Advertisement

அத்தியாயம் –13

 

 

“மீனு எங்க இருக்க என்று சுஜய் அழைக்க சமையலறையில் வேலையில் இருந்தவள் “என்ன மாமா எதுக்கு கூப்பிட்டீங்க என்று வந்து நின்றாள்.

 

 

“என் போனை எங்க வச்சேன்னு தெரியலை உன் போன்ல இருந்து எனக்கு போன் போடேன்

 

 

“இம் இதோ போடறேன் என்றவள் அவள் கைபேசியில் இருந்து அவனுக்கு அழைத்தாள்.

 

 

அங்கிருந்த சோபாவில் அவன் கைபேசி சிணுங்க அதை எடுத்தவளுக்கு கோபம் வந்தது. அதை எடுத்துக் கொண்டு அவனிடம் சென்றவள் “என்னது இது

 

 

“எது என்றான்

 

 

“போன்ல என்ன போட்டு வைச்சு இருக்கீங்க

 

 

“என்ன போட்டு வைச்சிருக்கேன் மீனு, என்ன கேட்க வர்றே. புரியலையே

 

 

“என் போன்லயும் daringனு போட்டு வைச்சு இருக்கீங்க, உங்க போன்லயும் அதே போட்டு வைச்சு இருக்கீங்க. என்ன நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல என்று இடுப்பில் இருகைகளையும் ஊன்றிக் கொண்டு அவனிடம் சண்டைக்கு தயாராவது போல் பேசிக் கொண்டிருந்தாள்.

 

 

அவனோ விழுந்து விழுந்து சிரித்தவன் “ஆமா நீ இங்கிலீஷ்ல எவ்வளோ மார்க் என்றான் சற்றும் சம்மந்தமே இல்லாமல்.

 

 

“நூறு மார்க் என்றாள்.

 

 

“நூறு மார்க் வாங்கி இருக்க, ஆனா தப்பு தப்பா இங்கிலீஷ் படிக்கிறியே

 

 

‘என்னது நான் நூறு மார்க் வாங்கியிருக்கேன்னு சொல்றேன் இவர் என்னென்னமோ சொல்றார். ஓ நாம நூத்துக்கு நூறுன்னு நினைச்சுட்டார் போல

 

 

‘இருநூறுக்கு தானே நான் நூறு வாங்கி இருக்கேன். வேணா இதை வேற சொல்லி நாமே ஏன் கெடுத்துக்கணும், பேசாம இருப்போம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

 

 

“என்ன தப்பா படிச்சுட்டேன்

 

 

“அதுல daringன்னா போட்டிருக்கு நல்லா பாரு, ஆசையா darlingன்னு போட்டா. அதை தப்பு தப்பா படிச்சுட்டு வந்து என்னை வேற நீ முறைக்கிற

 

 

“இதுல வேற நீ சரியா கண்டுபிடிச்சுட்டன்னு நான் எவ்வளவு சந்தோசப்பட்டேன். ஆமா நீ எப்படி இது தான் என்னோட நம்பர்ன்னு கண்டுபிடிச்ச

 

 

“அது அது வந்து அதான் மத்த நம்பர்ல எல்லாம் அப்பா, அம்மா, அப்புறம் பேரு எல்லாம் இருந்துச்சு. இது மட்டும் தான் வேற மாதிரி இருந்துச்சு, அதுவும் இல்லாம திட்டுற மாதிரி இருந்துச்சு இந்த வார்த்தை ஒரு வேளை நீங்களா தான் இருப்பீங்கன்னு குத்து மதிப்பா தான் போட்டேன்

 

 

“அறிவாளி பொண்டாட்டி என்று அவன் கூற அவள் முறைத்தாள்.

 

 

“போதும் போதும் நிறுத்துங்க

 

இரண்டு நாட்கள் கழிய அவள் மதிப்பெண், மாற்று சான்றிதழ் அனைத்தும் கூரியரில் வந்து சேர்ந்தது.

மாலையில் சுஜய் வந்ததும் அவள் அதை அவனிடம் கொடுக்க மதிப்பெண் சான்றிதழை தற்செயலாக பார்த்தான். “மீனும்மா என்றான்

 

 

“என்னங்க மாமா

 

 

“இங்கிலீஷ்ல நீ எவ்வளவு மார்க்ன்னு என்கிட்ட சொன்னே

 

 

“நூறு மார்க் அதுக்கென்ன இப்போ

 

 

“இருநூறுக்கு நூறு, என்னமோ நூத்துக்கு நூறு வாங்கின மாதிரி ஒரே பில்டப் அன்னைக்கு

 

 

“நானா சொன்னேன், நூத்துக்கு நூறுன்னு நீங்களா நினைச்சா நான் என்ன மாமா பண்ண முடியும் என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

 

 

‘இவளை ரொம்ப சேட்டை பண்ணுறா, எப்படி தான் என் மாமாவும் அத்தையும் இவளை சமாளிச்சாங்களோ என்று நினைத்துக் கொண்டான்.

