Advertisement

அத்தியாயம் –16

 

 

திருமணம் முடிந்து சுஜய்யும் மீனுவும் சென்னைக்கு திரும்பி ஒரு வாரம் கடந்திருந்தது. மீனு அவளாகவே கல்லூரி சென்று வர ஆரம்பித்தாள்.

 

 

நாட்கள் விரைந்து கடக்க ஊரில் இருந்து கதிரும் தேனுவும் சென்னை வந்திருந்தனர். அவர்களின் வீட்டில் இருந்து சற்று தொலைவில் அவர்களுக்கு வீடு பார்த்திருந்தான் சுஜய்.

 

 

வந்தவர்களை அங்கேயே குடியமர்த்த ஊரில் இருந்து எல்லோருமே வந்திருந்தனர். ஒரு வாரம் போல தங்கியிருந்தவர்கள் ஊரை சுற்றிப் பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பினர்.

 

 

தற்சமயம் சுஜய்யின் அலுவலகத்தையே கதிர் பகிர்ந்து கொள்ள முதலில் சறுக்கலாக ஆரம்பித்த அவன் வேலை சிறிது சிறிதாக ஏறுமுகமாகியது.

 

 

இந்நிலையில் ஒரு நாள் காலை மீனா கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருக்கும் போது “மீனு இன்னைக்கு நானே வந்து உன்னை கூட்டிட்டு போறேன். எனக்கு உங்க காலேஜ்ல ஒரு வேலை இருக்கு

 

 

“என்ன வேலை

 

 

“அதான் சொன்னேனே ஆபீஸ் வேலை

 

 

“ஹ்ம்ம் சரி வந்திடுங்க என்று விட்டு அவள் கல்லூரிக்கு கிளம்பினாள்.

 

 

சுஜய் அலுவலகம் சென்று விட்டு அங்கு அவன் செய்ய வேண்டிய பணிகளை முடித்தவன் மணியை பார்த்தான். ‘இப்போது சென்றால் சரியாக இருக்கும் என்று எண்ணியவன் சில கோப்புகளை எடுத்துக் கொண்டு மீனாவின் கல்லூரி நோக்கி விரைந்தான்.

 

 

சுஜய் வருவேன் என்று சொல்லியிருந்ததால் மீனு கடைசி வகுப்பில் கேட்டுக் கொண்டு வெளியே வந்து அவனுக்காக காத்திருந்தாள். அவர்கள் கல்லூரிக்குள் நுழைந்தவன் மீனு அவனுக்காக காத்திருப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை.

 

 

“என்ன மீனு கிளாஸ்க்கு போகாம இங்கேயே உட்கார்ந்திருக்க

 

 

“நீங்க வருவீங்கன்னு சொன்னீங்கள்ள, உங்களுக்காக தான் உட்கார்ந்திருக்கேன்

 

 

“அதுக்காக கிளாஸ் கட் அடிச்சியா

 

 

“கட் எல்லாம் அடிக்கலை, சொல்லிட்டு தான் வந்தேன்

 

 

“எல்லாமே ஒண்ணு தான். சரி விடு போகட்டும். நான் உங்க சேர்மனை பார்த்திட்டு கம்ப்யூட்டர் லேப் போயிட்டு வந்திடுறேன். நீ இங்கேயே உட்கார்ந்திரு, இல்லை கிளாஸ் போறதுன்னா போய்ட்டு வா.உன்னோட கிளாஸ் முடியறதுக்குள்ள நான் வந்திடுறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

 

 

‘இவருக்காக நான் கிளாஸ் கட் அடிச்சுட்டு வந்தா எனகென்னன்னு போறதை பாரு என்று மனதிற்குள் நொடித்துக் கொண்டு அவள் வகுப்பிற்கு சென்றாள்.

 

 

வகுப்பு முடிந்து வெளியே வந்து பார்க்க சுஜய்யோ இன்னும் வந்திருக்கவில்லை. அங்கிருந்த பெஞ்சில் அவன் வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

 

சுஜய், அவள் கல்லூரியின் சேர்மன் மற்றும் கம்ப்யூட்டர் லேபில் இருக்கும் இருவருடன் பேசிக் கொண்டே வெளியில் வந்தான். அப்போது கல்லூரி முடிந்து போகும் சில பெண்கள் அவனை பார்த்து கமெண்ட் அடிப்பது அவள் காதில் விழுந்து அவளை கொதித்தெழ செய்தது.

