Advertisement

அத்தியாயம் –20

 

 

சுஜய்கதவை தாழிடும் ஓசை கேட்கும் போதே மீனாவின் இதயம் தாறுமாறாக துடிக்கவே ஆரம்பித்தது. முழுதாக இரண்டு நாட்கள் கழித்து அவனை சந்திக்கிறாள்.

 

 

ஒரு வித எதிர்பார்ப்பும் ஏக்கமுமாக இருந்தவளுக்கு அவனின் அணைப்பு ஆறுதலாக இருந்தது. கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து கன்னங்களில் இறங்கியது.

 

 

சுஜய்யின் அணைப்பு மேலும் இறுகியது. “மீனுஎன்று அவள் காதில் மெதுவாக கிசுகிசுத்தான்.

 

 

அவன் மூச்சுக்காற்று அவள் காதில் பட கூச்சத்தில் நெளிந்தாலும் அவனிடம் “ஹ்ம்ம் என்றாள் பதிலுக்கு.

 

 

“ப்ளீஸ் மீனு… இனிமே என்னை இப்படி தனியா விட்டுட்டு போகாதே. நீ இல்லாத இந்த ரெண்டு நாளும் நரகமா இருந்துச்சு. பைத்தியம் பிடிக்காத குறை தான் எனக்கு

“மீனு… என்ன அமைதியாவே இருக்க??? இன்னமும் என் மேல இருக்க கோபம் உனக்கு தீரலையா??? என்று சொல்லிக் கொண்டே அவளை தன்புறம் திருப்ப அவள் விழிகளில் நீர் நிறைந்திருப்பது கண்டு பதறினான்.

 

 

“என்னாச்சு மீனும்மா??? நீ தானே என்னை தனியா விட்டுட்டு வந்தே. என்னமோ நான் உன்னை விட்டுட்டு போன மாதிரி எதுக்கும்மா அழற???

 

 

பதிலேதும் கூறாமல் இரு கைகளாலும் எக்கி அவன் கழுத்தை இறுக கட்டிக் கொண்டாள். அவள் கண்ணீர் அவன் தோள்களை நனைக்க “என்னாச்சு மீனும்மா??? அதான் நான் உன்னை தேடி வந்துட்டேனே என்ற அவன் கனிவில் மேலும் பொங்கி அழுகை வந்தது அவளுக்கு.

 

 

“மீனு ப்ளீஸ்….

 

 

“உங்களை விட்டுட்டு வந்தா, உங்களை நான் தேடலைன்னு அர்த்தமா. உங்களுக்கு என்னை வந்து பார்க்க ரெண்டு நாள் ஆச்சா

 

 

“கதிருக்கு முடிச்சுக் கொடுக்க வேண்டிய வேலை இருந்ததுனால தான் மீனும்மா நான் உடனே வரமுடியலை. இல்லைன்னா நேத்து இந்நேரம் நான் இங்க இருந்திருப்பேன்

 

 

“அப்போ நீ என்னை தேடினியா??? இதுக்கு நீ என்னை விட்டுட்டு போகாம இருந்திருக்கலாம்ல என்றான் அவள் முகத்தை நிமிர்த்தி.

 

 

“உங்களை விட்டுட்டு வந்தேன்னு சொல்லாதீங்க மாமா. நீங்க தேடி வருவீங்கன்னு தான் வந்தேன்

 

 

“அன்னைக்கு நீங்க என்கிட்ட சொல்லாம விட்டுட்டீங்களேன்னு ஒரு கோபம். ஆனா யோசிச்சு பார்க்கும் போது என் கோபம் அர்த்தமில்லாததா தோணுது மாமா

 

 

“இன்னமும் உனக்கு என் மேல கோபமிருக்கா மீனு???

 

 

“அதான் சொன்னேனே மாமா அது அர்த்தமில்லாத கோபம்ன்னு. உங்க மேல எனக்கு எந்த கோபமும் இல்லை மாமா. கோபத்தை விட அன்பு தான் அதிகமா இருக்கு. உங்க மேல இருக்க அன்பை இந்த ரெண்டு நாள்ல நான் நல்லாவே புரிஞ்சுக்கிட்டேன் மாமா என்றவளின் கண்கள் மீண்டும் கலங்கியது.

