பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த இஜ்ஜு தவழ்ந்து வந்து கௌதமின் மீது ஏறி அவனது மறு பக்கம் இறங்க முயல, குழந்தையை பிடித்து வைத்துக் கொண்டு கொஞ்சினான். 

விளையாடும் ஆர்வத்தில் இருந்த குழந்தை இறங்கவே முனைய, அவன் விடாமல் போகவும் அழ ஆரம்பித்தான். 

“டேடேய் ஏன் டா?” என அலுத்தான் தியாகு. 

“நீ சரியான அழு மூஞ்சு புள்ளைய பெத்து வச்சிட்டு என்னைய சொல்லாத” என நண்பனிடம் சொன்ன கெளதம், குழந்தையிடம், “என் பொண்டாட்டி மடியில மட்டும் சொகுசா உட்கார்ந்துக்கிற, இரு அவ வரட்டும் உன்னை அவ கூட சேர விடாம பண்றேன்” என்றான். 

ஒன்றும் புரியாத குழந்தை அவனது கன்னத்தில் பட் பட் என அடித்து விளையாட ஆரம்பித்தது. 

“டேய் உன் புள்ள என்னை அடிக்கிறான் டா, மைதிலிதான் இப்படி சொல்லி கொடுத்திருக்கா. என்னன்னு கேளுடா” என்றான் கெளதம். 

“என்னை எதுக்கு இழுக்குறீங்க ண்ணா? அவனை அவன் அத்தை கூட சேர விடலைன்னு சொன்னா அப்படித்தான் அடி போடுவான். ஏழு மாசம் என்ன ஏதுன்னு எட்டியே பார்க்காம பொண்டாட்டியாம் பொண்டாட்டி” என்றாள் மைதிலி. 

“என்னடா மைதிலிய பேச விட்டு வேடிக்கை பார்க்குறியா?” குழந்தையுடன் விளையாடிக் கொண்டே கேட்டான் கெளதம். 

“அவ சரியாதான் கேட்ருக்கா. உன்னை நல்லா கும்மாங் குத்து குத்தாம யசோ சும்மா விட்ருச்சேன்னு எனக்கும் ஆதங்கம் இருக்கு, என் புள்ளகிட்ட வாங்கிக்க” கேரம் விளையாடிக் கொண்டே சொன்னான் தியாகு. 

“பாருடா உன் அத்தை இல்லாம மாமா நிலைமை மோசமாகிடுச்சு, எல்லாரும் பேசுறாங்க, அவ இருந்திருந்தா யாரையும் பேச விட்ருப்பாளா?” என இஜ்ஜுவிடம் நியாயம் கேட்டான் கெளதம். 

“ஆமாம் இவரு அப்பாவி பால் டப்பா! கேட்க நாதியில்லாம இருக்காரு!” என அதற்கும் வாரினாள் மைதிலி. 

“பேசட்டும்டா இஜ்ஜு கண்ணா, உங்கம்மாவை கூட விட்ரலாம், அவளை அடக்காத உன் அப்பன் இருக்கானே, அவன் மேலதான் எனக்கு கோவம். என் பொண்டாட்டி வந்தப்புறம் கம கமன்னு மீன் குழம்பு வைப்பா,  அப்ப  ‘ஹையோ மச்சான் மைதிலியோட உப்பு சப்பில்லாத சாப்பாட்டிலிருந்து காப்பத்துடா’ன்னு உங்கப்பன் என் வீட்டுக்கு வந்து நிப்பான், சாப்பாடு கொடுக்கிறேனோ இல்லியோ மைதிலி செய்ற சாப்பாட்டை அவனை சாப்பிட வைக்கல… நான் உன் மாமா இல்லடா” என சூளுரைத்தான் கெளதம். 

மைதிலி தன் கணவனை முறைக்க, “ஏய் அவன் கோர்த்து விடுறான் டி” என சொல்லி, “ஆனாலும் யசோ மீன் குழம்ப அடிச்சிக்க முடியதுதானே?” என்றான் தியாகு. 

“ரெண்டு பேருக்கும் நல்லா வடிச்சு கொட்டினா பாத்திரத்தை மட்டும் விட்டு வச்சிட்டு சொட்டு விடாம முழுங்கித் தள்ளிட்டு நல்லா யசோவை புகழ் பாடுறீங்க, ஒரு வாரத்துக்கு இலை தழையா ஆக்கி போட்டு நான் யாருன்னு காட்டுறேன்” என மைதிலியும் சபதம் எடுத்தாள். 

தியாகுவும்  கௌதமும் ஒருவரை ஒருவர் பாவமாக பார்த்துக் கொண்டனர். 

அந்த நேரம் பார்த்து கௌதமின் அலைபேசி பாட்டு பாடியது. 

