ஆனால் ஹேமாவோ தக தகவென தங்க நிறத்தில் பட்டு உடுத்தியிருந்தாள். அம்மாவிடம் விஷயத்தை சொன்ன குணா, “நீ சொன்னேங்கிறதுக்காகவே அந்தம்மா வம்படியா இவளை இப்படி கட்ட வச்சிருக்கும். அங்க போய் பேசிக்கிறேன் மா அவகிட்ட” என்றான்.
“விடுடா, முறைன்னு சொல்லியாச்சு, செய்யலைனா கட்டாய படுத்தாத, இன்னிக்கு எதுவும் பேசி சண்டை ஆக்க கூடாது, அவ்ளோதான்” என மகனிடம் கண்டிப்போடு சொல்லி விட்டார் அருணா.
“தேவையானது எல்லாம் முத நாளே வாங்கி வச்சுக்க மாட்டியா நீ? அறுபது வயசு ஆகலை இன்னும்… அதுக்குள்ள ஞாபக மறதி வந்திடுச்சா உனக்கு?” என மனைவியை கடிந்து கொண்டேதான் வேனில் ஏறினார் சண்முகம்.
“சும்மான்னு இருக்க சொல்லுடா உங்கப்பாவை” என பெரிய மகனிடம் சொன்னார் அருணா.
“பூ வாங்கி வைக்க மறந்துட்டாளாம் உன் அம்மா, என் வண்டியை எடுத்திட்டு அஞ்சு நிமிசத்துல வர்றேன்னு போயிருக்கான் கெளதம், வேலையும் பார்த்திட்டு புள்ள ஓடிருக்கான் பாவம், எல்லாம் இவளாலதான். நீ சும்மாதானே இருந்த, உன்கிட்ட சொன்னா வாங்கியிருக்க மாட்டியா? உன் அம்மாவை கேளுடா என்னன்னு?” என மகனிடம் குறை படித்துக் கொண்டே ஏறிய உடன் இருக்கும் முதல் இருக்கையில் அமர்ந்து கொண்டார் சண்முகம்.
பந்து பந்தாக பூ இருந்ததை வேனில் இருந்த அனைவருமே பார்த்திருந்தனர்.
ஆகவே மகன்கள் இருவரும் குழப்பமாக அம்மாவை பார்க்க, ஜோஷ்னாவுக்கு ஒரே சிரிப்பு. கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த யசோ அவளுக்கு முன்னிருந்த இருக்கையில் முகம் புதைத்துக் கொண்டாள்.
வாழை இலையில் சுற்றிக் கட்டப்பட்ட பூவோடு வேகமாக வேன் ஏறிய கெளதம், “வண்டியை எடுங்க ண்ணா” என்றான்.
“என் வண்டி சாவியை பத்திரமா பாபுகிட்ட கொடுத்தியா, வெயில் வர்ற இடமா பார்த்து நிப்பாட்டலையே?” எனக் கேட்டார் சண்முகம்.
“கரெக்ட்டா வெயில் வர்ற இடத்துலதான் நிப்பட்டிருக்கான் ப்பா” வெளியே எட்டிப் பார்த்து விட்டு கௌதமை மாட்டிக் கொடுத்தான் குணா.
“தெரியும் டா உன்னை பத்தி” என்ற சண்முகம், வண்டியை நிழலில் நிறுத்துவதற்காக இறங்கப் போனார்.
“அப்பா அப்பா… உட்காருங்க, பாபுக்கு ஃபோன் பண்ணி சொல்லிக்கலாம்” என அவரை அமர வைத்தான் கல்யாண்.
வேன் புறப்பட, கெளதம் மனைவியை நோக்கி சென்றான். அவனது சகோதரர்களும் அம்மாவும் அவனை முறைத்து வைக்க, ஜோஷ்னா கிண்டலாக சிரித்தாள்.
