Advertisement

 

அத்தியாயம் –2

 

 

ஒரு வருடம் கடந்த நிலையில் ஊருக்கு போய்விட்டு சோகமாக திரும்பி வந்தான்கதிரேசன். அன்று விடுமுறை தினம் என்பதால் சுஜய் வீட்டிலிருக்க, கதிரேசன் வருத்தமாக இருப்பது போல் தோன்ற “என்ன கதிர், ஊருக்கு கல்யாணத்துக்கு தானே போனேகல்யாணம் எப்படி நடந்துச்சு என்று விசாரித்தான்.

 

 

“என்னனே தெரியலைண்ணே இந்த கல்யாணமும் நின்னு போச்சு. அதுனால என்னென்னமோ நடந்து போச்சு என்று விரக்தியாக சொன்னான் அவன். “நான் ஏன் ஊருக்கு போனேன்னு எனக்கு தெரியலை, போகாமலே இருந்திருக்கலாம் என்றான் மேலும் கவலையாக.

 

 

“என்னாச்சு கதிர் உன் மனசுல இருக்கறதை சொல்லு, உன் கவலையாச்சும் குறையும் என்றான் சுஜய். “இந்த முறையும் கல்யாணம் நின்னு போச்சுண்ணே. அந்த கல்யாண மாப்பிள்ளை கல்யாணத்துக்கு ட்ரீட் வைக்கிறேன்னு சொல்லி பயங்கரமா குடிச்சுட்டு வண்டி ஓட்டி விபத்து நடந்து இரண்டு நாளா ஆஸ்பத்திரில இருந்து அப்புறம் இறந்து போனான். அவன் பண்ண தப்புக்கு மறுபடியும் மீனா தான் பலிக்கடாவா ஆக்கிட்டாங்க

 

 

“இந்த முறையும் கல்யாணம் நின்னு போனதுல எல்லாரும் காதுபடவே பேச ஆரம்பிச்சுட்டாங்க மீனாவோட கெட்ட நேரம் தான் இப்படி ஆக காரணம்ன்னு, வீட்டில எல்லாருமே மனசொடிஞ்சு போய்ட்டாங்க. பாட்டி திடிர்னு வந்து என் கால்ல விழாத குறையா கெஞ்சினாங்க என்று நிறுத்தினான் அவன். சுஜய் என்ன என்பது போல் அவனை பார்த்தான்.

 

 

“எனக்கும் மீனாக்கும் ஒரே வயசு தான், மீனா என்னை விட பதினைஞ்சு நாளு பெரியவ, இந்த வித்தியாசம் ஒண்ணும் பெரிசில்லை, அதுனால நீ தான் மீனாவை கல்யாணம் பண்ணிக்கணும். என் பேத்திக்கு எந்த கெட்ட பெயரும் வராம காப்பாத்துன்னு ஒரே அழுகை

 

 

“பாட்டி, தாத்தா, அம்மா, அப்பா, மாமா அத்தைன்னு எல்லாருமே ஆளாளுக்கு கெஞ்ச ஆரம்பிச்சுட்டாங்க, வேற வழி இல்லாம நானும் மீனாவும் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டோம் என்றான் அவன்.

 

 

“என்ன கதிர் இதுக்கு போய் யாராச்சும் வருத்தப்படுவாங்களா. இது சந்தோசப்பட வேண்டிய விஷயமாச்சே. அப்புறம் எப்போ கல்யாணம் என்றான் சுஜய். “அண்ணே என்னண்ணே நீங்க நான் மீனாவை அந்த மாதிரி நினைச்சே பார்க்கலை, சின்ன வயசுல இருந்தே ஒண்ணா வளர்ந்ததுனால எங்களுக்குள்ள எந்த எண்ணமும் வந்ததில்லை

 

 

“இப்போ கூட வேற வழியே இல்லாம தான் ஒத்துக்கிட்டேன். கல்யாணம் இப்போ பண்ணிக்க மாட்டேன், ஒரு வருஷம் ஆகட்டும்ன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். நான் இந்தளவுக்கு சம்மதிச்சதே பெரிசுன்னு வீட்டில கொஞ்சம் அமைதியாகிட்டாங்க

 

 

“எதுக்கு ஒரு வருஷம்ன்னு சொல்லிட்டு வந்திருக்க என்றான் சுஜய். “அதுக்குள்ள மீனாக்கு வேற நல்ல மாப்பிள்ளை கிடைப்பான்னு தான் அப்படி சொன்னேன் என்றான் கதிர்.

 

 

“சரி வருத்தப்படாதே, உன் மனசு போல நடக்கும். உனக்கு வேற யார் மேலயாச்சும் விருப்பமிருக்கா என்றான் சுஜய். “அதெல்லாம் இனிமே பேச முடியாதுண்ணே. என்ன நடக்கணும்னு இருக்கோ இனி அது தான் நடக்கும் என்றான் கதிர்.

