Advertisement

அத்தியாயம் –6

 

 

மீனா திடிரென்று அப்படி நடந்து கொண்டதில் குழப்பம் கொண்ட சுஜய்க்கு அதற்கான காரணம் எதிரில் வந்ததும் தான் புரிந்தது. பசும்பொன்னும் கார்த்திகேயனும் முன்னால் சென்றுவிட மீனாவும் சுஜய் பின்னே வந்தனர்.

 

 

மீனா தூரத்திலேயே அய்யாசாமியை கண்டுவிட அவனை வெறுப்பேத்தும் பொருட்டே அவள் சுஜய்யின் கையை பிடித்துக் கொண்டும் தோளை உரசிக் கொண்டும் அவனை மாமா என்று அழைத்துக் கொண்டும் வந்தாள்.

 

 

முதலில் காரணம் புரியாத சுஜய்க்கு எதிரில் அய்யாசாமி வந்து நின்றதும் தான் புரிந்தது. சுஜய் ஏற்கனவே அவனை பற்றி ஓரளவு அறிவான், ஊர் கூடிய சபையில் மீனாவை தப்பாக பேசியது அவன் அறிந்ததே.

 

 

திருமணம் உறுதி ஆனதும் சுஜய்க்கு எதுவும் ஆகிவிடும் என்று அவன் கதை கட்டி விட்டதை கதிர் சொல்லியிருந்தான், அதுமட்டுமல்லாது பலமுறை அவன் மீனாவிடம் அடி வாங்கியிருப்பதை மீனாவே ஒருமுறை கூறியது நினைவிற்கு வந்தது.

 

 

இருவரின் அருகில் வந்து நின்றான் அய்யாசாமி, அவன் நிறைய குடித்திருக்கிறான் என்பது அவன் தள்ளாட்டத்திலும்அவன் கண்கள் சிவந்திருப்பதிலும் தெரிந்தது. அவனுடன் மேலும் இருவர் நின்றிருக்க மீனாவின் அருகில் நெருங்கி வந்தவன் அவளை மேலும் கீழும் பார்த்தான். அவன் பார்வையில் வெருப்பானவள் சுஜய்யை மேலும் ஒட்டி நின்றாள்.

 

 

“என்ன மீனாக்கண்ணு புதுசா புருஷன் வந்துட்டான்னு இந்த அய்யாசாமி மாமனை மறந்துட்டியா. கவலையேப்படாதே கண்ணு இவன் எப்படியும் சீக்கிரம் போய் சேர்ந்திடுவான்

 

 

“அப்புறம் நாம ஒண்ணாகிடலாம், உன்னை கல்யாணம் பண்ணா தானே பிரச்சனை. இவன் போய் சேர்ந்ததும் நான் உன்னை வைச்சுக்கறேன் என்றது தான் தாமதம் மறுநொடி சுஜய்யின் இரும்புக்கரம் அவன் கன்னத்தை பதம் பார்த்தது.

 

 

அவன் உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது, அருகில் நின்றிருந்த இருவர் அய்யாசாமியை விட்டு இரண்டு அடி பின்னே சென்றனர். “என்ன நீ… பேசிட்டே இருக்க, நான் அதை கேட்டுட்டே இருப்பேன்னு நினைச்சியா

 

 

“என் பொண்டாட்டியை பத்தி பேச உனக்கு என்ன தகுதி இருக்குடா, அப்புறம் என்ன சொன்னேன். நான் ரொம்ப நாளைக்கு இருக்க மாட்டேன்னா, நீங்க எல்லாம் தப்பு பண்ணிட்டீங்க இவளை வேண்டாம்ன்னு சொல்லி, இவளோட மாங்கல்ய பலத்துல நாங்க ரெண்டு பேருமே நூறு வயசு வரைக்கும் ஒண்ணாவே இருப்போம்

 

 

“எங்க பேரன் பேத்தி கல்யாணத்தையும் நடத்தி வைப்போம். ஆனா அதையெல்லாம் பார்க்க நீ இருக்க மாட்டே, நீ தான் குடிச்சு குடிச்சு சாகப் போறியே. தனியா வந்து எத்தனை முறை என் பொண்டாட்டி கிட்ட அடி வாங்கி இருப்ப– சுஜய்

 

 

“ஹ்ம்ம் அது வேணும்ன்னு தான் அடிவாங்கினேன், மீனாகண்ணோட கை என் மேலபடட்டும்ன்னு தான்– அய்யாசாமி

 

 

‘சீய் எருமை மாடு எப்படி புளுகுது பாரு, இவனை அடிச்ச கையை அடுப்புல தான் வைச்சு கருக்கவைக்கணும் என்று நினைத்துக் கொண்டாள்.

