Advertisement

 

அத்தியாயம் –1

 

 

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய கிராமம் வயல்பட்டி. சாலையின் இருபுறமும் பச்சை பசேலென்ற புல்வெளி கண்களுக்கு மட்டுமல்ல உடலுக்கும் குளிர்ச்சியாகவே இருந்தது. வானம் கருத்து இருள் போர்வையை போர்த்திக் கொண்டிருக்க அந்த வீடு வாழை மரம் கட்டி கல்யாண கோலம் பூண்டிருந்தது.

 

 

அந்த ஊரில் பெரிய மனிதரான ஈஸ்வரன், மீனாட்சியின் மகள் வழி பேத்தி மீனாட்சியின் திருமண வைபோகத்திற்காகவே அங்கு அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஈஸ்வரன் மீனாட்சிக்கு இரு ஆண் பிள்ளைகள், கந்தசாமி, ராஜேந்திரன், இரு பெண் பிள்ளைகள் சௌந்தர்ய மாலதி, திலகவதி.

 

 

மூத்தவர் கந்தசாமி காதலித்து திருமணம் புரிந்து ஊரைவிட்டே சென்றுவிட்டவர். ஊருக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் போய் பல வருடங்கள் ஆகிவிட்டது. இளையவர் ராஜேந்திரன் அவர் மனைவி காமாட்சி.

 

ராஜேந்திரன் காமாட்சியின் மக்கள் கதிரேசன் நன்றாக படித்துவிட்டு தலைநகர் டெல்லியில் நல்ல வேலையில் இருக்கிறான். ஒரு உடன் பிறந்த தங்கை பசும்பொன் எட்டாவது படித்துவிட்டு வீட்டில் இருக்கிறாள்.

 

 

ஈஸ்வரன் மீனாட்சி தம்பதியரின் மூத்த மகள் சௌந்தர்ய மாலதியின் கணவர் ராஜ் மோகன் அவர்களின் ஒரே செல்ல மகள் மீனாட்சி பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த பெண்.

 

 

அந்த ஊரிலேயே அதிகம் படித்தவள் என்ற இறுமாப்பு இவளுக்கு,இவள் தான் கதையின் நாயகி, இவள் செய்யும் அலும்புகளை பின்னால் பார்போம்.மாலதிக்கு அன்னை என்றால் கொள்ளை பிரியம் அன்னையின் பெயரை மகளுக்கு வைத்துவிட்டு அவளை செல்லமாக செல்வி என்றே அழைப்பார்.

 

 

ஈஸ்வரன் மீனாட்சியின் இளைய மகள் திலகவதி கணவர் முருகேசன் அவர்களுக்கு தேன்மொழி அஜய் என்று இரு மக்கள். தேன்மொழி பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறாள். அஜய் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான்.

 

 

இப்போது கல்யாண வீட்டில் என்ன நடக்கிறது என்று பாப்போம். “ராசேந்திரா, என்ன இது இன்னும் மாப்பிள்ளை வீட்டில இருந்து எந்த தகவலும் காணோம். பெண்ணழைக்க யாருமே இவ்வளவு நேரமா வராம இருக்காங்க. மழை வேற வாராப்புல இருக்கு. ஒரு போன் போட்டு கேளுப்பா என்றார் மீனாட்சி.

 

 

“அவுங்க யாரும் போன் போடலைத்தா இந்தா நானே போன் போட்டு என்னன்னு கேக்குறேன் ஆத்தா, நீ எதுவும் கவலைப்படாதே. தங்கச்சியும், மச்சானும் எங்க போனாங்க என்றான் ராஜேந்திரன்.

 

 

“மக கல்யாணமில்லையா, அவ இன்னொரு வீட்டுக்கு போக போறான்னு கலங்கிட்டு மக பக்கத்துலையே உட்கார்ந்திருக்காங்க என்றார் அவர். “நல்லா உட்கார்ந்தாக வேலைய பாக்க வேணாமாத்தா என்றவர் போனை காதுக்கு கொடுத்தார். எதிர்முனையில் தொடர்ந்து அழைப்பு சென்று எடுக்கப்படாமலே ஓய்ந்தது.