 

 

அந்த வார இறுதியில் அவளை அழைத்து சென்று கல்லூரியில் சேர்த்துவிட்டான். அவளுக்கு கல்லூரி திறக்க இன்னும் ஒரு மாத கால அவகாசம் இருந்தது.

 

 

அவளுக்கு தேவையான அனைத்தும் வாங்கி கொடுத்தான். இந்நிலையில் ஒரு நாள் அவனுக்கு வயல்பட்டியில் இருந்து ராஜேந்திரன் அழைத்திருந்தார்.

 

 

கைபேசியை எடுத்து காதில் வைத்தவன் “சொல்லுங்கப்பா எப்படியிருக்கீங்க

 

 

“ஒரு முக்கியமான விஷயமா போன் பண்ணேன் என்றவரின் குரல் சற்றே கரகரத்தது போல் இருந்தது.

 

 

“சொல்லுங்கப்பா என்றான்

 

 

“அப்பாக்கு ரொம்ப முடியலை, இன்னைக்கோ நாளைக்கோன்னு இருக்கார். உங்களையும் மீனாவையும் பார்க்கணும்ன்னு கேட்டார்

 

 

“நீங்க மீனாவை கூட்டிட்டு ஊருக்கு வரமுடியுமா

 

“என்னப்பா சொல்றீங்க, தாத்தாவுக்கு திடீர்ன்னு என்னாச்சு. நல்லா தானே இருந்தாங்க

 

 

“ரெண்டு நாள் முன்னாடி கட்டில்ல இருந்து கிழே விழுந்துட்டாங்க. ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனோம். எந்த வைத்தியமும் சரியா வரலை, டாக்டர் இனி தாங்காது வீட்டுக்கு கூட்டிட்டு போங்கன்னு சொல்லிட்டார்

 

 

“இப்போ தான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தோம். இங்க வந்த பிறகு அவர் ரெண்டு வார்த்தை தான் பேசினார், உங்களை எல்லாம் பார்க்கணும்னு ஆசைப்படுறார்

 

 

சுஜய் மேற்கொண்டு எந்த பேச்சையும் வளர்த்தாமல் “நாங்க உடனே கிளம்பி வர்றோம் என்று சொல்லி போனை வைத்தான்.

 

 

“மீனா… மீனா என்று அவன் அழைக்க “என்ன இன்னைக்கு உங்க அழைப்பு எல்லாம் வித்தியாசப்படுது என்று சொல்லிக் கொண்டே வந்தாள் அவள்.

 

 

அவனோ எதையும் கவனிக்கும் மனநிலையில் இல்லாதவன் போன்று “சரி நாம உடனே ஊருக்கு கிளம்பணும், உனக்கு தேவையானது எல்லாம் எடுத்து வை என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.

 

 

“என்ன இப்போ திடீர்ன்னு ஊருக்கு என்று அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவள் கைபேசி சிணுங்கியது.

 

 

“ஹலோ சொல்லும்மா

 

 

“என்னம்மா சொல்ற, தாத்தா எப்படியிருக்கார் என்றவளின் குரல் உடைய ஆரம்பித்தது.

 

 

“மீனா, இங்க என்ன வெட்டியா பேசிட்டு இருக்க. சொன்னதை செய், போ முதல்ல போய் ஊருக்கு போக தேவையானதை எல்லாம் எடுத்து வை என்று அரட்ட எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தாள் அவள்.

 

 

அனைத்தையும் எடுத்து வைத்து அவள் தயாராக இருக்க சுஜய் ராமு, லட்சுமியிடம் வீட்டை பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு ஊருக்கு கிளம்பினான்.

 

சுஜய் வாடகை கார் சொல்லியிருக்க கார் வந்ததும் ஏறி அமர்ந்தனர். மீனா அழுகையை அடக்கிக் கொண்டு வருவது தெரிய “மீனு என்றான் மென்மையாக.