 

 

“எதுக்கு பொய் சொல்ற இப்போ, தனியா பேசி அவளை அவமானப்படுத்தினா அவ உன்னை பதம் பார்த்திடுவான்னு தானே அத்தனை பேரு கூடியிருந்த சபையில வைச்சு அவளை சீண்டினே. அப்போ தானே அவளால எதுவும் பேச முடியாதுன்னு நினைச்சிருப்ப

“இப்பவும் நான் கூட இருந்தா அவ பேசமாட்டான்னு தான் உன்கூட ரெண்டு பேரை சேர்த்துக்கிட்டு வந்திருக்க. என் முன்னாடி இவ பேசமாட்டா சரி, ஆனா நான் பேசாம இருப்பேன்னு நீ எப்படி நினைச்ச

 

 

“ஓ இவன் டெல்லில இருந்து வந்திருக்கான், சப்பாத்தி சாப்பிட்டு சாப்டா இருப்பான்னு நினைச்சுட்டேல. நானும் தமிழன் தான்டா, இந்த மண்ணோட ரத்தம் என் உடம்பிலயும் ஓடுது

 

 

“இப்போ அடிச்சதுக்கு உன் உதடு கிழிஞ்சு தான் ரத்தம் வந்துச்சு, அடுத்த முறை உன் வாயே கிழிஞ்சுடும், ஜாக்கிரதையா இருந்துக்கோ. உன் கூட வந்தவங்களே உனக்கு சாதகமா பேசலை, முதல்ல அவங்க இங்க இருந்தா தானே என்று அவன் பேசிக் கொண்டிருந்த வேளை அய்யாசாமியுடன் வந்திருந்த இருவரும் தூரமாக நடந்து போவது தெரிந்தது.

 

 

முன்னால் நடந்து கொண்டிருந்த பசும்பொன்னும் கார்த்திகேயனும் நின்ற இடத்திலேயே நின்று அங்கு நடப்பதை பார்த்தவர்கள் வேகமாக அவர்களின் அருகில் வந்தனர். “என்னண்ணே என்னாச்சு

 

 

“ஒண்ணுமில்லைம்மா இவன் உங்க அண்ணிக்கிட்ட வம்பு பண்ணான், அதான் பேசிட்டு இருந்தேன்

 

 

“அண்ணே இவனெல்லாம் ஒரு ஆளு வரைமுறை தெரியாத பயண்ணே இவன் தங்கச்சி முறையாகுது என்கிட்டேயே பலமுறை வம்பு பண்ணியிருக்கான் இவன்

 

 

சுஜய்க்கு மீண்டும் கோபம் வர அவன் சட்டையை பிடித்தான். “மச்சான் நீங்க விடுங்க நான் பார்த்துக்கறேன். என் தங்கச்சிக்காக நீங்க அடிச்சீங்கள்ள, உங்க தங்கச்சிக்காக நான் இவனை அடிக்க வேண்டாமா– கார்த்திகேயன்

 

 

‘அடப்பாவிங்களா அடிக்கறதுல என்னடா போட்டி வேண்டி கிடக்கு, அவன் அடிச்சதுல என் உதடு தான் கிழிஞ்சுது. இவன் என்ன திம்பான்னு தெரியலையே இப்படி ஓங்கு தாங்கா உசரமா இருக்கானே, இவன் அடிச்சு என் போட்டியே எடுத்துருவான் போலயே என்று மனதிற்குள் புலம்பினான் அய்யாசாமி.

 

 

கார்த்திகேயன் முறைத்ததே அவனுக்கு அய்யனார் சாமி முறைத்தது போல் இருந்தது. அவனும் அய்யாசாமிக்கு இரண்டு அறை விட அய்யாசாமி போதுமடா சாமி என்ற முடிவுக்கே வந்துவிட்டான்.

பின் எல்லோரும் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்ப,வீட்டிற்கு வந்த பசும்பொன்னோ வழியில் நடந்ததை எல்லோருக்கும் சொல்லிக் கொண்டிருந்தாள்.

 

 

“அவனை அடிக்கும் போது நீங்க அண்ணனை பார்த்திருக்கணுமே சாதுவா இருந்த அண்ணே சேதுவா மாறி அவனை விட்டார் ஒரு அறை. அட அட அடா இன்னும் அந்த காட்சி என் கண்ணு முன்னால நிக்குது

 

 

“இவரு மட்டும் என்னவாம் விருமாண்டி கமல் மாதிரி விறைச்சுக்கிட்டு நின்னவர் அவனை ரெண்டு அடி கொடுத்திட்டு தான் வந்தார். அய்யாசாமி அய்யோ சாமின்னு போய்ட்டான்

 

 

“அடியே பசும்பொன்னு போதும்டி நீ பேசிட்டே இருப்ப, சாப்பாடு எடுத்து வைக்கணும் வா. அவங்க முதல்ல சாப்பிடட்டும் என்று அவளை அழைத்தார் காமாட்சி.

 

 

“ஏன் மாப்பிள்ளை அவன் ரொம்ப பேசிட்டானா, நான் ஊர் பெரியவர்கிட்ட கூப்பிட்டு ஒரு பஞ்சாயத்து வைக்கறேன் அவனுக்கு– ராஜ்மோகன்

 

 

“அதெல்லாம் வேணாம் மச்சான், அவனை எப்போ எப்படி கவனிக்கணும்னு எனக்கு தெரியும் நானே அவனை பார்த்துக்கறேன் என்று ஒரு முறைப்புடன் சொன்னார் ராஜேந்திரன்.