 

 

“என்னாச்சுய்யா என்றார் மீனாட்சி. “நானும் ரொம்ப நேரமா போன் போடுறேன் எடுக்கலையே என்றார் ராஜேந்திரன். “ஆத்தா அய்யா எங்க இருக்காங்க என்றவரிடம் “உள்ளார தான் படுத்திருக்காங்க என்றார் மீனாட்சி. “சரி நான் ஒரு எட்டு வண்டி எடுத்திட்டு போய் பார்த்திட்டு வரேன்த்தா என்று உள்ளே சென்று வண்டி சாவியை எடுக்க சென்றார்.

ஏனோ மீனாட்சிக்கு காலை முதலே மனது சரியில்லாமல் இருந்தது, எதுவோ நடக்க போகிறது என்பது போலவே அவருக்குள் ஒரு பதைபதைப்பு. பேத்தி மீனாட்சியின் (இவரை மீனா என்று அழைப்போம்) கல்யாணம் எந்த தடங்கலும் இல்லாமல் நன்றாக நடக்க வேண்டும் என்று உள்ளுக்குள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.

 

 

அப்போது தான் மீனாவின் அறையில் இருந்து வெளியில் வந்தார் அவளின் தந்தை ராஜ் மோகன். “அத்தை ராசேந்திரன் எங்க போயிருக்காங்க என்றவரிடம் “இப்போதான்யா மாப்பிள்ளை வீட்டுக்கு போய் பார்த்திட்டு வர்றேன் கிளம்புறான். அவுங்க உங்களுக்கு எதுவும் போன் போட்டாகளா என்றார் மீனாட்சி.

 

 

“இல்லை அத்தை, அதான் நானும் மாலதியும் என்னனு யோசனை பண்ணிட்டு இருக்கோம் என்றார். அதற்குள் ராஜேந்திரன் வண்டி சாவியுடன் வெளியில் வரவும், மேகம் கருத்து மழை சடசடவென்று விழ ஆரம்பித்தது. வாசலில் யாரோ அழைக்கும் சத்தம் கேட்க வேகமாக எல்லோரும் அங்கு விரைந்தனர்.

 

 

“யாரு நீங்க என்று ராஜேந்திரன் கேட்க, “அய்யா நான் மாப்பிள்ளை வீட்டில இருந்து வர்றேங்க, சத்திரப்பட்டி தாங்க சொந்த ஊரு. மாப்பிள்ளை விஷத்தை குடிச்சிட்டாருங்க, ஆஸ்பத்திரி கொண்டு போற வழியில உசுரு போயிருச்சுங்கய்யா

 

 

“உங்களுக்கு தாக்கல் சொல்லிட்டு வரச்சொன்னாங்க அதான் வந்தேன் என்று சொல்லிவிட்டு வந்தவர் அங்கிருந்து கிளம்பவும் மீனாட்சி நெஞ்சை பிடித்து கிழே விழுகவும் சரியாக இருந்தது. விழுந்தவரை அள்ளிப்போட்டுக் கொண்டு வாசலில் நின்றிருந்த காரில் ஏறி மருத்துவமனை விரைந்தனர்.

 

 

இரண்டு நாட்களுக்கு பின் உடல் நிலை தேறி கண் விழித்தார் மீனாட்சி. “என்ன ஆத்தா நீ இப்படி பயமுறுத்தி போட்ட என்று அவர் அருகில் வந்து கண்ணீர் வடித்தனர் அவரின் மகள்கள் மாலதியும் திலகவதியும். “என் பேத்தி மீனாட்சி எங்க என்றார் அவர்.

 

 

“என்ன கிழவி எதுக்கு என்னை கூப்பிடுற இங்க தானே இருக்கேன் என்று அவர் முன் வந்து நின்றாள் மீனா. “அடியே எங்கம்மாவை கிழவின்னு கூப்பிடுற பல்லை தட்டிடுவேன் என்றார் மாலதி. “விடும்மா மாலதி என் பேத்தி தானே கூப்பிடுறா கூப்பிட்டு போகட்டும் என்றார் அவர்.

