Advertisement

அத்தியாயம் –15

 

 

மீனாவை அழைத்துக் கொண்டு கடற்கரைக்கு சென்றான் அவன். கடற்கரையை பார்த்ததும் மீனாவுக்கு உற்சாகம் வந்துவிட அலைகளில் கால் நனைத்து விளையாடினாள்.

 

 

சுஜய்யை வேறு உள்ளே இழுத்துவிட்டு அவனையும் நனைத்தாள். சற்று நேரம் அங்கு அமர்ந்து பேசிக் கொண்டிருந்துவிட்டு அவளை அழைத்துக் கொண்டு துணிக்கடைக்கு சென்றான்.

 

 

கல்லூரிக்கு செல்லவென அவளுக்கு சுடிதார் செட்கள் எடுத்துக் கொடுக்க “அய்யோ மாமா இது யாருக்கு என்றாள்.

 

 

“என்ன மீனு விளையாடுறியா, உனக்கு தான் எடுக்கறேன். காலேஜ்க்கு என்ன போட்டுட்டு போவே

 

 

“சேலை தான் கட்டிட்டு போவேன்

“சுடிதார் போட்டுக்கோ மீனு உனக்கு வசதியா இருக்கும்

 

 

“கிழவியும், எங்கம்மாவும் பார்த்தாங்க என்னை கொன்னே போடுவாங்க. என்னால முடியாது சாமி

 

 

“இங்க பாரு அவங்க ஊர்ல இருக்காங்க, அவங்க இங்க வரும் போது வேணா நீ புடவை கட்டிட்டு போ. உன்னை யாரும் எதுவும் சொல்லமாட்டாங்க என்றவன் அதற்கு மேல் அவளை எதுவும் கேட்கவில்லை.

 

 

அவளுக்கு தேவையான அனைத்தும் எடுத்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பினான். “சொன்னா கேட்குறீங்களா. நான் இதெல்லாம் போட்டா நல்லாவா இருக்கும்

 

 

“நீ இதுவரைக்கும் இதெல்லாம் போட்டதே இல்லையா

 

 

“இல்லை, தாவணி கட்டுவேன். சின்ன வயசுல பாவாடை சட்டை தான். கல்யாணத்துக்கு முன்னுக்க தான் சேலை கட்ட ஆரம்பிச்சேன்

 

 

“நீ போடு மீனு, உனக்கு நல்லா இருக்கும். வீட்டுக்கு போனதும் எனக்கு போட்டு காட்டு சரியா

 

 

“அதெல்லாம் இருக்கட்டும். எனக்கு ரொம்ப பசிக்குது சாப்பிட எதாச்சும் வாங்கி கொடுங்க

 

 

வழியில் வந்த ஒரு ஓட்டலில் வண்டியை நிறுத்தினான், அங்கேயே சாப்பிட்டுவிட்டு ராமுவிற்கும், லட்சுமிக்கு வாங்கிக் கொண்டு புறப்பட்டனர்.

 

 

மீனு கல்லூரி செல்லும் நாளும் வந்தது, காலையில் இருந்தே அவளுக்கு பதட்டமாகவே இருந்தது. பள்ளிக்கு செல்லும் போது கூட அவள் இவ்வளவு பதட்டப்பட்டிருக்கவில்லை.

 

 

“என்னாச்சு மீனு, உனக்கு எதுக்கு இப்படி வேர்க்குது

 

 

“ஒண்ணுமில்லை, காலேஜ்க்கு எப்படி போகப் போறேன்னு தெரியலை. அதான் ஒரு சின்ன பதட்டம்

 

 

“எதுக்கு அதெல்லாம், நீ படிக்க போறே. அதுக்கு எதுக்கு உனக்கு டென்ஷன், ரிலாக்ஸா போய் படிச்சுட்டு வா. நல்ல நண்பர்களை தேர்ந்து எடுத்து அவங்களோட பழகு

 

 

“சரி நீ சாப்பிட்டாச்சா, நாம கிளம்புவோமா

 

 

இம்மென்று தலையசைத்தாள். அவளை அழைத்துக் கொண்டு கல்லூரியில் சென்று விட்டு வந்தான். கல்லூரி முடியும் தருவாய் அவனே வந்து அழைத்து செல்வதாக கூறிவிட்டு அலுவலகம் கிளம்பிச் சென்றான்.

