Advertisement

அத்தியாயம் –21

 

 

பாட்டி அப்படி கூறியதும் அவன் அருகில் வந்து நின்றதும் எல்லாமே கனவு போலவே தோன்றியது அவனுக்கு. அது கனவல்ல என்பது அவர் கண்ணீர் அவன் கை மேல் விழுந்து நிருபிக்க அவரின் இருகைகளையும் தன் கையால் பற்றியவன் அப்படியே அவன் கண்களில் ஒற்றிக் கொண்டான்.

 

 

அவன் கண்கள் கலங்கி நீர் துளிகள் பாட்டியின் கைகளை நனைக்க “நீ எதுக்குய்யா கலங்குற. உன்னை இத்தனை வருஷமா பார்க்காத விட்ட இந்த பாவி தான் எல்லாத்துக்கும் கலங்கணும்

 

 

“பெத்தவளும் இல்லாம சொந்தம்னு யாரும் இல்லாம நீ எப்படி வளர்ந்திருப்பன்னு நினைக்கும் போதே என் அடிவயிறு கலங்குதுய்யாஎன்று அவர் பெருங்குரலெடுத்து அழ அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்துக் கொண்டிருந்த மீனாவின் பெற்றோரும் தேனுவின் பெற்றோரும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர்.

 

 

“என்னம்மா என்னாச்சு எதுக்கு அழறீங்க, என்னண்ணே என்னாச்சு எல்லாரும் நின்னு வேடிக்கை பார்த்திட்டு இருக்கீங்க. யாராச்சும் சொல்லுங்களேன் இங்க என்ன நடக்குது என்றார் திலகவதி பதட்டமாக.

 

 

“அதே தான் நானும் கேட்கிறேன். என்ன ஆத்தா புதுசு புதுசாஎன்னனென்னவோ சொல்றீங்க. நேத்து வரைக்கும் இந்த உறவு எல்லாம் எங்க போச்சு என்றார் ராஜேந்திரன் காட்டமாக.

 

 

“இந்த உறவு ஒரேடியா விட்டு போக நீ தான்டா காரணம் என்றவரின் குரலில் ஆவேசம் இருந்தது.

 

 

ராஜேந்திரன் விடாமல் “என்ன ஆத்தா என்னமோ நான் தான் எல்லாத்துக்கும் காரணம்ன்னு பேசறீங்க

 

 

“நான் அப்படி என்ன செஞ்சேன், உங்களுக்கு அடங்கின பிள்ளையா நான் இருந்தது தப்பா. அவனை மாதிரி நான் என்ன ஓடிப்போயா கல்யாணம் பண்ணிக்கிட்டேன்

 

 

“இத்தனை நாள் இல்லாம இப்போ மட்டும் இவர் ஏன் வந்தாராம் சொத்து பத்து இருக்கும் வாங்கிட்டு போகலாம்னு வந்திருக்காரோ என்றார் அநியாயமாக.

 

 

“வீடு தேடி வந்த பிள்ளையை எங்ககிட்ட கடைசி வரைக்கும் பேசவிடாமலே செஞ்சுட்டியே. எங்ககிட்ட என்ன சொல்ல நினைச்சானோ, இப்போ அவன் இல்லாமலே போயிட்டானே

 

 

“எம் பேரன் யாருமில்லாம எப்படியெப்படி எல்லாம் வளர்ந்தான்னு நினைச்சா என்னால தாங்க முடியலை. எம் பேரன் பேத்தி எல்லாரையும் இந்த கையால தூக்கி வளர்த்து சீராட்டி இருக்கேன்

 

 

“இவருக்கு நான் என்ன செஞ்சிருக்கேன். இப்படி என்னை ஆளாக்கினதுக்கு நீ தான்டா காரணம் என்றவருக்கு துக்கம் தொண்டையை அடைக்க கண்ணீர் பெருகி பெரும் கேவலாகிக் கொண்டிருந்தது.

 

 

“பாட்டி எதுக்கு இப்படி அழறீங்க. விடுங்க பாட்டி அதான் உண்மை தெரிஞ்சுடுச்சுல, நீங்க அழுதா மட்டும் எதுவும் மாறிடப் போகுதா என்று அருகில் வந்து மீனாட்சி பாட்டியை தாங்கி பிடித்தாள் மீனா.

 

 

அவள் கணவன் ஒரு புறம் வருந்துவது பொறுக்காமல் மறுகையால் அவன் கரத்தை பற்றிக் கொண்டாள். அங்கு நடப்பது என்னவென்று புரியாமல் திலகவதியும் மாலதியும் முழித்துக் கொண்டிருந்தனர்.முழுதாக ஒன்றையும் அறியமுடியாமல் இடையில் எதுவும் பேசமுடியாமலும் அமைதியாக இருந்துனர்.

“என்னம்மா எல்லாத்துக்கும் என்னையவே குற்றம் சொல்றீங்க

 

 

“வேற யாரை குற்றம் சொல்றது என்றார் அவரும் பதிலுக்கு.

