Advertisement

அத்தியாயம் –19

 

 

மறுநாள் விடிந்தும் விடியாததுமாக மாலதி மீனாட்சியை பார்க்க வந்துவிட்டார். அவள் அப்போது தான் எழுந்து குளித்து தயாராகி வந்திருந்தாள்.

 

 

அதற்குள் அவள் அன்னை அவருடைய அன்னையிடம் புலம்பிக் கொண்டிருந்தார் அவர் மகளை குறித்து. மீனா பாட்டியின் அறைக்குள் நுழையவும் அவர் கண்களை துடைத்துக் கொண்டார்.

 

 

மீனாவோ எதையும் கண்டுகொள்ளாமல் எங்கோ கிளம்பத் தயாரானாள். “உன் மனசுல என்ன தான்டி நினைச்சுட்டு இருக்க

 

 

“என்ன வேணும் உனக்கு இப்போ காலையிலே வந்து எதுக்கும்மா இப்படி அழுதுக்கிட்டு இருக்க

 

 

“உனக்கு என்ன ஆச்சுன்னு கேட்டா எனக்கு என்ன வேணுமான்னு கேட்டுட்டு இருக்க. என்ன பிரச்சனை நீ ஏன் மருமகன் கூட வராம தனியா வந்திருக்க. அவ்வளவு அவசரமா நீ வரவேண்டிய வேலை என்ன என்று கேள்விகளை அடுக்கினார் அவர்.

“அம்மா யார் சொன்னா??? பிரச்சனைன்னு அப்படிலாம் எதுவும் இல்லை

 

 

“அப்போ நீ மட்டும் எதுக்கு தனியா வந்தே, மருமகனை கூட்டிட்டு வந்திருக்க வேண்டியது தானே

 

 

“அவருக்கு ஆபீஸ்ல வேலை இருக்கு அதான் அவர் வரலை. நாளைக்கு அவர் வந்திடுவார் உனக்கு என்ன சந்தேகம் இருந்தாலும் நீ அவர்கிட்டயே கேட்டுக்கோ

 

 

“உனக்கு திமிர்டி, ஆங்காரம் பிடிச்சு திரியற. நீ தான் அவர்கிட்ட ஏதோ பிரச்சனை பண்ணிட்டு வந்திருக்க, உன்ன நான் எந்த நேரத்துல பெத்தனோ தெரியலை

 

 

“எல்லாமே பிரச்சனையா தான் இருக்கு. கல்யாணத்துக்கு முன்னாடி ஊர் வம்பு இழுத்துட்டு வர்றது, கல்யாணம் பண்ணலாம்னு நினைச்சா அப்போவும் பிரச்சனை, இப்போ கல்யாணம் பண்ணதுக்கு அப்புறமும் பிரச்சனை பண்ணிட்டு வந்து நிக்குற என்று கன்னாபின்னாவென்று பொரிந்து தள்ளினார்.

 

 

“அம்மா கொஞ்சம் பேசாம இருக்கியா, விட்டா பேசிட்டே போவ போல. நான் சண்டை போட்டேன்னு உனக்கு தெரியுமா சும்மா தேவையில்லாம பேசிட்டு என்னை கோபப்படுத்தாதே

 

 

“இதுக்கு தான் நான் நம்ம வீட்டில தங்கலை நீ என்னை பேசியே கொன்னுடுவ. ஆனா நீ எங்க என்னை நிம்மதியா இருக்க விடுற காலங்காத்தால இங்க வந்து என் நிம்மதியை கெடுக்குற

 

 

“நீ கொஞ்ச நேரம் பேசாம இரும்மா, நான் சொன்ன மாதிரி நாளைக்கு அவர் வந்திடுவார் நீ அவர்கிட்டேயே பேசிக்கோ. அதுவரைக்கும் என்னை தொந்திரவு பண்ணாதே. பாட்டி நான் வீரபாண்டி வரைக்கும் போயிட்டு வர்றேன் என்று தகவல் சொல்லிவிட்டு கிளம்பினாள்.

 

 

மாலதி மீண்டும் ஒரு மூச்சு அழுவதற்கு தயார் ஆனார். மீனா வீட்டை விட்டு வெளியே வந்தாள். அய்யாசாமி காலையில் எங்கோ செல்வதற்காக தயாராகி வந்தவன் மீனாவை கண்டான்.

 

 

‘அடடா இவ எப்போ வந்தா, தனியா எங்க போறா என்று அவளையே நோட்டம் பார்த்தவன் அவள் பின்னேயே அவளறியாமல் செல்ல ஆரம்பித்தான். ‘இவ புருஷன் அன்னை அந்த அடி அடிச்சான்.

‘டேய் அய்யாசாமி உனக்கு புத்தியே வரலையாடா என்று அவன் மனசாட்சி கேள்வி கேட்க அதை எல்லாம் ஒதுக்கி விட்டு ‘அதுக்கு??? நான் அவளை பழி வாங்க வேண்டாமா என்று மனசாட்சிக்கு பதில் அளித்துவிட்டு அவளை பின் தொடர்ந்தான்.

