“போர் அடிக்குதுன்னு நிறைய காஸிப் பேச ஆரம்பிச்சிட்டீங்களா?” என சிரித்துக் கொண்டே கேட்டான்.
“பொண்ணுங்கன்னா காஸிப் இல்லாமலா கெளதம்?” எனக் கேட்டு அவளும் சிரித்தாள்.
இகழ்ச்சியான சிரிப்புடன் அவளை பார்த்திருந்தவன், “ஒன்னும் இல்லாம புகையாதுன்னு சொல்லிக்குவாங்க, உங்களுக்கும் தெரியும். அதுக்கு அர்த்தம் ஏதாவது இருக்கும் அதை வச்சு கொஞ்சம் கற்பனை கலந்து அடிச்சி விடுறதுனு அர்த்தம். அப்படி எந்த பேஸ்’ம் (அடிப்படையும்) இல்லாம பேசினா அது காஸிப் இல்லை, யாரை பத்தி பேசுறீங்களோ அவங்களுக்கு நூய்சன்ஸ்” என்றான்.
“வாட்!” என அதிருப்தியுடன் அதிர்ந்தாள் யோகிதா.
“நான் என் மேரீட் லைஃப்ல எப்படி இருக்கேன்னு நீங்க டிஸ்கஸ் பண்ண வேண்டிய அவசியம் என்ன யோகிதா?” என நேராகவே கேட்டு விட்டான் கெளதம்.
பூங்காவில் தாங்கள் பேசிக் கொண்டதை அந்த பையன் போட்டு கொடுத்து விட்டான் என்பதை புரிந்து சங்கடமாக பார்த்தாள் யோகிதா.
“நீங்க மட்டுமில்லை இன்னொரு ஆளும் என்னை பத்தி பேசினது எனக்கு தெரியும். ஆனாலும் உங்களை மட்டும் ஏன் கூப்பிட்டு வச்சு பேசுறேன் தெரியுமா?”
“தெரியாது கெளதம், பட் தப்பா ஏதும் நான் சொல்லலை. உங்க வைஃப் பார்க்கும் போது எனக்கு என்ன ஓப்பனியன் வந்துச்சோ அதைதான் சொன்னேன்”
“ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அபிப்ராயம் இருக்கும், அதை மாத்த வைக்க ட்ரை பண்றது முட்டாள்தனம்னு எனக்கு நல்லாவே தெரியும். அந்த பொண்ணு பேசினதுக்கும் நீங்க பேசினதுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு. அவங்க சொன்னது அபிப்ராயம், உங்களோடது அப்படி மட்டும் இருக்கும்னு எனக்கு படல” அவளை கூர்மையாக பார்த்துக் கொண்டே சொன்னான் கெளதம்.
கௌதமுக்கு அவனது மனைவியை பிடிக்கவில்லை, ஊருக்காக வாழ்கிறான், இன்னும் என்னை பற்றி ஏதோ நினைப்பு அவனுள் இருக்கிறது, அதனால்தான் அன்று என்னை வெளியில் அழைத்து சென்றான் போன்ற எண்ணங்கள் யோகிதாவுக்குள் இருக்கிறது.
வெளியில் சென்று வந்த பிறகு யோகிதாவின் நடத்தையில் ஏதோ வித்தியாசம் உணர்ந்தாலும் என்னவென அவனால் இனம் கண்டறிய முடியவில்லை. நேற்றுதான் அனைத்தையும் கூட்டி கழித்துப் பார்த்து புரிந்து கொண்டான்.
“என் மனசுல யார் என்னன்னு முக்கிய பட்டவங்களுக்கு தெரிஞ்சா போதும். வேற தப்பான ஆள் இருக்கலாம்னு யாராவது நினைச்சா… அதென்னவோ என்னால அதை டாலரேட் செய்ய முடியாது. அதை கிளாரிஃபை பண்ணத்தான் இப்ப பேசிட்டு இருக்கேன்” என்றான்.
அவன் இவ்வளவு வெளிப்படையாக பேசவும் அவளும் அவன் நினைத்தது போலதான் நினைத்திருந்தேன் என்பதை ஒத்துக் கொண்டாள்.
“மேனர்ஸ் இல்லைனு தெரியும், ஆனாலும் கேட்கிறேன், ஏன்னா இந்த விஷயம் என் மண்டைய ரொம்பவே குடையுது கெளதம். நீங்க நிஜமாவே ஹேப்பியா இருக்கீங்களா?” எனக் கேட்டாள்.
இவளுக்கு பதில் சொல்ல வேண்டுமா என்பது போல பார்த்த கெளதம், “தெரிஞ்சுக்கிட்டு என்ன செய்ய போற?” எனக் கேட்டான்.
“நிஜமான அன்புக்கு தோற்றம் முக்கியமில்லைன்னு சொல்லிக்கிற விஷயம் உண்மையா இல்லையான்னு தெரிஞ்சுப்பேன்” என்றாள்.
“நீ இது தெரிஞ்சுக்க என் பெர்சனல் லைஃப் பத்தி நான் உன்கிட்ட பேசணுமா?”
தன் மனைவியை மனதிற்குள் கொண்டு வந்தவனிடம் மென்மையான புன்னகை உதயமானது.
