ஆயிரத்தில் அவள் ஒருத்தி -15

அத்தியாயம் -15

நவீனுக்கு அரைப் பரீட்சை ஆரம்பித்திருந்தது. கெளதம் ஜெர்மனி சென்று ஒரு மாதமாகி விட்டது. இன்னும் எப்போது வர முடியும் என அவனால் சொல்ல முடியவில்லை.

ஆரம்பத்தில் சில நாட்கள் மிகவும் கஷ்டப்பட்ட யசோ இப்போது அவனுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறாள். இந்தப் பிரிவால் மனைவி தவிக்காமல் நன்றாக இருக்கிறாள் என்ற நினைப்புதான் அவனை வேலையில் கவனம் வைக்க உதவியது.

யசோ பொதுவாகவே வெளிப்படையாக எந்த உணர்வையும் காட்டி விட மாட்டாள். அப்படித்தான் இப்போதும் உள்ளுக்குள் இருக்கும் வருத்தத்தை மறைத்துக் கொண்டு இயல்பாக நடமாடினாள்.

மாமியாருக்கு உதவுவது,  நவீனை கவனிப்பது என இருப்பவள் கடைப் பையன் வராத நாட்களில் தன் பாடப் புத்தகத்தோடு கடையிலும் அமர்ந்து கொள்கிறாள்.

 நீ எதுக்குமா என மாமனார் கேட்டாலும் “போர் அடிக்குது மாமா” என அவர் சம்மதிக்க ஒரு காரணத்தையும் சொல்லி விடுவாள். அந்த நேரத்தில் சண்முகமும் சாப்பிட்டு சிறிது படுத்து  ஒய்வு எடுத்துக் கொள்வார்.

வாரம் ஒரு முறையாவது ஜோஷ்னா யசோவுடன் பேசி விடுவாள். மைதிலி தினம் வாட்ஸ் ஆப் மூலமாக இவளோடு இணைந்தே இருப்பாள்.

இரவில் கௌதமின் நினைவுகளோடு சங்கமித்து அன்புக் கணவனுடனான பிரிவுக்கு ஆறுதல் தேடிக் கொள்கிறாள்.

எப்போதாவது “எப்ப வருவீங்க?” என கணவனிடம் கேட்பாள். அதற்கே அவனுக்கு முகம்  மாறி விடும், “திரும்ப திரும்ப கஷ்ட படுத்துறேன்ல உன்னை?” எனக் கேட்பான்.

“வேலை விஷயமா போயிருக்கீங்க, நீங்க என்ன கஷ்ட படுத்துறீங்க? நேத்து கோயிலுக்கு போனேன்ல, அப்ப ஒரு குட்டி பொண்ணு…” என ஏதாவது சொல்லி அவனை இயல்புக்கு கொண்டு வருவாள்.

பக்குவமாக  நடந்து கொள்ளும் யசோவின் மீதான கௌதமின் நேசம் சொல்ல முடியாத அளவுக்கு கூடிக் கொண்டே போனது.

ஜெர்மனியில் இந்த டிசம்பர் மாதம் நல்ல குளிர். கௌதமுடன் சேர்த்து யோகிதா, இன்னொரு ஆண், பெண் என மொத்தம் நால்வர் அடங்கிய குழுதான் அங்கு சென்றிருக்கிறது. குழுவிற்கு தலைமை தாங்குவது கௌதம்தான். ஜெர்மனியில் உள்ள கம்பெனியில் அங்குள்ள ஒரு குழுவும் இவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறது.

அன்றைய தினம் யோகிதா கௌதமிடம் ஆலோசனை செய்யாமல் அவளாக முடிவெடுத்து செய்த ஒரு செயலால் பிழையாகி விட்டது. அதை சரி செய்தால் தான் அடுத்த கட்டம் நகர முடியும் என்ற நிலை. சரி செய்ய இயலும் என்றாலும் சில பல மணி நேரங்கள் எடுக்கும்.

அங்கிருந்த மேனேஜர் கௌதமைதான் காய்ச்சி எடுத்திருந்தான். யோகிதாவின் மீது கௌதமுக்கு நல்ல கோவம்.

தான் திட்டு வாங்கிய கையோடு யோகிதாவை அழைத்தவன்,  “நீங்களா முடிவு பண்றதுக்கு நான் ஏன் இங்க இருக்கேன்? அட்லீஸ்ட் செய்றதுக்கு முன்னாடி டிஸ்கஸ் பண்ணனும்னு கூட தெரியாதா? ஆர்வம் இருக்கலாம் அதிகப் பிரசங்கி தனம் இங்க வேணாம்” என கோவமாகவே சொல்லி விட்டான்.

அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. கண்டு கொள்ளாமல் அவள் செய்த தவறை சரி செய்யும் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டான்.

மதிய ஓய்வுக்கு பின் மாலையில் தம்பி பள்ளி முடித்து வரும் நேரத்தை கணக்கிட்டு கீழே சென்றாள் யசோ. அழுது கொண்டிருந்தார் அருணா.

நேற்று நடு இரவில் ஜோஷ்னா மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருக்கிறாள். குடல் வால் வெடித்து அவசர அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. அம்மாவிடம் சொல்லி பயமுறுத்தாமல் தானே சமாளித்துக் கொள்ளலாம் என நினைத்திருக்கிறான் கல்யாண்.

