Advertisement

அத்தியாயம் –5

 

 

திருமண வேலைகள் வேகமாக நடக்க ஆரம்பித்தது, ஊரில் இருக்கும் அவன் மாமன்மார் இருவருக்கும் தகவல் தெரிவித்து அவர்களை உடனே வருமாறு அழைப்பு விடுத்திருந்தான். அவர்கள் அனைவருக்கும் விமானத்தில் பதிவு செய்து அதன் விவரங்களை ஈமெயிலில் தகவல் அனுப்பிவிட்டான்.

 

 

அவன் நண்பன் கௌதமுக்கும் அழைத்து விபரம் சொல்லி அவனையும் அவன் குடும்பத்தையும் திருமணத்திற்கு அழைத்தவன் அவர்களுக்கும் விமானத்தில் பதிவு செய்திருந்தான். அவன் அலுவலத்தை பார்த்துக் கொள்ளும் சுர்ஜித்தை அழைத்து விபரம் உரைத்தவன் அவன் இல்லாத நாட்களில் அலுவலகத்தை பார்த்துக் கொள்ளுமாறு கூறி மேலும் சில வேலைகளை கொடுத்துவிட்டு போனை வைத்தான்.

 

 

சுஜய் புடவை நகை என்று மீனாவுக்கும், பசும்பொன்னுக்கும் சேர்த்தே வாங்கினான். “அண்ணே பசும்பொன்னுக்கு எதுக்குண்ணே வாங்குறீங்க என்று கதிர் மறுக்க “பசும்பொன் எனக்கு தங்கை முறை இல்லையா, நான் அவளுக்கு செய்யக் கூடாதா என்று சுஜய் வருந்த கதிர் வாயை மூடிக் கொண்டான்.

 

 

தாலி வாங்கும் போது காமாட்சி “தம்பி உங்க பக்கம் தாலி எப்படின்னு எங்களுக்கு தெரியாது என்று சொல்ல அவனோ “நீங்க உங்க பழக்கம் எப்படியோ அப்படியே வாங்குங்கம்மா. இல்லன்னா நீங்க எப்படி போட்டு இருக்கீங்களோ அப்படியே வாங்கிடுங்க என்றுவிட்டான் அவன்.

அவரும் அவன் சொன்னபடியே வாங்கிவிட்டார், மீனாவுக்கு தாலி செயின் வாங்க தேனி தங்கமயில் ஜுவல்லரிக்கு சென்றனர். சற்று கனமாகவே எடுக்க சொல்லி அவன் சொல்லிவிட அவன் விருப்பப்படியே அவளுக்கான அனைத்தும் வாங்கினர்.

 

 

அன்று ஊரில் இருந்து அவன் மாமா இருவரும் வருவதாக இருக்க அவன் காரை எடுத்துக் கொண்டு மதுரை விமான நிலையத்திற்கு சென்றான். அவன் மாமா வீட்டினரை அழைத்துக் கொண்டு வந்தவன் நேரே அவன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றான்.

 

 

அவர்களுக்கும் அங்கேயே அறைகள் பதிவு செய்திருக்க எல்லோரும் அங்கேயே தங்கினர். மறுநாள் வயல்பட்டிக்கு வருவதாக கதிரேசனுக்கு தகவல் சொன்னான் சுஜய். “என்ன சுஜய் நீ முடிவே பண்ணிட்டியா, அந்த பொண்ணை தான் கல்யாணம் பண்ணிக்க போறியா என்றார் அவனின் பெரிய மாமா.

 

 

“ஏன் மாமா அப்படி கேட்குறீங்க, நான் கல்யாணம் பண்ணிக்கறது உங்களுக்கு பிடிக்கலையா. இல்லை அந்த பொண்ணை பண்ணிக்கறது பிடிக்கலையா

 

 

“சுஜய் அண்ணா உன் கல்யாணம் பிடிக்கலைன்னோ நீ அந்த பொண்ணை கல்யாணம் பண்ணறதுக்கோ எதுவும் சொல்லலை. உன் படிப்பேன்ன, உன் அந்தஸ்து என்ன, நீ உனக்கு சமமான நல்ல பொண்ணா நீ பார்த்திருக்கலாமேன்னு தான் சொல்ல வர்றாங்க

 

 

“என்ன மாமா பேசறீங்க நீங்க, படிப்பு அந்தஸ்து இது எதுவும் என் கூட வரப்போறதில்லை. அன்னைக்கு அப்பா என்ன அந்தஸ்த்தோட இருந்தார், எங்கம்மாவுக்கு அவரை பிடிக்கலையா, எனக்கும் அப்படி தான் மாமா. படிப்பும் அந்தஸ்தும் முக்கியம் இல்லை

 

 

“நல்ல குணம் போதும், அவங்க எல்லாரும் நல்ல மனுசங்க. நாளைக்கு அங்க போனா உங்களுக்கே புரியும்

 

 

“நீ குணத்தில உங்கம்மா மாதிரியே இருக்க சுஜய், அன்னைக்கு இது போலவே உங்கம்மாகிட்ட கேட்டோம். அதுக்கு அவ என்ன பதில் சொன்னாளோ அதே மாதிரி தான் நீயும் சொல்ற. உன்னிஷ்டம் நாங்க எதுவும் தடுக்க மாட்டோம்– பிரஷாந்த் வர்மா.

