Advertisement
அத்தியாயம் –8
சுஜய்க்கு காலை தூக்கம் கலைய ஆரம்பித்த வேளையில் ஆவென்ற சத்தம் கேட்டு எழுந்தவன் அருகில் மீனாவை தேட அவளை கட்டிலில் காணவில்லை. என்னாயிற்று என்று பதறியவனாக எழுந்து கட்டிலை சுற்றிக் கொண்டு மறுபுறம் வந்தான்.
அங்கு மீனா கட்டிலில் இருந்து கிழே விழுந்திருக்க அவளை பார்த்து அவனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. ரஜாய்யை மொத்தமாக சுருட்டிக் கொண்டு கிழே விழுந்திருந்தாள் போலும்.
நல்லவேளை கட்டிலும் தரைக்கும் அதிக தூரமில்லை, அதுவுமில்லாமல் அவள் ரஜாய்யுடன் சேர்த்து விழுந்திருக்க அடி பலமாக பட்டிருக்க வாய்ப்பில்லை.
“நான் ஒருத்தி இங்க எழுந்திருக்க முடியாம விழுந்து கிடக்கேன், என்னை பார்த்து சிரிக்க வேற செஞ்சதும் இல்லாம என்ன யோசனை வேண்டி கிடக்கு”
“ஹா ஹா ஹா… ஒண்ணுமில்லை மீனு என்னால சிரிக்காம இருக்க முடியலை. இரு இரு நானே உன்னை தூக்கி விடுறேன்” என்றவன் ரஜாய்க்குள் இருந்து அவளை விடுவித்தவன் அவளுக்கு கைக்கொடுக்க அவள் “அம்மா இடுப்பு வலிக்குது” என்றாள்.
“ஒரு நிமிஷம் இரு” என்றவன் அவளருகே சென்று இருகைகளாலும் அவளை தூக்கினான். மெதுவாக அவளை கட்டிலில் கிடத்திவிட்டு அயோடெக்ஸ் எடுத்து வந்தவன் “கொஞ்சம் திரும்பி படுத்துக்கோ மீனு” என்றான்.
“எதுக்கு”
“சொன்னா கேளு, ஏட்டிக்கு போட்டியா எப்பவும் பதில் சொல்லிட்டு”
மெதுவாக அவள் திரும்பி படுக்க “எங்க வலிக்குது சொல்லு” என்று இடுப்பில் கைவைத்து அயோடெக்ஸ் அவன் தேய்க்க முயல அவளுக்கு எதுவோ செய்தது.
சடக்கென்று எழுந்து அமர்ந்தவள் “விடுங்க நானே தேய்சுக்கறேன், இப்போ வலி ஒண்ணும் இல்லை. குறைஞ்சுடுச்சு”
“உன்னால எப்படி தேய்க்க முடியும் விடு நானே தேய்க்கறேன் நீ படு”
அவள் முகம் கன்றி சிவந்திருக்க அதில் என்ன கண்டானோ “நீயே தேய்ச்சுக்கோ” என்று அவளிடமே கொடுத்து விட்டான்.
