அவளுக்கு ஏதாவது பரிசு கொடுக்க பிரியப்பட்டான். விலை உயர்வாக என இல்லாமல் அவள் விரும்பியதாக இருக்க வேண்டும் என நினைத்தான்.
அன்று மாலை சீக்கிரமாகவே வீடு வந்து விட்டான் கெளதம். அவளின் உபசரிப்புக்கு பின், “வெளில போறோம் ரெடி ஆகு” என்றான்.
“ரொம்ப நாளைக்கப்புறம் இன்னிக்குதான் சீக்கிரம் வந்திருக்கீங்க, ரெஸ்ட்டா வீட்லேயே இருக்கலாம்ல?” எனக் கேட்டாள்.
“ஏன் என் கூட வர பிடிக்கலையா?” என சற்றே கோவமாக கேட்டு விட்டான். உடனே அவனை விட்டு தள்ளிப் போய் நின்று கொண்டாள்.
எதுக்கு கோவம் என அவளும் பதிலுக்கு சண்டை போடாமல் இப்படி தள்ளி செல்வது அவனுக்கு பிடிக்கவில்லை. தவிர்த்தால் தானாக வருவாள் என நினைத்து உடனே அவளிடம் செல்லாமல் அண்ணன் தம்பி இருவரிடமும் பேசி, அம்மாவிடமும் பேசி விட்டுத்தான் அவள் பக்கம் திரும்பினான்.
அவன் வாங்கிக் கொடுத்திருந்த சுடிதார் ஒன்றை அணிந்து போனி டெயில் போட்டு தயாராகியிருந்தாள்.
“கூப்பிட்டா துள்ளி குதிச்சிட்டு கிளம்ப வேணாமா? சாக்குபோக்கு சொன்னா… அதான் ஏதோ போல பேசிட்டேன். நீ பதிலுக்கு கத்திடு, சண்டை மேனேஜ்மெண்ட் தெரிஞ்ச மாதிரி இந்த சைலன்ஸ் மேனேஜ்மெண்ட் எனக்கு தெரியாது” என்றான்.
“இதுவும் சண்டைதான்” என்றாள்.
“அறவழிப் போராட்டமா? எதுவா இருந்தாலும் இன்னிக்கு முடிச்சி வச்சிடலாம். ஒரு மணி நேர வேலைதான், சீக்கிரம் வீட்டுக்கு வந்திடலாம், வந்து ரெஸ்ட் எடுத்துக்கிறேன்” என சொல்லி அவனும் தயாரானான்.
எங்கு செல்கிறோம் என்றெல்லாம் அவள் கேட்டுக் கொள்ளவில்லை.
அவன் ஃபோட்டோ ஸ்டூடியோ அழைத்து செல்லவும்தான் அவனது எண்ணம் புரிந்தவள் போல வரவில்லை என்றாள்.
“மேரேஜ் ரெஜிஸ்டர் பண்ண நம்ம பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோலாம் வேணுமாம், அப்பா கேட்டார். நீ எடுக்க விட மாட்டேங்கிறேன்னு அவர்கிட்ட சொல்றேன் இரு” என்றான்.
சரி சரி வாங்க என அவள்தான் அவனை சமாதானம் செய்து அழைத்து சென்றாள். ஃபோட்டோ எடுப்பவனிடம் கன்னடத்தில் பேசினான் கெளதம்.
முதலில் இருவரையும் தனித் தனியாகத்தான் ஃபோட்டோ எடுத்தான். அதற்கு பிறகு யசோவுடன் சேர்ந்து நின்றான் கெளதம். அவள் கண்டனமாக பார்த்தாள்.
“சண்டை போடாத, முடியாதுன்னு முரண்டு பிடிக்காத. பாஷை வேற தெரியாது இவனுக்கு. போலீஸை கூப்பிட்டு விட்ர போறான்” என பயமுறுத்திதான் அவளை தன்னோடு நிற்க வைத்தான்.
“நான் டல்லா இருக்கேன்” என முணு முணுத்தாள்.
“உம்முனு இருந்தா டல்லாதான் தெரிவ, கொஞ்சம் சிரி, பளிச்னு ஆகிடுவ, இப்ப இந்த ஃபோட்டோ, இன்னொரு நாள் ஜோரா ரெடி ஆகி எடுக்கலாம்” என்றான்.
