Advertisement

அத்தியாயம் –10

 

 

அவன் அப்படி சொன்னதும் அப்போ பொய் தான் சொன்னாரா என்று மனதிற்குள் ஒரு இதம் பரவ ஆரம்பித்தது அவளுக்கு.ஆனாலும் இவருக்கு ரொம்ப தான் இது என்று மனதிற்குள் அவனை திட்டிக் கொண்டாள்.

 

 

“உன்னை குத்திக்காட்ட நான் இதை சொல்லலை. அன்னைக்கு நீ அப்படி சொன்னதும் எனக்கு எவ்வளவு வருத்தமா இருந்துச்சு தெரியுமா. அதை உனக்கு புரிய வைக்க நினைச்சேன்

 

 

“நமக்கு தெரியாதவங்களுக்கு நம்மை பிடிச்சிருக்கா பிடிக்கலையான்னு நமக்கு கவலை எதுவும் இருக்காது. நமக்கு சொந்தமானவங்களுக்கு நம்மை பிடிக்கலைன்னு சொன்னா எவ்வளவு கஷ்டமா இருக்கும் தெரியுமா

 

 

“இதுவரைக்கும் யாருக்கும் பிடிக்காத மாதிரி நான் நடந்துகிட்டது இல்லை. ஆனா உனக்கு என்னை பிடிக்கலைன்னு சொன்னதும் ரொம்பவே சங்கடமா இருந்துச்சு

 

 

“நம்ம கல்யாணம் எந்த சூழ்நிலைல நடந்துச்சுன்னு உனக்கே தெரியும். அந்த நேரத்துல எல்லாரும் உன்னை தப்பா பேசினது எனக்கு கஷ்டமா இருந்துச்சு. நாமே ஏன் இந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு தோணிச்சு

 

 

“அதான் மனசுல பட்டதை நான் எல்லார் முன்னாடியும் சொன்னேன். உன்கிட்ட சம்மதம் கேட்கலைன்னு சொன்னியே. நாம என்ன காதலிச்சா கல்யாணம் பண்ணோம். உன்கிட்ட நான் சம்மதம் கேட்டிருக்க

 

 

“உங்க வீட்டு பெரியவங்ககிட்ட என்னோட விருப்பத்தை சொன்னேன். உன்கிட்ட சம்மதம் கேட்டிருக்க வேண்டியது அவங்க தான். உனக்கு பிடிக்கலைன்னா நீ அதை அவங்ககிட்ட சொல்லி இருக்கலாமே

 

 

“அவங்ககிட்ட உன்னால பேச முடியாதுன்னு மட்டும் சொல்லாதே, அத்தனை பேர் நிறைஞ்ச சபையில கதிரை கட்டிக்க முடியாதுன்னு உன்னால சொல்ல முடிஞ்சுது அது போல நீ இதையும் கண்டிப்பா சொல்லி இருக்கலாம்

 

 

“உன்னை யாரும் கையை காலை கட்டி ஒண்ணும் எனக்கு கல்யாணம் பண்ணி வைச்சு இருக்க மாட்டாங்க. உன்கிட்ட இன்னொன்னு கேட்கணும் இதுக்கு முன்னாடி உனக்கு பார்த்த சம்மந்தம் எல்லாம் உன் சம்மதம் கேட்டா நடந்துச்சு. எல்லாமே உங்க வீட்டு பெரியவங்க முடிவு பண்ணி நடந்தது தானே

 

 

“நமக்கு பிடிச்சுதோ பிடிக்கலையோ நாம கணவன் மனைவி ஆகியாச்சு. நாம ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து தான் இந்த பயணத்தை தொடர போறோம். நாம இனியாவது ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு வாழ ஆரம்ப்பிபோம்

 

 

“கொஞ்ச நாட்கள் தான் வாழ்ந்தாலும் எங்கம்மாவும் அப்பாவும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு சந்தோஷமான ஒரு வாழ்க்கை வாழ்ந்தாங்க. அது போல நாமும் ஒரு நல்ல புரிதலோட நம்மோட வாழ்க்கையை தொடங்கணும்ன்னு நினைக்கிறேன்

 

 

“ஆனா நீ புரிஞ்சுக்காம பிடிச்சிருக்கா, பிடிக்கலையான்னு கேள்வி கேட்டுட்டு இருக்க. இனியாவது இப்படி நீ பேசாம இரு

 

 

“நாம பேசுறது மத்தவங்களை சந்தோசப்படுத்தலைன்னா பரவாயில்லை, அது காயப்படுத்தற மாதிரி இருக்கக் கூடாது

 

 

“இப்போ எதுக்கு எனக்கு பாடம் எடுக்கறீங்க

 

 

“நீ புரிஞ்சுக்கணும்ன்னு தான் இனி இது மாதிரி நீ எந்த கேள்வியும் கேட்கக்கூடாதுன்னு தான் இதெல்லாம் சொல்லிட்டு இருக்கேன். இனியும் ஒரு தரம் நீ இப்படி பிடிச்சிருக்கா பிடிக்கலையான்னு கேட்டு என்னை கோபப்படுத்தாதே

