Advertisement

அத்தியாயம் –12

 

 

சுஜய், மீனா, தேனு ராமு அண்ணா மற்றும் லட்சுமியும் டெல்லியில் இருந்து கிளம்பி சென்னை வந்தடைந்தனர். தேனு கதிரிடம் பிரியாவிடை பெற்று அனுப்ப, கதிருக்கு அவளை சமாதானப்படுத்துவது பெரும்பாடாக இருந்தது.

 

 

அவர்கள் வந்து சேரும் முன் ஊரில் இருந்து மீனாவின் பெற்றோரும், தேனுவின் பெற்றோரும் வந்து சேர்ந்திருந்தனர். சுஜய் ஏற்கனவே அவர்களுக்கு அவன் வீட்டு முகவரியை அளித்திருக்க அவர்கள் காலையிலேயே வந்திறங்கியிருந்தனர்.

 

 

அவர்கள் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே வீட்டை ஒரு ஆள் வைத்து தயார்படுத்த சொல்லியிருந்தான் சுஜய். அதனால் அவர்கள் வருவதற்கு முன்பே அங்கு எல்லாம் தயாராகவே இருந்தது.

 

 

சுஜய்யின் நண்பன் கௌதமின் மாமியார் வீடு சுஜய் வீட்டு பக்கம் இருந்ததால் எல்லாமே சுலபமாக முடிந்தது. காலையில் வந்திறங்கிய மீனாவின் வீட்டினரிடம் வீட்டு சாவியை கொடுக்க வந்தவர்கள் குளித்து முடித்து தயாராகி இருந்தனர் மீனாவின் வீட்டினர்.

 

 

விமானநிலையத்தில் இருந்து வெளியே வந்தவர்கள் ஒரு வாடகை காரை பேசிக்கொண்டு அவர்கள் இருப்பிடம் செல்ல அங்கு வந்தவர்களை வரவேற்க ஆலம் கரைத்து தயாராக வாசலிலேயே காத்திருந்தனர்.

 

 

இருவருக்கும் ஆலம் கரைத்து சுற்றி எடுக்க “இதென்னப்பா அநியாயம் டெல்லிலயும் சுத்தினீங்க. இங்கயுமா, இதெல்லாம் உங்களுக்கு ஓவரா தெரியலையா

 

 

“நீ கொஞ்சம் வாயை மூடுடி என்று அவள் அன்னை அதட்ட வாயை மூடிக் கொண்டாள் தேனு.

 

 

அவர்கள் வீட்டை ஒட்டிய சிறிய குடியிருப்பை ராமு அண்ணாவும் லட்சுமி அக்காவும் ஒதுக்கி கொடுக்க அவர்கள் அங்கு சென்று பால் காய்ச்சினர். மீனாவின் வீட்டினர் மகளுக்காக சீர் கொண்டு வந்து அந்த வீட்டில் அடுக்கியிருந்தனர்.

 

 

வீட்டை அடைத்தவாறு இருந்த பித்தளை அண்டா, தவளை மற்றும் இதர பொருட்களை கண்ட சுஜய் “எதுக்கு மாமா இதெல்லாம், நான் தான் எதுவுமே வேண்டாம்ன்னு சொன்னேனே

 

 

“இங்கயே எல்லாமும் இருக்கே, அப்புறம் எதுக்கு மாமா இதெல்லாம் வாங்கி இருக்கீங்க

 

 

“இதெல்லாம் முறைங்க மாப்பிள்ளை, தப்பா எடுத்துக்காதீங்க என்றார் மோகன்.

 

 

ஊரில் இருக்கும் போது தினமும் தாயும் மகளும் ஏதாவது ஒரு சண்டை போட்டுக் கொண்டே இருப்பர், ஆனால் ஏனோ மீனுவுக்கு அவள் அன்னையை அதிகம் தேடியது. வீட்டிற்கு உள்ளே வந்தவள் அவள் அன்னையை கட்டிக் கொண்டு அவரின் பின்னேயே திரிந்தாள்.

 

 

“இதென்ன மீனா புதுசா இருக்கு, அம்மாவும் பொண்ணும் நொடிக்கொரு சண்டை போடுவீங்க. புதுசா இருக்கே நீ உங்க அம்மாவை கட்டிக்கிட்டு அலையுற என்றார் திலகவதி.

