Advertisement

அத்தியாயம் –18

 

 

முதல் புகைப்படத்தை அவள் கையில் எடுக்க அதில் சுஜய்யின் அன்னையும் தந்தையுமாக இருந்தனர். திருமணத்தின் போது எடுத்த புகைப்படமாக இருக்கும் போலும் மாலையும் கழுத்துமாக இருந்தனர்.

 

 

‘மாமா சின்னப்ப பார்க்க யாரோ மாதிரி இருக்காங்களே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். அடுத்த புகைப்படத்தை கையில் எடுத்தவள் ஆச்சரியமானாள்.

 

 

சற்று தள்ளி நின்றிருந்தவனை அழைத்தாள், “மாமா இங்க வாங்களேன், ஆமா இந்த போட்டோ எப்படி இங்க. கிழவிகிட்ட கேட்டு வாங்கிட்டு வந்துட்டீங்களா என்றாள்.

 

 

அது என்ன புகைப்படமாக இருக்கும் என்று அவனால் யூகிக்க முடிந்தது. “அது அப்புறம் சொல்றேன், அந்த படத்துல இருக்கறது யார் யார்ன்னு உனக்கு தெரியுதா

 

 

“ஏன் தெரியாம இந்த போட்டோவை தான் நாங்க சின்ன வயசுல இருந்து பார்த்திட்டு இருக்கோமே

“சரி எனக்கு சொல்லு இதுல இருக்கறது யாரெல்லாம்ன்னு

 

 

“இது தாத்தாவும் கிழவியும். கிழவியை பார்த்தீங்களா என்ன சூப்பரா இருக்குன்னு. தாத்தா பக்கத்துல உட்கார்ந்திருக்கற மிதப்பு. தாத்தா மட்டும் என்னவாம் நல்லா ஆஜானுபாகுவா உசரமா இருக்கார்ல

 

 

“மீசை வேற பெரிசா வைச்சுட்டு எப்படி இருக்கார் பாருங்க. இது எங்கம்மா பாவாடை தாவணி கட்டிட்டு இருக்காங்க. இங்க பாருங்க நல்லா சாந்து பொட்டை நீட்டமா வைச்சு இருக்கறதை

 

 

“இது சித்தி ரெட்டை ஜடை போட்டுட்டு பாவாடை சட்டை போட்டுட்டு இருக்காங்க. இது பெரிய மாமா நீங்க பார்த்திருக்க மாட்டீங்க இது சின்ன மாமா என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க அவனோ “தெரியும் என்றான்.

 

 

“என்ன தெரியும்

 

 

“உங்க பெரிய மாமாவை தெரியும்ன்னு சொன்னேன்

 

 

“புரியலை என்று சொன்னவளுக்கு எதுவோ புரிவது போலவும் இருந்தது.

 

 

“அவர் தான் எங்கப்பா மீனு

 

 

“என்ன? என்ன சொன்னீங்க? புரியலை எனக்கு?

 

 

“உங்க பெரிய மாமா கந்தசாமி பாண்டியன் அவர் தான் எங்கப்பா என்றான் அவளிடம் அனைத்தும் சொல்லிடும் முடிவுடன்.

 

 

அவளுக்குள் கோபம் சுறுசுறுவென்று ஏறியது. அது மிகவும் அடங்கிய கோபமாக இருந்தது, கையில் இருந்த மற்ற படங்களையும் திருப்பி திருப்பி பார்த்தவள் அதை கிழே வைத்துவிட்டு அவனை பார்த்தாள்.

 

 

அவள் பார்வையை தாளாதவனாக தவறிழைத்த சிறுவன் போல் அவள் முன் நின்றிருந்தான். “அப்போ நீங்க என் மாமா பையனா

 

 

“ஏன் சொல்லலை, இதுக்கு முன்னாடியே ஏன் சொல்லலை. ஏதோ போனா போகட்டும் அத்தை மகளுக்கு எவனும் கிடைக்க மாட்டான்னு எனக்கு வாழ்க்கை கொடுத்திருக்கீங்க இல்லை

“மீனு அப்படி எல்லாம் எதுவும் இல்லை…….” என்று சொல்ல ஆரம்பித்தவனை பார்த்து போதும் என்பது போல் கையை தூக்கி காண்பித்தாள்.