 

 

அலுவலகம் சென்று விட்டானே தவிர மீனுவை பற்றியே அவன் எண்ணம் சுழன்று கொண்டிருந்தது. ‘என்ன செய்யப் போறாளோ என்னவோ என்று இப்போது பதட்டம் அவனை சூழ்ந்து கொண்டது.

 

 

‘இவள் இங்கிலீஷ்ல வேற கொஞ்சம் வீக்காச்சே, அதை மறந்திட்டோமே. சீக்கிரமே அதுக்கு ஒரு ஏற்பாடு பண்ணனும் என்று எண்ணிக் கொண்டு வேலையில் கவனம் செலுத்த முயன்றான்.

 

 

அவள் கல்லூரி விடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பே அங்கு சென்று விட்டவன் அவள் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தான். கல்லூரி விட்டு சிரித்துக் கொண்டே வந்தாள்.

 

 

“என்ன மீனு ரொம்ப குஷியா இருக்கே

 

 

“ஹ்ம்ம் ஆமாம் மாமா, புதுசா இருக்கு. நான் நினைச்சே பார்க்கலை காலேஜ் எல்லாம் போவேன்னு, நல்லாயிருக்கு. புதுசா ஒரு பொண்ணு எனக்கு பிரின்ட் ஆகி இருக்கா. அவளும் என்னை மாதிரியே ஊர்ல இருந்து வந்திருக்கா, அவளுக்கு திருநெல்வேலியாம்

 

 

“காலேஜ் கிளாஸ் எல்லாம் எப்படி போச்சு

 

 

“எல்லாரும் இங்கிலீஷ்லயே பேசறாங்க அதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. கொஞ்சம் கொஞ்சம் தான் புரியுது

 

 

“உண்மையாவே புரிஞ்சுதா

 

 

“சரி வா, வண்டியில ஏறு என்றவன் அவளை ஹோட்டலுக்கு அழைத்து சென்று உணவருந்த செய்தான். ஒரு ஆங்கில வகுப்பு எடுக்கும் இடத்திற்கு அழைத்து சென்று அவளை அங்கு சேர்த்து விட்டான்.

 

 

“இதெல்லாம் தேவையா, இப்படி எல்லாம் எதுக்கு கஷ்டப்படுத்திக்கறீங்க

 

 

“படிக்கிற உனக்கு கஷ்டமாயில்லையே

 

 

“இல்லை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

 

 

“உனக்கு செய்யறது எனக்கும் பிடிச்சிருக்கு என்றுவிட்டான் அவன்.

 

 

இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது. ஊரில் ராஜேந்திரன் போன் செய்திருந்தார், இன்னும் இரண்டு மாதத்தில் கதிருக்கும் தேனுவுக்கும் திருமணம் செய்து விடலாமென பேசி வைத்திருப்பதாக சொன்னார்.

 

 

விரைவில் நேரில் வந்து அழைக்க வருவதாக கூறி வைத்தார். முருகேசனும் திலகவதியும் கூட போன் செய்து பேசினர்.

 

 

மீனுவுக்கு அவ்வப்போது ஏதோ ஒரு வெறுமை சூழ்ந்திருப்பதாக தோன்றிக் கொண்டிருந்தது. சுஜய் சில நாட்களாக கல்லூரிக்கு அவளை கூட்டிச் செல்லவும் இல்லை, கூட்டி வரவுமில்லை.

 

 

வேலை இருப்பதாக சொல்லிவிட்டவன் அவளே தனியாக சென்று வர ஏற்பாடு செய்தான். அது வேறு அவளுக்கு கவலையாக இருந்தது.

 

 

அன்று இரவு வெகு தாமதமாக வீட்டுக்கு வந்தான். “மீனு பயங்கர பசி சாப்பாடு போடேன்

 

 

“போட முடியாது, நீங்களே போட்டு சாப்பிடுங்க என்று முறுக்கிக் கொண்டாள்.

