கௌதமுக்கு இரவில் அரை குறை உறக்கம்தான், ஆகவே அடித்து போட்டது போல தூங்கிக் கொண்டிருந்தான்.

அவன் எழுந்து கீழே வரும் போது அம்மாவுக்கு காலில் தைலம் தடவிக் கொண்டே திட்டிக் கொண்டிருந்தான் கல்யாண்.

என்னவென கெளதம் கேட்க, “மதியானம் தடபுடல் விருந்து பண்ணி சாயந்தரம் அன்னதானத்துக்கு வேற ரெடி பண்ணிருக்கு. மிச்ச வேலை நான் வந்து செய்றேன்னு யசோ சொல்லியும் கேட்காம, கேசரி, புளிசாதம்னு இன்னும் வேலைய இழுத்து வுட்டு நடக்கவே முடியாம சிரம படுது” என அம்மாவை முறைத்துக் கொண்டே சொன்னான் கல்யாண்.

“ஏம்மா?” என கௌதமும் அம்மாவை கடிந்தான்.

“போங்கடா, அந்த சாமி மனசு வைக்காம இந்த வீட்டு பிரச்சனை எல்லாம் ஒன்னொன்னா தீருமா? நீங்கல்லாம் ஊருக்கு போயிட்டா அப்புறம் என்னடா வேலை எனக்கு? வீடு இப்போதான் நல்லாருக்கு, இப்ப போயி இந்த கால் வலி வந்துச்சேன்னு இருக்கு” என்றார்.

அம்மாவின் பேச்சு அந்த இரு மகன்களையுமே இளக செய்து விட்டது.

குணாவும் மனைவியோடு இங்கு வந்து போக இருந்தால் போதும் என அருணா சொல்லிக் கொண்டிருக்க, “அத்தை இந்த தூக்குல புளியோதரை எடுத்துக்கவா?” எனக் கேட்டாள் யசோ.

கெளதம் திரும்பிப் பார்க்க, மனைவியை பார்த்த வேகத்தில் அவனுக்கு மூச்சடைப்பது போலானது.

தலைக்கு குளித்து தளர பின்னல் போட்டு, மாமியார் உதவியதில் பாந்தமாக காட்டன் புடவை உடுத்தியிருந்தாள். அவள் கீழே வரும் போது நெற்றியில் வைத்திருந்த பொட்டு விழுந்திருக்க, தான் வைத்துக்கொள்ளும் பெரிய வட்ட வடிவ ஸ்டிக்கர் பொட்டை வைத்து விட்டிருந்தார் அருணா. முகத் தோற்றம் மாறியிருந்தது.

வேலை செய்து கொண்டிருந்ததால் முந்தானையை  இழுத்து சொருகியிருந்தாள். சூட்டிய இருவாட்சி மல்லி தோளில் வழிய கௌதமால் இமை மூட முடியவில்லை.

நீ நினைப்பது போல சின்ன பெண் ஒன்றுமில்லை, வளர்ந்த வாலிபக் குமரி என கணவனுக்கு தலையில் தட்டி சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“அது பத்தாது யசோ, மேல் ராக்கையில வேற பெருசா இருக்கும், அதை எடுத்துக்கோ” என்றார் அருணா.

“சரி அத்தை” என சொல்லி சென்று விட்டாள் யசோ. கெளதம் மனைவியை நோக்கி செல்ல, அவளுக்கு எடுக்க சிரமம் நீயே எடு என அம்மா அவனை அழைத்து சொன்னது அவனது காதில் விழவே இல்லை.

“என்னடா இது?” என பெரிய மகனிடம் கேட்டார் அருணா.

“அவன் ஆளு ஒரு மார்க்கமா திரியுறான், யசோவையெல்லாம் மேலிருந்து எடுக்க விட மாட்டான், அவன் பார்த்துப்பான். நீ கொஞ்ச நேரம் அசையாம ஒரே இடத்துல உட்காரு” என்றான் கல்யாண்.

பெரிய ஸ்டூலை இழுத்து போட்டுக் கொண்டிருந்த யசோவின் கையை பிடித்த கெளதம், “யாருடி நீ ஆள் மயக்கி?” எனக் கேட்டான்.

“நல்லாருக்கேனா, அத்தைதான் கட்டி விட்டாங்க, நிறைய ஸேஃப்டி பின். என் கூட நீங்களும் கோயிலுக்கு வரணும், மாட்டேன்னு சொல்லக்கூடாது, ப்ளீஸ்…” என விடாமல் பேசினாள்.

நன்றாக இழுத்து மூச்சு விட்டவன், “போதும்டி சீனி பட்டாசு, தள்ளு நான் எடுத்து தர்றேன்” என சொல்லி அவனே பாத்திரம் எடுத்து தந்தான்.

அவள் எல்லாம் எடுத்து வைக்க, அவளையே விழுங்குவது போல பார்த்திருந்தான். நேராக நின்று புடவை விலகிய இடத்தில் எல்லாம் சரி செய்து கொண்டவள், “இப்படி பார்க்காதீங்க, டைம் ஆச்சுங்க” என்றாள்.

அருகில் வந்து அவளது கன்னத்தை வாஞ்சையாக பிடித்து, “செப்பு சிலை போல இருக்க யசோ” என சொல்லி விட்டுத்தான் நகர்ந்தான்.

சற்று நேரத்தில் கெளதமும் தயாராகி வந்தான். நவீனுக்கு டியூஷன் இருந்தது, அவன் தன் சைக்கிளில் சென்று விட்டான்.

நாங்கள் ஒரு வாரம் இங்குதான் இருக்க போகிறோம், இன்னொரு நாள் கோயிலுக்கு போய் கொள்வோம் என சொல்லி விட்டான் கல்யாண்.