 

 

யாருமற்ற ஒற்றையடி பாதையில் அவள் நடந்து செல்ல இது தான் சமயமென்று எண்ணியவன் அவள் கையை பிடித்து இழுக்க முதலில் பயந்து போனவள் சட்டென்று சுதாரித்தாள்.

 

 

“என்ன மீனாக்குட்டி எங்க உன் புருஷன் இல்லாம தனியா போறாப்புல இருக்கு

 

 

“ஏன் என் புருஷன்கிட்ட உனக்கு மறுபடியும் அடிவாங்கணும் போல இருக்கா

 

 

“அடிச்சிடுவானா அவன் என்னை… முடியுமா அவனால அன்னைக்கு ஏதோ குடிச்சிருந்தேன். என்னை அடிச்சு அவன் வீரன்னு உன் முன்னாடி காமிச்சுக்கிட்டான். இப்போ அவனையும் அந்த சப்பை பய கார்த்திகேயனையும் வரச் சொல்லு பார்ப்போம்

 

 

“அவனுங்களை அடிச்சு துவைச்சு காயப்போட்டிருவேன் நானு என்று சொல்லி கேவலமாக இளித்தான்.

 

 

“உனக்கு அவங்க எல்லாம் எதுக்குடா எருமை நான் ஒருத்தியே போதும் உன் வாயை அடிச்சு உடைக்க என்றவள் சுற்றுமுற்றும் பார்க்க அவளருகில் ஒரு பெரிய கருங்கல் இருக்க அதை கையில் எடுத்தாள்.

 

 

அவள் எறிவதற்குள் அவன் அவள் கையை பிடித்து லாவகமாக தடுத்து அவளை விடாமல் பிடித்துக் கொள்ள மீனா அவனிடம் இருந்து விடுபட போராடினாள். “நாயே விடுடா கையை

 

 

அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் பிடி தளருவது போல் இருக்க அவன் அம்மா என்று சொல்லி கிழே விழுந்தான். அவள் நிமிர்ந்து பார்க்க கார்த்திகேயன் அங்கு நின்றிருந்தான்.

 

 

“என்னடா அன்னைக்கு வாங்கினது உனக்கு பத்தலையா என்று உறுமினான் கார்த்திகேயன்.

 

 

“இனி நீ மீனாகிட்ட வம்பு பண்றதை பார்த்தேன்னு வை. அடுத்து நான் பேசமாட்டேன் உன் கைல காப்பு மாட்டி ஸ்டேஷன் கூட்டிட்டு போய் லாடம் கட்டிடுவேன் ஜாக்கிரதை என்று அவன் கூற அய்யாசாமி அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டான் (கிட்டத்தட்ட ஓடியே விட்டான்).

 

 

“அண்ணே நீங்க எப்போ வந்தீங்க, நீங்க போலீசா

 

 

“என்னம்மா எனக்கு போஸ்டிங் ஆகியிருக்கு உனக்கு தெரியாதா

 

 

“தெரியாதுண்ணே நல்ல வேளை நீங்க வந்தீங்க. இவனை நீங்க சொன்ன மாதிரி லாடம் கட்டுங்கண்ணே இல்லன்னா இவன் அடங்கவே மாட்டான். இவனுக்கு எப்படி தான் நான் வந்தது தெரியுமோ, மோப்பம் பிடிச்சு வந்திருச்சு

 

 

“நீ ஏன்மா தனியா போயிட்டு இருக்க, மச்சானோட போக வேண்டியது தானே. இந்த பிரச்சனையே வராதே என்றான் அவளை ஆழம் பார்ப்பது போல்.

 

 

“என்னண்ணே நேரா வீட்டுக்கு தான் போயிட்டு வர்றீங்களா என்றாள் அவள்.

 

 

“ஹ்ம்ம் ஆமாம்மா வீட்டுக்கு தான் முதல்ல போனேன். பசும்பொன்னுக்கு வாந்தி மயக்காமா இருக்காம். அம்மா வீட்டுக்கு போகணும்னு சொன்னா அவளை கூட்டி வந்து விட வந்தேன்

 

 

“அப்போ தான் நீ வந்திருக்கறதா சொன்னாங்க. நாங்க வீட்டுக்கு போகும் போதே உன்னை பார்த்தோம் நீ அப்போ தான் வெளிய நடந்து போயிட்டு இருந்த, இந்த அய்யாசாமி பய திருதிருன்னு அப்படி இப்படி பார்த்திட்டு உன் பின்னாடியே வந்தான்

 

 

“அதான் பசும்பொன்னை வீட்டுல விட்டுவிட்டு அவங்ககிட்ட விபரம் கேட்டுட்டு வண்டியை எடுத்துட்டு நேரா வந்தேன். நான் நினைச்ச மாதிரியே அவன் உன்கிட்ட கலாட்டா பண்ணிட்டு இருந்தான்