 

 

“ஹேய் அங்க பாருங்கடி நம்ம காலேஜ்க்கு ஒரு வடநாட்டுக்காரன் வந்திருக்கான். என்னா கலரு, என்னா கலரு

 

 

மற்றவளோ “ஹே ஆளு கூட ஹாண்ட்சம்மா தான் இருக்கார்டி, அவன் லிப்ஸ் பாரேன். இவன் கண்டிப்பா சிகரெட் குடிக்க மாட்டான். அதான் சிவப்பா இருக்கு

 

 

“தண்ணி கூட அடிக்க மாட்டான் போல கண்ணை பாரு வெளேர்ன்னு இருக்கு என்றாள் ஒருத்தி.

 

 

“ஆனா மண்டையில முடியை காணோமே, சொட்டை தலையனா இருக்கான்

 

 

“எப்படி இருந்தா என்னங்கடி இந்த லேடீஸ் காலேஜ்ல கண்ணுக்கு குளிர்ச்சியா எப்பவாச்சும் தான் பசங்க வர்றாங்க. சைட் அடிச்சுக்குவோமே

 

 

“இவனை போல ஒருத்தன் கல்யாணம் பண்ணிக்க கிடைப்பானா

 

 

“எங்கடி கிடைக்க போறான், நல்லா இருக்கறவனுங்களுக்கு சொத்தையா தான் ஒரு பொண்டாட்டி கிடைப்பா. ரதி மாதிரி பொண்ணுக்கு குடிக்காரன் தான் கிடைப்பான். இது தான் நம்மூரோட விதி

 

 

மற்றொருத்தியோ “ஏன்டி எதுக்கு யாரையோ கேட்டுகிட்டு இவன் ப்ரீயா இருந்தா இவனையே ரூட் போடுவோம்

 

 

மீனுவால் அதற்கு மேல் அங்கிருக்க முடியவில்லை, அவளுக்கு இருந்த ஆத்திரத்தில் கண்டிப்பாக யாரையாவது அடிக்க வேண்டும் என்றிருந்தது. கல்லூரியாய் போய்விட்டதால் அமைதி காத்தாள்.

 

 

‘இவளுங்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கணும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். சுஜய் அவர்களிடம் விடைபெற்று அவளருகில் வந்தான்.

 

 

“போகலாமா மீனு

 

 

“ஹ்ம்ம் என்று முறைத்துக் கொண்டே சொன்னவள் பார்வையில் பயங்கர கோபமிருந்தது ஆனால் அவள் செயலோ நேர்மாறாக இருந்தது. அவன் கைகளுக்குள் தன் கையை இணைத்துக் கொண்டு அவனுடன் உரசியவாறே நடந்தாள்.

 

 

மீனுவின் உடன் படிக்கும் தோழி ஒருத்தி அருகில் வர “ஹேய் அனு என்று அவளை அழைத்தாள்.

 

 

“என்ன மீனா நீ இன்னும் கிளம்பலையா, அப்போவே உன்னோட ஹஸ்பெண்ட் வர்றார்ன்னு சொன்னே

 

 

“ஹ்ம்ம் வந்திட்டார், அவர் வேலை இப்போ தான் முடிஞ்சுது. இதோ கிளம்பிட்டோம், இவர் தான் என்னோட ஹஸ்பெண்ட் என்றாள்.

 

 

பதிலுக்கு அவனை பார்த்து சிநேகமாக புன்னகைத்தவள் “சரி மீனு நீங்க கிளம்புங்க, நானும் ஹாஸ்டல் போகணும். போயிட்டு வர்றேன், போயிட்டு வரேன் அண்ணே என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் அவள் தோழி அனு.

 

 

மீனு அங்கு இவனை பற்றி கமெண்ட் அடித்தவர்களை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு அவனுடன் கிளம்பினாள்.

 

 

“இவ என்னடி இவனோட போறா, இவ நம்ம காலேஜ் பொண்ணு தானே. இவ் புருஷன்னு சொல்லிட்டு போறா என்று அவர்கள் பேசுவது அவள் காதில் விழுந்து தேய்ந்தது.