“நீங்க சொல்ற மாதிரி பார்த்த உடனே அவளை எனக்கு பிடிச்சு போகல, பார்க்க பார்க்கவும் பிடிச்சு போகல. பழக பழக அவதான் எனக்கானவன்னு தெரிஞ்சுக்கிட்டேன். அவ கூட பழகுற யாருக்கும் அவளை பிடிக்காம போனா கண்டிப்பா அவங்கள்ட்ட ஏதாவது மிஸ்டேக் இருக்கணும். சாதாரணமா பழகறவங்களுக்கே அப்படினா… நான் அவ கூட லைஃப் ஷேர் பண்ணிட்டு இருக்கேன், எனக்கு எவ்ளோ பிடிக்கும் அவளைனு நீங்களே கற்பனை பண்ணிக்கோங்க” என்றான்.
அவன் சொல்ல சொல்ல அவனது முக பாவனையைதான் பார்த்திருந்தாள் யோகிதா. அவளை பற்றி அவன் பேசும் வார்த்தைகளில் கூட காதல் சொட்டியது.
“நான் நினைக்கிறத சரியா சொல்ல வருதா தெரியலை. என் வேலைக்காக அவளை விட்டுட்டு தூரமா வந்திருக்கேன், அவளோட நான் வாழ்ந்த மெமரிஸ்’ம் வாழப் போற கற்பனையும்தான் எனக்கு…” வார்த்தை கிடைக்காமல் யோசித்தவன், “எரிசக்தி, எனர்ஜி, ஷீ இஸ் மை சோல்மேட் அண்ட் ஷீ கம்ப்ளீட்ஸ் மீ( அவள் என் ஆத்ம துணைவி மற்றும் அவள் என்னை முழுமையாக்குக்கிறாள்) என்றான்.
சில நொடிகள் மௌனம் நிலவியது.
“லஞ்ச்க்கு டைம் ஆச்சு யோகிதா” என சொல்லி மறைமுகமாக அவளை கிளம்ப சொன்னான் கெளதம்.
“உங்களை மிஸ் பண்ணிட்டேன்னு ஒரு ஓரத்துல எனக்குள்ள ஒரு தாட் இருந்திருக்கு. இன்னிக்கு எல்லாம் க்ளியர், மனசு கிளியர் மண்டை கிளியர். இப்படியே ஹேப்பியா இருங்க கெளதம்” என சொல்லி வெளியேறி விட்டாள் யோகிதா.
மதிய உணவின் போது தன்னுடன் இருந்த மற்றொரு பெண்ணிடமும் இப்போது பேசிய விஷயத்தை பகிர்ந்தாள் யோகிதா.
உனக்கு வருத்தமாக இருக்கிறதா எனக் கேட்டாள் அந்த பெண்.
கண்டிப்பாக இல்லை என்ற யோகிதா, “யசோவை பத்தி பேசும் போது கௌதமை பார்த்திருக்கணும் நீ, என் லைஃப் பார்ட்னரும் என்னை பத்தி பேசும் போது அப்படி ஆகணும், அதான் இப்போ என்னோட லட்சியம்” என விளையாட்டாக சொன்னாள் யோகிதா.
அதற்கு யசோவிடம்தான் டியூஷன் செல்ல வேண்டும் என அந்தப் பெண் சொல்ல, “கெளதம் கண்டிப்பா ஒத்துக்க மாட்டார், அடிச்சி விரட்டி விட்டிடுவார்” என்றாள் யோகிதா. இருவரும் வாய் விட்டு சிரித்துக் கொண்டனர்.
கல்யாண் அவனது குடும்பத்துடன் இரவு உணவுக்கு ஊருக்கு வந்து விட்டான். அனைவரும் சோர்வாக இருந்தனர். யசோ சாப்பாடு தயாராக வைத்திருக்க, அதிகம் பேசிக் கொள்ளாமல் உண்டு உறங்க சென்று விட்டனர்.
குணாவை தொடர்பு கொள்ள முயன்று முடியாமல் போனதில் ஹேமா சோர்ந்து விட்டாள்.
காதம்பரியிடம் ஏன் இப்படி செய்தாய் எனக் கேட்டு கருணா சண்டை போட்டிருந்தார். தவறை ஒத்துக் கொள்ளாமல் ஏதேதோ பேசி தன் செயலை நியாய படுத்தத்தான் முயன்றார் காதம்பரி.
திருந்தாத ஜென்மத்திடம் எதற்காக பேச்சு வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒதுங்கி விட்ட கருணா ஹேமாவிடமும் பேசுவதில்லை.
ஹேமாவுக்கு தன் வாழ்க்கை குறித்தான பயம் தொற்றிக் கொண்டது. உன்னால்தான் அம்மா என காதம்பரியை குறை சொன்னாள்.
டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்கள் மூலம் மாதம் கிடைக்கும் வருமானத்தை சொன்ன காதம்பரி, உனக்கொன்று உன் தங்கைக்கு ஒன்று என கிடைக்கட்டும் என்று ஆசை பட்டேன், உங்களுக்கு நல்லது செய்ய நினைத்துதான் இப்படியானது, உன் கணவர் இப்படி பிழைக்க தெரியாத ஆளாக இருந்தால் நானென்ன செய்வது? தானாக போனவர் தானாகவே திரும்பவும் வருவார், இங்கு உனக்கு என்ன குறை எனக் கேட்டார்.
இதற்கு மேல் அம்மாவை நம்பி பிரயோஜனம் இல்லை என்பதை புரிந்து கொண்ட ஹேமா அப்பாவிடம் போய் நின்றாள்.
நீ செய்தது தவறில்லையா? உனக்கு யசோவும் ஒரு தங்கைதான், அவளுக்கு இப்படி செய்யலாமா என கேட்டார் கருணா.