 

 

“என்கிட்ட சொல்லமாட்டியா கதிர் என்றான் சுஜய். “அப்படிலாம் ஒண்ணுமில்லை அண்ணே, எனக்கு என் சின்ன மாமா பொண்ணு தேனுவை பிடிக்கும். ஆனா இப்போ அது எதுவும் நடக்காதுண்ணே என்றான் வருத்தம் தோய்ந்த குரலில். சுஜய் அவன் தோளில் ஆறுதலாக கை வைத்தான். “நீ நினைச்சது நடக்கும் கதிர், நான் இருக்கேன் என்று சுஜய் ஆறுதலாக சொன்னான், அவனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை, அவனே அதற்கு காரணமாக இருக்கப் போகிறான் என்று.

 

____________________

 

 

“அம்மா நான் தண்ணிக்கு போயிட்டு வர்றேன் என்று நான்கு குடங்களை தூக்கிக் கொண்டு கிளம்பினாள் மீனா. “ஏய் மீனா போனமா வந்தமான்னு இரு, யார்க்கிட்டயும் வாயை கொடுத்து வம்பு சண்டையை வளர்த்திட்டு வராதே. ஏற்கனவே நாம எல்லார் வாய்க்கும் அவலாகி இருக்கோம்.

 

 

“அதுக்கு மேல நீ வேற வம்பு இழுத்து வைக்காதே, சூதானமா போயிட்டு வாஎன்று அவள் தாய் கூற “இம்ம் சரிம்மா, எப்போ பார்த்தாலும் இதே சொல்லிட்டு என்று அவள் கிளம்ப இன்னும் சற்று நேரத்தில் வம்புடன் வருவாள் என்று மாலதி அப்போது அறியவில்லை.

 

 

அவள் தண்ணீர் பிடிக்கும் குழாயடிக்கு செல்ல அங்கு நின்றிருந்த இரு பெண்களில் ஒரு பெண் மூக்கை உறிஞ்சிக்கொண்டும் கண்ணீரை துடைத்துக் கொண்டும் நின்றிருக்க அருகில் நின்றிருந்த மற்றொரு பெண் அவளிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள்.

 

 

“என்ன ராசியக்கா எதுக்கு அழற, யார் உன்னை என்ன சொன்னாங்க என்று அழுது கொண்டிருந்தவளின் அருகில் நின்றிருந்தவளை பார்த்துக் கொண்டே கேட்டாள் மீனா. “நீ சின்ன பொண்ணு மீனா இந்த கதை எல்லாம் உனக்கெதுக்கு நீ வந்தமா தண்ணி பிடிச்சமா போனமான்னு இரு என்றாள் அழுது கொண்டிருந்த ராசி.

 

 

“அப்போ இந்த மாரியக்கா தான் ஏதோ சொல்லியிருக்கு, என்ன மாரியக்கா உனக்கு வேற வேலையே இல்லையே. என்ன சொல்லி எங்க அக்காவை அழுக வைச்சே என்று நேரடியாகவே மாரியை பார்த்து கேட்டாள்.

 

 

“ராசி உண்மையை சொன்னதுக்கு எனக்கு இந்த பேரா, இதெல்லாம் நீ கேட்க மாட்டியா. இந்த சண்டைக்காரி சண்டைகோழியா என்கிட்ட வந்து சிலுப்பறா என்று ராசியிடம் பேசினாள் அந்த மாரி.

 

 

“மீனா நீ சும்மா இருக்க மாட்டே, ஏதோ இந்த அக்கா சொல்லன்னா உன் மாமனை பத்தி எனக்கு தெரியாம போயிருக்கும். அந்த மனுஷன் பண்ண வேலைக்கு நான் நாண்டுக்கிட்டு தான் சாகணும் என்றவள் மேலும் அழுதாள்.

 

 

“யக்கோவ் நீ இப்போ என்ன நடந்துச்சுன்னு சொல்லப் போறியா இல்லையா. உனக்கு எப்போ பார்த்தாலும் மாமனை சந்தேகப்படுறதே வேலையா போச்சு. சொல்லு இந்த அக்கா நீ அழற அளவுக்கு உன்கிட்ட மாமானை பத்தி என்ன சொல்லிச்சு என்றாள் மீனா.

 

 

“நேத்து உன் மாமனை மாரி அக்கா புருஷன் அந்த மேற்கால துவரை காட்டுக்கு பக்கத்துல இருக்க பரிமளா வீட்டுக்கு போறதை பார்த்தாராம். அதை அந்த அண்ணன் இவங்ககிட்ட சொல்லி இருக்காங்க. அக்கா தான் மனசு கேட்காம என் புருஷனை இழுத்து பிடிக்க சொல்லி என்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்துச்சு

 

 

“என் புருஷனுக்கு நான் என்ன குறை வைச்சேன், எதுக்கு அந்த மனுஷன் இந்த வேலை பார்த்தான் தெரியலை. அந்த பரிமளா ஒரு மாதிரின்னு ஊரே சொல்லுது இந்த மனுஷன் அவ வீட்டுக்கு போய்ட்டு வந்து என் குடி கெடுத்தானே என்று மீண்டும் ஒரு மூச்சு அழத்தயாரானாள்.