 

 

அவனின் மென்மையான பேச்சில் அவள் கண்ணீர் கரையுடைத்து பெருகியது. “தாத்தாக்கு எதுவும் ஆகாதுல்ல மாமா

 

 

“எனக்கு தாத்தாவை ரொம்ப பிடிக்கும், நான் சின்ன வயசில பெரும்பாலும் அங்கே தான் இருப்பேன்

 

 

“எங்கம்மா அப்பாவை விட எனக்கு அவங்களை ரொம்ப பிடிக்கும். தாத்தா முன்னெல்லாம் எப்படி துருதுருன்னு இருப்பாங்க தெரியுமா

 

 

“இப்போ சில வருஷமா அவங்களுக்கு உடம்புக்கு முடியலை. நான்னா தாத்தாவுக்கு ரொம்ப பிடிக்கும் என்று நினைக்கும் போதே அவள் அழுகை அதிகமாகியது.

 

 

“மீனு ப்ளீஸ் அழாதேம்மா என்றவன் அவள் தோளில் அணைப்பாய் கைபோட அவள் அவன் நெஞ்சின் மீது சாய்ந்து அழத்தொடங்கினாள்.

 

 

மீண்டும் மீண்டும் “தாத்தாவுக்கு எதுவும் ஆகாதுல்ல என்றே கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

 

“எதுவும் ஆகாது மீனு, நீ கவலைப்படாதே. நாம வேணா அவங்களை சென்னை கூட்டிட்டு வந்திடலாம், இங்க வைச்சு வைத்தியம் பார்த்துக்கலாம் என்று சமாதானம் கூறினான் அவன்.

 

 

“இல்லை என் மனசு பாரமா இருக்கு, தாத்தாவுக்கு ஏதோ நடக்கப் போகுது என்று சொல்லி நெஞ்சை பிடித்துக் கொண்டாள்.

 

 

அவளை சமாதானப்படுத்துவது அவனுக்கு பெரும்பாடாக இருந்தது. கார் ஊருக்குள் நுழைய அவளை ஏதோ திகில் பிடித்துக் கொண்டது. அடிவயிற்றில் ஒரு பயப்பந்து உருண்டது.

 

 

கார் அவர்கள் வீட்டை நெருங்க வீட்டின் முன் ஒரு கூட்டமே நின்றிருந்தது. காரில் இருந்து இறங்கவே மீனாவின் கால்கள் தயங்க மெதுவாக இறங்கியவளை வேகமாக வந்து அணைத்தான் சுஜய்.

 

அவளை அணைத்தவாறே அவன் அழைத்து செல்ல வழியில் தென்பட்டவர்கள் வேறு அவளை பிடித்துக் கொண்டு அழ சுஜய்க்கு அவர்களிடம் இருந்து அவளை பிரித்து கூப்பிட்டு உள்ளே அழைத்து செல்ல பெரும்பாடு பட்டான்.

 

 

வந்தவர்களை ஒருதலையசைப்புடன் அழைத்தவர்கள் ஈஸ்வரன் இருந்த அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு மூச்சு காற்று இழுப்பாக ஏறி ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.

 

 

“பால் ஊத்துங்க என்று இருவரிடமும் சொல்ல மீனா அழுது கொண்டே சென்று பாலை ஊற்றினாள்.

 

 

சுஜய்க்கு ஏனோ கைகள் நடுங்கியது, பால் தம்ளரை வாங்கியவன் அவரருகே சென்று பாலை ஊற்ற ஈஸ்வரனின் ஒரு கை ஊன்றியிருந்த அவன் கைவிரல்களை பற்றிக் கொண்டது.

 

 

அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது, முன்பை விட இழுப்பு அதிகமாக சுஜய்க்கு கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. ஈஸ்வரனின் மூச்சுக்காற்று அவன் ஊற்றிய பாலை ஏற்காமல் கடைசி மூச்சை விட்டு பிரிந்தது.

 

 

அதன்பின் காரியங்கள் வேகமாக நடந்தேற ஈஸ்வரனின் கைகளையும் கால்களையும் கட்ட முயற்சிக்க அவர் விரல்கள் சுஜய்யின் விரல்களை இறுக பற்றியிருந்தது.

 

 

அதை பிரித்து எடுத்து மேற்கொண்டு காரியங்கள் நடந்தேறியது.கதிரும் ஊரில் இருந்து வந்துவிட்டிருந்தான். அவரை அடக்கம் செய்துவிட்டு ஆண்கள் வீட்டிற்கு திரும்பினர்.

 

 

சுஜய் எதையும் யோசிக்கும் மனநிலையில் இல்லை, அவன் மனம் எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தது. மீனாவை கூட அவன் தேடவில்லை.

 

 

மீனாவின் அன்னை தான் அவன் சாப்பிடாமல் இருப்பான் என்று சொல்லி மீனாவிடம் சொல்லி மருமகனை கவனிக்கச் சொன்னார்.