 

 

“வேண்டாம் இந்த விஷயத்தை இப்படியே விட்டுடுங்க, நாம மேல மேல பேசி பிரச்சனையை வளர்க்க வேண்டாம். அவன் இனி யார் வம்புக்கும் போக மாட்டான்னு நினைக்கிறேன் அப்படியே விட்டுடுவோமே– சுஜய்

 

 

“ஆமாம் மாமா மச்சான் சொல்றது சரி தான், பிரச்சனையை அப்படியே விட்டுடுவோம். அவன் இனி நம்மகிட்ட வம்பு வைச்சுக்க மாட்டான். அப்படி மீறி எதுவும் செஞ்சா நான் பார்த்துக்கறேன்– கார்த்திகேயன்.

 

 

எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட எல்லோருமே கதிரை நினைத்துக் கொண்டனர். “இந்த கதிரு அவசரம்ன்னு ஊருக்கு கிளம்பிட்டான். புள்ளக்கு ஒரு வாய் கறி சோறு கூட சரியா ஆக்கி போட முடியலை என்று புலம்பினார் அவன் அன்னை காமாட்சி.

 

 

சாப்பிட்டு சுஜய் அறைக்கு சென்று விட பின்னோடு மீனாட்சி வருவாள் என்று எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மீனாட்சி மிகுந்த சந்தோசத்தில் இருந்தாள், சுஜய் அய்யாசாமியை அடித்ததில்.

 

 

அதுமட்டுமில்லாமல் அவன் அவளுக்காக பேசியது அவளுக்கு புளங்காகிதத்தை கொடுத்தது. அய்யாசாமி வந்து பேசும் போது அவளுக்கு வந்த ஆத்திரத்துக்கு அவனை நன்றாக அடிக்க வேண்டும் என்று ஆத்திரம் வந்தது.

 

 

அருகில் வேறு சுஜய் இருந்ததால் அவளால் எதுவும் செய்ய முடியாமல் போயிற்று. அய்யாசாமியை வெறுப்பேத்தவே அவள் வேண்டுமென்று சுஜயை நெருங்கி நின்றாள்.

 

 

ஆனால் அவன் வாய்க்கு வந்ததை பேசி அவளை கலவரப்படுத்த அவனுக்கு எதுவும் ஆகிவிடுமோ என்ற பயம் அவளுக்கு வந்தது. அதற்குள் சுதாரித்த சுஜய் வைத்தானே அவனுக்கு ஒரு அறை சந்தோசமாக இருந்தது அதை மீண்டும் நினைப்பதற்கு.

 

 

பின்கட்டில் அமர்ந்துக் கொண்டு அவள் யோசனை செய்துக் கொண்டிருக்க சுஜய்யின் அழைப்பு அப்போது தான் அவள் காதில் கேட்டது. ‘எதுக்கு கூப்பிடுறார்என்று யோசித்துக் கொண்டே எழுந்து உள்ளே சென்றாள்.

 

 

“சொல்லுங்க மாமா, எதுக்கு கூப்பிட்டீங்க

 

 

“என்ன சொன்னே திரும்ப சொல்லு

 

 

“எதுக்கு கூப்பிட்டீங்கன்னு கேட்டேன், உங்க காதுல விழுகலையா

 

 

“அதுக்கு முன்னாடி ஒண்ணு சொன்னியே அதென்ன

 

 

“என்ன சொன்னேன்

 

 

“சொல்லுங்க மாமான்னு சொன்னியே. நிஜமா தான் கூப்பிட்டியா, இல்லை காலையில அய்யாசாமியை வெறுப்பேத்த கூப்பிட்ட மாதிரி இங்க யாரையும் வெறுப்பேத்த அப்படி கூப்பிட்டு வைக்கிறியா– சுஜய்

 

 

‘அடக்கடவுளே நான் அய்யாசாமியை வெறுப்பேத்த தான் இவரை மாமான்னு கூப்பிட்டேன்னு சரியா கண்டுபிடிச்சுட்டாரே. ஏதோ நல்ல மூடுல இருந்திருக்கேன் போல அதான் இப்போ மாமான்னு கூப்பிட்டிடுட்டேன், அதை பெரிய விஷயமா கேட்குறார் பாரு என்று எண்ணி அவனை முறைத்தாள்.

 

 

“இப்படி முறைச்சா அதுக்கு என்ன அர்த்தம்

 

 

“பதில் சொல்ல விருப்பமில்லைன்னு அர்த்தம், இப்போ நீங்க சொல்ல வந்த விஷயத்தை சொல்லப் போறீங்களா இல்லை நான் போகட்டுமா

 

 

“நாளைக்கு ஊருக்கு கிளம்பணும், உன்னோட துணிமணி எல்லாம் எடுத்து வைச்சுக்கோ. அதை சொல்ல தான் கூப்பிட்டேன். நான் போய் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு வந்திடுறேன் என்றவன் அவளின் பதிலுக்காக காத்திராமல் வெளியே சென்று விட்டான்.