‘பெண் என்ற ஜாதியிலே 

ஆயிரத்தில் அவள் ஒருத்தி

பொன் வைரம் கொடுத்தாலும்

போதாது சீர் செனத்தி…

கல்யாணப் பந்தலிலே

நான் அவளை நேர் நிறுத்தி

பூமாலை சூட்டிடுவேன்

மாப்பிள்ளை நான் பட்டுடுத்தி

அன்றாடம் அலைந்து எங்கேயும் தேடி

கண்டேனே எனக்கு தோதான ஜோடி…’

குழந்தையை தூக்கிக் கொண்டே எழுந்தவன் வேகமாக தியாகுவின் மடியில் இஜ்ஜுவை அமர வைத்து விட்டு, அழைப்பை ஏற்றுக்கொண்டு பால்கனி பக்கம் சென்றான். 

தியாகுவுக்கும் மைதிலிக்கும் அடக்க முடியாத சிரிப்பு.  

பொதுவாக ரிங் டோனாக எந்த பிரத்யேக பாடலையும் கெளதம் வைத்துக் கொள்வதே இல்லை. இது கூட அனைவருக்கும் அல்ல, யசோ அழைத்தால் மட்டும் இந்த பாடல் ஒலிக்கும். சற்று முன் அலுவல் சம்மந்தமான அழைப்புகள் வந்த போதெல்லாம் சாதாரண ரிங் டோன் தான் கேட்டது. 

“அண்ணா இப்படியா கவுந்து போவார், பார்த்து கத்துக்கோங்க பாஸ்” என கணவனிடம் சொன்னாள் மைதிலி. 

“ரொம்ப பேசாதடி, பய இப்பதான் இப்படிலாம். நாங்க அப்பவே அப்படி!” என தன்னை  மனைவியிடம் விட்டுக் கொடுக்காமல் சொன்னான் தியாகு. 

மனைவியிடம் அழைப்பில் இருந்த கெளதம் வீட்டுக்கு வந்து விட்டாயா, இன்று எப்படி போனது எனக் கேட்டுக் கொண்டிருந்தான். 

நல்ல மழை, அதனால் வீடு வர தாமதம் ஆகி விட்டது என்றவள் அவன் சாப்பிட்டானா, என்ன உணவு என விசாரித்தாள். 

பதில் சொன்னவன், “நீயில்லாம ஒரு வாரம் ஓடிப் போச்சு யசோ, இன்னும் ஒரு வாரம் ஓட்டணும்” என்றான். 

“அதுவும் சீக்கிரம் போக போகுது” என்றாள். 

“பகல் கூட ஏதோ போயிடுது, நைட்டானா ஒரே பேஜாரா இருக்கு குல்ஃபி” 

அழகாக சிரித்தவள், “பேஜார்னா?” எனக் கேட்டாள். 

“ம்ம்ம்… நல்லா கேட்ட போ, பக்கத்துல இல்லாத உன்னை அப்டியே…” என அவர்களுக்கே உரித்தான அந்தரங்க உரையாடலாக அது நீண்டது. 

அரை மணி நேரம் மனைவியிடம் பேசி விட்டு சிரிப்பு சுமந்த முகத்தோடு ஹாலுக்கு வந்தான் கெளதம். 

“பெண் என்ற ஜாதியிலே ஆயிரத்தில் எங்கள் யசோ ஒருத்தி…” என மைதிலி ராகம் போட, “ஏன்டா இப்படியா உன் மனசை பப்பிளிசிட்டி பண்ணுவ, அதுவும் இவ முன்னாடி?” என தியாகுவும் கிண்டல் செய்தான். 

“ஏய் ஷட் அப் கய்ஸ்!” என வெட்கத்தோடு அதட்டினான் கெளதம். 

“எப்டி எப்டி பொன்னு வைரம்னு எது சீர் கொடுத்தாலும் அவளுக்கு ஈடு இல்லையாமாம், எப்படிண்ணா இப்படி? எங்கண்ணா இருந்தீங்க இவ்ளோ நாள்?” எனக் கேட்டாள் மைதிலி. 

“டேய் அவளை பேசாம இருக்க சொல்லு” என நண்பனிடம் கெஞ்சினான் கெளதம். 

“கல்யாணமே ஆன பிறகு அதென்னடா பட்டு உடுத்தி வேற இன்னொரு தடவ கல்யாணம் பண்ணிக்க போறியா? லாஜிக்கோட வைடா பாட்டை” என்றான் தியாகு. 

“வித விதமா கல்யாணம் பண்ணிக்க திட்டமோ என்னவோ, அண்ணா இருக்கிற ஃபார்முக்கு எதுவும் செய்வார், என்ன ண்ணா…” எனக் கேட்டாள் மைதிலி. 