 

 

“மாமா உங்களுக்கு வேற எதுவும் வருத்தம் இல்லையே என்று சுஜய் கூற “நிச்சயம் இல்லை சுஜய், கல்யாணம் உன்னோட விருப்பம். நீ தான் முதல்லேயே சொல்லிட்டியே எங்க பொண்ணுங்களை உன்னால உன் உடன்பிறந்தவங்களா தான் நினைக்க முடியுதுன்னு

 

 

“அதுனால எந்த பிரச்சனையும் இல்லை, நாளைக்கே நாம பொண்ணு வீட்டுக்கு போவோம். உனக்கு பிடிச்ச அந்த பொண்ணை நாங்களும் பார்க்க ஆவலா இருக்கோம் என்றார் அவனின் இளைய மாமா ரஞ்சித் வர்மா.

 

 

சுஜய் அவன் மாமா வீட்டினரிடம் அவனுக்கு மீனாவை மிகவும் பிடித்ததால் தான் திருமணம் நடக்கப் போகிறது என்று கூறியிருந்தான். இங்கு நடந்த வேறு பிரச்சனைகளை அவன் அவர்களிடம் பகிர்ந்திருக்கவில்லை.

 

 

மறுநாள் சொன்னது போல் எல்லோரும் சென்று அங்கு பரிசம் போட சென்றிருக்க ஊரே அவர்கள் வீட்டை வந்து வேடிக்கை பார்த்தது. மைதா மாவு நிறத்தில் எல்லோரும் நல்ல நிறமாக இருக்க, அவன் மாமா பெண்கள் காக்ரா சோலி, ஜீன்ஸ் சட்டை, என்று அணிந்து வந்திருக்க அவர்களை வேடிக்கை பார்க்கவே மீனாவின் வீடு முன் கூட்டம் சேர்ந்தது.

 

 

மீனா அவள் வீட்டு சன்னலின் வழியே வந்தவர்களை பார்த்துக் கொண்டிருக்க சுஜய்யின் இருபுறமும் அவன் மாமன் மகள்கள் அமர்ந்திருக்க இவங்கல்லாம் யாரு என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே கதிரேசன் உள்ளே வந்தான்.

 

 

“என்ன மீனா சந்தோசமா என்றான் அவளை பார்த்து, “என்னை கேட்டா எல்லாம் நடக்குது, இதுக்கு மட்டும் எதுக்கு என்னை சந்தோசமான்னு கேட்குற கதிரேசா. ஆமா அங்க அவர் பக்கத்துல உட்கார்ந்திருக்கறது யாரு என்றாள் அவள்.

 

 

“ஓ அதுவா, அவங்க எல்லாரும் அண்ணாவோட மாமா பொண்ணுங்க. அழகா இருக்காங்க தானே– கதிரேசன்.

 

 

“அழகா இருந்தா அவர் அவங்களையே கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே இங்க எதுக்கு வந்தாராம்– மீனா.

 

 

“அது தான் எனக்கும் புரியலை, அவர் ஒரு கன்னத்துல வாங்கினா மறு கன்னத்தையும் காட்டுற அளவுக்கு ஏசுநாதர் பரம்பரையா இருக்கார், அதான் உன்கிட்ட இன்னொரு கன்னத்தையும் காட்டுறதுக்கு தயார் ஆகிட்டார் போல– கதிரேசன்.

 

 

“என்ன கதிரேசா கொழுப்பா, குத்தி காட்டுறியா. அதான் தெரியாம பண்ணிட்டேன்னு மன்னிப்பு கேட்டேன்ல, ஏதோவொரு வேகத்துல செஞ்சிட்டேன். தப்பு தான் அதுக்காக பழி வாங்க தான் என்னை கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்றாரா– மீனா

 

 

“அதெல்லாம் எனக்கு தெரியாதுப்பா, அவர் கன்னத்தை காட்டுவாரோ, நீ அடிப்பியோ என்ன பண்ணுவியோ. நீயாச்சு, அவராச்சு என்று விட்டு அவன் அங்கிருந்து நகர்ந்தான்.