 

 

‘என்னது ஊருக்கு போகணுமா, அப்போ இனி நான் இங்க இருக்க முடியாதா. இது என் ஊர் இல்லையா, என் கிழவி, கிழவன், அம்மா, அப்பா எல்லாரையும் விட்டுட்டு நான் கிளம்பணுமா என்று எண்ணியதும் அவளை அறியாமல் கண்களில் நீர் துளிர்த்தது.

 

 

அவன் எல்லோரிடம் ஊருக்கு கிளம்ப வேண்டும் என்று சொல்ல அவர்களோ மறுவீடு முடியாமல் எப்படி அனுப்புவது, அதுமில்லாமல் அவர்கள் இன்னுமொரு பத்து நாட்கள் இருந்து தான் செல்ல வேண்டும் என்று சொல்ல சுஜய் மறுத்தான்.

 

 

“இல்லைங்க மாமா ஆபீஸ்ல வருமான வரி எல்லாம் தாக்கல் பண்ணணும், அந்த வேலை எல்லாம் அப்படியே நிக்குது. நாங்க சீக்கிரமே ஊருக்கு போகணும், வேணுமின்னா நாளைக்கு மறுவீடு முடிஞ்சதும் அடுத்த நாள் நாங்க கிளம்புறோம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டான்.

 

 

“பொண்ணு முதல் முறையா புகுந்த வீட்டுக்கு போறா, நம்ம வீட்டில இருந்து யாராச்சும் அவ கூட போய் அவங்களை அங்க விட்டுட்டு வரணுமே – மாலதி.

 

 

“சரி மாலு நாம யாரை அனுப்ப போறோம்னு பார்த்திட்டு அதுக்கு ஏத்த மாதிரி இவங்களுக்கு ரயிலுக்கு புக் பண்ணிடுவோம்– ராஜ் மோகன்.

 

 

“மாமா யார் வரப்போறாங்கன்னு சொல்லுங்க, டிக்கெட் நானே போட்டுறேன். ரயிலுக்கு வேண்டாம் நான் டிக்கெட் விமானத்தில போட்டுறேன்– சுஜய்

“சரி நீங்க யோசிச்சு சொல்லுங்க நாங்க ஊருக்கு கிளம்ப எல்லாம் எடுத்து வைக்கறோம் என்று சொல்லி எல்லோரையும் ஒரு வழியாக சமாதானப்படுத்தி விட்டு அவன் அவர்கள் அறைக்கு வந்தான்.

 

 

மீனாவோ கட்டிலில் அமர்ந்து கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தாள். “எதுக்கு இப்போ அழறே, ஊருக்கு போக எல்லாம் எடுத்து வை

 

 

“இப்போ என்ன அவசரம்ன்னு ஊருக்கு போகணும்ன்னு சொல்றீங்க

 

 

“வெளியே பேசினது உனக்கு கேட்டிருக்கும் தானே, எனக்கு நெறைய வேலை இருக்கு. போட்டது போட்டபடி வந்திருக்கேன், போய் எல்லாம் பார்க்கணும், இதுக்கு மேல தாமதிக்க முடியாது. அங்க வேலையை முடிச்சுட்டு சென்னைக்கு வரவேண்டாமா

 

 

“அப்போ நீங்க வேணா ஊருக்கு போங்க. நான் இங்கேயே இருந்துட்டு அப்புறம் வர்றேன்

 

 

“சரி அப்போ உன்னிஷ்டம் என்றவன் மேலே எதுவும் பேசவில்லை.

 

 

“அப்போ நான் இங்கேயே இருக்கலாம் தானே, நீங்க ஒரு ஒரு வாரம் இல்லை வேணாம் ஒரு ஒரு மாசம் கழிச்சு வந்து என்னை கூட்டிப் போங்க

 

 

“எதுக்கு கூட்டிட்டு போகணும்

 

 

“என்ன கேள்வி இது நீங்க தானே வந்து கூட்டிட்டு போகணும்

 

 

“அதுக்கு நீ நான் கூப்பிடும் போது வரணும், உன்னிஷ்டத்துக்கு எல்லாம் என்னால வரமுடியாது. உனக்கு எப்போமே இங்கேயே இருக்கணும்னு நீ விருப்பப்பட்டாலும் இருந்துக்கோ. அப்படியே உனக்கு வரணும்ன்னு தோணிச்சுன்னா நீயே தான் கிளம்பி வரணும்

 

 

மீனா அவனை பார்த்து நன்றாக முறைத்தாள். “எதுக்கு இப்போ முறைக்கிற, என்ன இன்னைக்கு தூக்கத்தை இப்போவே கெடுக்கணுமா என்று அவளருகில் நெருங்கி வந்தான்.

