அறையில் தனிமையில் தன் அணைப்புக்குள்ளேயே மனைவியை வைத்திருந்தான் கெளதம்.
நடு இரவில் பெங்களூரு வந்திருக்கிறான். தியாகு ஒரு காரும் டிரைவரும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்க, ஓய்வே இல்லாமல் மனைவியை காண திருச்சி வந்து விட்டான்.
“திரும்ப போகணுமா?” அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து கேட்டாள்.
இனி கெளதமின் அவசியம் அங்கு இருக்காது, தேவையானதை இந்தியாவிலிருந்த படியே பார்த்துக் கொள்வான். அதை சொன்னவன், “அப்படி போனாலும் உன்னையும் சேர்த்துதான் அழைச்சிட்டு போவேன் தும்பிக் குட்டி” என்றான்.
“டீ காபி ஏதும் சாப்பிட்டீங்களா இல்லையா?” என விசாரித்தாள்.
“கொஞ்ச நேரம் ஆகட்டும்” என்றவன் படுத்துக் கொண்டு அவளையும் தன் மீது கிடத்திக் கொண்டான்.
யசோவுக்கு அவனது வருகை உற்சாகம் என்றால் அவனுக்கு மனம் அமைதியாக இருந்தது. அப்படியே கண் அசந்து விட்டான். அவனை தொந்தரவு செய்யாமல் விலகிப் படுத்தவள் சற்று நேரம் அவனுடன்தான் இருந்தாள்.
கீழே மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என தோன்றவும்தான் கீழே சென்றாள்.
கௌதமுக்கு நல்ல உடல் அலட்டல். இரவு பத்து மணி வரைக்குமே அப்படியொரு தூக்கம்.
வெறும் வயிரோடு இருக்கிறாரே என கவலையாக கணவனையே பார்த்த படி அவன் பக்கத்தில் அமர்ந்திருந்தாள் யசோ. லேசாக புரண்டு படுத்தவன் கண்களை திறப்பதாக காணோம்.
யசோதான் மெல்லிய குரலில் அவனை தட்டி எழுப்பி விட்டாள். மின் விளக்கின் வெளிச்சத்தில், கண்களை சுருக்கி கையை வைத்து மறைத்துக் கொண்டவன் உச்சு கொட்டினான்.
வேகமாக மின் விளக்கை அணைத்தவள், “சாப்பிட்டு படுப்பீங்களாம்” என்றாள்.
“யசோ!” என திட்டுக்கிடுதலோடு அவளை அழைத்தவனுக்கு தான் ஊருக்கு வந்து விட்டது நினைவுக்கு வர சிரித்தான்.
“என்னாச்சுங்க உங்களுக்கு?” என பயந்து போனவளாக கேட்டாள் யசோ.
“தூக்க கலக்கத்துல இன்னும் ஜெர்மனில இருக்கிறதாவே நினைச்சிட்டேன், லைட் போடு” என்றான்.
அறைக்குள் வெளிச்சம் பரவவும் ஸ்விட்ச் போர்ட் அருகில் நின்றவளை பார்த்தான். புடவையில் இருந்தாள்.
அவனது பார்வையை படித்து, “கோயிலுக்கு போய்ட்டு வந்தேன், அப்படியே இருந்திட்டேன்” என்றாள்.
ஒருக்கலித்து படுத்து தலையை கையில் தாங்கிக் கொண்டவன், “மை ஹாட்டி க்யூட்டி லவ் பக்!” என ஆசையாக சொன்னான்.
வெட்கம் சிந்த சிரித்தவள், “உங்களுக்கு பிடிச்ச அரிசி உப்புமா இருக்கு, பசியே இல்லையா?” எனக் கேட்டாள்.
நெட்டி முறித்துக் கொண்டே எழுந்தவன் சுடு தண்ணீரில் குளியல் போட்டு விட்டு வந்தான். அவன் ஆடை மாற்றும் வரை கூட பொறுக்காமல் உணவை ஊட்டி விட்டாள் யசோ.
ஒரு வாய் சாப்பிட்டவன் அவளது கையை பிடித்து முத்தமிட்டு கண்களில் ஒற்றிக் கொண்டான்.
“பக்கத்துல நீயும் சூடா அரிசி உப்புமாவும்… அவ்ளோ ஏக்கத்தையும் ஒரு கவளத்துல தீர்த்து வச்சிட்ட யசோ” என்றான்.
புன்னகைக்க மட்டும் செய்தவள் அடுத்த வாய் உணவையும் ஊட்டினாள்.
“வந்தப்புறம் யார்கிட்டேயும் சரியா பேசக்கூட இல்ல, நல்ல தூக்கம் யசோ”
“ம்ம்… மாமாக்கு நீங்க வந்ததே தெரியலை, நீங்க தூங்கறப்போவே உங்களை வந்து பார்த்திட்டு போனான் நவீன். குணா மாமா கூட நீங்க எழுந்திட்டீங்களான்னு ரெண்டு தடவ கேட்டாங்க. இப்ப எல்லாரும் படுக்க போயாச்சு” என சொல்லிக் கொண்டே அவன் உதட்டோரம் ஒட்டிக் கொண்டிருந்த உணவை துடைத்து விட்டாள்.
“பச்ச புள்ளைக்கு ஊட்டுற மாதிரி செய்யாத ஜிலேபி” என்றவன் ஆடை மாற்றி முடித்திருந்ததால் அவனே தட்டை வாங்கி சாப்பிட்டான். கை கழுவிக் கொண்டு வந்தவள் அவன் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டாள்.