 

 

“வேணாம், எதுவும் பேசாதீங்க. நீங்க அழுத்தமானவர்ன்னு நினைச்சேன் ஆனா இந்த அளவுக்கு அழுத்தமானவர்ன்னு நான் நினைக்கலை. நமக்கு கல்யாணம் ஆகி எத்தனை மாசம் ஆச்சு

 

 

“ஒரு தரம்… ஒரு தரம் கூடவா உங்களுக்கு என்கிட்ட சொல்லணும்ன்னு தோணாம போச்சு

 

 

“இல்லை மீனு உன்கிட்ட சொல்லக் கூடாதுன்னு நான் நினைச்சதே இல்லை. அப்படி நினைச்சு இருந்தா இன்னைக்கு நான் இந்த விஷயத்தை உன்கிட்ட சொல்லாம இருந்திருப்பேனா

 

 

“நான் உங்ககிட்ட எதுவும் பேச விரும்பலை என்றுவிட்டு விறுவிறுவென்று படியிறங்கி கிழே சென்றுவிட்டாள்.

 

 

அவளை சமாதானம் செய்யவென்று அவனும் கிழே சென்றான். அவளோ அவனிடம் பாராமுகமே காட்டினாள். வெறுத்து போனவன் ஏதும் பேசாமல் கட்டிலில் சென்று விழுந்தான்.

 

 

அவள் நாலு வார்த்தை நன்றாக திட்டியிருந்தால் கூட நன்றாயிருந்திருக்கும் போல் இருந்தது அவனுக்கு. இப்படி பேசாமல் அவள் இருப்பது அவனுக்கு சித்திரவதையாக இருந்தது.

 

 

மீனா எப்போதும் சட்டென்று கோபப்பட்டும் உணர்ச்சி வசப்பட்டும் பேசி அவன் கண்டிருக்கிறான். இது புதிது உணர்ச்சிகளை அடக்கி கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்.

 

 

எதையும் முகத்திற்கு நேரே பேசுபவள், அவன் என்ன பேச வருகிறான் என்று கேளாமலே இருந்துவிட்டாளே என்றிருந்தது அவனுக்கு. அவளிடம் சொல்லியாயிற்று இதை பற்றி கண்டிப்பாக அவள் எல்லோரிடமும் சொல்லுவாள் என்றே தோன்றியது.

 

 

மறுநாளைய விடியலில் எல்லோருக்கும் உண்மை தெரிந்திருக்கும். அதை எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்ற பதைப்பு அவனுக்குள் இருந்தது. அன்றைய இரவு விடியாமலே போய் விடக் கூடாதா என்றிருந்தது.

 

விடியாத இரவென்பது ஏது, பலவாறான எண்ணங்களில் குழம்பிக் கொண்டிருந்தவன் எப்போது தூங்கினான் என்றே அறியவில்லை. கண் விழித்து பார்க்கும் போது நன்றாக விடிந்திருந்தது.

 

 

இரவு அவள் அவனருகில் வந்து படுக்கவில்லை என்பதை அவன் அறிவான். ஹாலில் இரவு முழுவதும் விளக்கெரிந்தது ஞாபகத்திற்கு வந்தது.

 

 

கட்டிலில் எழுந்து அவன் அமர அவன் எழுந்துவிட்டானா என்று மீனா அப்போது எட்டிப்பார்த்துவிட்டு போனாள். காலைக்கடனை எல்லாம் முடித்துவிட்டு குளித்துவிட்டே அவன் அறையில் இருந்து வெளியில் வந்தான்.

 

 

அவன் வருகைக்காகவே வாசலில் காத்திருந்தார் போல் சோபாவிலேயே அமர்ந்திருந்தாள் அவள். ‘என்ன சொல்லப்போகிறாளோ என்று எண்ணிக் கொண்டே அறையை விட்டு வெளியில் வந்தான்.

 

 

அவள் முகம் ஒரு வித தீவிரத்தை சுமந்திருந்தது. “நான் ஊருக்குக்கு போகணும் என்றாள். இதை அவன் ஓரளவு எதிர்பார்த்திருந்தான், ஆனால் இப்படி உடனே கூறுவாள் என்று நினைக்கவில்லை.

 

 

“அவசியம் போகனுமா

 

 

“அதான் சொல்லிட்டேன்ல போகணும்னு

 

 

“சரி டிக்கெட் பார்த்திட்டு சொல்றேன்

 

 

“எனக்கு இன்னைக்கே ஊருக்கு போகணும்

 

 

“டிக்கெட் கிடைக்க வேண்டாமா. இப்பவே எப்படி போக முடியும், எனக்கும் வேலையிருக்கு, முடிச்சுட்டு நானும் கூட வர்றேன்

 

 

“உங்ககூட வர்றேன்னு நான் சொல்லவேயில்லையே. எனக்கு இப்போவே ஊருக்கு போகணும், முடியாதுன்னா சொல்லுங்க நானே எப்படியாச்சும் ஒரு பஸ்ஸை பிடிச்சு போய்க்கறேன்

 

 

“என்ன மீனு விளையாடுறியா எதுக்கு இப்படி பிடிவாதம் பிடிக்கிற. அப்போ நான் இல்லாம நீ ஊருக்கு போகணும்னு முடிவே பண்ணிட்டியா

 

 

“ஆமா என்னை அனுப்பிவைக்க முடியுமா… முடியாதா? என்றாள் இரக்கமே இல்லாமல்.