 

“மீனு வேண்டாம் விடு. அதான் நான் வந்துட்டேன்ல

 

 

“அப்புறம் மீனு… நான் ஏன் உன்கிட்ட முதல்லயே சொல்லலைன்னு உனக்கு வருத்தமிருக்கும். அதான் உன்கிட்ட எல்லா…. என்று சொல்லிக் கொண்டிருக்க அவள் அவன் வாயை பொத்தினாள்.

 

 

“வேண்டாம் மாமா நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்

 

 

“என்ன மீனு இது??? அன்னைக்கும் நீ என்னை சொல்ல விடலை, இன்னைக்கும் சொல்ல விடமாட்டேங்குற

 

 

“வேணாம் மாமா நீங்க எனக்கு எந்த விளக்கமும் சொல்லத் தேவையில்லை

 

 

“உன்னை பார்க்கணும் பேசணும்ன்னு தான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன். நீ நான் பேசுறதை கேட்க மாட்டேங்குறியே

 

 

“உங்களை புரிஞ்சுக்காம இருந்தா தானே எனக்கு விளக்கம் வேணும்

 

 

“மீனு… என்றான் நெகிழ்வாக

 

 

“ஆமா நான் உங்களுக்கு போன் பண்ணப்போ நீங்க ஏன் எடுக்கலை

 

 

“நான் உனக்கு போன் பண்ணப்போ நீ கூட தான் எடுக்கலை

 

 

“அதுக்காக பழி வாங்குனீங்களா

 

 

“ச்சே… ச்சே அதெல்லாம் இல்லை மீனும்மா… நான் வீட்டுக்கு வர்றதா இருந்தேன்ல. அது உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்ன்னு தான் போன் எடுக்கலை

 

 

“ஆமா நீ எதுக்கு எனக்கு போன் பண்ணே

 

 

“உங்களை ஊருக்கு வரச்சொல்ல தான் போன் பண்ணேன்

 

 

“நிஜமாவா

 

 

“ஆமா நீங்க இல்லாம நான் வந்துட்டேன்னு ஆளாளுக்கு ஏதேதோ பேசிட்டாங்க. நான் உங்களோடவே வந்திருக்கணும்ன்னு கொஞ்சம் லேட்டா தான் எனக்கு புரிஞ்சுது மாமா

 

 

“மீனும்மா எனக்கு ஒரு சந்தேகம். நான் கண்டிப்பா உன்னை தேடி வருவேன்னு உனக்கு எப்படி தெரியும். நீ எல்லார்க்கிட்டயும் சொன்னதா கதிர் சொன்னான். உனக்கு எப்படி அவ்வளவு நிச்சயமா தோணிச்சு

 

 

“ஹ்ம்ம்… தெரியும்

 

 

“அதான்… எப்படி???

 

 

“நீங்க வருவீங்கன்னு தெரிஞ்சு தானே கிளம்பி வந்தேன். நீங்க யாருன்னு எனக்கு மட்டும் தெரிஞ்சா போதுமா??? எல்லாருக்கும் தெரிய வேண்டாமா???

 

 

“உண்மையை சொல்லுங்க நீங்க எனக்கு மட்டும் சொன்னா போதும்ன்னு நினைச்சிருப்பீங்க. என் மாமா யாருன்னு எல்லாருக்கும் சொல்ல வேண்டாமா??? மாமா பத்தி யாரும் பேசலைன்னாலும் எல்லாருக்கும் அவங்களை பத்தி நினைப்பு இருக்குங்க

 

 

“அதனால தான் கிளம்பி வந்தேன் மாமா, என்ன நான் மட்டும் தனியா வராம உங்களையும் கூட்டிட்டு வந்திருக்கணும். அப்போ ஒரு கோபம் வீம்பா கிளம்பி வந்திட்டேன்

 

 

“இல்லை நீங்க சொன்ன மாதிரி ரெண்டு நாள் கழிச்சு உங்களோடவே வந்திருக்கலாம், அது தான் நான் பண்ண தப்பு

 

 

“நீங்களாச்சும் ரெண்டு அடி போட்டு சொன்னா கேட்பீயா மாட்டியான்னு சொல்லி இருக்கலாம். உங்களுக்கு அவ்வளவு விவரம் பத்தலை மாமா என்றவளின் குரலில் பழைய கிண்டலும் கேலியும் வந்திருந்தது.