 

 

“மாமா நேத்துல இருந்து நீங்க ஒண்ணுமே சாப்பிடலை, வாங்க சாப்பிடுங்க

 

 

“இல்லை மீனு எனக்கு எதுவும் வேணாம்

 

 

“சாப்பிடாம இருந்தா என்னாகும், சொன்னா கேளுங்க வந்து சாப்பிடுங்க

 

 

“ஏன் இப்படி என் உயிரை எடுக்கற, உனக்கு சொன்னா புரியாதா. போ, நீ போய் சாப்பிடு என்னை கொஞ்சம் தனியா இருக்க விடு என்று கோபமாக கத்தினான் என்று சொல்வதை விட கர்ஜித்தான் என்றே சொல்ல வேண்டாம்.

 

 

“இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு கோபமா பேசுறீங்க

 

 

“இப்போ நீ போகப் போறியா இல்லையா என்று அவன் உறும அவளுக்கு குளிர் பிறந்தது. அங்கிருந்து நகர்ந்தாள்.

 

 

ஆனாலும் அவனை அப்படியே விட அவளுக்கு மனமில்லை. ‘ஏன் இப்படி இருக்கார், ஒரு வேளை மாமா அத்தை இல்லாதது ஞாபகம் வந்திருக்குமோ என்று நினைத்தாள்.

 

 

அவள் கவலை எங்கோ பறந்துவிட அவனை பற்றிய கவலையில் ஆழ்ந்தாள் அவள்.

 

 

சில மணி நேரம் கழித்து அவர்கள் அறைக்கு செல்ல அவள் செல்லும் முன் எப்படி அமர்ந்திருந்தானோ அதே நிலையிலேயே அவன் அமர்ந்திருந்தான்.

 

 

ஏனோ அவனை தன் மடி மீது சாய்த்துக் கொள்ள வேண்டும், அவன் கவலை போக்க வேண்டும் என்று தோன்ற அவனருகே சென்றாள்.

 

 

இரு கைகளாலும் அவன் தலையோடு சேர்த்து அவள் வயிற்றில் புதைத்துக் கொள்ள அவனுக்கும் அந்நேரம் அந்த ஆறுதல் தேவைப்பட்டதாக இருந்தது. இருகைகளாலும் அவள் இடையை சுற்றி வளைத்தவன் அவள் எங்கே அவனை விட்டு சென்று விடுவாளோ என்பது போல இறுக்கிக் கொண்டான்.

 

 

சில நிமிடங்களுக்கு பின் அவன் தலையை நிமிர்த்தி அவனை விலக்கி கட்டிலில் அமர்ந்தவள் அவன் தலையை தன் மடி மீது சாய்த்துக் கொண்டாள்.

 

 

அதில் மிகுந்த ஆறுதலை உணர்ந்தவன் கண்மூடி சயனித்திருந்தான். இரண்டு நாட்களாய் தொலைத்திருந்த உறக்கம் அவள் மடியில் படுத்ததும் அவனுக்கு வந்திருக்க எப்போது உறங்கினானோ அறியான். சில மணி நேரம் கடந்திருக்க தேனு மீனுவை தேடி வந்தாள்.

 

 

“அக்கா இங்க என்ன பண்ணிட்டு இருக்க, அங்க எல்லாரும் உன்னை தேடிட்டு இருக்காங்க. நீ என்னடான்னா மாமாவை படுக்க போட்டு தாலாட்டு படிச்சுக்கிட்டு கிடக்க

 

 

“வாயை மூடு, போடி. அவர் தூங்குறார் என்று பல்லைக் கடித்தவாறே மெதுவான குரலில் தங்கையை விரட்டினாள்.

 

 

“இப்போ எதுக்கு என்னை விரட்டுற அங்க எவ்வளவு வேலை கிடக்கு, எல்லாம் விட்டுபோட்டு இங்க வந்து டூயட் பாடிட்டு இருந்தா எப்படி

 

 

“இப்போ நீ போகலை என்கிட்ட நல்லா அடிபடுவ போடி மரியாதையா

 

 

அதற்குள் சுஜய்யின் தூக்கம் கலைய ஆரம்பிக்க மீனாவின் மடியில் இருந்து எழுந்து அமர்ந்தான். “மீனு இவ்வளவு நேரம் இப்படியேவா உட்கார்ந்திருந்த, என்னை எழுப்பி கட்டில்ல படிக்க சொல்லி இருக்கலாம்ல

 

 