 

 

‘இப்போ மட்டும் எப்படி இருக்கறதா நினைப்பு காளியாத்தா வந்து இறங்குன மாதிரி தான் தங்கு தங்குன்னு குதிக்கிறாரு என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

 

 

“என்ன எப்போவும் அதிகமா பேசுவ, இப்போ ரொம்ப அமைதியா இருக்க. இப்படியே இரு, என்னை புரிஞ்சுக்க முயற்சி பண்ணு. இல்லைன்னா நமக்கு தான் கஷ்டம்

 

 

“அப்போ அன்னைக்கு பழி வாங்க தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொன்னது… என்று இழுத்தாள்.

 

 

“அது உண்மை தான், எப்படி எப்போ பழி வாங்கணும்ன்னு எனக்கு தெரியும் என்றான் மீண்டும் குழப்பும் விதமாக

 

 

“மறுபடியும் குழப்புறீங்க

 

 

“நீ என்னைக்கு என்னை புரிஞ்சுக்கறியோ அன்னைக்கு இதுக்கு உனக்கு அர்த்தம் புரியும். எனக்கு நெறைய வேலை இருக்கு, நான் ஆபீஸ் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று கிளம்பிச் சென்றுவிட்டான்.

 

 

‘போங்க, ரொம்ப தான் முறுக்கிட்டு போறார். எப்படியோ அவர் மனசுல இருக்கறதை சொல்லிட்டு போய்ட்டார். ஆனா கடைசில குழப்பிட்டு போயிட்டாரே என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

 

 

‘போகட்டும் எப்படியும் வீட்டுக்கு தானே வரணும், அப்போ பார்த்துக்கலாம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

 

 

அவன் கிளம்பி சென்றதும் ஏனோ பொழுதை நெட்டி தள்ள வேண்டியதாய் இருந்தது, தேனுவை தேடிச் சென்றால் அவளோ ஏதோ முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

 

 

“தேனு… தேனு… அடியே தேனு என்றதும் “என்னக்கா என்றாள்

 

“எவ்வளோ நேரமா கூப்பிட்டு இருக்கேன், அப்படி என்ன யோசனை உனக்கு

 

 

“ஒண்ணுமில்லை என்னை கொஞ்சம் தனியா விடு

 

 

“என்னடி உனக்கு என்ன பிரச்சனை எதுக்கு இப்படி உட்கார்ந்திருக்க

 

 

“அதான் பிரச்சனைன்னு தெரியுதுல்ல, பேசாம போக்கா

 

 

“தேனு எதுக்கு இப்படி பேசுற, உனக்கு என்ன பிரச்சனை என்னனு சொல்லுடி

 

 

“மீனாக்கா அதெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது, இது எங்களுக்குள்ள விடு. நீ போய் மாமாவை கவனி, என்னை கொஞ்சம் தனியா விடு என்றவள் மீண்டும் அமைதியாக உட்கார்ந்தாள்.

 

 

‘இவ என்ன இப்படி உட்கார்ந்திருக்கா, கதிரு கூட சண்டை போட்டு இருப்பா போல. இந்த ஆம்பளைங்களே இப்படி தான் போல பொம்பளைங்களை புலம்பவிட்டுட்டு இருக்காங்க என்று சுஜய்யையும் சேர்த்து திட்டி தீர்த்தாள்.

 

 

இவர் போன் பண்ண சொன்னாரே என்ன நம்பர்ல பதிஞ்சு வைச்சு இருப்பார் என்று நினைத்தவள் போனை எடுத்து நோண்ட ஆரம்பித்தாள். இதென்ன daringனு (நம்ம மீனுவோட பன்னண்டாம் கிளாஸ் அறிவு அப்படி, டார்லிங் அவ கண்ணுக்கு அப்படி தெரியுது) போட்டிருக்கு.

 

 

அப்படின்னா பயப்படுறது தானே அர்த்தம் இல்லை தைரியமானன்னு அர்த்தமா என்று குழம்பியவள், இதுவா தான் இருக்கும்.

 

 

மத்த எல்லாமே அம்மா, அப்பா, அப்புறம் பேரு போட்டிருக்கு. இது தான் வேற மாதிரி இருக்கு இந்த நம்பர் தான் இருக்கும் நினைக்கிறேன் என்று நினைத்தவள் அந்த எண்ணுக்கு அழுத்தினாள்.

 

 

முழு அழைப்பும் அடித்து ஓய்ந்தது, போன் பண்ண சொல்லிட்டு எடுக்காம இருக்கார் என்று அதற்கும் அவனை திட்டினாள், மீண்டும் மீண்டும் அழைக்க அழைப்பு எடுக்கப்படாமலே அடித்து ஓய்ந்தது.