 

 

“தேங்க்ஸ்ண்ணே

 

 

“எனக்கு எதுக்கும்மா நன்றி, என்னாச்சும்மா மச்சான் எதுவும் உன்னை சொன்னாரா. நீ மட்டும் எதுக்கும்மா தனியா வந்திருக்கே

 

 

“அண்ணே நீங்களுமா… சொன்னா புரிஞ்சுக்கோங்க எந்த பிரச்சனையும் இல்லைண்ணே. எனக்கு எல்லாரையும் பார்க்கணும் போல இருந்துச்சு அதான் ஊருக்கு வந்தேன்

 

 

“ஆமா பசும்பொன்னுக்கு தலைசுத்தல் வாந்தின்னு சொன்னீங்க மாசமா இருக்காளா

 

 

“ஆமாம்மா நேத்து தான் டாக்டர் பார்த்தோம் அவங்க எல்லாம் செக் பண்ணிட்டு உறுதி பண்ணிட்டாங்க. சரி விஷயத்தை சொல்லிட்டு அவளை விட்டு போகலாம்ன்னு வந்தா நீ இங்க வந்திருக்க

 

 

“ரொம்ப சந்தோசம்ண்ணே நான் கோவிலுக்கு போயிட்டு அவளுக்கும் சேர்த்து வேண்டிட்டு அப்புறம் போய் பசும்பொன்னை பார்க்கறேன் என்று சந்தோசமானாள் அவள்.

 

 

“சரிண்ணே நான் கோவிலுக்கு போயிட்டு வந்திடறேன் என்று அவள் கிளம்ப “நில்லும்மா நானே கூட்டிட்டு போறேன் என்று அவனே கோவிலுக்கு கூட்டிச் சென்றுவிட்டு அவளை வீட்டில் சென்று விட்டான்.

 

 

அதற்குள் ஊருக்குள் சென்ற அய்யாசாமி சும்மா இல்லாமல் அவன் மேல் தப்பு வந்துவிடும் என்று ஏதோ கதைக்கட்டி விட்டிருந்தான். அவன் அன்னையிடம் மீனா புருஷனை பிரிந்து வந்திருக்கிறாள் என்று அவன் பத்த வைக்க அப்படியே கதை பிறந்து கொண்டே போனது.

 

 

அன்று மாலையே வில்லங்கம் வீடு தேடி வந்தது.மீனா அவள் வீட்டில் இருப்பாள் என்று நினைத்து மீனாட்சி பாட்டியின் வீட்டிற்கு அருகில் இருந்த மூக்காத்தா வீடு தேடி வந்தார்.

 

 

“என்ன மீனாட்சி உம் பேத்தி புருஷனை விட்டுட்டு வந்துட்டாளாமே. இதுக்கு தான் சொன்னேன் அவளுக்கு ஊர் பேரு தெரியாதவனோட கல்யாணம் முடிய வேணாம்ன்னு

 

 

“பாரு இப்போ உம் பேத்தி கண்ணை கசக்கிட்டு வந்து நிக்குறா என்று புரளி பேச ஆரம்பித்தது. என்னமோ மீனாட்சியின் மீது பெரிதாக அக்கறை உள்ளது போல் காண்பித்துக் கொண்டது.மீனாட்சி பாட்டி பதில் சொல்ல வாயெடுக்கும் முன் வாசலில் வந்து நின்றாள் மீனா அவரை முறைத்துக் கொண்டே.

 

 

‘அடடா இவ இங்க தான் இருக்காளா இவ இங்க இருக்கறது தெரியாம வந்துட்டேனே. “என்ன கிழவி??? நீ இது கூட இன்னும் பிரிண்ட்ஷிப் கட் பண்ணலையா??? என்று அவள் பாட்டி மீனாட்சியை பார்த்து கேட்டவள் மூக்காத்தாவை பார்த்து முறைத்தாள்.

 

 

“என்ன மூக்காத்தா உன் பேத்தி ரெண்டு மாசம் முன்னாடி எவனையோ கூட்டிட்டு ஓடிட்டாளாமே. இப்போ புருஷனை விட்டுட்டு தனியா வந்திருக்கா போல என்று ஆரம்பித்தாள்.

 

 

“அது அவ புருஷன் சரியில்லை அதான் நாங்களா பேசி கூட்டிட்டு வந்துட்டோம் என்று தந்தி அடித்த குரலில் பேசினார் மூக்காத்தா.

 

 

“இன்னும் அந்த பஞ்சாயத்தே முடியலையே நீ எதுக்கு என் பஞ்சாயத்தை பார்க்க வந்த. நான் கேட்டேனே உன்கிட்ட இல்லை நான் தான் வந்து சொன்னேனா எம் புருஷன் சரியில்லைன்னு

 

 

“என்னமோ உன் வீட்டு வாசல்ல நான் கண்ணை கசக்கிட்டு வந்து நின்ன மாதிரி நீ வந்து என் கதையை பேச வந்துட்ட. சாயங்காலம் உம் பேத்தி வீட்டில இருப்பாளான்னு சொல்லு நானும் பாட்டியும் வர்றோம் பஞ்சாயத்து பண்ணி வைக்க தான் என்று சொன்னாள்.

