“அதெல்லாம் ஒன்னுமில்ல யோகி, வாங்க” என அவளை அழைத்தவன், “யசோ… யோகிதா இருக்காங்க இங்க,  உன்னை பார்க்கணுமாம் இவங்களுக்கு, பேசு” என சொல்லி யோகிதாவிடம் கைப்பேசியை கொடுத்தான். 

யோகிதா ஆர்வமாக வாங்கி பேசினாள். யசோவுக்கு அவளை போல உடனே சரளமாக பேச வரவில்லை. அவள் கேட்பதற்கு பதில் சொன்னாள், சிநேகமாக புன்னகை செய்தாள். 

கௌதமுக்கு இந்தப் பெண் பொருத்தமே இல்லை என்ற தோற்றம் யோகிதாவுக்குள். 

யசோ பேச்சை வளர்க்காததால் நானே என்ன பேச என எண்ணி கௌதமிடமே கைப்பேசியை கொடுத்து விட்டு சென்று விட்டாள் யோகிதா. 

“திடீர்னு கொடுத்தா என்ன பேச நான்? இப்படியா பண்ணுவீங்க?” என கணவனிடம் குறை பட்டாள் யசோ. 

“நல்லாதான் பேசின, அவ போயிட்டா, அம்மா எப்ப வர்றாங்கனு ஏதும் சொன்னாங்களா?” என அவனே பேச்சை மாற்றி விட்டான். 

யோகிதாவிடம் அவளது குழுவில் இருந்த இன்னொரு பெண், “கெளதம்  ஸாரை முன்னாடியே தெரியமா?” எனக் கேட்டாள். 

தெரியும் என ஒத்துக் கொண்ட யோகிதா, எப்படி என சொல்லி, “அவங்க அப்பா அவருக்கு திடீர் கல்யாணம் பண்ணி வச்சிட்டார். இவருக்கு பிடிக்கலைன்னு கூட கேள்விப்பட்டேன். இப்ப அவர் வைஃபை ஃபோன்ல பார்த்தேன், ரொம்ப சுமார் அந்த பொண்ணு. பாவம்தான் கெளதம்” என்றாள். 

அந்தப் பெண் ‘அப்படியா!’ என கேட்டுக் கொள்ள, அவர்களுடன் இருந்த பையன் அதை ஒத்துக் கொள்ளவில்லை. 

“அவங்க சுமார்னு நீங்க எப்படி சொல்லுவீங்க?  ஸார் அவர் வைஃப் கூடதானே இப்ப பேசிட்டு இருக்கார்? நல்லா அன்பாதான் பேசுறார், டயர்டா இருந்தாலும் அவர் கண்ல ஒரு ஸ்பார்க் தெரியுது. மார்னிங் கூட நிறைய அவர் வைஃப்க்குத்தான் பர்ச்சேஸ் பண்ணினார். நீங்களா ஏதாவது அடிச்சி விடாதீங்க” என்றான். 

“தான் ஹேப்பியா இருக்கிறதா காமிச்சுக்கிறதுக்காக கூட இருக்கலாம்” என்றாள் அந்த பெண். 

“யாருக்கு காமிக்கணும் அவர்? இந்த பொண்ணுங்களுக்கு கற்பனை இருக்கே ஹப்பா!” என கிண்டல் செய்தான் அவன்.

“இதோ யோகி இருக்காங்களே, இவங்களுக்கு காமிக்க இருக்கலாம். நீ என் லைஃப்ல வரலைனா கூட நான் நல்லாருக்கேன்னு இவங்களுக்கு காட்ட இப்படி செய்றாரோ என்னவோ” என்றாள் அந்த பெண். 

யோகிதாவும் அப்படியா என யோசிக்க, “ஸார்கிட்டயே கேட்டா தெரிய போகுது” என்றவன் கௌதமிடம் செல்லப் போனான்.

 மற்ற இரு பெண்களும் அவனை பிடித்து வைத்துக்கொண்டு அவரிடம் சொல்லி விடாதே என கெஞ்ச, அவனும் சொல்லித்தான் ஆவேன் என விளையாடிக் கொண்டிருந்தான். 

எதேச்சையாக அவர்களை பார்த்த கெளதம், தன் குழுவினர் நன்றாக என்ஜாய் செய்கிறார்கள் என மகிழ்ச்சியாக நினைத்துக் கொண்டான். 

இந்த நாளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களில் சிலவற்றை முகநூல் பக்கத்தில் போட்டிருந்தாள் யோகிதா. ஹேமா அவளுடைய முகநூல் தோழி. எந்நேரமும் கைப்பேசியும் கையுமாக இருப்பவளின் பார்வையில் அந்த படங்கள் படவில்லை என்றால்தான் ஆச்சர்யம். 

