அங்கிருந்த ஒருவருக்கு கூட காதம்பரியின் பேச்சு ரசிக்கவில்லை. அனைவருமே ‘நீயெல்லாம் ஒரு ஜென்மமா?’ என்பது போலத்தான் அவரை பார்த்திருந்தனர்.

கருணா தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தார். அம்மாவை முறைத்து பார்த்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள் ஹேமா. அந்த இடத்தில் நின்றிருந்த மோனிகா, தனியாக போய் அமர்ந்து விட்டாள்.

“அப்பப்பா பேர புள்ள வர்ற வயசாகியும் நீயும் உன் குணமும் மாறவே இல்லியே. இப்படியா சின்ன பொண்ணு மனசை உடைப்ப?” எனக் கேட்டார் காதம்பரியின் சின்னம்மா.

“சரியா சொன்னீங்க அத்தை? இப்படித்தான் இருபது வருஷத்துக்கு முன்னாடி என் ஓர்ப்படிக்கு சீமந்தம் நடந்தப்போ என்னையும் பேசினாங்க, புரிஞ்சுக்கிறவங்கன்னா எடுத்து சொல்லலாம், அதுக்கான சக்தி இல்லைனா ஏன் பேசி நம்ம சக்தியை வீண் பண்ணனும்?” என தன் பல வருடக் கோவத்தை இன்று ஆள் நிறைந்த சபையில் பேசி தீர்த்துக் கொண்டார் காதம்பரியின் சின்ன அண்ணி.

பிரச்சனைகள் ஏதுமில்லாமல் இந்த விஷேஷம் நன்றாக நடக்க வேண்டும் என நினைத்திருந்த குணா,  மாமியாரை  அருவருப்பாக பார்த்துக் கொண்டே, “இவ்ளோ வெளிப்படையா உங்க விஷத் தன்மையை எல்லாருக்கும் காட்டியிருக்க வேணாம்” என்றான்.

தன் கணவராவது தனக்கு ஏற்றுக் கொண்டு பேச மாட்டாரா என காதம்பரி கருணாகரன் பக்கம் திரும்பினார்.

ஏதோ யோசனை வந்தவராக அப்போதுதான் தலை நிமிர்ந்த கருணா, காதம்பரியின் பெரிய அண்ணனை பார்த்து, “உங்க தங்கச்சிய அழைச்சிட்டு போங்க, கொஞ்ச நாள் உங்க கூடவே இருக்கட்டும். நல்ல புத்தி வந்ததும் அனுப்பி விட்டா போதும்” என்றார்.

முகம் இறுகிப் போயிருந்த கெளதம் எழுந்து நின்று, “ம்மா… என்ன செய்யணுமோ செஞ்சு நல்ல விதமா முடிம்மா. இப்ப போய் மத்தது பேச வேணாம்” என்றான்.

மூச்சை நன்றாக இழுத்து விட்டுக் கொண்ட அருணாவும் ஆரத்தி எடுத்து  ஹேமாவை எழ வைத்தார்.

வெளியில் நின்றிருந்த யசோ அழவெல்லாம் இல்லை. ஜோஷ்னா வரவுமே, “நான் நார்மலாதான் இருக்கேன் க்கா, அவங்க பேச்சுக்கெல்லாம் நான் ஃபீல் பண்ணினா அவர் பிச்சிடுவார் என்னை” என்றாள்.

“அங்கேயே திருப்பி கொடுத்திருக்கலாம் யசோ நீ” என ஆதங்கப் பட்டாள் ஜோஷ்னா.

“எதுக்கு க்கா, அவங்க பேசினதை நான் எடுத்துக்கவே இல்ல, என்னை பாதிக்கவும் விடல நான். லாஸ்ட் டைம் அவங்க தப்பு பண்ணினப்பவே அவங்கள வெறுத்திட்டேன், இப்ப அவங்க எனக்கு யாருமே இல்ல. என்னவோ அங்க இருக்க வேணாம்னு தோணிச்சு, வந்திட்டேன், உங்களை மாதிரிதான் பேசாம ஏன் வந்தேன்னு அவர் கூட என்கிட்ட சண்டை போட போறார். அவரை எப்படி சமாளிக்கன்னு தான் யோசிச்சிட்டு இருக்கேன் நான்” என்றாள் யசோ.

மன வருத்தத்தை மறைத்துக் கொண்டு பேசுகிறாளோ என அவளை ஊன்றி பார்த்தாள் ஜோஷ்னா. ஆனால் நிஜமாகவே வெகு சாதாரணமாகத்தான் இருந்தாள் யசோ.

