Aayiraththil Aval Oruththi 10 2 10673 ஆடை மாற்றிக் கொண்டு வந்த கெளதம், ஊருக்கு போக வர என டிக்கெட் போட்டு முடித்து தான் வரப் போகும் தகவலை பெற்றோருக்கு சொல்லி விட்டு கல்யாணிடம் பேசிக் கொண்டிருந்தான். விளக்கேற்றினாள் யசோ. அவனையும் பார்வையால் அழைக்க, அவள் பக்கத்தில் வந்து நின்றவன் அண்ணனை லைனில் காத்திருக்க சொல்லி விட்டு தீபத்தை தொட்டு வணங்கி விலகப் போனான். அவனை பிடித்து நிறுத்தியவள், “ஒரு ஒரு நிமிஷம் ஒழுங்கா சாமி கும்பிட கூடாதாங்க?” எனக் கேட்டாள். கைப்பேசியை பாக்கெட்டில் போட்டு விட்டு கையெடுத்துக் கும்பிட்டு வணங்கியவன் மீண்டும் செல்லப் போக, அவனை நிறுத்தி திருநீறு இட்டு விட்டாள். ‘நீ கன்டினியூ பண்ணு, நான் பேசிட்டு வரேன்’ என சைகையில் சொல்லி விட்டு பால்கனி சென்று விட்டான். சிறிது நேரம் கழித்து யசோ சப்பாத்தி போட்டுக் கொண்டிருக்க அவளிடம் வந்தான். வம்படியாக உதவி செய்கிறேன் என நின்று கொண்டான். கைக்கு வந்த வடிவத்தில் சப்பாத்தி போட்டான். “ஏங்க இப்படி இல்லைங்க, ரெண்டு பேருக்குதானே, நானே போட்டுப்பேன்” என்றாள் அவள். “சர்கிள் ஸ்கொயர் ஸ்டார்னு எந்த ஷேப்ல இருந்தாலும் பிச்சு பிச்சுதான் சாப்பிட போறோம், டேஸ்ட் மாற போறதில்லையே” என்றான். “நீங்க போடுறது ஸ்டார் ஃபிஷ் ஷேப்ல இருக்கு” என்றாள். “அப்படியா! நல்லதுதானே? வெரைட்டி சப்பாத்தி” என்றவன் சப்பாத்திகள் போட்டு முடித்து அடுப்பிலும் போடுகிறேன் என கருக விட்டான். அவனை இழுத்துக் கொண்டு போய் ஹாலில் அமர வைத்தவள், “ஏதாவது படம் பாருங்க, நான் வெளில வர்ற வரை உள்ள வரக்கூடாது!” என சொல்லி சென்றாள். “பேய் படம் பார்க்கலாமா?” என சத்தமிட்டான். “ஆள விடுங்க” என அவளும் உள்ளிருந்து குரல் கொடுத்தாள். “இங்கிலிஷ் படம்?” “இருங்க இதெல்லாம் அத்தைகிட்ட சொல்லி கொடுக்கிறேன்” என்றாள். “சொல்லு, படமே பார்க்க மாட்டேங்குறாளே, இவ என்ன என்ன பையனை கவனிக்கிறான்னு அம்மாவும் உன்கிட்ட கேள்வியா கேட்பாங்க” தோசை கரண்டியோடு வெளியே வந்தவள், “நான் உங்களை நல்லாதான் கவனிக்கிறேன்” என்றாள். “அதுசரி, பச்ச புள்ள வேறெப்படி பேசும். போ சப்பாத்திய நீ தீய வுட்றாத” என்றான். வில்லங்கமாக ஏதோ சொல்கிறான் என புரிந்து அதற்கு மேல் பேசாமல் சென்று விட்டாள் யசோ. கெளதம்க்கு இன்றுதான் வேலை நெருக்கடி குறைந்திருக்கிறது. அப்பாடா என்ற மனநிலை. அளவு தெரியாமல் நன்றாக சாப்பிட்டான். ஆகவே கொஞ்சம் நடந்து வருகிறேன் என சென்று விட்டான். யசோ அப்போதே கொட்டாவி விட்டதால் அவளை அழைக்கவில்லை. கம்பெனிக்கு தியாகுவை கூப்பிட்டுக் கொண்டான். உறக்கம் வழிந்தாலும் கெளதம் அருகில் இல்லாமல் தூங்கவில்லை யசோ. அவள் உறங்குவதற்கு முன் வந்து விட்டவன் வேகமாக படுக்கையில் விழுந்தான். “மெதுவாங்க” என்றாள். “இதுதான் யசோ துள்ளிக் குதிக்கிற வயசு. நாளைக்கு வெளில போறோம், ரொம்ப முக்கியமான விஷயம் நான் எழற வரை படுத்திருக்க, பிரேக்ஃபாஸ்ட் வெளில” என்றான். “எனக்கு தானா முழிப்பு