 

 

“என்னாச்சு உனக்கு எதுக்கு இப்படி செய்யற

 

 

“உங்ககிட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேன், எப்பவும் லேட்டா வீட்டுக்கு வராதீங்கன்னு. இன்னைக்கு ஏன் லேட்

 

 

“அதுக்கெல்லாம் உன்கிட்ட என்னால விளக்கம் சொல்லிட்டு இருக்க முடியாது. வந்து சாப்பாடு போடு. சாப்பிட்டு தூங்கணும், நாளைக்கு நெறைய வேலையிருக்கு

 

 

“எப்போ தான் உங்களுக்கு வேலையில்லாம இருந்திருக்கு, புதுசா சொல்றீங்க

 

 

“இப்போ உன்னால சாப்பாடு போட முடியுமா முடியாதா

 

 

“நான் பாட்டுக்கு லூசு மாதிரி கேட்டுட்டே இருக்கேன், உங்களுக்கு சாப்பாடு போடலைன்னு அதையே கேட்டுட்டு இருக்கீங்க, என்னால போட முடியாது என்று கோபத்தில் வார்த்தையை விட்டாள்.

 

 

“ரொம்ப சந்தோசம் என்றுவிட்டு அவன் சாப்பிடாமலே சென்று கட்டிலில் விழுந்தான்.

 

 

சிறிது நேரம் அவளும் ‘போகட்டுமே என்பது இருந்தாள். ஆனால் மனது கேட்கவில்லை, அவளுக்கு என்னவோ போல் ஆகிவிட அவனருகே சென்றாள். அவள் பேசியது அதிகப்படி என்று அவளுக்கே தோன்ற ஆரம்பித்தது.

 

 

“மாமா நான் பேசினது தப்பு தான், ப்ளீஸ் சாப்பிட வாங்க

 

 

அவனோ எதுவுமே பேசவேயில்லை, அவளை நோக்கி ஒரு பார்வை கூட செலுத்தவில்லை. சிறிது நேரம் கெஞ்சி பார்த்தவள் அவன் கோபம் ஆறட்டும் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று அவளுமே சாப்பிடாமலே விளக்கை அணைத்துவிட்டு படுத்தாள்.

 

 

சிறிது நேரம் உறக்கமின்றி தவித்தவள் அவனை பார்த்தவாறே திரும்பி படுத்தாள். “பாரு எப்படி தூங்குறார்ன்னு படுத்ததும் எப்படி தான் தூக்கம் வருதோ சொட்டைமண்டை என்று வாய்விட்டே முணுமுணுத்தாள்.

 

 

 

“நல்லா தானே இருந்தார் திடிர்னு என்னவாம், மூஞ்சியை உர்ருன்னு தூக்கி வைச்சுக்கிட்டு சண்டை பிடிக்க வர்ற மாதிரியே பேசுறார்

 

 

பின் உறக்கம் அவளை தழுவ கண்ணயர்ந்தாள். நேரம் நடுநிசி நெருங்கியிருக்க யாரோ அவளை எழுப்புவது போல் இருந்தது. அவள் தூக்கம் கலைய ஆரம்பிக்க கண்ணை திறக்காமலே யோசித்தாள்.

 

யார் இந்த நேரத்துல எழுப்புறாங்க, கனவா இல்லை பேயா இருக்குமா என்று நினைத்தவுடன் அவளுக்கு குளிர் பிறந்தது. ஆத்தா கௌமாரியம்மா என்னை காப்பாத்துமா என்று மனதிற்குள் வேண்டுதல் வைத்துக் கொண்டே அரைக்கண் திறந்து பார்த்தாள்.

 

 

அங்கு சுஜய் நின்றிருக்க “என்ன எதுக்கு என்னை எழுப்பறீங்க என்றாள்.

 

 

“எழுந்து வா சொல்றேன் என்று அவளை எழுப்பி விளக்கை போட்டான். அங்கு ஒரு மேசை மேல் கேக் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டிருந்தது.