 

 

மீனா முகத்தை தூக்கியே வைத்திருந்தாள், வரும் வழியிலோ வீட்டிற்கு வந்து இறங்கும் போதோ கூட எதுவுமே பேசவேயில்லை. ‘என்னாச்சு இவளுக்கு எதுக்கு உம்ன்னு வர்றா

 

 

‘ஒரு வேளை கிளாஸ் கட் அடிக்கக்கூடாதுன்னு சொன்னதுக்கா இருக்குமோ என்று யோசித்தான். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை, அவளை வீட்டில் இறக்கிவிட்டு அவன் அப்படியே அலுவலகம் கிளம்பிச் சென்றுவிட்டான்.

 

 

மாலை வீட்டிற்கு வந்தவன் உடைமாற்றி விட்டு அவன் அறையில் அமர்ந்து மடிகணினியை வைத்துக் கொண்டு எதையோ செய்துக் கொண்டிருந்தான்.

 

வேலை முடிந்ததும் தான் அவனுக்கு மீனாவின் ஞாபகம் வந்தது. ‘என்ன இவ நான் வீட்டுக்கு வந்ததும் காபி கொடுப்பா, அது கூட கொடுக்கலை. வீட்டுக்கு வந்து வேலை பார்க்க கூடாதுன்னு சண்டை பிடிப்பா

 

 

‘அதையும் செய்யலை என்னை வந்து எட்டிக் கூட பார்க்கலையே என்று நினைத்தவன் ‘காலேஜ்ல எதுவும் பிரச்சனையா இருக்குமா என்று யோசித்தான்.

 

 

“மீனு… மீனு என்றவன் அழைக்க பதிலே இல்லை.

 

 

“மீனு… மீனு… என்ன பண்ணுற

 

 

அடுக்களையில் பாத்திரங்கள் உருளும் சத்தம் அதிகமாக கேட்டது.

 

 

எழுந்து சென்று அவன் பார்க்க அவள் பாத்திரத்தை சத்தம் வர கிழே வைத்தாள். சற்றே எரிச்சலானவன் “என்னாச்சு உனக்கு, எதுக்கு இப்படி பாத்திரத்தை போட்டு உருட்டிட்டு இருக்க

 

 

“ஒரு காபி கூட கொடுக்கலை ரொம்ப தலைவலிக்குது மீனு. ஒரு காபி தா

 

 

அவளோ பதிலேதும் பேசாமல் மீண்டும் உருட்ட ஆரம்பிக்க சுஜய்க்கு கோபம் வந்தது. “மீனு உனக்கு ஒரு தரம் சொன்னா புரியாதா, உனக்கு என்ன பிரச்சனைன்னு சொல்லு

 

 

“அதை விட்டு உன் கோபத்தை பாத்திரத்து மேல எல்லாம் காட்டாதே என்றான் சற்றே கோபமாக.

 

 

அவள் முகம் கூம்பிவிட அவளருகே சென்றவன் “என்ன மீனு என்னாச்சு என்கிட்ட சொல்லு

 

 

“நீங்க எதுக்கு எங்க காலேஜ்க்கு வந்தீங்க

 

 

“ஏன்னு உனக்கு தெரியாதா

 

 

“இனிமே வராதீங்க

 

 

“என்ன விளையாடுறியா. நான் ஆபீஸ் விஷயமா தான் வந்தேன்னு உன்கிட்ட சொன்னேன்ல. உங்க காலேஜ்ல இருக்கற சிஸ்டம்ஸ்க்கு சாப்ட்வேர் எங்களை போட்டு தரச்சொல்லி இருக்காங்க

 

 

“இதை தவிர்த்து அதோட மெயின்டனன்ஸ் பார்க்க சொல்லி இருக்காங்க. எல்லாம் பேசி முடிவாகிடுச்சு. நீ என்ன இப்படி பேசிட்டு இருக்க, நீ என்ன சொல்லணுமோ அதை நேரடியா சொல்லு

 

 

“அப்போ நீங்க வராதீங்க, வேற யாராச்சும் அனுப்பி விடுங்க

 

 

“மீனு என் பொறுமையை சோதிக்காதே, என்னன்னு சொல்லப் போறியா இல்லையா

 

 

“இன்னைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா என்றவள் அங்கு அவள் கேட்டது அனைத்தும் அவனிடம் கூறினாள்.

 

 

“எனக்கு எப்படி இருந்திருக்கும்ன்னு யோசிச்சு பாருங்க என்றவளின் கண்களில் லேசாக கண்ணீர் எட்டிப் பார்த்தது.