 

 

தொப்பென்று சோபாவில் அமர்ந்தான் இருகைகளாலும் தலையை தாங்கிப் பிடித்துக் கொண்டான். தலை வெகுவாக கனக்க ஆரம்பித்தது. ‘இப்படி பிடிவாதம் செய்தால் என்ன செய்வது

 

 

‘என்னையும் வரவேண்டாம் என்று உதாசீனம் செய்கிறாள் என்று கோபமும் எழுந்தது அவனுக்கு. இவளை மட்டும் எப்படி தனியாக அனுப்பி வைப்பது எல்லாரும் கேள்வி கேட்பார்களே என்று யோசித்து யோசித்து குழப்பமே மிஞ்சியது.

 

 

சட்டென்று ஒன்று தோன்ற கதிருக்கு போன் செய்தான். “ஹலோ கதிர்

 

 

“சொல்லுங்கண்ணே

 

 

“எனக்கு ஒரு உதவி செய்யணும் கதிர்

 

 

“செய்ன்னு சொன்னா செய்ய போறேன், உதவின்னு எல்லாம் எதுக்குண்ணே சொல்லிட்டு இருக்கீங்க

 

 

“என்ன எதுன்னு கேட்காம செய்யணும் கதிர் ப்ளீஸ் எனக்காக

 

 

“என்னண்ணே எதுவும் பிரச்சனையா

 

 

“மீனுக்கு ஊருக்குக்கு போகணுமாம், நீயும் தேனுவும் அவகூட போகமுடியுமா

 

 

“என்னண்ணே என்ன பிரச்சனை

 

 

“இல்லை அதுவந்து… என்று அவன் இழுத்துக் கொண்டிருக்க அவனிடம் இருந்து மொபைலை பிடிங்கியவள் அதை வாங்கி காதில் வைத்தாள்.

 

 

“என்ன கதிரேசா உன்னால வர முடியுமா… முடியாதா… அதை மட்டும் சொல்லு. அதைவிட்டுட்டு அவர்கிட்ட என்ன ஏதுன்னு எதுக்கு காரணம் கேட்டுட்டு இருக்கே

 

 

“மீனா என்னாச்சுன்னு இப்போவே கிளம்பணும்ன்னு குதிக்கற

“இங்க பாரு உன்னால முடியுமா முடியாதா என்று மீண்டும் அவள் அதையே கேட்க “வர்றேன், நீ போனை அண்ணன்கிட்ட கொடு என்றான் அவன்.

 

 

“தர்றேன் ஆனா என்ன பிரச்சனை ஏது பிரச்சனைன்னு அவர்கிட்ட கேட்டேன்னு தெரிஞ்சுது எனக்கு கெட்ட கோபம் வரும். நான் சும்மா தான் ஊருக்கு போகணும்ன்னு சொன்னேன்

 

 

“நான் கேட்டதுக்காக தான் அவர் அனுப்பி வைக்குறார் அவர்க்கு ஏதோ முக்கியமான வேலையிருக்காம் இங்க. அதுனால தான் அவர் கூட வரலை போதுமா என்றாள்.

 

 

“சரி புரியுது, நீ போனை அண்ணாகிட்ட கொடு

 

 

அவனிடம் போனை திணித்துவிட்டு நகர்ந்தாள். “சொல்லு கதிர்

 

 

“அண்ணே என்கிட்ட சொல்ல முடிஞ்சா சொல்லுங்கண்ணே. மீனா எதுவும் உங்ககிட்ட சண்டை போட்டாளா

 

 

“இல்லை கதிர் அப்படியெல்லாம் எதுவுமில்லை. அதான் என்ன காரணம்ன்னு மீனு சொன்னாளே. அப்புறம் கதிர் நான் வண்டிக்கு சொல்லிடுறேன் இப்போவே இன்னும் ஒரு ரெண்டு மணி நேரத்தில வண்டி இங்க இருக்க மாதிரி சொல்லிடுறேன்

 

 

“உனக்கு முடிக்க எதுவும் முக்கிய வேலை இருந்தா சொல்லு கதிர். நான் செஞ்சு வைச்சுடறேன்

 

 

“அண்ணே நீங்க ரெண்டு பேருமா சேர்ந்து எதையோ மறைக்குறீங்க. சரி விடுங்க நான் அதை எதுவும் கேட்கலை. எனக்கு முக்கிய வேலை எதுவும் இல்லைண்ணே

 

 

“நாளைக்கு ஒருத்தரை வரச்சொல்லி இருக்கேன். அவர்கிட்ட மட்டும் ஒரு கவர் கொடுக்கறேன் அதை மட்டும் கொடுத்திடுங்கண்ணே போதும்

