Advertisement

அத்தியாயம் –7

 

 

சுஜய் அலுவலகம் கிளம்பியதும் ‘இவர் என்ன சொல்ல வர்றார், இவரை நான் நினைக்கணும்ன்னு சொல்றாரா, நினைக்கக் கூடாதுன்னு சொல்ல வர்றாரா. எதுக்கு இப்படி குழப்பிட்டு போறார்

 

 

‘இவர் என்னை பழி வாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டாரா, இல்லை சும்மா சீண்டுறாரா ஒண்ணுமே புரியலை. அய்யோ மீனா இவர் எதுக்கு இப்படி நடந்துக்கறார், ஏன் மீனா நீ என்ன அவ்வளவு மக்கா, இதை கூட உன்னால கண்டுபிடிக்க முடியலையா, ச்சே என்று சொல்லி அவள் மண்டையில் தட்டிக் கொண்டாள்.

 

 

‘ஒண்ணு மட்டும் நிச்சயம் இவர் ரொம்பவே நல்லவர், ஆனா என்கிட்ட ஏன் இப்படி நடந்துக்கறார்ன்னு தான் புரியலை. கண்டுப்பிடிப்போம், அதுவரைக்கும் இந்த மனுஷன் எது பேசினாலும் இவர்கிட்ட பதிலுக்கு வாயை கொடுக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டாள்.

 

 

பாவம் அவள் செய்த சபதத்தை அவளே மீறப்போவதை அறியாமல். அவளால் தான் பேசாமல் இருக்கவே முடியாதே. பசும்பொன்னும் கார்த்திகேயனும் அவர்கள் அறையில் இருக்க தேனுவும் அவள் அறையில் இழுத்து போர்த்திக் கொண்டு உறங்கினாள்.

 

 

பகலில் உறங்கி பழக்கமில்லாத மீனா சமையலை கவனிப்போம் என்று சமையலறைக்குள் நுழைந்தாள். “என்னம்மா என்ன வேணும் சொல்லுங்க என்றார் லட்சுமி.

 

 

“என்னக்கா நான் இங்க வரக்கூடாதா, சமையலை பார்க்கணும்ல அதான் வந்தேன்

 

 

“உங்களுக்கு என்ன வேணும்ன்னு சொல்லுங்க, நான் சமைச்சு தரேன்மா

 

 

“இல்லைக்கா நான் சமைக்கறேன், அவருக்கு என்ன பிடிக்கும் சொல்லுங்க

 

 

“தம்பி இது தான் பிடிக்கும்ன்னு எல்லாம் சாப்பிடாதும்மா, என்ன சமைச்சு வச்சாலும் தம்பி சாப்பிடுவாங்க

 

 

‘என்ன இவர் இப்படியா இருப்பார், விருப்பமானதை சாப்பிடாம கொடுத்ததை சாப்பிடுறாரே. இவரை கொஞ்சம் மாத்தணுமே, சரி பார்த்துக்கலாம்

 

 

“நீங்க வந்துட்டீங்கள்ளம்மா இனி தம்பியை நீங்க மாத்தி உங்க வழிக்கு கொண்டு வந்திடுங்க

 

 

“ஹ்ம்ம் சரிக்கா என்றாள் சிரிப்புடன்.

 

 

“அக்கா சமைக்கறதுக்கு கோழி வாங்கணுமே, ராமு மாமாவை வாங்கிட்டு வரச் சொல்லுங்க

 

 

“சரிம்மா வேற எதுவும் வேணும்ன்னா சொல்லுங்க மொத்தமா வாங்கிட்டு வந்திடுவாங்க

 

 

“இருங்க எழுதி தர்றேன் என்றவள் என்ன இருக்கிறது என்ன இல்லை என்று சமையலறையை ஆராய்ந்து லட்சுமியிடமும் கேட்டு பின் தேவையான பொருட்கள் பற்றி பட்டியல் எடுத்தாள். அதன் பின்னே ஞாபகம் வந்தவளாக “அக்கா இதெல்லாம் வாங்க காசு வேணுமே, நான் மறந்திட்டேன் என்றாள்

“இல்லைம்மா தம்பி காசு கொடுத்திருக்காங்க, நீங்க அதை தாங்க நான் அவரை வாங்கிட்டு வர சொல்றேன் என்றவர் அதை வாங்கிக் கொண்டு கணவரிடம் சென்றார்.

 

 

அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை தோட்டத்தில் நின்றிருந்த ராமு கேட்டுக் கொண்டு தானிருந்தார். “என்ன லட்சுமி நீ இவ்வளவு பேசுவியா, எப்போமே நான் சொல்றதுக்கு கூட ஆமாம் சொல்லியே பழக்கமாச்சே உனக்கு என்று வியந்தார்.