 

 

‘அடப்பாவி எதுவுமே சொல்லாம போறானே என்று அவனை வைதாள். பலபேர் கூடிய சபையில் அவன் மட்டுமே கம்பீரமாக எழுந்து நின்று நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று அவன் சொன்ன விதம் அவளுக்கு பிடித்திருந்தது.

 

 

கோழைகளாய் தாயின் முந்தானையின் பின்னே ஒளிந்திருந்த ஆண் மகன்களே நிறைந்திருந்த அந்த இடத்தில், தன் அவமானத்தை போக்கவென அவன் எடுத்த முடிவில் அவளுக்கு அவன் மீதான மதிப்பு பன்மடங்காகியிருந்தது.

 

 

நிச்சயம் அவள் அடித்ததற்காய் அவன் பழிவாங்க நினைத்திருக்க முடியாதென அவள் உள்மனம் கூறியது. கைகளில் அணிந்திருந்த கல்யாண வளவி இதுவரை கொடுக்காத ஒரு புது உணர்வை கொடுக்க இரு கைகளையும் தூக்கி வைத்துக் கொண்டு அதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

 

பரிசம் போட்டு அவளுக்கு புடவை கொடுக்க அதை மாற்றிக் கொண்டு வந்து அனைவரையும் அவள் பணிந்து எழுந்தாள். பரிசம் போட்டதும் திருமணம் உறுதி செய்யப்பட மீனாவிற்கு கல்யாண வளவி அணிவிக்கப்பட்டது. அவனின் மாமன் மகள்கள் இவளிடம் வந்து ஏதோ பேச முயல பாவம் அவர்கள் பேசுவது அவளுக்கு தான் விளங்கவில்லை.

 

 

கிளம்பும்முன் சுஜய் அவர்களிடம் “நாளைக்கு என்னோட மாமா பொண்ணு ரக்ஷிதாவும், ரஞ்சனியும் வருவாங்க. மீனுவுக்கும், பசும்பொன்னுக்கும் கையில மருதாணி போட்டுவிடணும்ன்னு ஆசைப்படுறாங்க. அவங்க பக்கம் மருதாணி போடுறது ஒரு விழாவாவே கொண்டாடுவாங்க

 

 

“நீங்க என்ன சொல்றீங்க என்று அவர்களிடம் அனுமதி வேண்டி நின்றான் அவன். அவனின் அணுகுமுறை அவர்களுக்கு பிடித்துவிட மீனாவின் தந்தை மோகன் சட்டென்று சரியென்று தலையை ஆட்டினார்.

 

 

“அப்பா நீங்க… என்று அவன் ராஜேந்திரனை பார்க்க அவரும் “வரச்சொல்லுங்க தம்பி எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றார் அவரும். “ஏன் மாமா அவங்க எனக்கு எல்லாம் போட மாட்டாங்களா என்றாள் தேனு.

 

 

அவன் சிரித்துவிட்டு “இதென்ன தேனு இப்படி சொல்லிட்ட, அவங்க இங்க இருக்க எல்லாருக்குமே போடுவாங்க போதுமா. உன் கல்யாணத்துக்கும் கண்டிப்பா இதெல்லாம் அவங்க செய்வாங்க இப்போ உனக்கு திருப்தி தானே என்றான்.

 

 

“அய்யோ மாமா நான் சும்மா தான் கேட்டேன். நீங்க வேற எனக்கு போய் விளக்கம் எல்லாம் சொல்லிக்கிட்டு– தேனு

 

 

“மாமா உங்க ஊருல பொம்பளைங்களுக்கு தான் மருதாணி எல்லாம் போடுவாங்களா. எனக்கு எல்லாம் வைச்சு விட மாட்டாங்களா என்றான் ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவனான தேனுவின் தம்பி அஜய்.

 

 

“கண்டிப்பா அஜய் உனக்கும் போட்டுவிடுவாங்க. டெல்லில ஆண்களும் திருமணத்துக்காக மருதாணி எல்லாம் வைப்பாங்க– சுஜய்

 

 

“ஹைய்யா ஜாலி என்று குதித்தான் அஜய். “டேய் அறிவுகெட்டவனே நம்ம ஊருல ஆம்பளைங்க எல்லாம் இதெல்லாம் வைக்க மாட்டாங்கடா என்றான் கதிரேசன்.

 

 

“அடப்போங்க மாமா நான் வைச்சுக்குவேன் என்றான் அவன்.