 

 

“ஏன் மாரியக்கா உன் புருஷன் என்ன சொன்னாலும் நீ அப்படியே நம்பிடுவியா. உன் புருஷன் ரொம்ப தப்புக்கா, சொல்லி வை அந்த ஆளுக்கிட்ட என்று மீனா சொல்ல “ஏய் யாருடி நீ என் புருஷனை குறை சொல்ல வந்துட்ட, அந்த மனுஷன் தங்கம்டி. இவ புருஷன் மாதிரி இல்லை என்று அவளும் பதிலுக்கு பாய்ந்தாள்.

 

 

“எங்க மாமானை தப்பா பேசினா உன் நாக்கும் உன் புருஷன் நாக்கும் சேர்ந்து அழுகிடும். ராசியக்கா உன் புருஷனை நீ புரிஞ்சுகிட்டது அவ்வளவு தானா, இந்த அக்கா புருஷன் பொய் சொல்றாரு. நேத்து அவர் தான் அந்த பரிமளா வீட்டுக்கு போனாரு இதை நானே பார்த்தேன் என்று மீனா சொல்ல அந்த மாரி கோபமானாள்.

 

 

“ராசியக்கா உனக்கு என்னை பத்தி நல்லா தெரியும், மாமன் தப்பு பண்ணிச்சுன்னா அது கழுத்துல துண்டை போட்டு ஏன் இப்படி செஞ்சேன்னு நானே கேட்பேன். நான் பொய் சொல்லமாட்டேன் உனக்கு அது நல்லாவே தெரியும் தானே, நம்ம ஊரு காளியாத்தா மேல சத்தியம் நேத்து அந்த வீட்டுக்கு மாரியக்கா புருஷன் போனதை நானே பார்த்தேன்

 

 

“மாமன் அதே தெருவுல எதிர்த்தாப்புல இருந்த ஒரு கடையில யாரோ தெரிஞ்சவங்ககிட்ட பேசிட்டு இருந்துச்சு. நான் என் சினேகிதி கலாவை பார்க்க போயிருந்தேன். அப்போதேன் மாரியக்கா புருஷன் அந்த பரிமளா வீட்டுக்கு போறதை பார்த்தேன்

 

 

“மாமனும் இந்தக்கா புருஷன் அந்த பொம்பளை வீட்டுக்கு போறதை பார்த்திச்சு. அது மனுஷன், பார்த்ததோடவிட்டுச்சு இப்படி அடுத்தவன் குடியை கெடுக்கணும்ன்னு அது நினைக்காம விட்டதுக்கு அது குடியவே கெடுக்க பார்த்திருக்கான் இந்தக்கா புருஷன்

 

 

“அவன் ஒரு நாள் என் கண்ணுல மாட்டட்டும் அன்னைக்கு இருக்கு அவனுக்கு என்கிட்ட என்று கருவினாள் மீனா. “ஏன் ராசிக்கா நீ என்னைக்கு தான் மாறப்போறே, உனக்கு என்ன தான் பிரச்சனை மாமன் கலரா இருக்கு நாம நிறம் கம்மியா இருக்கோமேன்னே

 

 

“ஆனா உனக்கு ஏன் குத்த உணர்ச்சி, மாமன் கட்டினா உன்னை தான் கட்டுவேன்னு உன்னைய ஆசைப்பட்டு கட்டிக்கிச்சு. ஆனா நீ எங்க மாமனை தினமும் பேசியே கொல்ற, உன்னை விரும்பி கட்டிகிட்ட உன் மாமன் போய் உனக்கு துரோகம் பண்ணுமா

 

 

“இது ஏன் உனக்கு புரியலை, புருஷனை புரிஞ்சு நடந்துக்க வேண்டியவங்க நீங்க ரெண்டு புரியாம நடக்குறீங்க. புருஷனை நம்பாம நீயும், புருஷனை அளவுக்கு அதிகமா நம்புற மாரியக்காவும் இப்படியே இருக்கறது சரியில்லை

 

 

“மாரியக்கா உன் நல்லதுக்கு தான் சொல்றேன் உன் புருஷனை விசாரி, எங்க போறான் வர்றான்னு கவனி. இல்லைன்னா நாளைக்கு நீ கண்ணை கசக்கிட்டு தான் நிற்க வேண்டி இருக்கும் சொல்லிட்டேன் பார்த்துக்கோ என்று மாரியை பார்த்து கூறினாள் இப்போது.

 

 

“நீ யாருடி என் புருஷனை வேவு பார்க்க சொல்றவ, உனக்கு ஒருத்தன் கிடைக்கலைன்னு ஊர்ல புருஷனோட வாழ்றவளை இப்படி தான் பிரிக்க பார்ப்பியா என்று வாயில் வந்ததை வார்த்தையாக்கி அவள் வசைபாட துவங்க, “ராசிக்கா நீ வீட்டுக்கு கிளம்பு, இனியாச்சும் மாமனை ஒழுங்கா கவனி. அடுத்த பத்தாம் மாசம் நீ என்னை சித்தி ஆக்கிரணும் புரியுதா

 

 

“என்னக்கா வேடிக்கை அவக்கிடக்குறா அவளுக்கு தான் வாய் இருக்குன்னு பேசுறா, இதுக்கெல்லாம் நின்னு பதில் சொல்ல முடியாது. நான் தண்ணியை பிடிச்சுட்டு கிளம்புறேன் என்று மீனா அவள் பாட்டுக்கு தண்ணி பிடித்துக் கொண்டிருந்தாள்.