 

 

“ராசேந்திரா என்னாச்சு விபரம் எதுவும் தெரிஞ்சுதா என்று மகனை நோக்கி கண்களை திருப்ப, மீனாட்சியே அதற்கு பதில் கொடுத்தாள். “அந்த மாப்பிள்ளை பய ஏதோ ஒரு பொண்ணை விரும்பி இருக்கான், அவங்க வீட்டில என்னைய தான் கட்டிவைக்கணும்ன்னு அவனை கட்டாயப்படுத்தி இருக்காங்க

 

 

“வாழ தைரியம் இல்லாத அந்த வெட்டிப்பயலும் மருந்து குடிச்சிட்டு செத்து போய்ட்டான், போதுமா. இப்போ உனக்கு சந்தோசமா, நான் கேட்டேனா உன்கிட்ட எல்லாமே உன்னாலயும் தாத்தாவாலயும் தான். என்னமோ நாளைக்கே கண்ணை மூடிடுவேன்னு என் பேத்தி கல்யாணத்தை பார்க்கணும்ன்னு அவசரப்படுத்தி இப்போ அது எங்க வந்து நிக்குது பாரு என்றாள் விசனமாக.

 

 

மீனாட்சிக்கு கஷ்டமாக இருந்தது. தம் அவசரத்தினால் தான் பேத்தியின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்ற குற்ற உணர்வு அவரை வாட்டியது. “கதிர் எங்க என்றார் அவர். “பாட்டி நான் இங்க இருக்கேன், என்ன வீட்டுக்கு போகலாமா, இல்லை இன்னும் இரண்டு நாள் இங்கேயே இருக்க போறியா என்றான் கதிரேசன்.

 

 

“போகலாம்ப்பா, மருந்து வாடை என்னவோ போல இருக்குஎன்று முகம் சுளித்தார் மீனாட்சி. ‘அய்யோ ஊர்ல இருக்கவங்க எல்லாம் எம் பேத்தி ராசியில்லாதவன்னு பேசுவாங்களே என்ன செய்ய என்ற கவலை அவருக்கு அப்போதே வர ஆரம்பித்துவிட்டது.

 

 

அவருக்கு தெரியாது கிராமத்து ஜனங்கள் அப்படி பேச ஆரம்பித்துவிட்டார்கள் என்று. இரண்டு நாட்களாக மருத்துவமனை வாசத்தில் இருந்ததால் அவர் அதை அறிந்திருக்கவில்லை. கார் ஊரை நோக்கி சென்று கொண்டிருந்தது, வானம் கருக்க ஆரம்பித்தது.

 

 

கன மழை பெய்யும் அறிகுறி தோன்ற கார் வேகமாக ஊரை நோக்கி விரைந்தது. வீட்டு வாசலில் கார் வந்து நிற்க ராஜேந்திரன் மனைவி காமாட்சியும் ஈஸ்வரனும் வந்தனர். வயதான ஈஸ்வரன் கஷ்டப்பட்டு எழுந்து வந்து வாசலில் நின்றிருந்தார் மனைவியை பார்க்க.

 

 

மீனாட்சியை பார்த்ததும் தான் கண்களில் அவருக்கு ஒளியே வந்தது. “நீங்க எதுக்கு வெளிய வந்தீங்கஎன்று உடம்பு முடியாத தன் கணவரை பார்த்து கேட்டாலும் தன்னை தேடி வாசலுக்கே வந்ததில் சற்றே பெருமிதமாகவும் உணர்ந்தார் அவர்.

 

 

“என்ன மீனாட்சி உம் பேத்தி கல்யாணம் நின்னு போச்சுன்னு நீ போய் ஆஸ்பத்திரில படுத்துகிட்ட, அந்த புள்ள பாவம் மனசொடிஞ்சு போய் எதுவும் செஞ்சிருந்தா பாவம் சின்ன புள்ள பாரு அது முகத்தை எப்படி வாடிக் கிடக்குது என்று சொல்லி வெந்த புண்ணில் விரலை விட்டார் அடுத்த வீட்டில் இருந்த மூக்காத்தா.

 

 

“ஏய் கிழவி நான் சொன்னேனே எதுவும் செஞ்சுக்குவேன்னு, நான் மனசொடிஞ்சு போனதை நீ பார்த்தியா, உனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை உன் சோலிய பார்த்திட்டு போவியா. நீயே என்னை பிடிச்சு கிணத்துல தள்ளிருவ போல இருக்கு.