 

 

“நான் என்ன அண்ணனை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு ஊரை விட்டேவா போகச் சொன்னேன். அப்படி அவன் போகும் போது நீ நல்லாவே இருக்க மாட்டேன்னு சாபம் கொடுத்தது நானா

 

 

“ஊர்ல எல்லாரும் தப்பு தப்பா பேசினாங்களே, நாம எவ்வளவு நாள் தலைகுனிஞ்சு நின்னிருப்போம் அதுக்கும் நான் தான் காரணமா. சொல்லு ஆத்தா, என்னமோ நான் தான் எல்லாத்துக்கும் காரணம் போல பேசிட்டே இருக்கீங்க

 

 

“போதும் சித்தப்பா விட்டுட்டுங்க, இதுக்கு யார் காரணம்ன்னு ஆராய்ச்சி வேண்டாம் என்றான் அதுவரை அமைதியாக இருந்த சுஜய் அவன் மௌனத்தை உடைத்து.

 

 

“நீ யாருடா என்னை சித்தப்பான்னு கூப்பிட என்றார் அவர் ஆத்திரமாக.

 

 

“உங்களை பிடிக்கலைன்னாலும் நீங்க எனக்கு அந்த உறவு தான். எங்கப்பா தான் உங்க எல்லாருக்கும் அண்ணன். இவங்க ரெண்டு பேரும் எனக்கு அத்தைங்க தான். அதை மாற்ற எப்பவும் முடியாது என்றான் அழுத்தந்திருந்தமாக.

 

 

“என்ன நீ… நீங்க என் பெரியண்ணன் மகனா, எங்க மருமகனா… அக்கா உன் மருமகன்… ச்சே இது யாருன்னு பார்த்தியா நம்ம பெரியண்ணன் மகன். நம்ம மருமகன் என்ற திலகவதி வேகமாக வந்து அவன் கையை பிடித்துக் கொண்டார்.

 

 

அவன் கன்னத்தை தடவிக் கொடுத்தவர் கண்கள் நீரினால் நிறைந்தது.“கடவுளே அண்ணனை ஒரு முறையாச்சும் பார்க்க மாட்டோமான்னு எத்தனை நாள் மனசுக்குள்ள ஏங்கி தவிச்சு இருப்பேன்

 

 

“ஆனா அவரை இப்படி கடைசி வரை பார்க்க முடியாம பண்ணிட்டியே. உன்னையாச்சும் எங்க கண்ணுல காட்டிட்டா அந்த காளியாத்தா என்றார் அவர் உணர்ச்சி குவியலாக. அதற்குமேல் வார்த்தைகள் வாராமல் போனது.

 

 

மாலதிக்கு ஒன்றுமே ஓடவில்லை. தன் அண்ணன் மகனுக்கு தான் தன் மகளை கொடுத்திருக்கிறோம் என்று மகிழ்வதா தன் அண்ணனை பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று எண்ணி வருந்துவதா என்று குழம்பித் தவித்தார்.

 

 

திலகவதியை போல் அல்லாமல் சற்றே நிதானித்து மருமகனிடத்தே வந்து நின்றார் மாலதி. அவனை மேலிருந்து கிழ் வரை ஆராய்ந்தவரின் பார்வை‘இவ்வளவு நாளாகஏன் சொல்லலை என்பதாய் இருக்க கதிரின் பார்வையும் குற்றம் சாட்டும் பார்வையாய் இருக்க சுஜய் பதில் சொல்ல கடமைபட்டவனானான்.

 

 

“உங்க எல்லாருக்கும் நான் இதுவரைக்கும் இதை பத்தி உங்ககிட்ட ஏன் முன்னாடியே சொல்லலைன்னு தோணும். உங்களுக்கு நான் பதில் சொல்லியே ஆகணும் என்றவன் சிறு இடைவெளி விட்டான்.

 

 

“உண்மையை சொல்லணும்னா எனக்கு அப்போ உங்க எல்லார் மேலயும் ஒரு சின்ன கோபம் வருத்தம் எல்லாம் இருந்துச்சு. அம்மாவோட சொந்தம் எல்லாம் வீட்டுக்கு வந்து போகும் போது அப்பா என்ன தான் வெளிய சந்தோசப்பட்டாலும் உள்ளுக்குள்ள பலதடவை வருத்தப்பட்டு இருக்காங்க

 

 

அவன் பேசிக் கொண்டிருக்கும் போது இடைமறித்த மீனாட்சி பாட்டி, “ஏன்ய்யா உங்க அம்மா இறந்ததுக்கும் அப்பா இறந்ததுக்கும் கூட எங்களுக்கு சொல்லாம விட்டுடீங்களே. அந்த அளவுக்கு உங்களுக்கு எங்க மேல கோபமாய்யா என்றார் இயலாமையாக.