 

 

“இங்க வா என்று அவன் கை நீட்டியதும் வேகமாக சென்று அவனை அணைத்துக் கொண்டாள்.

 

 

இதுவே முதல் முறை அவளாக அவனிடம் வந்து ஒண்டுவது. “மீனு நீ அதை பார்த்திட்டு பேசாமலா வந்தே, உன்னால அப்படி இருக்க முடியாதே

 

 

“அது காலேஜா போய்டுச்சு அதான் பேசாம வந்தேன். இல்லைன்னா அவளுகளை ஒருவழியாக்கி இருப்பேன். படிக்க வந்தீங்களா இல்லை வேற எதுக்காச்சும் வந்தீங்களான்னு கேட்டு நல்லா நாலு அறை விட்டிருப்பேன்

 

 

“அதே தான் நானும் சொல்றேன், நீ காலேஜ்க்கு எதுக்கு போறே, படிக்க தானே. அப்போ இது போல பேச்சு எல்லாம் ஏன் காதுல வாங்கிக்கற

 

 

“ஒரு வேளை எனக்கு பதிலா வேற யாராச்சும் போயிருந்தா கூட அவங்க கண்டிப்பா எதுவும் சொல்லியிருப்பாங்க. இந்த வயசுல இதெல்லாம் ஒரு விளையாட்டு அவங்களுக்கு கொஞ்ச நாள் போனா இதெல்லாம் மறந்திருவாங்க

 

 

“நீ இதை பெரிய விஷயமா எடுத்திட்டு எதுக்கு கவலைப்படுற. நீ படிக்கிற வேலையை மட்டும் பாரு. அவங்க அது சொன்னாங்க இவங்க இது சொன்னாங்கன்னு உன்னையே நீ குழப்பிக்காதே சரியா

 

 

“நான் ஒண்ணும் சிட்டி பொண்ணு இல்லை, பேசாம போறதுக்கு. கிராமத்துல வளர்ந்தவ, அவளுங்க பேசினது என் புருஷனை பத்தி எனக்கு கோபம் வரக் கூடாதா. நீங்க என்னமோ புத்தர் மாதிரி இருக்க சொல்றீங்க

 

 

“அது மட்டுமா இப்படி நல்லா இருக்கற ஆளுக்கு பொண்டாட்டி நல்லாவே அமைய மாட்டான்னு வேற சொல்லுறாளுங்க

 

 

அவனுக்கு சிரிப்பாக வந்தது, அதை அடக்கிக் கொண்டு “உன்னோட கவலை என்ன அவங்க என்னை பத்தி சொன்னதா, இல்லை உன்னை பத்தியா

 

 

“ரெண்டும் தான், நான் என்ன அவ்வளவு மோசமாவா இருக்கேன். உங்களுக்கு நான் சரியான பொண்டாட்டியா இல்லையா

 

 

“இங்க வா என்று சொல்லி அவர்கள் அறைக்கு அழைத்து சென்றவன் அந்த ஆளுயர கண்ணாடியின் முன் நின்றான்.

 

 

“இப்போ பாரு, நான் தான் உனக்கு சரியாவே இல்லை. நீ நல்லா தானே இருக்கே. மண்டையில முடி இல்லாம நீ சொல்ற மாதிரி சொட்டை மண்டையன், ஏதோ நீ மனசு வைச்சு என்னை கல்யாணம் பண்ணிகிட்டே

 

 

“அதுவே எனக்கு பெரிய விஷயம் என்றான் சலித்துக் கொள்வது போல்.

 

 

“என்னை சமாதானப்படுத்த தானே இப்படி பேசுறீங்க. உங்களுக்கு என்ன குறைச்சல் நீங்க சூப்பரா இருக்கீங்க

 

 

“உன் காலேஜ் உள்ளவங்களுக்கு தெரிஞ்ச பிறகு தான் உனக்கு தெரியுது. இப்பாவாச்சும் நான் உன் கண்ணுக்கு தெரியறனே

 

 

“சரி என்ன முடிவு பண்ணியிருக்க

 

 

“எதை பத்தி மாமா கேட்குறீங்க

 

 

“நான் உன் காலேஜ்க்கு வரணுமா வேண்டாமா

“அது உங்க வேலைன்னு சொல்லிட்டீங்களே,நான் எப்படி தடுப்பேன்.