 

 

“தேவையில்லாதது எல்லாம் பேசிக்கிட்டு. இத பாரு கிழவி இந்த பக்கம் இனி உன்னை பார்த்தேன் அவ்வளோ தான் சொல்லிட்டேன். போ போய் உன் மருமகளை கேள்வி கேளு, வந்துட்ட எங்களை கேள்வி கேட்க என்று பொரிந்தாள்.

 

 

“இப்ப என்ன சொல்லிட்டேன்னு இந்த குதி குதிக்கிற, மீனாட்சி நீ சொல்லி வை உன் பேத்திக்கிட்ட என்று அங்கிருந்து நகர்ந்தார் மூக்காத்தா. அதற்கு மேல் நின்றிருந்தால் மீனா பேசுவதை கேட்க காது வேண்டுமே, பேசியே ரத்தம் வரவைத்து விடுவாளேஎன்று அங்கிருந்து நகர்ந்தார்.

 

 

“இதுகிட்டலாம் உனக்கு என்ன பிரண்டுசிப், தேவையா மீனாட்சி உனக்கு என்று அவர் மூக்கை பிடித்து ஆட்டிவிட்டு அவரை உள்ளே அழைத்து சென்றாள்.

 

 

தேன்மொழியும் அஜயும் பாட்டியை பார்க்க வந்திருந்தனர். “என்ன பாட்டி நீ இப்படி செஞ்சுட்ட என்றாள் தேன்மொழி. “என்ன தேனு சொல்ற என்றார் பாட்டி. “இப்படி இளவயசுல உடம்பு முடியலைன்னு நீ போய் ஆஸ்பத்திரில படுத்திட்ட எனக்கு யாரு களி கிண்டி கருவாட்டு குழம்பு வச்சு தர்றது என்றாள் அவள்.

 

 

“ஏய் தேனு பாட்டி எப்படி இருக்கு என்னன்னு கேட்காம எப்போ பார்த்தாலும் உனக்கு திங்கறது பத்தி தான் யோசனையா, தின்னு தின்னு தானே இப்படி பூசணிக்காய் மாதிரி இருக்க என்றான் கதிரேசன்.

 

 

“உன்கிட்ட யாரும் இப்ப எதுவும் கேட்டாங்களா நீ எதுக்கு வர்ற மாமா, யக்கா நீ எனக்கு சப்போர்ட் பண்ண மாட்டியா என்றால் மீனாவை பார்த்து. “நீ விடு தேனு, உனக்கு கருவாட்டு குழம்பு தானே நானே வைச்சு தர்றேன் நீ வா நாம உள்ள போவோம்

 

 

“இவனுக்கு இன்னைக்கு சோறு கிடையாது என்று கதிரேசனை முறைத்துவிட்டு சென்றாள் மீனாட்சி. “ஒண்ணா சேர்ந்திட்டாளுக, நான் தேனிக்கு போறேன் நாகர் கடையில புரோட்டா  போய் சாப்பிட்டுக்கறேன் என்று சொல்லிவிட்டு அவன் அங்கிருந்து நகர்ந்து சென்றான். “போயிட்டு வரேன், அரிசிமூட்டை புளிமூட்டை என்றுவிட்டு வேகமாக அந்த இடத்தை காலி செய்தான் கதிரேசன்.

 

 

மீனாட்சிக்கோ இப்படி கல்யாணம் நின்றுவிட்டதே அடுத்து சீக்கிரமாக மாப்பிள்ளை பார்த்து கல்யாணத்தை முடித்து விட வேண்டும் என்று யோசனை செய்து கொண்டிருந்தார். திருமணம் நின்று போயிருந்ததில் ஊரில் எல்லோரும் மீனாவின் ராசி சரியில்லை என்று பேச ஆரம்பித்தனர்.

 

____________________

 

 

தலைநகர் டெல்லியில் கைலாஷ் காலனி குடியிருப்பில் அமைந்திருந்த அந்த வீடு கனத்த அமைதியை தத்தெடுத்து இருந்தது. வெள்ளை உடை அணிந்து அங்கு நெறைய பேர் அமைந்திருந்தனர்.