 

 

‘என்னது என்பது போல் அவள் பார்வை மாறியது. “சரி என்ன முடிவு எடுத்திருக்க என்னோடவே வர்றியா இல்லை நீயே வர்றியா

 

“இப்போவே சொல்லிடு நான் அதுக்கு ஏத்த மாதிரி தான் டிக்கெட் போடணும்

 

 

“அதான் எல்லாம் உங்க இஷ்டம்ன்னு ஆகிப்போச்சே, அப்புறம் என்ன கேள்வி. எல்லாம் சேர்த்தே புக்கு பண்ணுங்க.

 

 

“இப்போ உன்னிஷ்டம்ன்னா சொல்றீங்க, ஒரு நாள் இல்லன்னா ஒரு நாள் நான் இங்க வந்து இருக்கும் போது நீங்களா என்னை தேடி வருவீங்க

 

 

“வந்து நீ என்னோட வான்னு கூட்டிட்டு வருவீங்க பாருங்க என்றாள் சிறுபிள்ளைத்தனமாக, அவள் ஏதோ அவனுக்கு பதில் கொடுக்க வேண்டுமென்றே அப்படி சொன்னாள், அது உண்மையாகப் போகிறது என்று இருவருமே அக்கணம் உணர்ந்திருக்கவில்லை.

 

 

“அப்புறமா யார் யார் நம்ம கூட வருவாங்கன்னு கேட்டு சொல்லிடு அவங்களுக்கும் சேர்த்தே புக் பண்ணிடலாம்

 

 

“நம்ம கூட வர்றாங்களா, அய் ஜாலி அப்போ நாம எல்லாரையுமே கூட்டிட்டு போவோம் என்றாள் சந்தோசமாக. ‘இவள் வளர்ந்திருக்கிறாளா இல்லையா, சிறுபிள்ளையாக பேசுகிறாளே என்ற சந்தேகம் சுஜய்க்கு எழுந்தது.

 

 

“எனக்கு ஒரு உதவி செய்யணும்

 

 

“என்ன

 

 

“எதுக்கு இப்படி அடிக்கிற மாதிரியே பேசுற. என்னங்க மாமா, சொல்லுங்க மாமான்னு கேட்கலாம்ல

 

 

“எங்களுக்கு எப்போ அப்படி சொல்லணும்ன்னு தோணுதோ அப்போ சொல்லுவோம். என்ன உதவின்னு முதல்ல சொல்லுங்க இப்போ

 

 

“தேனுவை எப்படியாச்சும் நம்மோட கூட்டி போகணும், அதை மட்டும் செய்

 

 

“எதுக்கு தேனுவை கூட்டி போகணும்

 

 

“தேனுவை மிரட்டி கதிரை பிடிக்குமா பிடிக்காதான்னு கேட்க தெரிஞ்சா மட்டும் போதாது. அதுக்கு எதாவது ஒரு நல்ல காரியமாச்சும் பண்ணணும்

 

 

“என்னது தேனுவை நான் மிரட்டி… இதெப்படி உங்களுக்கு தெரியும்

 

 

“எனக்கு மட்டுமா இந்த ஊருக்கே தெரிஞ்சிருக்கும், மாவிளக்கு எடுக்கற அன்னைக்கு நீ மெதுவாவா கேள்வி கேட்டே

 

 

“நான் நினைச்சேன் யாரோ ரொம்ப நேரமா அய்யனார் நிலை மாதிரி ஒரே இடத்துல நிற்கற மாதிரி தெரியுதே என்னன்னு யோசிச்சேன். அது நீங்க தானா, அப்போ நாங்க பேசின எல்லாமே நீங்க கேட்டீங்களா

 

 

“இங்க பாரு அந்த கதை எல்லாம் இப்போ பேச நேரமில்லை. நாம ரெண்டும் சாவகாசமா டெல்லிக்கு போனதும் அதெல்லாம் பேசிக்கலாம், இப்போ போய் உன் அருமை தங்கச்சியை உன்னோட கூட்டிட்டு வர்றதுக்கு என்ன வழின்னு உன் மூளையை பயன்படுத்தி கண்டுப்பிடி

 

 

“எல்லாம் எங்களுக்கு தெரியும் நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டியது இல்லை என்று அவனிடம் முகத்தை திருப்பியவள் வெளியே சென்றாள்.