 

 

“சரி கதிர் நீ இங்க வரும் போது கொண்டு வந்திடு. அப்புறம் கதிர் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்

 

 

“சொல்லுங்கண்ணே

 

“நான் ஊருக்கு வரும் போது சொல்றேன் கதிர், நான் வரவரைக்கும் நீங்க அங்க இருந்து கிளம்ப வேண்டாம்

 

 

“அப்புறம் நான் ஊருக்கு வர்றேன்னு மீனுவுக்கோ தேனுவுக்கோ யாருக்குமே சொல்ல வேண்டாம்

 

 

“சரிண்ணே…. ஆனா அண்ணே நான் திரும்ப திரும்ப கேட்கிறேன்னு நினைக்காதீங்க. என்கிட்ட சொல்ல முடிஞ்ச பிரச்சனைன்னா சொல்லுங்கண்ணே

 

 

“ஒண்ணும்மில்லை கதிர், நான் கண்டிப்பா ஊருக்கு வரும் போது உன்கிட்ட சொல்றேன்

 

 

“சரிண்ணே என்று விட்டு போனை வைக்க தேனு அவனருகில் வந்தாள். “யாரு மாமா போன்ல நீங்க ஏதோ டென்ஷனா இருக்க மாதிரி தெரியுது

 

 

“அண்ணன் தான் கூப்பிட்டார்

 

 

“என்னவாம் மாமாவுக்கு

 

 

“என்ன பிரச்சனைன்னு தெரியலை தேனு, உங்கக்கா இப்போவே ஊருக்கு போகணும்ன்னு சொல்றா. அண்ணா உன்னையும் என்னையும் கூட போயிட்டு வர சொல்றார்

 

 

“என்ன பிரச்சனைன்னு கேட்டா ரெண்டு பேருமே எதுவும் சொல்ல மாட்டேங்குறாங்க. என்னால தான் எல்லாம்ன்னு தோணுது, அவரை ஊருக்கு கூட்டிட்டு வந்தது நான் தான்

 

 

“இப்படி ஒரு அவசர கல்யாணம் அவங்களுக்கு நடந்து போனதுக்கு நான் தானே காரணம் தேனு. ரெண்டு பேருக்கும் ஏதோ விதத்துல பிடிக்கலைன்னு நினைக்கிறேன்

 

 

“இப்போ மீனு திடுதிப்புன்னு ஊருக்கு போகணும்னு சொல்றான்னா அவங்களுக்குள்ள எதுவும் சரியில்லைன்னு தானே அர்த்தம். என்ன தேனு நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன். நீ எதுவும் சொல்லாம இருக்க

 

 

“நீங்க நினைக்கிறது தப்பு மாமா, ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் ரொம்பவே பிடிக்கும். அக்கறை இல்லாம தான் மாமா அக்காவோட நம்மையும் அனுப்பி வைக்க நினைக்கிறாரா

 

 

“எங்கக்கா மட்டும் என்ன சும்மாவா, மாமாவை ஒரு வார்த்தை யாரும் சொல்ல விடமாட்டா. அவர் வர்றதுக்கு கொஞ்சம் தாமதம் ஆனா கூட அவரை ரொம்பவே தேடுவா

 

 

“எனக்கென்னமோ அவங்களுக்குள்ள வேற பிரச்சனைன்னு தோணுது. என்னன்னு பார்ப்போம் விடுங்க, மாமா ரொம்ப நல்ல மாதிரி. அக்கா மனசு நோக கண்டிப்பா நடக்க மாட்டார்

 

 

“மீனாக்காவும் படபடன்னு பேசுவா, தப்புன்னா முகத்துக்கு நேரவே கேட்பா. நீங்க சொல்றது பார்த்தா இது வேற தான் இருக்கும்னு தோணுது. நீங்க எதுவும் பீல் பண்ணாதீங்க மாமா

 

 

“சரி அதை பத்தி அப்புறம் பார்க்கலாம், நீ ஊருக்கு கிளம்ப டிரஸ் எல்லாம் எடுத்து வை. நான் ஆபீஸ் வரைக்கும் போயிட்டு வந்திடறேன்

 

 

“என்ன மாமா எல்லாம் எடுத்து வைக்க சொல்லிட்டு நீங்க ஆபீஸ் கிளம்புறேன்னு சொல்றீங்க

 

 

“இல்லை தேனு நாளைக்கு ஒருத்தர் வருவார், அவருக்கு ஒரு கொட்டேஷன் கொடுக்கணும். அதை ரெடி பண்ணி அண்ணாகிட்ட கொடுக்கணும் அதுக்கு தான் கிளம்பறேன். ஒரு அரைமணி நேரத்துல வந்திடுவேன் சரியா

 

 

“மாமா எத்தனை நாள் அங்க இருக்க மாதிரி இருக்கும்

 

 

“ஹ்ம்ம் என்று யோசித்தவன் “ஒரு வாரத்துக்கு தேவையான மாதிரி துணி எடுத்து வைச்சுக்கோ

 

 

“அய்!!! ஒரு வாரமா, ஜாலி!!!!!