 

 

ஆளாளுக்கு ஹிந்தியில் மெதுவாக பேசிக் கொண்டிருந்தனர். கூடத்தில் கண்ணாடி பெட்டியில் படுக்க வைக்கப்பட்டிருந்தார் பாண்டியன். கண்ணாடி பேழையின் மேல் ஒரே ஒரு மாலை மட்டும் போடப்பட்டிருந்தது. அவரின் ஒரே மகன் சுஜய் அங்கிருந்த சோபாவில் அமர்ந்திருந்தான்.

 

 

அவனின் இருபுறமும் அவனுடைய இரு மாமாவும் அமர்ந்திருந்தனர். சுவற்றில் அவனுடைய அன்னை தீபிகா வர்மாவின் புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. சுஜயிடம் அவனுடைய பெரிய மாமா பேசிக் கொண்டிருந்தார். (ஹிந்தி எனக்கு தெரியாது நான் தமிழ்ல சொல்லிடுறேன்) “என்ன சுஜய் இப்படியே இருந்தா எப்படி நாம அவங்க வீட்டுக்கு ஒரு வார்த்தை சொல்ல வேண்டாமா என்றார் பிரஷாந்த் வர்மா.

 

 

“இல்லை மாமா யார்க்கும் எதுவும் சொல்ல வேண்டாம். அப்பா அவங்களை போய் பார்த்து மன்னிப்பு கேட்டுட்டு வந்த பிறகும் யாரும் வந்து எங்களை பார்க்கலை. பேரன்னு ஒருத்தன் இருக்கான்னு அவங்களுக்கு எந்த பாசமும் இல்லை, இப்போ மட்டும் நாம சொல்லணுமா என்றான் சுஜய்.

 

 

“அதுக்காக நாம அப்படியே விடமுடியாது சுஜய், அவங்க வந்தாலும் வரலைன்னாலும் நாம அவங்களுக்கு ஒரு வார்த்தையாச்சும் சொல்லணும். இப்படி தான் அக்கா இறந்தப்ப உங்கப்பா யாருக்கும் சொல்ல வேண்டாம்னு சொன்னார். இப்போ நீ அவர் இறப்புக்கு அதே சொல்ற அது சரியா வராது என்றார் அவனின் சின்ன மாமா ரஞ்சித் வர்மா.

“இல்லை மாமா அப்பா ஏதோ காரணமா தான் அப்படி சொல்லியிருக்கார், நானும் அதே காரணத்துக்கு தான் சொல்றேன் விட்டுடுங்க. எனக்கு யாரும் வேணாம், யாரையும் நாங்க எதிர்பார்க்கலை. மேற்கொண்டு நடக்க வேண்டியதை பார்போம். இதுக்கு மேல இந்த விஷயத்தை பற்றி பேச வேண்டாம் என்று கூறி அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டான்.

 

 

அன்றே அவர் உடல் அடக்கம் செய்யப்பட வீட்டிற்கு வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராக கிளம்பினர். அவனுடைய பெரிய மாமா மும்பையில் இருப்பதால் அவசர வேலையை முன்னிட்டு அவரும் மறுநாளே கிளம்பும் சூழல் ஏற்பட்டது.

 

 

அவனுடைய சின்ன மாமா டெல்லியிலேயே இருப்பதால் அவரும் அவர் மனைவியும் தினமும் வீட்டிற்கு வந்து போயினர். அவனும் அவன் தந்தையுமாக இருந்த அந்த வீடு அமைதியை குத்தகை எடுத்திருந்தது. அவனுக்கு என்று இருந்த ஒரே துணையும் இன்று இல்லை.

 

 

ஏதோவொரு வெறுமை சூழ்திருந்தது. அதற்கு மேல் வீட்டில் இருக்க அவனுக்கு பிடிக்கவில்லை. வீட்டில் உதவிக்கு இருக்கும் ராமசாமியிடம் சொல்லிவிட்டு அவன் அலுவலகம் கிளம்பி சென்றான். அவன் சென்றதும் ராம சாமி அவர் மனைவி லட்சுமியிடம் “பாரு லட்சுமி அய்யா போனதும் சின்னவரு எப்படி இருக்காரு

 

 

“ஆளு ரொம்ப டல்லாயிட்டார், கடவுளே இவருக்குன்னு இந்த வீட்டில இருந்த ஒரே உறவு அவரும் இப்போ இல்லாம போயிட்டார். நல்ல மனுஷன் அவருக்கு இப்படி ஆகியிருக்க வேண்டாம். இவருக்கு காலாகாலத்துல ஒரு கல்யாணம் நடந்து இந்த வீடு நிறையணும் என்று சொல்ல அவர் மனைவியும் ஆமாம் சாமி போட்டுக் கொண்டிருந்தார்.