“அதை தான் நானும் கேட்டுட்டு இருக்கேன் மாமா, இவ என்னமோ உங்களுக்கு தாலாட்டு பாடிட்டு இருக்கா. அங்க பெரியம்மா இவளை தேடிட்டு இருக்காங்க. நான் போறேன் நீ விரசா வந்து சேரு என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

 

 

“என்ன மீனு ஏன் இவ்வளவு நேரம் பேசாம இருந்த. கால் வலிக்குதா என்றான் அக்கறையாக

 

 

“அதெல்லாம் ஒண்ணுமில்லை, நான் ஒண்ணு கேட்பேன் நீங்க தப்பா எடுத்துக்க கூடாது

 

 

“என்ன மீனு

 

 

“நீங்க ஏன் கவலையா இருக்கீங்க, மாமா, அத்தை ஞாபகம் வந்திடுச்சா உங்களுக்கு

 

 

“விடு அதெல்லாம் ஒண்ணுமில்லை என்றான் அவன்.

 

 

“எதுவா இருந்தாலும் நீங்க கவலைப்பட வேண்டாம், நான் இருக்கேன் உங்களுக்கு என்று அவள் கூற அந்த வார்த்தைகள் அவனுக்கு பலத்தை கொடுக்க “மீனு என்றவாறே அவளை இழுத்து இறுக்கக்கட்டி கொண்டான்.

 

 

அவளை விடவே மாட்டேன் என்பது போல் மேலும் மேலும் இறுக்க அவன் முதுகை மென்மையாய் தடவிக் கொடுத்தாள்.

 

 

“அம்மா கூப்பிட்டாங்களாம் நான் போய் பார்த்திட்டு வரவா

 

 

“ஹ்ம்ம் சரி மீனு போயிட்டு வா என்று சொல்லி அவள் நெற்றில் முத்தமிட்டு அவளை அனுப்பி வைத்தான்.

 

 

இரண்டு நாட்கள் வெறுமையாய் கழிய சுஜய்க்கு என்னவோ போல் இருந்தது. மறுநாள் மீனா அவனை தேடி வந்தாள் “மாமா பாட்டி உங்களை பார்க்கணும்னு சொன்னாங்க வாங்க

 

 

“எதுக்கு, என்னால வரமுடியாது

 

 

“என்ன மாமா இது பெரியவங்க கூப்பிடுறாங்க போய் என்னன்னு ஒரு வார்த்தை கேட்டுட்டு வந்தா தான் என்ன

 

 

“உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாது. என்னால வரமுடியாது, முதல்ல இங்க இருந்து போ மீனா, என்னை சும்மா கேள்வி கேட்டுட்டு இருக்காதே

 

 

“இப்போ என்னாச்சுன்னு இந்த கத்து கத்துறீங்க

 

 

“சரி அமைதியாவே சொல்றேன், நான் வரலை நீ இங்க இருந்து கிளம்பு என்றான் தணிவாக.

 

 

“நாம நாளைக்கு ஊருக்கு கிளம்பலாம் அதையும் எல்லார்கிட்டயும் சொல்லிடு

 

 

“என்ன விளையாடுறீங்களா, காரியம் முடியாம எப்படி கிளம்புறது. காரியம் முடிஞ்சதும் போகலாம்

 

 

“மீனா என் பொறுமையை சோதிக்காதே, சொன்னதை செய்

 

 

“என்ன மாமா பேசறீங்க, காரியம் முடியறவரைக்கும் நாம இங்க இருந்து தான் ஆகணும். இது ஒண்ணும் உங்க ஊரு மாதிரி கிடையாது, கிராமம் நாம கிளம்பி போனா நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க மாமா. புரிஞ்சுக்கோங்க

 

 

“நீங்க பாட்டியை பார்க்க வரலைன்னா பரவாயில்லை, நான் எதாச்சும் சொல்லி சமாளிச்சுக்கறேன் என்று தன்மையாகவே சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றாள்.

 

 

சற்று நேரம் தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்திருந்தவனுக்கு அவன் பேசியது தவறோ என்று தோன்ற ஆரம்பித்தது.

 

 

எழுந்து வெளியில் சென்றவன் சுற்று முற்றும் பார்த்தான், தேனுவின் அன்னை திலகவதி அவன் தேடுவதை பார்த்து மீனாவை அழைத்து அவனை கவனிக்க சொன்னார்.