 

 

“ஓ!!! அடி தானே போடணும் இப்போ போடறேன் என்றவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

 

 

“நான் என்ன சொன்னேன் நீங்க என்ன செய்யறீங்க என்று சத்தமாக ஆரம்பித்து மெதுவாக முடித்தாள்.

 

 

“எனக்கு இப்படி தான் அடிக்க தெரியும். இனி நீ தப்பு செய்யும் போதெல்லாம் இதான் உனக்கு தண்டனை. தண்டனையை எதிர்த்து பேசினா தண்டனை பலமடங்காகும் என்றவன் அவளை தன் புறம் இழுத்து அவள் முகம் முழுவதும் முத்தம் பதித்தான்.

 

 

“ஆனா ஒண்ணு மீனு நீ சொன்னது சரி தான். உன்கிட்ட சொல்லாம இருக்க முடியலை அதான் நான் எல்லாமே உன்கிட்ட சொல்லணும்னு நினைச்சேன்

 

 

“ஆனா எப்போ உனக்காக உன்னை தேடி இங்க வரணும்னு முடிவு பண்ணேனோ அப்போவே எல்லாருக்கும் சொல்லணும்ன்னு நினைச்சுட்டேன் மீனு

 

 

“சாரி மாமா என்றவள் அவனிடம் மேலும் இறுக்கமாக அவன் மார்பில்  ஒண்டினாள்.

 

 

“உன்னை பார்க்கலாம்ன்னு ஆசையா தேடி வந்தா நீ பார்க்கவே விடமாட்டேங்குற

 

 

“அதான் எப்பவும் என்னை பார்க்கறீங்களே

 

 

“இப்போ உன்னை பார்க்கணுமே

 

 

“பார்த்திட்டே இருந்தா போதுமா???

 

 

“நான் வேறென்ன செய்ய முடியும் என்றான் பெருமூச்சுடன்.

 

 

“நீங்க ரொம்ப மக்கு மாமா

 

 

“ஹேய்… என்ன நான் உனக்கு மக்கா???

 

 

“பின்ன??? நானா???

 

 

“என்ன தான் சொல்ல வர்ற

 

 

“ஹ்ம்ம் இதை தான் சொல்ல வந்தேன் என்றவள் எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

 

“மீனு!!! என்று வியப்புடன் ஏறிட அவள் கண்கள் நிலம் தாழ்ந்து அவள் சம்மதத்தை சொல்லாமல் சொல்லியது.

 

 

அவள் இடையோடு கை சேர்த்து தன் பக்கம் சாய்த்தவன் அவள் முகம் நிமிர்த்தி இதழ் சிறை செய்தான். முத்தத்தில் தொடங்கிய அவர்கள் பயணம் தாம்பத்தியம் என்னும்  கடலில் முழ்கி முத்தெடுக்க ஆரம்பித்தது.

 

 

அதிகாலை விடியலில் மீனாவுக்கு விழிப்பு வர சோம்பலுடன் கண் விழித்தாள். சுஜய் அவள் மேல் கை போட்டு உறங்கிக் கொண்டிருக்க மெதுவாக அதை அவள் விலக்க முற்பட விழித்திருந்தவன் “எங்கே போற என்று மேலும் நெருக்கமாக அவளை அணைத்தான்.

 

 

“ப்ளீஸ் மாமா எழுந்திருக்கணும் என்னை விடுங்க

 

 

“முடியாது மீனு… இப்படியே இரேன் என்றவன் மீண்டும் அவன் குறும்புகளை தொடங்க “மாமா என்று சிணுங்கியவள் அவனை அதற்கு மேல் மறுக்கவில்லை.