 

 

“அதென்னமோ சித்தி எனக்கு அம்மாவை ரொம்பவே தேடுது. எல்லாரும் நான் கல்யாணம் ஆகி போனா போதும்ன்னு என்னை விரட்டி விட்டுடீங்கள்ள. உங்களை எல்லாம் பார்க்காம, அம்மாகிட்ட சண்டை போடாம என்னோட பொழுதே போகலை

 

 

“ஏம்மா மீனா அப்படி சொல்ற, உனக்கொரு நல்லது நடக்கணும்னு தானே நாங்க ஆசைப்பட்டோம். உன்னை விரட்ட நினைக்கலை என்றார் மீனாவின் அன்னை மாலதி.

 

 

“ஆமா, தாத்தா, பாட்டி, அத்தை மாமா எல்லாம் வரலையா, என்னை அவங்க மொத்தமா மறந்துட்டாங்களா என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்

 

 

“அதெல்லாம் ஒண்ணுமில்லை மீனா. உனக்கு தான் தெரியுமே தாத்தாக்கு உடம்பு முடியலை, எங்கம்மாவும் அப்பாவை விட்டு நகர்றது இல்லை. அண்ணனும் அண்ணியும் வயசானவங்களை தனியே விட்டு வரமுடியுமா

 

 

“அதான் நாங்க வந்திருக்கோம், அவங்க ஒரு பத்து நாள் கழிச்சு வந்து உங்களை பார்க்கறேன்னு சொல்லியிருக்காங்க என்றார் தேனுவின் அன்னை திலகவதி.

 

 

“ஏன் மீனா மாப்பிள்ளை உன்னை நல்லா பார்த்துக்கறாரா, நீ சந்தோசமா இருக்கியா என்றார் தொடர்ந்து.

 

 

“சித்தி இதை அம்மா கேட்க சொன்னாங்களா, என்னடா அம்மா பேசாம இருக்கேன்னு நினைச்சேன். உங்ககிட்ட சொல்லி கேட்க சொல்லிட்டாங்க போல

 

 

“சரி யார் கேட்டா என்ன மீனா, நீ பதில் சொல்லலாமே. அதைவிட்டு யார் சொன்னா எதுக்கு சொன்னான்னு ஆராய்ச்சி பண்ணுற

 

 

“நல்லா கேட்டுக்கோங்க, ஊர்ல போய் கிழவிகிட்டயும் சொல்லுங்க. நான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன், அவர் என்னை நல்லா பார்த்துக்கறார்என்று சொல்லும் போது அவளின் குரல் தணிந்து கனிந்திருந்தது.

 

 

“மீனா என்று சுஜய் அழைக்க அவள் அவர்களிடம் சொல்லிக் கொண்டு அவனை தேடி சென்றாள்.

 

 

“சொல்லுங்க எதுக்கு கூப்பிட்டீங்க

 

 

“சும்மா தான் உன்னை கூப்பிட்டேன். நான் கூப்பிட்டா நீ வர்றியான்னு பார்த்தேன், வந்திட்ட என்று அவன் கூற அவளோ முறைத்தாள்.

 

 

“அம்மா தாயே நீ எங்க முறைக்க கத்துக்கிட்ட அடிக்கடி இப்படி முறைச்சுட்டே இருக்க என்று சொல்ல அதற்கும் அவள் முறைத்தாள்.

 

 

“இதை சொல்ல தான் கூப்பிட்டீங்களா

 

 

“இல்லை, உன்கிட்ட ஒண்ணு கேட்கணும்

 

 

“என்ன கேட்கணும்

 

 

“நீ அத்தைகிட்ட பேசினதை கேட்டேன். முறைக்காதே, உன்னை கூப்பிட வந்தேன், அப்போ யதார்த்தமா என் காதுல விழுந்துச்சு

 

 

“நீ உண்மையா தான் சொன்னியா. நான் உன்னை நல்லா பார்த்துக்கறேனா

 

 

அவள் பதிலேதும் கூறாமல் அங்கிருந்து நகர முற்பட “சொல்லிட்டு போ என்று அவன் அவள் கையை வேகமாக பிடித்து இழுக்க ஒரு கணம் தடுமாறியவளை இழுத்து அவள் இடையில் இரு கைகோர்த்து அவளை தன்னோடு சேர்த்துக் கொண்டவன் அவளை பார்த்து மீண்டும் அதையே கேட்டான்.

