தள்ளியிருந்த கல்யாண், “நீ மாறவே மாட்டியாடா? ஒரு வாரத்துல நான் கிளம்பினதும் திரும்ப உன் ரூம்க்கே மாட்ட சொல்லிடுறேன் போதுமா?” என்றான்.
“இந்த வீட்ல என் ஏசிதான் கண்ணுக்கு தெரிஞ்சுதா? ஏன் அதான் இங்க ஒருத்தன் இருக்கானே நவீன், அந்த பயலுக்கெல்லாம் தனி ஏசி கேட்குதா, அதை கழட்ட வேண்டியதுதானே?” என ஆத்திரத்தில் அறிவிழந்து போய் கேட்டான் குணா.
“வாய மூடுடா என்ன பேச்சு இது?” என கண்டித்தார் அருணா. நவீனுக்காக அம்மா தன்னிடம் கோவப்பட்டதை குணாவால் தாங்க இயலவில்லை.
“என்ன பேச்சுன்னா இதுதான் பேச்சு, எனக்கு இங்க இருக்கிற உரிமை அவனுக்கு இல்லை. அவனை விட நான்தான் இங்க முக்கியம், அப்ப என் ரூம்ல உள்ளதை எப்படி எடுப்பீங்க?” என அதிலேயே நின்றான் குணா.
“ம்மா அறிவு கெட்டவன்கிட்ட எது பேசினாலும் எடுபடாது. இன்னிக்கே புது ஏசி இவன் ரூம்ல ஃபிட் பண்ணிடலாம், நான் வாங்கித் தரேன்” என அந்தப் பேச்சை முடித்து வைக்க பார்த்தான் கல்யாண்.
குணா திடீரென அதிர, அவனது அண்ணனும் அம்மாவும் என்னவென பின்னால் திரும்பி பார்த்தனர். கண்கள் கலங்கிப் போய் நின்றிருந்தாள் யசோ.
சின்ன மகனின் தோளில் வலிக்க அடித்த அருணா, “இவன் பேசினது மனசுல வச்சுக்காத யசோ, நீ மேல போகாம இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க, போ” என்றார்.
யாரையும் பார்க்காமல் மாடிக்கு சென்று விட்டாள் யசோ. குணாவுக்கு குற்ற உணர்வு ஏற்பட்டாலும் நீ பேசியது தவறு என அம்மாவும் அண்ணனும் மாற்றி மாற்றி பேசியதில் வீம்பாக நான்தான் இந்த வீட்டில் முக்கியம் என்றே நின்றான்.
இவனிடம் பேசிக் கொண்டே இருந்தால் இன்னும் பிரச்சனை ஆகும் என அவர்கள்தான் அந்த பேச்சை கைவிட வேண்டியதாகிற்று.
சற்று நேரத்தில் கெளதம் வந்து விட்டான். அம்மாவின் அறையில் படுத்திருந்தான் குணா. படிக்கிறேன் என நவீன் சென்ற பிறகு கௌதமிடம் நடந்ததை சொல்லி விட்டார் அருணா.
“எங்க இருக்கான் அவன், ஏதோ ரகளை பண்ணணும்னு முடிவோடதான் வந்திருக்கான்மா, என்னன்னு கேட்டுட்டு வர்றேன்” என கோவமாக சொன்ன கௌதமின் கைகளை கெட்டியாக பிடித்துக்கொண்டார் அருணா.
“அவன் மாமியார் வீட்ல இவனுக்கு எதுவும் ஒப்பல போலடா, அந்த வருத்தத்துல கண்டதையும் பேசிட்டான். அவனை சரின்னு சொல்லலை, இப்ப போய் பேசாத. அவனும் பதிலுக்கு பதில் பேசி நவீன் காதுல எல்லாம் விழ வேணாம் டா. நவீனுக்கு பூஞ்சை மனசுடா, தாங்க மாட்டான். இவன்கிட்ட நான் பொறுமையா அப்புறம் எடுத்து சொல்லிக்கிறேன், நீ யசோவை போய் பாரு” என்றார்.
கௌதமுக்கும் யசோவை நினைத்து கவலையாக, அவளை தேடிக் கொண்டு மாடிக்கு சென்றான்.
கெளதம் சமாதானமாக ஏதோ சொல்ல வர, அதற்குள், “நவீனை நம்ம கூடவே வச்சுக்கலாமா? ப்ளீஸ்ங்க” எனக் கேட்டாள்.
“என் ஆசைப் பொண்ண அழ விடன்னு வந்திருக்கான் ராஸ்கல், இனிமே அவன் அப்படி பேச மாட்டான், நான் பொறுப்பு” என சொல்லி அவளை அணைத்துக் கொண்டான்.