 

 

“மாமா போதும் உங்க சேட்டை எல்லாம் இதோட நிறுத்திக்கோங்க. நான் கீழே போகணும்

 

 

“சரி போயிட்டு வா

 

 

“நான் போய் குளிச்சுட்டு உங்களுக்கு காபி எடுத்துட்டு வந்திடறேன். நீங்க அதுக்குள்ள பிரஷ் பண்ணிடுங்க மாமா என்றவள் வேகமாக படியிறங்கி கீழே சென்றாள்.

 

 

“அத்தை… அத்தை என்றவள் அழைக்க “சொல்லும்மா மீனா என்றார் அவர் பதிலுக்கு.

 

 

“நீ என்ன சொல்ல போறேன்னு தெரியும், பின்னாடி தொட்டியில தண்ணி வளாவி வைச்சிருக்கேன். போய் குளிச்சுட்டு வா, உம் புருஷனுக்கும் தண்ணி காய வைச்சிருக்கேன் சரி தானா

 

 

“சூப்பர் அத்தை… என் செல்ல அத்தை என்று செல்லம் கொஞ்சியவள் குளிக்க சென்றாள். அவள் குளித்துவிட்டு வர காமாட்சி காபியுடன் தயாராக இருந்தார். “இந்தா உங்க ரெண்டு பேருக்கும் காபி, அவருக்கு கொடுத்திட்டு நீயும் குடி என்றார்.

“அத்தை மாமா எங்க???

 

 

“மாமா காலையில வெள்ளேன எழுந்து முந்திரி தோப்புக்கு போயிட்டு அப்படியே துவரை காட்டுக்கும் போயிட்டு தான் வீட்டுக்கு வருவாங்க. தினமும் அது தானே செய்வாங்க

 

 

“என்ன மீனா திடீர்னு மாமாவை கேட்குற

 

 

“மாமா வரட்டும் அத்தை அப்புறம் பேசிக்கலாம் என்றுவிட்டு காபியை எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றாள்.

 

 

“என்ன மாமா பிரஷ் பண்ணிட்டீங்களா. இந்தாங்க இந்த காபியை குடிங்க என்று அவனிடம் காபி கோப்பையை நீட்டினாள்.

 

 

“ஹ்ம்ம் பண்ணிட்டேன் மீனு என்றவன் அவளிடம் இருந்த கோப்பையை வாங்கி காபியை அருந்தினான்.

 

 

“மாமா தண்ணி காய்ஞ்சு இருக்கும், குளிச்சுட்டு போய் பாட்டியை பார்க்கலாம்

 

 

“நானே சொல்லணும்ன்னு நினைச்சேன் மீனு. நான் போய் முதல்ல பாட்டியை பார்க்கறேன் அப்புறம் குளிக்கறேன்

 

 

“வேணாம் மாமா நீங்க முதல்ல குளிங்க அப்புறம் பாட்டியை ரெண்டு பெரும் சேர்ந்து போய் பார்க்கலாம். அவங்க நம்மை ஒண்ணா பார்த்தா சந்தோசப்படுவாங்க

 

 

“அதுவும் சரி தான் என்றவன் மீனுவுடன் கீழே இறங்கி சென்றான் குளிப்பதற்காக.

 

 

அவன் அப்புறம் சென்றிருக்க காமாட்சியிடம் வந்து நின்றாள் மீனு. “என்ன அத்தை எங்க தேனு, ஆளே காணோம்

 

 

“அவ இன்னும் எழுந்திருக்கலை மீனா

 

 

“என்னது இன்னும் எழுந்திருக்கலையா. அவளை… இருங்க எப்படி எழுப்பறேன்னு பாருங்க என்றவள் வேகமாக அவர்கள் இருந்த அறைக்கு வெளியில் நின்று கதவை தட்டினாள்.

“அடியே மீனு, இன்னுமா எழுந்துக்கலை நீ. எவ்வளவு நேரம் தூங்குவ நீ??? சீக்கிரம் எழுந்து வாடி

 

 

“பாட்டி நெத்திலி குழம்பு வைச்சு களி கிண்டி வைச்சு இருக்கு. வீடே மணக்குது என்று வெளியில் இருந்து அவள் சொல்லிக் கொண்டிருக்க தேனு கதவை திறந்தாள்.