புகைப்படக்காரன் போஸ் கொடுக்க சொல்ல, யசோவை நெருங்கி நின்ற கெளதம் அவளின் தோளில் அணைவாக கை போட்டான். வேற்று ஆள் முன்பு அவனது அந்த நெருக்கம் அவளை நெளிய வைத்தது.
“என்ன இப்போ தோள்ல கை போடல போதுமா?” எனக் கேட்டவன் பட்டென அவளின் இடையை சுற்றி கை போட்டுக் கொண்டான். திகைத்துப் போனவள் விலக நினைக்க, அவனது கையின் அழுத்தம் கூடியது.
என்ன இது என்பது போல அவனை அவள் பார்க்க, மந்தகாச சிரிப்புடன் அவனும் அவளை பார்த்தான்.
இருவரின் பார்வையும் சேர்ந்திருக்க, அந்த போஸ் நன்றாகவும் இருக்க க்ளிக் செய்தான் புகைப்படம் எடுப்பவன். பின் இருவரையும் நேராக நிற்க வைத்தும் எடுத்தான்.
ஃபிரேம் செய்து இரண்டு நாட்களில் தருவதாக கடைக்காரன் சொல்லவும் பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோக்கள் மட்டும் வாங்கிக் கொண்டு, புறப்பட்டனர்.
வீட்டுக்கு வந்த உடன் அவளின் கைப்பையை வம்பாக பிடுங்கி, இப்போது எடுத்த தன் புகைப்படம் ஒன்றை ஏற்கனவே இருந்த அவனது புகைப்படத்தோடு சேர்த்து வைத்தான்.
தன் குட்டு வெளியானதில் அவள் விழிக்க, “நீ ஏற்கனவே வச்சிருக்க ஃபோட்டோல உன்னை விட யங்’கா இருக்கேன். இதுல நல்லாருக்கேன், இனிமே ஆசைப்படறப்பலாம் இதையே பாரு” என்றான்.
கைப்பையை பிடுங்கிக் கொண்டவள், “எனக்கு தெரியாம இப்படி செஞ்சது சரியில்லை” என்றாள்.
“ஆமால்ல, இப்ப என்ன பண்ணலாம்?” இடுப்பில் கை வைத்துக்கொண்டு கேட்டான்.
அவள் உம் என இருந்தாள்.
“அப்படி பார்க்க போயிதானே உனக்கு எம்மேல எவ்ளோ இஷ்டம்னு தெரிய வந்தது? இதுக்கெல்லாம் கோச்சுக்காத” என சமாதானமாக சொன்னான்.
“இஷ்டம் எல்லாம் ரெண்டு பக்கமும் இருக்கணும், அப்பதான் மதிப்பு” என்றாள்.
“நான் என்ன உன்னை வெறுக்கிற மாதிரி நடந்திட்டேன்? ஆசையா அன்பா வச்சுக்கலையா?”
“நீங்க எதிர்பார்த்த பொண்ணு நான் இல்லைதானே?”
“நான் எல்லாமே பார்த்து பார்த்து சேட்டிஸ்ஃபை ஆனதுக்கப்புறம் வாங்குறதுல நீ அஃபெக்ட் ஆகிட்டேன்னு எனக்கு தெரியும். நீ நினைக்கிற மாதிரி கட்டிக்க போற பொண்ணு விஷயத்திலேயும் நிறைய எதிர்பார்ப்பு வச்சிருந்தேன். நீ என் லைஃப்ல வந்தது நான் எக்ஸ்பெக்ட் பண்ணாதது. சேர்ந்து நல்லா வாழணும்னு முடிவு பண்ணிட்டா அதுக்கு என்னெல்லாம் செய்யணுமோ செய்யணும். நான் செய்வேன், நீயும் செய்யணும். மூஞ்சு தூக்க கூடாது. எனக்கு உன்னை இப்படி பார்க்க பிடிக்கல” என்றான்.
“அதுதான் எனக்கு வருத்தமே, உங்க வாழ்க்கைய நீங்க ஆசை பட்டது மாதிரி வாழ முடியாம இடையூறா நான் வந்திட்டேன், வேற வழியில்லாம நீங்களும்…”
“ஷட் அப் யசோ!”
“இல்லை உங்களை தப்பு சொல்லலை, என்னால நீங்க நினைச்ச மாதிரி வாழ முடியலைன்னுதான் சொல்ல வந்தேன்” பயத்தோடு சொன்னாள்.
“வேற என்னெல்லாம் நினைச்ச?”