“அப்ப வர்றியா உள்ள?” எனக் கேட்டாள் ஜோஷ்னா.

“இல்லக்கா வர பிடிக்கல. ஹேமாக்கா நல்லாருக்கணும்னு நான் மனசார நினைக்கிறேன், பிரசவம் நல்லா நடக்கணும்னு தினம் வேண்டிக்கிறேன், முறையா நலங்கு வச்சுதான் நான் அக்காவை விஷ் பண்ணணும்னு இல்லை. நான் இங்கேயே இருக்கேன், நீங்க போங்கக்கா” என சொல்லி விட்டாள்.

ஆனால் ஜோஷ்னா அவளை விட்டு நகரவே இல்லை. கெளதம் அங்கே வரவும்தான் அவள் உள்ளே சென்றாள்.

கெளதம் மனைவியை முறைக்க, அவளோ கெஞ்சலாக  பார்த்தாள்.

“நானோ நீயோ பேச தேவையே இல்லாம விஷக்கிருமிக்கு அதோட சொந்தக்காரங்க வாயாலேயே நல்லா கிடைச்சுது, அதனால உன்னை சும்மா விடுறேன். உனக்கு சண்டை போடுறது எப்படின்னு தனியா ட்ரைனிங் கொடுக்கிறேன்” என சொல்லிக் கொண்டே அவளின் தோளை சுற்றி கை போட்டுக் கொண்டான்.

“எனக்கு அதெல்லாம் வராது, அமைதியா இருக்கிறதே பெரிய சண்டைதான், அப்படி பார்த்தா நாந்தான் பெரிய சண்டைக்காரி” என்றாள் யசோ.

“என்கிட்ட மட்டும் இந்த வாய் வட ஆப்பிரிக்கா வரை நீளுமே” என்றவன் அவளை சூழ்ந்திருந்த மஞ்சள், மல்லிகை மணத்தை உள் இழுத்துக் கொண்டே, “என் வாசக்காரி… என் செல்ல வசியக்காரி ஓகேதானே அப்போ?” எனக் கேட்டான்.

ஆமாம் என அவள் பெரிதாக தலையை ஆட்டி, “நீங்க கோவ படாம இருந்தீங்களே… பெரிய அதிசயம்தான்!” என்றாள்.

“இதுலலாம் நிறைய செண்டிமெண்ட்ஸ் இருக்கும் யசோ, அந்தம்மாவை பேச அரை நொடி ஆகாது, என் தம்பி வைஃப், அவன் குழந்தைக்கு நடக்கிற பங்ஷன், அந்த பொறுப்பு எனக்கு இருக்கு.  பேச்சுக்கு பேச்சுன்னு நீ திருப்பி கொடுத்தா வேற, நான் பேசியிருந்தா கண்டிப்பா வேற மாதிரி ஆகியிருக்கும். போடாம விடுற சண்டை  நல்ல பயனை தருதுன்னா விட்டுட்டு போக வேண்டியதுதான்”

“எப்போலேருந்துங்க இப்படி?”

“அது… மாயக்காரி  ஒருத்திய கட்டிக்கிட்டேன், அவளோட ஒன்னுமண்ணா வாழுறேன்னா… அவகிட்டருந்து இப்படி சில பல ஐயிட்டம் எனக்கு டிரான்ஸ்ஃபர் ஆகிடுச்சு” என்றான்.

அவள் செல்லமாக முறைக்க, “சரிதானேடி ஜாலக்காரி?” எனக் கேட்டான்.

அவர்களை தேடிக் கொண்டு கருணா வந்தார். மனைவியின் செயலுக்கு கௌதமிடம் மன்னிப்பு கேட்டார். மனைவியை அடக்கும் வழி தெரியாத பாவி நான் என தன்னை தானே சொல்லிக் கொண்டார்.

அவரிடம் கேட்டு என்னவாக போகிறது என நினைத்த கௌதமும், இதை விட்டு விட்டு உள்ளே பாருங்கள் என்றான்.

பெங்களூரு செல்வதற்கு முன் உங்களை சந்திக்க வேண்டும் என்றார் கருணா.

 நவீனுக்கு யசோவுக்கு சேர வேண்டியது பற்றியெல்லாம் கௌதமிடம் சொல்லி பொறுப்புகளை அவனிடம் ஒப்படைக்க நினைத்தார். அதையும் அவனிடம் சொன்னார்.

