Advertisement

அத்தியாயம் –11

 

 

காலையில் கண் விழித்தவள் எழுந்து தலைக்கு குளித்துவிட்டு சரிகை கரையிட்ட புடவையை எடுத்து உடுத்திக் கொண்டு எங்கோ வெளியில் செல்வது போல் கிளம்பி தயாரானாள்.

 

 

லட்சுமி காலையிலேயே வந்துவிட அவரிடம் சென்று “அக்கா இங்க பக்கத்துல கோவில் எங்க இருக்கு, போயிட்டு வரணுமே. என்கூட வர்றீங்களா, இன்னைக்கு வெள்ளிகிழமை இல்லையா அதான்

 

 

“அம்மா இங்க நம்ம ஊர் மாதிரி அடிக்கொரு இடத்தில எல்லாம் கோவில் இருக்காதும்மா, ரொம்ப தூரமா போகணுமே. நீங்க தம்பிகிட்ட கேளுங்க, தம்பி உங்களை கூட்டிட்டு போவாங்க

 

 

“சரிக்கா நான் அவர்கிட்டே கேட்குறேன் என்றவள் அவனுக்கு சூடாக காபி தயாரித்து எடுத்துக் கொண்டு அவர்கள் அறைக்குள் சென்றாள். அவன் அப்போது தான் எழுந்தவன் முகம் கழுவி செய்தித்தாளை புரட்டிக் கொண்டிருந்தான். “இந்தாங்க காபி என்று அதை அவன் முன் நீட்ட பளிச்சென்று கண் முன் நின்றவளை அவன் கண்களில் விழுங்கிக் கொண்டிருந்தான்.

 

 

அவன் அவளையே பார்ப்பதை கவனிக்காதவள் “நான் கோவிலுக்கு போகணும், இன்னைக்கு வெள்ளிக்கிழமை

 

 

“சரி போயிட்டு வா

 

 

“இங்க கோவில் எங்க இருக்கு, எனக்கு தெரியாதே. நீங்க தானே என்னை கூட்டிட்டு போகணும்

 

 

“அது தெரியுதுல்ல அப்போ நீ தெளிவா சொல்லியிருக்கணும். என்னை கோவிலுக்கு கூட்டிட்டு போங்க மாமான்னு

 

 

“சரி இப்போ கேட்குறேன், என்னை கோவிலுக்கு கூட்டிட்டு போங்க மாமா

 

 

அவன் தன்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டான். “என்ன செய்யறீங்க

 

 

“இல்லை இது நீ தானா என்றவன் அவளையும் கிள்ளிவிட அவள் ஆவென்று கத்தினாள்.

 

 

“என்ன மாமா இது இப்படி கிள்ளி வைக்கிறீங்க என்று சிணுங்கினாள்

 

 

‘என்ன நடக்குது இங்க, இவ இப்படி கூப்பிட்டா நான் என்னாவேன் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

 

 

“இப்போ எதுக்கு இப்படி செஞ்சீங்க என்று முறைத்தாள்

 

 

“நான் சொன்னதுமே நீ கேட்டுட்டியா அதான் சந்தேகத்துல கிள்ளி பார்த்துட்டேன். வலிக்குதா மீனு, சாரி மீனு என்றவன் அவள் கையை பிடித்து அவன் கிள்ளிய இடத்தை தடவிக் கொடுத்தான்.

 

 

அவளோ கூச்சத்தில் நெளிய “ப…பரவாயில்லை விடுங்க மாமா, கோவிலுக்கு எப்போ போகலாம்

 

 

“ஒரு பத்து நிமிஷம் குளிச்சுட்டு வந்திடுறேன், சாப்பிட்டு கிளம்பலாம்

“ஹ்ம்ம் சரிங்க நான் போய் டிபன் செய்யறேன் என்று திரும்பியவள் ஏதோ தோன்ற அவனருகில் வந்து “இன்னைக்கு என்ன டிபன் செய்யட்டும் என்றாள்

 

 

“இதென்ன புதுசா என்னை போய் கேட்டுகிட்டு, உனக்கு என்ன தோணுதோ அதை செய்

 

 

“அது எனக்கு தெரியும், இப்போ கேட்டதுக்கு பதில் சொல்லுங்க. உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை சொல்லுங்க செஞ்சு தர்றேன்

 

 

“எதுவா இருந்தாலும் பரவாயில்லை என்றவனை அவள் இடுப்பில் இருகைகளையும் ஊன்றி முறைக்க அவள் நின்ற கோலம் அவன் மனதை அள்ளியது.