 

 

“சொல்லு மீனு

 

 

“என்ன சொல்லணும்

 

 

“நான் உன்கிட்ட கேட்டதுக்கு பதில் சொல்லு

 

 

“அதான் அங்கேயே சொல்லிட்டேனே, அதை கேட்டுட்டு வந்து திரும்பவும் சொல்லு சொல்லுன்னு சொன்னா என்ன அர்த்தம்

 

 

“என்ன அர்த்தம் இன்னொரு தரம் என் காது குளிர சொல்லணும்ன்னு அர்த்தம் என்று அவள் காதில் கிசுகிசுத்தான்.

 

 

அவன் மூச்சுக்காற்று அவள் காதில் பட அவளுக்குள் மெல்லிய சிலிர்ப்பு ஓடியது. கைகள் சில்லிட்டது. இதயம் வேகமாக துடிக்கும் ஓசை கேட்டது.

 

 

“பதில் சொல்லிட்டேனே, அப்போ போகலாமா

 

“நீ இன்னும் எனக்கு பதில் சொல்லலை

 

 

“நீங்க என்னை நல்லா பார்த்துக்கறீங்க, நான் சந்தோசமா இருக்கேன். சொல்லிட்டேன் போதுமா என்று அவன் கண்களை நோக்கியவாறே கூற அவன் கண்கள் இது போதாது என்று சொல்வது போல் இருந்தது.

 

 

“அம்மா தேடுவாங்க, நான் போகட்டுமா

 

 

போகணுமா என்பது போல் பார்த்தான், “இப்படி பார்த்தா என்ன அர்த்தம்

 

 

போக வேணாம்ன்னு அர்த்தம் என்பதாய் அவன் கண்கள் சேதி சொல்லியது.

 

 

“ப்ளீஸ் என்று பதிலுக்கு அவள் கண்கள் கெஞ்ச அவள் கன்னத்தில் ஒரு முத்தம் பதித்து அவளை விடுவித்தான்.

 

 

“தேங்க்ஸ் மீனு என்றான் உள்ளார்ந்து

 

 

“எதுக்கு

 

 

“என்னை உனக்கு எப்படி பிடிக்கும்ன்னு உள்ள ஒரு கவலை இருந்துட்டே இருந்துச்சு. இப்போ அது கொஞ்சம் கொஞ்சமா விலகுது

 

 

“சந்தோசமா இருக்கு, தேங்க்ஸ் சொன்னது உங்கம்மாகிட்ட நான் உன்னை நல்லா பார்த்துக்கறேன்னு சொன்னதுக்கு

 

 

“சந்தோசமா வைச்சிருக்கேன்னு சொன்னதுக்கு

 

 

அவள் அவனை முறைக்க “நமக்குள்ள இதெல்லாம் தேவையான்னு தானே முறைக்கிற, உன்னோட பார்வைக்கு அர்த்தத்தை நானும் என்னோட பார்வைக்கு அர்த்தத்தை நீயும் இப்போ தான் உணர ஆரம்பிச்சு இருக்கோம்

 

 

“நமக்குள்ள ஒரு புரிதல் உருவாகிட்டு இருக்கு, அதை நினைச்சு தான் எனக்கு சந்தோசம். நான் என்ன சொல்றேன்னு உனக்கு புரியுதா

 

 

இம் என்பதாய் தலையசைத்தவள் அங்கேயே சிலை போல் நிற்க தேனு மீனாவை அழைத்துக் கொண்டே அங்கு வந்தாள். எல்லோரும் மதிய உணவு உண்டபின் சுஜய் அவர்களை அழைத்துக் கொண்டு அவன் அலுவலகத்திற்கு சென்றான்.

 

 

வீட்டில் இருந்து சில நிமிட பயணத்தில் அவன் அலுவலகம் வந்துவிட சுமார் இருபது முப்பது ஊழியர்களுடன் நேர்த்தியாக இருந்தது அவன் அலுவலகம்.

 

 

சுஜய் ஒரு முறை டெல்லியில் இருக்கும் அவன் அலுவலகத்திற்கு அழைத்து சென்றிருக்க இங்கு இருக்கும் அலுவலகம் அதை விட சிறியது என்பதை மீனா கண்டுகொண்டாள்.

 

 

அவ்வளவு பெரிய ஆபீஸ் விட்டுட்டு இங்க ஏன் வந்திருக்கார் என்ற கேள்வி அவளுக்குள் எழுந்தது.