 

 

மாரியோ சும்மா இல்லாமல் மீனா வீட்டிற்கு செல்வதற்குள் அவள் வீட்டிற்கு சென்று ஒரு மூச்சு வசைபாடி விட்டு சென்றாள். தண்ணியை எடுத்துக் கொண்டு மீனா வீட்டிற்கு செல்ல அவள் அன்னை அழுது கொண்டு உட்கார்ந்திருந்தார்.

“யம்மா எதுக்கும்மா அழுத்துக்கிட்டு இருக்க, அந்த மாரியக்கா இங்க வந்து என்ன சொல்லிட்டு போச்சு என்றாள் மீனா. “சொல்லிட்டு போனாளா, குடும்பத்தையே சடவடிச்சுட்டு போறா அவ. நீ எதுக்குடி அவகிட்ட எல்லாம் வம்பு வளக்குற. உன்னை என்ன சொல்லி அனுப்பினேன். போனமா வந்தாமான்னு இருன்னு தானே சொன்னேன். அவகூட சண்டை போட்டிருக்க அவ இங்க வந்து என்னெல்லாம் பேசிட்டு போறா தெரியுமா என்று மேலும் அழுதார் அவர்.

 

 

“யம்மோவ் நீ இப்போ என்னன்னு சொல்லப்போறியா இல்லையா என்று அவள் குரலெடுக்கவும், “என்ன சொன்னா இந்த ஜென்மத்துல உனக்கு கல்யாணமே நடக்காதுன்னு சொல்லி என் தலையிலே மண்ணை அள்ளி போட்டுட்டு போறா என்று அவர் மூக்கை உறிஞ்சினார்.

 

 

“அவ்வளோ தானா இதுக்கா நீ இப்படி அழுதுகிட்டு இருக்க, அடப்போம்மா இவ ஒரு ஆளுன்னு நீ இவ பேச்சை கேட்டு அழறியே. இவ சொன்னா எல்லாம் பலிக்காதும்மா. நான் ஒண்ணும் எந்த தப்பும் செய்யலை, அதுனால எனக்கு எந்த கவலையும் இல்லை என்று விட்டு அவள் அடுத்த குடத்தை எடுத்துவர சென்று விட்டாள்.

 

 

“இவளுக்கு என்னைக்கு தான் பொறுப்பு வரும், நான் ஒருத்தி இங்க கிடந்து வெந்துகிட்டு இருக்கேன். எதுவுமே நடக்காத மாதிரி இவ பாட்டுக்கு போறாளே. கடவுளே இவளை நல்லபடியா ஒருத்தன் கையில பிடிச்சுக் கொடுக்கணும். அதுவரை இவ எந்த வம்பு தும்புக்கும் போகக்கூடாது ஆத்தா என்று வேண்டிக் கொண்டிருந்தார் அவர்.

 

 

மேலும் ஒரு வருடம் கடந்திருக்க வயல்பட்டியில் திருவிழா கொண்டாடும் நாளும் நெருங்கி வந்தது. இன்னும் பதினைந்து நாட்களில் திருவிழா என்று இருக்க மீனாவின் வீட்டு பெரியவர்கள் கலந்தாலோசித்து மீனாவுக்கும் கதிரேசனுக்கும் திருவிழா முடிந்ததும் திருமணம் என்று பேசி வைத்துக் கொண்டனர்.

 

 

அந்த விஷயத்தை மீனாட்சியிடமும் கதிரேசனிடம் மட்டும் சொல்லியிருக்கவில்லை. எங்கே அவர்கள் இன்னும் கொஞ்ச நாட்கள் செல்லட்டும் என்று சொல்லி விடுவார்களோ என்று நினைத்தவர்கள்   திருவிழாவிற்கு கதிரேசன் வந்ததும் சொல்லிக் கொள்ளலாம் என்று மீனாட்சி சொல்லிவிட மற்றவர்களும் அதை ஆமோத்தித்து அமைதி காத்தனர்.

 

 

மீனாட்சி பேரனுக்கு போன் செய்தார் “கதிரேசா எப்படிய்யா இருக்க, உன்னைய பார்க்கணும்ய்யா கண்ணுக்குள்ளேயே இருக்கய்யா. உங்க தாத்தன் கூட உன்னை பாக்கணும்னு சொல்லிட்டு இருக்காங்க. திருவிழா வருதுல்ல லீவை போட்டுட்டு கொஞ்சம் முன்னமே வந்துடுப்பா என்றார் அவர்.

 

 

“சரி பாட்டி நான் இங்க சார்கிட்ட பேசிட்டு சீக்கிரமே ஊருக்கு வரேன். திருவிழாக்கு வரணும்ன்னு தான் நான் லீவ் போடாம இருக்கேன். நீ ஒண்ணும் கவலைப்படாதே நான் அடுத்த வாரம் அங்க இருப்பேன். எல்லாரையும் கேட்டதா சொல்லு பாட்டி என்றான் அவன்.

 

 

“கதிரேசா அப்புறம் உன்கூட ஒரு சாரு இருப்பாருன்னு சொன்னியே அவுங்களையும் திருவிழாக்கு வரச்சொல்லு, உன் சிநேகித புள்ளைங்களும் கூட்டிட்டு வாய்யா. அவங்களும் திருவிழாவை பார்ப்பாங்கள்ள என்றார் அவர்.

