சகோதரர்கள் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டனர். இனியெல்லாம் விலகி இருக்க கூடாது, விடுமுறை பண்டிகை என்றால் இங்கு வந்து விட வேண்டும், மேலும் அம்மாவை வருத்த பட வைக்காதே என அண்ணனுக்கு சொன்னான் கெளதம்.
“எங்களுக்கு மட்டும் அங்க தனியா கெடக்க ஆசையா என்ன? அவதான் கொஞ்சம் இன்செக்யூர்டா ஃபீல் பண்றா. புள்ளைங்கள தூக்க கூட இல்லை அப்பா, அவளுக்கு கஷ்டமா இருக்காதாடா?” எனக் கேட்டான் கல்யாண்.
“அப்பா அப்படித்தான்னு உனக்கு தெரியாதா? பாசமெல்லாம் இல்லாம இல்லை. ஏதோ தயக்கம். அண்ணிகிட்ட நீதான் பேசி புரிய வைக்கணும்” என்ற கெளதம் கெவினை தூக்க போனான். அவன் வர மறுத்து விட்டான். அவர்களுக்கு வாங்கி வந்தவற்றை கொடுத்து பெரியவனை தூக்கிக் கொண்டான்.
தர்ஷன் “சித்தப்பா” என அழகாக முறை வைத்து அழைத்தான். அண்ணனிடம் சொல்லிக் கொண்டு குழந்தையோடு கீழே சென்று விட்டான் கெளதம்.
கல்யாண் குடும்பம் கீழே வருகையில் தர்ஷனை மடியில் அமர வைத்துக்கொண்டு இருந்தார் சண்முகம். ஜோஷ்னா சின்ன மகனோடு மாமியாரை தேடிக் கொண்டு சென்று விட்டாள்.
கல்யாணுக்கு இன்னும் அப்பாவிடம் பேச தயக்கம். ஆகவே அமைதியாக அவரை அவன் கடந்து செல்ல, “டாடி…” என அழைத்து அவனை தன்னிடம் வர செய்து விட்டான் தர்ஷன்.
அலைபேசியில் அலுவலக விஷயமாக பேசி விட்டு உள்ளே வந்த கெளதம் நடு நாயகமாக அமர்ந்து கொண்டு அண்ணனுக்கும் அப்பாவுக்கும் இடையிலான பிணக்கை அவர்களே சரி செய்து கொள்ள உதவினான்.
இரண்டு பிள்ளைகளும் இன்னும் அம்மாவை சார்ந்தே இருப்பதால் ஜோஷ்னாவுக்கு ஓய்வு குறைவுதான். ஆகவே மெலிந்து காணப்பட்டாள். இன்னும் கெவினுக்கு தாய்ப்பால் கொடுக்கிறாள். குழந்தையை யசோ தூக்கிக் கொள்ள, மூத்த மருமகளை சாப்பிட வைத்தார் அருணா.
யசோவிடம் முதலில் உதடு பிதுக்கினான் கெவின். நவீனின் அறைக்கு சென்று விளையாட்டு காட்டி குழந்தையை இலகுவாக்கி விட்டு தம்பியிடம் பேசிக் கொண்டிருந்தாள் யசோ.
அப்பாவுக்கும் அண்ணனுக்கும் மத்தியில் அமர்ந்திருந்தாலும் கௌதமின் பார்வை மனைவியிடம்தான். கண்டுக்கிறாளா பாரேன் என மனதில் பொருமல் வேறு.
ஏதோ ஒரு நொடியில் யசோவும் கணவனை கண்டு விட்டாள். உள்ளே வர சொல்லி கை காட்டினாள்.
என்ன என அவன் கேட்க, வாங்க சொல்றேன் என வாயசைத்தாள்.
“நீ என்னடா கெளதம் சொல்ற?” என எதற்கோ இவனது அபிப்ராயம் கேட்டார் சண்முகம்.
“ஹா என்னப்பா?” எனக் கேட்டு விழித்தான் கெளதம்.
அப்பா அவனை முறைக்க, அவன் அண்ணனை பார்த்தான். கிண்டலாக சிரித்த கல்யாண், என்ன விஷயமென சொல்லாமல் தம்பி மாட்டிக் கொண்டு முழிப்பதை ரசித்தான்.
சண்முகம் மீண்டும் சொல்லுடா என்க, “சித்தி கூப்பிடுறாங்க உன்னை” என கௌதமிடம் மழலையில் சொன்னான் தர்ஷன்.
கல்யாணின் அறையில் ஏசி இல்லை, குணா அறையில் பழுதாகியிருந்த ஏசியை சரி செய்து விட்டாராம், அதை கல்யாணின் அறைக்கு மாற்றி விடலாமா எனதான் கேட்டிருக்கிறார் சண்முகம். இன்னொரு முறை அதை அவர் சொல்லவும் சரி என்ற கெளதம், இதோ வந்து விடுகிறேன் என சொல்லி நவீனின் அறைக்கு சென்று விட்டான்.
“அவனுக்கு விருப்பமில்லாம இப்படி பண்ணி வச்சிட்டீங்கன்னு எனக்கு கூட வருத்தம் இருந்துச்சுப்பா. கெளதம் இப்போ ஹேப்பியா இருக்கான்” என அப்பாவிடம் சொன்னான் கல்யாண்.