 

 

எல்லோரிடமும் தலையசைத்து விடைபெற்றவன் கண்கள் ஏனோ உள்ளே சென்று மீண்டது. இந்த மாதிரி ஒரு உணர்வு தனக்கு எப்போது வந்தது என்று அவன் சுய ஆராய்ச்சியில் ஈடுபட்டாலும் அவன் கண்கள் உள்ளே துழாவுவதைஅவனால் நிறுத்த முடியவில்லை, அதை கதிரேசன் கண்டுவிட்டான்.

 

 

வேகமாக உள்ளே சென்றவன் மீனாவிடம் ஏதோ கேட்பது போல் அவளை வெளியே வரவைக்க அவளை பார்த்த பின்பே சுஜய் அங்கிருந்து கிளம்பினான். “எதுக்கு கதிரேசா என்னை உள்ள இருந்து வெளிய வரவைச்ச என்றாள்.

“ஒண்ணும்மில்லை சும்மா தான் கூப்பிட்டேன் என்றுவிட்டு அவன் அங்கிருந்து நகர்ந்துவிட்டான். ‘இவன் என்ன லூசா வந்தான், கூப்பிட்டான், அப்புறம் போயிட்டான் என்று யோசித்தவள் அப்போது தான் காரில் ஏறிக் கொண்டிருந்த சுஜய்யை கவனித்தாள்.

 

 

அவன் பார்வை வெளியில் நின்றிருந்தவர்களை விட்டு அவள் மேல் இருப்பதை கவனித்தாள். அவள் பார்வையை கண்டுகொண்டவன் சட்டென்று அவன் பாவனையை மாற்றிக் கொண்டான். ‘அவன் பார்வையில் இருந்தது வெறுப்பா, கோபமாஏன் அப்படி பார்த்தான் என்று யோசிக்க ஆரம்பித்தாள் மீனா.

 

 

மறுநாள் அவன் சொன்னது போல் அவன் மாமன் மகள்கள் வந்து அவர்களுக்கு மருதாணியிட்டு செல்ல ஊரே அவள் வீட்டு முன் நின்று வேடிக்கை பார்த்தது.அப்பெண்கள் லாவகமாகவும் வேகமாகவும் அழகாகவும் மருதாணியிடுவதை வியப்புற பார்த்துக் கொண்டிருந்தனர் அனைவரும்.

 

 

விடிந்தால் திருமணம் என்றிருக்க மீனாவுக்குள் பதட்டமாக இருந்தது. அய்யாசாமி வேறு ஊரெல்லாம் இவளுக்கு திருமணம் நடந்தால் தானே என்ற ரீதியாக பேசிக் கொண்டிருப்பதாக கேள்வி. ஏனோ அவளுக்குள் பதட்டம் அதிகமாகியது.

 

 

இது போன்ற மூடத்தனத்தை அவள் நம்பவில்லை என்றாலும் ஏனோ சுஜய்க்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று மனதிற்குள் மெல்லிய பயமும் கலக்கமும் எழுந்தது.‘கடவுளே தெரிந்தோ தெரியாமலோ எனக்கு நிச்சயம் செய்தவர்கள் இப்போது உயிருடன் இல்லை, அவருக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று பிரார்த்தனை செய்தாள்.

 

 

மீனா ஏதோ கவலையாக இருப்பதாக தோன்ற தேனு அவளை மாற்றும் பொருட்டு அவளுடன் பேச்சு கொடுத்தாள். “என்னக்கா சொட்டை மண்…. “என்னக்கா முறைக்கிற என்றாள்.

 

 

“எதுக்குடி அப்படி சொல்ற– மீனா

 

 

“என்னக்கா நீ மட்டும் மாமாவை அப்படி சொல்லலை, நான் சொன்னா தப்பா– தேனு

 

 

“இந்த விஷயம் உனக்கு எப்படி தெரியும், அன்னைக்கு அங்க கதிரை தவிர யாருமே இல்லையே. கதிரா சொன்னான்– மீனா

 

“கதிர் மாமா சொன்னது தான் ஆனா என்கிட்ட இல்லை, எனக்கு பசும்பொன் சொன்னா– தேனு

 

 

“எல்லாருமா சேர்ந்து என் மானத்தை ஏன் இப்படி வாங்குறீங்க, ஊருக்கே கொட்டு அடிச்சு சொல்லிட்டீங்களா– மீனா

 

 

“அது எனக்கு தெரியாது, ஆனா இப்போ சொல்லுக்கா நான் ஏன் அப்படி மாமாவை சொல்லக் கூடாது– தேனு

 

 

“நான் சொல்லுவேன் நீங்க யாரும் சொல்லக் கூடாது, பேசாம இங்க இருந்து போடி. எனக்கு தூக்கம் வருது என்று கண்களை தூங்குவது போல் மூடிக் கொண்டு பாவனை செய்தாள்.