 

 

“பாட்டி ப்ளீஸ் நீங்க தயவுசெய்து வருத்தப்படாதீங்க. உங்ககிட்ட சொல்லக் கூடாதுன்னு அப்பா நினைக்கலை. நான் பிறந்த பிறகு அப்பா இங்க ஒரு முறை வந்திருந்தாங்க

 

 

“அப்போ தான் தெரிஞ்சுது உங்க எல்லாருக்கும் இன்னுமும் அவங்க மேல கோபமிருக்குன்னு. சித்தப்பா தான் சத்தம் போட்டு அப்பாவை விரட்டி விட்டுட்டாங்க

 

 

“அப்பா ஊருக்கு போயிட்டு வந்த பிறகு கொஞ்ச நாள்ல அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போச்சு. கொஞ்ச நாள்ல அவங்களுக்கு ரொம்ப முடியாம இறந்து போய்ட்டாங்க

 

 

“இந்த விஷயம் தெரிஞ்சா அப்பாவோட வாழ்க்கை பாதியிலேயே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சு நீங்க எல்லாரும் வருத்துப்படுவீங்கன்னு தான் அப்பா எதுவும் சொல்லலைன்னு என்கிட்ட சொன்னாங்க

 

“அதுவும் இல்லாம அப்பா அம்மாவை கல்யாணம் பண்ணிக்க போறதா தாத்தாகிட்ட சொன்ன போது தாத்தா வேண்டாம்ன்னு சொன்னாங்களாம். நீங்க சாபம் கொடுத்ததுனால தான் அவங்க வாழ்க்கை இப்படி ஆகிபோச்சுனு நினைச்சு நீங்க கஷ்டப்படுவீங்கன்னு தான் பேசாம இருந்ததா சொன்னாங்க

 

 

“உங்கப்பா தான் சொல்லலை நீங்களாச்சும் உங்கப்பா இறந்ததை பத்தி எங்களுக்கு தகவல் சொல்லியிருக்கலாமே என்றார் பாட்டி மேலும் விசனமாக.

 

 

“அன்னைக்கு தான் பாட்டி மீனுவுக்கு ஊர்ல கல்யாணம் வைச்சு இருந்தீங்க. நான் எப்படி பாட்டி சொல்லியிருப்பேன். அப்பா எல்லாருக்கும் வேண்டாதவரா போய்ட்டார். போனவர் போனவராவே இருக்கட்டும்ன்னு நினைச்சு தான் நான் சொல்லலை

 

 

“ஏன் அண்ணே நீங்க மத்த யார்கிட்டயும் சொல்லலை சரி. நான் மூணு நாலு வருஷமா உங்ககூட தானே இருக்கேன். என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம போயிட்டீங்களேண்ணே என்றான் மிகுந்த மனவருத்தத்துடன்.

 

 

“நான் உங்களை மூச்சுக்கு மூன்னூறு தடவை அண்ணே அண்ணேன்னு கூப்பிட்டேனே அதெல்லாம் வெறும் வார்த்தைக்குன்னு நினைச்சுட்டீங்களா. உண்மையாவே உங்களை என் கூட பிறந்த பிறப்பா நினைச்சு தான் நான் அப்படி கூப்பிட்டேண்ணே

 

 

“இது ஏன் உங்களுக்கு புரியாம போய்டுச்சுண்ணே. நானும் கோபக்காரானா இருப்பேன்னு நினைச்சுட்டீங்களா. பெரியப்பா பக்கத்துல இருந்தும் அவரை சார்ன்னு கூப்பிடுற மாதிரி ஆகிடுச்சேண்ணே என்று கண் கலங்கினான் அவன்.

 

 

“ப்ளீஸ் கதிர் இதுக்கு மேலே நீ எதுவும் சொல்லிடாதே. என்னால தாங்க முடியாது என்றவன் அருகில் வந்து கதிரை அணைத்துக் கொண்டான்.“தப்பா எடுத்துக்காதே கதிர், அப்போ நம்ம குடும்பத்துல இருந்து யாருமே ஒரு தரம் கூட வந்து பார்க்கலைன்னு எனக்கு எல்லார் மேலயும் வருத்தம் இருந்தது

 

 

“அப்பா மன்னிப்பு கேட்டு வீட்டுக்கு வந்திருந்தும் யாரும் அவரை மன்னிக்கலைன்னு என்னோட கோபம் கொஞ்சம் கூடிச்சு. அப்பா பலமுறை என்கிட்ட நம்ம குடும்பத்தை பத்தி பேசியிருக்காங்க. நாளாக ஆக எனக்குள்ள இருந்த கோபம் குறைஞ்சுது. எல்லாரையும் பத்தி தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்பட்டேன்

 

“ஒரு ஆள் ஏற்பாடு செஞ்சு அவங்க மூலமா எல்லாரும் இப்போ எப்படி இருக்காங்கன்னு விவரம் தெரிஞ்சுகிட்டேன். அப்போ தான் நீ சென்னையில வேலை பார்க்கறது தெரிஞ்சுது

 

 

“உனக்கு நம்ம ஆபீஸ்லயே வேலைக்கு ஏற்பாடு செஞ்சேன். உன்னை டெல்லிக்கு வரவைச்சேன். உன்னை பார்த்ததும் உன்னோட வெகுளித்தனமும் வெளிபடையா பேசி பழகுற உன் குணமும் எனக்கு ரொம்பவே பிடிச்சுது