 

 

“நானும் சாரை கூப்பிட்டு தான் இருக்கேன். எங்க வர்றாங்க, இந்த வட்டம் கண்டிப்பா கூட்டிட்டு வர்றேன் பாட்டி என்றுவிட்டு போனை வைத்தான் அவன். “என்ன கிழவி யார்ட்ட பேசிட்டு இருக்க என்று உள்ளே வந்தாள் மீனா.

 

 

“எல்லாம் உன் புருஷன்கிட்ட தான் என்றார் மீனாட்சி. “என்ன கிழவி உளர்ற என்றாள் மீனா. “எம் பேரன் கதிரேசனை தான்டி சொன்னேன் என்றார் அவர். “கிழவி கல்யாணம்னு ஒண்ணு நடந்த பிறகு அப்படி சொல்லிக்கோ. நீ பாட்டுக்கு இப்படி பேசி வைச்சே அப்புறம் நான் கடுப்பாகிடுவேன் என்றாள் அவள்.

 

 

“எங்கயோ கிளம்பிட்டாபுல இருக்கு எங்க என்றார் பாட்டி. “வீரபாண்டிக்கு போறேன், சும்மா அங்கன போய் ஜாலியா குளிச்சுட்டு வரலாம்ன்னு என்றாள் அவள். “உனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு, பொம்பளைப்பிள்ளை தனியாவா போவாங்களா

 

 

“கல்யாணம் வேற ஆகப்போகுது உங்கம்மா எப்படி உன்னை விட்டா என்றார் மீனாட்சி. “அதெல்லாம் அம்மாகிட்ட சொல்லியாச்சு, என்கூட கலாவும் நம்ம மிலிட்டரிக்காரர் பொண்டாட்டி ராசம்மாக்கா வருது. நீ பேசாம இரு நான் போனதும் வீட்டுக்கு போய் அம்மாகிட்ட எதுவும் சொல்லி வைச்ச அவ்வளோ தான் பார்த்துக்கோ என்றுவிட்டு அவள் கிளம்பினாள்.

 

 

மீனாட்சி உள்ளே சென்றவர் எலுமிச்சை பழத்தை மீனாவின் கைகளில் திணித்தார். “இனி எங்க போனாலும் இதை கையில எடுத்துட்டு போ சரியா என்றார் அவர். “சரி கிழவி நான் போயிட்டு வரேன் என்று அவள் அங்கிருந்து கிளம்பினாள்.

வீரபாண்டி கோவிலை ஒட்டிய முல்லையாற்றில் மீனா அவள் தோழி கலா மற்றும் ராசம்மா ஆகியோர் மற்றும் இரண்டு சின்ன பிள்ளைகளுடன் குளித்துக் கொண்டிருந்தனர். மீனா நன்றாக ஆட்டம் போட்டு குளியல் போட்டுக் கொண்டிருந்தாள்.

 

 

யாரோ அவர்கள் குளித்துக் கொண்டிருப்பதை பார்ப்பது போல் தோன்ற மீனா சட்டென்று சுதாரித்துக் கொண்டு மறைவிற்கு சென்று உடைமாற்றி வந்தவள் கண்கள் அங்குமிங்கும் அலைபாய்ந்து அவள் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்த சுற்றுமுற்றும் திரும்பி பார்த்தவள் சற்று தள்ளியிருந்த தென்னை மட்டையை எடுத்து வந்து குறிபார்த்து எறிந்தாள் அவன் மேல்.

 

 

“அடேய் அய்யாசாமி கூறுகெட்டவனே பொம்பளைங்க குளிக்கறதை வேடிக்கை பார்க்கறதுக்குன்னே வயல்பட்டில இருந்து கிளம்பி வந்தியாடா. உனக்கு இதே பொழப்பா போச்சுடா விளங்காதவனே, எங்களையே கண்கொத்தி பாம்பு மாதிரி கண்காணிச்சுட்டே இருப்பியோ

 

 

“உனக்கெல்லாம் அறிவே வராதாடா, இனி உன்னை இது போல எங்கயாச்சும் பார்த்தேன்னு வை. அப்புறம் உன் கையை காலை உடைக்காம விடமாட்டேன். அப்புறம் உங்கத்தா உன்னைய படுக்க வைச்சு தான் கஞ்சி ஊத்தணும் பார்த்துக்க என்றாள் மீனா.

 

 

“என்ன மீனுக்குட்டி இப்படி சொல்ற, மாமாவுக்கு எப்பவும் உன் நினைப்பு தான் அதான் உன்னையவே சுத்தி சுத்தி வாரேன் என்றான் அந்த அய்யாசாமி. “அப்படியா அய்யாசாமி அப்போ ஒண்ணு செய்வோமா, நீ வேற என் மேல இஷ்டம்ன்னு சொல்லிட்ட

 

 

“அதுனால நீ என்ன செய்யறன்னா எங்க வீட்டுக்கு வந்து என்னைய பொண்ணு கேளு. நாம கல்யாணம் பண்ணிக்குவோம், அதுக்கு அப்புறம் நீ என்னையவே சுத்தி சுத்தி வா. சரியா என்றாள் அவள்.“கல்யாணமா… அ…அது…அதுக்கென்ன அவசரம் மீனுக்குட்டி. நாம இப்ப சந்தோசமா இருப்போம், அப்புறம் கல்யாணம் கட்டிக்குவோம் என்று கேவலமாக இளித்தான்.