 

 

அவளையே இமைக்காது அவன் பார்த்துக் கொண்டிருக்க “இப்போ சொல்லப் போறீங்களா இல்லையா

 

 

“பொங்கல், சாம்பார் செய் மீனும்மா

 

 

“இது தான் நல்லபிள்ளைக்கு அழகு, இனி தினமும் இப்படி தான் கேட்பேன் நீங்க என்ன வேணும்னு சொல்லணும் ஓகேவா

 

 

“சரி மீனு என்று ஆமோதித்தவன் அவள் அறையை விட்டு செல்லும் வரை நின்று பார்த்துவிட்டு பின் குளியலறைக்கு சென்றான்.

 

 

‘என்னாச்சு இவளுக்கு, இன்னைக்கு இப்படி அசத்துறா. சொன்னதும் கேட்குறா, என்னையும் மிரட்டுறா

 

 

‘ஆனா இதெல்லாமும் நல்லா தான் இருக்கு என்று சிரித்துக் கொண்டவன் ஒரு வாரமாக மழிக்கப்படாமல் இருந்த முகத்தை பார்த்தான். மீனுவுக்காக மீசை வைக்க வேண்டும் என்ற ஆசை துளிர் விட்டதே அதற்கு காரணம்.

 

 

‘ஹ்ம்ம் நல்லாவே வளர்ந்திடுச்சு என்று முகத்தை கண்ணாடியில் அப்படியும் இப்படியுமாக திருப்பி பார்த்தவன் சவரம் செய்ய ஆரம்பித்தான். சவரம் செய்து முடித்ததும் அவன் முகத்தை பார்த்து அவனுக்கு ஆச்சரியம் வித்தியாசமாக இருந்தது அவன் முகம்.

 

 

முதல் முறையாக மீசை வைத்திருக்கிறான் அவன் மனைவிக்காக அதுவே ஏதோ ஒரு புது உத்வேகத்தை கொடுத்தது அவனுக்கு. குளித்து முடித்து வெளியில் வந்தவன் உடைமாற்றி கிளம்பினான்.

 

 

அவனை சாப்பிட அழைக்கவென்று மீனு அவர்கள் அறைக்குள் வந்தாள். “மாமா… மாமா… என்று அழைத்துக் கொண்டே வந்தவள் அவனை பார்த்து அப்படியே நின்றுவிட்டாள்.

 

 

‘இதென்ன புதுசா மீசை எல்லாம் வைச்சு ஆளே ஜம்முனு இருக்கார் என்று மனதிற்குள் அவனை பெருமையாக நினைத்துக் கொண்டு அவனையே விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

 

“என்ன மீனு அப்படி பார்க்குற

 

 

“இல்லை இதென்ன புதுசா மீசை எல்லாம் வைச்சுக்கிட்டு அதான் பார்த்தேன்

 

 

“இல்லை மீசை இல்லாம என்னை பார்த்தா வெள்ளாடு மாதிரி இருக்குன்னு கேள்வி பட்டேன், அதான் மீசை வைக்கலாம்ன்னு என்று அவன் சொல்ல மீனு திருதிருவென்று விழித்தாள்.

 

 

மீண்டும் அவள் வாய் துடுக்கு தலையெடுக்க “அப்போ நீங்க என்னையே சுத்தி சுத்தி வந்து நான் என்ன பேசுறேன், ஏது பேசறேன்னு உளவு பார்த்திட்டு இருந்திருக்கீங்க. அப்படி தானே என்று முறைத்தாள்

 

 

‘ஆத்தா மலையேறிட்டா என்று பெருமூச்சு விட்டவன் தொடர்ந்தான். “ஆமா இவங்களை அப்படியே சுத்தி வந்திட்டாலும், சுத்தி வந்தவங்களை எல்லாம் அடி கொடுத்து விரட்டி விடுற ஆளாச்சே நீ

 

 

“ஆமா அன்னைக்கு நீ ரொம்ப தான் மெதுவா பேசினே பாரு. நீ கத்தி பேசிட்டு நான் உன்னை உளவு பார்த்தேன்னு சொல்ற. அங்க காமாட்சி அம்மாவும் தானே இருந்தாங்க அவங்க என்ன பேசினாங்கன்னே எனக்கு தெரியாது

 

 

“ஆனா நீ பேசினது பளிச்சுன்னு காதுல வந்து விழுந்து வைச்சுது. சாப்பிட்டு சும்மா மாடியில நடந்திட்டு இருந்தேன், என்னை பத்தி பேசுற சத்தம் கேட்கவும் தான் எட்டி பார்த்தேன்

 

 

“அப்போ தான் நீ பேசினது கேட்டது. என்னை பார்த்தா உனக்கு வெள்ளாடு மாதிரியா இருக்கு

“உனக்கு மீசைன்னா அவ்வளவு ஆசையா என்று கேட்டவன் அவளை தன்னருகே இழுத்திருந்தான். அவள் கண்களை நோக்கி அவன் கேட்க அவனின் மூச்சு காற்று அவள் மேல் படும் அளவுக்கு இருந்த அந்த நெருக்கத்தில் அவளுக்கு பேச்சே வரவில்லை.