 

 

“என்னங்க இந்த வீட்டில இதுவரைக்கும் ஆண்களா இருந்தீங்க, அதான் நான் அதிகம் பேசினதில்லை. இப்போ தான் மகாலட்சுமி மாதிரி ஒரு பொண்ணு வந்திருக்கே. அப்புறமும் பேசாம இருக்க முடியுமா, இந்தாங்க இதை எல்லாம் வாங்கிட்டு வந்திடுங்க. இனி அம்மா தான் சமைக்க போறாங்க

 

 

“என்ன லட்சுமி அவங்களை போய் வேலை செய்ய சொல்லிக்கிட்டு, உனக்கு அறிவே கிடையாதா. போ நீ போய் வேலையை பாரு

 

 

“என்னங்க உங்களுக்கு தான் கொஞ்சம் அறிவு கம்மி, அந்தம்மா அவங்க புருஷனுக்கு அவங்க கையால சமைக்கணும்ன்னு நினைக்கிறாங்க. இது எல்லா பொண்ணுங்களும் விரும்பறது தானே

 

 

“தம்பியும் ஏனோதானோன்னு இருந்துச்சு, இனி தம்பி மாறிடுவாங்க. பொண்டாட்டி வந்தாச்சுல

 

 

“நீ சொல்றதும் சரி தான் என்று அவரும் கடைக்கு கிளம்பினார்.

 

 

மதிய உணவுக்கு பின் சற்றே ஓய்வெடுத்தாள், ரொம்பவும் போர் அடித்தது அவளுக்கு. ச்சே இதுவே நம்ம ஊரா இருந்தா எங்கயாச்சும் போயிருக்கலாம், இந்த கலாவும் கல்யாணம் பண்ணிட்டு போனவ என்ன ஆனான்னு தெரியலை.

 

 

என் கல்யாணத்துக்கு கூட வரலை என்று அவள் தோழியை பற்றி எண்ணிக் கொண்டிருந்தாள். அவள் எண்ணங்கள் அங்கு சுற்றி இங்கு சுற்றி கடைசியாக சுஜய்யிடம் வந்து நின்றது.

 

 

‘இவர் ஏன் அப்படி செய்யறார், ஆனாலும் அய்யாசாமிக்கிட்ட எனக்காக பேசினாரே. இவர் நிச்சயம் நல்லவர் தான், ஆனா என்கிட்ட வேணும்ன்னே இப்படி நடந்துக்கறார். என்னை சீண்டி பார்க்கறார், என்னை பேசவைக்கிறார். ஆனா எதுக்காக

‘இந்த சொட்டை மண்டையன் ரொம்ப யோசிக்க வைக்கிறானே என்று அவனை மனதிற்குள் வைதாள். சுஜய் வீட்டிற்கு வர இரவு ஏழு மணியானது. தேனுவும் மீனாவும் வரவேற்ப்பறை சோபாவிலேயே அமர்ந்திருந்தனர்.

 

 

“என்ன தேனு வீடு ரொம்ப அமைதியா இருக்கு. உங்க அக்கா இருக்கற இடம் அப்படியிருக்காதே, இன்னைக்கு என்ன மௌன விரதமா. இப்படி இருந்தா உலகம் அழிஞ்சுடுமே

 

 

உள்ளிருந்து பார்த்துக் கொண்டிருந்த ராமுவிற்கும் லட்சுமிக்கு ஆச்சரியம் சுஜய் இப்படி கலகலப்பாக பேசி அவர்கள் கண்டதேயில்லை. அதனால் வந்த ஆச்சரியமே இது.

 

 

“என்ன ராமு அண்ணா என்னை புதுசா பார்க்கற மாதிரி பார்க்கறீங்க

 

 

“அது ஒண்ணும்மில்லை தம்பி நீங்க இப்படி ஜாலியா பேசறது ரொம்ப நல்லாயிருக்கு தம்பி, புதுசா இருக்கு அதான் ஆச்சரியப்பட்டு பார்த்திட்டு இருக்கோம்

 

 

“ஹா ஹா ஹா… அண்ணா இவக்கிட்ட தான் நான் பேசக் கத்துக்கிட்டேன். ஒரு நாள் இவ பேசுறதை பார்த்தா நீங்களும் பேச ஆரம்பிச்சுடுவீங்க என்றவன் கன்னத்தை தடவிக் கொண்டே அவளை பார்த்தான்.

 

 

‘ஆளை பாரு நான் அடிச்சதை குத்திக்காட்ட இதுவா நேரம், ஏன் இப்படி எல்லார் முன்னாடியும் என் மானத்தை வாங்குறார் என்று பொருமியவள், அவனை பார்த்து முறைத்தாள்.