“அப்புறம் ஒரு விஷயம்”
“என்ன”
“நான்… நான் இப்படி கிழே விழுந்துட்டேன்னு யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. தேனுக்கு மட்டும் தெரிஞ்சுது எங்க ஊர் முழுக்க அவளே ஒலிபரப்பு பண்ணிடுவா”
“ஹா…ஹா…ஹா… இதுவரைக்கும் எனக்கு அப்படி ஒரு எண்ணம் வரலை, தேனு வேற ஊர் முழுக்க சொல்லிடுவான்னு சொல்லிட்டியா இனி நானே அவகிட்ட சொல்லிடுறேன்”
“நான் செய்ய வேணாம்ன்னு சொன்னா அதை செய்வேன்னு சொல்றீங்க”
“அது இருக்கட்டும், நீ எப்படி கட்டில்ல இருந்து கிழே விழுந்த”
“அது… அது வந்து சின்ன வயசில இருந்தே எனக்கு இப்படி நான் கட்டில படுக்கவே மாட்டேன். ரெண்டு மூணு தடவை கிழே விழுந்து அடிப்பட்டதுல இருந்து அம்மா என்னை கட்டில படுக்க வைக்கிறதே இல்லை”
“ஆனா அன்னைக்கு ஊர்ல நீ எப்படி படுத்த, அங்க ஒண்ணும் ஆகலையே”
“அது கட்டில் சுவர் ஓரமா இருந்துச்சு, நான் தான் உள்ள தள்ளி ஓரமா படுத்திருந்தேனே. அதான் கிழே விழலை”
“என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல”
அவள் அமைதியாக இருக்க “குப்புற விழுந்தாலும் விழுவ, மீசைல மண்ணு ஓட்டினாலும் தள்ளிவிட்டுட்டு இருப்ப, ஆனா என்கிட்ட சொல்ல மாட்டே. அதானே”
“அப்படிலாம் இல்லை… சொன்ன சிரிப்பீங்கன்னு தான் சொல்லலை”
“சரி நான் போய் குளிச்சுட்டு கிளம்பறேன், நீ கொஞ்சம் நேரம் கழிச்சு குளி”
“இல்லையில்லை நான் தான் முதல்ல குளிப்பேன், நீங்க முதல்ல குளிச்சுட்டு வெளிய போனா எல்லாரும் என்னை என்ன நினைப்பாங்க. நான் சோம்பேறின்னு நினைக்க மாட்டாங்க. அப்புறம் நான் சொன்னதை மறந்திடாதீங்க, தேனுக்கிட்ட எதுவும் சொல்லிடாதீங்க” என்றவள் அவசரமாக எழுந்து குளியலறை நோக்கி சென்றாள்.
அவன் ஏதோ சொல்லவருவது போல் தோன்ற அதை கவனியாமல் அவள் குளியலறைக்குள் நுழைந்து விட்டாள்.
உள்ளே சென்றவள் குளித்து முடித்த பின்னே தான் அவளுக்கு நினைவு வந்தது அவனுடன் பேசிக்கொண்டு வேகமாக உள்ளே வந்தவள் உடையை எடுத்து வர மறந்தது.
‘அய்யோ இப்போ எப்படி வெளிய போறது அவரை எப்படி கூப்பிட்டு என்னோட உடையை எடுத்து தர சொல்றது’ என்று யோசித்து கொண்டே உள்ளேயே நின்றாள்.
சுஜய் அவர்கள் அறையில் இருந்து வெளியே வந்தவன் தேனுவின் அறைக்கு வெளியில் நின்று “தேனு” என்றழைத்தான்.
“சொல்லுங்க மாமா” என்று அவள் வெளியில் வந்தாள்
“உங்கக்கா உன்னை கூப்பிடுறா, போய் என்னன்னு கேளு”
“இம்ம் சரிங்க மாமா” என்று அவள் மீனாவின் அறைக்கு சென்றாள்.
“அக்கா… அக்கா…” என்று அழைத்துக் கொண்டே அவள் உள்ளே செல்ல “தேனு நீ எப்படிடி இங்க, நல்லதா போச்சு. தேனு நான் குளிக்க வர்ற அவசரத்துல என்னோட டிரஸ் எடுக்காம வந்துட்டேன். வெளிய இருக்கிற என்னோட பெட்டில டிரஸ் இருக்கும் கொஞ்சம் எடுத்து கொடுடி”
“யக்கா அப்படி என்ன அவசரமா நீ உள்ளே போனே, மாமாவை எடுத்து தர சொல்லி இருக்கலாம்ல, அவர் வந்து என்னை கூப்பிட்டு நான் வந்து எடுத்து தரவா. என்னக்கா நீ”
“என்னடி உன்னால எடுத்து தரமுடியுமா முடியாதா, அவர்கிட்ட நான் எப்படி எடுத்து தர சொல்லுவேன். நீ எனக்கு ஒரு உதவி மட்டும் பண்ணு அங்க இருக்கற என்னோட ட்ரெஸ் மட்டும் எடுத்து கொடுத்திட்டு கதவை அடைச்சுட்டு போ, அப்புறம் நான் பார்த்துக்கறேன்”
“எப்படியோ போக்கா” என்றவள் அவள் கேட்டதை எடுத்து வந்து அவளிடம் கொடுத்துவிட்டு கதவை அடைத்துவெளியே சென்றுவிட்டாள்.