இரண்டு பிள்ளைகளையும் மனைவியையும் அவன் ஒருவனால் பார்த்துக் கொள்ள முடியவில்லை. அதற்கு மேல் முடியாமல் மதியமே அம்மாவுக்கு அழைத்து விட்டான்.

“இப்ப அக்காக்கு எப்படி இருக்காம் அத்தை?” என விசாரித்தாள் யசோ.

“இனிமே பயப்பட ஏதுமில்லையாம்  யசோ, கல்யாண் ஃபோன்ல பேசுறான்,  சின்னவன் விரா விரான்னு கத்துற சத்தம்தான் கேக்குது. இப்படி தனியா அல்லாடுறானேனு எனக்குதான் மனசு கேட்கல” என சொல்லி அழுதார்.

யசோவுக்கு பாவமாகி விட்டது.

“இங்கேருந்து யாரும் போகலையா அத்தை?  அக்காவை பார்த்திட்டு வரணும்ல?” எனக் கேட்டாள்.

“கூடவே போய் இருக்கணும்னு தோணுது யசோ, எங்க… இந்த மனுஷன் விடணுமே, விஷயத்தை சொல்லியும் அப்படியா இப்ப அந்தப் பொண்ணு நல்லாருக்குதானேன்னு கேட்டுட்டு அவர் பாட்டுக்கும் போயிட்டார்” என்றார் அருணா.

“அங்க என்ன கஷ்டம்னு மாமாகிட்ட சொன்னீங்களா அத்தை?” எனக் கேட்டாள்.

“அவர் என்ன ஒன்னும் தெரியாதவரா? கஷ்டமா இருக்கும்னு நான் வேற சொல்லணுமா?” என மாமியார் கேட்க, யசோ எதுவும் சொல்லவில்லை.

நவீன் வந்து விட்டான். அவனை கவனித்து டியூஷன் அனுப்பி வைத்த யசோ கணவனுக்கு அழைத்தாள். முதல் அழைப்பை அவன் எடுக்காமல் போகவும் சற்று நேரம் பொறுத்து இன்னொரு முறை அழைத்தாள்.

ஏற்றுக் கொண்டவன், “கால் அட்டெண்ட் பண்ணலைனா பிஸின்னு புரிஞ்சுக்க மாட்டியா யசோ?” என கடினமான தொனியில் கேட்டான்.

“இல்லைங்க…” அவள் ஏதோ சொல்ல வர, “உயிர் போற காரியம் இல்லைனா ஃபோன் வை யசோ, ஏன்னா எனக்கு இங்க அப்படித்தான் இருக்கு” என சிடு சிடுத்தான்.

“சரி நீங்க பாருங்க” என  அவள் சொல்ல, அடுத்த நொடி அழைப்பை துண்டித்து விட்டான்.

அரை மணி நேரம் சென்று அவனாகவே அழைத்து, “என்ன விஷயம்னு சீக்கிரம் சொல்லு” எனக் கேட்டான்.

அவன் பேசிய விதமே இன்னும் அவன் வேலையாக இருக்கிறான் என்பதை அவளுக்கு உணர்த்த, “ஒன்னும் இல்லைங்க” என சொல்லி விட்டாள்.

“மனுஷன் இருக்கிற நிலைமை தெரியாம… எல்லாம் விளையாட்டா போச்சுல்ல உனக்கு, நைட் பேசிக்கிறேன் உன்கிட்ட” என அவனிடமிருந்து திட்டுதான் அவளுக்கு கிடைத்தது.

‘ஹப்பா கோவத்தை பாரு!’ என முதலில் மனம் சுணங்கினாலும், ‘ஏன் இப்படி கோவ படுறார், இன்னிக்கு வேலை ரொம்ப கஷ்டமோ, என்ன சிரம படுறாரோ’ எனவும் நினைத்துக் கொண்டாள்.

யசோ தன் மாமனாரிடம் பொதுவாக பேசுவாளே தவிர பெரிய காரியங்கள் குறித்து எதுவும் பேசியதில்லை, அவர் மீது பயம் கலந்த மரியாதை. ஆகவேதான் அத்தையை ஊருக்கு அனுப்புவது குறித்து மாமனாரிடம் கணவனை கொண்டே பேச வைக்க எண்ணினாள்.

ஜோஷ்னாவுக்கு அழைத்து பேசுவாளே தவிர, இதுவரை கல்யாணின் எண்ணுக்கு அழைத்தது இல்லை. முதல் முறையாக அத்தையிடம் கேட்டு கல்யாணுக்கே அழைத்து பேசினாள்.

இப்போதுதான் கெவின் உறங்கினானாம். ஜோஷ்னாவை பார்க்க வந்த பக்கத்து வீட்டுக்காரர்களுடன் தர்ஷனை அனுப்பி வைத்து விட்டானாம். அவன் நன்றாக பயந்து போயிருப்பதாக சொன்னான்.

பெரிய மாமாவிடம் நீங்களே பேசி அத்தையை அங்கு வர வையுங்கள் மாமா என யோசனை சொன்னாள் யசோ.