 

 

“உங்க அக்கா முறைக்க ஆரம்பிச்சுட்டா, நான் உள்ளே போறேன். ஆமா பசும்பொன்னும் மச்சானும் எங்கே

 

 

“மாமா அவங்க ரெண்டு பேரும் சும்மா வாக்கிங் போயிட்டு வர்றேன்னு போயிருக்காங்க. இங்க ஒரு பார்க் இருக்காமே அங்க தான் போய் வாக்கிங் போறாங்க, நீங்க கூட்டிட்டு வந்து விட்டுட்டு நீங்க பாட்டுக்கு வேலைன்னு போய்ட்டா எங்களுக்கு போரடிக்காதா

 

 

“ஊர் சுத்தி காட்டுறதை விட்டுவிட்டு எனக்கென்னன்னு போயிட்டீங்களே மாமா, அக்காவும் வீட்டை சுத்தி சுத்தி வந்தா அவளுக்கும் ரொம்ப போரடிக்குது

 

 

“இதை உங்கக்கா என்கிட்ட சொல்ல மாட்டாளா, சரி சரி உங்க அக்கா முறைக்கிறா. சரி தேனு நீ ஏன் கதிர்கிட்ட பேச மாட்டேங்குற,தெரிஞ்சவங்ககிட்ட நல்லா பேசுவேன்னு சொன்னியே

 

 

“ஆனா உனக்கு ரொம்ப நெருங்கின சொந்தமான கதிர்கிட்ட எதுக்கும்மா பேச மாட்டேங்குற

 

 

“அது எதுக்கு மாமா இப்போ, மாத்தி மாத்தி பேசுறது. மாத்தி மாத்தி யோசிக்கறதுன்னு ஒரு மனசா இல்லாதவர் பத்தி என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு மாமா என்று அவள் பேசியதை கதிரேசன் பார்த்துக் கொண்டு தானிருந்தான்.

 

 

“அவரை பத்தி எதுவும் பேசாதீங்க மாமா. எல்லாத்தையும் மனசுலயே வைச்சுக்கறது எதையும் வாய்விட்டு சொல்லத்தெரியாத ஒரு ஆளு அவரு என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போது மீனா தேனுவின் பின்னால் பார்ப்பதை பார்த்தவள் அவளும் திரும்பி பார்த்தாள்.

 

 

தேனுவின் பின்னால் கதிரேசன் நின்று கொண்டிருந்தான். “கதிர் உன்னோட தேன் மிட்டாய்க்கு நீ பேசலைங்கறது தான் கோபம் போல, என்ன ஏதுன்னு இன்னைக்கே பேசி முடிச்சுடுங்க என்றுவிட்டு ஆவென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மீனாவை இழுத்துக் கொண்டு அவர்கள் அறைக்கு சென்றான்.

 

 

“என்ன தேனு உனக்கு பிரச்சனை எதுவா இருந்தாலும் உன் முன்னாடி இப்போ நான் நிக்கறேன். என்கிட்டயே கேளு

 

 

“என்ன கேட்கணும், எனக்கு எதுவும் கேட்க வேண்டியது இல்லை. நான் போறேன் என்றுவிட்டு அவள் அறைக்குள் வேகமாக சென்றாள்

 

 

கதிரேசனும் அவள் பின்னோடு அந்த அறைக்கு சென்று கதவை அடைத்தான். “மாமா இப்போ எதுக்கு கதவை அடைக்கிறீங்க, கதவை திறக்க போறீங்களா இல்லையா. பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க கதவை திறங்க என்று வேகமாக எட்டு வைத்து கதவை நெருங்கினாள்.

 

 

“தேனு… தேனு… என்று அவன் அழைக்க அழைக்க காதில் வாங்காதவளாக அவள் கதவை திறக்க முயல “சொன்னா கேட்க மாட்டியா என்றவன் அவள் கையை பிடித்து இழுத்தான்.

 

 

தேனு அதை சற்றும் எதிர்பாராததால் தடுமாறி கிழே விழ பார்க்க கதிர் அவளை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான். அந்த கணம் அவளுக்கும் அந்த ஆறுதல் தேவையாயிருக்க முதலில் அவனிடம் இருந்து விடுபட திமிறியவள் அவன் மார்பிலேயே சாய்ந்துக் கொண்டு கண்ணீர் விட்டாள்.

 

 

“சொல்லு தேனு உனக்கு என் மேல என்ன கோபம். நான் என்ன பண்ணனும் நினைக்கிற

 

 

“உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா என்று சிணுங்கியவாறே கேட்க “பிடிக்காம தான் இப்படி கட்டிபிடிச்சுட்டு நிக்கறேனா

 

 

“அப்போ ஏன் மீனாக்காவை கல்யாணம் பண்ண கேட்டப்போ சரின்னு சொன்னீங்க. அங்கேயே எனக்கு தேனுவை பிடிச்சிருக்குன்னு சொல்லியிருக்கலாம்ல

 

 

“மீனு நீ இன்னும் குழந்தையாவே இருக்கியே, எல்லாரும் என்கிட்ட சம்மந்தம் கேட்ட சமயத்துல நீ உனக்கு பரீட்சைன்னு ஊர்ல இருந்த, நீ இங்க இருந்திருந்தா உனக்கு தெரிஞ்சிருக்கும் அங்க என்ன நடந்துச்சுன்னு

 

 