 

 

“நீ அண்ணான்னு கூப்பிட்டப்போ நான் எவ்வளவு சந்தோசப்பட்டேன்னு அப்பாவுக்கும் எனக்கும் மட்டும் தான் தெரியும் கதிர். உன் மூலமா நம்ம குடும்பத்துல உள்ள எல்லாரையும் பத்தி தெரிஞ்சுகிட்டோம்

 

 

“நீ ஊருக்கு போறது உனக்கு எவ்வளவு சந்தோசமோ எங்களுக்கு தெரியாது. ஆனா நீ எப்போ திரும்பி வருவ எல்லாரையும் பத்தி என்னென்ன சொல்லுவன்னு நாங்க ஆசையா காத்திருப்போம்

 

 

“அப்பா தனியா எத்தனை நாள் நீ கொண்டு வந்த போட்டோ பார்த்து அழுதிருப்பாங்கன்னு உங்களுக்கு தெரியாது. திடிர்னு நாங்க யாருன்னு சொல்லி உன்னை குழப்பவும் நான் விரும்பலை கதிர்

 

 

“அப்பா உன்கிட்ட சொல்ல சொன்ன போது நான் தான் மறுத்தேன். அதுக்கப்புறம் உன்கிட்ட பல முறை சொல்லணும்ன்னு நினைச்சு சொல்லாமலே போயிருக்கேன்

 

 

“இடையில மீனாவோட கல்யாணம், அது நின்னு இங்க நடந்த பிரச்சனை எல்லாம் சேர்ந்து நான் உன்கிட்ட பேச விடாம செஞ்சுடுச்சு. இருக்கற குழப்பம் போதாதுன்னு என்னால ஒரு புது குழப்பம் வேண்டாம்னு தான் பேசாமலே இருந்துட்டேன்

 

 

“ஊருக்கு நீ கூப்பிட்டப்போ கூட நான் வரக் கூடாதுன்னு தான் நினைச்சேன். ஆனா எல்லாரையும் ஒரு தரமாச்சும் பார்க்கணும்னு ஒரு ஆசை எனக்குள்ள இருந்துட்டே இருந்துச்சு

 

 

“அதனால தான் நான் ஊருக்கு வந்தேன். நான் சத்தியமா சொல்றேன் இங்க வந்த பிறகு எல்லாரையும் பார்த்த பிறகு இது என் உறவுன்னு நினைச்சு நான் அடைஞ்ச சந்தோசம் மிகையில்லாதது

 

 

“இங்க வந்த பிறகு நானே எதிர்பார்க்காதது மீனு எனக்கு கிடைச்சது. மீனு என் அத்தை பொண்ணுன்னு தெரிஞ்சிருந்தாலும் அன்னைக்கு எல்லாரும் அவளை பேசும் போது மனசு கேட்கலை எனக்கு

 

 

“அத்தை அழும் போது எனக்குள்ள எதுவோ துடிச்சுது. அப்பா இருந்திருந்தா என்ன செஞ்சு இருப்பாங்களோ அதை நான் செய்யணும்னு நினைச்சேன். அதுவும் இல்லாம எனக்கும் மீனுவை பிடிச்சிருந்தது என்று சொல்லும் போது அவன் முகம் சிவந்தது.

 

 

அதுவரை அவன் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த மீனாவையும் அவன் வார்த்தைகள் வெட்கமும் கர்வமும் கொள்ளச் செய்தது.அடுத்து அவன் என்ன சொல்லுவான் என்று ஆவலோடு அவள் கண்கள் அவனை நோக்கியது.

 

 

அவள் பார்வையை எதிர்கொள்ள முடியாதவனாக சற்றே பார்வையை தழைத்தான் அவன். மாலதியின் அருகில் நெருங்கியவன் “அத்தை உங்களுக்கு இன்னமும் என் மேல கோபமா

 

 

“அப்பா உங்களை பிரிஞ்சு இருந்திருந்தாலும் எப்பவும் உங்க எல்லார் நினைப்பாவும் தான் இருந்தாங்க. உங்களை அவங்க சௌந்தரின்னு தான் கூப்பிடுவாங்களாமே, அடிக்கடி சொல்லிட்டே இருப்பாங்க என்றதும் அதுவரை அமைதியாக அவன் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த மாலதியின் கண்கள் கரையுடைத்து பெருகியது.

 

 

“எங்கண்ணே இந்த சௌந்தரியை மறந்திட்டார்ன்னு நினைச்சேன். இத்தனை வருஷம் கழிச்சு அந்த பேரை நான் கேட்குறேன். எங்கண்ணன் என்னை மறக்கலை

 

 

“நாங்க தான் அவருக்கு பெரிய பாவம் செஞ்சுட்டோம் என்று தலையில் அடித்துக் கொண்டு கதறியழ அதை பார்த்துக் கொண்டிருந்த மீனாவும் தேனுவும் கூட கலங்கினர்.