“அப்பன் பேச்சை கேட்கிறவன் என்னைக்கும் கெட்டு போக மாட்டான். உனக்கு புரிஞ்சா சரி” என சொல்லி கடைக்கு சென்று விட்டார் சண்முகம். கல்யாணுக்கு முகம் விழுந்து விட்டது.
கௌதமுக்கு யசோவை பிடித்ததால் ஆகிற்று, இல்லையென்றால் என்னவாகியிருக்கும், செய்வது எல்லாம் சரி என்றே நினைப்பார் என அப்பாவை மனதுக்குள் தாளித்த கல்யாண், மகன் தன்னையே குறு குறுவென பார்ப்பதை கண்டு இயல்பாகிக் கொண்டான்.
கைப்பேசியில் பாடல் ஒலிக்க தையதக்கா என ஆடிக் கொண்டிருந்தான் கெவின். அதை காட்டதான் கணவனை அழைத்திருக்கிறாள் யசோ.
நவீன் பக்கத்தில் அமர்ந்து கொண்ட கெளதம் அவனது படிப்பு பற்றியெல்லாம் விசாரித்தான். சாப்பிட்டு முடித்த ஜோஷ்னா கெவினை தூக்கிக் கொள்ள, மாமியாருக்கு உதவ சென்று விட்டாள் யசோ.
காலை சாப்பாட்டுக்கு பின் குணாவுக்கு அழைத்து பேசிய அருணா பெரிய மகனிடமும் பேச வைத்தார். குணா நாளைக்கு இங்கு வருவதாக சொன்னான்.
மதிய உணவுக்கு பின்னர்தான் கௌதமுக்கும் யசோவுக்கும் தனிமை கிட்டியது. ஜோஷ்னா இரவெல்லாம் காரில் அமந்தே வந்ததில் மிகவும் சோர்ந்து விட்டாள். ஆதலால் அவளால் மாமியாருக்கு உதவ முடியவில்லை.
பெரிய மகனுக்கு பிடித்த அத்தனை வகையையும் செய்ய திட்டம் போட்டிருந்தார் அருணா. ஆகவே யசோவுக்கு நல்ல வேலை. களைத்து தெரிந்தாள்.
“அண்ணனை கண்டதும் அம்மாக்கு தலை கால் புரியலை. உனக்குத்தான் கஷ்டமா போச்சு” என ஆறுதலாக சொல்லிக் கொண்டே அவளின் கை பிடித்து தன்னருகில் அமர வைத்துக்கொண்டான் கெளதம்.
நவீன் நன்றாக இருப்பதாக மகிழ்ச்சியோடு சொன்னாள் யசோ. தம்பியை பார்த்ததும் தன்னை கண்டு கொள்ளவே இல்லை என குறை சொன்னான் அவன்.
“சும்மா ஏதாவது சொல்லாதீங்க” என்றவள் படுத்துக் கொண்டாள். அவனும் படுத்துக் விட்டான். நல்ல உறக்கம் இருவருக்கும்.
யசோ எழுந்து கீழே செல்ல, சமையலறையை கழுவி சுத்தம் செய்து, பாத்திர வேலைகளையும் முடித்திருந்தார் அருணா. அவருமே தலைக்கு குளித்திருந்தார். அடுப்பில் கொண்டை கடலை இருக்க, சர்க்கரை பொங்கல் தயாராக இருந்தது.
“என்னத்தை இவ்ளோ வேலை ஒத்தை ஆளா செஞ்சிருக்கீங்க? கூப்பிட வேண்டியதுதானே?” என இரக்கமாக கேட்டாள் யசோ.
பெரிய மகன் மீண்டும் தங்களுடன் இணைந்து விட்டால் அம்மன் கோயிலில் அன்னதானம் செய்வதாக வேண்டியிருந்தாராம். வேண்டுதலை தள்ளிப் போட விரும்பாமல் கையோடு செய்ய விரும்பித்தான் ஒரே நாளில் இத்தனை வேலை.
“ஜோஷ்னா அவனோட கோயிலுக்கெல்லாம் போவாதான், வந்த முத நாளே தலைக்கு ஊத்திக்கன்னுலாம் சொன்னா எப்படி எடுத்துப்பாளோ, ரொம்ப டயர்டா இருக்கா, இன்னிக்கே போக சொன்னா அவளுக்கும் கஷ்டம். இப்ப என் திருப்திக்கு சின்னதா செய்றேன், அப்புறம் கோயில்ல சொல்லி பெருசா செய்யும் போது அவங்கள கூடிட்டு போறேன். எனக்கு இப்போவே கால் கடுக்க ஆரம்பிச்சிட்டுது யசோ, அதனால நீ கௌதமை கூட்டிட்டு கோயிலுக்கு போய்ட்டு வந்திடுறியா?” எனக் கேட்டார்.
“போன்னு சொன்னா போக மாட்டேனா அத்தை? எதுக்கு இவ்ளோ விளக்கம்? நான் தலைக்கு ஊத்திட்டு வந்திடுறேன், நீங்க பார்த்த வேலை வரைக்கும் போதும்” என சொல்லி மாடிக்கு விரைந்தாள் யசோ.