“மாப்பிள்ளை செத்துட்டார்ன்னு வீட்டுக்கு தகவல் வந்ததுமே எல்லாரும் ரொம்ப இடிஞ்சு போய்ட்டாங்க. ஆளுக்கு ஒரு பக்கம் ஆழ ஆரம்பிச்சுட்டாங்க. இந்த முறையும் என் பொண்ணு கல்யாணம் நின்னு போச்சுன்னு அத்தை கதறினது இப்பவும் என் கண்ணு முன்னால நிக்குது

 

 

“பாட்டி தான் இந்த பேச்சை ஆரம்பிக்க அத்தை என் காலை பிடிச்சு கெஞ்சவே ஆரம்பிச்சுட்டாங்க. அந்த சூழ்நிலையை சமாளிக்க தான் நான் வேற வழியில்லாம கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்

 

 

“அப்பவும் ஒரு வருஷம் டைம் கேட்டேன், ஒரு வேளை மீனாக்கு வேற மாப்பிள்ளை அமைஞ்சுடுமோன்னு நினைச்சு தான். அதுக்கு அப்புறம் தான் என்னென்னவோ ஆகி இப்போ சுஜய் அண்ணா மீனாவை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க

 

 

“சரி நான் தான் சொல்லலை, உனக்கு தான் என் மேல விருப்பமிருந்துச்சுல நீயாச்சும் சொல்லியிருக்கலாம்ல

 

 

“இப்போ எல்லாம் பேசுவீங்க நீங்க, எனக்கு விஷயம் தெரிஞ்சப்ப உங்களை மீனாக்காக்கு பேசிட்டாங்க அந்த சமயத்துல வந்து நான் உங்ககிட்ட என் விருப்பத்தை சொல்ல முடியுமா. உங்களுக்கு மட்டும்மில்லை, எனக்கும் நம்ம குடும்பத்தை பிடிக்கும்

 

 

“மீனாக்கான்னா எனக்கு ரொம்பவே பிடிக்கும், அவங்க கல்யாணம் திரும்பவும் என் விருப்பத்தால நின்னு போச்சுன்னுன்னா என்னாகும்ன்னு யோசிச்சு பாருங்க, அதுனால தான் நான் எதுவுமே சொல்லலை

 

 

“அதான் என்னோட தரப்பை சொல்லிட்டேனே இன்னும் உனக்கு என் மேல கோபமா தேனு

 

 

“நான் இன்னமும் கோபமா தான் இருக்கேன், ஆமா அன்னைக்கு தான் எதுவும் சொல்லலை சரி. ஊர்ல வைச்சு உங்களுக்கு வேற யார் மேலாயாச்சும் விருப்பமிருக்கா, யாரையாச்சும் விரும்பறீங்களான்னு கேட்டப்ப ஒண்ணுமே சொல்லலை

 

 

“ஓ உனக்கு அந்த கோபமா, அங்க வைச்சு தான் நான் உன்னை விரும்பறதை சொல்லுவாங்களா. நான் மீனாவை என் உடன்பிறப்பு போலன்னு சொல்றதுக்கு காரணம் உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கணும் நினைக்கிறதுனால தான்னு எல்லாரும் பேசமாட்டாங்க

 

 

“அந்த நேரம் நான் இதை சொல்லியிருந்தா நான் மீனாவை உடன்பிறப்பு போலன்னு சொன்னது பொய்ன்னு அவங்களுக்கு தோணாது. அதுக்கு தான் அப்படி சொல்லலை, எங்கம்மாக்கு நீ தான் மருமகளா வரணும்ன்னு விருப்பமிருக்கு. இனி நம்ம கல்யாணம் தானா நடக்கும்

 

 

“அதுக்கு அப்புறமும் நீங்க என்கிட்ட ஒண்ணுமே சொல்லவேயில்லையே என்று அவன் மேல் நன்றாக வசதியாக சாய்ந்துக் கொண்டு கேட்டாள். “நீ எங்க என்னை பேசவிட்டே உன் பக்கத்துல வந்தாளே எண்ணெய்ல போட்ட கடுகு மாதிரி பொரிஞ்ச, அதான் பார்த்தேன். ஊருக்கு கிளம்பி வந்துட்டேன்

 

 

“ஆனா நீ இங்க வருவேன்னு நான் நினைச்சு கூட பார்க்கலை தெரியுமா, எல்லாத்துக்கும் அண்ணன் தான் காரணம் அவங்க தான் உன்னை எப்படியோ இங்க கூட்டி வந்திருக்காங்க

 

 

“உங்க அண்ணன் ஒண்ணும் கூட்டி வரலை, எல்லாம் எங்க அக்கா செஞ்ச வேலை. அவளுக்கு தான் என் மேல எம்புட்டு ப்ரியம், நான் வந்தாலே ஆச்சுன்னு அடம் பிடிச்சு என்னை கூட்டியாந்துருக்கா தெரியுமா என்று பெருமை பட்டுக் கொண்டாள் அவள்.