 

 

அவள் திரும்பி செல்ல முனைய “மீனு நல்லாயிருக்கா என்றவன் அவளை அருகிழுத்து அவள் காதில் மெதுவாக கேட்க அவள் இம் என்றது அவளுக்கே கேட்கவில்லை. அவளின் இம்மென்ற பதிலில் திருப்தியுற்றவன் அவளை அணைத்து அவள் தோளில் முகம் புதைத்தான்.

 

 

மீனுவுக்கு சொல்லொணாத உணர்வு ஆட்டிப்படைக்க அவன் அணைப்பில் அவளும் கலந்திருந்தாள். கதவை தட்டும் ஒலியில் சுஜய் அவளை விடுவிக்க தேனு தான் அழைத்துக் கொண்டிருந்தாள்.

 

 

“மீனாக்கா பசிக்குது மாமாவை கூட்டிட்டு வர எவ்வளவு நேரம் உனக்கு. சீக்கிரம் வாங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு கோவிலுக்கு போக வேண்டாமா என்று வெளியில் இருந்து கத்தினாள் அவள்.

 

 

மீனு அவன் முகத்தை பார்க்க முடியாமல் வேகமாக அறையை விட்டு வெளியேறினாள். சுஜய் அவர்கள் அறையில் இருந்து வந்தவன் சாப்பிட அமர்ந்தான்.

 

 

கதிரும் அந்த மேஜையில் வந்து அமர்ந்திருந்தான். “என்ன கதிர் எல்லாம் பேசியாச்சா

 

 

“பேசிட்டேண்ணே, அப்புறம் தேங்க்ஸ்ண்ணே. ரொம்பவும் முட்டாள்தனமா நடந்துகிட்டதா நினைக்கிறேன். இனி நிச்சயம் இது போல செய்ய மாட்டேன்

 

 

“பாவம் தேனுவும் ரொம்ப வருத்தப்பட்டா, தப்பு என் மேல தான். என்னோட சந்தோசம் தான் முக்கியம்ன்னு அவளை கஷ்டப்படுத்திட்டேன்

 

 

“புரியது கதிர், இவ்வளவோ நாள் பொறுந்திருந்த தானே உங்க கல்யாணம் வரைக்கும் பொறுமையா இரு. இங்க தேனுவை அவங்க வீட்டுல அனுப்ப மாட்டேன்னு சொன்னாங்க

 

 

“உனக்காக தான் இங்க அவளை வரவைச்சு இருக்கோம். அவங்க நம்பிக்கையை காப்பாத்தி நாம அவளை அவங்ககிட்ட நல்லவிதமா ஒப்படைக்கணும். நான் சொல்றது உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன் கதிர்

“இன்னும் ரெண்டு நாள்ல நாங்க சென்னை கிளம்பிடுவோம். நீ டெல்லில தான் இருக்கப் போற. அப்புறம் இன்னொரு விஷயம் நீ எவ்வளவு நாள் தான் வேலைக்கு போகலாம்ன்னு இருக்கே

 

 

“எனக்கு தெரியும் நீ சென்னையில ஏதோ ஒரு வேலைக்கு இன்டர்வியூக்கு போய் இருக்க, என்கிட்ட சொல்லைன்னாலும் அந்த விஷயம் என் காதுக்கு வந்திடுச்சு

 

 

“உனக்கு திறமை இருக்கு, என்ன பண்ணனும்ன்னு முடிவு பண்ணு. உனக்கு என்னால முடிஞ்ச உதவி நான் செய்யறேன். என்கிட்ட உனக்கு எப்பவும் தயக்கம் வேண்டாம் கதிர்

 

 

“கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு, என்கிட்ட நீ ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். யாரோ சொல்லி தெரியுது எனக்கு

 

 

“அண்ணே… இல்லை அது வந்து…

 

 

“பரவாயில்லை விடு கதிர், நீ எனக்கு அன்னியமா இருக்கும் போதே என்னை சொந்தமா நினைச்சு எல்லாம் சொன்னே

 

 

“இப்போ சொந்தமானது நான் உனக்கு அன்னியமாகி போயிட்டேன்ல என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னான்.

 

 

“என்ன கதிரேசா என்ன நடக்குது இங்க அவர் சொல்றது எல்லாம் உண்மையா. அவர்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ல, எதுக்கு இப்படி செஞ்ச என்று அங்கு வந்த மீனா பொரிந்தாள்.