 

 

“ஊருக்கு போறதுன்னா அவ்வளவு சந்தோசமா

 

 

“ஆமா அம்மா வீட்டுக்கு போறதுன்னா சும்மாவா

 

 

“நான் உன்னை சந்தோசமா வைச்சுக்கலையா

 

 

அவனருகில் வந்தவள் “மாமா நான் அப்படி சொல்லலை. என்னை பெத்து வளர்த்து இத்தனை வருஷமா என்னை ஆளாக்கி பார்த்தவங்களை நான் விட்டுட்டு உங்க கூட தான் மாமா இருக்கேன். எதுக்காகன்னு நினைக்கிறீங்க. நீங்க இல்லாம எனக்கு வாழ்க்கை இல்லை அது தான் காரணம்

 

 

“நமக்கு கல்யாணம் ஆகி ஒரு நாலு மாசம் ஆச்சு. எனக்கும் அவங்களை பார்க்கணும் போல இருக்காதா, அஜய் நான் இல்லாம தினமும் அழறான்னு அம்மா சொன்னாங்க எனக்கும் எல்லாரையும் பார்க்கணும்னு ஆசையா இருக்காதா மாமா

 

 

“ஹேய் லூசு… ஏதோ சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா இப்படி பிழிய பிழிய கதை சொல்ற, போடி. போய் முதல்ல கிளம்பு என்றுவிட்டு அவன் அலுவலகம் கிளம்பி சென்றான்.

 

 

அவன் திரும்பி வந்ததும் இருவருமாக கிளம்பி சுஜய் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். “வா கதிர், வாம்மா தேனு என்று வரவேற்றான் சுஜய்.

 

 

மீனு ஊருக்கு கிளம்பத் தயாராக அவள் பையை எடுத்து தயாராக வெளியில் வந்தாள். “என்னக்கா திடீர்னு ஊர் ஞாபகம் வந்திருச்சு உனக்கு என்றாள் தேனு.

 

 

“எல்லாரையும் பார்க்கணும் போல இருக்கு அதான் போகலாம்னு

 

 

“அப்போ நீயும் மாமாவும் சேர்ந்து போகலாம்ல

 

 

தேனு கேள்வி கேட்க ஆரம்பித்ததுமே சுஜய் தவிக்க ஆரம்பித்தான் மீனு என்ன சொல்வாளோ என்று.

 

 

“இப்போ உனக்கு என்ன பிரச்சனை. உங்களால என்னோட வரமுடியாது அதானே, யாரும் என் கூட வரவேண்டாம் எனக்கே போய்க்க தெரியும் நான் பார்த்துக்கறேன் என்று முறைத்தாள் மீனு.

 

 

“உனக்கு எதுக்கு தான் இவ்வளவு பிடிவாதமோ தெரியலை போக்கா. நான் எதுவும் பேசலை

 

 

“மாமா வண்டி எப்போ வரும் சுஜய்யிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தாள்.

 

 

“இன்னும் பத்து நிமிஷத்துல வந்திடும் தேனு. அப்புறம் தேனு இந்த தைலத்தை பாட்டிக்கிட்ட கொடுத்திடு. போன தடவை மூட்டு வலின்னு சொன்னாங்க. இங்க ஒரு டாக்டர் பார்த்து மருந்து வாங்கி கொடுத்திருந்தேன்

 

 

“இப்போ கொஞ்சம் பரவாயில்லைன்னு சொல்லிட்டு இருந்தாங்க பாட்டி. மருந்து தீர்ந்து போயிருக்கும் இதை அவங்ககிட்ட கொடுத்திரு தேனு என்று அதை அவளிடம் கொடுத்தான்.

 

 

அப்பக்கம் மீனு அவனை தீப்பார்வை பார்த்தாள். நீ எப்படி வேண்டுமானாலும் பார்த்துக் கொள் என்பது போல் அவனும் சளைக்காமல் பார்த்தான்.

 

 

அந்நேரம் வாசலில் வண்டி வந்து நிற்க சுஜய் அவர்களை பார்த்து கிளம்புமாறு கூறினான். மீனு லட்சுமி அக்காவிடமும் ராமுவிடமும் சொல்லிவிட்டு சுஜய்யை நோக்கி ஒரு பார்வை மட்டும் செலுத்தியவள் வேகமாக சென்று காரில் ஏறி அமர்ந்தாள்.