 

 

“மீனு நிஜமா இது நீ தானா, நான் சொன்னதும் கேட்டுட்டியே. ஆனா ஏதோ ஒண்ணு இடிக்குதே, அப்போ நீ போய் படிக்கிறது மட்டும் தானே பார்ப்பே

 

 

“உங்க வேலைல நான் தலையிடமாட்டேன். இது என் பிரச்சனை நான் பார்த்துக்கறேன். அந்த பொண்ணுங்களுக்கு ஒரு பாடம் கத்துக் கொடுக்காம இருக்க மாட்டேன்

 

 

“மீனு மறுபடி ஆரம்பிக்காதே, இதெல்லாம் நமக்கு வேணாம்

 

 

“என்னால முடியாது, அவங்க என் புருஷனை அப்படி பேசக் கூடாது அதுக்காச்சும் நான் அவங்ககிட்ட பேசுவேன்

 

 

“உனக்கு அவங்க என்னை பத்தி பேசுனது ரொம்ப பொறாமையா இருக்கா எனும் போதே அவன் நெஞ்சில் லேசாக சாரல் அடித்தது. ‘நம்மளை ரொம்ப நாள் எல்லாம் காக்க வைக்க மாட்டா என்று தோன்றியது.

 

 

“ஆமாம் அப்படி தான்னு வைச்சுக்கோங்க, என் புருஷனை என் கண்ணு முன்னாடியே என்னெல்லாம் பேசுறாங்க, எனக்கு பிடிக்கலை

 

 

“மீனு ப்ளீஸ் மீனு, சின்ன பொண்ணுங்க நீ போய் இந்த சின்ன பிரச்சனைக்கு எல்லாம் சண்டை போடாதே

 

 

“சரி சண்டை போடலை போதுமா, ஆனா நீங்க என் புருஷன்னு அவங்ககிட்ட கண்டிப்பா சொல்லுவேன்

 

 

“அதான் நீ அப்போவே சொல்லிட்டியே

 

 

“அது சரியா காதுல விழாம இருந்தா, எதுக்கும் இன்னொரு தரம் அவங்களை கூப்பிட்டு சொல்லிடுறேன். இனிமே யாரையும் இப்படி பேசி வைக்காதீங்கன்னும் சொல்றேன்

 

 

“என்னமோ பண்ணிக்கோ, எந்த பிரச்னையும் வராம இருந்தா சந்தோசம் தான்

 

 

“அதெல்லாம் வராது நான் பார்த்துக்கறேன்

 

 

“இன்னைக்கு கண்டிப்பா மழை தான் வரப்போகுது, நான் பேசுறதை நீ கொஞ்சம் கேட்குற மாதிரி இருக்கே என்றான் கிண்டலாக

 

 

“மழை வந்தா வரட்டும், நீங்க இப்போ கொஞ்சம் வாங்க

 

 

“எங்க மீனு

 

 

“நீங்க வாங்க சொல்றேன் என்றவள் அவனை அழைத்துக் கொண்டு கூடத்திற்கு சென்றாள். “இங்கேயே உட்காருங்க என்று விட்டு சமையலறைக்குள் சென்றாள்.

 

 

அவனுக்கு உப்பு, காய்ந்த மிளகாய் வைத்து சுற்றி போட்டுவிட்டு மீண்டும் உள்ளே சென்றவள் சில நிமிடம் கழித்து வெளியே வந்தாள்.

 

 

“இப்போ என்ன செஞ்சுட்டு போறே

 

 

“அதான் பார்த்தீங்கள்ள சுத்தி போட்டேன், எவ்வளவு கண் திருஷ்டி தெரியுமா உங்களுக்கு. மிளகா படபடன்னு வெடிச்சுது. ஊருக்கு போனதும் எங்கம்மாவை ஒரு தடவை சுத்தி போட சொல்றேன்

 

 

நாட்கள் மாதங்களாகி செல்ல அன்று மாலை சீக்கிரமே வீட்டிற்கு வந்த சுஜய் உடைமாற்றி விட்டு டிவியின் முன்பு அமர்ந்தான். ஒவ்வொரு சேனலாக மாற்றிக் கொண்டு வர ஒரு பாட்டு சேனலில் ஒரு பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது அவன் மனதை கவர்ந்தது.