 

 

தேனு அமைதியாய் இருக்க அவளுக்கு அந்த விஷயம் தெரியும் என்பது புரிந்தது. “என்ன தேனு அமைதியா இருக்கே. மாமா கம்பெனில உன்னோட கதிர் மாமா வேலை பார்க்கறது உனக்கு பிடிக்கலையா

 

 

“அய்யோ மாமா அப்படி எல்லாம் இல்லை. எனக்கே கதிர் மாமா நேத்து தான் சொன்னாங்க, நானும் அவங்ககிட்ட வேணாம்ன்னு தான் சொன்னேன். ஆனா அவங்க கேட்கலை

 

 

“அப்புறம் அவங்க சொன்னதும் ஒரு வகையில எனக்கு சரின்னு பட்டிச்சி அதான் மாமா நானும் எதுவும் சொல்லலை

 

“என்ன சரின்னு பட்டுச்சு உனக்கு, இல்லை என்ன சரின்னு பட்டுச்சு உனக்கு சொல்லு தேனு என்று அதட்டினாள் மீனா.

 

 

“அக்கா சொந்தத்துக்குள்ள ஒரே இடத்துல இருக்கறது சரியா வராதுக்கா. அது மனசங்கடத்தை உருவாக்கும். மத்தவங்க எல்லாம் ஒருவிதமா பேசுவாங்க, ப்ளீஸ் புரிஞ்சுக்கோக்கா

 

 

“எங்க கல்யாணம் முடிஞ்சதும் கதிர் இப்படி தான் செய்வான்னு ஒரளவு நான் எதிர்பார்த்தேன், என்னோட சங்கடம் என்னன்னா கதிர் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லலைன்னு தான்

 

 

“அண்ணே மன்னிச்சுடுங்கண்ணே, உங்ககிட்ட பக்குவமா சொல்லிக்கலாம்ன்னு நினைச்சுட்டு இருந்தேன். அதுக்குள்ளே உங்களுக்கு விஷயம் தெரிஞ்சு போச்சு

 

 

“உங்ககிட்ட சொல்லாம செய்யணும்ன்னு எல்லாம் நான் நினைக்கவே இல்லைண்ணே

 

 

“சரி விடு கதிர். முடிஞ்சது முடிஞ்சு போச்சு. நீ வேற வேலைக்கு போறதை பத்தி எனக்கொன்னுமில்லை, ஆனா அதைவிட நீ சொந்தமா எதுவும் செய்யலாமே என்றவன் அதற்கான வழிகளை அவனிடம் பேசிக் கொண்டிருக்க கதிருக்கும் சற்று முகம் தெளிவடைந்தது.

 

 

“உனக்கு விருப்பம் இருந்தா மட்டும் செய் கதிர். நீ இப்படி செய்யறது நம்ம கம்பெனிக்கும் உதவும். சென்னையில இப்போ தான் புதுசா நான் போய் உட்கார போறேன்

 

 

“உன் மூலமா நான் ஆர்டர் எடுத்துக்குவேன், உனக்கும் மத்த கம்பெனி ஆர்டர் எல்லாம் கிடைக்க என்னாலான உதவி நான் செய்யறேன். டைம் எடுத்துக்கோ யோசிச்சு முடிவு பண்ணு

 

 

“சரிண்ணே என்று அதை ஆமோதித்தான் கதிர்.

 

 

“நான் கேட்டதுக்கு யாராச்சும் பதில் சொன்னீங்களா. போங்க உங்க எல்லாருக்கும் உங்க மாமா தான் பெரிசா போய்ட்டார், இங்க ஒருத்தி கேட்டாளேன்னு பதில் சொல்ல யாருக்கும் தோணலை எப்படியோ போங்க என்று மீனு கோபித்துக் கொண்டாள்.

 

 

“மீனு பசிக்குது என்று சுஜய் சொல்ல அவள் என்ன கேட்டாள் என்பதை மறந்து வேகமாக அவனுக்கு டிபன் எடுத்து வைக்கச் சென்றாள்.

 

 

“நீ என்னடி பேசாம நின்னுட்டு இருக்க, கதிரேசனுக்கு சாப்பாடு எடுத்து வை. ரொம்ப தான் சீன் போடாதே. என் புருஷனை நான் கவனிக்கறேன். உன் மாமனை நீ கவனி என்று தேனுவிடம் கூறினாள்.

 

 

ஆண்கள் இருவரும் சாப்பிட்டு எழவும் தேனுவும் மீனாவும் சாப்பிட அமர்ந்தனர். விரைவாக இருவரும் சாப்பிட்டு கோவிலுக்கு போக தயாராயினர். சுஜய் அவர்கள் அறையில் ஏதோ வேலையாய் இருக்க மீனா அவனை அழைத்தாள்.