 

 

“என்னங்க மாமா என்று வந்தவளிடம் “வா போய் பாட்டியை பார்த்திட்டு வரலாம்

 

 

“இப்போ தான் உங்களுக்கு உடம்பு சரியில்லை, படுத்திருக்கீங்கன்னு சொல்லி வைச்சு இருக்கேன், உடனே போகலாம்ன்னு வந்து நிற்கறீங்க

 

 

“இப்போ நீ என்கூட வர்றியா இல்லையா

 

 

‘என்னாச்சு இந்த சொட்டைமண்டையனுக்கு இங்க வந்ததுல இருந்தே ஒரு தினுசா தான் நடந்துக்கறார் என்று பாதி மரியாதை கொடுத்தும் கொடுக்காமலும் அவனை மனதிற்குள் நிந்தித்துக் கொண்டாள்.

 

 

“சரி வாங்க போகலாம் என்று அவனுடன் பாட்டியின் அறையை நோக்கி நடந்தாள்.

 

 

“வாங்கய்யா, மீனாட்சி சொன்னா உங்களுக்கு உடம்புக்கு முடியலைன்னு இப்ப உங்க உடம்பு எப்படி இருக்கு. உங்களை சரியா கவனிக்க முடியலை. தப்பா எடுத்துக்காதீங்க

 

 

“அய்யோ பாட்டி நீங்க எதுக்கு என்கிட்ட மன்னிப்பு கேட்டுகிட்டு, நான் எதுவும் நினைக்கலை. எனக்கு இப்போ உடம்பு பரவாயில்லைங்க பாட்டி, நீங்க என்னை பார்க்கணும்னு சொன்னீங்களாம் அதான் பார்த்திட்டு போகலாம்ன்னு வந்தேன்

 

 

“ஆமாய்யா நீங்க வந்திருக்கீங்க உங்களை கவனிக்க முடியாம நான் இங்க கிடக்கேன். மனசுல ஒண்ணும் வைச்சுக்காதீங்க, எம் பேத்தியும் நீங்களும் சந்தோசமா இருக்கணும்

“இவுங்க தாத்தாவுக்கு பேத்தி மேலயே தான் உசிரு, நீங்க ரெண்டு பேரும் இப்படி ஒண்ணா சந்தோசமா இருக்கறதை பார்க்க கொடுத்து வைக்காம போய் சேர்ந்துட்டாங்க என்றவர் கண்கள் கலங்க ஆரம்பித்தது.

 

 

“வருத்தப்படாதீங்க பாட்டி, நாங்க இருக்கோம் உங்களுக்கு. நீங்க எங்ககூடவே வந்துடுங்களேன் பாட்டி

 

 

“நீங்க கூப்பிட்டதே சந்தோசமா இருக்குய்யா. நாங்க கொஞ்ச நாளைக்கு எங்கயும் போகக்கூடாது. கண்டிப்பா உங்களை பார்க்க நான் வருவேன்ய்யா, எம் பேத்தி குடும்பம் நடத்துற அழகை பார்க்க கண்டிப்பா வருவேன்

 

 

“தாத்தா தான் இதெல்லாம் பார்க்க முடியலை, என்ன பண்ண அவங்க விதி அவ்வளவு தான் என்றவரின் குரல் மீண்டும் உடைந்தது.

 

 

“பாட்டி ப்ளீஸ் அழாதீங்க

 

 

“இல்லைய்யா அழலை, நான் ஒருத்தி அழுது உங்களை சங்கடப்படுத்தறேன். மீனாட்சி போய் எம் பேரனை கவனி. என்ன வேடிக்கை பார்த்திட்டு இருக்க போ இங்க இருந்து என்று பேத்தியை விரட்டினார்.

 

 

“கிழவி தாத்தா இல்லைன்னதும் துள்ளுரியா, இரு எம் புருஷன்கிட்ட சொல்றேன் என்றாள்

 

 

சுஜய் எதையும் கவனிக்காமல் அறையை விட்டு வெளியேறினான். மறுநாள் காரியம் இருக்க ஊரில் உள்ளவர்கள் அனைவரும் வந்திருந்தனர்.

 

 

மீனுவின் தோழி கலா அவள் கணவர் பிரகாஷுடன் வந்திருந்தாள். மீனாவின் தாத்தா இறப்பிற்கும் வந்திருந்தாள் அவள், சாவு வீட்டில் எதுவும் பேச முடியாததால் அவள் அன்றே அவள் வீட்டிற்கு திரும்பிவிட்டாள்.

 

 

காரியத்துக்கு அவள் கணவரை வற்புறுத்தி அழைத்து வந்திருந்தாள். தோழியை கண்ட மீனா ஓடிச் சென்று அவளை அணைத்துக் கொண்டாள்.

