ஒழுங்கா வீட்லேயே துணி காய வைக்க ரெடி பண்ணுன்னு சாதாரணமாவே சொல்லியிருக்கலாம், இவ்ளோ மிரட்டியிருக்க வேணாம் என்னை” என்றான்.
சுற்றிலும் உள்ளவர்களை பார்வையால் வட்டமடித்தவள் அவனை பாவமாக பார்க்க, அவளின் தலையை வருடி விட்டு, “நம்ம வீட்டுக்கு போலாம் வா” என்றான்.
நினைவு வந்தவளாக “பக்கெட் லிஃப்ட்லேயே இருக்கு” என்றாள்.
“நான் எதுக்குமா இருக்கேன், எடுத்திட்டு வரேன், வீட்டுக்கு போங்க ரெண்டு பேரும்” என தியாகு சொல்ல, இருவரும் கிளம்பினார்கள்.
லிஃப்ட் வேலை செய்யவில்லை என எழுதி அங்கே ஒட்டும் வேலையை பார்க்க ஆரம்பித்தார் செயலாளர்.
வேலை செய்யும் லிஃப்ட் நோக்கி கெளதம் நடக்க, “ஸ்டெப்ஸ்ல போலாம்” என்றாள்.
“பயப்படாத, நாந்தான் கூட இருக்கேனே?”
“ம்ம்… அந்த நம்பிக்கைலதான் உள்ள எப்படியோ இருந்திட்டேன். எப்படியும் நீங்க வருவீங்கன்னு தெரியும்”
“மாடிக்கு போனவ வீட்டுக்கு வந்திட போறான்னு சாதாரணமா நினைச்சு கூட கிளம்பி போயிருப்பேன். வராம போயிருக்க கூட வாய்ப்பு இருந்துச்சு”
“ம்ஹூம், பிடிக்கலைன்னு சொல்லிட்டு போயே வந்தீங்க, பார்த்துக்கிறேன் விட மாட்டேன்னு சொல்லி கூட்டிட்டு வந்து எப்படி விடுவீங்க?” எனக் கேட்டாள்.
அவனுக்கு உடனடியாக எந்த வார்த்தையும் வரவில்லை. சட்டென அவளின் கையை பிடித்துக் கொண்டவன் வா எனும் படி தலையசைத்து லிஃப்ட் நோக்கி நடந்தான்.