“ஏன் அவர் அனுப்பி வைக்க மாட்டாராம் என்னவாம் அவருக்கு? இன்னும் அம்மா கிளம்பலையா?” என கல்யாண் கேட்க, என்ன சொல்லவென ஒரு நொடி திகைத்து விட்டாள்.

“என்ன யசோ, அம்மா எங்க?” எனக் கேட்டான் கல்யாண்.

“நான் இப்பதான் கீழ வந்தேன் மாமா, விஷயம் தெரிஞ்சதும் உங்களுக்கு கூப்பிட்டேன், அத்தை வருவாங்கதான் மாமா, நீங்க அங்க பாருங்க” என பேசி முடிப்பதற்குள் அவளுக்கு பட படப்பாகி விட்டது. எங்கே இதை வைத்து அப்பாவுக்கும் மகனுக்கும் சண்டை வருமோ என பயந்தே விட்டாள்.

அங்கே குழந்தைகளுடன்  கல்யாண் தவிப்பதை கற்பனை செய்து பார்த்தவளுக்கு  மனமே கேட்கவில்லை. என்ன பேச வேண்டுமென தன்னை தயார் செய்து கொண்டு மாமனாரை பார்க்க தேநீர் எடுத்துக் கொண்டு கடைக்கு சென்றாள்.

“என்னம்மா என்ன செய்றா உன் அத்தை?” என விசாரித்தார் சண்முகம்.

“அத்தை வருத்தத்துல இருக்காங்க மாமா” என்றாள் யசோ.

“எந்த காலத்துல  இருக்கா அவ? அப்பண்டிஸ் ஆபரேஷன்லாம் சின்ன விஷயம், நாளைக்கு வீட்டுக்கு அனுப்பி வச்சிடுவாங்க” என்றார் அவர்.

“அக்காவுக்கு அப்பெண்டிக்ஸ் வெடிச்சு அப்புறம் ஆபரேஷன் நடந்திருக்கு மாமா, சின்ன பசங்க ரெண்டு பேரையும் வச்சுக்கிட்டு கல்யாண் மாமாவுக்கு சமாளிக்க கஷ்டம்ல மாமா?” எனக் கேட்டவள் எங்கே கோவப்படுவாரோ என  அடுத்து ஏதும் பேசாமல் நின்றாள்.

“உன் அத்தை ஏதும் சொல்லலையே மா, இவ சென்னைக்கு போறாளா கேட்டு சொல்லு” என அவர் சொல்லவும்தான் அவளுக்கு ஆசுவாசம்.

தர்ஷனை வேறொருவர் வீட்டில் விட்டிருப்பதையும் சின்னவனையும் மருத்துவ மனையிலேயே வைத்திருக்க முடியாது என்பதையும் சொன்னவள், “இன்னிக்கே அத்தை அங்க கிளம்பிட்டா மாமாவுக்கு உதவியா இருக்கும் மாமா” என்றாள்.

“இந்த பய எதுவுமே சொல்லலை பாரேன் மா. இவளுக்கு தனியா போக வர எதுவும் தெரியாது வேற” என்றவர் என்ன செய்யலாம் என யோசித்தார்.

“நீங்க அத்தை கூட போய் விட்டுட்டு வாங்க மாமா, கடைக்கு பாபு வரட்டும், இடைல நான் பார்த்துக்கிறேன்” என அவளே வழி சொன்னாள்.

பேரப் பசங்கள் சிரம படுகின்றனர் என்றதுமே அவருக்குள்ளும் கவலைதான். உடனே ஒத்துக் கொண்டு விட்டார்.

அருணாவுக்கு மதியத்திலிருந்தே மனக் கவலை, நன்றாக அழுது அழுது இப்போது தாங்க முடியாத தலைவலி. ஊருக்கு பயணப் பட முடியுமா என கலங்கி விட்டார். டிக்கெட் போட்டு வந்த சண்முகம் பத்து மணிக்கு புறப்பட வேண்டும், எல்லாம் எடுத்து வை என அறிவித்து விட்டு கடைக்கு சென்று விட்டார்.

மாமியாரை மாத்திரை போட்டுக் கொள்ள செய்து படுக்க வைத்து விட்டு யசோவே எல்லாம் பேக் செய்தாள். ஒரு மணி நேரமாகியும் அருணாவுக்கு தலைவலி விட்ட பாடில்லை.

“ஒரு அடி எடுத்து வைக்க முடியாது யசோ, எப்படி ஊர் போய் சேர போறேன். இந்தாளும் புரிஞ்சுக்காம என்னையதான் கத்துவார்” என கண்களை மூடிக் கொண்டு அங்கலாய்த்தார்.

மாமனாரிடம் சொல்ல கடைக்கு சென்றாள் யசோ. இரண்டு நாட்கள் இங்கு இருக்கப் போவதில்லை என்பதால் சரக்கு எடுக்கவென சண்முகம்  சென்று விட்டதாக சொன்னான் பாபு.