 

 

சுஜய்க்கு தான் உள்ளுக்குள் எதுவோ செய்தது. திருமணமாகி இத்தனை மாதத்தில் இதுவரை அவளை பிரிந்து அவன் இருந்ததேயில்லை. ‘என்னை போல் இவளுக்கும் வருத்தமாக இல்லையா என்றிருந்தது அவனுக்கு.

 

 

கார் வீட்டில் இருந்து கிளம்ப அவனுக்கு நெஞ்சடைப்பது போலிருந்தது. வேகமாக வீட்டுக்குள் சென்றவன் மடிகணினி அடங்கிய பையை எடுத்துக் கொண்டு காரை எடுத்துக் கொண்டு அலுவலகம் விரைந்தான்.

 

 

கார் வேகமாக சென்றுக் கொண்டிருக்க மீனுவோ கனத்த அமைதியுடன் இருந்தாள். எப்போதும் வளவளவென்று பேசிக் கொண்டிருப்பவள் அமைதியாக இருப்பது மற்ற இருவருக்கும் கஷ்டமாக இருந்தது.

 

 

தேனுவால் அமைதியாக இருக்க முடியவில்லை, மீனு திட்டினாலும் பரவாயில்லை என்று மீண்டும் ஆரம்பித்தாள்.

 

 

“மீனாக்கா உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு சொல்லுக்கா. எங்களால முடிஞ்சா நாங்க சரி செய்ய பார்க்குறோம், அதுக்காக நீ இப்படி மாமாவை விட்டுட்டு ஊருக்கு கிளம்புறது சரியாக்கா

 

 

“இங்க பாரு யாரு சொன்னாங்க எங்களுக்குள்ள பிரச்சனைன்னு அதெல்லாம் ஒண்ணும்மில்லை. ஒரு சின்ன வருத்தம் அவ்வளவு தான் அதை நான் பார்த்துக்கறேன்

 

 

“நீ ஆறுதல் சொல்றேன்னு நினைச்சுட்டு திரும்ப திரும்ப எதுவும் பேசி என்னை கொல்லாதே தேனு. ப்ளீஸ் என்னை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடு

 

 

“தேனு சொன்னா கேட்க மாட்டியா நீ. இது அவங்க குடும்ப பிரச்சனை அதுல மூணாம் மனுஷி நீ ஏன் தலையிடுற

 

 

“என்ன கதிரேசா உன் பங்குக்கு நீ வேற குத்தி காட்டுறியா

 

 

“நான் யாரு மீனா உன்னை குத்தி காட்ட. நாங்க உனக்கு யாரோ தானே

 

 

“போதும் கதிரேசா… நீயும் கூட என்னை புரிஞ்சுக்காம எதுக்கு இப்படி தொல்லை பண்ணுற. எங்களுக்குள்ள எந்த சண்டையும் இல்லை தயவு செய்து இதை புரிஞ்சுக்கோங்க

 

 

“நான் இப்போ தனியா தான் ஊருக்கு போறேன். ஆனா திரும்பி வரும் போது நானும் அவருமா தான் வருவோம் போதுமா

 

 

‘அண்ணா ஊருக்கு வருவார் என்று தெரிந்தே மீனா கிளம்புவது கதிருக்கு ஆச்சரியமாக இருந்தது. தேனு சொன்னது சரியே என்று தோன்றியது அதற்கு மேல் அவன் வாயை திறக்கவில்லை.

 

 

மீனு ஏதோ பெரிய யோசனையில் இருப்பதாக தோன்றியது, அவ்வப்போது அவள் கண்களை துடைப்பதும் யோசிப்பதுமாக இருந்தாள்.

 

 

அவளின் இந்த தோற்றம் சற்றே கவலையாக இருந்தாலும் எல்லாம் சரியாகி விடும் என்றே தேனுவும் கதிரும் நம்பினர்.

 

 

அவளை ஊருக்கு அனுப்பிவிட்டு அலுவலகம் சென்றவனுக்கோ இருப்பே கொள்ளவில்லை. வேலையில் கவனமும் செல்லவில்லை, முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருந்ததால் கவனத்தை முயன்று அதில் திருப்பினான்.

 

 

அவ்வப்போது கதிருக்கு போன் செய்து எங்கிருக்கிறார்கள் சாப்பிட்டார்களா மீனு எப்படி இருக்கிறாள் என்று அவன் கேட்க தவறவில்லை. மாலை முடிந்து இரவு நெருங்கும் வேலை அவர்கள் திண்டுக்கல்லை தாண்டி விட்டதாக கதிர் போன் செய்திருந்தான்.