 

 

மதிய உணவுக்கு பின்னும் அவளுக்கு மிகவும் போரடிக்க ஒன்றும் புரியாமல் அங்குமிங்கும் சுற்றி வந்தவள் அவர்கள் அறைக்குள் வந்தாள்.

 

 

தேனு வேறு காலையில் இருந்து முகத்தை தூக்கி வைத்தே உட்கார்ந்திருக்க அவளுடனும் பேச முடியவில்லை. அவர்கள் அறைக்கு வந்த பின்னே அவள் அந்த மாறுதலை கவனித்தாள். கட்டில் சுவர் ஓரமாக போடப்பட்டிருந்தது.

 

 

‘இது எப்போ மாறிச்சு, நான் கவனிக்கவே இல்லையே என்று நினைத்து ஆச்சரியமும் மகிழ்வும் அடைந்தாள். எனக்காக தான் மாத்தி இருக்காரா என்று யோசித்தவள் காலையில் அவன் பேசியதை மனதிற்குள் ஓட்டிப் பார்த்தாள்.

 

 

அவர் சொன்ன மாதிரி நாமும் இனி அவரை புரிஞ்சுக்க முயற்சி பண்ணனும், தேவையில்லாம அவர்கிட்ட வம்பு வளர்க்க கூடாது என்று நினைத்துக் கொண்டாள்.

 

 

மாலை ஆறு மணிக்கே அவன் வந்துவிடுவான் என்று நினைத்தவள் முகம் கழுவி தன்னை அலங்கரித்துக் கொண்டாள், எதற்காக இந்த அலங்காரம் என்று அவளிடம் கேட்டால் அதற்கு பதில் அவளுக்கே தெரியாது.

 

 

ஏனோ அவன் முன் பளிச்சென்று இருக்க வேண்டும் என்று மட்டும் தோன்றியது அவளுக்கு. ஆறு மணியில் இருந்து அவள் காத்திருக்க மணி கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து ஏழு, எட்டு, எட்டரை என்று நகர அவளுக்குள் திகிலாக ஆரம்பித்தது.

 

 

காலையில் சண்டை போட்டதற்காக கோபித்துக் கொண்டாரா என்று சாதாரணமாக தோன்ற ஆரம்பித்த பயம் பெரும் பயப்பந்தாக மாறி அவள் வயிற்றுக்கும் தொண்டைக்குமாக உருள ஆரம்பித்தது.

 

 

அவனுக்கு போன் செய்து பார்க்க அவன் எடுக்கவேயில்லை. தேனுவின் அறைக்குள் வந்தாள், “தேனு மாமா இன்னும் வீட்டுக்கு வரலை, அவர் நான் போன் போட்டா எடுக்க மாட்டேங்குறார், நீ கொஞ்சம் போட்டு பாரேன்

 

 

அவளும் அவனுக்கு போன் செய்து பார்க்க அப்போதும் அழைப்பு எடுக்கப்படாமலே அடித்து ஓய்ந்தது. “அக்கா மாமா எடுக்கவேயில்லை ஏதோ வேலையா இருப்பார்ன்னு நினைக்கிறேன். பயப்படாதேக்கா

 

 

“தேனு கதிருக்காச்சும் ஒரு போன் போட்டு பாரேன். மாமா வேலையா இருக்கார்ன்னா பரவாயில்லை, கதிராச்சும் சொல்லலாம்ல. கதிருக்கு போடுறியா

 

 

“அவருக்கு என்னால போட முடியாது, ப்ளீஸ்க்கா என்னை கதிர் மாமாக்கு போட சொல்லாதே என்று பிடிவாதமாக கூற அவளால் அழுத்திக் கூற முடியாமல் போக மீனா லட்சுமியிடம் சென்று நின்றாள்.

 

 

“அக்கா அவர் எப்போமே இப்படி தான் தாமதமா வருவாரா, போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்குறார். எனக்கு கவலையா இருக்கு என்றவளின் முகத்தில் பயம் அப்பட்டமாக ஒட்டியிருக்க லட்சுமி அவளை ஆறுதல்படுத்தினார்.

 

 

“இல்லைம்மா நீங்க ஒண்ணும் கவலைப்பட வேண்டாம், தம்பி எப்பவாச்சும் வேலையிருந்தா இப்படி தாமதமா வருவார். இப்போ வந்திடுவார் பாருங்களேன் என்று ஆறுதல் கூறினார்.

 

 

நேரம் மேலும் ஒரு மணி நேரத்தை விழுங்க அவள் இதயம் வெளியே விழுந்திடுமோ என்ற அளவுக்கு துடிக்க ஆரம்பித்தது. கண்களில் இருந்து நிற்காமல் கண்ணீர் வழிந்தோட அவள் கண்ணீர் தேனுவை உலுக்க அவள் கதிருக்கு போன் செய்தாள்.