 

 

அதற்கு மேல் அங்கிருக்க மூக்காத்தாவுக்கு பிடிக்குமா என்ன அவர் வீட்டு கதை ஆரம்பித்தவுடன் சத்தமில்லாமல் நழுவியவர் வாசலுக்கு செல்லும் போது “நான் இப்போ என்ன தப்பா பேசிட்டேன், நல்லது சொன்னதுக்கு எனக்கே பொல்லாப்பு வந்து சேருது. நல்லதுக்கே காலம் இல்லை என்று தேய்ந்த குரலில் முணுமுணுத்து விட்டு சென்றார்.

 

 

“ஏன் கிழவி உனக்கு எத்தனை தடவை சொல்றது இந்த மூக்காத்தா கூட சேராதேன்னு

 

 

“நான் என்னமோ அவ வீடு தேடி போன மாதிரி என்னை எதுக்கும்மா சொல்ற

 

 

“நல்லா நறுக்குன்னு நாலு கேள்வி கேட்டா இங்க வந்து நாட்டாமை பண்ணுமா அந்த கிழவி. எல்லாம் நீ கொடுக்குற இடம் தான் என்று திட்டிவிட்டு நகர்ந்தாள்.

 

 

மீனா உள்ளே செல்ல முனைய ராஜேந்திரன் அவளை அழைத்தார். “என்ன மாமா சொல்லுங்க என்று அவள் கூற உள்ளிருந்து காமாட்சி அவரை பார்த்து கண்ணைக் காட்ட “என்ன காமாட்சி சும்மா நீ கேட்காதே??? நீ கேட்காதேன்னு சொல்ற

 

 

“இப்படியே விட்டா எப்படி? இதுக்கு தான் அவனை கட்டி வைக்க நான் ரொம்பவே யோசிச்சேன். ஒண்ணுக்குள்ள ஒண்ணுன்னா இந்த பிரச்சனை வந்திருக்குமா

 

 

“என்னமோ அப்பா சொன்னாங்க ஆட்டி குட்டி சொன்னாங்கன்னு நான் சொன்னதை யாருமே கேட்கலை. இப்போ இவ திடுதிப்புன்னு வந்து நிக்குறா. அங்க என்னடான்னா எங்க அக்கா அழுது கரையுது இவளை நினைச்சு என்று மனதில் தோன்றியது எல்லாம் விடாமல் பேசிக் கொண்டே இருந்தார் அவர்.

 

 

“அத்தை நீங்க எதுக்கு மாமாவை தடுக்குறீங்க??? அவர் எல்லாம் கேட்டு முடிக்கட்டும், அவருக்கு நான் பதில் சொல்லிக்கறேன்

 

 

“என்னம்மா சொல்லி முடிக்க வேண்டி இருக்கு. இப்போ என்ன நடந்துச்சு நீ எதுக்கு இங்க வந்த???

 

 

“பேசி முடிச்சுட்டீங்களா??? இன்னும் இருக்குமோன்னு நினைச்சேன். இப்போ உங்களுக்கு எல்லாம் பிரச்சனை நான் இங்க வந்தது தான் இல்லையா???

 

 

“ஒரு நாள் பொறுத்துக்கோங்க அதுக்கு அப்புறம் நீங்க வேண்டினாலும் நான் இங்க வரமாட்டேன் என்றுவிட்டு உள்ளே செல்ல முனைய “நாளைக்கு மட்டும் என்ன விசேஷமா நடக்க போகுது

 

 

“நாளைக்கு என் புருஷன் வந்திடுவார், அதுக்கு அப்புறம் நான் உங்ககிட்ட எல்லாம் பேச்சு கேட்க வேண்டாம்ல, அதான்

 

 

“நாளைக்கு அவர் வருவார்ன்னா நீ இருந்து அவரோட வந்திருக்க வேண்டியது தானே??? என்று மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து சேர்ந்தார் அவர்.

 

 

“அதான் சொல்லிட்டேனே மாமா இனிமே நான் இங்க வரமாட்டேன்னு. எனக்கு இங்க வர்றதுக்கு உரிமை இல்லைங்கற மாதிரி பேசுறீங்க. ஆளாளுக்கு நான் ஏன் வந்தேன்னே கேட்டுட்டு இருக்கீங்க

 

 

“அந்தளவுக்கு நான் எல்லாருக்கும் வேண்டாதவளா போயிட்டேன் அப்படி தானே. ஏன் அத்தை நீங்களும்அப்படி தான் நினைக்கிறீங்களா என்றவளின் குரலில் வருத்தமும் விரக்தியும் அதிகம் இருந்தது.