 

 

அவள் சித்தி, சித்தப்பாவிடம் தேனுவை அனுப்பச் சொல்லி கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சிக் கொண்டிருந்தாள். இடையில் அவள் பாட்டி மீனாட்சி வர “ஏன்டி நீ புருஷனோட போறே அவளை எதுக்குடி கூப்பிடுற. அவ தனியா உன்னோட வந்து என்ன செய்வா

 

 

“சின்னஞ்சிறுசுகள் இருக்கற இடத்துல அவளை எப்படி இருக்க வைக்க முடியும். வளர்ந்திருக்கியே தவிர உனக்கு கூறே இல்லை

 

 

“கிழவி நீ பேசாம இருக்க மாட்ட, அவர் ஆபீஸ் போய்டுவார். வீட்டில நான் தனியா தானே இருப்பேன், அதுவும் இல்லாம நாங்க அங்க இருக்க போறது ஒரு இருபது நாள் அதுக்கு அப்புறம் சென்னைக்கு வரப் போறோம்

 

 

“நாங்க சென்னைக்கு வரும் போது நீங்க எல்லாரும் எப்படியும் சென்னைக்கு வருவீங்க. அங்க வந்து இவளை நீங்க கூட்டிட்டு போங்க, எனக்கு புது இடம் தர்மசங்கடமா இருக்காதுல

 

 

“எங்க கூட பசும்பொன்னும், அண்ணனும் மூணு நாள் தான் இருப்பாங்கன்னு சொல்றீங்க. அதுக்கு பிறகு நான் தனியா தானே இருப்பேன், இதை ஏன் யாரும் யோசிக்கவே மாட்டேங்குறீங்க

 

 

சுஜய் இயல்பாக வெளியே வருவது போல் வந்தவன் என்ன நடக்கிறது என்பதை அப்போது தான் கேட்டறிவது போல் கேட்டான்.

 

 

“ஏன் மாமா தேனுவை நான் என்னோட தங்கை மாதிரி பார்த்துக்க மாட்டேனா. மீனு சொல்றதும் சரி தானே நான் ஆபீஸ் போய்ட்டா பாவம் அவ தனியா தானே இருப்பா

 

 

“நைட்ல கூட தேனுக்கு துணையா மீனு கூடவே இருப்பா மாமா. அத்தை உங்களுக்கும் எதுவும் சங்கடம் இருக்கா, எங்களை நம்பி உங்க பொண்ணை அனுப்பி வைக்க மாட்டீங்களா– சுஜய்

 

 

“என்ன மாப்பிள்ளை நீங்க புதுசா கல்யாணம் முடிச்சவரு, இவளை வேற கூட்டிட்டு போய் சங்கடம் தானே– தேனுவின் தந்தை முருகேசன்

 

 

“என்ன மாமா சங்கடம் வரப்போகுது, நீங்க கண்டதும் போட்டு குழப்பிக்காதீங்க. உங்களுக்கு எங்க மேல நம்பிக்கை இருந்தா மட்டும் அனுப்புங்க மாமா. இதுக்கு மேல நான் கட்டாயப்படுத்தலை– சுஜய்

 

 

சற்றே யோசித்தவர் “சரிங்க மாப்பிள்ளை கூட்டிட்டு போங்க என்றார். “அப்புறம் மாப்பிள்ளை உங்ககூட ஊருக்கு நம்ம பசும்பொன்னும் அவ புருசனும் வருவாங்க

 

 

“வீட்டில பெரியவங்க யாராச்சும் தான் கூட வரணும்.நாங்க யாரும் வரமுடியாததால தான் பசும்பொன் அனுப்பறோம். தப்பா எடுத்துக்காதீங்க மாப்பிள்ளை– முருகேசன்

 

 

“அதனாலென்ன மாமா நான் இதெல்லாம் பார்க்கறது இல்லை. பசும்பொன் எங்ககூடவே வரட்டும், அவங்களும் தேனிலவு போன மாதிரி இருக்கும். என்ன கார்த்தி நான் சொல்றது சரி தானே– சுஜய்

 

 

“அப்பா… சூப்பர் மச்சான் நீங்க… எனக்கு ஒரு செலவு மிச்சம், உங்க தங்கச்சி தேனிலவுக்கு அங்க கூட்டி போ இங்க கூட்டி போன்னு சொல்லிட்டு இருந்தா. பொன்னு கேட்டுக்கோ நாம உங்கண்ணன் அண்ணியை மட்டும் கொண்டு விடலை நாம தேனிலவுக்கும் சேர்த்து தான் போறோம்– கார்த்திகேயன்

 

 

“என்னண்ணே இப்படி சொதப்பிட்ட இந்த மனுஷனை என்னென்னமோ சொல்லி தயார் படுத்தி வைச்சிருந்தேன். நீ இப்படி சொல்லிட்டியே, போ அண்ணே என்று சிணுங்கினாள் பசும்பொன்.

மறுவீட்டு விருந்து நல்லபடியாக முடிய அதற்கு மறுநாள் சுஜய்யும் மீனாவும் பசும்பொன், கார்த்திகேயன், தேனு சகிதம் ஊருக்கு கிளம்ப தயாராயினர். மதுரையில் இருந்துசென்னைக்கு சென்று அங்கிருந்து டெல்லிக்கு வேறு விமானம் ஏறுவதாக ஏற்பாடு.

 

 

என்ன தான் தைரியமான பெண்ணாக மீனா இருந்தாலும் எல்லோரையும் பார்த்து அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. தாத்தாவின் அறைக்கு சென்று தாத்தா பாட்டி இருவரிடமும் விடை பெற சென்றாள்.