 

 

திருமண நாளும் விடிந்தது, நடக்கும் ஒவ்வொரு சடங்கின் போதும் மனதிற்குள் திக் திக்கென்றே அடித்துக் கொண்டிருந்தது அவளுக்கு. மணமகன் கோலத்தில் பட்டு வேட்டி சட்டையுடன் சுஜய்யை பார்த்த பின்பு ஏனோ அவள் இதயம் தாறுமாறாக துடித்தது.

 

 

முதல் முகூர்த்ததில் பசும்பொன் கழுத்தில் கார்த்திகேயன் தாலி கட்டி திருமணம் முடிய அடுத்த முகூர்த்ததில் சுஜய் அவள் கழுத்தில் தாலி கட்டினான். அவன் தாலி கட்டிய அந்த நிமிடம் தான் அவளால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது. அவருக்கு எதுவும் ஆகவில்லை, எப்போதும் எதுவும் ஆகாது என்று ஓவென்று கத்த வேண்டும் போல் இருந்தது அவளுக்கு.

 

 

அவள் மனம் என்ன உணருகிறது என்றே புரியாத ஒரு நிலையில் இருந்தாள். தாலி கட்டி முடிந்ததும் எல்லோரும் அவர்களுக்கு விபூதி பூசவும்இருவரும் பெரியவர்கள் காலில் விழுந்து எழவும் என்று எதையும் யோசிக்கவே இடம் கொடாது ஓய்வில்லாமல் ஓடியது பொழுது.

 

 

சுஜய் அவளிடம் எதுவும் பேசுவான் என்று எதிர்பார்த்திருந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவன் எதுவும் அவளிடம் பேசவேயில்லை. என்னவாயிற்று என் மேல் கோபமிருந்தால் என்னை திட்டியிருந்தாலும் பரவாயில்லை, இப்படி எதுவுமே பேசாமல் இருந்தால் என்னவென்று நினைப்பது என்றே அவளுக்கு புரியவில்லை.

 

 

இவன் பேசினால் அல்லது பேசாவிட்டால் தான் என்ன, எப்படியோ போகட்டும் என்று தோளை குலுக்கிக் கொண்டாள். வீட்டிற்கு வந்ததும் ஆலம் கரைத்து இருவருக்கும் சுற்றி போட வீட்டில் அவளை பெண்கள் கூட்டம் புடை சூழ்ந்து விட சுஜய் தனிமை பட்டான். சுஜய்யின் மாமா குடும்பம் அன்றே ஊருக்கு கிளம்புவதால் அவர்கள் கல்யாண மண்டபத்திலேயே விடைபெற்று கிளம்பிவிட்டனர்.

 

சுஜய்யின் நண்பன் கௌதம் அவர்களை வழியனுப்ப உடன் சென்றதால் அவனுடன் யாருமேயில்லை. தனியாக அவன் கூடத்தில் தனித்து அமர்ந்திருக்க கதிர் வந்து அவனிடம் பேச்சு கொடுத்தான்.

 

 

தேனுவின் தம்பி அஜய்யும் வந்து அவனுடன் வளவளத்துக் கொண்டிருந்தான். மாலை மங்கி இருள் கவியும் வேளை கௌதம் வந்து சேர்ந்தான். கௌதம் அவ்வப்போது சுஜய்யின் அலுவலகத்திற்கு சென்று மேற்பார்வை பார்த்துக் கொள்வதால் இருவரும் மொட்டை மாடியில் அலுவலக விஷயம் பேசிக் கொண்டிருந்தனர்.

 

 

“சரி சுஜய் ஆபீஸ் விஷயம் எல்லாம் அப்புறம் பேசிக்கலாம், எனக்கு உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும். நீ போன்ல இந்த கல்யாணத்தை பத்தி நெறைய சொன்னே, ஆனாலும் எனக்கு சின்னதா ஒரு விஷயம் உறுத்திக்கிட்டே இருக்கு கேட்கலாமா என்றான்

 

 

“உன் கேள்வி என்னவா இருக்கும்னு எனக்கு தெரியும் கௌதம், நான் அதுக்கான பதிலை உனக்கு அப்புறம் சொல்றேன்– சுஜய்

 

 

பிறகு இருவரும் வேறு விஷயங்கள் பேசிக் கொண்டிருக்க கதிர் படியேறி மேலே வந்தான். “அண்ணே உங்களை கூப்பிடுறாங்க, நேரமாச்சு அதான் என்று இழுத்தான்.