 

 

கதிரும் போனை எடுக்காமலே இருக்க, மீண்டும் மீண்டும் முயற்சித்து அவள் களைத்து போனாள். மீனாவை துடிக்க வைத்துவிட்டு சுஜய் நிதானமாக பதினோரு மணி வாக்கில் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

 

 

அவனை பார்த்ததும் தான் மீனாவுக்கு உயிரே வந்தது, அவன் வரவில்லை என்றதும் அய்யாசாமி சொன்னது போல் அவருக்கு எதுவும் ஆகிவிடுமோ என்று எண்ணி கலங்கி போய் துடிக்க ஆரம்பித்தவளுக்கு அவனை கண்டதுமே மூச்சு வந்தது.

 

 

“என்ன மாமா நீங்க இவ்வளவு நேரம் கழிச்சு வர்றீங்க. போன் பண்ணாலும் எடுக்கவேயில்லை, நாங்க எல்லாரும் எவ்வளவு பயந்துட்டோம் தெரியுமா, அக்கா அழவே ஆரம்பிச்சுட்டா

 

 

“எனக்கு அவளை பார்த்த பிறகு தான் ரொம்பவே பயம் வந்திருச்சு. பாவம் மாமா அவ நீங்க ஏன் போன் பண்ணா எடுக்கலை என்றாள் தேனு.

 

 

“இல்லை தேனு ஒரு முக்கியமான மீட்டிங் அதான் போன் எடுக்க முடியலை. எல்லாரையும் ரொம்ப காக்க வைச்சுட்டேன். சாரி என்றுவிட்டு மீனாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.

 

 

‘லேட்டா வந்ததும் இல்லாம கூலா பதில் சொல்லிட்டு போறார் என்று கோபமாக வந்தது மீனாவுக்கு. அவன் பின்னோடு உள்ளே சென்றவள் அவனிடம் கேட்க தயங்கினாள்.

 

 

நம் மேல் உள்ள கோபத்தில் தான் அப்படி செய்திருக்கிறார், மீண்டும் ஏதாவது கேட்டு அவர் கோபித்துக் கொண்டால் என்ன செய்வது என்று யோசித்தவள் அப்போதைக்கு அவனிடம் எதுவும் கேட்க வேண்டாம் என்று முடிவு செய்தாள்.

 

 

அவனுடன் பின்னே அறைக்கு சென்றவள் அவனிடம் “சாப்பிட வாங்க என்றாள்.

 

 

“சாப்பிட்டாச்சு என்றான் ஒற்றை வார்த்தையாக.

 

 

அதற்கு மேல் அவளால் பொறுமையாக இருக்க முடியவில்லை, வெடிக்க ஆரம்பித்தாள்.

 

 

“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க. உங்களுக்கு கோபம்ன்னா என்னை அடிங்க, திட்டுங்க என்ன வேணாலும் செய்ங்க. அதைவிட்டுட்டு போன் எடுக்காம இருக்கறது, வீட்டுக்கு லேட்டா வர்றது, சாப்பிட்டேன்னு சொல்றது இதெல்லாம் வேண்டாம்

 

 

“உங்களுக்காக வீட்டுல ஒருத்தி சாப்பிடாம உட்கார்ந்திருப்பாளேன்னு உங்களுக்கு எப்படி தோணாம போச்சு. காலைல அவ்வளோ சொன்னீங்க உங்களை நான் புரிஞ்சுக்க முயற்சி பண்ணனும்ன்னு

 

 

“நான் போன் போட்டா நீங்க எடுக்கவே இல்லையே அதுக்கு என்ன அர்த்தம். உங்களை காணோம்னு என்னால தேடி கூட வரமுடியலை. இந்த ஊர் பாஷையும் புரியாம ஊரும் தெரியாம நான் என்ன செய்வேன்னு யோசிச்சீங்களா

 

 

“உங்களுக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு நினைச்சு ஒவ்வொரு நிமிஷமும் நான் தவிச்சு துடிச்சுட்டு இருந்தேன். என்ன அழவைச்சு பார்க்கணும் உங்களுக்கு அதானே இப்போ வேணும் என்றவள் வெடித்து அழ ஆரம்பித்தாள்.

 

 

“மீனு போதும்… போதும் மீனு என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க அவளோ நிறுத்தாமல் அழுது கொண்டே பேசிக் கொண்டிருக்க அவளை இழுத்து அணைத்தவன் அவளை மேலே பேசவிடாமல் செய்தான்.

அவனின் இந்த திடீர் செயலில் திகைத்து போனவளுக்கு மூச்சு வாங்குவது போல் இருக்க அவளை விடுவித்தவன் தன் மார்பின் மீது சாய்த்துக் கொண்டான்.