வந்திடுது, நான் என்ன பண்ணுவேன்?” “அதனால என்ன? பக்கத்துல கட்டழகு ஹஸ்பண்ட் இருக்கையில கண் இமைக்காமல் என்னை பார்த்திட்டே சும்மா படுத்திரு” என்றான். அவள் சிரிப்பை இதழ்களுக்குள் அடக்க, கொஞ்சம் போல அவளை நெருங்கி வந்தான். அதற்கே பட படப்பானவள் முதுகு காட்டி படுத்து விட்டாள். “ஹேய் குளிர்ல மாட்டின கோழிக் குஞ்சி! ஏதும் பண்ணல நான், ரிலாக்ஸா தூங்கு” என்றான். அவளும் தயங்கி தயங்கி அவன் பக்கமாக படுத்துக் கொண்டாள். அதற்குள் சோர்வின் காரணமாக அவன் உறங்கிப் போயிருந்தான். விடி விளக்கின் வெளிச்சத்தில் நன்றாகவே அவளது பார்வைக்கு புலப்பட்டான். ஆசை தீர அவனை பார்த்துக் கொண்டே இருந்தாள். லேசாக அவனது மூக்கின் நுனி தீண்டியவள் எங்கே விழித்துக் கொள்ள போகிறானோ என உடனே கையை தன்னிடம் இழுத்துக் கொண்டாள். கம்பளியிலிருந்த நூல் ஒன்று பிரிந்து அவனது முகத்தில் மோதிக் கொண்டிருந்தது. வெகு கவனமாக அதை எடுத்து விட்டாள். நிஜமாவே அழகன்தான் இவர் என நினைத்து சிரித்துக் கொண்டாள். காலையில் அவள் எழ முற்படும் போது அவனும் விழித்துக் கொண்டான். அவள் பாவமாக பார்க்க, “ஒழுங்கா படுக்கல, ரெண்டு கையாலேயும் வளைச்சு பிடிச்சு வச்சுக்குவேன்” என்றான். அவள் படுத்துக் கொள்ள, “நான் தூங்கினதும் போனாலும் போவ” என சொல்லி அவளது கையை இழுத்து பிடித்துக்கொண்டு உறங்கினான். அவள் செல்லவே இல்லை. அவன் விழிக்கும் வரை அவனை பார்த்தே கிடந்தாள். காஃபி மட்டும் பருகி விட்டு வெளியில் கிளம்பி விட்டனர். மழை வந்தாலும் மாட்டிக் கொள்ள வேண்டாம் என தியாகுவின் காரை கேட்டு வாங்கியிருந்தான் கெளதம். ஓட்டலில் டிபன் முடித்துக் கொண்டு அண்ணன் பசங்களுக்கு ஷாப்பிங் செய்ய வேண்டும் என அழைத்து சென்றான். மறக்காமல் நவீனுக்கும் இஜ்ஜுவுக்கும் வாங்கினான். மலர் கண்காட்சி நடக்கும் இடத்திற்கு அழைத்து சென்று காட்டினான். பின் அங்கிருந்து பிரபலமான அசைவ உணவகத்துக்கு கூட்டி வந்தான். இடம் காலி இல்லாமல் ஏற்கனவே நிறைய பேர் காத்திருந்தனர். இவனும் பெயர் கொடுத்து விட்டு வந்தான். “இதென்னங்க, லீவ்னா ஊர்ல ஒருத்தரும் சமைக்கிறது இல்லையா?” என வியப்பாக கேட்டாள். “தெரியலை வேணும்னா கேட்டுட்டு வந்து சொல்லவா?” என சற்று தள்ளி இருந்தவர்களை சுட்டிக் காட்டி கேட்டான். “அவங்கள உங்களுக்கு தெரியுமா?” “தெரியாது… இப்டி இப்டிங்க… என் வீட்டம்மாவுக்கு பலமான சந்தேகம், ப்ளீஸ் சொல்லுங்கன்னு ரெக்வஸ்ட் பண்ணினா போச்சு” “கிண்டல்தானே?” உதடுகளை பிதுக்கி தோள்களை குலுக்கி “இல்லியே” என்றான். “கிண்டல்தான்” என்றவள் வேறு பக்கம் வேடிக்கை பார்க்கலானாள். அவன் கைப்பேசி பார்த்துக் கொண்டிருந்தான். இருக்கை கிடைக்க இருபது நிமிடங்கள் ஆகி விட்டது. யசோ ஓய்வறை செல்லவும் முன்பு ஒருமுறை அவள் தன் கைப்பையை தன்னிடம் தராதது அவனுக்கு நினைவு வந்தது. வேக வேகமாக கைப்பையை திறந்து பார்த்தான். அல்பத்தனம் பண்றேடா என மனசாட்சி சொல்ல, ‘என் வைஃப், ஒளிவு மறைவெல்லாம் இருக்க