 

 

“நீ தான் உங்க அக்காவை மெச்சுக்கணும், அக்கா தங்கச்சி ரெண்டு பேருக்கும் மூளை கொஞ்சம் கம்மி தான். எங்கண்ணன் தான் ஏதோ சொல்லி உன்னை இங்க வரவைக்க சொல்லி இருக்காங்க. அதை தான் உங்கக்கா செஞ்சிருக்கா போதுமா

 

 

“அடக்கடவுளே இது தெரியாம நான் அக்கா எம்மேல எம்புட்டு பிரியம் வைச்சு இருக்குன்னு ரொம்ப சந்தோசப்பட்டுக்கிட்டேனே. நான் போய் இப்போவே அக்காவை என்னன்னு கேட்கிறேன் என்று வெளியே செல்ல கிளம்பியவளை மீண்டும் இழுத்து அணைத்துக் கொண்டான் கதிர்.

 

 

“என் தேனு மிட்டாயே உன் மூளையை எங்கயாச்சும் அடகு வைச்சுட்டியா. அவங்க புதுசா கல்யாணம் ஆனவங்க இப்போ போய் அவங்க ரூமுக்கு போறேன்னு சொல்ற

 

 

“உனக்காக உன் கதிர் மாமன் இங்க காத்திட்டு இருக்கறது புரியலையா உனக்கு என்றவனின் குரலில் என்ன இருந்ததோ அவள் அமைதி காத்தாள்.

 

 

“மாமா… மாமா

 

 

“இம் சொல்லு “இதெல்லாம் வேணாம் மாமா தப்பில்லையா

 

 

“உன்னை நான் என்ன பண்ணிட்டேனு தப்புன்னு சொல்ற

 

 

“எதுவும் நடந்துற கூடாதுன்னு தான் சொல்றேன் மாமா. உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன் வாங்க போய் சாப்பிடலாம் என்று அவள் அழைக்க “ப்ளீஸ் தேனு இன்னும் கொஞ்சம் நேரம் இப்படியே இரேன் என்றவனின் அணைப்பு மேலும் இறுகியது.

 

 

“மாமா ப்ளீஸ் மாமா சொன்னா புரிஞ்சுக்கோங்க, நான் என்ன ஆத்து தண்ணியா ஓடி போறத்துக்கு கிணத்து தண்ணி தானே மாமா, உங்களை விட்டு எங்க போகப் போறேன்

 

 

அவள் பேச்சில் எரிச்சல் அடைந்தவன் “போடி… போ… என்னமோ உன்னை பண்ணிட்ட மாதிரி ஓவரா பண்ணிக்கற. எத்தனை வருஷமா உன்னையே நினைச்சுட்டு இருக்கேன்

“அந்த ஏக்கத்துல உன்னை கட்டி பிடிச்சுட்டே நின்னேன். உன்னை என்னமோ செஞ்சுட்ட மாதிரி தப்பு தப்புன்னு பாட்டு படிக்கிற, போடி என்று உறுமினான்.

 

 

தேனு அவனின் திடீர் அரட்டலில் பயந்து அழ ஆரம்பித்தாள். மனம் தாளாதவனாக “அழாதே தேனு… சொன்னா கேளு அழாதே. இனி நான் உன் பக்கமே வர மாட்டேன் போதுமா

 

 

“இப்போ நீ வந்து எனக்கு சாப்பாடு போடு, வர்றியா இல்லை நானே போட்டுக்கணுமா

 

 

“இல்லை நானே வர்றேன், ஆனா நான் சொன்னதை நீங்க தப்பா எடுத்துக்க கூடாது

 

 

“நான் தப்பா எடுத்துக்கலை, நீ வந்து சாப்பாடு போடு என்றுவிட்டு அவன் வெளியில் சென்றுவிட்டான்.

 

 

மீனாவை சுஜய் உள்ளே அழைத்து சென்றதும் “எதுக்கு இப்படி என் கையை பிடிச்சு இழுத்துட்டு வர்றீங்க. அவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்க ஆரம்பிக்கிறாங்க. அதை சமாதானம் செய்யறதை விட்டு இப்படி என்னை இழுத்துட்டு வர்றீங்க

 

 

“இதுக்கு தான் என் தங்கச்சியை இங்க வர சொன்னீங்களா

 

 

“மீனு அவங்க ரெண்டு பேருக்கும் நடுவில நீ யாரு, இது அவங்க பிரச்சனை அவங்களே பேசி தீர்த்துப்பாங்க. நீ போய் நடுவுல எதுவும் செய்ய வேணாம், அவங்க மனசு திறந்து பேசினாலே அவங்க பிரச்சனை தீர்ந்து போகும்

 

 

“அதுக்காக தான் உன் தங்கச்சியை இங்க கூட்டிட்டு வர சொன்னேன். ரெண்டு பெரும் ஆளுக்கு ஒரு பக்கம் இருந்தா அவங்க பேசிக்காமலே அவங்களுக்குள்ள இடைவெளி அதிகம் ஆகியிருக்கும்

 

 

“இதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது, நீ சாப்பிட்டியா, எல்லாரும் சாப்பிட்டாங்களா

 

 

“நீங்க சாப்பிடாம நான் என்னைக்கு சாப்பிட்டிருக்கேன் என்றாள் பலவருடமாக அவள் அதை செய்வது போல்

 

 

“என்ன… என்ன சொன்னே என்றான். “புருஷன் சாப்பிடாம பொண்டாட்டி எப்படி சாப்பிடறதாம், இன்னும் யாரும் சாப்பிடலை வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என்றுவிட்டு வெளியில் சென்று விட்டாள்.