 

 

“அத்தை ப்ளீஸ் வேணாம் அத்தை அழாதீங்க. அப்பாவுக்கு நீங்க ரெண்டு பேரும்ன்னா ரொம்ப இஷ்டம். நீங்க இப்படி வருத்தப்படுவீங்கன்னு தானே இவ்வளவு நாளா எதுவும் சொல்லாம இருந்தேன். நீங்க இப்படி அழுதா என்னால தாங்க முடியாது அத்தை

 

 

“ஆனா பாட்டி உங்களுக்கு எப்படி இந்த விஷயம் முன்னாடியே தெரிஞ்சுது. தாத்தா தான் சொல்லியிருக்கணும்ன்னு நினைக்கிறேன். எங்க கல்யாணத்தப்போ தாத்தா சொன்ன பிறகு தான் எல்லாரும் ஒத்துக்கிட்ட மாதிரி கதிர் சொன்னப்போ எனக்கு ஒரு சந்தேகம் தாத்தாவுக்கு தெரிஞ்சிருக்குமோன்னு

 

 

“அவங்க அதை பத்தி எதுவும் என்கிட்ட பேசாததுனால நானும் அமைதியா இருந்திட்டேன். ஆனா தாத்தாவை பார்க்க கடைசியா வீட்டுக்கு வந்தப்போ தான் அவங்களுக்கு ஏதோ தெரிஞ்சிருக்குன்னு புரிஞ்சுது

 

 

“என் கையை விடாம பிடிச்சுக்கிட்டு எதையோ சொல்ல நினைச்சாங்க. கடைசியா மீனாட்சியை பார்த்துக்கோன்னு சொன்னாங்க. கொஞ்ச நேரம் எதுவும் புரியாம முழிச்சேன் தாத்தாவோட பார்வை உங்க ரெண்டு பேர் மேல இருந்துச்சு. முதல்ல தாத்தா மீனுவை தான் சொல்றாங்கன்னு நினைச்சேன்

 

 

“அன்னைக்கு நைட் யோசிச்சு பார்க்கும்போது தான் புரிஞ்சுது. தாத்தா உங்க ரெண்டு பேரையும் சேர்த்து தான் சொன்னாங்கன்னு.

 

 

“மறுநாள் பாட்டியை எங்களோட வாங்கன்னு சொன்னப்போ நீங்க கொஞ்ச நாள் எங்கயும் வரக்கூடாதுன்னு சொல்லி மறுத்திட்டீங்க பாட்டி. இப்போ சொல்லுங்க பாட்டி உங்களுக்கு எப்படி நான் தான் உங்க பேரன்னு தெரிஞ்சுது

 

 

அதுவரை அந்த விஷயத்தையே மறந்திருந்த மீனாவுக்கும் அக்கணம் அதுவே தோன்றியது. ஒருவேளை இந்த மனுஷன் எதுவும் எனக்கு தெரியாம உளறியிருப்பாரோ என்று யோசித்தாள்.

 

 

‘ச்சே வாய்ப்பே இல்லை, அப்படியிருந்தால் இவர் ஏன் அதே கேள்வியை பாட்டியிடம் கேட்க போகிறார். ஆனால் தாத்தாவுக்கு இந்த விஷயம் தெரிந்திருக்குமோ. எப்படி எதுவும் பேசாமல் இருந்தார்கள் என்று யோசித்தவள் மற்றவர்கள் போல் அவளும் பாட்டியை ஆவலாக பார்த்தாள்.

 

 

“நீங்க நினைச்சது சரி தான் எனக்கு உங்க தாத்தா தான் சொன்னாங்க. உங்க தாத்தாவுக்கு இந்த விஷயம் எப்படி தெரியும்ன்னு தெரியுமா???” என்றவர் ஒரு சிறிய இடைவெளி விட்டார்.

 

 

“என்னது உங்க ரெண்டு பேருக்கும் இவன் தான் பேரன்னு முதல்லயே தெரியுமா??? அப்போ இவ்வளவு நாளா இதை மூடி மறைச்சு நீங்க நடிச்சு இருக்கீங்களா??? என்று அதுவரை அமைதியாக இருந்த ராஜேந்திரன் மீண்டும் முருங்கை மரம் ஏறினார்.

 

 

“நீ என்னை பேசவே விடமாட்டியா??? எனக்கு எப்படி தெரியும்ன்னு உனக்கு தெரியுமா??? இல்லை உங்கப்பாவுக்கு எப்படி தெரியுமான்னு தான் யோசிச்சியா???

 

 

“நாங்க மறைச்சிட்டோம்ன்னு மட்டும் கேட்க தெரியுது. உன் புத்தி ஏன்இப்படி எல்லாம் தேவையில்லாம யோசிக்குது ராசேந்திரா???