 

 

சுஜய்யின் அலுவலகம் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர் மீனாவின் வீட்டினர். அவர்கள் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு தேனுவையும் அழைத்துக் கொண்டு ஊருக்கு சென்று விட்டனர்.

 

 

அவர்கள் ஊருக்கு செல்லும் முன் தேனுவின் அப்பா முருகேசனிடம் சுஜய் கதிர் தேனு திருமண விஷயத்தை பற்றி ஆரம்பித்தான்.

 

 

“மாமா உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும், நான் இந்த விஷயத்துல தலையிடுறேன்னு தப்பா நினைக்காதீங்க என்றான் பீடிகையுடன்.

 

 

“அதெல்லாம் ஒண்ணுமில்லை மருமகனே, என்னன்னு சொல்லுங்க. உங்களை என்னால வேற ஆளா நினைக்க முடியலை, ஏனோ எனக்கு உங்களை பார்த்ததுமே பிடிச்சு போச்சு

 

 

“என்கிட்ட என்ன தயக்கம் உங்களுக்கு, சும்மா தயங்காம சொல்லுங்க

 

 

“ஏன் மாமா தேனுவுக்கு கதிரை கட்டினா என்ன

 

 

சற்றே நெற்றி சுருக்கி யோசித்தவர், “அதை நாம எப்படி முடிவு பண்ண முடியும் மருமகனே

 

 

“கதிர் ஏற்கனவே மீனாவை கட்டிக்க சொன்னப்ப கூட பிறந்த பிறப்பு போல நினைக்கிறேன்னு சொல்லிட்டான். நாம இந்த விஷயம் பேசப் போய் திரும்பவும் ஒரு தர்மசங்கடத்தை நாம எல்லாம் சந்திக்கணுமா

 

“இல்லை மாமா இந்த முறை கதிர் அப்படி சொல்ல வாய்ப்பில்லை, தேனுவும் தான். ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிக்கும்

 

 

“தப்பா எடுத்துக்காதீங்க மாமா இது அவங்களோட நடவடிக்கையில் நான் கணிச்ச விஷயம். இதுக்காக நீங்க அவங்களை தப்பா எடுத்துக்ககூடாது

 

 

அவனின் சமயோசிதம் கண்டு மனதிற்குள் மெச்சிக் கொண்டார் முருகேசன். அவருக்கு முன்பே தெரிந்த ஒரு விஷயம் கதிருக்கு தேனுவை பிடிக்கும் என்பது, அதுமட்டுமல்லாமல் அவரின் தமக்கை காமாட்சிக்கு தம்பி மகளை கட்ட வேண்டும் என்று கொள்ளை ஆசை என்பதும் அவர் அறிவார்.

 

 

எல்லாம் அறிந்தும் சுஜய் என்ன சொல்ல வருகிறான் என்று பொறுமையாக காது கொடுத்து கேட்டவர் அவனிடம் “எதையும் நாமே முடிவு பண்ண முடியாதே மாப்பிள்ளை. பொண்ணை பெத்தவங்க நாமே போய் மாப்பிள்ளை கேட்க முடியாதே

 

 

“முறைன்னு ஒண்ணு இருக்கே, அவங்க வந்து கேட்டா நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன் என்று நேரடியாக அவர் சம்மதத்தை கூறாமல் மறைமுகமாக கூறினார்.

 

 

“ரொம்ப தேங்க்ஸ் மாமா, அதை நான் பார்த்துக்கறேன். சீக்கிரம் அவங்க கல்யாணம் நடக்க நான் ஏற்பாடு பண்ணறேன் என்றான்.

 

 

வந்தவர்கள் ஊருக்கு சென்றுவிட வீடே வெறிச்சென்று இருந்தது. காலையில் எழுவதும் லட்சுமி உதவி புரிய சுஜய் அலுவலகம் கிளம்பும் முன் அவனுக்கு டிபன் செய்வது அவன் அலுவலகம் கிளம்பி சென்றதும் மதிய உணவு, பின் அந்த வீட்டை சுற்றி சுற்றி வருவது, எதையாவது எங்கேயாவது மாற்றி வைப்பது என்று அவள் பொழுது நகர்ந்தது.