 

 

அவள் மனம் சற்று அமைதியுற அவன் நெஞ்சில் சாய்ந்திருப்பது ஆறுதலாக தோன்ற ஆரம்பித்த வேளை அவன் அவளை நிமிர்த்தி “சாப்பிடலாமா பசிக்குது

 

 

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை சற்று முன்பு தானே சாப்பிட்டுவிட்டேன் என்றார், இப்போது பசிக்கிறது என்கிறாரே. “இப்போ தான் வெளிய சாப்பிட்டேன்னு சொன்னீங்க

 

 

“அது கோபமா இருக்கும் போது, இப்போ எனக்கு எந்த கோபமும் இல்லை. சாப்பிடலாமே

 

 

“அப்போ இப்போ உங்களுக்கு கோபம் போயிடுச்சா, எப்படி

 

 

“எப்படின்னு சொல்லணுமா என்றவனின் பார்வை சென்ற திக்கை கண்டவள் அந்த பேச்சை வளர்த்தாமல் “நான் போய் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்

 

 

செல்லும் முன் திரும்பி வந்தவள் “நீங்க வர்றதுக்கு லேட் ஆகும்ன்னா கதிரையாச்சும் அனுப்பி வைச்சு இருக்கலாம்ல

 

 

“என்ன சொல்ற மீனு, கதிர் தான் அப்போவே கிளம்பிட்டானே. இன்னும் வீட்டுக்கு வரலையா

 

 

“என்ன சொல்றீங்க கதிர் இன்னும் வீட்டுக்கு வரலையே

 

 

“தேனுவுக்கும் கதிருக்கும் எதுவும் சண்டையா

 

 

“அப்படி தான் நினைக்கிறேன், அவளும் காலையில இருந்து முகத்தை தூக்கி வைச்சுட்டு தான் உட்கார்ந்திருக்கா

 

 

“சரி நான் போய் கதிர் எங்க இருக்கான்னு பார்த்திட்டு வந்திடறேன் என்றவன் வெளியே செல்ல கிளம்பினான்.

 

 

தேனு அவன் எதிரில் வந்து நின்றாள். “மாமா அவர் இன்னும் வீட்டுக்கு வரலை எனக்கு பயமா இருக்கு மாமா. அக்கா நீங்க வீட்டுக்கு வரலைன்னதும் எப்படி துடிச்சான்னு பார்த்தேன்

 

 

“என்ன தான் சண்டை போட்டாலும் அவ உங்களை தான் தேடினா. அவர் என்கிட்ட பேசலைன்னா கூட பரவாயில்லை வீட்டுக்கு வந்தா போதும்ன்னு ஒரே அழுகை”.

 

 

“அவளை சமாதானப்படுத்தறதுல நான் கதிர் மாமா பத்தி யோசிக்கவே இல்லை. எப்படியும் நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா தான் இருப்பீங்க வந்திடுவீங்கன்னு நினைச்சுட்டு இருந்தேன்

 

 

“இப்போ நீங்களும் வீட்டுக்கு வந்திட்டீங்க, ஆனா கதிர் மாமா இன்னும் வீட்டுக்கு வரலை. எனக்கு ரொம்ப பயமா இருக்கு மாமா, நான் இனி அவர்கிட்ட சண்டை எதுவும் போட மாட்டேன் அவர் வீட்டுக்கு வந்தாலே எனக்கு போதும்ன்னு இருக்கு

 

 

“என் மேல கோபமா இருக்கார். அதுக்காக எங்கயாச்சும் போயிருக்க போறார், வீட்டுக்கு கூட வராம இருக்கார். ப்ளீஸ் மாமா அவரை கூட்டிட்டு வாங்களேன். அவர் மட்டும் வீட்டுக்கு வந்திட்டா அடுத்த வருஷம் திருவிழாக்கு நான் அக்கினி சட்டி எடுக்கறதா வேண்டி இருக்கேன் மாமா என்று கண் கலங்கினாள்.

 

 

“தேனு நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே. கோபம் இருக்கலாம் சண்டை கூட போடலாம் தப்பில்லை, ஆனா யாராச்சும் ஒருத்தர் முடிவுல விட்டுக் கொடுக்கணும் அப்போ தான் வாழ்க்கை சுகமா போகும்

 

 

“சண்டை இல்லாத வாழ்க்கை இருக்கவே முடியாது, உங்களுக்குள்ள எதுக்கு சண்டைன்னு எனக்கு தெரியாது. ஆனா அவன் வீட்டுக்கு வந்ததும் நீங்க ரெண்டு பேரும் அதை பேசி தீர்த்துக்கணும் புரியுதா

 

 

“அவன் மேல தப்பே இருக்கட்டும், அதை நீ எதிர்த்து பேச பேச அது அதிகம் ஆகும். நீ சொல்ல வந்ததை நீ அன்பா சொல்லி பாரு, அவனுக்கு கண்டிப்பா புரியும். கதிர் ரொம்ப நல்லவன் சொன்னா புரிஞ்சுக்க கூடிய அளவுக்கு அவனுக்கு புத்தி இருக்கு.