 

 

காலையில்தினமும்கண்விழித்தால்
நான்கைதொழும்தேவதைஅம்மா
அன்பென்றாலேஅம்மாஎன்தாய்போல்ஆகிடுமா

 

இமைபோல்இரவும்பகலும்எனை
காத்தஅன்னையே
உனதுஅன்புபார்த்தபின்புஅதைவிட
வானம்பூமியாவும்சிறியது

—-

ஒரு பிள்ளை கருவில் கொண்டு
ஒரு பிள்ளை கையில் கொண்டு
உறவாடும் யோகம் ஒரு தாய்கின்று
மழலை போல் உந்தன் நெஞ்சம்
உறங்கட்டும் பாவம் கொஞ்சம்
தாய்க்கு பின் தாரம் நான் தான் அய்யா
தாலேலோ பாடுவேன் நீ தூங்கடா
தாயாக்கி வைத்ததே நீயடா நீ யடா

தலைவா நீ எந்தன் தலைசன் பிள்ளை
பாடுகிறேன் நான் தாலோ
கனிசே பூ விழி தாலோ
பொன்மனி தாலேலோ…

 

ஒலித்துக் கொண்டிருந்த அந்த பாடலை அப்படியே பதிவு செய்தான். அந்த பாடல் ஏனோ அவன் உயிர் வரை தீண்டியது. வேகமாக எழுந்தவன் சமையலறைக்குள் சென்றான்.

 

 

“மீனு இங்க கொஞ்சம் வாயேன்

 

 

“என்னங்க என்ன வேணும்

 

 

“கொஞ்சம் வா சொல்றேன்

 

 

“நான் வேலையா இருக்கேங்க என்னன்னு சொல்லுங்க

 

 

“சரி நீ வேலையை பாருஎன்றவனின் முகம் இறுகியிருக்க மீண்டும் கூடத்திற்கு வந்து சோபாவில் அமர்ந்தான்.

 

 

‘எதுக்கு கூப்பிட்டு இருப்பார் என்று எண்ணியவாறே மெதுவாக எட்டி பார்த்தாள். அவன் மீண்டும் பதிவு செய்த அந்த பாடலை ஒலிக்கவிட்டு கேட்டுக் கொண்டிருந்தான்.

 

 

‘இப்போ தானே இந்த பாட்டு ஓடிச்சு, மறுபடியும் போட்டு கேட்குறார். ஒரு வேளை குழந்தை ஆசை வந்திருக்குமோ என்று நினைக்க மனசாட்சியோ ‘மீனா உனக்கு இன்னுமா அவரை பிடிக்காம இருக்கு. அப்புறம் ஏன் இப்படி தாமதிக்கிற என்று கேள்வி கேட்டது.

 

 

அவளுக்கு என்ன தெரியும் அவனுக்கு வந்தது குழந்தை ஆசை இல்லை என்று. ‘சரி என்னன்னு தான் போய் கேட்போமே என்று நினைத்தவள் அடுப்பை அணைத்துவிட்டு அவனை நோக்கிச் சென்றாள்.

 

 

“என்ன மாமா எதுக்கு கூப்பிட்டீங்க

 

“ஒண்ணுமில்லைஎன்றவனின் முகம் இறுக்கமாயிருந்தது.

 

 

“அடுப்பில குழம்பு வைச்சிருந்தேன், அதான் நீங்க கூப்பிட்டதும் வரலை. என்னன்னு சொல்லுங்க

 

 

“ஒண்ணுமில்லை மீனு விடு என்றவன் மீண்டும் அந்த பாடலில் முழ்கினான்.

 

 

அவனருகில் சென்று அமர்ந்து அந்த பாடலை கேட்க அவனின் ஏக்கம் என்னவென்று அவளுக்கு புரிந்தது.

 

 

‘ச்சே அத்தையை ரொம்ப தேடுறார் போல, அதான் என்னை கூப்பிட்டு இருக்கார். நான் ஒருத்தி அவர் எதுக்கு கூப்பிடுறார்ன்னு புரியாம வரமுடியாதுன்னு சொல்லிட்டேன்

 

 

‘இப்போ என்ன செய்ய என்று யோசித்தவள் அவன் தலையை பிடித்து மேடி மேல் சாய்க்க முயலஅவனோ சிறுகுழந்தையாய் கோபித்துக் கொண்டு தலையை சிலுப்பிக் கொள்ள அவன் தலையை இறுக்கி பிடித்து மடி மேல் சாய்த்துக் கொண்டாள்.