 

 

“ஏன்டா என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா அந்த சத்திரபட்டியானும், பண்ணைபுரத்துக்காரனும் செத்து போன மாதிரி செத்து போயிருவோமோன்னு பயம் வந்திருச்சா. ஆளையும் மூஞ்சியும் பாரு, நீ என்னைய சுத்தி வர்றியா, ஊர்ல இருக்கற ஒரு பொம்பளை விடாம நீ சுத்தி வர்றே

 

 

“நீ அடங்கவே மாட்டே, உன்னைய இன்னைக்கு ஒரு வழி ஆக்காம விடமாட்டேன் நானு என்றவள் அங்கிருந்த உடைந்த செங்கலை எடுத்து அவன் மீது விட்டெறிந்தாள்.“ஏய் என்னடி கொழுப்பா உனக்கு, இரு எங்கம்மாகிட்ட சொல்லறேன் உன்னை. அப்புறம் இருக்குடி உனக்கு என்று அவளை திட்டிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான்.

 

 

“என்னடா பண்ணிடுவா உங்கம்மா, உன்னை பெத்து இப்படி ஊர் மேய விட்டதுக்கு நானே அவளை நல்லா நாலு கேள்வி கேட்குறேன் அனுப்பி வை முதல்ல என்று அவளும் பேசினாள்.“ஏன்டி எங்க போனாலும் எதாச்சும் ஒரு வம்பை விலை கொடுத்து வாங்கிட்டு இருக்க என்று அங்கு வந்தாள் கலா.

 

 

“நீயேன்டி சொல்லமாட்டே அந்த அய்யாசாமி நீ குளிக்கறதையும் தான் வேடிக்கை பார்த்தான், அதுக்கு தான் அடிவாங்கிட்டு போகுது விளங்காதது என்று திட்டினாள்.“சரி வாங்க கிளம்புவோம், எங்கம்மா வேற சத்தம் போட ஆரம்பிச்சு இருக்கும் இந்நேரம் என்று மீனா கூற எல்லோரும் கிளம்பினர். “அப்புறம் மீனா என்ன சொல்றார் உன் மாமா, எப்போ கல்யாணம் உனக்கும் அவருக்கும் என்றாள் கலா.

 

 

“ஏய் கலா நீயும் ஏன்டி என்னை புரிஞ்சுக்க மாட்டேங்குற, எனக்கு அந்த கல்யாணத்து விருப்பமே இல்லைடி. என்னமோ எனக்கு வேற மாப்பிள்ளையே கிடைக்க மாட்டாங்கற மாதிரி எங்க வீட்டில எல்லாரும் சேர்ந்து கதிரேசனை எனக்கு பேசிட்டாங்க

 

 

“எனக்கு அவன் மேல அப்படி எந்த நினைப்பும் இல்லைடி. நானும் கதிரும் ஒண்ணாவே வளர்ந்தோம் எனக்கு கூட பிறந்த பொறப்புன்னு ஒண்ணு இருந்தா எப்படி இருக்குமோ எனக்கு அப்படி தான் தோணுது கதிரை பார்க்கும் போது

 

 

“இதை யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க என்றவளிடம் “என்னடி மீனா இப்படி சொல்ற அப்புறம் எதுக்கு கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னே என்றாள் கலா. “எனக்கு கதிரை பத்தி நல்லா தெரியும் எனக்கு இப்படி இந்த கல்யாணம் பிடிக்கலையோ கதிருக்கும் அப்படி தான்

 

 

“கதிர் எதாச்சும் பண்ணுவான்னு நினைச்சு தான் நான் கல்யாணத்துக்கு சரின்னு சொன்னேன். அன்னைக்கு எல்லாருமா சேர்ந்து அவன் கால்ல விழாத குறையா கெஞ்சும் போது அவனும் தான் என்ன செய்வான். ஆனா அவன் ஒரு நல்லது செஞ்சான் கல்யாணம் ஒரு வருஷம் கழிச்சுன்னு சொல்லிட்டான். நானும் அப்போதைக்கு தப்பிச்சேன் என்றாள் நிம்மதியாக.

 

 

“அதெப்படி தப்பிச்சேன்னு சொல்லுவ, அதான் அவங்க சொல்லி ஒரு வருஷம் ஆச்சே. இனி சும்மாவா இருப்பாங்க திரும்பவும் கல்யாண பேச்சை ஆரம்பிப்பாங்களே அப்போ என்ன செய்யப் போறே என்றாள் கலா. “இவ்வளவு தூரம் காப்பாத்துன சாமி என்னை அப்படியே கைவிட்டுடுமா. அதுக்கும் எதாச்சும் ஒரு வழி பிறக்கும் பார்ப்போம் கலா என்றாள்.