‘நான் டிரஸ் எடுத்திட்டு போகலைன்னு இவருக்கு எப்படி தெரியும் என்னையவே பார்த்திட்டு இருக்கார் போல. ஆனாலும் நல்லவேளை செஞ்சார், தேனுவை மட்டும் அவர் கூப்பிட்டு இருக்கலைன்னா’
‘ஆனா இவர் தேனுவை கூப்பிட்டதுக்கு பதிலா என்கிட்டயே கூப்பிட்டு சொல்லி இருக்கலாம். நான் அவர்கிட்ட கேட்கவேயில்லை அப்புறம் அவர் மட்டும் எப்படி என்கிட்ட சொல்லுவார்’ என்று யோசித்தவள் அப்போதைக்கு அந்த எண்ணத்தை ஒதுக்கி வெளியே செல்ல தயாரானாள்.
எல்லோரும் குளித்து சாப்பிட்டு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு வெளியில் கிளம்பி வந்தனர். சுஜய் காரை எடுக்க வெளியில் வர மீனாவும் அவனுடன் வந்து துணிகள் அடங்கிய பையை எடுத்து கொடுக்க அவன் காரினுள் அவற்றை அடக்கிக்கொண்டிருந்தான்.
அப்போது அவர்கள் குடியிருப்பில் இருந்த அருணா மாமி அவனை கண்டுவிட்டு அருகில் வந்தார். “என்னடாப்பா இப்படி சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கறியே”
“ராமு சொல்லப்போய் எனக்கு தெரிஞ்சுது, இத்தனை வருஷமா இங்க இருக்கோம், எங்களண்ட ஒரு வார்த்தை சொல்லாம பண்ணிட்டியே”
“அப்படிலாம் ஒண்ணுமில்லை மாமி, ராமு அண்ணா சொல்லி இருப்பாங்களே இது திடீர் கல்யாணம். அதான் யாருக்கும் சொல்ல முடியலை, தப்பா எடுத்துக்காதீங்க மாமி”
“தமிழ் பொண்ணை தான் கட்டிக்கணும்ன்னு ஆசைப்படுறதா உங்கப்பா சொன்னார். நாங்களும் எங்க பொண்ணையே கொடுக்கறோம்ன்னு சொன்னோம் நீ எங்க கேட்டே” என்று பெருமூச்செறிந்தார்.
“அதெல்லாம் இப்போ எதுக்கு மாமி”
“உன் பொண்டாட்டி எங்க, எங்க கண்ணுல காட்டவே வேண்டாம்ன்னு முடிவு பண்ணிட்டியா”
“இதோ இவங்க தான் என்னோட மனைவி” என்றான். மீனுவோ மனதிற்குள் அந்த மாமியை அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள்.
‘இதை இப்போ இங்க அவசியம் சொல்லியே ஆகணுமா, கல்யாணம் முடிஞ்சு பொண்டாட்டியை பக்கத்துல வைச்சுட்டு இருக்கற மனுஷன்கிட்ட வந்து இந்தம்மா பேசுற பேச்சை பாரேன்’
‘இவங்க பொண்ணுக்கே இவரை கட்டியிருக்க வேண்டியது தானே, எதுக்கு இப்போ வந்து என்னோட நிம்மதியை கெடுக்குறாங்க. இந்த பேச்சுக்கு இந்த மனுஷன் பதில் வேற சொல்லிட்டு நிக்குறார்’ என்று பொரிந்து கொண்டிருந்தாள்.
“நல்லா லட்சணமா தான் பிடிச்சிருக்க, உன் நிறத்துக்கு இல்லைன்னாலும் பார்க்க நல்ல பொண்ணா லட்சணமா தெரியறா”
“அம்மா…” என்று யாரோ அழைக்க அந்த பெண்மணி திரும்பினார். “என்னமா நிஷா”
“இங்க வாம்மா… அங்க யார்கிட்ட பேசிட்டு இருக்க”
“நம்ம சர்வாகிட்ட தான் பேசிட்டு இருக்கேன்”
“சர்வாவா…” என்றது மட்டும் தான் காதில் விழுந்தது அடுத்த நிமிடம் அந்த பெண் அவர்கள் முன் நின்றாள்.