 

 

“எப்படிடி கலா இருக்கே, அண்ணன் எப்படியிருக்காங்க. என்னை ஒரேடியா மறந்திட்டியா நீயி. நான் உம்மேல ரொம்ப கோபமா இருக்கேன், பகுமானம் பார்த்திட்டு என் கல்யாணத்துக்கு வரலையோ நீயி

 

 

“என்ன மீனா நான் பகுமானம் பார்க்கறவளா என்னை பார்த்து இப்படி சொல்லிட்ட. உங்கண்ணனுக்கு முக்கிய வேலை வந்திருச்சு வெளியூருக்கு அனுப்பிட்டாங்க, அவங்க என்னையும் கூடவே அழைச்சுட்டு போய்ட்டாங்க

 

 

“நீ இந்த பக்கம் ஊருக்கு கிளம்பவும் நான் நேரா இங்க தான் வந்தேன். அப்புறம் அத்தை தான் இங்க நடந்தது எல்லாம் சொன்னாங்க. எனக்கும் உன்னை பார்க்கணும் போல இருந்துச்சு

 

 

“நீ இருக்க ஊரு என்ன பக்கத்துலயா இருந்துச்சு வந்து பார்க்க, அதான் நீ வரும் போது பார்த்துக்கலாம்ன்னு விட்டுட்டேன்

 

 

“ஆமா எங்கண்ணன் எப்படி, உன்னை நல்லா பார்த்துக்கறாங்களா, நீ சந்தோசமா இருக்கியா என்றாள் கண்சிமிட்டியவாறே

 

 

“அந்த சொட்டைமண்டைக்கு என்ன எல்லாம் என்னை நல்லா தான் பார்த்துக்கறார்

 

 

“எதுக்குடி எங்கண்ணனை அப்படி சொல்ற என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்த மீனாவின் அம்மா மீனாவின் முதுகில் ஒன்று வைத்தார்.

 

 

“அய்யோ அம்மா எதுக்கும்மா அடிக்குற

 

 

“கல்யாணம் ஆகிடுச்சு இன்னும் இப்படி விவரமில்லாம இருக்கியேடி. மாப்பிள்ளையை இப்படி தான் பேசுவாங்களா, மரியாதையா பேசவே தெரியாதா உனக்கு.

 

 

“உன்னை நாங்க சரியா வளர்க்கலைன்னு நினைக்க மாட்டாங்க என்றவர் மீண்டும் அவள் முதுகில் ஓங்கி ஒன்று வைக்க சுஜய் “அத்தை என்க “மன்னிச்சுடுங்க மாப்பிள்ளை, அவ… அவ… என்று இழுத்தார்.

 

 

“விடுங்க அத்தை எதுவும் சொல்ல வேண்டாம். அவ என்னை தானே சொன்னா, நானே எதுவும் நினைக்கலை. நீங்க எதுக்கு இப்படி, அவ என்னோட பொண்டாட்டி அத்தை

 

 

“தப்பு தான் மாப்பிள்ளை, மன்னிச்சுடுங்க என்றவர் அங்கிருந்து நகர்ந்தார்.

 

 

“எதுக்கு எங்கம்மாவை அப்படி சொன்னீங்க, பாருங்க வருத்தப்பட்டு போறாங்க. எங்கம்மா என்னை அடிப்பாங்க மிதிப்பாங்க அதை பத்தி உங்களுக்கு என்ன வந்துச்சு

 

 

“நானே வலிக்குதுன்னு கூட சொல்லலை, நீங்க எதுக்கு தேவையில்லாம உள்ள வந்தீங்க என்று பொரிந்தாள்.

 

 

அவளருகில் வந்தவன் “உனக்கு வேணா உங்கம்மா அடிச்சது வலிக்காம இருந்திருக்கலாம், என் பொண்டாட்டியை அத்தை அடிச்சது எனக்கு வலிக்குது என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

 

 

“என்ன சீன் இது சினிமால மட்டும் தான் இப்படி எல்லாம் வரும். அண்ணே அசத்துறாங்க, என்னா லவ்ஸ் என்னா லவ்ஸ்

 

 

“டி கலா என்னடி உளர்ற

 

 

“அண்ணே கண்ணுல உன் மேல உள்ள காதல் தெரியுது, என்னம்மா பேசிட்டு போறாங்க

 

 

“ரொம்ப சினிமா பார்க்காதேன்னா கேட்குறியா, அதை விடு. நாம பேசிட்டு இருந்தோம், அம்மா இவரை நான் ஏதோ சொல்லிட்டேன்னு பேசிட்டு போறாங்க. அதுக்கு இவர் எங்கம்மாவை எப்படிடி பேசலாம்

 

 

அங்கு நடந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கலாவின் கணவர் பிரகாஷ் அருகில் வந்தார்.