 

 

அங்கு இவளுக்கு முன் தேனு சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டிருக்க “என்னடி பண்ணுற என்று வினவினாள் மீனா.

 

 

“பார்த்தா தெரியலை சாப்பாடு எடுத்து வைக்கிறேன்

 

 

அதற்குள் வெளியில் சென்றிருந்த பசும்பொன்னும் கார்த்திகேயனும் வீட்டிற்கு வர அவர்களையும் அமர வைத்து உணவு பரிமாற ஆரம்பித்தார்கள் தேனுவும் மீனாவும்.

 

 

கதிர் உடைமாற்றி வரவும் “டேய் கதிரேசா நீ எங்க இங்க என்றாள் பசும்பொன்

 

 

“நான் இங்க தான் இருக்கேங்கறதை நீ மறந்துட்டியா, அன்னைக்கே சொன்னேன்ல

 

 

“ஆமாம் அண்ணே மறந்துட்டேன் என்று இளித்தாள் அவன் தங்கை.

 

 

“என்ன மாப்பிள்ளை இவளை எப்படி சமாளிக்கறீங்க

 

 

“என்னோட கஷ்டம் உங்களுக்கு புரியுது… ஹ்ம்ம் “ என்று பெருமூச்செறிந்தான் அவன்.

 

 

“இப்போ உங்களுக்கு என்னால என்ன கஷ்டம் வந்திச்சாம்

 

 

“ஒண்ணுமில்லை தாயே உன்னை கட்டுறதுக்கு நான் புண்ணியம் பண்ணியிருக்கணும் அதான் சொன்னேன் உங்க அண்ணன்கிட்ட

 

 

“தேனு கதிருக்கு பார்த்து பார்த்து பரிமாறுவதை [கண்டும் காணாததுபோல் கண்டுகொண்டாள் பசும்பொன்.

 

 

அதை நேரடியாக கேட்டும் விட்டாள், “என்ன தேனு எங்கண்ணனை ரொம்ப கவனிக்கிற, என்ன நடக்குது இங்க. எனக்கு தெரியாம எதுவும் நடக்குதா என்றாள்.

“என்னம்மா பசும்பொன் அவங்க ரெண்டு பேருக்கும் முறை இருக்கு தானே. அதான் அவ கதிரை கவனிக்கிறா, நீ மாப்பிள்ளையை எப்படி கவனிப்பியோ அப்படி தேனு உங்க அண்ணனை கவனிக்கிறா, என்ன மீனுக்குட்டி நான் சொல்றது சரி தானே என்று மீனாவை பார்த்து கண்ணடித்து வைத்தான் சுஜய்.

 

 

‘இவருக்கு ஏதாச்சும் சொல்றதுன்னா நேரடியா சொல்ல வேண்டியது தானே என்னை எதுக்கு இழுக்குறார், இதுல மீனுக்குட்டி வேற. கண்ணு வேற அடிச்சு வைக்குறார் என்று எண்ணியவள் அவனை பார்த்து முறைத்தாள்.

 

 

நொடியில் பசும்பொன்னுக்கு விஷயத்தை உணர்த்தினான் சுஜய். “என்ன மாப்பிள்ளை நீங்க என்ன நினைக்குறீங்க

 

 

“நான் என்ன நினைக்கிறது மச்சான், நீங்க சொன்னது சரி தானே அவங்க ரெண்டு பேருக்கும் முறை இருக்கு, பார்த்தா ரெண்டு பேருக்கும் விருப்பமும் இருக்கு போல. சீக்கிரமே கல்யாண சாப்பாடு சாப்பிட வேண்டியது தான் என்ன பொன்னு அடுத்து உங்கண்ணனுக்கு கல்யாணம் தான் என்று எல்லோரும் பேசிக் கொண்டிருந்தனர்.

 

 

சுஜய் மறுநாள் எல்லோரையும் காலையில் கிளம்பி தயாராக இருக்க சொன்னான். எல்லோருமாக இரண்டு நாட்கள் வெளியில் சென்று வரலாம் என்று அவன் சொல்லிவிட நேரமாக சாப்பிட்டு அவரவர்கள் அறைக்கு சென்றனர்.

 

 

சுஜய் அறைக்கு சென்ற சில நொடிகளில் மீனாவும் வந்தாள் “என்ன மீனு எதுவும் வேணுமா என்றான்

 

 

“ஹ்ம்ம் ஆமாம் படுக்கணும்

 

 

“ஏன் நீ தேனுகூட படுக்கலையா

 

 

“இல்லை அவளுக்கு தனியா படுத்தா தான் தூக்கம் வருமாம், நான் எங்க தான் படுக்கணும்ன்னு என்னை துரத்திவிட்டுட்டா மகராசி

 

 

நமுட்டு சிரிப்புடன் “சரி படுத்துக்கோ என்றவன் மேலே எதுவும் கேட்கவில்லை.