 

 

“சரி நீ கவலைப்படாதே, நான் போய் பார்த்திட்டு வர்றேன் என்றவனுக்குள் கதிர் எங்கேனும் சென்று குடித்துவிட்டு வருவானோ என்று தோன்றியது. அவன் ஊகம் சரியே என்பது போல கதிர் தள்ளாடிக் கொண்டே ராமு அண்ணாவின் வீட்டு கதவை தட்டினான். (கதிர் அங்கு தான் தங்கியிருந்தான்)

 

 

பின்னால் கதவு தட்டும் சத்தம் கேட்க சுஜய் வேகமாக எழுந்து சென்று பார்க்க கதிர் நிற்க முடியாமல் தள்ளாடுவது தெரிந்தது. அவனருகில் சென்றவன் அவனை கைத்தாங்கலாக கூட்டிக் கொண்டு அவர்கள் வீட்டிற்குள் வந்தான்.

 

 

“அண்ணே! சா… சாரிண்ணே! என்றான் குழறலாக

 

 

தேனுவோ இவன் குடிப்பானா என்பது போல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

 

சுஜய் தேனுவின் முகத்தை பார்த்துவிட்டு எழுந்து அவளருகே வந்தான். “தேனு உன் மாமா நல்லவன் தான் குடிக்கிறான்னே நினைக்காதே. இதை நான் சரிப்பண்ணிடுறேன். நீ திரும்பவும் இந்த விஷயத்துக்காக சண்டை ஆரம்பிச்சா பிரச்சனை பெரிசாகிட்டே போகும். நீ சாதாரணம் போல காட்டிக்கோ ப்ளீஸ் தேனு

 

 

 

“மீனா ஒரு கிளாஸ் லெமன் ஜூஸ் கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணில போட்டு உடனே கொண்டு வா

 

 

‘குடிச்சுட்டு வந்திருக்கு குடிக்கார நாய் இவனுக்கு ஜூஸ் கொண்டு வர சொல்றார் பாரு என்று திட்டிக் கொண்டே அவன் சொன்னதை செய்தாள்.

 

 

“இந்தாங்க என்று சுஜய்யிடம் ஜூஸை நீட்டினாள். அதை வாங்கி கதிரை குடிக்க வைக்க அவன் போதை சற்று தெளிவடைவது போல் தோன்றியது.

 

 

“மீனா, தேனு நீங்க சாப்பாடு எடுத்து வைங்க. நாங்க கொஞ்சம் வாக்கிங் போயிட்டு வந்திடறோம் என்று சொல்லி கதிரை அந்த நேரத்தில் வெளியில் அழைத்து சென்றான் சுஜய்.

 

 

கதிருக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது. எதுவும் பேசாமல் அமைதியாக அவன் நடந்து வந்தான்.

 

 

“கதிர் உங்க ரெண்டு பேருக்கும் என்ன சண்டை

 

 

“அண்ணே! அது, அது வந்து

“சரி நீ என்ன பிரச்சனைன்னு சொல்ல வேண்டாம், ஊர்ல வைச்சே நான் உன்கிட்ட சொன்னேன்

 

 

“இனிமே குடிக்காதேன்னு, அதையும் மீறி நீ குடிச்சிருக்கே. அப்போ உன் பிரச்சனை பெரிசு அப்படின்னு நினைச்சுட்டு நான் பேசாம இருக்க மாட்டேன்

 

 

“பிரச்சனைல பெரிசு, சின்னதுன்னு எதுவுமே இல்லை. எல்லாத்துக்குமே நம்ம மனசு மட்டும் தான் காரணம். உன் மனசுக்கு நீ குடிக்க ஒரு காரணம் தேவை பட்டுச்சு, இந்த சண்டை உனக்கு சாதகமா போச்சு

 

 

“இப்படி ஒரு பிரச்சனைக்கே நீ குடிக்கணும்ன்னு நினைச்சா, இன்னும் நீ வாழ்க்கையில நெறைய பார்க்க வேண்டி இருக்கு கதிர். வாழ்க்கையில வெற்றி, தோல்வி, சண்டை, சச்சரவு, உல்லாசம், உற்சாகம், சோகம் கண்ணீர்ன்னு நெறைய இருக்கு

 

 

“அதுக்கெல்லாம் நீ குடிக்க ஆரம்பிச்சுட்டே இருந்தா எப்படி. குடிச்சா உன் பிரச்சனைக்கு தீர்வு வரும்மான்னு யோசிச்சு பாரு. கண்டிப்பா வராது, அது இன்னும் உன்னுடைய பிரச்சனைகளை வளர்க்கவே செய்யும்

 

 

“உன்னோட இந்த பழக்கத்துக்கு இன்னைக்கே முற்றுப்புள்ளி வைச்சுடு கதிர். இதுல தேனோட வாழ்க்கையும் சம்மந்தப்பட்டிருக்கு, நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் ஒரு சந்தோசமான வாழ்க்கை வாழணும்

 

 

“அதுக்கு இந்த பழக்கம் தடையா இருக்கக் கூடாது, விட்டிடு கதிர். இந்த பழக்கத்தை விட்டிடு. விட்டு கொடுத்து போ தேனுகிட்ட நீ விட்டு கொடுத்து போ கதிர்

