அவனிடம் வராமல் பாத்திரங்கள் கழுவ ஆரம்பித்தவளை, “அப்புறம் செய்யலாம், வா” என அழைத்தான்.

“இல்லை இப்படி ஏதாவது வேலை செஞ்சா எனக்கு பெட்டரா இருக்கும்” என அவள் சொல்லவும் அவளிடம் சென்று குணா மன்னிப்பு கேட்டுக் கொண்டதை சொன்னான்.

யசோ வெறுமனே கேட்டுக் கொண்டாள்.

“அதையே நினைச்சிட்டு இருக்க கூடாது, ரூமுக்கு வா” என அழுத்தமாக சொல்லி மாடிக்கு சென்று விட்டான். அவள் வரவே இல்லை.

இரவு உணவு முடியும் வரையிலுமே யசோ கீழேதான் இருந்தாள். படுக்க அவள் மேலே வந்த போது லேப்டாப்பில் வேலையாக இருந்தான் கெளதம்.

படுக்கையில் அமர்ந்து கொண்டவள் அவனையே அடிக்கடி பார்த்திருந்தாள். மதியமே தான் அழைத்தும் அவள் வரவில்லை என அவனுக்கு அவள் மீது சிறு கோவம்.

கண்டு கொள்ளாமல் இருந்தவனால் வெகு நேரம் அப்படியிருக்க முடியவில்லை. அவள் பக்கமாக திரும்பியவன், “என்ன?” எனக் கேட்டான்.

“நான் மதியம் சொன்னதுக்கு இன்னும் அதே பதில்தானாங்க? எனக்கென்னவோ நவீனை விட்டுட்டு இருக்க முடியும்னு தோணல” என்றாள்.

“சரி அப்ப நீ இங்க நவீன் கூடவே இருந்துக்கிறியா?” என அவன் கோவத்தில் கேட்க, அவனை அழுத்தமாக பார்த்தவள் சரி என்றாள்.

அவளை கூர்ந்து பார்த்தவன், மீண்டும் லேப் டாப்பில் மூழ்கி விட்டான். அவளுக்கு அவனது பாரா முகத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“என்னங்க…” என இரைஞ்சுதலாக அழைத்தாள்.

அவள் பக்கமாக திரும்பியவன், “இங்கேயே இருந்துக்கிறியா?” என மீண்டும்  கோவமாக கேட்டான்.

“கோச்சுக்காதீங்க” என கெஞ்சலாக சொன்னாள்.

நவீனை பாதி படிப்பில் நம்முடன் அழைத்து செல்ல முடியாது, அடுத்த வருடம் என்றாலும் கூட அவன் பத்தாம் வகுப்பு சென்று விடுவான், முக்கிய கட்டத்தில் பள்ளி மாற்றம் உகந்ததாக இருக்காது, நாம் இருப்பது வேறு மாநிலம், நவீன் இப்போது மொழி பாடத்தில் ஒன்றாக தமிழ் பயில்கிறான், பெங்களூரு பள்ளிக்கூடம் என்றால் அவனுக்கு சிரமம்தான் என எடுத்து சொல்லி அவளின் முகத்தை பார்த்தான்.

இது எதையுமே அவள் யோசித்திருக்கவில்லை. தன் தம்பியை குணா பேசியதில் வருத்தம் இருந்த போதும் இனி வருங்காலத்தில் எப்போதும் இப்படி பேசி விடுவாரோ என்ற பயம்தான் அவளுள் வியாபித்திருந்தது.

இங்கே அம்மாவுக்கு அவன்தான் பிடிப்பு, மூன்று பிள்ளைகள் இருந்தும் யாரும் நிரப்ப முடியாத அவரின் வெற்றிடத்தை நவீன்தான் நிரப்புகிறான். குணா பேசியதெல்லாம் அப்பாவுக்கு தெரிய வந்தால் இனி நீ இங்கு வரவே வராதே என அவனிடம் சொல்லி விடுவார், அந்த அளவுக்கு உன் மாமனார் மாமியாருக்கு நவீன்தான் முக்கியம் என பொறுமையாக எடுத்து சொன்னான்.

“அவனால எதுக்கு எல்லாருக்கும் கஷ்டம்? ஹாஸ்டல் பார்க்கலாமா?” எனக் கேட்கும் போதே அவளுக்கு குரல் கமறியது.

“நவீனால இங்க யாருக்கும் எந்த கஷ்டமும் இல்லை யசோ. ஹாஸ்டல்ன்னு எல்லாம் இன்னொரு முறை நீ யோசிக்க கூட கூடாது. இனிமே குணா அப்படி பேச மாட்டான், நான் சொன்னா நம்பணும்”

“அப்படி எதாவது ஆச்சுன்னா?” எனக் கேட்டாள்.

“ஆகாது” என உறுதியாக சொன்னான்.

அவள் அமைதி காக்க, “இங்க இருந்துக்கிறியான்னு நான் கேட்டா சரிங்கிற. நேத்துதான் வாழவே ஆரம்பிச்சோம், இன்னிக்கு இப்படி நீ சொன்னா… என்னை பத்தி யோசிக்க மாட்டியா யசோ?” எனக் கேட்டான்.

அவர்களுக்குள் நடந்த பேச்சுவார்த்தையை அலசிப் பார்த்தவள், “ஸாரிங்க” என்றாள்.