 

____________________

 

தலைநகரில் கைலாஷ் நகரில் கதிர் ஊருக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தான். “என்ன கதிர் ஊருக்கு கிளம்பியாச்சா என்றான் சுஜய். “ஆமாண்ணே கிளம்பிட்டே இருக்கேன், நீங்களும் சொன்ன மாதிரி ஊருக்கு வந்திரணும் எங்க பாட்டி உங்களை கூட்டிட்டு வரசொல்லிச்சு

 

 

“கண்டிப்பா வந்திடுங்கண்ணே என்றவன் அவன் சட்டைப்பையில் இருந்து எதையோ தேடினான் அவன். “இந்தாங்கண்ணே என்று அவன் எதையோ நீட்ட “என்ன கதிர் இது என்றான் சுஜய். “டிக்கெட்டுண்ணே, முதல் வகுப்புல தான் எடுத்திருக்கேன்

 

 

“நீங்க ரெண்டு வருஷமா இப்படி தான் வர்றேன் வர்றேன்னு சொல்லிட்டு இப்படி தான் ஏமாத்திட்டு இருக்கீங்க. அதான் உங்களுக்கு நானே டிக்கெட் எடுத்திட்டேன், இன்னும் மூணு நாள்ல உங்களுக்கு ரயிலுக்கு எடுத்திருக்கேன், நீங்க கண்டிப்பா வந்திடணும் என்றான் கதிரேசன்.

 

 

“என்ன கதிர் இதெல்லாம் நான் தான் கண்டிப்பா வந்திடுறேன்னு சொன்னேனே, அப்புறம் அதுக்கு கதிர் இதெல்லாம். நான் வாங்கிக்க மாட்டேனா என்றான் சுஜய். “அதெல்லாம் பரவாயில்லை நீங்க கண்டிப்பா வரணும் என்று சொல்லிவிட்டு அவன் அன்று இரவு ரயிலுக்கு கிளம்பினான்.

 

 

இரண்டு நாட்கள் கடந்த வேளையில் சுஜய்க்கு கதிரிடம் இருந்து அழைப்பு வந்தது, மடிகணினியில் வேலையை பார்த்துக்கொண்டே கைபேசியை எடுத்து காதுக்கு கொடுத்தான் அவன். “சொல்லு கதிர், என்ன இப்போ போன் பண்ணியிருக்க, எப்படி இருக்க என்றான் சுஜய்.

 

 

“அண்ணே இன்னும் ஆபீஸ்ல என்ன பண்ணுறீங்க, இன்னைக்கு உங்களுக்கு ரயில் ஞாபகமிருக்கா. டிரஸ் எல்லாம் எடுத்து வைச்சுட்டீங்களா என்றான் கதிர். அப்போது தான் ஞாபகம் வந்தவனாக “இல்லை கதிர் ஆபீஸ்ல கொஞ்சம் வேலை இப்போ தான் வீட்டுக்கு கிளம்ப போறேன்

 

 

“டிரஸ் எல்லாம் காலையிலேயே எடுத்து வைச்சுட்டேன் கதிர். நான் சென்னைக்கு போயிட்டு அங்க இருந்து வந்திர்றேன் சரியா என்று மேலும் ஏதோ பேசிவிட்டு போனை வைத்தான் சுஜய். சுர்ஜித்தை கூப்பிட்டு அவன் இல்லாத சமயத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்று குறிப்பெழுதி கொடுத்தான்.அலுவலத்தில் இருந்து கிளம்பும் போது சற்று தாமதமாகி விட வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு ராமு அண்ணாவிடமும் லட்சுமி அக்காவிடமும் சொல்லிவிட்டு  ரயில் நிலையத்திற்கு கிளம்பினான் சுஜய்.

 

 

அவன் மனமோ ஏனோ என்றுமில்லாமல் புதிதாய் ஒரு சந்தோசத்தை தத்தெடுத்தது. இதுவரை தமிழ் நாட்டிற்கே சென்றிராதவன் முதன் முறையாக அவன் தந்தை பிறந்த தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக செல்லப் போவதால் வந்த மகிழ்ச்சியா இல்லை கதிரின் ஊருக்கு திருவிழாவிற்காய் செல்ல போகும் உற்சாகமா என்று அவனால் பிரித்து கூற முடியவில்லை.

 

 

சென்னைக்கு வந்திறங்கியவன் அங்கு இருந்த அவர்களின் கம்பெனி அலுவலகத்தை பார்வையிட்டான். அவன் தந்தை இறப்பதற்கு சில மாதங்கள் முன்பு தான் அவர் சென்னை வந்து அந்த அலுவலகத்தை திறந்து வைத்திருந்தார்.

 

 

அங்கு சென்றதும் அவன் தந்தையின் நினைவு வந்தது. அவன் நண்பன் கௌதமுக்கு போன் செய்து பேசியவன் கதிரின் குடும்பத்திற்கு துணிமணிகள் வாங்கிக் கொண்டு இரவு ரயிலுக்கு கிளம்பினான்.

 

விடியும் வேளையில் திண்டுக்கல்லில் அவன் இறங்கவும் கதிரேசன் அவனை வரவேற்றான்.