 

 

“அவளே தப்பு செஞ்சிருந்தாலும் விட்டு கொடுத்து போ, மன்னிப்பு கேளு. தப்பே இல்லை, யார்க்கிட்ட கேட்குற, உன் பொண்டாட்டி கிட்ட தானே அதுல எந்த தப்புமில்லை

 

 

“நீ ஒரு தரம் விட்டு கொடுத்து பாரு, அதோட சந்தோசம் என்னன்னு உனக்கு தெரியும். உனக்கு அதுக்கு அப்புறம் திகட்ட திகட்ட சந்தோசம் தான் கிடைக்கும்

 

 

“நான் சொன்னது உண்மையா இல்லையான்னு இன்னைக்கே சோதிச்சு பாரு, அப்புறம் தேனு நீ குடிச்சுட்டு வந்தது பார்த்து கொஞ்சம் பயந்திருக்கா, அதை கொஞ்சம் பார்த்துக்கோ. அவளுக்கு பக்குவமா பேசி புரிய வை

“ரொம்ப அழுதிட்டா உன்னை காணோம்ன்னு நினைச்சு. எல்லாமே அவளோட தப்புன்னு புலம்பிட்டு இருந்தா, நீ வீட்டுக்கு வந்தா போதும், கோவிலுக்கு அக்கினிசட்டி எடுக்கறேன்னு என்னென்னமோ சொல்லிட்டு இருந்தா, சரியா

 

 

“இனி எனக்காக வேணாம் கதிர், தேனுவுக்காக உங்க வாழ்க்கைக்காக தயவு செய்து குடிக்காதே என்றான்

 

 

பொறுமையாக அவனுக்கு அறிவுரை செய்து வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் சாப்பிடும் போது மணி பன்னிரண்டுக்கு மேல் ஆகிவிட்டது. சாப்பிட்டு செல்லும் முன் சுஜய் “கதிர் சீக்கிரம் தேனுகிட்ட பேசிட்டு நீ பசும்பொன் தங்கியிருந்த ரூம்ல போய் படுத்துக்கோ

 

 

“நாம ஊருக்கு போகும் போது உங்க கல்யாணத்தை பத்தி பேசிடறேன் என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டு சென்றான்.

 

 

மீனா அவன் என்ன தான் செய்கிறான் என்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்கள் அறைக்கு சென்றதும் கதவை தாழிட்டவள் பெரும் யோசனையில் ஆழ்ந்தாள்.

 

 

“என்ன யோசனை, இல்லாத மூளையை எதுக்கு கசக்குற

 

 

“எனக்கு மூளை இல்லைன்னு உங்களுக்கு யார் சொன்னா, நீங்க பார்த்தீங்களா என்று சண்டைக்கு ஆயத்தமானாள்.

 

 

“இப்போ இந்த நேரத்துல நாம ஆரம்பிக்கணுமா மறுபடியும். என்னால முடியலை, தூக்கம் வருது

 

 

“தேனுவோட ரூம்க்கு இந்த நேரத்துல கதிரை எதுக்கு அனுப்பினீங்க, எதுவானாலும் காலையில பேசிகிட்டா என்ன இப்போ

 

 

“அது தான் உன் யோசனையா

 

 

“ஆமா எதுவும் தப்பு தண்டா நடந்திட்டா

 

 

“கல்யாணம் ஆனவங்களுக்கு எதுவும் நடக்கலை, ஆகாதவங்களுக்கு நடந்திடுமா என்று முணுமுணுத்தான்.

 

 

“என்னது கொஞ்சம் சத்தமா சொல்லுங்க

 

 

“ஒண்ணுமில்லை, அப்படி எதுவும் நடக்காதுன்னு சொன்னேன்

 

 

“அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க

 

 

“நம்பிக்கை அவங்க ரெண்டு பேரு மேல வைச்சிருக்கற நம்பிக்கை தான். இப்பவும் கதிர்கிட்ட சொல்லிட்டு தான் வந்திருக்கேன், அதுல மறைமுகமா அவனுக்கு சொல்லிட்டேன்

 

 

“என்னன்னு

 

 

“சீக்கிரம் பேசிட்டு பசும்பொன் தங்கியிருந்த ரூம்ல போய் படு, ஊருக்கு போனதும் உங்க கல்யாணத்தை பத்தி பேசறேன்னு சொல்லிட்டு தான் வந்திருக்கேன். போதுமா

 

 

“ஆனாலும் இதெல்லாம் சரியா படலை எனக்கு

 

 

“விடு மீனு அவங்களாச்சும் மனசுவிட்டு பேசட்டும். எத்தனையோ பேரு புரிஞ்சுக்காம, புரிஞ்சுக்க முயற்சி பண்ணாம இருக்காங்க. அவங்களாச்சும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு நடந்துக்கட்டும் என்று சொல்லி அவளை ஒரு பார்வை பார்த்தான்.