ஆகவே மனைவியை மட்டும் அழைத்துக் கொண்டு அப்பாவின் வண்டியில் கோயிலுக்கு கிளம்பினான் கெளதம்.

வழிபாடு முடித்து, அன்னதானம் வழங்கி, அங்கிருந்த மண்டபத்தில் அமர்ந்தனர் இருவரும். வாரம் தவறாமல் இங்கு வருவாளாம் யசோ, கணவனிடம் பகிர்ந்தாள்.

“என்ன வேண்டிப்ப?” எனக் கேட்டான்.

“அது நிறைய வேண்டிப்பேன், அதான் நீங்களும் என்னை தேடி திரும்ப வந்தீங்க” என்றாள்.

“அப்ப நான் நல்லவன் இல்லை, உன் கடவுள்தான் என் மனசை மாத்தி என்னை அனுப்பி வச்சுதா? சரிதான் எல்லா கிரெடிட்ஸும் கடவுளுக்கா?”

“ஷ் அப்படிலாம் பேசக்கூடாது, நீங்க எப்படி என் கழுத்துல தாலி கட்டினேன்னு தெரியாதுன்னு சொல்லியிருக்கீங்கல்ல? என் தலையெழுத்து இனியாவது நல்லாருக்கட்டும்னு கடவுள் தீர்மானிச்சதாலதான் அப்படி நடந்துச்சு. கடவுள் அருள் இல்லாம எதுவுமே இல்லை” என்றாள்.

“போதும்டி மினிக்கி, சாமியாரா மாறிடாத, நான் பாவம்” என்றான்.

“கோயிலுக்கு வந்தும் கிண்டல் பேச்சுதான், அமைதியா இருங்க” என சொல்லித்தான் அவனது வாயை அடைத்தாள்.

அவர்கள் வீடு வரும் போது ஜோஷ்னாவும் கல்யாணும் இரவு சமையல் செய்து கொண்டிருந்தனர்.

“சாப்பிட்ட தட்ட கூட எடுத்து வைக்காத உம்மகன் சமைக்க எல்லாம் செய்றான், பிரம்மிக்க வைக்கிறான்” என அம்மாவிடம் கிண்டலாக சொன்னான் கெளதம்.

“கல்யாணம் கட்டியாவது திருந்தினா சரிதான்” என்றார் அருணா.

இரவு உணவுக்கு பின் சமையல் கட்டில் எல்லாம் ஒழித்துப் போட ஆரம்பித்தாள் யசோ.

மனைவி எப்போது வந்து சேர்வாள் என எதிர்பார்த்திருந்தான் கெளதம்.

இன்னும் புடவையிலிருந்து வேறு ஆடைக்கு மாறியிருக்காத யசோ கையில் பால் டம்ளரோடு அறைக்குள் வந்தாள். ஏசியின் அதீத குளிரில் உடலை சுருக்கிக் கொண்டவள், “ஏங்க கம்மி பண்ணி வைக்க கூடாதா?” எனக் கேட்டாள்.

“பண்ணலாம் பண்ணலாம்” என்ற கெளதம் அறைக் கதவை தாழிட்டான்.

“கொஞ்சம் வெளில இருக்கீங்களா நான் நைட்டி மாத்திக்கிறேன்” என சொல்லிக் கொண்டே டம்ளரை அவனிடம் கொடுத்தாள்.

“வெளில போகவா! வச்சு வெளுக்க போறேன் பார்த்துக்க, சாத்தின கதவு சாத்தினதுதான்” என்றான் அவன்.

அவனை தடுமாற்றமாக பார்த்துக் கொண்டே நைட்டி எடுத்துக் கொண்டவள் அவனுக்கு முதுகு காண்பித்து நின்று கொண்டு புடவையை களைய ஆரம்பித்தாள்.

இதயம் எகிறி விழுந்து விடும் அளவுக்கு படபடப்பு அவளிடம். கையிலிருந்த புடவையை நாற்காலியில் வைத்தவள் லேசாக திரும்பி அவனை பார்க்க, அவளுக்கும் மிக நெருக்கத்தில்தான் அவன் நின்றிருந்தான்.

“மிச்சத்தை நான் பார்த்துக்கிறேன்” என்றவன் அவளை பிடித்து இழுத்துக் கொண்டான்.

ஆடைகளுக்கு விடுதலை அளித்து படுக்கையில் விழுந்தனர்.

அவனுடைய வெம்மையான மூச்சுக் காற்று அவளின் சில்லிப்பான தோள்களை தீண்டியது. அவளை அறிந்து கொள்ளும் வேகம் அவனது கைகளில். பெண்மை மலர்ந்திட தன்னுள் எழும் உணர்வலைகளை தாள இயலாமல் அவனது மார்பில் ஒண்டிக் கொண்டாள்.

அவனது வேகம் அவளை திணறச் செய்ய மிரண்ட அவளின் பார்வையில் சற்றே நிதானித்தவன், முன்னேற ஆசை இருந்தும் அவளை காயப்படுத்தி விடுவோமோ என பயந்து அவளை பார்த்தான்.

அவனது எண்ணம் புரிந்தது போல் அவனது மார்பில் முத்தமிட்டவள், இதழ்களிலும் முத்தமிட்டாள்.

பூக்களை வருடும் பனி வாடைக் காற்றை போலானான் அவன். கணவனிடம் முழுதாக தன்னை ஒப்படைத்து விட்டாள் அவள்.

சிறு வலி, பெரும் சுகம், இனிய அயர்வு எல்லாம் அனுபவித்தும் விலகாமல் ஒருவர் மற்றவரின் அணைப்புக்குள் பிணைந்திருந்தனர்.