அம்மாவிடமும் காட்டிய ஹேமா, “இவதான் கெளதம் மாமாக்கு முன்ன பார்த்த பொண்ணு, குணா சொல்லியிருக்கார். இப்ப இவ கூட ஜெர்மனில இருக்கார், என்னவா இருக்கும்மா?” என வேறு கேட்டு வைத்தாள். 

“இந்த தரித்தரத்தை சொத்துக்காக கட்டிக்கிட்டு இப்ப அவளோட கூத்தடிக்கிறானோ என்னவோ?” என்றார் காதம்பரி. 

“பாவம்ல ம்மா யசோ? அவளை ஏமாத்துறாரா இவர்? அப்பாட்ட சொல்லலாமா?” எனக் கேட்டாள் ஹேமா. 

தான் தன் வீட்டிற்கு சென்ற போது ஏசி விஷயத்தில் நவீனை பேசி, அது யசோவுக்கும் தெரிந்து கெளதம் கோவப்பட்ட கதையெல்லாம் மனைவியிடம் பகிர்ந்திருந்தான் குணா. அதை அப்படியே அம்மாவிடம் சொல்லியிருந்தாள் ஹேமா. 

காதம்பரி யோசனையில் இருக்க, “இவங்க ரெண்டு பேர் மட்டும் தனியா இல்லம்மா, கூட இன்னும் ரெண்டு பேர் கூட இருக்காங்க. நாம நினைக்கிறது போல தப்பா இல்லாம கூட இருக்கலாம். அப்பாட்ட சொன்னா விசாரிச்சிடுவார், இல்லைனா குணா கூட என்னன்னு பார்ப்பார். ஸ்டார்டிங்லேயே சரி பண்ணிட்டா யசோவுக்கு நல்லது” என்றாள் ஹேமா. 

சில நிமிடங்களில் காதம்பரிக்கு வேறு திட்டம் உதயமாகி விட்டது. இதைப் பற்றி அப்பாவிடமோ உன் கணவனிடமோ மூச்சு விடாதே என மகளுக்கு கண்டிப்போடு சொல்லி விட்டார். 

ஹேமாவுக்கு ஐந்தாவது மாதம் துவங்கியிருந்தது. மருந்து கொடுக்கும் விழா செய்ய வேண்டும் என கணவரிடம் சொன்னார் காதம்பரி. 

கருணாகரனும் அதற்கென்ன செய்து விடலாம் என்றார். 

தனக்கு நல்ல சளி பிடித்திருக்கிறது, உள் காய்ச்சலாக வேறு இருக்கிறது. உதவிக்கு யசோவை இங்கு வரவையுங்கள். நவீனுக்கும் தேர்வு முடிந்து விடுமுறை தொடங்கியிருக்கிறது.  பாவம் அவனும் எங்கு போகிறான்,  இங்கு தங்கி செல்வான் என நயமாக கணவரிடம் சொன்னார். 

யசோ இங்கு வந்தால் தன் மனைவி ஏதும் அவளை காயப்படுத்துவாளோ என கருணாவுக்கு நினைப்பிருந்தது. 

ஆகவே, “வேலைக்கு ஆளுங்க இருக்கையில அவங்கள வச்சு செய், அருணா தங்கச்சி சென்னைக்கு போயிருக்கு, யசோதான் அங்க பார்க்குது, இப்ப போய் இங்க கூப்பிட முடியாது” என்றே சொன்னார் கருணா.  

ஹேமாவின் கணவருக்கு அவரது குடும்பத்தை நாம் மதிப்பதில்லை என வருத்தம் இருக்கிறது. ஹேமாவும் யசோவும் ஒரே வீட்டு மருமகள்கள், அவர்களுக்குள் ஒட்டுதல் இருக்க வேண்டும், நாமே சம்பந்தி  வீட்டில் நேரில் சென்று அழைக்கலாம்.

 யசோவையும் நவீனையும்  நன்றாக கவனிக்க நான் தவறி விட்டேன், நம் மகள் கருவுற்று இருக்கும் போது அவர்களை பார்க்காமல் விட்ட பாவத்தை போக்க வேண்டும் என என்னவெல்லாமோ சொல்லி, தான் சொன்னதற்கு கணவரை சரி சொல்ல வைத்து விட்டார் காதம்பரி. 

எதிர்காலத்தில் யசோ கருவுற்றால் இப்போது ஹேமாவுக்கு செய்வது போல எல்லாம் செய்யத்தானே வேண்டும், என்னதான் சண்முகம் என்னை எதற்கும் எதிர் பார்க்க மாட்டார் என்றாலும் என் அண்ணன் மகளுக்கு முறையாக செய்ய வேண்டியதை எப்படி செய்யாமல் விடுவது? 

