“யசோகிட்ட திட்டு வாங்கி கொடுக்காம விட மாட்ட போலடா நீ. காலைல பேசலாம், போங்க ரெண்டு பேரும் போய் தூங்குங்க” என்ற கல்யாண், கெவினை வாங்கிக் கொண்டு அறைக்கு சென்று விட்டான்.

“உன் கோவத்தை நாளைக்கு காட்டிக்க வேணாம், ஃபங்ஷன் நல்ல படியா முடியணும் கெளதம்” என்றான் குணா.

“ஃபங்ஷன் முடியவும் காட்டிக்கிறேன் டா தம்பி!” என கிண்டலாக சொல்லி குணாவை சீண்டி விட்டுத்தான் அறைக்கு வந்து சேர்ந்தான் கெளதம்.

யசோ நாற்காலியில் அமர்ந்து மேசை மீது தலை வைத்து படுத்திருந்தாள்.

எழுப்பி விட்டவன், “தூக்கம் வந்தா பெட்ல படுக்காம என்ன இது பழக்கம்?” எனக் கேட்டான்.

“தூங்கிட கூடாதுன்னுதான் இங்க உட்கார்ந்தேன், என்னை அறியாம கண் அசந்திட்டேன் போலங்க” என்றாள்.

“தூக்கறதுன்னா தூங்கு”  என்றான்.

அவனை மலங்க மலங்க பார்த்துக் கொண்டே படுக்கைக்கு சென்றவள் படுத்து விட்டாள். சில நிமிடங்கள் கழித்து அவள் கண்களை திறந்து பார்க்க, கைகளை கட்டிக் கொண்டு அடக்கப் பட்ட சிரிப்புடன் அவளையே பார்த்த படி நின்றிருந்தான் கெளதம்.

அவள் சட்டென மீண்டும் கண்களை அடைக்க, “புடவையே எனக்காகத்தான் மாத்தாம இருந்திருக்கன்னு தெரியும்,  சொல்லு எனக்காக ஏன் வெயிட் பண்ணிட்டு இருந்த?” எனக் கேட்டுக் கொண்டே அவளருகில் அமர்ந்தான்.

தலையணைக்குள் முகம் புதைத்துக் கொண்டாள் அவள்.

“என் செல்ல செம்பருத்திப் பூ! புருஷன்கிட்ட ஆசைய மறைக்க கூடாது. எங்க திரும்பு” என சொல்லி அவளை தன்னை பார்க்க திருப்பினான்.

கைகளால் முகத்தை மூடிக் கொண்டவளிடம், “அச்சோடா வெட்கமாடி பட்டுப் பூவு, எங்க காட்டு பார்ப்போம்” என சொல்லி அவளின் கைகளை விலக்கி விட்டான்.

அவள் சிறு பிள்ளை போல சிணுங்க, அவளை பாதி எழுப்பி தன்னோடு அணைத்துக் கொண்டான்.

“சொல்லு ஏன் தூங்கல?” என விடாமல் வம்பு செய்தான்.

“நான் முழிச்சிட்டிருக்கணும்னு நீங்க நினைப்பீங்களோன்னு நினைச்சேன்” என்றாள்.

“இப்படி அரையும் குறையுமா சொன்னா? என்ன நினைச்சிருப்பேன்னு முழுசா சொல்லு” என்றான்.

முகத்தை விலக்கி அவனை பாவமாக பார்த்தவள், அவனது சட்டையை விலக்கி வெற்று மார்பில் முத்தமிட்டாள்.

“புருஷனை சாய்க்கிற வித்தை தெரிஞ்சவடி நீ அம்லுக் குட்டி!” என்றவன் அவளை அணைத்த படியே படுக்கையில் சாய்ந்தான்.

காலையில் ஹேமா வீட்டிற்கு செல்வதற்காக அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனர். கெளதம் மட்டும் இன்னும் எழுந்திருக்கவில்லை.

அருணாதான், “அவன் தூங்கினா தூங்கிட்டே இருப்பான், திட்டினாலும் பரவாயில்லை எழுப்பி விடு யசோ” என மருமகளை மேலே அனுப்பினார்.

யசோவும் கணவனை எழுப்பி விட, கண்கள் திறக்காமலேயே ம் போட்டவன் அவளை தன்னிடம் இழுத்தான்.

அவள் முகத்தில் பூசியிருந்த மஞ்சள், தலையில் சூடியிருந்த பிச்சிப் பூ எல்லாம் சேர்ந்து அவனது நாசியை நிறைக்க, ஆழ மூச்சு இழுத்துக் கொண்டே கண்களை திறந்தான் அவன்.

உள்ளம் கொள்ளை கொண்ட அவளது அழகில் மூச்சடைத்துப் போனவன் சில்மிஷங்கள் செய்து வைத்தான்.

“கஷ்டப்பட்டு புடவை கட்டியிருந்தேன், ஏங்க இப்படி பண்றீங்க?” என அலுத்துக் கொண்டாள் யசோ.

இளம் பச்சை வண்ண பட்டில் இருந்த மனைவியை, “என் பச்சக் கிளிக்கு புடவை கஷ்டம்னா சுடிதார் போட்டுக்க வேண்டியதுதானே?” எனக் கேட்டான்.

“அது… நைட் நீங்கதானே சொன்னீங்க?” என அவனது பேச்சை நினைவு படுத்தினாள்.

