“சுத்தமா புடவை கட்ட வராதா என்ன உனக்கு?” எனக் கேட்டுக் கொண்டே தனக்கான ஆடையை போட்டுக் கொண்டான்.
சாதாரண புடவை என்றால் கட்டி விடுவாள், பட்டு அல்லது வணங்காத வேறு கனமான ரகம் என்றால் வேறொருவரின் உதவி வேண்டும். அதை அவனிடம் சொன்னாள்.
“சரி நான் ஹெல்ப் பண்ணிட்டு போறேன், அதுக்கு ஏன் கண்ண வேர்க்க விடுற?” எனக் கேட்டான்.
“ஃபர்ஸ்ட்லேருந்துனா கட்டிடுவேன், இதுல என்ன மிஸ்டேக் எங்க தப்பா போச்சுன்னு ஒன்னும் தெரியலைங்க, லேட் ஆகுது வேற” மூக்கை உறிந்து கொண்டே சொன்னாள்.
அவளின் பயத்திற்கு ஏற்றது போல சண்முகமே அவளின் கைப்பேசிக்கு அழைத்து விட்டார்.
யசோ பாவமாக கணவனை பார்க்க, அழைப்பை ஏற்ற கெளதம், “திடீர்னு எனக்கு முக்கியமான வேலைப்பா, கால் மணி நேரம் ஆகும். லேட் ஆகிடுச்சுன்னா நீங்க எல்லாரும் கிளம்புங்க, நானும் யசோவும் உங்க டி வி எஸ் ல வந்திடுறோம்” என்றான்.
“எல்லாரும் சேர்ந்து போறதுக்குத்தான் வேனுக்கு சொல்லிருக்கு” என கோவப்பட்டார் சண்முகம்.
“நான் வேணும்னா எங்கப்பா வேன் பிடிச்சிட்டார், நீ சொல்ற வேலையெல்லாம் செய்ய முடியாது போடான்னு என் மேனேஜருக்கு மெயில் அனுப்பி வச்சிட்டு வரவாப்பா?” என சாதாரணமாக கேட்டான்.
“டேய் டேய், வேலைய முடிச்சிட்டே வா” என சண்முகமும் பணிந்து போய் விட்டார்.
“டைம் இருக்குப்பா, நீங்க வேணும்னா பாபுக்கு துணையா கடைல இருங்க, கெளதம் வந்ததும் உங்களை கூப்பிடுறேன்” என கல்யாண் சொல்ல, சரிதான் என வேஷ்டியை மடித்து கட்டிக் கொண்டு அவரும் கடைக்கு சென்று விட்டார்.
“நல்ல வேலை பார்த்தடா, என் கழுத்த நெறிக்கிற மாதிரியே ஆடுவார்” என சொல்லி தன் அட்டிகையை தளர்த்தி விட்டுக் கொண்ட அருணாவும் தளர்வாக சோஃபாவில் அமர்ந்து விட்டார்.
“நான் மேல போய் பார்த்திட்டு வரேன்” என்றான் கல்யாண்.
“என்ன போய் பார்க்க போறீங்க, சும்மான்னு இருங்க, கல்யாணம் ஆன புதுசுல எங்க வெளில கிளம்பினாலும் நீங்க பண்ணின சேட்டையை எல்லாம் மறக்க வேணாம், எல்லாம் அவங்களே வருவாங்க” என சொல்லி கணவனை அடக்கி விட்டாள் ஜோஷ்னா.
யசோவை முழுதும் புடவையை களைய வைத்து, அவள் கேட்ட படியெல்லாம் பொறுமையாக உதவி செய்தான் கெளதம். ஒரு வழியாக புடவையை கட்டி முடித்தவள் பெரு மூச்சு விட்டு நன்றியாக கணவனை பார்த்தாள்.
அவளின் கன்னம் தட்டியவன், “இதுக்கு போய் டென்ஷன் ஆகிட்டு… போலாமா?” எனக் கேட்டான்.
அவளின் தலையில் கொஞ்சம் மட்டுமே பூ, மிச்சம் வெறும் நூல் மட்டும் தொங்கியது. அதை காட்டியவள், “இத என்ன செய்ய?” எனக் கேட்டாள்.
“அட்ஜஸ்ட் பண்ணுடி, பிராமிஸா போற வழில வாங்கித் தர்றேன்” என அவன் சொல்ல, அந்த பூவையே எடுத்து வெறும் நூலை துண்டித்து விட்டு மீண்டும் வைத்துக் கொண்டாள்.
போகலாம் என அவள் சொல்லவும் கைக்குட்டை எடுத்து அழுத தடம் தெரிந்த அவளது கண்களை துடைத்து முகத்தையும் ஒற்றி எடுத்து சரி செய்து விட்டவன், “எம்பிராய்டரில மட்டும்தான் யசோ கௌதமை சுத்தி பிடிச்சுக்குவாளா, நிஜத்துல இல்லையா? கூட நான் இருக்கும் போது எதுக்கு இப்டி பயம்?” எனக் கேட்டான்.