வெளியில் சென்றிருந்த கதிர் அப்போது தான் உள்ளே வந்தான். அங்கு நடந்தவை அவன் காதில் விழுந்திருக்க “அப்பா எதுக்கு இப்போ மீனாவை கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க

 

 

“நான் தான் சொன்னேன்ல ரெண்டு நாள்ல அண்ணே ஊருக்கு வர்றேன்னு சொல்லி இருக்காங்கன்னு. நீங்க எல்லாரும் எதுக்கு இவங்க சண்டை போட்டு வந்த மாதிரி இப்படி நிக்க வைச்சு கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க???

 

 

“ஏன் தேனு நீயும் பார்த்திட்டு பேசாம இருக்கே??? ஏன்மா நீங்களுமா??? பாட்டி நீங்களும் பேசாம இருக்கீங்க???

 

 

“மீனா இந்த வீட்டுக்கு வர்றதுக்கு உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. இது உனக்கு எப்பவும் உரிமைப்பட்ட வீடு தான், நீ எதுக்கு வருத்தப்படுற. அப்பா இனி யாராச்சும் மீனாவை எதுவும் கேட்டீங்கன்னா நல்லா இருக்காது சொல்லிட்டேன் என்று ஒட்டு மொத்தமாக எல்லோரையும் முறைத்தான்.

 

 

மீனாவோ ‘இவன் எல்லாம் தெரிந்து பேசுகிறானா தெரியாமல் பேசுகிறானா என்று நினைத்தாள். ராஜேந்திரனோ மகன் இப்படி தன்னை எதிர்த்து பேசிவிட்டானே என்று கோபம் வர அவரும் பதிலுக்கு மகனை முறைத்தார்.

 

 

ஆனால் எதுவும் பதில் பேசவில்லை. மீனாட்சி பாட்டி வேகமாக மீனாவின் அருகில் வந்தவர் அவளை அவர் அறைக்குள் இழுத்து சென்றார். “என்னாடி மீனா இது உன் மாமன் குணம் தெரிஞ்சது தானே

 

 

“அவன் தான் ஒரு வகைதொகையில்லாம பேசுறான்னா நீ எதுக்கும்மா அவனுக்கு பதில் பேசிட்டு இருக்க. உனக்கு இல்லாதது இங்க எதுவும் இல்லைம்மா

 

 

“நல்லா சொல்லுங்கத்தை உங்க பேத்திக்கு. நம்ம பேச்சை மாமனும் கேட்குறது இல்லை மருமகளும் கேட்குறதில்லை என்று உள்ளே நுழைந்தார் காமாட்சி.

 

 

“உங்க புருஷன் பேசுவாரு, நாங்க பார்த்திட்டு பேசாம இருக்கணுமோ என்க “உனக்கு அப்படியே உன் மாமன் குணம் வந்திருக்கு. எதையும் உடனே உடனே பேசி எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு இருப்பீங்க ரெண்டு பேரும்

 

 

“அவர் பேசினா நீயும் பதிலுக்கு பதில் பேசுற, என்னமோ இன்னைக்கு எம் புள்ளைக்கு வீரம் வந்திருச்சு போல. உன்னை சொன்னதும் அவங்கப்பாவை எதிர்த்து ஒரு வார்த்தை பேசிட்டான்

 

 

“ஆமா அத்தை இந்த கதிரேசனுக்கு என்னமோ இன்னைக்கு ரோசம் வந்திருச்சு

 

 

“உனக்கு எம் புருஷனையும் பிள்ளையையும் கிண்டல் பண்ணாம இருக்க முடியாதா???

 

 

“என்னக்கா என்ன இங்க என்ன மாநாடு நடக்குது???எங்க ரெண்டு மாமாவையும் நீ என்னமோ கிண்டல் பண்ணுற மாதிரி தெரியுது என்று தேனுவும் அவளுடன் பசும்பொன்னும் வந்தனர்.

 

 

“ஆமா அவங்களை அப்படியே கிண்டல் பண்ணிட்டாலும்… ஆனா அத்தை நீங்க ஒரு ஆள் போதும் மாமாவையும் கதிரேசனையும் பகுமானமா பேசுறதுக்கு என்று இடித்துக் கொண்டாள் மீனா.

 

 

அவள் முகம் வாடியது பொறுக்காமல் காமாட்சியும் மீனாட்சி பாட்டியும் அவள் பேச்சை திசை திருப்ப முயல சூழ்நிலை இயல்பாக மாறி அவளும் சாதாரணமாக பேசியதில் அவர்களும் நிம்மதி கொண்டனர்.

 

 

பசும்பொன்னை பார்த்த மீனா ஆவலுடன் அவளை பார்த்தாள். “பசும்பொன்னு ரொம்ப சந்தோசமா இருக்குடி. அண்ணன் சொன்னாங்க நீ மாசமா இருக்கேன்னு. எங்க எல்லாரையும் நீ முந்திட்ட கள்ளி என்றாள்.