 

 

கட்டிலில் சென்று ஒரு ஓரத்தில் படுத்துக் கொண்டாள். சுஜய்க்கு ஏதோ அலுவலக வேலை இருந்ததால் அவன் மடிகணினியுடன் அமர்ந்துவிட்டான்.

“லைட் அணைச்சு விடுங்க எனக்கு தூங்கணும்

 

 

“மீனு எனக்கு கொஞ்சம் ஆபீஸ் வேலையிருக்கு முடிச்சதும் நான் லைட் அணைச்சுட்டு படுக்கறேன் சரியா

 

 

“வீட்டுக்கு வந்த பிறகு என்ன ஆபீஸ் வேலை வேண்டி கிடக்கு என்றவாறே எழுந்து அமர்ந்தாள்.

 

 

“நான் ஊருக்கு வந்திட்டதுனால நெறைய வேலை தேங்கி போயிருச்சு. நாளைக்கு வேற நாம வெளிய போகபோறோம்ல அதுனால தான் இந்த வேலையை நான் முடிச்சு அனுப்பிட்டா கொஞ்சம் ப்ரீயாகிடுவேன்

 

 

“முடியாது ஆபீஸ் வேலை எல்லாம் இனி வீட்டில பார்க்கவே கூடாது. அப்புறம் எதுக்கு ஆபீஸ்ன்னு ஒண்ணு வைச்சு இருக்கீங்க, இனி வேலை எல்லாம் அங்கேயே பார்த்துக்கோங்க. நீங்க எப்பவும் இப்படி தான் செய்வீங்களா

 

 

“உங்களை யாரும் எதுவும் கேட்டது இல்லையா என்று பட்டாசாக பொரிந்து தள்ளினாள்.

 

 

“இல்லை மீனு என்னை யாரும் எதுவும் கேட்டது இல்லை, வீட்டில தனியாவே இருக்கறதுனால நான் தான் இப்படி ஆபீஸ் வேலை எல்லாம் கொண்டு வந்து பழக்கிட்டேன்

 

 

“சமயத்துல அப்பாவும் நானுமா சேர்ந்து செய்வோம், அப்பாவும் போனதுக்கு அப்புறம் நான் மட்டும் தானே யாருமேயில்லை என்னை கேள்வி கேட்க என்றான்

 

 

ஏனோ அவன் பேச்சு அவளுக்கு தொண்டையை அடைத்தது. “ஏன் அப்படி சொல்றீங்க, இனிமே நான் கேள்வி கேட்பேன். நெறைய கேட்பேன், நீங்க பதில் சொல்லி தான் ஆகணும், இப்போ இதெல்லாம் எடுத்து வைங்க படுக்கலாம்

 

 

அவள் அவனுக்காக வருந்துகிறாள் என்பது புரிய அவள் உள்ளங்கையை எடுத்து அவன் நெஞ்சின் மீது வைத்துக் கொண்டான். அவளுக்கு கஷ்டமாக இருந்தது, தனியாகவே இப்படி இருக்க முடியும், உடன் பிறந்தவர்கள் என்று கூட யாருமில்லாமல் எப்படி இருந்திருப்பார் என்று யோசித்தாள்.

 

 

“மீனு பாவம் பசும்பொன்னும் மாப்பிள்ளையும் நமக்காக தானே ஊர்ல இருந்து வந்திருக்காங்க, அவங்களை நாளைக்கு வெளிய சுத்தி பார்க்க கூட்டி போக வேண்டாமா. இந்த வேலையை நான் இன்னைக்கே முடிச்சுட்டா நாளைக்கு நிம்மதியா நாம வெளிய போகலாம்

 

 

“தயவுசெய்து புரிஞ்சுக்கோ மீனு, நீ வேணுமின்னா உள்ள படுத்துக்கோ நான் வெளிய போய் உட்கார்ந்துக்கறேன். நாம சென்னை போற வரைக்கும் எனக்கு இப்படி வேலை இருக்கும். அதுவரைக்கும் பொறுத்துக்கோ

 

 

“சென்னை போனதும் நீ சொன்ன மாதிரி நான் வீட்டுக்கு வந்ததும் ஆபீஸ் மறந்திடுறேன் போதுமா

 

 

அவள் தலை தானாக சம்மதமென ஆடியது, அவன் அவள் கையை ஒரு முறை தன் கைகளுக்குள் அடக்கி அழுத்தம் கொடுத்து பின் விடுவித்தவன் அவன் மடிகணினியை எடுத்துக் கொண்டு வெளியில் செல்ல ஆயத்தமானான்.

 

 

“வேணாம், நீங்க வெளிய போக வேணாம். உள்ளவே படுங்க எனக்கு தனியா படுக்க பயம் என்று சேர்த்து சொல்ல அவன் சிரித்துக் கொண்டே கட்டிலில் அமர்ந்தான்.

