சண்முகத்துக்கு மனமே சரியில்லை. நேரமாகவே கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டார். இன்று என்னுடன்தான் இருக்க வேண்டும் என அடமாக சொல்லி யசோவை தன் அறையிலேயே தங்க வைத்து விட்டான் நவீன்.
குணா வந்த நேரம் வீட்டுக் கதவையும் அடைத்திருந்தார் சண்முகம். அவன் அப்பாவுக்கு அழைத்துதான் கதவை திறக்க வைத்தான்.
இன்னும் உறங்கியிருக்காத காரணத்தால் யசோவும் நவீனும் கூட யாரென ஹால் வந்து பார்த்தனர்.
கலங்கிப் போன முகத்தோடு நின்றிருந்த சின்ன மகனை பார்த்து பதறிய படி என்னவென கேட்டார் சண்முகம்.
“நான் இனிமே அங்க போக மாட்டேன் ப்பா” என மட்டும் சொன்னான் குணா.
காலையில் விசாரித்துக் கொள்ள நினைத்த சண்முகம் உன் அறைக்கு போ என்றார்.
யசோதான், “சாப்பிட்டீங்களா மாமா?” எனக் கேட்டாள்.
அவள் முகத்தை பார்க்காமலே ‘இல்லை’ என்பதாக தலையாட்டினான் குணா. அன்றைய இரவு சாப்பாடு ஓட்டலிலிருந்துதான் வாங்கிக் கொடுத்திருந்தார் சண்முகம்.
நேரத்தை பார்த்த சண்முகம், “கடை இருக்கும்டா, நான் போய் வாங்கிட்டு வர்றேன்” என சொல்லி கிளம்பினார்.
தடுத்த யசோ வேகமாக சமையலறை சென்றாள். அருணாவே தயாரித்து வைத்திருக்கும் சத்து மாவு இருந்தது. வெங்காயம், மிளகாய் நறுக்கி போட்டு, மசாலாக்கள் கலந்து தோசை ஊற்றினாள். விரைவாக தேங்காய் சட்னியும் செய்து தட்டில் பரிமாறி கொண்டு வந்து கொடுத்தாள்.
பசியில் இருந்த குணா ஒரு தோசையை மள மளவென சாப்பிட்டு முடித்த பிறகுதான், “தேங்க்ஸ் அண்ணி” என்றான்.
அவள் தலையாட்டிக் கொண்டு தம்பியின் அறைக்கு சென்று விட்டாள். “கண்ண பார்த்து பசி அறிஞ்சு சாப்பாடு கொடுக்கிற இவங்க வாழ்க்கைய கெடுக்க நினைச்சிருக்காங்க ப்பா ஹேமாவோட அம்மா” என அப்பாவிடம் சொன்னான் குணா.
“என்னடா சொல்ற? அந்தம்மா ஏதோ திட்டியிருக்கும்னுதானே நினைச்சேன் நான்” என்றார் சண்முகம்.
காலையில் சொல்கிறேன் அப்பா என்ற குணா வேகமாக சாப்பிட்டு முடித்து அவனது அறைக்கு சென்று விட்டான்.
மனைவிக்கு அழைத்த கெளதம் அவளிடம் பேசாமல் நவீனிடம் கொடுக்கும் படி சொன்னான். முகத்தை சின்னதாக்கிக் கொண்டேதான் தம்பியிடம் கொடுத்தாள்.
“வச்சிடாதீங்க மாமா, அக்கா உங்கள்ட்ட பேச வெயிட் பண்ணிட்டு இருக்கு” என்றான் நவீன்.
“எனக்கு தூக்கம் வருதுன்னு சொல்லு” என கெளதம் சொல்ல, யசோவின் முகம் வாடிப் போய் விட்டது.
“ஒரு குட் நைட்டாவது சொல்லுங்க மாமா” என்ற நவீன் அக்காவின் கையில் கைப்பேசியை கொடுத்து விட்டான்.
கெளதம் மனைவியை கோவமாக பார்த்திருக்க, தம்பியின் முன் எதுவும் கேட்க இயலாமல், “தூங்குங்க” என்றாள். அவனும் அழைப்பை துண்டித்து விட்டான்.
காலையில் சரியாக கெளதம் எழும் நேரத்துக்கு அவனுக்கு அழைத்தாள் யசோ. அவன் அழைப்பை துண்டித்து கொண்டே இருந்தான். என்ன கோவம், பேசுங்க ப்ளீஸ் என இவள் செய்தி அனுப்பி வைத்த பிறகுதான் அவனாக காணொளி அழைப்புக்கு வந்தான்.
அப்போதுதான் குளித்து வந்து தயாராகிக் கொண்டிருந்தவன் முறைப்பாக மனைவியை பார்க்க, “என்னன்னு சொல்லாம இப்படி கோச்சுக்கிட்டா… நான் பாவம் இல்லையா?” எனக் கேட்டாள் யசோ.
“அந்தம்மா ஏதாவது சொன்னா எதிர்த்து நிக்காம மூஞ்சு முகரை வீங்குற அளவுக்கு அழுவியா நீ? உன்னை கொஞ்ச வேற செய்யணுமோ நான்?” என சூடாக கேட்டான்.
“அது வேணும்னா அழுதேன், ஏன் இப்படி பண்றாங்கன்னு ஆதங்கத்துல தானா வந்த அழுகை, எல்லா விஷயமும் தெரியுமா உங்களுக்கு?”