“அம்மா… அப்பா உன்னை கூப்பிடுறாங்க நீ போய் என்னன்னு கேளு, நான் பேசிட்டு வந்திடறேன்” என்றாள்
“சரிம்மா” என்றவர் அங்கிருந்து நகர்ந்தார்.
மீனுவுக்கோ பயங்கரமாக டென்ஷன் ஏறியது.
“என்ன சர்வா உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சாம். ராமு அண்ணா சொன்னதா அம்மா சொன்னாங்க. என்னை தான் ஏமாத்திட்டீங்க, ஓ இவங்க தான் உங்க மனைவியா”
“செம கட்டையா இருக்காங்க”
“நிஷா…” என்றான் அதட்டலாக.
“சரி… சரிப்பா… உன் பொண்டாட்டியை நான் எதுவும் சொல்லலை. நல்லா நாட்டு கட்டையா இருக்காங்களேன்னு சொன்னேன். அறிமுகப்படுத்தி வைக்க மாட்டியா”
“மீனு இவங்க நிஷா, நம்ம வீட்டு பக்கத்து வீட்டில தான் இருக்காங்க, இப்போ பார்த்தியே அருணா மாமி அவங்க பொண்ணு”
‘இப்போ நான் கேட்டேனா இவங்களை அறிமுகப்படுத்தி வைங்கன்னு கேட்டேனா சொட்டைமண்டை ரொம்ப முக்கியமா இவங்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைக்குறதை பாரு’ என்று முணுமுணுத்தாள்.
“சர்வா உன்னோட வைப் ஏதோ சொல்லுறாங்க” நிஷா
“ஒண்ணுமில்லை என்னை திட்டுறாங்க”
“ஹா ஹா ஹா… திட்டுறாங்கன்னு சிரிச்சுட்டே சொல்ற சர்வா. எதுக்காக திட்டுறாங்க, நீ என்னோட பேசிட்டு இருக்கறதை பார்த்தா”
‘யோவ் சொட்டைமண்டை இப்படியா அந்த பொண்ணு முன்னால எல்லாம் போட்டு உடைப்ப’
“சரி சர்வா எனக்கு நேரமாச்சு, இதுக்கு மேல இங்க நின்னா உன்னோட மனைவி என்னை பொசுக்கிடுவாங்கன்னு நினைக்கிறேன். நான் கிளம்பறேன், வர்றேங்க, எங்க சர்வாவை நல்லா பார்த்துக்கோங்க, ரொம்ப நல்ல பையன், அமைதியானவன். நீங்க கொடுத்து வச்சவங்க” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் அவள்.
அவள் அப்புறம் சென்றதும் சுஜய் மீனாவிடம் “நீ பேசலைன்னா பரவாயில்லை, குறைந்த பட்சம் அவங்களை பார்த்து சிரிச்சிருக்கலாம்ல”
“பிடிக்கலை” என்றாள் ஒற்றை வார்த்தையாக
“யாரை பிடிக்கலை, என்னையா இல்லை அவளையா”
“ரெண்டு தான்” என்று ஏதோ கோபத்தில் அவள் கூறிவிட சுஜய்க்கு ஒரு மாதிரியாகிவிட்டது.
எதுவும் பேசாமல் அவன் காரில் ஏறி அமர்ந்தான். ‘இப்போ எதுக்கு முறுக்கிட்டு போறார் போகட்டுமே எனக்கென்ன’ என்று நினைத்துக்கொண்டு அவளும் காரில் ஏறி அமர்ந்தாள்.
கதிரை முன்னால் அமரச் சொல்லிவிட்டு அவள் தேனுவுடன் பின்னால் அமர்ந்துகொண்டாள்.