 

 

சுஜய்யின் நெஞ்சில் சுமை கூடியது போலிருந்தது. இன்னும் சில மணி நேரத்தில் அவர்கள் ஊருக்கு சென்றுவிடுவார்கள். அடுத்து என்ன நடக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

 

 

எதையும் சந்தித்து தான் தீர வேண்டும் என்று புரிய இதில் தன் தவறென்ன என்று எண்ணியவன் நடக்கப் போவதை சந்திக்க தன்னை தயார்படுத்திக் கொண்டான்.

 

 

வீட்டிற்கு செல்ல பிடிக்கவில்லை என்பதால் சுஜய் அலுவலகத்திலேயே நேரத்தை கடத்தினான். பத்து மணி ஆன வேளை கதிர் வீட்டிற்கு வந்துவிட்டதாக போன் செய்திருந்தான்.

 

 

சுஜய் அப்போது தான் அலுவலத்தில் இருந்து கிளம்பியவன் வீட்டிற்கு சென்றான். வாசலிலேயே ராமுவும் லட்சுமியும் அவனுக்காக காத்திருக்க “என்ன அண்ணா இங்க இருக்கீங்க, வீட்டுக்கு போகலையா என்றான்.

 

 

“அதெப்படி தம்பி போக முடியும். மீனாம்மா இல்லாத நேரம் நாங்க தானே உங்களை கவனிச்சுக்க முடியும், ஊருக்கு போகும் போதே சொல்லிட்டு தான் போனாங்க

 

 

“நான் இல்லைன்னு அவர் லேட்டா தான் வீட்டுக்கு வருவார், சரியா சாப்பிட மாட்டார், அவரை சாப்பிட வைக்கிறது உங்க பொறுப்புன்னு எங்க ரெண்டு பேருக்கிட்டயும் சொல்லிட்டு போயிருக்காங்க

 

 

மீனு அப்படி சொல்லி சென்றதில் சுஜய்யின் மனது இதமாகியது. சாப்பிட்டு அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அவர்கள் அறைக்கு சென்றவனுக்கு இருப்பே கொள்ளவில்லை.

 

 

அவள் இல்லாத தனிமை வெறுமையாக இருந்தது. இதற்கு முன்பு தனியாக ஒரு வீட்டில் இருந்தவன் தான் ஆனால் இந்தளவுக்கு அவன் தனிமையை வெறுத்ததில்லை.

 

 

அவள் பேசாவிட்டாலும் பரவாயில்லை முன் தினம் போல் அவள் வீட்டில் இருந்திருந்தால் கூட போதும் என்று தோன்றியது. பைத்தியமே பிடித்துவிடும் போல் இருந்தது அவனுக்கு.

உறக்கம் கூட இரக்கம் இல்லாமல் அவனை விட்டு சென்று விட்டது போலும். எப்பொழுது விடியும் என்றிருந்தது அவனுக்கு.

 

 

வயல்பட்டிக்கு அவர்கள் வந்தடையும் போது நேரமாகி விட்டிருந்தது. கதிர் திண்டுக்கல் தாண்டியதுமே ஊருக்கு போன் செய்து அவர்கள் கொண்டிருப்பதாக கூறிவிட்டான்.

 

 

இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு ஊருக்கு வருவதாக கூறிவிட்டிருந்தான். எதற்காக இப்போது வருகிறார்கள் என்று வீட்டு பெரியவர்களுக்கு பதைப்பு இருந்தாலும் கதிர் போன் செய்யும் போது எதையும் கேட்கவில்லை.

 

 

வீட்டிற்கு வந்ததும் பேசிக் கொள்ளலாம் என்று அமைதியாக இருந்தனர். கதிர் அவன் அன்னையை அழைத்து மட்டுமே கூறியிருந்ததால் அவர் அருகில் இருந்த மீனாவின் வீட்டிற்கு சென்று விஷயத்தை கூற அவர்களும் வாசலிலேயே காத்திருந்தனர்.

 

 

வாசலில் கார் வந்து நிற்க அவர்கள் வீட்டில் வெளிச்சமாக இருந்தது. மீனா இறுக்கமாக இருப்பது போல் தோன்ற அவளை நெருங்கவே மற்றவர்கள் தயங்கினர்.

 

 

கதிரும் அவன் அன்னையிடம் தற்சமயம் எதுவும் பேச வேண்டாம் என்றும் எதுவானாலும் விடிந்ததும் பேசிக்கொள்ளலாம் என்று கூறிவிட்டான். மீனா அவர்கள் வீட்டுக்கு செல்லாமல் பாட்டியுடனே இருந்துக் கொள்ளவதாக கூறவிட அவளின் இந்த பிடிவாதம் அவர்களுக்கு புதிதாக இருந்தது.