 

 

“உங்களுக்கு பிறந்த நாளா? என்றாள் மீனு.

 

 

“ஹ்ம்ம் எனக்கா பிறந்தநாள்… உனக்கு தானே இன்னைக்கு பிறந்தநாள். நீ சொல்லலைன்னா எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா

 

 

“உங்களுக்கு எப்படி தெரியும், எனக்கே என்னோட பிறந்தநாள் ஞாபகம் இல்லையே

 

 

“உன்னோட மார்க் ஷீட்ல போட்டிருந்தது, அதான் உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைச்சேன்

 

 

அந்நேரம் அவளுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. கேக்கை வெட்டியவள் அதை அவனுக்கு ஊட்டிவிட்டாள். இப்போதெல்லாம் சுஜய் அவளிடம் தள்ளியே இருந்தான்.

 

 

அவள் மனதை அறிந்த பின் வந்திருந்த மாற்றம் அது. மீனாவுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. ‘ஒரு முத்தம் கொடுத்து என்னை வாழ்த்தினா என்னவாம், வெறும் கேக் மட்டும் தானா என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

 

 

“மாமா எனக்கு ரொம்ப பசிக்குது சாப்பிடலாமா, உங்களுக்கு இப்போ என் மேல கோபமில்லையே என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.

 

 

“கோவம் எல்லாம் இல்லை, அது நீ என்னை திட்டினப்பவே போச்சு

 

 

“என்னது நான் உங்களை திட்டினேனா

 

“அதான் எப்பவும் வழக்கமா ஒண்ணு சொல்லிவியே அதை சொல்லி நீ திட்டலை என்னை

 

 

“ஹி… ஹி…ஹி.. என்று சிரித்தாள்.

 

 

“சிரிக்காதே வந்து சாப்பாடு போடு

 

 

“நிஜமாவே கோபமில்லையே

 

 

“கோபம் வந்திச்சு, ஆனா நீ என் மேல உரிமையா கோபப்பட்டது பிடிச்சுது. அதை விட பிடிச்சது நீ என்னை திட்டினது. போதுமா

 

 

“இப்போ சரி என்றவள் சாப்பாடு எடுத்து வைக்க சென்றாள்.

 

 

“மீனு ஒரு நிமிஷம்

 

 

“என்ன மாமா

 

 

அவளருகே வந்தவன் அவளை இறுக அணைத்து நெற்றில் முத்தமிட்டவன் அவள் இதழ் சிறையை அவனின் இதழ் கொண்டு விலங்கிட்டான். சில நிமிடங்களில் விடுவித்தவன் “இப்போ சந்தோசமா மீனு என்றான்.

 

 

“ஹ்ம்ம் என்ன சொன்னீங்க

 

 

“நீ கேட்டதை நீ கேட்காமலே கொடுத்திட்டேன் போதுமா

 

 

“என்ன சொல்றீங்க எனக்கு புரியலை

 

 

“நீ வாய்விட்டு கேட்காததை உன் பார்வை சொல்லிருச்சு, அதான் சொன்னேன். மீனுவுக்கு அவன் கண்டு கொண்டதில் வெட்கம் வந்துவிட அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

 

 

கதிர் – தேனு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்க இருவீட்டினரும் சகல மரியாதையுடன் அவர்களை அழைக்க வந்திருந்தனர். திருமணநாள் நெருங்க சுஜய்யும் மீனுவும் ஊருக்கு கிளம்பிச் சென்றனர்.

 

 

கதிரும் டெல்லியில் இருந்து வந்துவிட்டிருந்தான், திருமணத்திற்கு பின் அவன் சென்னை வந்துவிடுவதாக முடிவெடுத்திருக்க சுஜய் அவர்களுக்காக தங்குமிடம் பார்த்து எல்லாம் ஏற்பாடு செய்து வைத்திருந்தான்.

 

 

திருமணநாளும் விடிந்தது, மீனு பட்டுப்புடவை சரசரக்க அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்தாள். அவள் அங்குமிங்கும் நகருகையில் அவள் தலையில் நெருக்கமாய் சூடியிருந்த மல்லிகையின் வாசம் அவனை ஏதோ செய்வதாய் இருந்தது.

