“பசி பொறுக்க மாட்டீங்க, நேரத்துக்கு சாப்பாடு கொடுக்கணும், தூங்கிட்டு இருக்கும் போது எழுப்பினா பிடிக்காது, துவைச்ச துணிக்கும் அழுக்குக்கும் வித்தியாசம் கூட தெரியாது, ஆனா வெளில போகும் போது மட்டும் மடிப்பு கலையாத சட்டை வேணும்…” அவள் அடுக்கிக் கொண்டே போக, “போதும் போதும்…” என சொல்லி அவளின் பேச்சை நிறுத்தி விட்டான்.
மிச்சமிருந்த காஃபியை பருகிக் கொண்டே அவனை பார்த்தவள் அவன் தன்னையே பார்ப்பது கண்டு விட்டு திரும்பி நின்று பருகினாள்.
“அம்மா சொன்னதா ஃபர்ஸ்ட் சொன்னியே, என்கிட்ட பயப்பட வேணாம்னு அதை மட்டும் ஞாபகம் வச்சுக்க. மத்தது எல்லாம் டெலீட் பண்ணு” என்றான்.
திரும்பி நின்ற படியே தலையாட்டிக் கொண்டாள்.
“தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைனா எனக்கு பார்க்க பிடிக்கும். அதுக்காக கூடவே இருக்க ஆளு அப்படி இருந்தா ரொம்ப கஷ்டம்” என அவன் சொல்லவும், அவனை திரும்பி பார்த்து, “நிறைய பேசுறீங்க நீங்க” என்றாள்.
“உன் அப்சர்வேஷன் ஸ்டார்ட் ஆகிடுச்சா? குட், இப்படித்தான் நீயே என்கிட்ட பழகி பார்த்து அனலைஸ் பண்ணி நான் எப்படின்னு நீயா ஒரு முடிவுக்கு வரணும்” என்றான்.
முதலில் தலையாட்டிக் கொண்டவள் உடனே, “சரிங்க” என்றாள்.
சின்ன பெண், பொறுமையாக இவளை கையாள வேண்டும் என்றெல்லாம் அவனுக்கு அவனே சொல்லி வைத்திருக்கிறான்தான். ஆனால் அவளை சீண்டி பார்க்கவும் ஆர்வமாக இருக்கிறது, அப்படி செய்ய பிடித்திருக்கிறது என கூட சொல்லலாம்.
இப்போது உறக்கமின்மையால் கண்கள் எரிய, பேச்சை அத்தோடு நிறுத்திக் கொண்டான்.
அவனுக்கு பதினோரு மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும், பத்து மணிக்கு இங்கிருந்து கிளம்பினால் போதும். ஒன்பது மணிக்கு எழுப்பி விடு என சொல்லி அறைக்கு சென்று விட்டான்.
யசோ இரவே நன்றாக தூங்கியிருந்தாள். அத்தையிடமும் நவீனிடமும் பேசினாள். அத்தை கொடுத்தனுப்பிய பையிலிருந்து இப்போதைக்கு தேவையான சாமான்களை எடுத்து வைத்தாள்.
காலை சமையல் முடித்து குளிக்க சென்றாள். அந்த குளியலறையில் காலையில் தண்ணீர் வந்தது, இப்போது வரவில்லை. கெய்சரிலிருந்தும் தண்ணீர் வரவில்லை. அடுப்பில் தண்ணீர் சுட வைத்து கொண்டு வந்து ஊற்றினாள்.
அவளது கொலுசு சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததில் விழித்துக் கொண்டவன், “என்ன யசோ நடந்திட்டே இருக்க?” என அலுப்பாக கேட்டான்.
விவரம் சொன்னவள் குளியறை சென்று விட்டு வர, மீண்டும் சத்தத்தில் அவனது உறக்கம் கலைந்தது. மனதிற்குள் சலித்தாலும் எதுவும் சொல்லவில்லை அவன்.
அந்த வீட்டில் பூஜை அறை என தனியாக இல்லை. ஹாலில் சின்னதாக கப்போர்ட் இருந்தது. அங்கேதான் சாமி படங்கள் இருந்தன. விளக்கேற்றியவள் சத்தமாக ஸ்லோகங்கள் சொல்ல ஆரம்பிக்க, எழுந்து வந்து விட்டான் கெளதம்.
திருநீறெல்லாம் இட்டுக் கொண்டு அவள் திரும்ப, அவளை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான் அவன்.
அவள் அமைதியாக நிற்க, “ஜிங்குச்சா ஜிங்குச்சான்னு கொலுசு சத்தம் வேற. ஆஃபிஸ் போயி சிஸ்டம் பார்க்கணும், சரியா தூங்கலைனா தலை வலி வரும். மூனு நாள் போகாம வேலை வேற சேர்ந்து கெடக்கும்” என எரிச்சலோடு சொன்னான்.
“ஸாரி” என்றாள்.
“ப்ச், ஏன் தண்ணி வரலை?” எனக் கேட்டுக் கொண்டே குளியலறைக்கு சென்று பார்த்தவன் கைப்பேசி வாயிலாக அப்பார்ட்மென்ட் பிளம்பருக்கு அழைத்தான். கன்னடத்தில் ஏதோ பேசினான்.
“பன்னெண்டு மணிக்கு ஆள் வருவாங்க” என்றவன் படுக்கை அறைக்கு சென்று கதவை அடைத்து விட்டான்.