“குணா சொன்னான். அது சரி அந்த ஃபோட்டோ பார்த்தியா நீ?”
“ம்… அது ஒன்னும் கிராபிக்ஸ் இல்லை யசோ, நிஜம்தான்” என வம்பாக சொன்னான்.
“நானும் கிராபிக்ஸ்னு சொல்லலை” என சொல்லி பழிப்பு காட்டினாள்.
“ஃபோட்டோ நல்லாருந்துச்சா?” என அடக்கப் பட்ட சிரிப்புடன் கேட்டான்.
“கொஞ்சம் நீங்க சிரிச்சிருந்திருக்கலாம்” என்றாள்.
“அடிங்…” என விளையாட்டாக நாக்கை துருத்தினான்.
“யோகிதா கல்யாணம் ஆகாத பொண்ணு, அந்த ஃபோட்டோ இன்னும் சித்திட்ட இருந்தா தப்பு, டெலீட் பண்ண வச்சிடுங்க” என்றாள்.
“ம்ம்… எவ்ளோ கொழுப்பு இருந்தா என்கிட்டேயே சகுனி வேலை பார்ப்பன்னு அந்தம்மாட்ட மல்லுக்கு நின்னுருக்க வேணாமா நீ? எதுக்காக அழுதடி லட்டு?” என கேட்டுக் கொண்டே ஆடை அணிந்து கொண்டான்.
“அச்சோ கொஞ்சமும் கூச்சமே இல்லைங்க உங்களுக்கு”
“ஏது கூச்சமா? ம்ம்ம்… ஏதோ கெஞ்சுறேன்னு வீடியோ கால்ல வந்தேன்ல என்னை சொல்லணும்”
“நைட் டயர்ட்னு சொன்னீங்களே இப்ப பரவாயில்லையா?”
“ஏய் நான் கோவமா இருக்கேன் பவள வண்டு, நீ பேச்சை மாத்துறியா?”
“கோவத்துல குணா மாமாட்ட என்ன சொல்லி வச்சீங்க?” எனக் கேட்டாள்.
“நான் ஏதும் சொல்லலை, அவனை சுத்தி நடக்கிறத என்னன்னு பாருடான்னு மட்டும்தான் சொன்னேன், ஏன் என்னாச்சு?” எனக் கேட்டான்.
இரவே குணா இங்கு வந்து விட்டதை சொன்னவள், “இனி அங்க போக மாட்டேன்னு வேற சொன்னார். ஹேமாக்கா கூட சண்டை போல” என்றாள்.
“அதுக்கு நான் என்ன பண்றது?”
“அக்காக்கு மருந்து கொடுக்கிற ஃபங்ஷன் இருக்கு, இப்ப இப்படிலாம் பிரச்சனை ஆனா நல்லாருக்குதுல்லங்க?”
“அதெல்லாம் என்னன்னு பார்த்துக்கலாம். இன்னொரு தடவ நீ எதுக்காகவும் அழுதேன்னு வை… பிச்சிடுவேன் உன்னை” என அவன் சொல்லும் போது முழுதாக தயாராகியிருந்தான்.
இனி எதற்காகவும் அழ மாட்டேன் என அவள் உறுதி தரவும், “குட், நான் கிளம்பறேன் பை” என சொல்லி வேகமாக அவளுக்கு முத்தமிட்டான்.
திரையை அவள் வருட, சின்ன சிரிப்புடன், “என்னை சாஃப்ட் ஆக்காத, கோவமா இருந்தாதான் இன்னிக்கு செய்ய வேண்டிய வேலையை சிறப்பா செய்ய முடியும்” என வேடிக்கையாக சொல்லி விட்டே அழைப்பை துண்டித்தான்.
குணா அங்கிருந்த படியே வங்கிக்கு கிளம்பி விட்டான். இன்னும் என்ன விஷயமென சண்முகத்துக்கு தெரியாது.
அவராக மனைவிக்கு அழைத்து, “நீ இல்லாம சமாளிக்க முடியலை, எப்ப வர்ற?” எனக் கேட்டார்.
அருணா விசாரித்த பிறகுதான் குணா இங்கு வந்து விட்ட கதை அவருக்கும் தெரிந்தது. இன்னும் இரண்டு நாட்கள் கழித்துதான் இங்கு வருவதாக இருந்தவர் பெரிய மகனிடம் போய் சொன்னார்.
குணாவுக்கு அழைத்து என்ன சண்டை என்பதை தெரிந்து கொண்ட கல்யாண் அம்மாவிடமும் சொல்லி விட்டான். அவர் இப்போதே ஊருக்கு செல்ல வேண்டும் என நின்றார்.
அன்று மட்டும் விடுப்பு எடுத்து, அடுத்த இரண்டு நாட்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி பெற்றுக் கொண்ட கல்யாண் குடும்பத்துடன் காரில் திருச்சிக்கு புறப்பட்டான்.
அலுவலகம் வந்த கௌதமிடம் மதிய உணவு இடைவேளையின் போது சிக்கினாள் யோகிதா. முக்கியமாக பேச வேண்டும் என சொல்லி அவளை இருக்க வைத்தான்.
என்ன பேசப் போகிறான் என யோகிதாவுக்கு எந்த யோசனையும் இல்லை, ஆனால் அவன் சொன்ன விதம் சற்று பயப்படுத்தியது. வேலையில் ஏதும் தவறு செய்து விட்டேனா என சிந்தித்துக் கொண்டுதான் அவன் முன் அமர்ந்திருந்தாள்.