அதற்கு இப்போது என்ன அவசியம் நேர்ந்தது, இந்த விஷயத்தில் உங்களை யாரும் நம்பாமல் போக மாட்டார்கள் என்றான் கெளதம்.

“எனக்கொன்னும் சின்ன வயசு இல்ல மாப்ள, நான் இல்லாம போனா கூட எந்த சட்ட சிக்கலும் வராத படிதான் எல்லாம் பண்ணி வச்சிருக்கேன். உங்களுக்கும் எல்லாம் தெரியணும். இத நான் சொல்ல அவசியம் இல்லை இருந்தாலும் சொல்றேன், நவீனுக்கு நீங்கதான் பொறுப்பு. ஒருநாள் என் பெத்தவங்க, அண்ணன் அண்ணிய எல்லாம் பார்க்கதான் போறேன்,  என்னடா பண்ணி வச்சிட்டு வந்து சேர்ந்தேன்னு என்னை அவங்க கேட்றக் கூடாது” என்றார்.

“ஏன் சித்தப்பா இப்படிலாம் பேசுறீங்க?” என வருத்தப்பட்டாள் யசோ. கௌதமும் “இவ்ளோ மனம் நொந்து பேச வேணாமே மாமா” என்றான்.

“ஹேமா உங்க குடும்ப பொண்ணு ஆகிட்டா, எனக்கு பின்னாடி மோனிகாவுக்கும் ஏதாவது தேவைப்பட்டா ஹெல்ப் பண்ணனும் மாப்ள, யசோ… நீயும் அவளை விட்ராத” என்றார் கருணா.

மனைவியை நினைத்து வெறுத்து விட்டார் என்பதை புரிந்து கொண்ட கெளதம், அவரை சமாதானம் செய்து உள்ளே அனுப்பி வைத்தான்.

நவீன், தர்ஷன், கெவின் இன்னும் சில பிள்ளைகள் வீட்டுக்கு வெளியில்தான் விளையாடிக் கொண்டிருந்தனர்.

கெவின்  அழுவுவது போல தெரியவும் கெளதம் அங்கே விரைந்தான். அதற்குள் நவீன் அவனை தூக்கியிருந்தான்.

உறக்கத்திற்கு அழுகிறான் என புரிந்த கெளதம் குழந்தையை வாங்கி தோளில் போட்டு தட்டிக் கொடுத்துக் கொண்டே, “தர்ஷனை கூட்டிட்டு வேன்ல ஏறு” என நவீனிடம் சொன்னான்.

சாப்பாட்டுக்கு நாங்கள் யாரும் இருக்கப் போவதில்லை என அப்பாவிடம் சொல்லி விட்டுத்தான் வெளியே வந்திருந்தான் கெளதம்.

அவர் யாருமே இங்கு சாப்பிட வேண்டாம் என சொல்ல, “நல்லாருக்காது ப்பா, குணாவுக்காக  நம்ம வீட்டு வாரிசுக்காக கொஞ்சம் நாமும் விட்டு கொடுத்துதான் ஆகணும்” என தீர்மானமாக சொல்லியிருந்தான்.

வேனில் ஏறிய பிறகு அண்ணனுக்கு அழைத்து கெவின் உறங்கி விட்டதை சொல்லி, தர்ஷனை மட்டும் சாப்பிட அழைத்து செல்லுமாறு கூறினான் கெளதம்.

“உன் கூட இருக்கான்னா விட்ரு, பேருக்கு கையை நனைச்சிட்டு இதோ நாங்களும் வந்திடுவோம். நீங்க சாப்பிடும் போது அவனையும் சாப்பிட வச்சிடு” என சொல்லி விட்டான் கல்யாண்.

பக்கத்தில் நடந்து செல்லும் தூரத்தில் ஐஸ்க்ரீம் கடை உண்டு. கெவினை யசோவிடம் கொடுத்து விட்டு கெளதம் இறங்க, நவீனும் தர்ஷனும் ஒருவர் பின் ஒருவராக அவனை பற்றிக் கொண்டனர்.

வரும் போது வகை வகையாக நிறைய ஐஸ்க்ரீம்கள்.

தர்ஷன் வாயெல்லாம் வழிய ஐஸ்க்ரீம் சாப்பிட, “அக்காட்ட நல்லா திட்டு வாங்க போறீங்க, இவ்ளோவா வாங்கி கொடுப்பாங்க” எனக் கேட்டாள் யசோ.