இவனுக்கு மட்டும்தான் உப்புமா, மற்றவர்களுக்கு சப்பாத்தி செய்யப் பட்டிருந்தது. அதிலும் ஒன்று எடுத்து வைத்து, “டேஸ்ட் பண்ணி பாருங்க” என்றாள்.
அவளுடன் பேசிக் கொண்டே சாப்பிட்டதில் அளவு தெரியாமல் நிறைய சாப்பிட்டு விட்டான்.
“இப்படித்தான் வயித்த நிறைச்சு வைப்பியா?” யசோவை கடிந்து கொண்டான்.
“அளவு தெரியாம நீங்க சாப்பிட்டிட்டு என்னை சொல்லாதீங்க. இருங்க சுடு தண்ணி வச்சு எடுத்து ட்டு வர்றேன்” என்றாள்.
“அதெல்லாம் வேணாம், கொஞ்ச நேரம் நடந்தா சரியாகிடும்” என்றவன் அவளையும் அழைத்துக் கொண்டே வெளியில் வந்தான்.
ஹேமாவுடன் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த குணா, அண்ணனை காணவும் பேச்சை முடித்துக் கொண்டு கௌதமிடம் பேச ஆரம்பித்தான். இன்னும் உறங்கியிருக்காத கெவினை தூக்கிக் கொண்டு கல்யாணும் வந்தான்.
சகோதரர்கள் பேசிக் கொள்ளட்டும் என யசோ அறைக்கு வந்து விட்டாள்.
ஹேமாவுக்கு நாளைக்குத்தான் மருந்து கொடுக்கும் விழா. அதைக் குறிப்பிட்ட குணா, “சரியான நேரத்துக்கு வந்திட்ட” என்றான்.
“ஹேய் அவன் அவனோட பொண்டாட்டியை பார்க்க வந்திருக்கான், உன்னை பத்தியே யோசனை இருந்திருக்காது, இதுல ஹேமாவோட ஃபங்ஷன் பத்திதான் நினைச்சிட்டு இருக்க போறான்” என கிண்டல் செய்தான் கல்யாண்.
“எனக்கும் அது தெரியும், ஃபங்ஷன் அட்டெண்ட் பண்றது போல வந்திட்டான்னுதான் சொன்னேன். ரெண்டு பேரும் சேர்ந்துகிட்டு என்னை வம்பு பண்ண வேணாம் என்ன?” என முறுக்கினான் குணா.
தம்பியின் தோளில் அடி வைத்த கெளதம், “எல்லாம் சரிதான், நாளைக்கு உன் மாமியார் மூஞ்சிய பார்க்கணும்னு நினைக்கும் போதுதான் செம கடுப்பாகுது” என்றான்.
“நீயே இவ்ளோ நாள் கண்ண மூடிட்டுதான் அங்க இருந்திருக்க” என வாரினான் கெளதம்.
“பழச பேசாத” என எரிச்சல் பட்டான் குணா.
மூவரும் நடந்து கொண்டேதான் பேசினார்கள்.
கெளதம் இன்னும் ஏதோ சொல்லப் போக, “போதும்டா, வேற நல்ல கதையா பேசலாம். யோகிதா எப்படி இருக்கா?” எனக் கேட்டான் கல்யாண்.
“அதானே அதை கேளு” என நமுட்டு சிரிப்பு சிரித்தான் குணா.
“அடேய்களா ரெண்டு பேரும் எனக்கு பிரதர்ஸ் டா” என்றான் கெளதம்.
விளையாட்டை கைவிட்ட கல்யாண், “சீரியஸா கேட்கிறேன் டா, அவளால ஏதும் பிரச்சனை இல்லியே” எனக் கேட்டான்.
“அவ ஜெர்மனிலேயே இருக்கா, இன்னும் ஆறு மாசம் அவ அங்கதான் இருக்க போறா. அவளால எனக்கென்ன பிரச்சனை?” என்ற கெளதம், காதம்பரியின் கைப்பேசியில் இருக்கும் புகைப்படத்தை மட்டும் நீக்கும் படி தம்பியிடம் சொன்னான்.
மாமனாரிடம் சொல்லி செய்து விடுவதாக சொன்னான் குணா. இப்படியே இவர்களின் பேச்சு நீண்டது. கெளதம் மட்டும் கீழே போய் இன்னும் உறங்கியிருக்காத நவீனிடமும் பேசி விட்டு வந்தான்.
குணாவின் தோளிலேயே உறங்கிப் போயிருந்தான் கெவின். அறைப் பக்கமாக பார்த்த கௌதமை விடாமல் இன்னும் பேச்சு கொடுத்தான் குணா.
கல்யாண் கிண்டலாக கௌதமை பார்க்க, “சும்மான்னு இரு” என வெட்கப்பட்டுக் கொண்டே சொன்னான் கெளதம்.
“என்னங்கடா நீங்க மட்டும் ஏதோ பேசிக்கிறீங்க, நானும் உங்க பிரதர்தான், எனக்கும் சொல்லுங்க” என உரிமைக் கொடி தூக்கினான் குணா.
“அடேய் அறிவுஜீவி குணா! அவனை விடுடா போகட்டும், தவிக்கிறான் நம்ம பிரதர்” என கல்யாண் சொல்ல, குணா தன் தலையில் தட்டிக் கொண்டு சிரித்தான்.
இரண்டாவது முறையாக அறை வாயிலில் வந்து எட்டிப் பார்த்து விட்டு சென்றாள் யசோ.