 

 

ஒரு வாரம் முழுதாக கடந்திருக்க மீனுவுக்கு வெறுப்பாக இருந்தது. என்ன வாழ்க்கை இது என்று, சுஜய் மதிய உணவை எப்போதும் அலுவலகத்திலேயே முடித்துக் கொள்வான்.

 

 

மீனு அவனுக்கு போன் செய்தாள் “ஹலோ

 

 

“என்ன ஹலோ அதான் நான் தான் பேசுறேன்னு தெரியுதுல்ல அப்புறம் என்ன யாரோ மாதிரி ஹலோன்னு சொல்றீங்க என்றாள்.

 

 

“சரி சொல்லு மீனு என்ன விஷயம்

 

 

“சாப்பிட்டீங்களா

 

 

“இன்னும் இல்லை, அதை கேட்க தான் போன் பண்ணியா

 

 

“ஆமாம்… அப்போ இப்போவே கிளம்பி வீட்டுக்கு வாங்க. இனிமே தினமும் வீட்டுக்கு வந்து சாப்பிடுங்க

 

 

“மீனு விளையாடாத நான் எப்பவும் போல ஆபீஸ்லையே சாப்பிட்டுக்கறேன்

 

 

“உங்க ஆபீஸ் நம்ம வீட்டுல இருந்து பக்கம் தானே. எந்த சாக்கும் சொல்லாதீங்க, நீங்க இனி வீட்டுக்கு வந்து தான் சாப்பிடணும். நான் இப்போ உங்களுக்காக சாப்பிடாம காத்திட்டு இருக்கேன் என்று சொல்லி அவன் பதில் கூறுமுன் போனை வைத்துவிட்டாள்.

 

 

“ரொம்ப பிடிவாதக்காரி… என்று அவளை திட்டிக் கொண்டவன் அவள் சொல்லியது போல் அலுவலகத்தில் இருந்து கிளம்பினான் வீட்டிற்கு.

 

 

அவள் போனை வைத்த பத்தாவது நிமிடத்தில் வீட்டில் இருந்தவனை பார்த்து அவளுக்கு சந்தோசமாக இருந்தது.

 

 

“நான் சொன்னதும் கேட்டுட்டுடீங்க, சரி வாங்க சாப்பிட போகலாம்

 

 

“நீ சொன்னா நான் கேட்டுட்டு தான் இருக்கேன், ஆனா நான் சொன்னா தான் யாரும் கேட்கறது இல்லை

 

 

“அதென்ன யாரும் கேட்கறது இல்லைன்னு யாரையோ சொல்ற மாதிரி சொல்றீங்க. என்னை தானே சொல்றீங்க அதை என்கிட்ட நேராவே சொல்லுங்க

 

 

“உன்னை தான் சொல்றேன்னு தெரியுதுல அப்புறம் என்ன

 

 

“உங்களை சாப்பிட வரச் சொன்னது ஒரு குத்தமா, நான் மட்டும் தனியா இந்த வீட்டுல இருக்கறது ரொம்ப போரடிக்குது. எங்க ஊர்ல இருந்தா துவரை காடு, வீரபாண்டி, என் தோழி கலா வீடுன்னு சுத்தி சுத்தி வருவேன்

 

 

“இங்க என்ன இருக்கு, இவ்வளவு நேரம் தான் லட்சுமி அக்கா, ராமு மாமான்னு ஒருத்தர் முகத்தை ஒருத்தர் மாத்தி மாத்தி பார்த்துட்டே இருக்கறது

 

 

“இல்லை நாம இங்க வந்தே கொஞ்ச நாள் தான் ஆகுது, அதுக்குள்ள உனக்கு போர் அடிக்குதா. உனக்கு போர் அடிச்சா நான் தான் கிடைச்சேனா

 

 

“உங்களை ஆசையா சாப்பிட கூப்பிட்டதுக்கு எதுக்கு இந்த அராத்து பண்ணுறீங்க

 

 

“சரி இப்படியே பேசிட்டு தான் இருக்க போறியா, இல்லை எனக்கு சாப்பாடு வைக்கிற உத்தேசம் இருக்கா

 

 

‘சொட்டை மண்டை அதுக்கு தானே இவ்வளோ நேரமா பேசிட்டு இருக்கேன் என்று மெதுவாக முணுமுணுத்ததாக நினைத்து வாய்விட்டே கூறிவிட்டு நகர்ந்தாள்.

 

 

‘இவளை… அடங்கவே மாட்டேங்குறாளே என்று நினைத்துக் கொண்டான்.