 

 

ராஜேந்திரன் என்ன தான் நடந்தது என்று தெரிந்து கொள்ள சட்டென்று அமைதி அடைந்தார். பாட்டியும் தொடர்ந்தார், “என்னய்யா பார்க்கறீங்க??? உங்கப்பாரு மூலமா தான் எங்களுக்கு எல்லாம் தெரியும்

 

 

“என்னது??? அப்பாவா!!! என்ன… என்ன… சொல்றீங்க பாட்டி??? என்று கேள்வியும் ஆச்சரியமும் கலந்து கேட்டான் அவன்.

 

 

“ஒரு நிமிஷம் இருங்க என்றவர் அவர் அறைக்கு சென்றார். திரும்பி வந்தவரின் கைகளில் ஒரு கடிதமிருந்தது. “இதை படிங்கய்யா உங்களுக்கு எல்லாம் புரியும். அதுக்கு முன்னாடி இது எப்படி எங்களுக்கு கிடைச்சுதுன்னு சொல்லிடறேன்

 

 

“இந்த லெட்டரை உங்க மாமா இங்க வந்து இருக்கும் போது கொண்டு வந்து கொடுத்தார் என்றவரின் நினைவுகள் அன்றைய தினத்திற்கு சென்றது.

 

____________________

 

பரிசம் போட வந்திருந்த சுஜய்யின் மாமா பிரஷாந்த் வர்மா தாத்தா பாட்டியை பார்த்து மரியாதை செலுத்த விரும்பினார். ராஜேந்திரன் கதிரிடம்  சொல்லி தாத்தாவிடம் கூட்டி போக சொன்னார்.

 

 

“வாங்க என்று அழைத்து சென்ற கதிர் அவரை தாத்தாவின் அறையில் விட்டுவிட்டு ஏதோ போன் கால் வர அவரிடம் சொல்லிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

 

 

பாட்டி பிரஷாந்த் வர்மா வீட்டிற்கு வரும் போதே பார்த்திருந்ததால் அவரை வரவேற்று இருக்கையில் அமர வைத்து தாத்தாவிற்கு அறிமுகப்படுத்தினார். “இவங்க நம்ம மாப்பிள்ளைக்கு தாய் மாமா என்றார்.

 

 

“நமஸ்தே என்று என்று இருவரையும் இருகரம் கூப்பி வணங்கினார் அவர். சிரமப்பட்டு கட்டிலில் எழுந்து அமர்ந்திருந்த தாத்தாவும் பதிலுக்கு வணக்கம் செலுத்தினார்.

“உங்ககிட்ட ஒரு லெட்டர் கொடுக்க தான் வந்தேன். இதை நான் போன பிறகு நீங்க படிச்சு பாருங்க என்றவர் கையோடு கொண்டு வந்திருந்த அந்த கடித உறையை அவர்களிடத்தில் நீட்டினார்.

 

 

அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியாமல் பாட்டி அதை அவரிடத்தில் இருந்து வாங்கினார். அவர் மேலும் ஏதோ கூற வந்த வேளை கதிர் மீண்டும் அங்கு வந்து சேர்ந்தான். “போலாங்களா என்றவாறே.

 

 

மெல்ல இருவரிடமும் தலையசைத்து விடைபெற்றவரின் கண்கள் அந்த கடிதத்தையும் அங்கிருந்த இருவரையும் குறிப்பாக பார்க்க அவர்களும் அவருக்கு விடை கொடுத்தனர்.

 

 

சபையில் அமர்ந்து அவர்கள் பரிசம் போடும் போதும் பிரஷாந்த் வர்மாவின்  கண்கள் மீண்டும் அவர்களை ஒரு பார்வை பார்த்தது ஏதோ செய்தி சொல்ல முனைந்தது.

 

 

வேலையில் கவனமாயிருந்ததிலும் அடுத்த சில தினங்களில் மீனா சுஜய்யின் திருமணம் இருந்ததினாலும் பீரோவில் பத்திரப்படுத்திய அந்த கடிதத்தை இருவருமே மறந்தே போயினர்.

 

 

சில மாதங்கள் கடந்த வேளையில் ஒரு நாள் பீரோவில் இருந்த வீட்டு பத்திரத்தை தேடிய மீனாட்சியின் கண்களில் அந்த கடிதம் பட நினைவு வந்தவராக அதை அவசரமாக எடுத்தார்.

 

 

“என்னங்க இது அன்னைக்கு நம்ம மீனா புருஷனோட மாமா இங்க வந்திருக்கும் போது கொடுத்தாரே. நானும் இதை உள்ள வைச்சதே மறந்தே போயிட்டேன். இதுல என்ன இருக்குன்னு படிங்களேன்

 

 

அவரை கைத்தாங்கலாக எழுப்பி அமர வைத்துவிட்டு அந்த கடிதத்தை ஈஸ்வரனிடம் கொடுத்தார் மீனாட்சி பாட்டி.ஈஸ்வரனும் கடிதத்தை பிரித்து படித்தார்.

 

 

அன்புள்ள அப்பா அம்மாவிற்கு,

 

உங்கள் மகன் கந்தசாமி எழுதிக் கொள்வது. எப்படியிருக்கிறீர்கள், நம் குடும்பத்தின் அனைவரும் எப்படியிருக்கிறார்கள். என்னடா இவன் ஊரை விட்டு ஓடி போனானே நம்மை எல்லாம் நினைக்கிறானான்னு உங்களுக்கு தோணலாம்.