 

 

“எது சொல்றதா இருந்தாலும் நேரடியா சொல்லுங்க, இப்படி சுத்தி வளைச்சு எல்லாம் பேச வேண்டாம். என்னை தானே புரிஞ்சுக்காமே இருக்கறவன்னு சொல்றீங்க

 

 

“நான் என்ன புரிஞ்சுக்க மாட்டேன்னா சொல்றேன். அது இன்னைக்கே நடக்கணும்ன்னு உங்களுக்கு ஆசை… இல்லையில்லை பேராசை. அதுக்கு காத்திருக்கணும்ன்னு நான் சொன்னது உங்களுக்கு மறந்து போச்சு போல

 

 

“இன்னைக்கே நடக்கணும்ன்னு நான் ஒண்ணும் ஆசையும் படலை பேராசையும் வைக்கலை. நீ புரிஞ்சுக்க முயற்சி பண்ணறேன்னு சொல்லி என்னை காயப்படுத்தாதேன்னு தான் சொல்றேன்

 

 

“நான் காத்திட்டு தான் இருக்கேங்கறது உனக்கு தான் புரியலை என்றவன் கட்டிலில் ஏறி படுத்துக் கொண்டான்.

 

அப்போது தான் ஞாபகம் வந்தவளாக “ஆமா கேட்க மறந்துட்டேன், கட்டிலை எப்போ மாத்தி போட்டீங்க

 

 

“நீ விழுந்த அன்னைக்கே

 

 

“அன்னைக்கா! அன்னைக்கு எப்படி அன்னைக்கு தான் நாம ஊருக்கு போய்ட்டோமே

 

 

“ராமு அண்ணாகிட்ட சொல்லி மாத்த சொன்னேன்

 

 

“எதுக்கு, அவர்கிட்ட நான் கிழே விழுந்ததை சொல்லி என் மானத்தை வாங்கிட்டீங்களா

 

 

“கொஞ்சம் விட்டா ரொம்ப பேசிட்டே போறே மீனு, என்னை கோபப்படுத்தாதே அது உனக்கு நல்லதில்லை. ராமு அண்ணாகிட்ட இந்த கட்டிலை மாத்தி தான் போட சொன்னேன்

 

 

“வேற எதுவும் சொல்லலை, என்ன எதுக்குன்னு கேட்டு நம்ம குடும்ப விஷயத்துல அவரும் தலையிட மாட்டார். நான் சொன்னதுமே மாத்தி போட்டிட்டார் அவ்வளோ தான்

 

 

“நீ இவ்வளவு கேள்வி கேட்பேன்னு தெரிஞ்சிருந்தா பழைய மாதிரியே விட்டிருப்பேன். உனக்கு தினமும் கிழே விழுந்து எழறது தான் பிடிச்சிருக்கு போல

 

 

“இல்லை அப்படி சொல்லலை… என்று இழுத்தாள்

 

 

“உன் வாயால ஒரு நல்லதை பாராட்டிடக் கூடாது அதானே, விடு நீ பாராட்டியும் எனக்கு எதுவும் ஆகப்போறதில்லை. நீ திட்டியும் எனக்கு எதுவும் ஆகப்போறதில்லை என்றவன் ஒரு பெருமூச்சுடன் கட்டிலில் சரிந்தான்.

 

 

‘எனக்கு என்ன ஆச்சு, எதுக்கு இப்படி இவர்கிட்ட ஏட்டிக்கு போட்டியாவே பேசிட்டு இருக்கேன். இவர் எனக்கு நல்லது செஞ்சாலும் நான் அதுக்கும் ஒரு காரணம் கண்டுபிடிச்சு இவரை எதாச்சும் சொல்றேனே

 

 

‘பிரச்சனை என்கிட்டயா இல்லை இவர்கிட்டயா. மீனா ஏன்டி இப்படி இருக்கே, ஒரு நல்ல மனுசனை எதுக்கு கஷ்டப்படுத்துற என்று அவளையே திட்டிக் கொண்டவள் பார்வை உறங்க ஆரம்பித்த சுஜய் மேல் இருந்தது. அவனுக்காக அவன் வராத போது துடித்த துடிப்பு கண் முன் வந்தது.

 

 

கட்டிலில் ஏறி உள் பக்கம் சென்று படுக்க அவளிடம் பேசி களைத்திருந்தவனின் முன் வழுக்கையில் அந்த குளிரிலும் லேசாக வியர்த்திருக்க தன்னையுமறியாமல் அவள் கைகள் நீண்டு அதை துடைத்தது.

 

 

‘யோவ் சொட்டைமண்டை உன்னை எனக்கு இப்போ தான் பிடிக்க ஆரம்பிச்சுருக்கு போல என்று மனதிற்குள் சொல்லி சிரித்துக் கொண்டாள்.

 

 

  • ­காற்று வீசும்

 

 

Advertisement