 

 

திடுதிப்பென்று அவனருகில் வந்தவள் “என்ன மாமா இங்க நின்னுட்டு ஆன்னு வாயை பார்த்திட்டு இருக்கீங்க. வாங்க போய் வாசல்ல நிப்போம். வர்றவங்களை வரவேற்க வேணாமா என்று சொல்லி கையை பற்றி இழுத்துச் சென்றாள் அவனை.

 

 

வரவேற்ப்பில் நின்றவன் பேசாமல் நின்று கொண்டிருக்க அவனை மீனு இடித்தாள். “என்ன மீனு எதுக்கு இடிக்கிற

 

 

“உங்களை இங்க எதுக்கு கூட்டிட்டு வந்தேன், வந்தவங்களை வாங்கன்னு சொல்லாம வேடிக்கை பார்த்திட்டு இருக்கீங்க என்று மெதுவாக சொன்னாள்.

 

 

அதற்குள் விருந்தினர் ஒருவர் வர “வாங்க மாமா எப்படியிருக்கீங்க, அத்தைய கூட்டிவரக் காணோம். இப்படி தான் நீங்க மட்டும் தனியா வர்றதா என்றாள்

 

 

அவரோ பதிலுக்கு “இல்லைம்மா மீனா இன்னைக்கு நெறைய முகூர்த்தம், அதான் உங்க அத்தை வேற கல்யாணத்துக்கு அனுப்பிட்டு நாங்க இங்க வந்திருக்கேன் என்றவர் உள்ளே சென்று விட்டார்.

 

 

“என்னை என்ன பண்ணச் சொல்ற மீனு. எனக்கு இதெல்லாம் பழக்கமில்லை

 

 

“இதெல்லாம் பழகிக்கோங்க, வர்றவங்களை வாங்கன்னு சொல்லுங்க அது போதும்

 

 

“கொஞ்சம் சிரிச்ச மாதிரி சொல்லுங்க என்றாள்.

 

 

முகூர்த்த வேளை நெருங்க இருவரும் மணமேடைக்கு சென்றனர். கதிரும் தேனுவும் அமர்ந்திருக்க தாலி எடுத்து கொடுக்கப்பட்டதும் கதிர் தேனுவின் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தான்.

 

பசும்பொன் நாத்தனார் முடிச்சை போட திருமணம் இனிதே நடந்து முடிந்தது. மணமேடையில் அமர்ந்திருந்த தேனு கதிரை இடித்தாள். “என்ன தேன்மிட்டாய் என்று அவளை திரும்பி பார்த்தான்.

 

 

“மிட்டாய், கொட்டாய்ன்னு சொன்னீங்க அவ்வளோ தான் என்று முறைத்தாள்.

 

 

“சரிம்மா சொல்லலை, எதுக்கு கூப்பிட்ட தேனு

 

 

“நான் எதுக்கு கூப்பிட்டேன்னு மறந்தே போயிட்டேன் போங்க

 

 

சுஜய் அங்கு போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்துக் கொண்டு மீனுவை கண்களுக்குள் விழுங்கிக் கொண்டிருந்தான். மீனுவோ அதை எடுத்து வைப்பதும் இதை எடுத்து வைப்பதும் என்று வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

 

வெகு நேரமாக கணவனை காணாதவள் கண்கள் அவனை தேட கிழே அமர்ந்திருந்தவன் கண்ணில் பட்டதும் நிம்மதியடைந்தாள். சுஜய்யின் கண்கள் அவளையே நோக்கிக் கொண்டிருப்பதை அப்போது தான் கவனித்தாள்.

 

 

அவன் கண்களில் எப்போதும் தெரியும் சுவாரசியம் தாண்டி வேறோ ஏதோ தெரிந்தது. ‘என்னாச்சு இந்த சொட்டைமண்டையன் இப்படி பார்க்குறான் என்று யோசித்துக் கொண்டே மற்ற வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தாள்.