 

 

“கோவிலுக்கு கிளம்பலாமா

 

 

“ஒரு பத்து நிமிஷம் மீனு ஒரு மெயில் அனுப்பிட்டு வந்திடறேன்

 

 

அப்போது தான் ஞாபகம் வந்தவளாக “ஆமா பொங்கல் சாப்பிட்டீங்களே எப்படியிருக்குன்னு ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லை

 

 

“எப்பவும் போல தான் இருந்தது

 

 

“இன்னைக்கு நான் செஞ்சேன் உங்களுக்காக. நல்லாயிருக்கா இல்லையான்னு ஒரு வார்த்தை சொல்ல வேண்டாமா. எப்போமே இப்படி தான் செய்வீங்களா. எதுவுமே சொல்ல மாட்டீங்களா

 

 

“இல்லையே எப்போதுமே சொன்னதில்லையே

 

 

“இனிமே சொல்லணும், அப்புறம் எனக்கு எப்படி தெரியும். இது உங்களுக்கு பிடிச்சிருக்கா பிடிக்கலையான்னு. இனி உங்களை கேட்டு தான் சமைப்பேன், சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்றீங்க

 

 

“இல்லைன்னா எனக்கு கேட்ட கோபம் வரும், அப்புறம் நான் காளியாத்தா அவதாரம் எடுத்திருவேன் என்று சொல்லி முறைத்தாள்.

 

 

“நீ புதுசா வேற அவதாரம் எடுக்கணுமா, இன்னைக்கு நீ பார்க்கவே அப்படி தான் இருக்கே. முகத்துல இவ்வளவு மஞ்சள் போடணுமா. சரி போகலாமா என்றான்.

 

“என்ன இந்த மஞ்சள் மகிமை எல்லாம் மறந்திடுச்சா உங்களுக்கு என்று மீனு இழுக்க “அம்மா தாயே நீ என்னை ஆளை விடு, நாம கிளம்புவோம் என்று தலைக்கு மேல் கை வைத்து ஒரு கும்பிடு போட்டான் அவளுக்கு.

 

 

“அந்த பயம் இருக்கட்டும் என்று சொல்லி அவனுடன் கிளம்பினாள்.

 

 

காரில் ஏறி அமர்ந்ததும் மீனுவுக்கு அன்றைய நாளின் ஞாபகம் வந்தது.

 

____________________

 

 

சுஜய் ஊருக்கு திருவிழாவிற்கு வந்திருந்த சமயம் வீட்டில் யாரும் இல்லாததால் காமாட்சி மீனுவிடம் சொல்லி துணியை மொட்டை மாடியில் உலர்த்த சொல்ல மீனு படியேறி மாடிக்கு சென்றாள்.

 

 

அங்கு சுஜய் அறையில் உட்கார்ந்து மடிகணினியை நோண்டிக் கொண்டிருக்க மீனு வெளியில் துணியை காயப்போட்டுக் கொண்டிருந்தாள்.

 

 

அன்று கோவிலுக்கு செல்ல வேண்டும் அக்கினி சட்டி எடுக்க வேண்டும் என்பதால் முகத்தில் மஞ்சளை அதிகமாகவே பூசியிருந்தாள். அவளை பார்த்த சுஜய் “என்ன போட்டு இருக்கீங்க என்று அவள் முகத்தை காட்டி கேட்க “அதுவா கோவிலுக்கு போகணும்ல அதான்

 

 

“ஓ கோவிலுக்கு போகணும்ன்னா இதை போடணுமா

 

 

அவன் எதுவும் தெரியாமல் கேட்க அது தான் சாக்கென்று அவளோ “ஆமாம் எல்லாரும் இதை போட்டுக்கணும் என்று சிரிக்காமல் சொன்னாள்.

 

 

“நானுமா என்றான்

 

 

“நீங்களும் தான் இந்த ஊர் பழக்க வழக்கம் எல்லாம் உங்களுக்கு தெரியாதுல, இங்க எல்லாமே இப்படி தான்

 

 

கதிரும் ஓரிரு முறை கோவிலுக்காக என்று சொல்லி ஒன்றிரண்டு வழக்கத்தை சொல்லியிருக்க சுஜய்யும் அவள் சொன்னதை அப்படியே நம்பினான்.

 

 

இங்கு இது தான் வழமை போலும் என்று நினைத்தவன் “அப்போ இதை எப்படி போடணும்ன்னு எனக்கும் சொல்லுங்க

“இருங்க வந்திடுறேன் என்றவள் வேகமாக படியிறங்கி சென்றாள், சென்ற வேகத்தில் திரும்பி வந்தவள் கைகளில் மஞ்சளுடன் வந்தாள்.