“நீங்க எப்பவும் இங்க இருக்க முடியாதில்ல, உங்க தம்பியும் இங்க வந்து போக இருப்பாங்க, நவீன் இப்படி பேச்செல்லாம் தாங்க மாட்டாங்க, அவனை எப்படி நான் விட முடியும்?” எனக் கேட்டு இன்னும் அழுதாள்.
இந்த நேரம் என்ன எடுத்து சொன்னாலும் அவளால் புரிந்து கொள்ள முடியாது என்பதால், “சரி யோசிக்கலாம், இப்ப அழாத” என சொல்லி அவளை படுக்க வைத்தான்.
அவள் உறங்கவே இல்லை. வெகு நேரம் அவளுடன் இருந்து அவளை உறங்க வைத்து விட்டு கீழே சென்றான்.
குணா மதிய சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருக்க, அவன் எழுந்து வரட்டும் என ஹாலில் அமர்ந்து கொண்டான். சின்ன அண்ணன் தன்னை முறைத்து பார்ப்பதை கண்டுதான் இருந்தான் குணா. சாப்பிட்டதும் அவனாகவே கௌதமிடம் சென்று, “ஸாரி, நான் அப்படி பேசியிருக்க கூடாது. அண்ணிகிட்டேயும் ஸாரி கேட்டதா சொல்லு” என்றான்.
“உன்னை என்னடா பண்றது?” என எரிச்சலாக கேட்டான் கெளதம்.
“அங்க சுத்தமா பிடிக்கல டா, ஹேமா ப்ரெக்னெண்ட்டா இருக்கும் போது கோவபடவும் பயமா இருக்கு, அப்பா ஸாரி கேட்க மாட்டார், அவர் இறங்கி வந்து பேசாம அவ இங்க வர ஒத்துக்கவே மாட்டா. என்ன செய்யன்னு தெரியாம…” என இயலாமையோடு பார்த்தான் குணா.
“பொறுமையா இரு ஏதாவது செய்யலாம். இன்னொரு தடவ இப்படி ஏதாவது சொல்லிட்டு செஞ்சிட்டு ஸாரி கேட்டு சரி பண்ணிடலாம்னு நினைக்காத. நவீனையோ யசோவையோ யார் எது சொன்னாலும் என்னை சொன்னதுக்கு சமம் தெரிஞ்சுக்க” என்றான் கெளதம்.
“தப்புன்னு ஸாரி கேட்டும் என்னையவே பேசினா என்னதான் பண்றது நான்? நான் அவ்ளோதான்ல உங்களுக்கெல்லாம்?” என ஆதங்கமாக கேட்டு விட்டு கௌதமின் பதிலுக்கு காத்திராமல் வீட்டை விட்டு சென்று விட்டான் குணா.
தன்னிடம் சொல்லிக் கொள்ளவில்லை என அருணா வருத்தப்பட, “அவன் யார்கிட்டேயும் சொல்லிக்கல ம்மா. நைட் ஃபோன்ல பேசிக்கலாம்” என கல்யாண் அம்மாவை சமாதானம் செய்து வைத்தான்.
அனைவரும் சாப்பிட்ட பிறகுதான் யசோ கீழே வந்தாள். ஹாலில் இருந்த கெளதம் அவளையே பார்த்திருக்க, அவளோ தம்பியை தேடிக்கொண்டு சென்றாள். நவீன் உறக்கத்திலிருக்க அங்கே அவன் பக்கத்திலேயே அமர்ந்து விட்டாள்.
கால் மணி நேரமாகியும் அவள் வராமல் போகவே கெளதம் சென்று அவளின் கை பிடித்து உணவு மேசைக்கு அழைத்து வந்தான். வயிற்றுக்கு சாப்பிடாமல் பாதியில் எழப் போனாள்.
“யசோ…” என அவன் அதட்டியதில் இன்னும் கொஞ்சம் சாப்பிட்டாள்.
கெளதம் அவளுக்கு பிடித்த மீன் வறுவல் எடுத்து வைக்க, “தம்பியை இங்க விட மனசு வரலைங்க” என சின்ன குரலில் சொன்னாள்.
“அதெப்படி வராம போகும்? நான் வர வைக்கிறேன். முதல்ல சாப்பிட்டு முடி” என்றான் கெளதம்.
“அவன் நம்ம கூட வரணும், இல்லைனா…” எனத் தயங்கினாள். அவன் கண்கள் இடுங்க மனைவியை பார்க்க, விழிகளை தாழ்த்திக் கொண்டு, “நான் இங்க தம்பி கூட இருக்கணும்” என்றாள்.
“சாப்பிடுன்னு சொல்றேன்ல யசோ, பட்டுப்பூவுக்கு புருஷன் ஊட்டி விடணுமா?” என அவன் விளையாட்டு பேச்சை கையில் எடுக்க, தீவிர முகத்தோடு மிச்ச சாப்பாட்டை வேகமாக உண்டு முடித்து எழுந்து கொண்டாள். அவனும் ஹால் சென்று அமர்ந்தான்.