 

 

“அண்ணே இங்க இருக்கேன், எங்க போறீங்க என்றான் கதிர். “கதிர் என்ன இது இந்த நேரத்துல நீயே கிளம்பி வந்திருக்க நான் தான் எப்படியாச்சும் வந்திடுறேன்னு சொன்னேன்ல என்றான் சுஜய்.

 

 

“அதெல்லாம் பரவாயில்லை அண்ணே, இது ஒரு பெரிய விஷயமா வாங்க வண்டி வெளிய நிக்குது போவோம் என்று அவன் உடமைகளை தூக்கிக் கொண்டான். “கதிர் விடு நானே எடுத்துக்கறேன் என்று அவன் கூற கதிரோ எதையும் காதில் வாங்காதவனாக நடந்து கொண்டிருந்தான்.

 

 

வெளியில் நின்றிருந்த காரில் அவன் உடமைகளே வைத்துவிட்டு இருவருமாக ஏறிக்கொள்ள வண்டி வயல்பட்டியை நோக்கி சென்று கொண்டிருந்தது. வரும் வழியெங்கும் கதிர் ஊரை பற்றி சொல்லிக் கொண்டு வந்தான்.

 

அதிகாலை நேரம் சில்லென்றிருந்தது. டெல்லியிலும் குளிர் உண்டு ஆனால் அது வேறு. ங்கு போல் எங்கும் பசுமையாய் மரங்களில் இருந்து வீசும் சில்லென்ற காற்று முகத்தில் மோத, மரங்களின் பச்சை வாசம் காற்றில் கலந்து அவன் நாசியை துளைக்க மூச்சை உள்ளிழுத்து அந்த அனுபவத்தை ரசித்தான் சுஜய்.

 

 

அவனுக்கு அந்த சூழ்நிலை முற்றிலும் புதிதாய், சொல்லொணாத ஒரு கிளர்ச்சியும் சந்தோசமும் அவனுக்குள் உற்சாகமாய் பீறிட்டு எழுந்தது.

 

 

“என்னண்ணே ரொம்ப சந்தோசமா இருக்க மாதிரி தெரியுது என்றான் கதிரேசன். “ஹ்ம்ம் ஆமாம் கதிர், இந்த சூழ்நிலை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்றான் சுஜய்.

 

“உங்களுக்கு எங்க ஊரு மட்டுமில்லை எங்க வீட்டு ஆளுங்களும் பிடிக்கும்ண்ணே என்றான் கதிரேசன்.

 

 

கதிரேசன் ஏற்கனவே அவர்கள் வீட்டில் உள்ளவர்களின் புகைப்படத்தை அவனுக்கு காண்பித்து அவர்களை பற்றி பலமுறை கூறக் கேட்டிருக்கிறான் சுஜய். தெரியாத மனிதர்கள் தெரியாத ஊர் அவர்கள் எப்படிபட்டவர் என்று தெரியாது என்ற நினைக்க லேசான ஒரு பயமும் அவனுக்குள் எழுந்தது.

 

 

“அண்ணே இங்க இருந்து தான் எங்க ஊரு தொடங்குது என்று அவன் காண்பித்த இடமெங்கும் பசுமை பசுமை பசுமை மட்டுமே. “கதிர் கொஞ்சம் வண்டியை நிறுத்துறியா, கிழே இறங்கி பார்க்கணும் போல இருக்கு என்றான் சுஜய்.

 

 

“சரிண்ணே என்றவன் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தினான். “அண்ணே நீங்க இங்க நின்னு பார்த்திட்டு இருங்க, அங்க எங்க மாமா நின்னுட்டு இருக்கார் போய் பார்த்திட்டு ஒரு ஐஞ்சு நிமிசத்துல வந்திடுறேன் என்றுவிட்டு அவன் எதிர்சாரியில் இறங்கி நடந்தான்.

 

 

வண்டியில் இருந்து இறங்கிய சுஜய் அவன் தோள் பையில் இருந்த புகைப்பட கருவியை வெளியில் எடுத்தான். அதை எடுத்து அங்குமிங்கும் சுற்றி சுற்றி அவன் கண்ணில் நிறைத்ததை அந்த கருவியில் அடக்கினான். யாரோ வெகு நேரமாக யாரையோ அழைப்பது கேட்க திரும்பி பார்த்தான்.

 

 

புகைப்படம் எடுக்கும் மும்முரத்தில் அங்குமிங்கும் நகர்ந்து அவன் படமெடுத்து கொண்டிருக்க அப்போது தான் கூப்பிடும் தூரத்தில் பாவாடை தாவணியில் நின்றிருந்த பெண்ணொருத்தி யாரையோ அழைப்பது கேட்டது.

 

 

“யோவ் சொட்டை மண்டை என்று அவள் அழைப்பது கேட்க இவள் யாரை சொல்கிறாள் என்று அங்குமிங்கும் சுற்றி பார்க்க சற்று தள்ளி ஒருவர் நின்றிருக்க அவரை தான் அழைக்கிறாள் போலும் என்று நினைத்தவன் அவரை கைத்தட்டி அழைக்க அவளோ மீண்டும் “யோவ் உன்னை தான்யா சொட்டை மண்டை என்றாள் அவள்.

 

 

  • காற்று வீசும்

 

Advertisement