எல்லோரும் அமர்ந்ததும் சுஜய் காரை கிளப்பினான். அவன் முகம் வாட்டமாக இருப்பதை கண்ட கதிர், “என்ன அண்ணே ஏதோ டென்ஷனா இருக்கற மாதிரி இருக்கு” என்றான். “அதெல்லாம் ஒண்ணுமில்லை கதிர்” என்றவன் காரை ஓட்டுவதிலேயே மும்முரமாக இருந்தான்.
கதிர் பின்னால் திரும்பி பார்த்தான், தேனுவும் அவனும் கண்களால் ஏதோ பேசிக் கொண்டனர். “அண்ணே ஒரு நிமிஷம் வண்டியை நிருந்துங்களேன்”
“என்னாச்சு கதிர்”
“கொஞ்சம் நிறுத்துங்களேன்” என்றதும் அவன் வண்டியை நிறுத்திவிட்டான்.
வண்டியை விட்டு இறங்கி பின்னால் சென்றவன் “மீனா நீ போய் முன்னால உட்காரு நான் தேனுகூட உட்கார்ந்திட்டு வர்றேன்”
மீனாவால் மறுத்து கூற முடியாமல் அவள் வண்டியை விட்டு இறங்கி சுஜய்க்கு பக்கத்தில் ஏறி அமர்ந்தாள்.
அதன் பின் சுஜய் வண்டியை எடுக்க மீனா அமைதியாகவே வந்தாள். சுஜய்யின் முகம் உர்ரென்று இருக்க ‘இப்போ எதுக்கு இப்படி இருக்காராம், இப்படியே அமைதியா எவ்வளவு நேரம் தான் வர்றது’
“பாட்டு போடுங்க, இப்படி அமைதியா வந்தா போர் அடிக்குதுல” என்றவள் அவளே ஏதோ ஒரு பொத்தனை அழுத்த ஹிந்தி பாடல் ஒன்று ஒலித்தது.
“தமிழ் பாட்டு எதுவும் இல்லையா”
“உனக்கு என்ன அவசரம் நான் போடுறதுக்குள்ள” என்றவன் தமிழ் பாடல் அடங்கிய குறுந்தகடை எடுத்து ஒலிக்கவிட்டான்.
பாடல் சத்தம் உரத்து ஒலிக்க ஆரம்பித்ததும் சுஜய்யை திரும்பி பார்த்தவள் “இப்போ எதுக்கு இப்படி மூஞ்சியை தூக்கி வைச்சு இருக்கீங்க”
“உனக்கு தெரியாதா எதுக்குன்னு”
“தெரியாதுன்னு தான் கேட்குறேன். எனக்கு பிடிக்கலைன்னு சொன்னதும் தான் இப்படி வர்றீங்களா. எதுக்கு உங்களுக்கு இப்போ கோபம் வருது”
“எனக்கு பிடிச்சிருக்கு பிடிக்கலைன்னு கேட்டா கல்யாணம் பண்ணீங்க. இப்போ மட்டும் எதுக்கு கோபம் உங்களுக்கு
அவள் கூறியதில் இருந்த உண்மை அவனுக்கு அப்போது தான் உரைத்தது.அந்த சூழ்நிலையில் அவளிடம் சம்மதம் கூட கேட்கவில்லையே, என்னை பிடித்து தான் அவள் திருமணம் செய்தாள் என்று சொல்ல முடியாதே என்று ஏதேதோ நினைத்து அவனுக்குள் கவலையானது.
“நான் பிடிக்கலைன்னு ஏதோவொரு யோசனையில் தான் சொன்னேன். பிடிக்கிறவரைக்கும் காத்திருக்கலாம்ல” என்றாள்.
சுஜய்யின் முகம் சற்று தெளிந்தது, “எனக்கு அவளை பிடிக்கலை, அவகிட்ட எல்லாம் என்னால சிரிக்க முடியாது. ஏன் சிரிக்கலைன்னு எல்லாம் இனிமே கேட்காதீங்க”
‘இவளை… அடங்கவே மாட்டேங்குறாளே’ என்று நினைத்தவன் திரும்பி அவளை பார்த்தான்.