 

 

மாப்பிள்ளை வீட்டிற்கு பெண்ணை அழைத்துக் கொண்டு மண்டபத்தில் இருந்து கிளம்பினர். சுஜய் காரை ஓட்டிச் செல்ல அவனருகில் மீனு அமர்ந்து கொண்டாள். மற்றவர்கள் அடுத்தடுத்த வண்டிகளில் வந்தனர்.

 

 

பின்னிருக்கையில் கதிரும் தேனுவும் அமர்ந்திருந்தனர். “கதிர் நீங்க எப்போ சென்னைக்கு வர்றீங்க என்றான் சுஜய்.

 

 

“இன்னும் ரெண்டு நாள்ல கொடைக்கானல் போறோம் அப்புறம் தான் சென்னைக்கு வருவோம்ண்ணே. எப்படியும் நாங்க அங்க வர்றதுக்கு ஒரு பத்து பதினைஞ்சு நாள் ஆகிடும்

 

 

“ஹ்ம்ம் அப்போ சரி, என்ன தேனு ரொம்ப அமைதியா இருக்க மாதிரி தெரியுது

 

 

“என்ன மாமா என்னை கலாட்டா பண்ணுறீங்களா, அக்காகிட்ட சொல்லி கொடுக்கவா

 

 

“நீ சொல்லலைன்னாலும் அவ என்னை கேள்வி கேட்க ஆரம்பிச்சுடுவா. நீ சொல்லி வேற கொடுக்கணுமா, தேனு ரொம்ப அமைதியா மணமேடையில இருந்ததை பார்த்தேன். அதான் கேட்டேன், என்ன கதிர் தேனு ரொம்ப அமைதி தானே என்று சிரித்தான்.

 

 

“அய்யோ ஆமாண்ணே இவ ரொம்ப ரொம்ப அமைதி, இவளுக்கு அமைதிக்கான நோபல் பரிசே கொடுக்கலாம் அந்தளவுக்கு அமைதியின் சிகரம் என்றான் கதிரும்.

 

 

“என்ன கதிர் மாமா என்னை வைச்சு ரெண்டு பேரும் காமெடி பண்ணுறீங்களா. மீனாக்கா நீ இதெல்லாம் கேட்க மாட்டியா, நான் சின்ன வயசுல இருந்து உன்னோடவே தானே வளர்ந்தேன்

 

 

“நாம பேசுறதை பார்த்து இவங்க ரெண்டு பேரும் எப்படி கிண்டல் பண்ணுறாங்கன்னு பாரு என்று புகார் கொடுத்தாள் தேனு.

 

 

“என்ன மாமா எதுக்கு என் தங்கச்சிய ஓட்டுறீங்க. பேசினா தப்பா, பேசுறது கூட குத்தமா. ஏன் கதிரேசா உனக்கு இப்போ தான் கல்யாணமாகியிருக்கு, உன் பொண்டாட்டியை எதுக்கு பகைச்சுக்கற என்றாள்.

 

 

கதிரேசன் இதை கேட்டதும் தேனுவிடம் அவசரமாக பணிந்தான். “தேன் மிட்டாய் இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு நீ கோவிக்குற. இந்த மாமன் உன்னை எதுவும் சொல்லக் கூடாதா. நான் எதுவும் தப்பா பேசியிருந்தா மன்னிச்சுடுடி

 

 

“இதென்ன மாமா புதுசா டி போட்டு பேசுற பழக்கம்– தேனு

 

 

“மாமன் ஆசையா கூப்பிட்டாலும் உனக்கு பிடிக்கலையா இனி கூப்பிடவே இல்லை தாயே– கதிர்.

 

 

“கதிர் இருந்தாலும் நீ இப்படி பொசுக்குனு கால்ல விழுவேன்னு நான் எதிர்பார்க்கவேயில்லை சுஜய்

 

 

“அண்ணே எனக்கு இப்போ தான் புதுசா கல்யாணமாகியிருக்கு. இப்போ போய் பொண்டாட்டியை பகைச்சுக்க முடியுமா. நாம சரண்டர் ஆகி தான் ஆகணும் என்றான் கதிர்.