“அலைஞ்சு திரிஞ்சு இவரா தேடிகிட்ட ஜோடியாம், காமெடியின் உச்சக்கட்டம் மைதிலி” என்றான் தியாகு. 

இதற்கு மேல் இங்கு இருந்தால் அவ்வளவுதான் என புரிந்து, ஓடியே சென்று விட்டான் கெளதம். 

அங்கே மழை பெய்து கொண்டிருக்க, அறைக்கு செல்லாமல் மாடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் யசோ. கணவனின் நினைவில் அவளது முகமும் மலர்ந்து காணப் பட்டது. 

அடுத்த ஒரு வாரமும் ஓடிச் சென்றது. யசோவுக்கு செமினார் நிறைவடைந்து விட்டது.  எப்போது வந்து அழைத்து செல்வீர்கள் என கணவனிடம் கேட்டாள் யசோ. 

அவன் செய்து கொண்டிருக்கும் ப்ராஜக்ட்டில் பெரிய சிக்கல். அவசரமாக ஒரு குழுவுடன் ஜெர்மனி செல்ல வேண்டும் கெளதம். 

“ரெண்டு நாள்ல கிளம்பறேன் யசோ” என உயிரே இல்லாத குரலில் சொன்னான் அவன். 

யசோவுக்கும் ஏமாற்றம்தான், ஆனால் அவனது மனதை வாட விடாமல், “வேலை விஷயம்னா போய்தானே ஆகணும்? நான் இருந்துப்பேன், போய்ட்டு வாங்க” என்றாள். 

அவளது புரிதலில் அவனது மனம் இளகிப் போனது. 

“போனா திரும்ப வர எத்தனை நாளாகும்?” என்னதான் யசோ  தன் வருத்தத்தை மறைக்க முயன்றாலும் குரலில் வெளிப்பட்டுத்தான் போனது. 

“எக்ஸாட்டா தெரியலை, ஒரு மாசம் போல ஆகலாம்” என்றான். 

“ம்ம்…  ஒரு மாசம்தானே?” என அவனிடம் சாதாரணமாக கேட்டாலும் இங்கே அவளின் கண்கள் கலங்கிப் போயின. 

அவளுக்காக ஒரு மாதம் என்கிறான், நிஜத்தில் அதற்கு மேலும் கூட ஆகலாம், முழுதாக சரி செய்யும் வரை அவனால் வர இயலாது, ஒரு வருடம் ஆனாலும் சரி. 

வரும் வெள்ளி இரவு கிளம்ப வேண்டும், பல கோடி மதிப்பிலான ப்ராஜக்ட்,  அதற்கான பொறுப்பு அவனுக்கிருக்கிறது. தவிர்க்கவும் முடியாது, அவனுக்கு பதிலாக வேறு யாரையும் அனுப்பவும் முடியாது, அப்படியொரு இக்கட்டான நிலை.

இடையில் அவளை ஒருமுறை பார்த்து விட்டு சென்றால் நன்றாக இருக்கும்தான், நேரம்தான் இல்லை. 

யசோவிடம் பேசிய பிறகு அம்மாவிடமும் சொன்னான்.  

“என்னடா இது இப்படி சொல்ற, ஒரு மாசத்துக்கு மேல தாமதம் பண்ணிடாத” என்றார் அருணா. 

“அது என் கைல இல்லமா, நான் வர்ற வரைக்கும் யசோவை பார்த்துக்க” என்றான். 

“நீ எங்களுக்கு சொல்ற பாரு, நல்லாருக்குடா!” என்றார் அருணா. 

“ம்மா… அப்ப வேற, அவ என்னை மிஸ் பண்ணியிருக்க மாட்டா, இப்ப அவளுக்கு ஈஸி கிடையாது” 

“அவளுக்குதான் கஷ்டம், உனக்கில்ல?”

“என்னம்மா உனக்கு பிரச்சனை? அவ இல்லாம பைத்தியம் புடிக்கிற மாதிரி இருக்கு, போதுமா? என்ன பண்ண சொல்ற, வேலைன்னா அப்படித்தான்” என எகிறியவன் பின் தானாக தணிந்து, “எனக்கு சரியா முடிவெடுக்க தெரியலை மா, இல்லைனா அவளை தனியா விட்டு அவ்ளோ மாசத்தை வேஸ்ட் பண்ணியிருக்க மாட்டேன் மா” என்றான். 

“பழச விடு, போற காரியம் சீக்கிரம் நல்ல விதமா முடியும், கவலை படாம போய்ட்டு வா” என ஆறுதலாக சொல்லி பேச்சை முடித்தார் அருணா. 

சிறு பிரிவு இப்படி நீண்டு போகும் என நினைத்திராத இரு இள உள்ளங்களும் தவித்துதான் போயின.