“என்ன பார்வை”
“என் பொண்டாட்டி நான் பார்க்குறேன்”
“எனக்கு காபி வேணும், பசிக்கற மாதிரி இருக்கு”
“உனக்கு எதையும் தன்மையாவே கேட்க தெரியாதா”
“இப்போ என்ன கெட்டு போச்சு நான் கேட்டதுல, எனக்கு எப்போமே இப்படி தான் பேசத் தெரியும். உங்களுக்காக எதையும் என்னால மாத்திக்க முடியாது”
“இது சரியா வராது, பழி வாங்க ஆரம்பிச்சுட வேண்டியது தான், உன் தூக்கத்தை கெடுத்தா தான் நீ அடங்குவ”
அவள் திரும்பி அவனை முறைக்க அவன் வண்டியை ஒரு மோட்டலில் நிறுத்தினான். மீனா வண்டியை விட்டு இறங்கும் போது சாய்ந்தாற் போல் நடக்க “என்ன மீனாக்கா என்னாச்சு எதுக்கு இப்படி நடக்குற, கிழே விழுந்துட்டயா” என்றாள் தேனு.
“சொல்லிட்டாரா யார்கிட்டயும் சொல்லாதீங்கன்னு சொன்னேன், உன்கிட்ட சொல்லிட்டாரா.” என்றவள் காரை பூட்டிவிட்டு வந்த சுஜய்யை பார்த்து முறைத்தாள்.
“இவகிட்ட நான் கிழே விழுந்ததை பத்தி சொல்ல வேணாம்னு சொன்னேன்ல, எதுக்கு சொன்னீங்க. சொல்ல வேணாம்ன்னு சொன்னா இப்படி தான் சொல்லி வைப்பீங்களா” என்று பொரிந்தாள்.
“அக்கா நிஜமாவே நீ கிழே விழுந்துட்டியா, தாங்கி தாங்கி நடக்குற மாதிரி இருக்கேன்னு கேட்டேன். எப்படி விழுந்தே” என்றவள் அவளை பார்த்து கண்ணடித்து வைத்தாள்
‘அய்யோ நானா வாயை கொடுத்து மாட்டிகிட்டேனா, இவ வேற ஏதேதோ நினைச்சுட்டு மானத்தை வாங்குறாளே’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
“சும்மா வாயை மூடிட்டு வாடி, சத்தம் போட்டு என் மானத்தை வாங்காதே, நீ நினைக்கிற மாதிரி எதுவுமில்லை”. எல்லோரும் பசியாறியதும் மீண்டும் பயணம் தொடங்கியது.
பிற்பகல் தாண்டிய வேளையில் அவர்கள் ஆக்ரா வந்தடைந்தனர். அங்கு ஒரு ஹோட்டலில் மூன்று அறைகள் பதிவு செய்தனர். பசும்பொன் கார்த்திகேயன் ஒரு அறையில் தங்கிக் கொள்ள, மீனுவும் தேனுவும் ஒரு அறையை பகிர்ந்து கொண்டனர்.
கதிரும் சுஜய்யும் மற்றொரு அறையில் தங்கிக் கொண்டனர்.சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு மாலை அனைவரையும் தாஜ்மகாலை பார்க்க கூட்டி சென்றான் சுஜய்.
யமுனை ஆற்றங்கரையில் பளிங்குனால் ஆனா மிக அற்புதமான கட்டிடம் தாஜ்மகால். முற்றிலும் வெண்மையாக அமைதியாக தோன்றிய அந்த கட்டிடத்தில் எதுவோ ஒரு சோகம் ஒளிந்திருப்பதாக தோன்றியது.
‘பாட புத்தகத்தில மட்டும் தான் பார்க்க முடியும்ன்னு நினைச்சேன். நேர்லயே பார்க்கற சந்தர்ப்பம் கிடைச்சாச்சு’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் மீனா.
சுஜய் தாஜ்மகால் பற்றி ஒரு சுவாரசியமான நிகழ்வு ஒன்றை கூறினான். “ஒரு தடவை மன்னன் ஷாஜஹானுக்கு காணிக்கை கொண்டு வந்த குழுவில் ஓர் அழகிய இளம்பெண் இருந்தாள். அவள் அப்படியே ஜொலித்தாள்”.