ஏன் இப்படி என விழித்துக் கொண்டே கெளதம் முன்னேற, தர்ஷன், “பைல பூ சித்தப்பா கைல பூ, நிறைய பூ” என மழலையில் தாத்தாவை எட்டிப் பார்த்து சொன்னான்.
சண்முகத்திற்கு சரியாக புரியாததால், “ஆமாம்டா கண்ணா, பூ வாங்கணும்னு கூட தெரியலை உன் அப்பயிக்கு” என்றார்.
அசடு வழிய அம்மாவை பார்த்த கெளதம், வேகமாக சென்று மனைவியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.
“மானத்தை வாங்குறீங்க நீங்க!” என சின்னக் குரலில் சொன்னாள் யசோ.
அவள் தலையை கவனித்தவன், “என்னதிது! ஆல்ரெடி நிறைய பூ வச்சிருக்க, அப்ப இத என்ன பண்றது?” என செல்லக் கோவத்தோடு கேட்டான்.
“தம்பி… யசோக்கு நிறைய முடி இருக்கு, அந்தப் பூவையும் அவ தலை தாங்கும்” என மாமனார் காதில் விழுந்து விடாத படி சொன்னாள் ஜோஷ்னா.
“உள்ள இன்னும் இருக்குடா, வேணும்னா அம்மாட்ட கேட்டே வாங்கியிருக்கலாம். அதை விட்டுட்டு பெத்த தாயுன்னும் பார்க்காம அப்பாட்ட கோர்த்து விட்ட பார்த்தியா? வீடு வந்தப்புறம் உன்னை கட்டி வைச்சு உறிக்க ரெடியா இருக்கு அம்மா” என குணாவும் கிண்டல் செய்தான்.
“ஏன் உங்க எல்லார் கழுத்தும் பின்னாடி திரும்புது, சுளுக்கு புடிச்சுக்க போகுது, ம்ம்… நேரா பாருங்க” என கெளதம் சொல்ல, பார்வையாலேயே கேலி பேசி விட்டு திரும்பிக் கொண்டனர் குணாவும் ஜோஷ்னாவும்.
கணவன் வாங்கி வந்த பூவில் பாதியை நறுக்கி எடுத்த யசோ அதை வைத்துக் கொள்ளப் போக, ஹேர் பின் எல்லாம் எடுக்க வைக்க என உதவினான் கெளதம்.
எதேச்சையாக பின்னால் திரும்பிய கல்யாண், “இவன் பண்ற அலும்பு இருக்கே…” என மனைவியிடம் அலுத்தான்.
“நாம லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டோம், அவங்க இப்போதான் லவ் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க, பொறாமை படாதீங்க” என்றாள் ஜோஷ்னா.
“நீ பேசுறதே ஒரு மார்க்கமா இருக்கே, ஆபரேஷன் ஆகியிருக்குடி உனக்கு” என்றான் கல்யாண்.
“ஒரு மார்க்கமாவும் இல்லை, அஞ்சு வருஷத்துல ரெண்டு புள்ளைய கொடுத்திட்டு பேச்சை பாரு! கம்முனு வாங்க” என்ற ஜோஷ்னாவின் முகத்தில் மலர்ச்சி.
“நானும் அதைத்தான் சொன்னேன், கம்முனு வா” என கல்யாணும் சிரிப்புடன் சொன்னான்.
கையில் இருந்த மிச்ச பூவை வரிசை தட்டில் வைத்து விடலாம் என யசோ சொல்ல, அதை வாங்கி அம்மாவிடம் போய் கொடுத்தான் கெளதம்.
அருணா முறைத்துக் கொண்டே பூவை வாங்கிக் கொள்ள, “பாருங்கப்பா… கஷ்ட பட்டு பூ வாங்கிட்டு வந்தா கம்மியா இருக்குன்னு அம்மா கம்ப்ளைண்ட் பண்றத” என்றான் கெளதம்.