 

 

சுஜய்யின் பார்வை தன்னையுமறியாமல் மீனுவின் மேல் ஒரு பெருமூச்சுடன் படிந்தது. அதற்கு மேல் அவன் எதுவும் பேசவில்லை.

 

 

வீடு வந்திருக்க மற்ற சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் நடந்தது. மீனு ஏனோ அன்று அவனுக்கு புதிதாக தெரிந்தாள், அவன் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள சிரமப்பட்டுக் கொண்டிருந்தான்.

 

 

நேரம் இரவை நெருங்கிய வேளையில் மீனுவை தனியே அழைத்தான் “என்ன மாமா என்று வந்தாள் அவள்.

 

 

“எனக்கு தேனில ஒரு வேலை இருக்கு மீனு. நான் அதை முடிச்சுட்டு வர்றதுக்கு நேரமாகிடும். நான் அங்கேயே தங்கிட்டு நாளைக்கு வந்திடுறேன்

 

 

“என்ன விளையாடுறீங்களா, இங்க அவங்களுக்கு எல்லாம் ஏற்பாடு பண்ண வேண்டாமா. நீங்க எங்கயும் போக வேண்டாம் எல்லாம் நாளைக்கு பார்த்துக்கலாம்

 

“மீனு சொன்னா புரிஞ்சுக்கோ நான் வேலையை முடிச்சுட்டு நாளைக்கு வர்றேன் என்றவன் மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப அவர்களும் முதலில் அவன் செல்ல வேண்டாம் என்று கூற முக்கிய வேலை என்று அவன் சொன்னதால் மனமில்லாமல் ஒத்துக் கொண்டனர்.

 

 

அவன் வெளியே கிளம்ப “ஒரு நிமிஷம் என்று அருகில் வந்தாள்

 

 

“என்ன மீனு

 

 

“உண்மையை சொல்லுங்க உங்களுக்கு அங்க எதுவும் வேலையிருக்கா

 

 

“இல்லை என்றான் ஒற்றை சொல்லாக.

 

 

“அப்புறம் ஏன் போகணும்

 

 

“புரியாம தான் கேட்குறியா, இல்லை நானே சொல்லணும்ன்னு நினைக்கிறியா

 

 

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க

 

 

“என்ன சொல்லணும்

 

 

“இப்போ நீங்க எதுல இருந்து தப்பிச்சு ஒட பார்க்குறீங்க

 

 

“உன்கிட்ட இருந்து தான் தப்பிச்சு ஒட பார்க்குறேன். இங்க இருந்தா என்னையறியாம உனக்கு எதுவும் கஷ்டம் கொடுத்திருவேனோன்னு தோணுது. இது தான் உண்மை காரணம், போதுமா

 

 

“நான் போயிட்டு நாளைக்கு காலைல வர்றேன், நீ எதையும் போட்டு மனசை குழப்பிக்காதே. நாளைக்கு கோவிலுக்கு போகணும்ல சீக்கிரமே வந்திடுவேன் என்று சொல்லிவிட்டு அவளுக்கு கையசைத்து கிளம்பினான்.

 

 

அக்கணம் ஏனோ பெருத்த ஏமாற்றமாக இருந்தது அவளுக்கு. ‘நீ அவரை ரொம்ப கஷ்டப்படுத்தறே மீனா என்று அவள் மனம் அவளை குற்றம் சாட்டியது.

 

 

மறுகணமே ‘நானா போக சொன்னேன் அவரா போறார் நான் என்ன பண்ண முடியும் என்று நினைத்துக் கொண்டு தோளை குலுக்கிக் கொண்டு சென்றாள்.

 

 

மறுநாள் காலை சொன்னது போலவே வந்து சேர்ந்தான். புது மாப்பிள்ளை பெண்ணை அழைத்துக் கொண்டு எல்லோரும் கோவிலுக்கு சென்றனர். சுஜய்யும் மீனுவும் அவர்கள் காரில் வந்தனர்.

 

 

வழியில் ஒரு இடத்தில் நிறுத்திய சுஜய் இறங்கி நடந்தான். “மாமா எங்க போறீங்க, இருங்க நானும் வர்றேன் என்றவாறே அவளும் இறங்கி அவனுடன் நடந்தாள்.