 

 

“என்னக்கா சொல்ற பாட்டி காலையிலேயே நெத்திலி குழம்பு வைச்சு இருக்கா. நேத்து கூட இந்த கிழவி என்கிட்ட சொல்லாம விட்டிருச்சே என்று மீனாவின் காதை கடித்தாள்.

 

 

“சரி நீ வேகமா போய் பிரஷ் பண்ணிட்டு வர்றேன். வந்ததும் நீயும் நானும் சேர்ந்து ஒரு பிடி பிடிப்போம். ஆமா மீனாக்கா வீடே வாசம் அடிக்குதுன்னு சொன்னியே ஒரு வாசமும்… என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க மீனா வாய்விட்டு நகைத்தாள்.

 

 

தேனுவின் முகம் சுருங்கி விட “அப்போ நீ சும்மா தான் சொன்னியா. என்னை எழுப்பறதுக்கு. உன்னை… என்று அவளை துரத்த ஆரம்பித்தாள்.

 

 

மீனா அவள் கைக்கு அகப்படாமல் ஓட குளித்துவிட்டு வந்த சுஜய்யின் மீது மோதி நின்றாள். தேனு அருகில் வந்துவிட “மாமா என்னை காப்பாத்துங்க இவ என்னை அடிக்க வர்றா என்று அவன் பின்னே சென்று நின்றாள்.

 

 

“அட மாமா!!! நீங்க எப்போ வந்தீங்க???”

 

 

“நான் நேத்து நைட்டே வீட்டுக்கு வந்துட்டேன், ஆமா என்ன சங்கதி நீ என் பொண்டாட்டியை எதுக்கு துரத்திட்டு வர்ற

 

 

“மாமா நீங்க எதுவும் பேசாதீங்க. இந்த அக்கா சுத்த மோசம் என்ன பண்ணுச்சு தெரியுமா என்றவள் மீனாவை முறைத்தவாறே நடந்ததை சொன்னாள்.

 

 

“இதுக்கா தேனு நீ மீனு துரத்துற

 

 

“பின்ன என்ன மாமா இப்படி என்னை ஆசை காட்டி மோசம் பண்ணலாமா

 

 

“இதுக்கு உங்கக்காவுக்கு நாம தண்டனை கொடுத்திடலாம்

 

 

“என்ன மாமா அவளோட சேர்ந்திட்டு எனக்கு தண்டனையா என்று முறைத்தாள் மீனா.

 

 

“இல்லை மீனு செல்லம், தண்டனைன்னா நீ பெரிசா நினைக்காதே. சின்ன தண்டனை தான் அவளை நீ ஏமாத்தினது தண்டனையா அவகிட்ட நீ என்ன சொன்னியோ அதை நீயே அவளுக்கு செஞ்சு கொடுத்திடு

 

 

“அய்யோ!!! சூப்பர் மாமா… சூப்பர் மாமா… இதுவல்லவோ தண்டனை. கலக்கிட்டீங்க போங்க என்றாள் தேனு.

 

 

“சரி சரி செஞ்சு தர்றேன் இவளுக்காக இல்லை. நீங்க சொன்னீங்கன்னு தான் மீனா.

 

 

“மாமா… என்ன நடக்குது இங்க உலக அதிசயம் ஏதோ ஒண்ணு நடந்திருக்கு போல இருக்கே– தேனு

 

 

“ஏன் தேனு அப்படி சொல்ற

 

 

“அக்கா நீங்க சொன்னதை கேட்குறாளே. இந்நேரம் நீங்க எதாச்சும் சொல்லியிருந்தா அக்கா உங்களை முறைச்சு இருக்கணும். பதிலுக்கு பதில் சொல்லி இருக்கணுமே. அப்படி எதுவும் நடக்கலையே என்று அதிசயமாக பார்த்தாள் இருவரையும்.