 

 

“நீ போ கதிர் நான் இதோ வந்திடுறேன்– சுஜய்

 

 

“அப்புறம் சுஜய் வாழ்த்துக்கள் இன்னையில இருந்து நீ குடும்பஸ்தன், உனக்குன்னு ஒரு உறவு வந்திருக்கு. அப்பா போனதுக்கு அப்புறம் எனக்குன்னு யாருமில்லைன்னு என் கூட யாருமேயில்லைன்னு நீ வருத்தப்பட்டல, உனக்காக காலமெல்லாம் இருக்கப் போற உறவு கிடைச்சிருக்கு. பத்திரமா பார்த்துக்கோடா– கௌதம்

 

 

சுஜய்யும் அதே எண்ணத்திலிருந்தான் என்ன தான் அவனுக்கு சொந்தமாக மாமா குடும்பத்தினர் இருந்த போதும், அவன் தந்தை மறைவிற்கு பிறகு அவன் தனிமைப்படுத்தப்பட்டதாகவே உணர்ந்தான். மீனாவை கைபிடித்த அந்த கனம் இன்று முதல் இவள் என்னுறவு, எனக்கான சொந்தம், என்னவள் என்ற உணர்வே அவனுக்கு சந்தோசத்தை கொடுத்தது.

அவளிடம் பேச வேண்டும் என்று ஆவல் உந்தினாலும் எங்கே அவன் ஏதாவது கேட்டு அவள் அதற்கு இடக்கு மடக்காக பதில் சொல்லி விடுவாளோ என்று எண்ணியே அமைதி காத்தான்.

 

 

இருந்தும் அவள் அடித்தது கண் முன் வர அவன் முகம் மாறியது. அவள் செய்ததுக்கு அவளுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்று அவன் மனம் எண்ணியது.

 

 

கதிர் வந்து அழைத்ததும் இதற்கு மேல் தாமதிக்க முடியாது, எப்படியும் அவளை நேருக்கு நேர் சந்தித்து தான் தீரவேண்டும், என்ன கேட்டு வைப்பாளோ என்று எண்ணியபடியே படியிறங்கி சென்றான்.

 

 

இரவு சாப்பாடு முடிந்து அலங்கரிக்கப்பட்ட அறையை அவனுக்கு கதிர் காட்டியிருக்க சுஜய் அங்கு சென்று கட்டிலில் அமர்ந்தான். அவள் உள்ளே வரும் முன் அவள் அன்னை மாலதி மகளை பார்த்து ஆனந்த கண்ணீர் வடிக்க ஏனோ அவளுக்கும் அழுகை பீறிட்டு எழ அடக்க முடியாமல் அழுதாள்.

 

 

“என்னா மாலதி நீ, உனக்கு எந்த நேரத்தில் அழணும்ன்னு விவஸ்தையே இல்லாம போச்சு பாரு மீனாவும் கண்ணை கசக்கிட்டு நிக்குது. அங்க ரூம்புல மாப்பிள்ளை வேற தனியா உட்கார்ந்திட்டு இருக்கார். பொண்ணை காலாகாலத்துல உள்ள அனுப்ப வேணாமா என்றார் மீனாட்சி பாட்டி.

 

 

ஒரு வழியாக அவளை சமாதானம் செய்து அறைக்குள் அனுப்பி வைத்தனர். மெதுவாக அறைக்குள் நுழைந்தவள் அறையை தாழிட்டு வந்தாள். கண்கள் அழுது வீங்கியிருப்பதை சுஜய் கண்டு கொண்டான்

 

 

“என்ன அழுதியா, எதுக்கு– சுஜய்

 

 

“ஒண்ணும்மில்லை– மீனா

 

 

“எப்போமே நீ தானே எல்லாரையும் அழ வைப்பே, இதென்ன புதுசா– சுஜய்

 

 

மீனா அவனை பார்த்து முறைத்தாள், “என்ன மறந்துட்டீங்களா என்றாள் பழைய துடுக்குடன்.

 

 

“ஓ என்ன அன்னைக்கு மாதிரி நான் இப்பவும் பேசாமலே இருப்பேன்னு நினைச்சியா,நீ ஒரு கன்னத்தில தானே அடிச்சே, அதுக்கு மறு கன்னத்தையும் காட்டிட்டு நிக்க நான் ஒண்ணும் ஏசுநாதர் இல்லை

“நீ செய்த தப்புக்கு நீ கண்டிப்பா வருத்தப்படுவ, அதுக்கு வட்டியும் முதலும் கொடுக்காம நான் விட மாட்டேன் என்றான் ஒரு மாதிரி குரலில்.