 

 

அந்த கணம் அவனுக்கு பிடித்தது, நிம்மதியாக உணர்ந்தான். அந்த பாடலின் வரிகள் அவன் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது.

 

 

“என்னாச்சு மாமா, அத்தை ஞாபகம் வந்திடுச்சா

 

 

“ஹ்ம்ம்

 

 

“அத்தை எப்போ இறந்து போனாங்க, எப்படி இறந்து போனாங்க

 

 

“மாமா… மாமா… என்னாச்சு பேசாம இருக்கீங்க

 

 

“ஹ்ம்ம் ஒண்ணுமில்லை, மீனு. எங்கம்மா ரெண்டாவது குழந்தை வயித்துல இருக்கும் போது அவங்களுக்கு மஞ்சள் காமாலை வந்திடுச்சு. அதுல வயித்துல இருந்தா பாப்பாவும் இறந்திடுச்சு. அம்மாவும் இறந்திட்டாங்க

 

 

அதை சொல்லும் போதே அவன் குரல் தளர்ந்திருந்தது. அதை கேட்டவளுக்கும் அவன் வருத்தம் புரிந்தது.

 

சற்று நேரம் எதுவும் பேசாமல் மெளனமாக கழிந்தது. “மாமா அதை நினைச்சு இப்போவும் வருத்தமாயிருக்கா, கவலைப்படாதீங்க

 

 

“ஹ்ம்ம் இல்லை மீனு, அதான் இப்போ நீ இருக்கியே

 

 

“எப்பவும் நான் இருப்பேன் மாமா

 

 

“இது போதும் மீனு எனக்கு என்றான் நிறைவாக.

 

 

தீடிரென்று  நினைவு வந்தவனாக “மீனு நாளைக்கு பரீட்சைக்கு படிச்சிட்டியா

 

 

“ஹ்ம்ம் படிச்சுட்டேன்

 

 

“பொய் சொல்லாதே, உன்னை யாராச்சும் இப்போ சமைக்க சொன்னாங்களா. உனக்கு எக்ஸாம் முடியற வரை நீ எதுவும் செய்ய வேண்டாம். நான் லட்சுமி அக்காகிட்ட சொல்லிடுறேன்

 

 

“என்ன மாமா நீங்க வேற சமைக்கறது ஒரு வேலையா, அதெல்லாம் நான் படிச்சுக்குவேன்

 

 

“நீ சொன்னா கேட்க மாட்டே, லட்சுமி அக்கா என்றழைத்தவாறே எழுந்து அமர்ந்தான்.

 

 

“சொல்லுங்க தம்பி என்று பின்கட்டில் இருந்து வந்தார் அவர்.

 

 

“அக்கா இவளுக்கு எக்ஸாம் இருக்கு, இவளை எந்த வேலையும் செய்யவிடாதீங்கக்கா. இவ படிப்பு முடியறவரைக்கும் இவளை எந்த வேலையும் பார்க்க விடாதீங்கக்கா

 

 

“நான் சொன்னா என்கிட்ட பதிலுக்கு பதில் பேசிட்டு இருக்கா, நீங்க தான் இவளுக்கு சரி. நீங்க சொன்னா கேட்பா என்றான்.

 

 

“சரிப்பா நான் பார்த்துக்கறேன் என்றுவிட்டு அவர் உள்ளே சென்றுவிட்டார்.

 

 

மீனு அவள்பரீட்ச்சையை நல்லபடியாக எழுதியிருந்தாள். அன்று வீட்டில் அமர்ந்திருக்க அவள் அன்னையிடம் இருந்து போன் வந்தது.

 

“ஹலோ சொல்லும்மா, எப்படியிருக்க

 

 

“நான் நல்லாயிருக்கேன். நீ எப்படி இருக்க, மருமகன் எப்படியிருக்காங்க

 

 

“ஹ்ம்ம் நல்லாயிருக்காங்க, அப்பா என்ன செய்யார் என்று ஆரம்பித்து அவள் வீட்டு கோழி குஞ்சு வரை அனைத்தும் விசாரித்து முடித்தாள்.

 

 

“மீனு எதுவும் விஷேசமா

 

 

“இன்னைக்கு ஒண்ணும் விஷேசமில்லைம்மா

 

 

“அதில்லைடி குளிச்சியா என்றார் விடாமல்.

