“டேய் இத பத்தி மூச் விடக்கூடாது” என அண்ணன் மகனிடம் சொன்னான் கெளதம். அவன் தலையை தலையை ஆட்டிக் கொண்டான்.

கெவின் தன் மடியிலிருந்து விழுந்து விடாமல் இருக்க, ஒரு கையால் அவனை பிடித்திருந்த யசோ,  கணவனின் கையில் இருந்த ஐஸ்க்ரீமையே எடுத்து சாப்பிட்டாள்.

சற்று நேரத்தில் ஹேமாவோடு மற்றவர்களும் வேனுக்கு வந்து விட்டனர்.

‘அம்மா ஐஸ்க்ரீம் சாப்பிட்டேன், சித்தப்பா வாங்கி கொடுத்தார்’ என அம்மாவிடம் சொன்னான் தர்ஷன்.

“ஏன்டா ஏன்?” என வாய் விட்டு கேட்டான் கெளதம்.

“உனக்கு மூக்கால ஊத்தும் போது அவன் சட்டைல துடைச்சி விடுறேன், அப்புறம் சரியாகிடுவான் உன் சித்தப்பன்” என்றான் கல்யாண்.

“ஐஸ்க்ரீம் சாப்பிட்ட தடம் தெரியாம இருக்க அவனை துடைச்சி அவன் என் சட்டைல இழுப்பினு ஆல்ரெடி என் ஷர்ட் கறையாதான் இருக்கு” என்றான் கெளதம்.

“நான் இல்லை, சித்திதான்” என்றது வாண்டு.

கல்யாண் தம்பியை முறைக்க, “குழந்தைக்கு என்னடா தெரியும், அவன் பேசுறத மிஸ்அண்டர்ஸ்டாண்ட் பண்ற நீ” என்றான் கெளதம்.

“உன்னை பத்தி நல்லா தெரியும் டா, அண்ணிக்கு ஒழுங்கா ஊட்டி விடாம சட்டையில பூசி வச்சிருக்க” என்றான் குணா.

இப்படி இவர்கள் கல கலத்துக் கொண்டே வீடு வரவும் பாதி வழியிலேயே கல்யாண் ஆர்டர் செய்திருந்த  உணவு வந்து சேரவும் சரியாக இருந்தது.

ஹேமாவையும் குணாவையும் வீட்டு பெண்கள் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தனர். அதெல்லாம் நான் வர மாட்டேன் என ஏதும் யசோ சொல்லவில்லை, கௌதமும் தடுக்கவில்லை.

ஹேமா குணாவோடு மாடிக்கு சென்று விட்டாள். சாப்பிடாதவர்கள் பேசிக் கொண்டே சாப்பிட்டனர். அங்கே நடந்த விரும்பத் தகாததை பற்றி இல்லாமல் நேர்மறையாகவே இருந்தது பேச்சு.

மகனுக்கு ஊட்டுகிறேன் என ஜோஷ்னாவும் சாப்பிட, கல்யாண்  அவளை கிண்டலாக பார்த்தான்.

 “அங்க யாரும் சரியா சாப்பிடல, அதான் ரெண்டு வாய் சாப்பிடுறா, அதைப் போய் அப்படி பார்க்கிற, அவ உடம்புல எப்படிடா ஒட்டும்?” என அதட்டிய அருணாவும் வெஜிடபிள் புலாவ், காலி ஃபிளவர் வறுவல் என தட்டில் எடுத்து வைத்து சாப்பிட்டார்.

“ம்மா இப்ப உன்னை பார்க்கிறான் மா அவன்” என கெளதம் சொல்ல, பெரிய மகனுக்கு ஒரு வாய் ஊட்டினார் அருணா.

“பார்த்தியா, அம்மாக்கு அவன்தான் எல்லாம். என்னை கண்டுக்காம அங்கதான் எல்லா கவனிப்பும்” என மனைவியிடம் சொன்னான் கெளதம்.

“அடுத்த வாய் உனக்குத்தான் கொடுக்கலாம்னு இருந்தேன், நீ பேசின பேச்சுக்கு கிடையாது” என்றார் அருணா.

காலிஃபிளவர் பக்கோடா முடிந்து போய் விட்டது. “ஒரு பீஸ் தாண்டா சாப்பிட்டேன்,  நிறைய ஆர்டர் போட்டாதான் என்னடா?” என அண்ணனை திட்டினான் கெளதம்.