 

 

“தாத்தா நான் ஊருக்கு போயிட்டு வர்றேன். உனக்கு இப்போ சந்தோசமா என்னை உங்ககிட்ட இருந்து பிரிச்சு ஊருக்கு அனுப்பறீங்கள்ள. கிழவி உனக்கும் இப்போ ரொம்ப சந்தோசமா இருக்குமே. என்னை அனுப்பிட்டு நீ மட்டும் நெத்திலி குழம்பு வைச்சு சாப்பிடாத கிழவி

 

 

“அப்புறம் உனக்கு செரிக்காது, நான் இல்லைன்னு அந்த மூக்காத்தா கிழவிகிட்ட போய் பேசிட்டு இருக்காதே. எங்கப்பாவையும் உன் பொண்ணையும் நல்லா பார்த்துக்கோ பாட்டி என்று அதுவரை கிண்டலாக பேசிக் கொண்டிருந்தவள் கண்களில் மாலை மாலையாக கண்ணீர் சிந்தியது.

 

 

பாட்டி மீனாட்சியை கட்டிக் கொண்டு அழுதாள், மாலதியோ கேட்கவே வேண்டாம் ஒற்றை பெண் பிள்ளையை பெற்று அவளை புகுந்த வீட்டுக்கு அனுப்பும் வேளை ஒரு மூச்சு அழுது கொண்டிருந்தார்.

 

 

எல்லோரிடமும் விடைபெற்றவள் காமாட்சியிடம் வந்து நின்றாள். “அத்தை போயிட்டு வர்றேன். தாத்தா பாட்டியை பார்த்துக்கோங்க அத்தை

 

 

“மீனா நீ சந்தோசமா போயிட்டு வா, மாமா அத்தையை நான் பார்த்துக்கறேன்

 

 

“அத்தை சீக்கிரமா கதிருக்கும் தேனுக்கும் கல்யாணம் வைங்க, நான் அவங்க கல்யாணத்தை எதிர் பார்க்கிறேன்

 

 

“ஏன் மீனா இதுக்காக தான் நீ கல்யாணம் வேணாம்ன்னு சொன்னியா, அதுக்காக தான் இந்த கல்யாணத்துக்கு நீ ஒத்துக்கிட்டியா– காமாட்சி

 

 

“என்ன அத்தை பேசுறீங்க நீங்க, நான் அன்னைக்கு சபையில சொன்னது நிஜம். எனக்கு கதிர் கூடபிறந்த பிறப்பு மாதிரி தான் அத்தை. கதிரும் அதே தானே சொன்னான் அன்னைக்கு மறந்துட்டீங்களா

 

 

“நிஜமாவே நீ சந்தோசமா தான் இருக்கியா மீனா

 

 

“அதிலென்ன அத்தை உங்களுக்கு சந்தேகம், நான் ரொம்பவே சந்தோசமா இருக்கேன் அத்தை. அவர் என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கறார், சபையில அய்யாசாமி பேசினது பொறுக்க முடியாம தான் என்னை கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னார்

 

 

“அன்னைக்கு வீரபாண்டி போகும் போது அவனுக்கு பூசையே போட்டார், இன்னமும் உங்களுக்கு சந்தேகமா அத்தை. அவர் என் மேல எவ்வளவு ப்ரியம் இருந்தா இதெல்லாம் செய்வார். எல்லாருக்கும் உதவி செய்யற மனசு அத்தை அவருக்கு, ரொம்ப நல்லவரு. என்னையும் பூவா தான் தாங்குறார்

 

 

“உங்களுக்கு எப்பவும் சந்தேகமே வேண்டாம் அத்தை. நாங்க சந்தோசமா தான் இருக்கோம்

 

 

“அப்போ சீக்கிரமே உன்கிட்ட இருந்து நான் நல்ல சேதி எதிர்ப்பார்க்கலாம்ல என்று சொல்லி அவளை ஆராய்ந்தார்.

 

 

அத்தை என்ன கேட்க வருகிறார் என்று புரிந்தவள் முகம் மாறாமல் காத்தவாறு “ஹ்ம்ம் கண்டிப்பா சொல்றேன் அத்தை.

 

 

சுஜய்யும் எல்லோரிடமும் விடைபெற்றவன் தாத்தா பாட்டி அறைக்கு சென்று அவர்களிடமும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அங்கிருந்து எல்லோருமாக கிளம்பினர்.

 

 

அவர்களை வழியனுப்ப எல்லோருமாக மதுரை விமான நிலையத்திற்கு வந்தனர். எல்லோரிடமும் விடைபெற்று ஒருவழியாக விமாத்தில் ஏறி அமர்ந்தனர் எல்லோரும்.

 

 

டெல்லி வந்து சேர அங்கு அதிக குளிராக இருந்தது. “என்ன இது இப்படி குளிருது என்றாள் மீனா.