 

 

ராஜேந்திரன் இப்போதே கேட்க வேண்டும் என்று தாம்தூம் என்று குதித்துக் கொண்டிருந்தார், காமாட்சி அவரை சமாளித்து உள்ளே அனுப்பி வைத்தார். பாட்டியுடன் அவர் அறைக்கு சென்ற மீனு பாட்டியின் மடியில் படுத்துக் கொண்டாள்.

 

 

“மீனாட்சி என்னம்மா ஆச்சு என்றார் அவர் பரிவாக.

 

 

“ஒண்ணும்மில்லை பாட்டி

 

 

அவளின் ஒண்ணும்மில்லை என்பதிலேயே எதுவோ இருக்கிறது என்று அந்த மூத்த பெண்மணிக்கு புரிந்தது. எப்போதும் தன்னை கிழவி என்றே அழைக்கும் அவள் பாட்டி என்ற அழைத்ததிலே அவருக்கு புரிந்தது பிரச்சனை என்று.

 

 

“என்னம்மா எதுவும் சொல்லாம பாட்டி மடியில படுத்து இருக்க

 

 

“ஏன் படுக்க கூடாதா

 

 

“தாராளமா படுத்துக்கோ யார் வேண்டாம்ன்னு சொன்னது

 

 

அப்போது அவள் பார்வை சுவரில் பதிய அந்த சட்டம் போட்ட புகைப்படத்தை கண்டவள் எழுந்து அமர்ந்தாள். “பாட்டி நான் ஒண்ணு கேட்பேன் நீ சங்கடப்படாம பதில் சொல்லுவியா

 

 

“கேளு மீனாட்சி நான் பதில் சொல்றேன்

 

 

“ஏன் பாட்டி உனக்கு உன் பெரிய மகன் ஞாபகமே வந்ததில்லையா. அவங்களை பார்க்கணும்னு உனக்கு தோணினதே இல்லையா என்றாள்.

 

 

பேத்தி இப்போது சம்மந்தமில்லாமல் எதற்கு பேசுகிறாள் என்று யோசித்தார் அவர். “இப்போ எதுக்கும்மா அதை பத்தி கேட்குற என்றார் அவர்.

 

 

“இல்லை பாட்டி அந்த போட்டோவை பார்த்ததும் சும்மா கேட்கணும்னு தோணிச்சு அதான் கேட்டேன். நீ பதில் சொல்லமாட்டியா, உனக்கு இன்னும் அவங்க மேல கோபமிருக்கா

 

 

“பெத்த தாயிக்கு பிள்ளை மேல கோபமிருக்குமா

 

 

“அப்புறம் ஏன் பாட்டி இத்தனை வருஷமா அவரை பார்க்காம இருக்கீங்க. அவரும் இங்க வந்து போன மாதிரி தெரியலையே

 

 

“யார் சொன்னது என் பிள்ளை வந்து போகலைன்னு

 

 

“என்ன பாட்டி சொல்ற பெரிய மாமா வந்து இருக்காங்களா!!!! நாங்க பார்த்ததே இல்லையே

 

 

“உங்க பெரிய மாமன் வந்தப்போ கோபத்துல உங்க சின்ன மாமன் அவனை கண்டபடி பேசி விரட்டி விட்டுட்டான். அதுக்கு பிறகும் அவன் எங்களை பார்க்க வந்திருந்தான் அப்பவும் உன் மாமன் தான் விரட்டிட்டான்

 

 

“உங்க தாத்தா ஆஸ்பத்திரில இருக்கும் போது ஒரு தரம் அங்கேயே வந்து பார்த்தான். உன் சின்ன மாமன் இல்லாத நேரமா தான் வந்து பார்த்தான். ஆனா அவனுக்கு எப்படியோ விஷயம் தெரிஞ்சு ஆஸ்பத்திரிக்கு வந்து பெரிய கலாட்டா பண்ணிட்டான்

 

 

“அதுக்கு பிறகு உன் பெரிய மாமன் ஊருக்கு வரவேயில்லை, எங்க எப்படி இருக்கானோ என்றவரின் கண்களில் நீர் துளிர்த்தது.

 

 

“ஏன் பாட்டி அவங்களுக்கு பசங்க எதுவும் இருக்காங்களா என்றதும் பாட்டியின் கண்ணில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.

 

 

“பாட்டி எதுக்கு அழற நான் சும்மா தெரிஞ்சுக்கலாமேன்னு தான் கேட்டேன் பாட்டி, நீ அழாதே

 

 

“இல்லை மீனா ஒண்ணும்மில்லை நீ படு நடுச்சாமம் ஆச்சு என்று சொல்லி அவரும் படுத்தார். இரண்டு மீனாட்சிக்கும் தூக்கம் தொலைவாக போனது, ஒருவர் தன் மகனை நினைத்தும் மற்றவள் தன் துணைவனை நினைத்தும் தலையணையை நனைத்தனர்.

 

 

 

  • காற்று வீசும்

Advertisement