அவனை ஏறிட்டு பார்த்தவள், “இந்த ஃபோட்டோலாம் எனக்காக செய்றீங்கன்னு நினைச்சேன்” என்றாள்.
“நீங்க நெருங்கி வர்றது கூட…” என்றவள் சொல்ல முடியாமல் அவனை பார்த்தாள்.
“ஹேய் என்னை மறந்து உன்கிட்ட வந்தேன் அன்னிக்கு. உன் பக்கத்துல மெல்ட் ஆகுறேன்னு உனக்கு புரியலையா யசோ?”
லேசாக அவளின் கண்கள் கலங்கிப் போயின. வேறு பக்கம் திரும்பி அழுகை வந்து விடாமல் மூக்கை உறிந்து கொண்டாள்.
அவளின் தலையை அழுத்திக் கொடுத்தவன், “நீ மூக்கு உறியற வேகத்துக்கு ஸ்டெடியா நிக்க முடியாம உன் மூக்குக்கு உள்ள போயிடுவேன் போல நான்” என சொல்லி சிரித்தான்.
அவளும் நகைத்தாள். கள்ளம் கபடம் இல்லாத அவளின் அந்த சிரிப்பை எப்போதுமே அவளிடம் நிலைத்திட செய்ய வேண்டுமென அவனுள் அப்படியொரு தீவிரம்.
தன்னிலை மறக்காமலே அவனாக விரும்பி அவளை தன்னிடம் இழுத்துக் கொண்டான். இப்போது யசோவிடம் மறுப்பில்லை, கூச்சம் மட்டும்தான். ஆனாலும் அவனை மென்மையாக அணைத்துக் கொண்டாள்.
“ம்ம்… நல்லா இறுக்கி பிடிச்சுக்கோ யசோ” என அவளின் காதில் கிசு கிசுத்தான். அவளுக்கும் ஆசை இருந்தாலும் தடையாக வெட்கம்.
மொட்டு மலர்வது போல அவளின் உதடுகள் துடிக்க, அவளை சற்றே இறுக்கி அணைத்தான்.
அணைப்பில் லயித்து பின் கன்னத்திலும் அழுந்த முதல் முத்தமிட்டான் கெளதம். அவனது இதழ்களின் ஈரத்தையும் மீசையின் குறுகுறுப்பையும் அனுபவித்த அவளின் வழ வழ கன்னங்கள் செம்மையை பிரசவித்து சிரித்தது.
அவளின் சிலிர்ப்பை உணர்ந்தவன் லேசாக அவளை விலக்கி அவளின் தோள்களை பற்றிக் குலுக்கி, நெற்றியில் முட்டி, “உன்னை போல ஒருத்தி கிடைப்பான்னு தெரியாதுடி ராஜாத்தி, தெரியாம பொண்ணு தேடிட்டு இருந்திருக்கேன்” என்றான்.
அவள் தோள்களை விட்டவன், “எனக்குன்னு பொறந்தவ நீ இருக்கும் போது அப்படி வேற யாரையோ தேடினது தப்புதான்” என சொல்லி மன்னிப்பாக தன் கன்னங்களில் அடி போட்டுக் கொண்டான்.
அவள் அவனது கைகளை பிடித்துக் கொண்டாள்.
“என்னமோ நல்லது பண்ணியிருக்கேன், அதான் நான் கேட்காமலே நீ எனக்கு கிடைச்சிருக்க. உனக்கு நான் எப்படியோ அப்படிதான் எனக்கும் நீ. ம்ஹூம்… நீயாவது ஆறேழு மாசம் நான் இல்லாம என் கூட பேசாம இருந்திட்ட, எனக்கெல்லாம் கஷ்டம் யசோ. வேற எப்படி சொல்லன்னு தெரியலைடி. புடிச்சு போயிதான் உன் கூட வாழறேன், கொஞ்ச நஞ்சம் இல்லை. ரொம்ப… ரொம்ப ரொம்ப…” என்றான்.
அவளுக்கு அழுகை வந்தே விட்டது. அவளது இதழ்களில் மிக மிக மென்மையாக தன் இதழ்களை ஒற்றி எடுத்தான். கண்களை இறுக மூடிக் கொண்டவளுக்கு இமைகளை திறக்க அத்தனை பதற்றம். அவனை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை.
“ஏதாவது சொன்னா வயசுப் பொண்ணுதான்னு நல்லா அடிச்சி விடுவ, மூஞ்ச பாரு! சரியான அம்லுக் குட்டி” எனக் கொஞ்சியவன் மீண்டும் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.