கூடாது’ என சொல்லிக் கொண்டான். தண்ணீர் பாட்டில், கைக்குட்டை, வாலெட், நாப்கின் என இருந்தது. இதற்கா காட்ட மறுத்தாள் என்ற யோசனையோடு உள்ளே இருந்த ஜிப்பை திறந்து பார்த்தான். பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் சிக்கியது, அவனேதான். கல்லூரி சேர்ந்த புதிதில் எடுத்தது, அரும்பிக் கொண்டிருந்த மீசையில் பார்க்க சின்ன பையனாக தெரிந்தான். அந்த கைக்குட்டை கண்களை உறுத்த எடுத்து விரித்துப் பார்த்தான். ஒய் என்ற ஆங்கில எழுத்தை பின்னி பிணைந்து கொண்டிருந்தது ஜி எனும் ஆங்கில எழுத்து. யோசிக்கையில் அவள் உபயோகிக்கும் எல்லா கைக்குட்டைகளிலும் இப்படி பார்த்ததாக நினைவு வந்தது. உற்றுக் கவனித்தால்தான் அந்த எழுத்துக்களின் பிணைப்பு தெரியும், மேலோட்டமாக பார்த்தால் ஏதோ பூ வேலைப்பாடு போலவே இருந்தது அந்த எம்பிராய்டரி. ‘பாருடா அவ காதலுக்கு லோகோலாம் ரெடி பண்ணிருக்கா!’ என நினைத்து புன்னகை செய்தான். அவளின் சின்ன சின்ன செயல்கள் மனதை தொட்டது. அழகான பெண்களை ரசித்து பார்த்திருக்கிறான், கல்லூரி படிக்கும் சமயத்தில் ஜுனியர் பெண் ஒருத்தியுடன் இணைத்து வைத்து நண்பர்கள் கிண்டல் செய்த கதையெல்லாம் உண்டு. அப்பா மீதுள்ள பயமோ என்னவோ காதலில் விழுந்து விடாமல் வீட்டிலேயே தனக்கு பிடித்த மாதிரி பெண் பார்த்து கட்டிக் கொள்ளலாம் என்பதில் உறுதியாக இருந்தான். இப்போது யசோ தன்னை விரும்புகிறாள் என்பதை ஒவ்வொரு விதமாக அவன் அறிந்து கொள்வதில் அவனுக்கு புது விதமான உணர்வாக இருந்தது. இதமென்று சொல்ல முடியாது, ஒரு மாதிரி கிறு கிறுக்க வைப்பது போன்ற உணர்வு. என்னை பற்றி என்னென்ன கற்பனைகள் வைத்து இத்தனை மாதங்களை கடந்திருப்பாள் என்றெல்லாம் நினைக்கையில் அவனுடைய காதல் ஹார்மோன்கள் திடீர் அட்டெனன்ஸ் போட்டு வைத்தன. நிலை கொள்ள முடியாமல் தவித்தான். அவள் சற்று தள்ளி நடந்து வருவதை கண்டதுமே பையை பழைய படி வைத்து விட்டவனின் முகத்தில் குறுநகை ஒன்று போவேனா என அடம் பிடித்து அப்படியே ஒட்டிக் கொண்டது. அவனெதிரில் சாதாரணமாக அமர்ந்து கொண்டாள் யசோ. அவளின் முகத்தை ஏறிட முடியாத படிக்கு அவனை மீறி வெட்கம் வந்தது, கால்கள் தரையில் தாளம் போட்டன, ஒரு கையால் மேசையை தட்டிக் கொண்டே இன்னொரு கையால் சிகையை சரி செய்து இயல்பாக இருப்பது போல காட்டிக் கொண்டான். அவனை கூர்ந்து பார்த்தவள், “என்னாச்சுங்க?” எனக் கேட்டாள். ஒன்றுமில்லை என மறுப்பாக தலையாட்டியவன் மெனு கார்டை கொடுத்து என்ன வேண்டுமென பார் என சொல்லி எழுந்து சென்று விட்டான். வாசலில் வந்து நின்று வெளியில் இருக்கும் மக்கள் திரளை பார்த்துக் கொண்டே மனதை நிதானத்திற்கு கொண்டு வந்தான். மனைவியால் தான் காதலிக்க படுவதை அனுபவிக்கிறானே தவிர தன்னைப் பற்றிய எந்த அலசலும் இல்லை. ‘சின்ன பொண்ணுன்னு நினைச்சா செம ஃபீலிங்ஸ்ல இருக்கா எம்மேல, யசோ மனசு முழுக்க நீதான்டா கௌதமா!’ என நினைத்து தன் தலையில் தட்டி சிரித்துக் கொண்டேதான் உள்ளே சென்றான்.