 

 

“ஓ அப்போ நீங்க என்னை பழி வாங்க தான் கட்டிகிட்டீங்களா– மீனா

 

 

“ஆமாம்ன்னு வைச்சுக்கோயேன், என்ன பண்ண முடியும் உன்னால. உன் குடும்பத்தில உள்ள எல்லாரும் இப்போ என்னை நம்ப ஆரம்பிச்சுட்டாங்க, உன்னால என்ன பண்ண முடியும்

 

 

“யார் வேணா உங்களை நம்பட்டும், என்னால எதையும் சமாளிக்க முடியும். உங்களை சமாளிக்கறது ஒண்ணும் எனக்கு பெரிய விஷயமில்லை என்றாள் அவளும் முறுக்கிக்கொண்டு.

 

 

“அப்படியா பார்ப்போம் வாழ்த்துக்கள் உன் மனஉறுதிக்கு, நீ ஜெயிக்க போறியா, இல்லை தோக்க போறியான்னு பார்ப்போம் என்றான் ஏளனமாக.

 

 

“என்னை சமாளிக்கறது உனக்கு பெரிய விஷயமில்லையா. நீ தினமும் என்னை நினைக்க தான் போறே, அதாவது நீ என்னை நினைக்கற அளவுக்கு நான் தினமும் ஏதாவது செய்து கொண்டே இருப்பேன்

 

 

“அன்னைக்கு நான் உனக்கு அந்நியன் இல்ல நான் தொட்டதுக்கு தானே அப்போ அடிச்சே, இன்னைக்கு நான் உன்னவன் இப்போ உன்னை தொடற முழு உரிமையும் எனக்கு இருக்கு. இப்போ என்ன செய்ய போறே என்றவன் அவளருகே வந்தான்.

 

 

“எதுக்கு இப்படி என் பக்கத்துல வர்றீங்க என்று பின்னாலேயே சென்றாள்

 

 

“இன்னைக்கு உன்னோட தூக்கத்தை கெடுக்க தான் என்றவன் அவள் எதிர்பார்க்காத தருணம் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

 

 

“இன்னைக்கு இது போதும் மிச்சத்தை நாளைக்கு பார்த்துக்கலாம்

 

 

அவன் முத்தமிட்டதில் அதிர்ந்திருந்தாலும் அவன் பேச்சில் கொண்டை சேவலாய் சிலிர்த்தவள் “பார்ப்போம் என்று தலையை சிலுப்பினாள்.

 

 

“எனக்கு தூக்கம் வருது, நான் தூங்க போறேன்– சுஜய்

 

 

“எனக்கும் தூக்கம் வருது, நானும் தூங்க தான் போறேன்– மீனா

 

 

“உன்னால தான் இனி நிம்மதியா தூங்க முடியாதே– சுஜய்

 

 

“அப்படி ஒண்ணு நடக்க வாய்ப்பே கிடையாது, எனக்கு நல்லா தூக்கம் வரும். குறட்டை விட்டே தூங்குவேன். இனி கெடப்போறது என் தூக்கம் இல்லை, உங்க தூக்கம் தான்– மீனா

 

 

கதிரேசனுக்கு சென்னையில் ஏதோ வேலை இருப்பதாக கூறியவன் அதை முடித்துவிட்டு அங்கிருந்தவாறே டெல்லி சென்று விடுவதாக கூறி ஊருக்கு கிளம்பி விட்டான்.

 

 

மறுநாள் காலை சுஜய் கண் விழித்து பார்க்க அங்கு மீனா இருப்பதிற்கான அறிகுறி இல்லாமல் போக ‘எழுந்தாளே நம்மையும் எழுப்பிட்டு போயிருக்கலாம்ல என்று நினைத்து கொண்டான்.

 

 

‘இவளை இப்படியே விடக்கூடாது என்று நினைத்தவன் “மீனு… மீனு… இங்க கொஞ்சம் வாயேன் என்றழைக்க ‘என்னது மீனுவா இதென்ன புதுசா பாசமா கூப்பிடுறார், என்ன செய்ய காத்திருக்கார்ன்னு தெரியலை என்று நினைத்தவள் வேண்டுமென்றே காது கேட்காதவள் போன்று நின்றிருந்தாள்.

 

 

“மீனா மாப்பிள்ளை கூப்பிடுறாங்கல போ… போய் முதல்ல என்னனு கேளு. அவரை கவனிக்கறதை விட்டு இங்க வந்து எங்க வாயை பார்த்திக்கிட்டு நிக்குற, உனக்கு பொறுப்பே இல்லை. கல்யாணம் முடிச்சாச்சு என்னைக்கு தான் உனக்கு பொறுப்பு வரப் போகுதோ என்று மாலதி ஆரம்பித்தார்.