 

 

அவனுக்கு பரிமாறிவிட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள். “நீயும் சாப்பிடு, நான் சாப்பிடுறதை வேடிக்கை பார்த்தா எனக்கு வயிறு வலிக்கும்

 

 

“நீங்க முதல்ல சாப்பிடுங்க நான் அப்புறம் சாப்பிடுறேன்

 

 

“அதெல்லாம் முடியாது, நான் சொல்றதை இதுலயாச்சும் நீ கேளு என்று சொன்னவன் சாப்பிடாமல் பேசாமல் அமர்ந்து கொள்ள அவளும் ஒரு தட்டை வைத்துக் கொண்டு அவனுடனே உணவருந்த தொடங்கினாள்.

 

 

தினமும் இப்படியே சென்றுக் கொண்டிருக்க ஒரு நாள் “மாமா என்று அவன் முன் சென்று நின்றாள்.

 

 

‘என்னதிது நாம சொல்லாமலே இவ மாமான்னு கூப்பிடுறா, எதுவும் காரியம் ஆகணுமா என்று யோசித்தவன் ‘என்ன என்றான் பார்வையாலேயே.

 

 

“எனக்கு படிக்கணும், ரொம்பவும் போர் அடிக்குது. ஏதாவது புக் வேணும்

 

 

“போர் அடிக்குதா என்று யோசித்தவன் “ஒண்ணு செய் பிளஸ்டூ முடிச்சிருக்க தானே, காலேஜ் போ. மேல படி

 

 

“என்னது நான் மேல படிக்கணுமா, அதெப்படி முடியும்

 

 

“ஏன் முடியாது, உனக்கு மேல படிக்கணும்னு ஆசை இல்லையா

 

 

“நெறைய ஆசை இருக்கு மாமா எனக்கு மேல படிக்கணும்னு நெறைய ஆசை இருக்கு, எங்க வீட்டில என்னை பன்னண்டாம் கிளாஸ் வரைக்கும் படிக்க வைச்சதே பெருசு

 

 

“எங்கம்மாகிட்ட திட்டு வாங்கி எங்கப்பாகிட்ட அடி வாங்கி நான் சாப்பிடாம உண்ணாவிரதம் எல்லாம் இருந்து அதை படிச்சதே அதிகம்

 

 

“அதுக்கு மேல காலேஜ்க்கு அனுப்ப சொல்லி கேட்டிருந்தேன் அவ்வளோ தான் நானு, நீங்க என்ன ரொம்ப ஈசியா சொல்றீங்க, மேல படின்னு

 

 

“முடியும் மீனு, நீ படி உன்னால முடியும். இப்போ யாரும் உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்க

 

 

“நிஜமாவா உங்களுக்கு ஒண்ணும் சங்கடம் இல்லையே

 

 

“எனக்கு எந்த சங்கடமும் இல்லை, சந்தோசம் தான். நீ மேல படிக்கணும்னு அதான் எனக்கு ஆசை நான் அதுக்கு ஏற்பாடு பண்ணறேன் என்றவன் அலுவலகம் கிளம்பிச் சென்றுவிட்டான்.

 

 

இரண்டு நாட்கள் கடந்திருந்த வேளையில் மாலை வீட்டிற்கு வந்தவன் கையில் கல்லூரியில் படிப்பதற்கான விண்ணப்பத்துடன் வந்தான்.

 

 

“மீனு… மீனு

 

 

“என்ன மாமா

 

 

“இந்தா நீ காலேஜ்ல சேர்றதுக்கு பாரம்

 

 

அவன் மறந்திருப்பானோ சும்மா தான் சொல்லியிருப்பானோ என்று நினைத்து அவனை மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தவள் முன் பாரத்தை அவன் நீட்ட சந்தோசத்துடன் அதை வாங்கிக் கொண்டாள்.

 

 

“இதை பில் பண்ணி வை, நாளைக்கு போய் கொடுத்திட்டு காலேஜ்ல சேர்ந்திடலாம். ஜூன், ஜூலைல காலேஜ் திறந்திடுவாங்க. உன்னோட மார்க் ஷீட், டிசி எல்லாம் வேணும். நாளைக்கு போய் போட்டோ எடுத்திடலாம் என்று அவன் அடுக்கிக் கொண்டே போக அவளோ விழித்தாள்.