 

 

“அவ முந்தினது இருக்கட்டும் நீ எப்போ நல்ல சேதி சொல்லப் போறே என்றார் காமாட்சி.

 

 

“அதுக்கு என்ன அத்தை அவசரம் காலநேரம் கூடி வந்தா எல்லாம் தானா நடக்கும். நம்ம குடும்பத்துக்கு தான் முத வாரிசு வரப் போகுதே அதை நினைச்சு சந்தோசப்படு அத்தை. நீயும் எங்கம்மா மாதிரியே கேள்வி கேட்டுக்கிட்டு இருக்க

 

 

“இதெல்லாம் கேட்டா உனக்கு பிடிக்காதே… என்னமோ பண்ணு போ என்று அங்கிருந்து நகர்ந்தார் அவர். பின் பசும்பொன், தேனு மற்றும் மீனா அமர்ந்து அவர்கள் சிறுவயது நினைவுகளை ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

 

சென்னையில் சுஜய் காலையிலேயே எழுந்து குளித்து சாப்பிடாமலே வேலைக்கு கிளம்பிச் சென்றுவிட்டான். அன்று இரவே ஊருக்கு கிளம்ப வேண்டும் என்று மனதில் முடிவெடுத்துக் கொண்டான்.

 

 

அவள் இல்லாத தனிமை அவனை அலைகழிக்க அவளை உடனே பார்க்க வேண்டும் என்று ஆவல் மேலோங்கியது அவனுக்கு. காலையில் அலுவலகம் சென்றால் முடிக்க வேண்டிய முக்கிய வேலைகளை முடித்துவிட்டு ஊருக்கு கிளம்பலாம் என்று எண்ணியே விரைந்து வந்திருந்தான்.

 

 

கதிர் சொன்ன ஆள் மாலை தான் வருவார் என்பதால் எப்போதடா மாலை வரும் அவரிடம் அவன் சேர்ப்பிக்க சொன்ன கடிதத்தை சேர்ப்பிப்போம் என்று காத்திருக்கத் தொடங்கினான்.

 

 

இடையில் கௌதம் ஒரு முறை அவனை அழைத்திருக்க நடந்த விஷயத்தை கௌதமிடம் பகிர்ந்தவனுக்கு மனம் பாரம் சற்று இறங்கினார் போல் இருந்தது.

 

 

மீனாவுக்கு போன் செய்து பார்க்கலாம் என்று நினைத்தவன் அவன் கைப்பேசி எடுத்து அவளுக்கு முயற்சிக்க அழைப்பு எடுக்கப்படாமலே ஓய்ந்தது. மீண்டும் அவளுக்குள் ஒரு சோர்வு வந்து ஒட்டிக் கொள்ள அடுத்து கதிருக்கு போன் செய்தான் அவன்.

 

 

கதிர் அங்கு ஊரில் நடந்த விஷயத்தை எல்லாம் சொல்ல சுஜய்க்கு கவலை தோன்ற ஆரம்பித்தது. மீனா எப்படி நான் வருவேன் என்று தீர்மானமாக நினைக்கிறாள் என்று ஆச்சரியம் தோன்றியது.

 

 

இப்படி எல்லோரும் அவளை பேசுவதற்கு தான் ஊருக்கு சென்றாளா என்று அவள் மேல் கோபமும் வந்தது. என்னிடம் நின்று நிதானமாக பேசியிருக்கலாமே நான் சொல்வதை கேட்டிருக்கலாமே என்று நினைத்தான்.

 

 

அவள் என்ன சொல்லிய போதும் அவளை தான் இல்லாமல் தனியே அனுப்பி இருக்கக் கூடாது என்று தோன்றியது. கணவன் இல்லாமல் தனியே வந்தால் இப்படி எல்லாம் கூடவா பேசுவார்கள் என்றிருந்தது அவனுக்கு.

 

 

மதிய வேளை நெருங்க ராமு அண்ணா அவனை தேடி அலுவலகத்திற்கே வந்து விட்டார். “என்ன அண்ணா இங்க வந்து இருக்கீங்க என்றான் சுஜய்.

 

 

“தம்பி நீங்க காலையிலேயே சாப்பிடாம போயிட்டீங்க. போன் போட்டு போட்டு பார்த்தேன், உங்க நம்பர் பிஸியாவே இருந்துச்சு

“அதான் சாப்பாடு எடுத்துட்டு நேராவே வந்துட்டேன் என்றவரின் அன்பு நெகிழ வைத்தது. “அதுக்காக நீங்களே சுமந்துட்டு வந்தீங்களா, எதுக்குண்ணா இப்படி

 

 

“மீனாம்மா உங்களை பார்த்துக்க சொல்லிட்டு போயிருக்காங்க தம்பி. அதெப்படி சும்மா இருக்க முடியும் அதான் வந்தேன். நீங்க சாப்பிடுங்க என்றவர் அவனுக்கு பரிமாற ஆரம்பித்தார்.