 

 

“என்னாச்சு இப்போ எங்க போறீங்க

 

 

“பேசாம வா

 

 

“பதில் சொல்லுங்க, எல்லாரும் கோவிலுக்கு போயிட்டு இருக்காங்க. நீங்க பாட்டுக்கு பாதியில நிறுத்திட்டு நடந்து எங்க போறீங்க

 

 

அவனோ பதிலே சொல்லாமல் நடந்து கொண்டிருந்தான். ‘என்னாச்சு இவருக்கு கோவிலுக்கு போனதும் கண்டிப்பா இவருக்கு மந்திரிக்கணும். ஆத்தாஇவருக்கு எதுவும் ஆகக்கூடாது என்று வேண்டுதலை வைத்துக் கொண்டு அவன் பின்னேயே சென்றாள்.

 

 

ஓரிடத்தில் நின்றவன் “இது என்ன இடம் தெரியுதா மீனு

 

 

“என்ன இடம்

 

 

“மறந்திட்டியா மீனு என்றவன் கன்னத்தை தடவ அவளுக்கு அவன் சொல்ல வந்தது புரிந்தது. “நீங்க இன்னும் இதை மறக்கலையா என்று முகம் வாடினாள்.

 

 

“இங்க பாரு நான் என்ன சொல்ல வர்றேன்னு புரிஞ்சுக்காம இப்படி பண்ணுறியே. இங்க பாரு மீனு நீ பண்ண ஒரு ஒரு விஷயமும் நான் அப்போ ரசிச்சேன்

 

 

“அதுனால தான் இங்க வரணும்னு தோணிச்சு, உன்னை கஷ்டப்படுத்த ஒண்ணும் நான் இங்க கூட்டிட்டு வரலை

 

“அன்னைக்கு உங்களுக்கு என் மேல கோபமே வரலையா

 

 

“வந்துச்சு, திருப்பி கொடுக்கணும்னு நினைச்சேன். ஆனா கதிருக்காக அப்போ விட்டுட்டேன்

 

 

“புரியலை

 

 

“அப்போ உன்னை கதிருக்கு பார்த்த பொண்ணா தானே எனக்கு தெரியும்

 

 

“சரி இப்போ தண்டனை கொடுங்க

 

 

“அதெல்லாம் பல தடவை கொடுத்தாச்சு. இன்னுமிருக்கு நீ சொன்னதுக்காக எல்லாம் கொடுக்க முடியாது எப்போ கொடுக்கணும்னு தோணுதோ அப்போ கண்டிப்பா தண்டனை உண்டு என்று அவள் இதழ்களை பார்த்துக் கொண்டே  சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

 

 

‘சரியான ஆளு தான், இது தான் அந்த தண்டனையா. இன்னைக்கு இருக்கு உங்களுக்கு கச்சேரி என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அவனுடன் கோவிலுக்கு சென்றாள்.

 

 

பூசாரியிடம் தனியாக சென்று ஏதோ சொல்லிவிட்டு வந்தாள். சுஜய்யை பூசாரி அழைக்க “என்னையா எதுக்கு கூப்பிடுறீங்க என்றான் அவன்.

 

 

“ஒண்ணும்மில்லை தம்பி உங்களை ஏதோ காத்து கருப்பு அண்டியிருக்குமோன்னு மீனா சொல்லிச்சு அதான் மந்திரிக்கலாம்ன்னு என்றவர் வேப்பிலையை கையில் எடுத்துக் கொண்டார்.

 

 

அவனுக்கு பட்டை பட்டையாக விபூதி பூசி வேப்பிலையால் மந்திரிக்க ஆரம்பித்தார். மீனுவோ ஓரமாக நின்றுக் கொண்டு அவனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

 

 

புருவத்தை உயர்த்தி எப்படி என்பது போல் பார்க்க அவனும் பதிலுக்கு ‘எல்லாம் உன் வேலை தானா என்பது போல் பார்த்தான் அவன்.

 

 

 

 

 

Advertisement