“படவா… போடா முதல்ல” என பல்லை கடித்துக் கொண்டு கௌதமிடம் சொன்னார் அருணா.
அம்மாவின் மோவாயை பிடித்த கெளதம், “என் ச்சு ச்சு புஜ்ஜிம்மா மூஞ்சிய நல்லா வச்சுப்பியாம்” என செல்லம் கொஞ்சி அவரிடம் செல்ல அடி வாங்கிக் கொண்டே நகர்ந்தான்.
மீண்டும் மனைவியிடம் வந்த கெளதம் அமர்ந்து தளர்வாக சாய்ந்து கொண்டான்.
கணவனை ஓரக் கண்ணால் பார்த்திருந்தவள் சிறிது நேரத்தில் அனைவரும் அவரவர் இடத்தில் செட்டில் ஆகி விட்டதால் நன்றாக அவன் பக்கம் திரும்பி பார்த்தாள்.
இமைக்காமல் கணவனின் உருவத்தை கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தாள் எனதான் சொல்ல வேண்டும்.
அவளுடைய பார்வை அவனது அடி மனம் வரை ஊடுருவிச் சென்றது. அவளின் தீவிர ரசிப்புக்கு ஈடு கொடுக்க இயலாமல் அவனுடைய கன்னங்கள் லேசாக துடிக்க, கண்களில் ஒரு மெய் சிலிர்க்கும் சிமிட்டல் உண்டாகியது.
வித விதமாக பெயர் வைத்து கொஞ்சுபவனை வார்த்தையே இல்லாமல் கொஞ்சிக் கொண்டிருந்தாள் யசோ. பதிலுக்கு அவனும் பார்வையாலேயே அவளை கொஞ்சினான்.
சில நிமிடங்கள் அப்படித்தான் நகர்ந்து சென்றன.
“உன் கண்ணுல தெரியற நான் பள பளன்னுதான் இருக்கேன், அதுக்குன்னு இவ்ளோ க்ளோஸப்ல திங்க வேணாம் என்னை” என தீவிர தொனியில் கிண்டல் பேசினான் கெளதம்.
“அதெல்லாம் இல்ல” என்றாலும் அவளின் பார்வை அவனிடத்தில்தான்.
“என்னை உனக்கு எவ்ளோ பிடிக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும், அதை இந்த நேரம் கண்ணுல அப்பட்டமா காட்டி என்னை பனிஷ் பண்ணாத. ஆல்ரெடி மீ அவுட் ஆஃப் கண்ட்ரோல்டி அன்னம்” என்றவனின் முகத்தில் குறும்பான திருட்டுச் சிரிப்பு அப்பிக் கிடந்தது.
அதன் பின் அவள் நேராக அமர்ந்து கொள்ள, அவளின் கையை பிடித்து தன் கையோடு கோர்த்துக் கொண்டான் கெளதம்.
கோர்த்திருந்த தங்களின் கைகளை தன் மடியில் எடுத்து வைத்துக்கொண்டாள் யசோ. அவன் விளையாட்டாக அவளின் மடியிலிருந்து கையை அகற்ற முனைய, விடாமல் இழுத்து பிடித்துக் கொண்டாள் அவள்.
அவன் இப்போது வலிமை கூட்ட, இன்னொரு கையால் அவனது கையை மென்மையாக வருடி விட்டாள். அவனும் அந்த வருடலுக்கு அடங்கி அவளிடமே கையை விட்டு விட்டான். சில நிமிடங்களில் அவனது கையை தன்னிரு கைகள் கொண்டு பொத்தி வைத்துக் கொண்டாள் யசோத்ரா.
அவளுடைய கைச் சிறைக்குள் தன் கையை மட்டுமல்ல தன்னையும் சேர்த்து இழந்தவன் கண்களை மூடி அந்த தருணத்தை ஆழ்ந்து அனுபவிக்க ஆரம்பித்தான்.