 

 

“இந்தாங்க இதை முகத்தில போட்டிட்டு அப்புறம் முகம் கழுவிடுங்க, வேற எதுவும் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டு மின்னலென ஓடி விட்டாள்.

 

 

சுஜய்யும் அவள் சொன்னது போல் செய்துவிட்டு அந்த அறையிலேயே அமர்ந்திருந்தான். கிழே சென்றவள் பின்கட்டில் நின்று விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்க அங்கு வந்த தேனு “என்னக்கா நீ மட்டும் தனியா சிரிச்சுட்டு இருக்க

 

 

“அது வந்து என்று ஆரம்பித்தவள் மீண்டும் பொங்கி சிரிக்க “அக்கா சொல்லிட்டு சிரி, கூட சேர்ந்து நானும் சிரிப்பேன்ல என்று மற்றவள் கூற மீனா சுஜய்யுடன் பேசியதை கூறினாள்.

 

 

“அய்யோ அக்கா பாவம் அவரு, கதிர் மாமாவோட முதலாளியாம். நீ என்ன இப்படி செஞ்சுட்டு வந்திருக்க

 

 

“அடிபோடி நீ வேற அந்த சொட்டைக்கு இதெல்லாம் தேவை தான், ஆனாலும் ரொம்ப அப்பாவியா நானும் போடணுமான்னு கேட்டப்போ பாவமா இருந்துச்சு. சிரிப்பை வேற எனக்கு அடக்கவே முடியலை. என்ன பண்ணி வைச்சிருக்காரோ தெரியலை என்று மீண்டும் சிரித்தாள்.

 

 

தேனுவும் உடன் சிரிக்க அந்த பக்கமாக வந்த கதிர் இருவரும் சிரிப்பதை பார்த்து என்ன விஷயம் என்று கேட்க ஒன்றுமில்லை என்று கூறி அவனை அங்கிருந்து அனுப்பினர் இருவரும்.

 

 

‘இந்த ரெண்டும் ஒண்ணா இருக்கே என்ன வேலை பண்ணியிருக்குன்னு தெரியலையே என்று யோசித்துக் கொண்டே படியேறி மாடிக்கு செல்ல அவர்கள் செய்த வேலை என்னவென்று அவனுக்கு அப்போது தான் புரிந்தது.

 

 

“அய்யோ என்னண்ணா இது, இப்படி இருக்கீங்க

 

 

“என்ன கதிர் எப்படி இருக்கேன்னு சொல்லற. மீனா தான் சொன்னாங்க கோவிலுக்கு இப்படி தான் போகணுமாமே

 

“அவ சும்மா விளையாடி இருக்கா அண்ணா, இதெல்லாம் பொம்பளைங்க தான் பூசுவாங்க. அவ வேணுமின்னே இப்படி செஞ்சு இருக்காண்ணே, நீங்களும் அவ சொன்னான்னு இப்படி பூசி வைச்சு இருக்கீங்களே

 

 

“இல்லை கதிர் உங்க கோவில்ல இதான் பழக்கம்ன்னு நினைச்சேன், எனக்கு இதெல்லாம் தெரியாது கதிர். இப்போ என்ன செய்யறது என்று விழித்தான் அவன்.

 

 

“முகத்தை சோப்பு போட்டு கழுவுங்கண்ணே

 

 

சுஜய் என்ன தான் சோப்பு போட்டு கழுவிய போதும் அவன் வெள்ளை முகத்தில் அது லேசாக தெரியவே செய்தது. “வேற வழி இல்லைண்ணே இன்னைக்கு நீங்க எங்கயும் போக வேண்டாம்

 

 

“இங்க இருந்தே நாம திருவிழாவை பார்த்துக்கலாம் என்றான் கதிர்.

 

 

சுஜய்க்கு மீனாவின் மேல் கோபம் வந்தாலும் சிரிப்பாகவும் வந்தது, அவள் சொன்னால் என்று நானும் இப்படி செய்திருக்கிறேனே என்று எண்ணி அவனை அவனே குட்டிக் கொண்டான்.

 

 

அவள் அக்கினிசட்டி எடுக்க மேலிருந்து அவளை பார்க்க தற்செயலாக அவள் அண்ணாந்து பார்க்க சுஜய்யை பார்த்ததும் அவளுக்கு அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்தது.

 

____________________

 

 

அதை நினைத்து பார்த்து அவள் மீண்டும் சிரிக்க அருகிலிருந்தவளை திரும்பி பார்த்து முறைத்தான் சுஜய். “என்ன அன்னைக்கு நடந்தது நினைச்சு பார்த்து சிரிக்கிறியா

 

 

ஆம் என்பது போல் அவள் தலையை ஆட்ட செல்லமாக அவள் தலையில் ஒரு குட்டு வைத்தான்.