 

 

அப்போது தான் நினைவு வந்தவனாக “ராமு அண்ணா நீங்க என்ன படிச்சு இருக்கீங்க என்றான்.

 

 

“என்ன தம்பி திடீர்னு என் படிப்பு பத்தி எல்லாம் கேட்குறீங்க. நான் பத்தாவது வரைக்கும் படிச்சிருக்கேன் தம்பி அவ்வளோ தான்

 

 

“இல்லைண்ணா நீங்க எவ்வளோ நாள் தான் வீட்டு வேலை பார்ப்பீங்க. அதான் உங்களை ஆபீஸ்ல உட்கார வைக்கலாம்ன்னு யோசனை. நீங்க தான் ஹிந்தி நல்லா பேசுவீங்களே நம்ம டெல்லி ஆபீஸ் கூடவும் அப்புறம் அங்க இருக்கற கஸ்டமர்கள் கூடவும் பேசவும் உங்களால முடியும் தானே

 

 

“நீங்க இங்க இருந்தா நானும் அடிக்கடி டெல்லிக்கு போயிட்டு வர்றதுக்கு சரியா இருக்கும்

 

 

“என்ன தம்பி நீங்க என்னை போய் ஆபீஸ் பார்த்துக்க சொல்றீங்க. நான் எப்படி அய்யோ அதெல்லாம் வேண்டாம் தம்பி, நல்லா படிச்ச ஆளுங்களா எடுத்து வேலைக்கு போடுங்க தம்பி. என்னை போய்… என்று தயங்கினார் அவர்.

 

 

“உங்க மீனாம்மாவோட ஐடியா தான் இது. ஒரு நாள் அவ தான் சொல்லிட்டு இருந்தா, நீங்க முன்ன மாதிரி கலகலப்பா இருக்கறது இல்லையாம். லட்சுமி அக்காகிட்ட வேலை ரொம்ப வேலை சும்மா இருக்க பிடிக்கலைன்னு

 

 

“அதான் மீனா இப்படி ஐடியா சொன்னா, எனக்கும் இது சரின்னு பட்டுச்சு. நான் ரொம்ப நாளா இதை பத்தி உங்ககிட்ட பேசணும்ன்னு நினைச்சுட்டே இருந்தேன். இன்னைக்கு தான் சந்தர்ப்பம் கிடைச்சுது

 

 

“நீங்க எதுவும் மறுக்கக்கூடாது என்று முடிவாக அவன் கூறிவிட அவரும் சம்மதித்து தலையாட்டினார். “அப்புறம் அண்ணா நான் இன்னைக்கு நைட் ஊருக்கு கிளம்பறேன்

 

 

“மீனாவை கூட்டிட்டு வரப்போறேன்

“செய்ங்க தம்பி… அப்புறம் நீங்க மீனாம்மாகிட்ட எல்லா உண்மையும் சொல்லிட்டீங்களா?? அதான் அவங்க கோவிச்சுகிட்டு போயிட்டாங்களா என்றார்.

 

 

“தப்பா எடுத்துக்காதீங்க தம்பி நான் இதெல்லாம் கேட்குறேன்னு

 

 

“அய்யோ அப்படி எல்லாம் இல்லைண்ணா. நீங்க சொன்னது சரி தான், அவளுக்கு என் மேல கொஞ்சம் கோவம் இருக்க தான் செய்யுது. நான் அதெல்லாம் சரி பண்ணி கூட்டிட்டு வர்றேன்

 

 

ராமு அவனை சாப்பிட வைத்து மீனாவுக்கும் போன் செய்து அவனை சாப்பிட்ட வைத்துவிட்டதாக கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

 

 

கதிர் வரச்சொல்லியிருந்த ஆளுக்கு போன் செய்தான் சுஜய். அவர் இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்றவர் வந்து சேரும் போது இரவு ஒன்பது மணியாகி போனது.

 

 

அதற்கு மேல் அவன் வீட்டிற்கு கிளம்பி வந்தவன் ஊருக்கு புறப்பட தயாராக ராமுவும் லட்சுமி அவனை மறுநாள் காலையில் கிளம்பி செல்லுமாறு கூற மனமில்லாமல் சரியென்றவன் உறங்கச் சென்றான்.

 

 

முன்தினம் போல் உறக்கம் அவனை தழுவுவேனா என்று அடம் பிடித்தது. மறுநாள் மீனாவை காணப் போகிறோம் என்ற எண்ணம் தோன்ற அவனுக்குள் மகிழ்ச்சி ஊற்று பீறிட்டு எழுந்தது.

 

 

ஏதோதோ எண்ணங்களில் முழ்கியவன் எல்லோரிடமும் உண்மையை கூறுவது என்று முடிவெடுக்க மனம் லேசாகியது. மீனாவை பற்றிய எண்ணங்களிலே இருந்தவனை உறக்கம் அழைத்துச் சென்றது.