 

 

“அம்மா தினமும் குளிச்சுட்டு தான்ம்மா இருக்கேன்

 

 

“என்னடி நான் என்ன கேட்டுட்டு இருக்கேன். நீ என்ன பதில் சொல்லிட்டு இருக்க, நீ எப்போ மாசமாக போறே என்றார் நேரடியாகவே.

 

 

“நீ என்ன கேட்க வந்தேன்னு எனக்கும் புரிஞ்சுது. இப்போ அதுக்கென்ன அவசரம், எதுக்கு நீ இப்போ அதை கேட்குற

 

 

“ஊர்ல எல்லாரும் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க மீனா. உனக்கு அப்புறம் கல்யாணம் ஆனவ எல்லாம் இப்போ ஆறு மாசம், ஏழு மாசம்ன்னு இருக்காளுங்க. உன்னை கேட்டா இப்போ அதுக்கு என்ன அவசரம்ன்னு கேட்குற

 

 

“அம்மா அதுக்கெல்லாம் கால நேரம் கூடி வரணும்மா. நினைச்சவுடனே பெத்துக்க முடியுமா. ஊர்க்காரங்க ஆயிரம் பேசுவாங்க அதுக்கெல்லாம் காது கொடுத்திட்டு இருந்தா வேலைக்கு ஆகாதும்மா

 

 

“என்னடி நினைச்சுட்டு இருக்க. உனக்கென்ன நீ வேணா காது கொடுக்காம இருக்கலாம். ஆனா இங்க கிராமத்துல எல்லாரும் எப்படி பேசுவாங்கன்னு உனக்கு தெரியாது

 

 

“அம்மா என்ன அந்த மூக்காத்தா கிழவி எதுவும் பேசிச்சா, இல்லை அந்த அரைகிறுக்கன் அய்யாசாமியும் அவன் அம்மாவும் எதுவும் பேசினாங்களா. இப்போ எதுக்கும்மா இப்படி வந்து குதிகுதின்னு நீ குதிக்கிற

“யார் என்ன சொன்னா என்ன. கல்யாணம் ஆகி பத்து மாசம் ஆகுது. நீங்க ஒரு நல்ல டாக்டர் போய் பாருங்க. இல்லை உடனே ஊருக்கு வாங்க, நம்ம வேலப்பர் கோவிலுக்கு ஒரு முறை போயிட்டு வருவோம்

 

 

“அடுத்த வருஷம் வீரபாண்டி திருவிழாக்குள்ள உனக்கு குழந்தை பிறந்திட்டா நான் அக்கினிசட்டி எடுக்கறேன்னு வேண்டி இருக்கேன் என்றவர் அழ ஆரம்பித்தார்.

 

 

“அம்மா… அம்மா… என்று மறுமுனையில் மீனு கத்தினாள்.

 

 

மாலதியிடம் இருந்து போனை பிடுங்கி மீனாட்சி பேசினார். “மீனாட்சி எதுக்கு எம்பொண்ணை அழ வைக்கிறே

 

 

“கிழவி நீ எப்போ வந்தே, உம்பொண்ணை அழ வேணாம்ன்னு சொல்லு. எப்போ பார்த்தாலும் அழுதே என்னை சாகடிக்குது

 

 

“அவ கேட்டதுல என்ன தப்பு, இது எல்லா அம்மாவும் எதிர் பார்க்கறது தானே

 

 

“அதெல்லாம் சீக்கிரமா நடக்கும், சும்மா போன் பண்ணி டாக்டர்கிட்ட போ. கோவிலுக்கு போன்னு என்னை தொல்லை பண்ண வேணாம்ன்னு உன் பொண்ணுகிட்ட சொல்லு கிழவி

 

 

“சீக்கிரமா உன்கிட்ட இருந்து நல்ல சேதி வரணும். என்னை கொள்ளுபாட்டி ஆக்கற வழியை பாரு. இனிமே என் பொண்ணை அழவைக்காதே

 

 

“நானா அழவைக்கிறேன் உன் பொண்ணு தான் என்னை அழவைக்குது

 

 

“சரி நீ எப்போ ஊருக்கு வர்றே

 

 

“வரேன்… வரேன்… என்று சலிப்பாக சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

 

 

அவள் அன்னை பேசியதில் அவளுக்கு தலையை வலிப்பது போல் இருந்தது. சுஜய்அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்தான்.

 

 

 

  • காற்று வீசும்

Advertisement