“எல்லாம் பேசிட்டு ஸாரி சொன்னா ஆச்சா?” எனக் கேட்டவன் மீண்டும் வேலை பார்க்க ஆரம்பித்து விட்டான்.

அவன் படுக்கைக்கு வர அரை மணி நேரம் ஆகி விட்டது. அதுவரை அவளும் உறங்கியிருக்கவில்லை. மனைவிக்கு இன்று மனம் சரியில்லை என நினைத்துக் கொண்டே வந்தவன் விலகியே படுத்தான்.

மீண்டும் அவள் “ஸாரி” சொல்ல, எப்போதோ கோவம் அகன்று விட்டவன் மென் சிரிப்புடன் அவள் பக்கம் திரும்பாமலே இருந்தான்.

அவனது முதுகு பக்க டிஷர்ட்டை இரண்டு விரல்களால் பிடித்து இழுத்துக் கொண்டே, “திருப்புங்க ப்ளீஸ்” என்றாள்.

“உன்னால நான் நல்லா ஹர்ட் ஆகிட்டேன், சும்மா படு யசோ” என பொய்யாக அதட்டல் போட்டான்.

அவனது முதுகோடு நெருங்கி படுத்தவள், “நீங்க சொன்னதும் உடனே சமாதானம் ஆகிட்டேன், அப்பவும் கோவம் போகாதா?” எனக் கேட்டாள்.

“இப்படி எல்லாத்துக்கும் எக்ஸ்பிளைன் பண்ணனும்னா மனுஷனுக்கு இரிடேட் ஆகாது?” எனக் கேட்டான்.

“அப்படி என்னத்துக்கெல்லாம் விளக்கம் கேட்டேனாம் உங்ககிட்ட, இன்னிக்கு குணா மாமா பேசினது சின்ன விஷயமும் இல்லை, நீங்க எக்ஸ்பிளைன் பண்ணித்தானே ஆகணும்? இதுக்கு போய் எரிச்சல் வருமா உங்களுக்கு, இப்ப திரும்ப போறீங்களா இல்லையா?” குரல் உயர்த்தாமல் கோவப்பட்டாள். கை மட்டும் இன்னும் அவனது டிஷர்ட்டை விடவில்லை.

“சரிதான், சண்டை வேற போடுறியா நீ?” என்றான்.

அவளுக்கு இப்பவோ அப்பவோ என இருந்தது அழுகை. அவனது முன் பக்கம் கையை போட்டு அணைத்துக் கொண்டவள் முதுகில் முகம் புதைத்து, “ஸாரி டாடி” என்றாள்.

“அச்சோ என் செல்லபொண்ணே!” என அழைத்துக் கொண்டே அவள் பக்கமாக திரும்பினான்.

‘எப்படி என்னிடம் முகம் திருப்பலாம்?’ என உதடுகள் கடித்து அவனை ஏறிட்டு பார்த்தாள்.

அவளின் முகத்தில் லேசாக மோதியவன், “அம்மாவும் உன்கிட்ட பேசுறேன்னு சொன்னாங்க, நாந்தான் நான் பார்த்துக்கிறேன்னு சொல்லியிருந்தேன், அம்மா ஏதும் சொல்லலைன்னு நினைக்காத” என்றான்.

“அதெல்லாம் இல்லை” என்றாள்.

“இப்ப கிளியரா? நார்மல் ஆகிட்டியா?” எனக் கேட்டான்.

அவள் வார்த்தையால் சொல்லாமல் அவனை அணைத்துக் கொண்டு படுத்தாள்.

தலையை அழுத்திக் கொடுத்தவன், “தூக்கம் வருதா?” எனக் கேட்டான்.

அவனது இறுகிய அணைப்பிலிருந்து வலிந்து தலையை மட்டும் விலக்கி அவனை நிமிர்ந்து பார்த்து, “நீங்க தூங்க சொன்னா தூங்குறேன், இல்லைனா தூங்கல” என்றாள்.

“என்ன சொன்னாலும் செய்வியா?” என அவன் வம்பாக கேட்க, ஆம் என தலையாட்டினாள்.

“மதியம் கூப்பிட்டப்ப வரலை?” என்றான்.

பாவமாக பார்த்தவள் அவனை சமாதானம் செய்யும் பொருட்டு அவனது டிஷர்ட்டின் பொத்தான் கழட்டினாள்.

அவன் குறு குறுவென அவளையே பார்க்க, லேசாக டிஷர்ட்டை விலக்கி அவனது வெற்று மார்பில் மென்மையாக முத்தம் வைத்து விட்டு மீண்டும் அவனை பார்த்தாள்.

“புருஷனை நல்லா பண்றீங்கம்மா ஆஃப்!” என கிண்டலாக சொன்னவன், தன் கொஞ்சலை வேறு வகையில் ஆரம்பித்தான்.

முதல் நாள் சரிவர புரியாமல் திண்டாடியிருந்த யசோ, இன்று தன்னை முழுதாக அவனுள் தொலைக்க ஆரம்பித்திருந்தாள். அவனோ யசோ யசோ என அவளிடம் கரைந்துக் கொண்டிருந்தான்.

இரண்டறக்  கலந்தவர்களின் அந்நியோன்யம் இன்னுமின்னும் பலமானது.