செமினார் சென்று வர கெளதம் ஏற்பாடு செய்து கொடுத்த ஆட்டோக்காரன் கைப்பேசி எண் அவளிடம் இருக்க, உடனே வர சொல்லி விட்டாள்.

வீட்டு சாவியை பாபுவிடம் கொடுத்து, “நவீன், மாமா யார் வந்தாலும் கொடுத்திடு, கொஞ்சம் சாமான் வாங்க கடைக்கு போறோம் நாங்க” என சொல்லி மாமியாருடன் மருத்துவ மனைக்கு சென்று விட்டாள்.

அருணாவுக்கு முடியவில்லை என்றால் ‘விஷயத்தை தெளிவாக சொல்லாமல் எதற்கு அழுது உடம்புக்கு இழுத்துக் கொண்டாய்?’ என சத்தம் போட்டு விட்டுத்தான் மருத்துவ மனை அழைத்து செல்வார் சண்முகம். அவர் இங்கு இருந்தால் உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும்.  வெளியில் இருக்க, அவரால் மருத்துவ மனைக்கும் செல்ல முடியாது, மேற்கொண்டு உண்மை தெரிந்தால் அப்போதும் மனைவியை கடிந்து கொள்வார்.

கெளதமின் திருமணம் நடந்த போது இந்த மூத்த தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிணக்கு இன்னுமே முழுதாக சரியாகியிருக்கவில்லை.

ஆகவே தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கவே கடைக்கு போவதாக சொல்லி விட்டாள் யசோ.

அந்த ஆட்டோக்காரனே தாமதம் செய்யாமல் எந்த மருத்துவரை உடனே பார்க்கலாம் என சொல்லி அங்கு அழைத்து சென்றான்.

ஊசி போட்டு சற்று நேரத்துக்கெல்லாம் வலி சரியாகி விட்டதாக சொன்னார் அருணா. பின்னர்தான் வீடு வந்தனர். நவீன் மட்டும்தான் வந்திருந்தான், சண்முகம் இன்னுமே வந்திருக்கவில்லை.

“இன்னும் வரலையா அவர்? எப்ப வந்து சாப்பிட்டு கிளம்பறது யசோ, அவருக்கு போன் போட்டு கேளு,  லேட்டாச்சுன்னா பஸ் போயிடும். காலைல அங்க போனாதானே அவனுக்கு ஒத்தாசையா இருக்கும்?” என புலம்பினார் அருணா.

“மாமாக்கும் தெரியும்தானே அத்தை,  வந்திடுவாங்க. அவசர படுத்தினா வண்டில வரும் போது கவனம் தப்பும் அத்தை. இன்னும் நேரம் இருக்கு, நீங்க முதல்ல சாப்பிடுங்க” என நிதானமாக அவள் சொல்ல, அருணாவும் பர பரப்பை கை விட்டார்.

சண்முகம் வர அவருக்கும் சாப்பாடு வைத்தாள். தான் சென்னையிலிருந்து இங்கு வந்து சேரும் வரை பாபு மற்றும் அவனது அம்மாவை இரவில் இங்கேயே தங்கிக்கொள்ள ஏற்பாடு செய்திருப்பதை சொன்னார் சண்முகம்.

 பாபுவுக்கு விவரம் போதாது, வரவு செலவெல்லாம் உன் பொறுப்பில்தான் இருக்க வேண்டும், நான் திரும்ப வரும் வரை நீயும் கீழேயே இருந்து கொள் என்றெல்லாம் சொன்னார்.

“இவருக்கு நீ மட்டும்தான் மருமக, மத்த ரெண்டையும் கண்ணுக்கு தெரியாது” என கணவரின் காதில் விழும் படியே சொன்னார் அருணா.

“ஆமாம் டி அப்படித்தான், யசோதான் நான் கொண்டு வந்த பொண்ணு, நாளைக்கு உனக்கு ஒன்னுன்னாலும் நான் கொண்டு வந்த பொண்ணுதான் பார்க்கும் கேட்கும். வேற யாரும் சீண்டக் கூட மாட்டாங்க”  என்றார் சண்முகம்.

“யசோவை நான் குறைச்சு சொல்லலை, அதுக்குன்னு மத்த ரெண்டு பேரையும் உதாசீனம் செய்ய வேணாம்னுதான் சொல்றேன்” என்றார் அருணா.

“என்ன உதாசீனம் பண்ணினத கண்ட? வாய்க்கு வாய் பேசுவியா நீ, நீயே போயிக்க ஊருக்கு” என்றார் சண்முகம்.

“இவ்ளோ கல் மனசு ஆகாது உங்களுக்கு” என்றார் அருணா.

“அத்தை ஏதோ மன கஷ்டத்துல பேசுறாங்க மாமா. உடனே டிக்கெட் போட்டு நீங்களே அழைச்சிட்டு போறீங்களே, அக்கறைலதான் செய்றீங்கன்னு அவங்களுக்கும் தெரியும்” என மாமனாரிடம் சமாதானமாக சொன்ன யசோ, ‘பேசாமல் இருங்க அத்தை’ என மாமியாரிடம் பார்வையால் கெஞ்சினாள்.