ஒன்பது மணிக்கு அலாரம் வைத்தது போல கதவை தட்டினாள். அவன் எழாமல் போகவும் கைப்பேசிக்கு அழைத்து எழுப்பி விட்டாள்.
“கதவை லாக் பண்ணலை யசோ, சும்மாதான் சாத்தியிருந்தேன். உள்ள வா” என்றான்.
தளர்வாக படுத்தவன் ஏதோ நினைவு வரவும் வேகமாக வெளியே சென்றான். துவைத்திருந்த துணிகளை வாஷிங் மெஷினிலிருந்து எடுத்துக் கொண்டிருந்தாள்.
அவளிடம் சென்றவன், “ஹேய் காலை காட்டு” என அதட்டினான்.
அவன் வந்ததை கவனித்திருக்காதவள் திடுக்கிட்டு போய் கையிலிருந்த அவனது சட்டையை கீழே போட்டு விட்டாள். அவனது அதட்டலில் அனிச்சையாக ஓரடி எடுத்து வைக்க, அவனது சட்டை அவளது பாதத்துக்கு கீழ் இருந்தது.
மண்டியிட்டு அமர்ந்தவன் அவளது கால்களை கவனித்து விட்டு, “கொலுசு எங்க?” எனக் கேட்டான்.
“கழட்டி வச்சிட்டேன்” என்றாள்.
“ம்ம்… இப்போ என்னை மிதிக்க முடியாம என் சட்டையை மிதிக்கிறியா?”
“ஹையோ அதெல்லாம் இல்லை” என சொல்லிக் கொண்டே சட்டையை கையில் எடுத்து, “திரும்ப அலசிடுறேன்” என்றாள்.
அவனும் எழுந்தவன், “சத்தம் வராம மெல்ல நடந்தா போகுது, அதுக்கு ஏன் கழட்டிட்ட?” என விசாரித்தான்.
“அதுல நிறைய முத்து இருக்கு, எப்படி நடந்தாலும் சத்தம் வரும்”
“சரி நாந்தான் எழுந்திட்டேனே, இப்ப போட்டுக்க”
“வேணாம். பரவாயில்லை, இருக்கட்டும். துணி எங்க காய வைக்கிறது?” எனக் கேட்டாள்.
பால்கனியில் இடம் இருக்கிறது. நேரம் கிடைக்கும் போது தியாகுவுடன் கேரம் விளையாடுவான். சின்ன இடம், துணி காய வைத்தால் அடைசலாக இருக்குமென மொட்டை மாடியில்தான் காய வைத்துக் கொண்டிருக்கிறான். வாரத்தில் ஒரு நாள் துவைப்பவனுக்கு சிரமமாகவும் இல்லை.
அதை சொன்னவன், “டெரஸ்ல காய வை, இங்க வேணாமே” என்றான்.
அவன் தயாராகி வருவதற்குள் காய வைத்து வந்து விடலாம் என கருதி அவளும் சென்று விட்டாள்.
அங்கே மொத்தம் நான்கு தளங்கள். கெளதம் இருந்த வீடு முதல் தளத்தில் இருந்தது. ஐந்தாவது தளம் மொட்டை மாடி. நான்காவது தளம் வரைதான் லிஃப்ட் இயங்கும், அதற்கு மேல் நடந்து செல்ல வேண்டும்.
எங்கே என்ன இருக்கிறது என எல்லாம் வாய் மொழியாக கெளதம் சொன்னதை வைத்து சரியாகவே மொட்டை மாடிக்கு சென்று விட்டாள்.
வேலை முடித்து மீண்டும் லிஃப்ட் இருக்குமிடம் வர அது வெகு நேரமாகியும் மேலே வரவில்லை. நடந்தே சென்று விடலாமா என யோசித்துக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தாள்.
தயாராகி விட்ட கெளதம் யசோ இன்னும் காணோமே என நினைத்தான். ஒரு வேளை தான் குளிக்க சென்று வெகு நேரம் கழித்துதான் மாடிக்கு சென்றிருப்பாளோ என நினைத்துக்கொண்டான்.
அந்த வீட்டில் உணவு மேசை, சோஃபா போன்றவை கிடையாது. முன்னர் பிஜி யில் தங்கி இருந்தவன் ஜெர்மனி சென்று வந்த பிறகுதான் வீடு பார்த்திருக்கிறான்.
தியாகு நல்ல விவரமான குடும்பஸ்தன் என்பதால் குடும்பம் நடத்த தேவையான அத்தியாவசிய பொருட்களை எல்லாம் லிஸ்ட் போட்டுக் கொடுத்து வாங்க வைத்திருந்தான்.
யசோவிடம் கேட்டு மற்ற தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என எண்ணிக் கொண்டே சாப்பாடு என்ன இருக்கிறது என சமையலறை போய் பார்த்தான்.
காய்கறிகள் போட்டு செய்த அரிசி உப்புமாவும் தேங்காய் சட்னியும் இருந்தது. கௌதமுக்கு அவனது அம்மா செய்வதில் மிகவும் பிடித்த உணவு வகை. கல்யாண், குணா இருவருக்கும் இது பிடிக்காது, அதனால் அடிக்கடி செய்ய மாட்டார்.
‘இந்த அம்மா ஒன்னு விடாம என்னை பத்தி எல்லாம் சொல்லி வச்சிருக்கும் போல. பார்த்துடா கெளதம்! உன்னை பத்தி மொத்தமா படிச்சு பி ஹெச் டி வாங்கிட்டு வந்திருக்கா உன் வைஃப்!’ என நினைத்தவனுக்கு சிரிப்பு வந்தது.