 

 

“இது கொஞ்சம் குறைவு தான் இன்னும் அதிகமே குளிரும். சரி வாங்க போற வழியில கடையில ஜெர்கின் வாங்கிக்கலாம் என்றுவிட்டு அங்கிருந்த வாடகை வண்டியை எடுத்துக்கொண்டு முகவரி சொல்லி அவர்களை கிளப்பிச் சென்றான்.

 

 

போகும் வழியில் சொன்னது போல் ஒரு கடையில் நிறுத்தி எல்லோருக்கும் ஜெர்க்கினை வாங்கி கொடுத்தவன் அவர்களை அதை போட்டுக் கொள்ளுமாறு சொன்னவன், அவனும் ஒன்றை அணிந்துக் கொண்டான்.

 

 

செல்லும் வழியிலேயே ராமு அண்ணாவுக்கு போன் செய்து அவர்கள் வந்து கொண்டிருக்கும் விபரம் உரைத்துவிட்டு மேலும் யாருடனோ பேசிவிட்டு போனை வைத்தான்.

 

 

வீட்டிற்கு வந்து இறங்கியதும் லட்சுமி ஆலம் கரைத்து வந்து இருவருக்கும் சுற்றிப் போட சுஜய் “அக்கா இது என்னோட தங்கச்சி பசும்பொன் புதுசா கல்யாணம் ஆகியிருக்கு இவங்களுக்கும் சுத்துங்க

 

 

“அண்ணே இந்த வீட்டில வாழ போற பொண்ணுக்கு தான் சுத்தி போடுவாங்க, எனக்கு எதுக்குண்ணே

 

 

“நீ இந்த வீட்டுக்கு இப்போ தானே முதல் தடவையா வர்றே, அதுவும் புருஷனோட அதான்,நீங்க சுத்துங்கக்கா என்றாள்

 

 

“ஏன் மாமா எனக்கு எல்லாம் சுத்த சொல்ல மாட்டீங்களா. நானும் இப்போ தானே இங்க வர்றேன்– தேனு

 

 

“தேனு, பசும்பொன் புருஷனோட வர்றா அதான் சுத்த சொன்னேன். நீயும் புருஷனோட வா உனக்கும் இது போல மரியாதை கிடைக்கும்

 

 

“மாமா இதென்ன அநியாயம், என்னமோ பண்ணுங்க போங்க என்று முகவாயை இடித்துக் கொண்டாள்

 

 

ஆலம் சுற்றி உள்ளே சென்றதும் “ஆமா தேனு நீங்க அக்கா தங்கச்சி எல்லாம் இப்போ தான் இப்படியா இல்லை எப்போதுமே இப்படியா என்று மீனாவை பார்த்தவாறே கேட்டான்.

 

 

“எதுக்கு மாமா அப்படி கேட்குறீங்க

 

 

“உங்க ரெண்டு பேருமே ரொம்பவும் வாயடிக்கிறீங்களே. நீங்க பேசி பேசி காதுல ரத்தமே வந்திடும் போல இருக்கே

 

 

“மாமா அக்கா அளவுக்கு எல்லாம் நான் இல்லை, ஏதோ எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட தான் இப்படி கொஞ்சம் வாயடிப்பேன். அவ்வளோ தான் மாமா

 

 

எல்லோருக்கும் வீட்டை சுற்றிக் காண்பித்து அவரவர் தங்கும் அறையை சுற்றிக் காண்பித்துவிட்டு அவர்கள் உடைமையை உள்ளே வைத்தனர்.“என்ன உங்களுக்கு ரொம்ப கொழுப்பா, தேனுகிட்ட எதுக்கு அப்படி கேட்குறீங்க

 

 

“எப்படி

 

 

“வாய் அதிகம்ன்னு, ரத்தம் வருதுன்னு

 

 

“உண்மை தானே சரியா தானே கேட்டேன்

 

 

“உங்க காதுல ரத்தம் வருதா

 

 

“வருதே, பார்க்கறியா

 

 

“ஒண்ணும் வேணாம்

 

 

“ரெண்டு நாளா நிம்மதியா தூங்கின போல

 

 

“ஆமா ரொம்ப சந்தோசமா தூங்கினேன்

 

 

“சரி நான் ஆபீஸ் கிளம்பறேன்

 

 

“ஓ கிளம்புங்க என்றாள் முகத்தில் அப்பட்டமான சந்தோசத்துடன்

 

 

“கிளம்புறதுக்கு முன்னாடி…….. என்றவன் அவளருகில் நெருங்கி வந்து அவளை ஒரு முறை இறுக்கி அணைத்துவிட்டு கன்னத்திலும் நெற்றியிலும் முத்தமிட்டுவிட்டு வேகமாக விலகி நின்றான்.

 

 

“நான் வர்ற வரைக்கும் என்னையே நினைச்சுட்டு இரு, என்னை எப்படி சமாளிக்கறதுன்னு யோசின்னு சொன்னேன். சரியா நான் போயிட்டு வர்றேன்

 

 

  • காற்று வீசும்

Advertisement