 

 

விடியலிலேயே ஊருக்கு செல்ல கிளம்பியவன் கதிருக்கு மட்டும் போன் செய்தான். முதல் அழைப்பிலேயே அவன் போனை எடுக்க “சொல்லுங்கண்ணே என்றான்.

 

 

“கதிர் நான் ஊருக்கு கிளம்பி வந்துட்டு இருக்கேன், இன்னைக்கு நைட் நான் அங்க இருப்பேன் என்றான்.

 

 

“சரிண்ணே நான் எல்லார்கிட்டயும் சொல்லிடுறேன்

 

“கதிர் நான் இன்னைக்கு நைட் வருவேன்னு யாருக்கும் சொல்ல வேண்டாம். நான் வர்றது சஸ்பென்ஸாவே இருக்கட்டும்

 

 

காலையில் இருந்தே சோர்வாக இருந்தது மீனாவுக்கு, ‘எல்லோரிடமும் அவர் வருவார் வருவார் என்று சொல்லிவிட்டோம். அவர் வரவில்லை என்றால் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

 

 

முதல் நாள் அவன் அழைத்த போது வேண்டுமென்றே அவள் போனை எடுக்கவில்லை. ‘நாம பேசாம இருந்தா அவர் வருவார்ன்னு நினைச்சு போனை எடுக்காம விட்டுட்டோமே என்று நினைத்து வருந்த ஆரம்பித்தாள்.

 

 

‘மாமாகிட்ட வேற வீம்பா பேசியாச்சு, பேசாம நாமே போன் பண்ணி அவரை வரச்சொல்லிடுவோமா என்று நினைத்தாள். ‘சரி போன் போடுவோம் என்று அவன் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தாள்.

 

 

இது அவன் முறையாயிற்றே இப்போது அவன் போனை எடுக்கவில்லை. ‘கோவமா இருக்காரோ எடுக்க மாட்டேங்குறாரே. ச்சே அப்படிலாம் இருக்காது ஆபீஸ்ல வேலையா இருப்பார். கொஞ்ச நேரம் கழிச்சு போட்டுக்கலாம் என்று நினைத்து அமைதியானாள்.

 

 

இரவு எல்லோரும் சாப்பிட்டு படுக்க கதவு தட்டும் ஓசை கேட்டது. மற்ற எல்லோரும் படுக்க சென்றுவிட மீனா காமாட்சிக்கு உதவியாக சமையலறையை சுத்தம் செய்துக் கொண்டிருந்தாள்.

 

 

வாசல் கதவு சத்தம் கேட்டு காமாட்சி ‘இந்த நேரம் யாராக இருக்கும் என்று யோசித்தவாறே கதவை திறக்க அங்கு சுஜய் மீனாவின் அன்னை தந்தையுடன் நின்றிருந்தான்.

 

 

“வாங்க… வாங்க தம்பி… உள்ள வாங்க என்றவர் “மீனா… இங்க வா யாரு வந்திருக்கான்னு பாரு என்றார்.

 

 

‘யாராக இருக்கும்??? ஒருவேளை அவர் வந்திருப்பாரோ அப்படி என்றால் நம்மிடம் சொல்லியிருப்பாரே என்று மனம் பதைக்க ஒரு இனிய அவஸ்தையுடன் கூடத்திற்கு வந்தாள்.

 

 

சுஜய் பார்த்ததும் மனம் சந்தோசத்தில் குதூகலிக்க தொடங்கியது. “என்னடி பார்த்திட்டே நிக்குற, வந்தவரை வாங்கன்னு சொல்லி உள்ள கூட்டிட்டு போகாம அப்படியே மலை மாதிரி நிக்கறியே என்று வைதார் அவள் அன்னை.

“இருக்கட்டும் அத்தை, நான் திடீர்னு வருவேன்னு எதிர்பார்த்திருக்க மாட்டா, அதான் சிலையா நிக்குறான்னு நினைக்கிறேன்என்றவனின் இதழில் புன்னகை கசிந்தது.

 

 

“அண்ணி நாங்க வீட்டுக்கு கிளம்புறோம். மாப்பிள்ளை ஊருக்குள்ள வரும் போது உங்கண்ணன் தான் பார்த்திட்டு நேரா வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க

 

 

“மீனா இங்க இருக்கான்னு கூட்டிட்டு வந்தோம் என்றுவிட்டு அவர்கள் கிளம்பினர்.

 

 

“மீனா என்னம்மா பார்த்திட்டு இருக்க மேல ரூமுக்கு அவரை கூட்டிட்டு போ என்று காமாட்சி சொல்ல “வாங்க என்று அவனை அழைத்து சென்றாள்.

 

 

அவனிடம் இருந்த பையை வாங்கிக் கொண்டவள் முன்னே படியேற சுஜய் அவள் பின்னால் வந்தான். கதவை திறந்து அவள் உள்ளே செல்ல பின்னோடு நுழைந்தவன் கதவை அடைத்துவிட்டு பின்னிருந்து அவளை இறுக்கி அணைத்தான்.

 

 

  • காற்று வீசும்

Advertisement