“உம்பேர் அதுல எழுதி இல்லடா பிரதர், நான் என்ன பண்றது?” என்றான் கல்யாண்.

“போடா கஞ்ச மஹாராஜா!” என்றான் கெளதம்.

சாப்பிட்டு முடித்து அவரவர் அறைகளுக்கு சென்று விட்டனர்.

 மாலையில்  தேநீர் மற்றும் காலிஃபிளவர் பக்கோடாவுடன்தான் கௌதமை எழுப்பி விட்டாள் யசோ.

“ஏய் மதியம் நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்” என்றான் கெளதம்.

“இருக்கட்டும், உங்களுக்கு பிடிச்சதுதானே? சாப்பிடுங்க” என்றாள் யசோ.

“எனக்கு இந்த பக்கோடா வேணாம் ஜாங்ரி, பட்டர்பன் தான்  வேணும்” என்றவன் அவளது கன்னத்தை சுட்டிக் காட்டினான்.

சட்டென அவனை நெருங்கி வந்து தன் கன்னத்தை காட்டினாள். பிகு இல்லாமல் உடனே தன்னிடம் வந்து விட்டவளின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டே எழுந்தான் அவன்.

“இவ்ளோ செல்ல பேர் எங்கேருந்து கண்டு பிடிக்கிறீங்க?”

“அதெல்லாம் ரகசியம், சொல்றதுக்கு இல்லை” என கண்களை சிமிட்டி சொன்னான்.

“சாப்பிடுங்க” என்றாள்.

“அட பாத்ரூம் போக விடுடி  என் கொழுந்து வெத்தலக் கொடி!” என சொல்லிக் கொண்டேதான் குளியலறை சென்றான்.

அவன் வெளிவந்த போது யசோ அறையில் இல்லை, தேநீரை எடுத்துக் கொண்டு அவளை தேடிக் கொண்டு வெளியில் வந்தான்.

ஹேமாவுடன் பேசிக் கொண்டிருந்தாள் யசோ.

 இவனை கண்டதும், “ஸாரி மாமா, எல்லாத்துக்கும்” என மருகிக் கொண்டே சொன்னாள் ஹேமா.

“விடும்மா” என சொல்லி மீண்டும் அறைக்கு சென்று விட்ட கெளதம் பக்கோடாவையும் ஒரு கை பார்த்தான்.

சற்று நேரத்தில் சண்முகத்தை தவிர மற்ற அனைவருமே மாடியில் குழுமி விட்டனர்.  பேச்சு, சிரிப்பு, விளையாட்டு என நேரம் பறந்தது.

சமைக்க வேண்டும் என அருணா எழுந்தார். அரை மணி நேரத்தில் ஏதாவது செய்ய முடியும் என்றால் சரி, இல்லையென்றால் வெளியில் வாங்கிக் கொள்ளலாம் என முடிவாக சொன்னான் கெளதம்.

பருப்பு சாதம், உருளைக்கிழங்கு, அப்பளம், ஊறுகாய் என மெனு சொன்னாள் ஜோஷ்னா.

 அருணா ஓகே என்க, “உங்களுக்கு ஏறி இறங்க சிரமம், இங்கேயே இருங்க” என கூறி,  யசோவை அழைத்துக் கொண்டு கீழே சென்றாள் ஜோஷ்னா.

‘அவர்களுக்கு உதவுகிறேன்’ என சொல்லி பிள்ளைகளை தம்பிகளிடம் விட்டு விட்டு கல்யாணும் கீழே சென்றான்.

சமைத்ததை எடுத்துக் கொண்டு பெண்கள் வந்து விட, அப்பாவையும் வற்புறுத்தி அழைத்துக் கொண்டு வந்தான் கல்யாண்.

சிறு வயதில் மூன்று மகன்களுக்கும் ஒரே தட்டிலேயே சாப்பாடு வைத்து ஊட்டி விடுவார் அருணா. அதை குணா நினைவு படுத்த, “இன்னிக்கும் அப்படி கொடேன் மா, தட்டு கழுவுற வேலை மிச்சமாகும்” என்றான் கெளதம்.

அருணாவும் அப்படியே எல்லாருக்கும் ஒரு வாய் ஊட்டினார்,  அப்பாவையும் இழுத்து வந்து விட்டான் கல்யாண்.