 

நான் உங்களை நினைக்காத நாளில்லை. என்னால் உங்களுக்கு எவ்வளவு கஷ்டம் என்பதை நானறிவேன். என்ன தான் என் மேல உங்களுக்கு கோபமும் வருத்தமும் இருந்தாலும் நான் எப்படியிருக்கேன்னு ஒரு தரமாச்சும் நீங்க நினைச்சு இருப்பீங்க.

 

 

நான் உங்களை பார்க்க ஊருக்கு வந்த போதெல்லாம் ராஜேந்திரன் என்னை விரட்டினான். அவன் இன்னமும் என் மேல் கோபத்திலிருக்கிறான் என்று எனக்கு புரிகிறது.

 

 

போனதை பற்றி இனி எந்த விளக்கமும் கொடுக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். என்ன விளக்கம் கொடுத்தாலும் நான் செய்தது சரியென்று ஆகிவிடாது.

 

 

இந்த கடிதத்தை ஏன் தபாலில் அனுப்பாமல் கொடுத்து விட்டிருக்கிறேன் என்று உங்களுக்கு குழப்பமாக இருக்கும். நான் அப்படியே தபாலில் அனுப்பி இருந்தாலும் இது உங்கள் கைக்கு கிடைத்திருக்காது.

 

 

தம்பியின் கோபத்தை உணர்ந்தே இதை என் நம்பிக்கைக்கு உரியவரிடம் சேர்பித்து கொடுக்க சொல்லியிருந்தேன்.

 

 

உங்களை வந்து பார்க்கும் ஆவல் எனக்கு மிகுந்து இருக்கிறது, என் உடல்நலம் ஒத்துழைக்காததினாலும் மீண்டும் உங்களை நாடி வந்து ராஜேந்திரனால் உங்களை பார்க்க மறுக்கப்படுவேன் என்றே உங்களை நாடி வரவில்லை.

 

 

உங்களை தேடி வரவில்லை என்றாலும் உங்களை பற்றிய தகவல்கள் எனக்கு எப்போதும் வந்து கொண்டே தான் இருந்தது. அந்த மகிழ்ச்சியே எனக்கு போதும்.

 

 

இக்கடிதம் உங்கள் கைக்கு கிடைக்கும் போது நான் இல்லாமல் போயிருப்பேன். வருத்தப்படாதீர்கள் அது தான் உண்மை. என்னையும் என் மகனையும் இந்த பூவுலகில் தனித்து விட்டு சென்ற என் மனைவியிடமே நான் செல்லப் போகிறேன்.

 

 

என் மனைவி எங்களை விட்டு சென்ற போது என் மகனுக்கு ஐந்து வயது, எப்படியோ அவனை நன்றாக வளர்த்துவிட்டேன். அவ்வப்போது அவன் என்னிடத்தில் அவன் கேட்டதெல்லாம் அப்பா எனக்கு மட்டும் தாத்தா பாட்டி இல்லையா என்பது தான்.

 

ஆம் தீபிகாவின் தாய் தந்தை எங்கள் திருமணதிற்கு முன்பே இறந்துவிட்டனர். அவள் அவளின் அண்ணன் தம்பியின் பராமரிப்பில் வளர்ந்தவள். அவ்வப்போது அவர்கள் வந்து சென்றாலும் என் மகனுக்கு நீங்கள் எல்லாம் வராதது கோபமே.

 

 

நானும் அவனிடத்தில் எல்லாம் எடுத்து சொன்ன போதும் கோபம் உங்கள் மேல் தானே இருக்க வேண்டும் நான் என்ன தவறு செய்தேன் என்று என்னை பதில் கேள்வி கேட்டு வாயை அடைத்துவிட்டான்.

 

 

கொஞ்சம் வளர்ந்த பின் அவனிடத்தில் நடந்ததை சொல்லி பக்குவமாக புரிய வைத்தேன். இப்போதெல்லாம் அவனுக்கும் என்னை போலவே உங்களை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று ஆவல் மிகுந்து உள்ளது.

 

 

உங்கள் பேரனின் பெயரை தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆசையாக இருக்கிறதா. அவனுக்கு உங்கள் பெயரை தான் சேர்த்து வைத்திருக்கிறேன் அப்பா, அவன் பெயர் சுஜய் சர்வேஷ்.

 

 

உங்களை பற்றி அறியும் ஆவலில் என் தம்பி ராஜேந்திரனின் மகன் கதிரை நம் அலுவலகத்தில் வேலைக்கு சேர்த்திருக்கிறான் உங்கள் பேரன். கதிர் உங்களை பற்றிய பகிர்ந்தது அதிகம். அவன் எடுத்து வரும் புகைப்படங்களை பார்ப்பதே எங்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும்.