 

 

பெரிய விளக்கை அணைத்துவிட்டு சிறிய விளக்கை அவன் போட “பரவாயில்லை நீங்க அந்த லைட்டே போட்டுக்கோங்க

 

 

“வேண்டாம் பரவாயில்லை எனக்காக நீ சரி சொல்லும் போது உனக்காக நான் பார்க்க மாட்டேனா, நீ தூங்கு என்றவன் அவள் உள்ளங்கையை எடுத்து அவன் மடி மீது வைத்துக் கொண்டான்.

 

 

“இது மட்டும் இங்கேயே இருக்கட்டுமே என்று அவன் சொல்ல அவனை மறுக்க நினைத்தவள் அமைதியானாள். சுஜய் சிறுது நேரம் வேலையில் ஆழ்ந்து விட சற்று நேரம் கழித்து அவள் தூங்கி விட்டாளா என்று பார்க்க அவளோ விழித்துக் கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

 

“என்ன தூங்கலையா

 

 

“இல்லை, நீங்க தூங்கும் போது நானும் தூங்கறேன். உங்களுக்கு டீ போட்டு தரவா, ரொம்ப நேரமா வேலை பார்க்கறீங்களே

 

 

“எத்தனையோ நாள் இப்படி வேலை செஞ்சிருக்கேன், கேட்கறதுக்கு யாரும் இல்லாததால என்னை இப்படி யாரும் கவனிச்சது இல்லை

 

“இன்னைக்கு ரொம்ப சென்டிமென்ட்டா பேசுறேனா, தெரியலை என்னமோ மனசு பாரமா இருக்கு. சந்தோசமாவும் இருக்கு, சரி நீ எனக்கு டீ கொண்டு வா, உனக்கும் சேர்த்து கொண்டு வா சேர்ந்து சாப்பிடலாம்

 

 

“உங்களுக்கு டீயோட ரொட்டியும் கொண்டு வரவா

 

 

“ரொட்டியா எனக்கு இப்போ அது வேண்டாம்மா

 

 

“நீங்க இப்படி தான் சொல்வீங்க, மணி பன்னிரண்டரை ஆச்சு அப்போ சாப்பிட்டது செரிச்சு போயிருக்கும் நான் டீ போட்டுட்டு ரொட்டி கொண்டு வரேன் என்று அவன் பதிலுக்கு காத்திராமல் வெளியில் சென்று விட்டாள்.

 

 

பத்து நிமிடத்தில் டீயும் பிஸ்கட்டுமாக உள்ளே நுழைந்தாள். “என்னம்மா ரொட்டி கொண்டு வர்றேன்னு சொன்னே, பிஸ்கட் எடுத்திட்டு வந்திருக்க

 

 

“இது தான் ரொட்டி, நாங்க இதை இப்படி தான் சொல்லுவோம் என்றவள் அவனுக்கு சூடான தேநீரை கொடுத்தாள்.

 

 

“உங்க ஊர்ல எல்லாம் இப்படி தான் சொல்வாங்களா

 

 

“ஏன் உங்க ஊர்ல வேற எப்படி சொல்வாங்களாம் என்றாள் அவளுக்கு ஒழுங்குகாட்டியவாறே.

 

 

“இது பிஸ்கட்

 

 

“இதை ரொட்டின்னும் சொல்லலாம், பிஸ்கோத்துன்னும் சொல்லலாம்

 

 

“பிஸ்கோத்து இல்லை மீனு, பிஸ்கட் சொல்லு

 

 

“இங்க என்ன எனக்கு கிளாஸ் எடுக்க போறீங்களா, சீக்கிரம் டீயை குடிச்சுட்டு வேலையை முடிங்க எனக்கு தூக்கம் வருது

 

 

டீயை குடித்துவிட்டு அவன் மீண்டும் வேலையில் மூழ்கிவிட அவன் வேலை முடிய மணி இரண்டாகியது. “மன்னிச்சுக்கோ மீனு ரொம்ப தாமதப்படுத்திட்டேன் என்றவன் விடிவிளக்கை போட்டு கட்டிலின் மறுபுறம் படுத்தான்.

 

 

ரஜாய்க்குள் தன்னை அழுத்திக் கொண்டவன் மீனுவின் பக்கமாக திரும்பினான். அதுவரை விழித்திருந்தவள் அவன் விளக்கணைத்ததும் கண்ணயர்ந்துவிட்டாள். அவளை பார்த்துக் கொண்டே அவனும் துயில ஆரம்பித்தான்.

 

 

பொழுது அழகாக புலர ஆரம்பித்தது, டெல்லியின் குளிரில் எழுந்திருக்கவே மனமில்லாமல் உறக்கம் இன்னும் இழுத்தது அவனுக்கு. ஆவென்ற அலறலில் கண்ணை மலர்த்தி வேகமாக எழுந்து அமர்ந்தான்.

 

 

 

  • காற்று வீசும்

 

Advertisement