 

 

“என்ன மீனு என்னாச்சு, நீ படிக்கணும்னு பாரம் வாங்கிட்டு வந்தா இப்படி முழிக்கிறா

 

 

“இல்லையில்லை அதெல்லாம் ஒண்ணுமில்லை, என்னோட மார்க் ஷீட், டிசி எல்லாம் ஊர்ல இருக்கு. எங்கம்மா அப்பாக்கு நான் மேல படிக்க போறேன்னு தெரிஞ்சா என்னை கொன்னே போடுவாங்க

 

 

“கிழவி வேற சத்தம் போடும் இதெல்லாம் கொடுக்காம என்னை காலேஜ்ல சேர்க்க முடியாதா

 

 

“நீ என்ன சொல்ற மீனு இதெல்லாம் இல்லாம எப்படி காலேஜ்ல சேர்க்க முடியும்

 

 

“அப்போ அவ்வளோ தானா நான் படிக்க முடியாதா என்று அவள் முகம் வாடினாள்.

 

 

“நீ படிக்கணும் அவ்வளோ தானே, இதெல்லாம் எப்படி வரவைக்கிறதுன்னு நான் பார்த்துக்கறேன். நீ கவலைப்படாதே

 

 

“வீட்டில எதுவும் சொல்லாம இதெல்லாம் எப்படி வாங்க முடியும். அப்புறம் அவங்களுக்கு நான் படிக்கறது எப்படி தெரியாம போகும், நான் இதை யோசிக்காமலே விட்டுட்டேனே

 

 

“நீ உங்கவீட்டு ஆளுங்களுக்கு ரொம்ப பயந்த ஆளு தான், நான் இதை நம்பணுமா

 

 

“அவங்க என்னை திட்டினா எதிர்த்து பேசிடுவேன், எங்கம்மா அழுதே சாதிப்பாங்க என்றவளின் கண்கள் கலங்கியது.

 

“ஹேய் மீனு என்னது இது, நீ எதையும் யோசிக்காதே. உன்னை யாரும் எதுவும் சொல்லமாட்டாங்க நான் பார்த்துக்கறேன். உன்னை இப்போ யாரும் எதுவும் சொல்ல முடியாது

 

 

“என்னோட பொண்டாட்டியை நான் படிக்க வைக்கணும்னு ஆசைப்படுறேன், இதை யார் வந்து தடுக்க முடியும். அதனால உனக்கு எந்த கவலையும் வேண்டாம் நீ படி என்றவன் அவளை தன் மேல் சாய்த்துக் கொண்டான்.

 

 

“சரி நீ பாரம் பில் பண்ணு என்றான். “ஹ்ம்ம் என்றவள் அதை நிரப்பி அவனிடம் கொடுத்தாள்.

 

 

அதை வாங்கி ஒரு முறை சரிபார்த்தவன் “சரி நான் ஊருக்கு பேசி மத்தது எல்லாம் வாங்கிடறேன், அடுத்த வாரத்துல போய் கொடுத்திட்டு வந்திடலாம்

 

 

அவள் சந்தோசத்தில் எழுந்து வந்து அவனை பின்னே கட்டிக் கொண்டவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டு “ரொம்ப தேங்க்ஸ் மாமா என்றுவிட்டு நகர போனவளின் கையை பிடித்து இழுத்து அவன் மடி மீது அமர செய்தான்

 

 

“என்ன பண்ணறீங்க விடுங்க, நான் போகணும். லட்சுமி அக்கா வந்திட போறாங்க

 

 

“அவங்க வரலைன்னா பரவாயில்லையா

 

 

“என்ன வேணும் உங்களுக்கு

 

 

“எப்போமே நான் தானே கொடுப்பேன், இன்னைக்கு நீ கொடுத்திட்டு பேசாம போற

 

 

“என்ன சொல்றீங்க

 

 

“எப்போமே நான் தானே முத்தம் கொடுப்பேன், இன்னைக்கு நீயே கொடுத்திட்ட. அதான் நீ கொடுத்ததுக்கு வட்டியும் முதலுமா கொடுக்க…

 

 

“ஹ்ம்ம் கொடுப்பீங்க கொடுப்பீங்க என்று சொல்லி அவன் அசந்த நேரம் அவனிடம் இருந்து விடுபட்டு ஓடினாள்.

 

 

  • காற்று வீசும்

Advertisement