 

 

ஏனோ எனக்கு உங்கள் எல்லாரையும் மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் அது முடியாது என்று என் உடல் சொல்கிறது. சௌந்தரியின் மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்திருப்பதாக கதிர் சொன்னான்.

 

 

மிக்க மகிழ்ச்சி எனக்கு, நான் அங்கிருந்தால் ஒரு தாய் மாமனாக நான் தான் முன் நின்றிருப்பேன். எனக்கு அந்த கொடுப்பினை இல்லாது போய்விட்டது, என் சார்பாக ராஜேந்திரன் நிற்பான் என்று மகிழ்ச்சி அடைகிறேன்.

 

 

குட்டிம்மாவுக்கு இரண்டு பிள்ளைகளாமே சின்ன பெண்ணாக பாவாடை சட்டையுடன் பார்த்த என் சின்ன தங்கைக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது.

 

 

ஏதோ கதிரையாவது என்னால் பார்க்க முடிந்ததே என்று பெரும் நிம்மதி எனக்குள். உங்கள் எல்லோரையும் அவனில் காண்கிறேன். அவனை எங்களுடனே தங்க வைத்து மகிழ்கிறோம் நானும் உங்கள் பேரனும்.

 

இவ்வளவு நாள் இல்லாமல் எதற்கு இப்போது இந்த கடிதம் என்று உங்களுக்கு தோணலாம். காரணமிருக்கிறது எல்லாம் என் சுயநலம் தான், பெற்றவன் ஆன பின்னே தான் என்னை பெற்றவர்களின் கவலை என்ன என்று எனக்கு புரிகிறது.

 

 

சிறு வயதில் தாயை இழந்த என் பிள்ளைக்கு நானே தாயும் தந்தையுமாக இருந்து வளர்த்து விட்டேன். நானும் இல்லாமல் போனால் அவனுகென்று யாருமே இல்லாமல் போய்விடுவார்களோ என்ற கவலை சமீபமாக என்னை அரித்துக் கொண்டிருக்கிறது.

 

 

என்னால் தான் போக முடியவில்லை நீயாவது சென்று எல்லோரையும் பார்த்து வா என்று அவனிடம் கூறியிருக்கிறேன். ஏனோ அவன் அதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறான்.

 

 

நிச்சயம் ஒரு நாள் அவன் உங்கள் எல்லோரையும் சந்திக்க வருவான். தயவு செய்து என் மேல் இருக்கும் கோபத்தை அவன் மேல் காட்டி விடாதீர்கள். என்னை காரணம் காட்டி அவனை வெறுத்து விடாதீர்கள்.

 

 

அவனுக்கு இன்னமும் லேசான வருத்தம் இருக்கிறது. அதன் காரணமாக உங்கள் பேரன் உங்களிடம் அவன் யார் என்பதை மறைத்தாலும் மறைக்கலாம். ஆனால் உங்களை பார்க்க அவன் நிச்சயம் வருவான். இந்த கடிதத்துடன் எங்கள் குடும்ப புகைப்படத்தையும் இணைக்கிறேன்.

 

 

இந்த கடிதம் கண்டபின் ராஜேந்திரன் என்றாவது எனக்காக வருந்தும் பட்சத்தில் அவனிடம் சொல்லுங்கள். எனக்கு அவன் மேல் எந்த கோபமோ வருத்தமோ இல்லை என்று. என் இடத்தில் இருந்து அவன் தான் நம் குடும்பத்தை பேணி காக்கிறான்.

 

 

சௌந்தரி, குட்டிம்மாவின் திருமணத்தையும் சிறப்பாக நடத்தி இன்று வரை அவர்களுக்காக எல்லாம் செய்கிறான். நான் தான் எல்லாவற்றிருக்கும் அருகதை அற்றவன் ஆகிப் போனேன். கடைசியாக ஒரு முறை கேட்கிறேன் எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள். மீண்டும் ஒரு முறை எல்லோரையும் கேட்டதாக சொல்லவும்.

 

 

இப்படிக்கு

 

உங்களை என்றும் நினைத்துக் கொண்டிருக்கும் கந்தசாமி.

 

____________________

 

“என் பிள்ளை அவன் பிள்ளைக்காக எழுதினது படிச்சதுலே இருந்தே உங்க தாத்தாவுக்கு கவலை அதிகமாகி போச்சு. என்கிட்டயும் இந்த விஷயத்தை பத்தி இப்போ எதுவும் சொல்ல வேணாம்ன்னு சொல்லிட்டாங்க

 

 

“அதையே மனசுல போட்டு யோசிச்சுக்கிட்டு இருந்ததுனால தான் அன்னைக்கு கவனக்குறைவா பாத்ரூம்ல வழுக்கி விழுந்து அப்புறம் என்னென்னமோ ஆகிபோச்சு என்றவரின் கண்கள் கலங்கியது.

 

 

மீனாட்சி பாட்டி சொல்லி முடித்து அந்த கடிதத்தை மீனாவிடம் படிக்க கொடுக்க அவள் படித்து முடிக்கவும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.

 

 

 

Advertisement