 

 

“அம்மா போதும்மா நீ வேற ஆரம்பிக்காதே. நான் உள்ளே போறேன் என்று அங்கிருந்து நகர்ந்தாள் அவள்.

 

 

“என்ன எதுக்கு கூப்பிட்டீங்க, என்னமோ மீனு கீனுன்னு பாசமா கூப்பிட்ட மாதிரி இருந்தது. என்ன விஷயம் என்று சிடுசிடுத்தாள்.

 

 

“மாமா குளிக்கணும்

 

 

“என்னது மாமாவா

 

 

“ஆமா மாமா தான் நான் உனக்கு புருஷன் இல்லையா நீ என்னை அப்படி தானே கூப்பிடனும். நம்ம பசும்பொன் அவ புருஷனை அப்படி தானே கூப்பிடுறா, அதுனால நீயும் அதையே பழகிக்கோ

 

 

“இப்போ எதுக்கு கூப்பிட்டேன்னா நான் குளிக்கணும்

 

 

“அதுக்கு…

 

 

“அதுக்குன்னா… நீ தான் குளிப்பாட்டி விடணும்

 

 

“என்னது…

 

 

“நீ என்ன மீனா ஒரு கேள்விகுறியா, கேள்வி கேட்டுட்டே இருக்கே. அதான் நான் சொல்லிட்டேன்ல குளிப்பாட்டி விடணும்னு

 

 

“இப்போ என்ன சொல்லிட்டேன்னு உன் கண்ணை விரிக்கிற, புருஷனுக்கு தேவையானதை கவனிக்கணும்னு இப்போ தானே உங்கம்மா சொல்லிக் கொடுத்தாங்க, அதுக்குள்ளே மறந்துட்டியா

 

 

“சீக்கிரம் நேரமாச்சு, என்னை குளிப்பாட்டி விடு

 

 

அவன் பேசியதில் தன்னிலைக்கு வந்தவள் “ஓ குளிக்க வைக்கலாமே, எங்க வீட்டு எருமை மாட்டை கூட தினமும் நான் தான் குளிக்க வைப்பேன். இனி உங்களையும் அப்படியே நினைச்சுக்கறேன் என்று பதிலுக்கு சொல்லிவிட்டு அவன் என்ன சொல்லுவானோ என்று பயந்தாள்.

 

 

அவன் சிரித்து விட்டு “நல்லா தான் பதிலடி கொடுக்கிறே, எருமை மாடு என்னென்ன பண்ணும்ன்னு உனக்கு ஒரு நாள் புரிய வைக்கிறேன். இப்போ எனக்கு துண்டு மட்டும் எடுத்து கொடு நான் குளிச்சுட்டு வர்றேன்

 

 

‘அப்பாடா தப்பிச்சேன். ச்சே என்ன இருந்தாலும் புருஷனை எருமைமாடுன்னு சொல்லலாமா தப்பில்லையா. எனக்கு ரொம்ப தான் வாய் நீண்டு விட்டது, ஆனாலும் இவரும் என்னை சீண்டுவது சரியா. நாம் செய்தது தவறில்லை என்ற எண்ணம் வந்தது.

 

 

மணமக்களை வீரபாண்டி கோவிலுக்கு சென்று வருமாறு கூற சுஜய், மீனா மற்றும் பசும்பொன் கார்த்திகேயனுடன் கோவிலுக்கு கிளம்பினர். காரை விட்டிறங்கியதும் முதலில் இறங்கி தனியே விறு விறுவென அவள் நடந்தவள், சற்று பின்தங்கி வந்து சுஜய்யின் கைகளை பிடித்தாள்.

 

 

‘என்னடா இது திடுதிப்புன்னு வந்து என் கையை பிடிக்கிறா என்று அவன் நினைத்துக் கொண்டிருக்க அவளோ “என்ன மாமா பார்க்கறீங்க, நான் தானே உங்க கையை பிடிச்சேன்

 

 

“யாரோ தெரியாதவங்க பிடிச்ச மாதிரி பார்க்கறீங்க. என்ன மாமா ஒண்ணும் புரியலையா மாமா, நேத்து நீங்க தானே சொன்னீங்க. இனி நான் உங்களை மாமான்னு தான் கூப்பிடணும்ன்னு அதான் உங்களை அப்படி கூப்பிடுறேன்.

 

 

“நாம வெளிய போகும் போது உங்க கையை பிடிச்சுக்கிட்டு தான் வரணும்ன்னு சொன்னீங்களே மாமா மறந்துட்டீங்களா என்று அவனை பார்த்து வெட்கத்துடன் சிரிக்க சுஜய் ஒன்றும் புரியாமல் அவளை பார்த்தான்.

 

 

 

  • காற்று வீசும்

 

 

 

Advertisement