 

 

“சும்மா போடி எங்க ரெண்டு பேரையும் பார்த்து கண்ணு வைக்கிறா என்று சொல்லிவிட்டு சுஜய்யை தள்ளிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

 

 

“வாங்க மாமா பாட்டியை பார்த்திட்டு வந்திடலாம் என்றுவிட்டு பாட்டியின் அறைக்குள் நுழைந்தனர் இருவரும்.

 

 

“வாங்கய்யா!!! வாங்க எப்போ வந்தீங்க என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறினார் பாட்டி மீனாட்சி.

 

 

“நேத்து நைட் வந்தேன் பாட்டி. நீங்க எப்படி இருக்கீங்க???

 

 

“நல்லாயிருக்கேன்ய்யா… ஏன்யா இவ்வளோ தாமசமா வந்தீங்க. பாவம் எம்பேத்தி எல்லாரும் அவளை வாய்க்கு வந்த மாதிரி பேசிட்டாங்கய்யா. நீங்களும் அவளோட வந்திருக்கலாம்லய்யா

 

“உங்க பேத்தி இருக்காளே நான் சொன்னா எங்க கேட்கிறா பாட்டி??? எனக்கு இப்போவே பாட்டியை பார்க்கணும் ஊருக்கு போகணும்னு ஒத்த கால்ல நின்னுட்டா

 

 

“நான் வர்றதுக்கு ரெண்டு நாள் ஆகும் அப்புறம் போகலாம்ன்னு சொன்னா கேட்கலை. அதான் பாட்டி தேனுவையும் கதிரையும் கூட அனுப்பி வைச்சேன். பின்னாடியே நானும் வந்திட்டேன். இப்போ சந்தோசமா பாட்டி

 

 

“சந்தோசமா இருக்குய்யா

 

 

“ஏன் கிழவி நான் வந்தப்போ கூட நீ இவ்வளவு சந்தோசப்படலை. இவர் வந்ததுக்கு நீ இவ்வளவு பில்டப் கொடுக்கிறியே

 

 

“அடி போடி இவளே என்று பேத்தியை செல்லமாக ஒன்று முதுகில் வைத்தவர் சுஜய்யை பார்த்து “சாப்பிட்டீங்களாய்யா என்றார்.

 

 

“இல்லை பாட்டி இனிமே தான்

 

 

“சரிய்யா நீங்க போய் சாப்பிடுங்க

 

 

“சரி பாட்டி என்றவாறே இருவரும் பாட்டியிடம் விடைபெற்று வெளியில் வந்தனர்.

 

 

சுஜய் தனியே கூடத்தில் அமர்ந்து அன்றைய செய்திதாளை புரட்டிக் கொண்டிருக்க மீனா பின்கட்டில் காமாட்சியுடன் வேலை செய்துக் கொண்டிருந்தாள்.

 

முருகேசனுக்கும், திலகவதிக்கு காலையிலேயே போன் செய்திருந்தவள் அவர்களை வீட்டுக்கு வருமாறு கூறியிருந்தாள்.

 

 

“என்ன மீனா சித்தப்பா சித்திக்கு போன் பண்ணி வீட்டுக்கு வரச்சொல்லி இருக்க, என்ன விஷேசம் மீனா

 

 

“ஹ்ம்ம்… அது… சொல்றேன் அத்தை. எல்லாருக்கும் சொல்லும் போது உங்களுக்கும் சொல்லிடறேன்

 

 

“ஏதோ பெரிய விஷயமா இருக்கும் போல இருக்கே

 

“ஆமா அத்தை என்றுவிட்டு அமைதி காத்தாள்.

 

 

காமாட்சியும் மேற்கொண்டு எதுவும் தோண்டி துருவாமல் அந்த பேச்சை அத்துடன் விட்டு வேறு பேசலானார். “உன் புருஷன் ஊர்ல இருந்து வந்ததும் தான் உன் முகமே தெளிவா இருக்கு

 

 

“இப்போ உன்னை பார்க்க எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா என்றார் அவர்.