அதாவது மனைவியை புடவையில் பார்க்கும் போதுதான் அவனால் ஆசையாக நெருங்க முடிகிறதாம், மற்ற நேரங்களில் ஆசை இருந்தாலும் சின்ன பெண் என ஒரு ஓரத்தில் தோன்றிக் கொண்டே இருக்கிறதாம். முந்தைய இரவில் அவனை மறந்த நிலையில் அவன் சொன்னது.

“அப்படியா… எப்ப சொன்னேன் அப்டி?” என பொய்யாக யோசித்தான்.

அவள் செல்லமாக முகம் திருப்பிக் கொள்ள, அவளின் தாடையை வலிந்து  பற்றி தன்னை பார்க்க வைத்தவன், “எப்போன்னு சரியா சொல்லு” என குறும்பாக கேட்டான். அவளோ சொல்ல வெட்கம் கொண்டு அமைதி காத்தாள்.

“ஹான் ஞாபகம் வந்திடுச்சு… நைட் உன்னை… உன்…” அவன் சொல்லும் போதே அவனது வாயை மூடியவள், “காலை சாப்பாட்டுக்கு போகணும் அங்க. லேட் ஆனா மாமாவை நீங்கதான் சமாளிக்கணும்” என்றாள்.

அவளது கையை விலக்கி விட்டவன், “ரெண்டு வரி சொல்ல வந்ததை சொல்ல விடுங்க  என் மரகத பதுமை” என இன்னும் மனையாளை செல்லம் கொஞ்சி கொண்டிருந்தான்.

“அப்பப்பா ரொம்ப பண்றீங்க நீங்க, என்ன சொல்றதா இருந்தாலும் மதியம் வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறம் சொல்லுங்க கேட்டுக்கிறேன், இப்ப எந்திரிங்க” என்றவள் வலிந்து அவனிடமிருந்து விடுபட்டு, அவன் கையையும் பிடித்து இழுத்தாள்.

தன் கையை அவளிடமிருந்து பிடுங்கிக் கொண்டவன் அவளுக்கு போக்கு காட்ட, அவள் சூடியிருந்த பூச்சரத்தை பிடித்து இழுத்து விட்டான். பாதிக்கும் மேலான பூ அவன் மேலேயே உதிர்ந்து கொட்டி விட்டது.

அவள் அவனை முறைக்க, “போற வழில வாங்கி தர்றேன்” என சொல்லிக் கொண்டே எழுந்தான்.

“என்னாச்சுன்னு அத்தை கேட்டா என்ன சொல்றது நான்?”

“அவ்ளோ இன்டீசன்ட் இல்லை எங்கம்மா, எனக்கு ட்ரெஸ் எடுத்து வை” என சொல்லி குளியலறை சென்றான்.

அதற்குள் மருமகளுக்கு அழைத்த அருணா, “எல்லாரும் கீழ வந்தாச்சு யசோ, இன்னும் என்ன பண்றான் அவன்?” என பர பரத்தார்.

“குளிச்சிட்டு இருக்காங்க அத்தை” என அவள் சொல்ல, “என்ன இன்னும் குளிக்கிறானா? இங்க இவரை சமாளிக்க முடியலை யசோ” என அங்கலாய்த்தார் அருணா.

“என்னடி சொல்றான் அவன், லேட் ஆகுமா இன்னும்? சின்ன புள்ளைங்க கூட கிளம்பி வந்தாச்சு, நல்ல நேரத்துல செய்ற விஷயம், இப்படியா லேட் பண்ணுவான்?” என மாமனார் சிடு சிடுப்பதும் அவளின் காதில் விழுந்தது.

“இதோ வந்திடுறோம் அத்தை” என சொல்லி கைப்பேசியை வைத்தவள் குளியலறை கதவை தட்டி கணவனையும் அவசர படுத்தினாள்.

சோப்பு போட்ட உடம்போடு கதவை திறந்தவன், “இப்படியே வரவா டி?”என கடுப்படித்தான்.

“ஹப்பா ஆள பாரு, கீழ எல்லாரும் வேன்ல ஏறியாச்சு. மாமா சத்தம் போடுறாங்க” என்றாள்.

“எட்டரை மணிக்குன்னு தான் என்கிட்ட சொன்னீங்க, நான் சரியாதான் கிளம்புறேன்.  எல்லாரும் சீக்கிரம் கிளம்பிட்டு என்னை தப்பு சொல்லக்கூடாது, அவர் சத்தம் போடட்டும், நான் போய் பேசிக்கிறேன்” என்றான்.

அவன் சொல்வது போல அப்படி நேரமாகி விடவில்லை. தான்  தயாராகி  விட்டால் அப்படித்தான் மானசீகமாக காலில் வெந்நீர் ஊற்றிக் கொள்வார் சண்முகம்.

“சரி சரி போட்ட வரைக்கும் சோப்பு போதும்,  நாலு மக் தண்ணிய எடுத்து ஊத்திகிட்டு வாங்க” என்றாள் யசோ.

“ஏன் ஒரு மக் போதாதா?” எனக் கேட்டு மனைவியை முறைத்துக் கொண்டேதான் கதவை சாத்தினான்.

அவன் குளித்து முடித்து வந்த போது தளர்ந்து விட்ட புடவையை சரி செய்கிறேன் என ஆரம்பித்து ஏதோ தவறாக செய்து எப்படி ஒழுங்கு செய்ய என தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தாள் யசோ.

“ஏய் கொலு பொம்மை என்ன பண்ணிட்டு இருக்க?” என சிரித்த முகமாக கேட்டான்.

கலங்கிய கண்களோடு அவனை பார்த்தவள், “லேட் ஆகிடுச்சு, இந்த புடவையை எங்க இழுத்து சொருகன்னு தெரியலை” என்றாள்.