 

 

“வாங்கண்ணே எப்படி இருக்கீங்க என்றாள் மீனா சம்பிரதாயமாக

 

 

அவளிடம் பதிலுக்கு தலையசைத்தவன் கலாவை நோக்கி “ஏன் கலா எங்கப்பா உன் முன்னாடி என்னை அடிச்சா உனக்கு எப்படியிருக்கும் என்றான் சம்மந்தமேயில்லாமல்.

 

 

“அதெப்படிங்க என் முன்னாடி உங்களை அடிச்சா எனக்கு சங்கடமா இருக்காதா

 

 

“நீ வருத்தபடுவியா மாட்டியா

 

 

“கண்டிப்பா வருத்தபடுவேன்

 

 

“இதே தானே அவரும் சொன்னார், அதிலென்ன தப்பு. இதை உன்னோட சிநேகிதிகிட்ட சொல்லி புரியவை. உனக்காக அன்னைக்கு என்கிட்ட பேசுனவளுக்கு கட்டின புருஷனை புரிஞ்சுக்க தெரியலை. புரியவை என்றுவிட்டு அவன் சுஜய்யை நோக்கிச் சென்றான்.

 

 

சம்மந்தமேயில்லாமல் என்ன கேள்வி கேட்கிறார் என்று பார்த்துக் கொண்டிருந்த மீனாவுக்கு அவன் சொல்ல வந்த விஷயம் புரிய சுஜய்யின் மீதான மதிப்பு இன்னும் கூடியது.

 

 

ஆனாலும் அதை உடனே ஒத்துக்கொள்ள அவளுக்கு மனமில்லை. எல்லோரும் காரியத்தை முடிக்க சுருளிக்கு சென்றனர். ஆண்கள் குளித்துவிட்டு வந்தனர்.

 

 

“மீனா இங்க என்னடி பண்ணிட்டு இருக்க, அங்க உன் புருஷன் குளிக்க போனாரே அவருக்கு என்ன வேணும்ன்னு பார்த்து செய்யாம இங்க உட்கார்ந்து என்ன பண்ணிட்டு இருக்க, உனக்கு எப்போ பார்த்ததாலும் நான் சொல்லிட்டே இருக்கணுமா

 

 

“அம்மா உனக்கு வேலையே இல்லையாம்மா, என்னையவே குறை சொல்லிட்டு இருக்க. என்புருஷன் உன்னை ஒரு கேள்வி கேட்டா நீ மன்னிசுடுங்கன்னு சொல்லிட்டு போயிடுவியா

 

 

“உனக்கு இல்லாத உரிமையாம்மா. அவ எம்பொண்ணு தான் அவளை அடிக்க எனக்கு உரிமை இருக்குன்னு சொல்லமாட்டா

 

 

“இதுக்கு தான் உனக்கு கோபமா, அதுனால தான் இங்க வந்து முறுக்கிட்டு உட்கார்ந்திருக்கியா, கூறுகெட்டவளே

 

 

“மருமகன் அவர் பேசினது தப்புன்னு அப்போவே வந்து என்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டாங்க, உங்களுக்கு உங்க பொண்ணு மேல இல்லாத உரிமையா, நான் தப்பா பேசிட்டேன் அத்தை

 

 

“மன்னிச்சுடுங்க, இனி உங்க பொண்ணை கண்டிக்கறதா இருந்தா தனியா கூப்பிட்டு கண்டிங்க. என் முன்னாடி எதுவும் சொல்லாதீங்கன்னு சொன்னார்

 

 

“உன்னை யாரோ எங்கயோ தூரமா இருக்கவருக்கு கட்டிக் கொடுக்கறோமேன்னு கவலையா இருந்தேன். ஆனா அவர் குணத்தை பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்குடி

 

 

“நீ அவரை புரிஞ்சு நல்லவிதமா நடந்துக்கற வழியை பாரு, என்கிட்ட பேசுற மாதிரி ஏட்டிக்கு போட்டியா எகனை மோகனைய அவர்கிட்ட பேசாதே என்று மகளுக்கு புத்தி கூறிவிட்டு சென்றார்.

 

 

‘அய்யோ நாம வேற தேவையில்லாம இவரை பேசிட்டோமே. இவர் அம்மாகிட்ட போய் மன்னிப்பு எல்லாம் கேட்டிருக்காரேஎன்ன செய்ய என்று யோசித்தவள் அவனுக்கு வேண்டிய மாற்றுடை எடுத்துக் கொண்டு அவனை நோக்கி சென்றாள்.

 

 

 

  • காற்று வீசும்

Advertisement