“அவள் அணிந்திருந்த வைரமணிகள்கூட ஷாஜஹானைக் கவர்ந்தன. மன்னரின் பொழுதுபோக்கு நவரத்தினங்களை எடை போட்டுஆய்வது.
அவள்கொண்டுவந்த காணிக்கையோ வைரமணிகள்.
அவை தன் கருவூலத்திலில்லாதவேலைப்பாடமைந்த, பட்டை தீட்டிய வைரமணிகள் ஆகும். அரசர் மற்றவர்களை விரைவாகஅனுப்பி விட்டு அவளிடம் தனியாகப் பேசி காணிக்கையை ஆசையுடன் பெற்றுக் கொண்டு அவளை வழியனுப்பி வைத்தார்”
“சிறிதுநேரத்தில் வைரங்களை எறும்புகள் மொய்த்திருந்தன. அவள் கொண்டு வந்த வைரம் எல்லாமே இனிப்புகள். தான்ஏமாந்ததை ஷாஜஹான் உணர்ந்தாலும் அந்தப் பெண்ணின் குறும்புத்தனத்தையும்வேலைத் திறனையும் மெச்சி அவள் மேல் காதல் கொண்டார், அந்த அழகிதான் மும்தாஜ்”
“நமக்கெல்லாம் அவரோட காதலியான மனைவி தான் மும்தாஜ்ன்னு தெரியும், இந்த கதை பெரும்பாலும் நாம கேள்வி பட்டிருக்க மாட்டோம். ஷாஜஹான் மும்தாஜ்ஜோட குறும்புத்தனத்தை ரொம்பவே ரசிச்சார்”
“அவங்களோட பிரிவை தாங்க முடியாம தான் அவங்களோட நினைவா இந்த மாளிகையை கட்டினார்.” என்று சொல்லிக் கொண்டிருந்தவனின் கண்கள் மீனாவை தொட்டு நின்றது.
‘இவர் எதுக்கு இப்படி பார்க்கறார்’ என்று எண்ணியவள் அவன் பார்வையின் பொருள் புரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
எல்லோருமாக அங்கு நின்றுக் கொண்டு தங்கள் துணையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கதிர் தேனுவின் தோள் மீது கைபோட்டுக் கொண்டு போட்டோ எடுத்துக் கொண்டான்.
சுஜய்யும் மீனாவும் அருகருகே நின்று போட்டு எடுத்துக் கொள்ள நிற்க, “அண்ணே என்னது இது மேல கை போடுங்க, இப்படி தள்ளி தள்ளி நின்னா எப்படிண்ணா”
சுஜய்யோ அது தான் சந்தர்ப்பம் என்று அவள் தோளில் கைபோட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டான்.
புகைப்படம் எடுத்து முடித்தும் கூட அவன் அவள் தோள்களின் மீதிருந்த கையை எடுக்காமல் அவளை அணைத்தவாறே நடந்தான்.
“எதுக்கு இப்படி கை போட்டு வர்றீங்க”
“உன் தூக்கத்தை கெடுக்கத்தான்”
“எதுக்கு இப்படி படுத்தறீங்க”
“அங்க எல்லாரையும் பாரு, ஏன் கதிரை கூட பாரு. தேனு கையை பிடிச்சுட்டே நடக்குறான். நான் மட்டும் என் பொண்டாட்டி அணைச்சுக்கிட்டு போகக் கூடாதா”
மீனா அவனை நன்றாக முறைத்தாள். அவள் தோளில் இருந்த கையை விலக்கியவன் அவள் கையை பிடித்துக் கொண்டு நடந்தான். முதலில் அவன் கையை பிடித்தது ஒரு மாதிரியாக உணர்ந்தவள் சிறிது நேரத்தில் அது பழகிவிட அவனுடன் ஒன்றியவாறே நடந்தாள்.
பளிங்கு மாளிகையை பார்க்க பார்க்க சலிக்கவேயில்லை. யமுனை நதியில் அதன் பிம்பம் விழுவதை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல தோன்றியது.அன்று இரவு ஓட்டலில் தங்கியவர்கள் மறுநாள் மதுராவை நோக்கி பயணம் செய்தனர்.
- காற்று வீசும்