 

 

“மாமா என்னது இது இங்க நாங்களும் இருக்கோம் என்று தேனு கூற “ஏய் பேசாம இருக்க மாட்ட என்று கதிர் அவளை கிள்ளினான்.

 

 

“கதிர் மாமா எதுக்கு இப்போ கிள்ளுறீங்க

 

 

“உன் திருவாயை கொஞ்சம் மூடிட்டு இருன்னு தான்

 

 

“விடு கதிர், அக்கா தங்கை ரெண்டு பேரு வாயையும் அடக்கறது கொஞ்சம் கஷ்டம் தான் எல்லாம் நம்மோட தலைவிதி. நாம பட்டு தான் ஆகணும் என்றான் சலித்தவன் போல்.

 

 

சுஜய் அவர்களை அழைத்துக்கொண்டு இஸ்கான் கோவிலுக்கு சென்றிருக்க மனம் நிறைய கண்ணனை பிரார்த்தனை செய்தனர் அனைவரும், பின் அவர்களை வீட்டிற்கு கொண்டு வந்து விட்டு கதிரும் சுஜய் அலுவலகம் சென்றனர்.

 

 

இன்னும் இரு தினங்களில் சென்னை செல்லவிருப்பதால் சுஜய்க்கு வேலை அதிகமாக இருந்தது. ஊருக்கு கிளம்புவதற்கு முன்தினம் அவன் மாமா வீட்டினர் அழைப்பு விடுத்திருக்க சுஜய் மீனாவுடன் அங்கு விருந்துக்கு சென்றான்.

 

 

தேனுவுக்கு அவர்களை அவ்வளவாக பழக்கம் இல்லாததால் வரவில்லை என்று கூறிவிட கதிர் அவளை அழைத்துக் கொண்டு V3S மாலுக்கு சென்றுவிட்டான்.

 

 

அவர்கள் வீட்டிற்கு செல்ல மீனாவுக்கு தான் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்றே புரியவில்லை. அவர்கள் தமிழில் ஓரிரு வார்த்தை பேசினாலும் அது தமிழாக அவளுக்கு தெரியாத காரணத்தால் அங்கு ஒரு பார்வையாளர் போல் அமர்ந்திருந்தாள்.

 

 

அவன் மாமா பெண்கள் மூவரும் அவளை சுற்றி உட்கார்ந்துக் கொண்டு ஏதேதோ கேட்க சுஜய் தான் அவர்களுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தான். ‘என்னன்னு சொல்லாம இவரே பதில் சொல்றாரே

 

 

‘என்னை பத்தி எதுவும் தப்பு தப்பா சொல்லுவாரோ, பார்த்தா அப்படி தெரியலையே. என்னத்த சொல்லி வைக்கிறாரோ என்று மனதிற்குள் நினைத்தவள் வெளியே சிரிப்பது போல் காட்டிக் கொண்டாள்.

 

 

மூன்று பெண்களில் ஒருத்தி சுஜய்யை இடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்க மீனாவின் பார்வையோ அவளை முறைத்துக் கொண்டே இருந்தது. ‘பொம்பளையா இவ எப்படி இடிச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கா

 

 

‘இந்த சொட்டைமண்டையும் பேசாம இருக்கானே என்று அவனையும் ஒரு முறை முறைத்தாள். அவன் அவளை கண்டு கொண்டால் தானே அவள் முறைப்பை பொருட்ப்படுத்துவதற்கு.

 

 

சாப்பிடும் போதும் அவன் மாமா பெண்கள் அவனின் இருப்பக்கமும் அமர்ந்து கொள்ள மீனா தான் தவித்து தனித்து போனாள். ‘இன்னைக்கு வீட்டுக்கு போய் பேசிக்கிறேன் இவரை, பேசாம நானும் தேனுவோட இருந்திருக்கலாம் போல

 

 

‘இங்க வந்து இப்படி வேடிக்கை பார்க்கணும்ன்னு எனக்கு விதி போல என்று குமைந்துக் கொண்டிருந்தாள். நல்லவேளையாக அவளுடன் பேச அவன் இரு மாமன்மார்களும் வந்து சேர்ந்தார்கள்.

 

 

அவர்கள் பேசும் தமிழ் அவளுக்கு விளங்கவே செய்தது. இருவருமே சுஜய்யை உயர்வாகவே பேச அவள் ஆவலுடன் அதை கேட்டுக் கொண்டாள். அவள் மாமியார், மாமனார் என்று அவர்கள் எல்லோரையும் பற்றியும் தானாகவே கேட்டு அறிந்து கொண்டாள்.