காதம்பரியின் ஒத்துழைப்பு இல்லாமல் எதுவும் செய்ய இயலாது, ஆகவே இப்போது அவள் சொல்வதை கேட்போம், அப்போதுதான் பின்னாளில் யசோவுக்கு எல்லா முறையும் செய்ய ஒத்துக் கொள்வாள் என யோசித்த கருணாகரனுக்கு மனைவியின் குரூர புத்தி தெரியவில்லை. 

மருந்து கொடுக்கும் விழாவுக்கு உங்கள் வீட்டினரை அழைக்க போகிறோம் என குணாவிடம் கருணா சொல்ல, அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. உடனே சரியென சொல்லி விட்டான். 

நாட்களை கடத்தாமல் கருணாகாரனும் காதம்பரியும் சண்முகம் வீட்டிற்கு சென்றனர். யசோவுக்கு இவர்களின் திடீர் வரவு திகைப்புதான் என்றாலும் வரவேற்கவே செய்தாள். 

நவீனை பக்கத்தில் அமர வைத்துக்கொண்டார் கருணா. முன் போல சித்தியை கண்டு மருண்டு போகாமல் தெளிவாக இருந்தான் நவீன். 

சண்முகமும் கடையை பாபுவின் பொறுப்பில் விட்டு விட்டு கருணாவிடம் நல்ல விதமாகவே பேசினார். 

பை பையாக பழங்கள், இனிப்புகள் யசோவுக்கும் நவீனுக்கும் உடைகள் என கடை பரப்பியிருந்தார் காதம்பரி. 

உங்கள் பையனும் என் பெண்ணும் செய்ததை நியாய படுத்தவில்லை, ஆனால் எவ்வளவு நாட்கள் இப்படியே இருப்பது. ஹேமாவின் வயிற்றில் உங்கள் குடும்ப வாரிசு இருக்கையில் வீம்பை தள்ளி வைக்க வேண்டும் என சுருக்கமாக என்றாலும் சண்முகம் ஏற்றுக்கொள்ளும் விதமாக பேசினார் கருணா. 

அருணா ஊருக்கு வரும் நாளை கேட்டறிந்து கொண்டு அன்றே விழா வைத்துக் கொள்கிறோம் என்றார் காதம்பரி. அருணாவிடமும் இருவரும் கைப்பேசியில் பேசினர். 

இன்னும் நான்கு நாட்களில் ஜோஷ்னாவையும் பேரப் பசங்களையும் அழைத்துக் கொண்டு இங்கு வரப் போகும் அருணாவும் சரியென்றார். காதம்பரி நல்லவராக ஜோஷ்னாவிடமும் பேசி அவளையும் விழாவுக்கு அழைத்து, கணவரை கொண்டு கல்யாணையும் அழைக்க செய்தார். 

அவ்வப்போது இருமிக் காட்டி தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதையும் அங்கிருந்தவர்கள் மனதில் பதிய வைக்க தவறவில்லை  காதம்பரி. 

காதம்பரியின் நடத்தை ஆளானப் பட்ட சண்முகத்தின் கண்களையே கட்டி போட்டு விட்டது எனதான் சொல்ல வேண்டும். 

விழா நடக்கும் வரை யசோவும் நவீனும் அங்கு வந்து இருக்கட்டும் என கருணா சொல்ல, மாமனார் மறுத்து விடுவார் என நம்பினாள் யசோ. 

அவரோ யசோவுக்கு விருப்பம்னா சரிதான் என சொல்லி விட்டார். 

தன் அண்ணன் மகளிடம் கருணாவே, “உன் சித்திக்கு முடியலை, நீ வந்தா நல்லாருக்கும் யசோ” என கேட்க, சரியென சொல்வது தவிர அவளுக்கு வேறு வழி தெரிந்திருக்கவில்லை. 

“இன்னிக்கே நாள் நல்லாருக்கு, இப்பவே வாயேன் யசோ, கார்லேயே போயிடலாம்” என அன்பொழுக அழைத்தார் காதம்பரி. 

இவர்களை காதம்பரி கண்டு கொள்வதே இல்லை என்பதுதானே சண்முகத்திற்கும் குறை, அதற்கும் மருமகளைத்தான் பார்த்தார். 

யசோவுக்கு அவளது சித்தி என்றால் பயம்தான், அவரது பார்வையே அவளை மௌனமாக்கி விடும். தலை தன்னால் ஆடியது.  இது பற்றி கணவனிடம் பேச அவளுக்கு அவகாசமே இல்லை. 

யசோவையும் நவீனையும் வெற்றிகரமாக தன்னுடன் அழைத்து சென்று விட்டார்  காதம்பரி.