 

 

காமாட்சிக்கு எப்போதுமே மீனாவின் மேல் ஒரு பிரியம் உண்டு. பசும்பொன் பிறப்பதற்கு முன்பு வீட்டில் இருந்த பெண் வாரிசு அவள் என்பதால் எல்லோருமே அவளிடம் தனிப்பிரியம் கொண்டிருந்தனர்.

 

 

மீனாவும் அவரிடம் நன்றாகவே ஒட்டிக் கொண்டு அவர் எங்கு சென்றாலும் அவருடனே செல்லுவாள். காமாட்சிக்கு மட்டுமல்ல ராஜேந்திரனுக்கும் மீனாவின் மேல் கொள்ளை பிரியம் உண்டு.

 

 

அவளை யாரும் எதுவும் சொல்ல விடமாட்டார்.  அவள் பேச்சுக்கும் பசும்பொன் பேச்சுக்கும் மட்டுமே அவர் ஓரளவு செவி சாய்ப்பார் என்பதால் வீட்டில் உள்ளவர்கள் பெரும்பாலும் அவர்களை வைத்தே நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வர்.

 

 

காமாட்சி பேசியதும் திரும்பி அவர் முகத்தை பார்த்தாள் மீனா. அவளின் மகிழ்ச்சியை கண்டு அவர் முகத்தில் நிம்மதி தெரிந்ததை கண்டு வியந்தாள். “எப்படி அத்தை என் மேல உங்களுக்கு இவ்வளவு பிரியம் வந்துச்சு

 

 

“ரெண்டு நாள் முன்னாடி நான் சரியா இல்லைன்னு என்னை பார்த்ததும் நீங்க சரியா சொல்லிட்டீங்க. இப்போ நான் சந்தோசமா இருக்கேன்னும் சரியா சொல்லுறீங்க

 

 

“உன்னை எனக்கு தெரியாதா மீனாம்மா. அப்போலாம் நான் சிரிச்சா நீ சிரிப்ப, உங்க மாமா என்னை எதுவும் சொல்லிட்டா அவர் கூட பேசக் கூட மாட்டே. அவரை சத்தம் போடுவே

 

 

“இப்படி என்னோட ஒவ்வொரு அசைவும் உனக்கு அப்போ தெரிஞ்சி நீ என்னை கவனிச்சு வளர்ந்த. என் கண்ணு முன்னாடி வளர்ந்த பொண்ணு நீ. உங்க வீட்டுல நீ இருந்ததை விட இங்க தான் அதிக நேரம் இருப்பே

 

 

“மீனாம்மா எனக்கு நீ தான் எனக்கு முதல் பொண்ணும் கூட, அதுனால தான் நீ கதிரை கல்யாணம் பண்ணிக்க மறுத்தப்போ கூட நான் அதிகம் பேசலை

 

 

மீனா அவர் தோளில் சலுகையாய் சாய்ந்துக் கொண்டு “என் செல்ல அத்தை என்று கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

 

 

“என்னை கொஞ்சறதை விட்டுட்டு நீ போய் உன் புருஷனை கவனி என்று அவளை விரட்ட “போங்க அத்தை அதெல்லாம் அவரே அவரை கவனிச்சுக்குவார். நான் வேற அவரை தனியா கவனிக்கணுமா

 

 

“நீ கவனிக்காம வேற யார் கவனிப்பாங்களாம்

 

 

“சரி சரி போறேன் அத்தை… டிபன் வேலை முடிச்சுட்டு போறேன் என்று அவருடன் நின்று சமையலை கவனிக்க ஆரம்பித்தாள்.

 

 

தோட்டத்திற்கு சென்றிருந்த ராஜேந்திரன் அப்போது தான் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார். காலையில் அவர் எழுந்து வெளியில் செல்ல கிளம்பும் போதே மீனாவின் கணவர் முன்தினம் இரவு வீட்டுக்கு வந்திருக்கார் என்று காமாட்சி சொன்னது நினைவுக்கு வந்தது.

 

 

அவரின் எண்ணம் என்னவென்றால் இருவரும் ஏதோ சண்டையிட்டு கொண்டிருக்க மீனா கோபித்துக் கொண்டு வந்துவிட்டாள் என்றே அவர் நினைத்துக் கொண்டிருந்தார்.