 

 

அவள் டெல்லி வந்த புதிதில் சுஜய்யின் அப்பா அம்மா புகைப்படத்தை பார்க்க வேண்டும் என்று கேட்க ஊருக்கு செல்வதால் எல்லாவற்றையும் எடுத்து அடுக்கி வைத்துவிட்டதாக கூறிவிட அவளும் சென்னை சென்ற பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்.

 

 

ஏனோ அவளுக்கு அவர்களின் ஞாபகம் வர சுஜய்யின் மாமா பிரஷாந்த்திடம் “எனக்கு அத்தை போட்டோ பார்க்கணும் போல இருக்கு, பார்க்கலாமா. உங்கக்கிட்ட மாமா அத்தை போட்டோ கண்டிப்பா இருக்கும் தானே

 

 

“அங்க வீட்டில இருக்கறது எல்லாம் ஊருக்கு போறதுக்காக பேக் பண்ணி வைச்சுட்டதா அவர் சொன்னார்

 

 

உயிருடன் இல்லாதவர்களை இவ்வளவு ஆர்வமாக பார்க்க வேண்டும் என்று கேட்பவளை ஆச்சரியமாக பார்த்தார் அவர்.

 

 

உள்ளே சென்றவர் சில புகைப்படத்துடன் வெளியே வர சுஜய் “என்ன மாமா என்றவாறே அருகில் வந்தான். “ஒண்ணும்மில்லை சுஜய் மீனாக்கு தீபிகாவையும் உங்கப்பாவையும் பார்க்கணுமாம். அதான் போட்டோஸ் எடுத்துட்டு வந்தேன்

 

 

“மாமா… என்று அவன் இழுக்க “நான் காட்டிட்டு வந்திடுறேன் என்று அவர் நகர்ந்தார்.

 

 

சுஜய்யும் அவருடன் பின்னால் வந்தவன் மீனாவின் அருகில் அமர்ந்து கொண்டான். “இந்தாம்மா இது தான் என்னோட தங்கை தீபிகா, உன்னோட மாமியார் என்று அவரின் இளவயது புகைப்படத்தை காட்டினார்.

 

 

“அத்தை ரொம்ப அழகா இருக்காங்க, இவர் அத்தை மாதிரி தான்னு நினைக்கிறேன் என்றாள் அவள்.

 

 

“ஆமாம்மா சுஜய் நெறைய விஷயத்துல அவங்கம்மா மாதிரியே தான்

 

 

“மாமாவோட படம்

 

 

“இதோ என்று அவர் நீட்டிய படத்தில் பாண்டியன் இருந்தார்.

 

 

“இது இப்போ எடுத்த படமா, அத்தையும் மாமாவும் சேர்ந்து எடுத்த படம் இல்லையா

 

 

“இல்லைம்மா சேர்ந்து எடுத்த மாதிரி படம் எதுவும் இங்க இல்லை. இது நீ சொன்ன மாதிரி சுஜய் அப்பா இறக்கறதுக்கு ஒரு வருஷம் முன்னாடி எடுத்த படம் தான்

 

 

“மாமா எங்க ஊர் ஆளு மாதிரி இருக்காங்க என்றவள் திரும்பி பார்க்க சுஜய் அவளருகில் அமர்ந்திருந்தான்.

 

 

“ஏங்க அத்தை போட்டோவை என்கிட்ட காட்டாம விட்டீங்கள்ள பார்த்தீங்களா, நான் இப்போ பார்த்திட்டேன். அவங்க எவ்வளோ அழகா இருக்காங்க, அதான் மாமா அத்தையை விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க போல என்றவளிடம் சுஜய் எதுவும் கூறாமல் அமைதியாகவே இருந்தான்.

 

 

அன்று இரவு விருந்து முடிந்து சுஜய்யும் மீனாவும் அங்கிருந்து கிளம்பினர். டெல்லியில் இருக்கும் அவர்கள் வீட்டை அவ்வப்போது வந்து கவனித்து செல்லுமாறு அவன் மாமன் வீட்டினரிடம் சொல்லிவிட்டே கிளம்பினான்.

 

 

மறுநாள் ஊருக்கு கிளம்ப வேண்டி இருப்பதால் அவர்கள் பாக்கிங் எல்லாம் முடித்து சென்னை கிளம்ப ஆயத்தமாயினர்.

 

கதிர் அவர்களை வழியனுப்ப விமான நிலையம் வந்திருந்தான். ராமு அண்ணாவும் லட்சுமியையும் கூட அவர்களுடனே சென்னை அழைத்து சென்றனர்.

 

 

 

 

  • காற்று வீசும்

 

Advertisement