சட்டென அவனை அணைத்துக் கொண்டு பின் விட்டவள், அழகாக சிரித்தாள்.
“சரியான போதை மருந்து குடவுன்! இப்ப நாம கீழ போறதா இல்லையா?” எனக் கேட்டான்.
“அச்சோ வாங்க” என அவனது கையை பிடித்து இழுத்துக் கொண்டு கீழே சென்றாள்.
தம்பியை கண்டதுமே, “அப்பாவை கூப்பிடுடா குணா, தர்ஷனை புடிச்சுகிட்டு வேனுக்கு போடா நவீன், வீட்டை பூட்டிட்டு வாடா கெளதம்” என அனைவருக்கும் வேலை ஏவி கெவினை தூக்கிக் கொண்டு வெளியில் சென்று விட்டான் கல்யாண்.
“என்ன யசோ அவ்ளோ பூ வச்சு விட்டேன், இத்துனூண்டுதான் இருக்கு இப்போ” எனக் கேட்டார் அருணா.
விழித்த யசோ கணவனை பார்க்க, அவன் எனக்கொன்றும் தெரியாது என்பது போல, “வீட்டு சாவி எங்கம்மா இருக்கு?” எனக் கேட்டுக் கொண்டே அலமாரிக்குள் முகத்தை புதைத்துக் கொண்டான்.
பார்த்திருந்த ஜோஷ்னா, “அத்தை… டைம் ஆச்சு வாங்க போலாம்” என்றாள்.
“இல்லை ஜோஷ்னா” என்ற அருணா கையை நீட்டி அளவு காட்டி, “இவ்ளோ நீளமா பூ வச்சு விட்டேன், இப்ப காணோம்” என்றார்.
“கசா முசான்னு ஏதாவது பேர் வைக்காதீங்க” என அவள் சின்ன குரலில் அதட்டினாள்.
“நீ மட்டும் நமக்குள்ள இன்னிக்கு ஒரு கசாமுசாவும் நடக்காமலே என்னை அப்படி பார்க்கலாமா? நான் ஜென்டில்மேனா உன்னை எதுவும் பண்ணலைதானே?”
“நீங்க பார்த்து வச்ச வேலைலதான் என் புடவைக் கட்டு லூஸ் ஆகிடுச்சு… அதனாலதான் லேட்டும் ஆச்சு, அது அந்த கசமுசால வராதா?
எழுந்த சிரிப்பை அடக்கி, கொஞ்சம் விறைப்பாக பார்த்து, “பதிலுக்கு பதில் பேசிட்டே நிக்குற, இப்போ டைம் ஆகலயா உனக்கு? போ போய் வேன்ல எனக்கு இடம் புடிச்சு வை” என அதட்டினான்.
“ஆமாம் இல்லைனா மட்டும் இவருக்கு வேன்ல இடம் இல்லாம போக போகுது! திரும்ப வீட்டுக்கு வந்ததும் பேசிக்கிறேன் உங்களை” என மிரட்டி விட்டே சென்றாள் அவள்.
யசோ வேனில் ஏறியதுமே, வரிசை தட்டில் வைக்கவென இருந்த பூவில் எடுத்து அவளுக்கு வைத்து விட்டார் அருணா.
“உங்க ஃபேவரைட் மருமகளுக்கு மட்டும் குண்டு மல்லியா? அதுவும் ரெண்டு முழம்?” என வம்பாக கேட்டாள் ஜோஷ்னா.
“நீ முதல்ல முடிய வளர்த்துக்க, இப்பவே அரை சாண் பூவையே எங்க சொருகன்னு தெரியாம சொருகி விட்ருக்கேன்” என அருணாவும் கிண்டல் செய்தார்.
ஜோஷ்னாவுக்கு முடியாத நேரத்தில் அவளுடன் இருந்தாரே அருணா, அவர்களுக்குள் இன்னும் நல்ல புரிதலும் ஒட்டுதலும் உண்டாகியிருந்தது.
அண்ணா அண்ணா என தர்ஷன் நவீனுடன் நன்றாக ஒட்டிக் கொண்டு விட்டான். இருவரும் ஒன்றாக சேர்ந்து டிரைவர் இருக்கைக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.
அலங்காரம் முடித்திருந்த ஹேமா தன் புகைப்படத்தை கணவனுக்கு அனுப்பி வைத்திருந்தாள். அருணா அவரது குடும்ப வழக்கப் படி கருமை நிறம் கலந்த புடவை ஏதாவது அணிந்து கொள் என முன் கூட்டியே மகன் மூலமாக ஹேமாவுக்கு சொல்லியிருந்தார்.
திருஷ்டி கழியும் என்பதற்காகவோ என்னவோ அப்படி கடைபிடிக்கப் படுகிறது. காரணமும் கூட ஹேமாவுக்கு சொல்லப் பட்டிருந்தது.