 

 

அதனாலேயே சுஜய் மீது அவர் கோபமாக இருந்தார். அதே கோபத்தில் வீட்டுக்குள் அவர் நுழைய கதிருடன் பேசிக் கொண்டிருந்த சுஜய் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றவன் “எப்படியிருக்கீங்கப்பா என்றான்.

 

 

“ஹ்ம்ம் இருக்கேன் என்று முறைப்புடன் பதில் வந்தது அவரிடம் இருந்து.

 

 

“என்ன பொண்டாட்டியை திட்டி அனுப்பிட்டு பின்னாடியே வந்திருக்கீங்களா கூட்டிட்டு போக. இப்போ சமாதானம் பேச வந்தா நாங்க எதுவும் பேசாம அப்படியே அனுப்பிடுவோமா எங்க பிள்ளையை என்று வார்த்தையை கொட்ட ஆரம்பித்தார் அவர்.

 

 

அவன் ஏதோ சொல்ல வருவதை கவனிக்காதவர், கதிரின் “அப்பா என்றஅழைப்பையும் பொருட்படுத்தாது அவரே பேச ஆரம்பித்தார் “என்ன சொல்லப் போறீங்க அப்படிலாம் இல்லைன்னு ஒரு சாக்கு சொல்லுவீங்க

“பொண்ணு கேட்கும் போது மட்டும் நல்லா பகுமானமா பேசத் தெரியுது. ஆனா எங்க பொண்ணை கண்ணு கலங்காம பார்த்துக்க தெரியலை

 

 

“இதுக்கு தான் நான் அப்போவே சொன்னேன், அப்பா அம்மா இல்லாத ஊர் பேரு தெரியாதவனுக்கு எல்லாம் பொண்ணு கொடுத்தா இப்படி தான் ஆகும்ன்னு. ஒண்ணுக்குள்ள ஒண்ணுன்னு இருந்திருந்தா இப்படி ஆகியிருக்குமா

 

 

“யாரு கேட்டாங்க என் பேச்சை, எங்கய்யா, அம்மா என் புள்ளைன்னு யாரும் எம் பேச்சை கேட்கலை என்று அவர் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க உள்ளிருந்த மீனாட்சி பாட்டி வேகமாக வெளியில் வந்தார்.

 

 

வாசலில் ராஜேந்திரனின் குரல் உரத்துக் கேட்கும் போதே என்னவோ ஏதோவென்று பின்கட்டில் இருந்து வந்தனர் மீனாவும் காமாட்சியும்.

 

 

ராஜேந்திரன் பேசியதில் கோபமடைந்த மீனா அவருக்கு பதில் சொல்லும் முன் அங்கு மீனாட்சி பாட்டி பேச ஆரம்பித்துவிட்டார்.

 

 

“யாரை பார்த்து ராசேந்திரா இப்படி சொன்னே. அது யாருன்னு தெரியாம கண்டபடி வார்த்தையை விடாதே என்று கோபமாக பேச “யாரும்மா இவர் யாரு நம்மளுக்கு நான் இவரை சொன்னா நீங்க என்னமோ கோபமா என்கிட்ட சண்டைக்கு வர்றீங்க

 

 

“நம்ம புள்ளையை ஒழுங்கா பார்த்துக்க தெரியாம நம்ம வீட்டுக்கு அனுப்பி விட்ட தற்குறி தானே இவன் என்று இரைந்தார் அவர்.

 

 

“வாயை மூடுடா, அவரை எதுவும் பேச உனக்கு அருகதையே இல்லை. இது யாரு தெரியுமா இந்த வீட்டோட முதல் ஆண் வாரிசு. என் மூத்த மகன் கந்தசாமியோட ஒரே பிள்ளை. என்னோட மூத்த பேரன் என்றவர் கண்ணீருடன் சுஜய்யின் அருகில் சென்று நின்றார்.

 

 

சுஜய் உட்பட அங்கு அனைவருமே அதிர்ந்து நின்றிருந்தனர்.

 

 

  • காற்று வீசும்

Advertisement