“அடேய்!” என சண்முகம் நெளிய, அருணா வெட்கப்பட, தர்ஷன் கை தட்டி குதூகலிக்க, மகன்கள் சிரிக்க, மருமகள்கள் ரசிக்க என அழகாக இருந்தது அந்த மாடி.

கணவருக்கு வாயில் ஊட்டி விடாமல் கையில் தான் கொடுத்தார் அருணா. அதை வாங்கி பட்டென வாயில் போட்டவர் கையை கூட கழுவாமல், விட்டால் போதுமென  கீழே ஓடியே சென்று விட்டார்.

அதன் பின்  சிறு குழந்தைகள் தவிர மற்றவர்கள் தனித் தனியாக சாப்பிட்டனர்.

அத்தனை நிறைவாக இருந்தது அந்த நிலாச் சோறு.

ஹேமா கொஞ்சம் தள்ளித்தான் நிற்கிறாள், போக போக ஒன்றி விடுவாள் என நம்பினார் அருணா.

இரண்டு நாட்கள் கழித்து, தன்னை ஸ்டோரில் சந்திக்க வருமாறு கருணாவே கௌதமுக்கு அழைத்து சொன்னார்.

மனைவியையும் அழைத்துக் கொண்டே சென்றான் கெளதம்.

 முன்பு சொல்லியிருந்த படியே யசோ, நவீன் இருவருக்கும் சேர வேண்டியவை பற்றி அனைத்து விவரங்களையும் அவனிடம் சொன்னார். அவர் வசமிருந்த வங்கிக் கணக்கு விவரங்களையும் அவனிடம் ஒப்படைத்து விட்டார்.

வங்கிக் கணக்கில் நிறைய பணம் இருந்தது. இவ்வளவா என கௌதமுக்கு பெரும் வியப்பு. இதை அப்படியே போட்டு வைக்காமல் எதிர் காலத்துக்கு உதவும் படி ஏதாவது செய்யலாமே என்றான் கெளதம்.

உங்களிடம் ஒப்படைத்து விட்டேன், நீங்களே செய்து விடுங்கள் என சொல்லி விட்டார் கருணா.

தன் அப்பா, சகோதரர்கள் மற்றும் யசோவிடம் ஆலோசித்து அந்தப் பணத்தை கொண்டு மாத வாடகை வரும் படி  நவீனின் பெயரில் ஏதாவது சொத்து வாங்கி போடலாம் என முடிவு செய்தான் கெளதம்.

அப்படி ஏதாவது இடம் வருகிறதா, அல்லது நிலம் வாங்கி கட்டுவதா என்றெல்லாம் விசாரித்து சொல்கிறேன் என்றார் சண்முகம்.

உடனே உடனே செய்ய முடியாதே, ஆனால் கண்டிப்பாக செய்து விடுவார்கள்.

காலை நேரத்தில் தாமதமாக எழுந்தாலும் கீழே போய் மாமியாருடன் நிற்கிறாள் ஹேமா. மனைவி தன் வீடு வந்து விட்டதால் குணாவுக்கும் மகிழ்ச்சி.

காதம்பரி மகளுக்கு அழைத்து பேசுகிறார்தான். உங்களுடன் அழைத்து செல்லுங்கள் என மனைவியின் அண்ணனிடம் கருணா சொல்லியிருந்தாலும் காதம்பரி அப்படியெல்லாம் சென்று விடவில்லை.

இங்குதான் இருப்பேன் என் அடமாக சொன்னதோடு எப்படி நீங்கள் அப்படி சொல்லலாம் என கணவரிடம் சண்டை வேறு போட்டார்.

மனைவியுடனான பேச்சை முற்றிலுமாக துண்டித்து விட்டார் கருணா. ஆரம்ப காலத்தில் தான் கொடுத்து விட்ட இடம்தான் அவளது ஆணவத்திற்கு காரணமாக போய் விட்டது, ஆதலால் நானும் கொடுமை அனுபவிக்கிறேன் என தன்னை தேற்றிக் கொண்டார்.

கௌதமும் யசோவும் பெங்களூரு புறப்பட்டனர். இரயில் நிலையத்திற்கு தியாகுதான் அழைக்க வந்திருந்தான்.

மைதிலியின் பராமரிப்பில் வீடு சுத்தமாகவே இருந்தது. இஜ்ஜு கண்ணா யசோவை மறந்து விட்டான், அவளிடம் செல்ல மறுத்தான். யசோவுக்கு முகம் சுணங்கி விட்டது.