 

 

சுஜயின் கைப்பேசி அழைப்பு விடுக்க வேலையில் இருந்தவன் அழிப்பு மை சத்தத்தில் கவனம் சிதைந்தவனாக அதை எடுத்து காதுக்கு கொடுத்தான். “ஹலோ அண்ணே என்று கதிரேசன் அழைக்க “சொல்லு கதிர் எப்படியிருக்க கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுதா என்றான் அவன்.

 

 

“இல்லைண்ணே கல்யாணம் நின்னு போச்சு, அந்த கல்யாண மாப்பிள்ளை ஒரு பொண்ணை விரும்பியிருப்பான் போல. ஆனா அவங்க வீட்டில எங்க மீனாவை தான் கட்டணும்ன்னு சொல்லி பரிசம் போட்டாங்க. அவன் என்ன யோசிச்சானோ என்னவோ மருந்து குடிச்சு செத்து போனான்

 

 

“கல்யாணம் நின்னு போச்சு. எங்க பாட்டிக்கும் உடம்பு சரியில்லாம  ஆஸ்பத்திரில சேர்த்து இன்னைக்கு தான் வீடு திரும்பிச்சி, அதை கொண்டு போய் வீட்டில விட்டுட்டு மதுரைக்கு போய் ரயிலுக்கு பதிஞ்சுட்டு உங்களுக்கு போன் போடுறேன் என்றான் கதிர்.

 

 

“என்ன கதிர் நீ இப்படி சாதாரணமா சொல்ற, கல்யாணம் நின்னு போனா பாவம் அந்த பொண்ணு வாழ்க்கை என்ன ஆகும். பாட்டிக்கு என்னாச்சு இப்போ நல்லாயிருக்காங்க தானே என்றான் சுஜய். “பாட்டி இப்போ நல்லாயிருக்காங்க அண்ணே ஒண்ணும்மில்லை. மீனா ரொம்ப நல்லாயிருக்கா, எப்பவும் போல வாயாடிச்சுட்டு எல்லாரையும் ஒருவழியாக்கிட்டு இருக்கா

 

 

“அவளுக்கு எப்பவும் எதுக்கும் கவலைப்பட்டு பழக்கம் இல்லை, நம்ம எல்லாரையும் சந்தோசப்படுத்தி தான் எப்பவும் பார்ப்பா. இப்போ கூட அவ எப்பவும் போல சாதாரணமா தான் இருக்கா, ஆனா எங்களுக்கு தான் கஷ்டமா இருக்கு. சீக்கிரமே ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து அவ கல்யாணத்தை முடிக்கணும்

 

 

“ஊர்ல எல்லாரும் ராசி இல்லாதவ அப்படிங்கற மாதிரி அரசல்புரசலா பேசுறாங்க என்று வருத்தத்துடன் கூறினான். “அண்ணே கேட்க மறந்துட்டேன், பெரிய சார் எப்படி இருக்காங்க, ஆஸ்பத்திரில இருந்து வீட்டுக்கு வந்திட்டாங்களா என்றான் கதிர்.

 

 

“கதிர் அப்பா ரெண்டு நாள் முன்னாடி தவறிட்டாங்க என்றான் சுஜய். “அண்ணே என்ன சொல்றீங்க, என்னாச்சு பெரிய சார்க்கு. லேசா நெஞ்சு வலின்னு தானே ஆஸ்பத்திரில இருந்தார் என்றான் கதிர். “நெஞ்சு வலி அதிகமாகி தான் அவர் இறந்து போய்ட்டார். சரி அதை விடு கதிர் நீ எப்போ இங்க வர்றே என்றான் அவன்.

 

 

“நாளைக்கு கிளம்பறேன் அண்ணே இன்னும் இரண்டு நாள்ல அங்க இருப்பேன் என்றான் கதிர். “சரி கதிர் வந்திடு என்னமோ தனியா இருக்க மாதிரி ஒரு உணர்வு என்றான் அவன். “அண்ணே… என்னாச்சு எதுக்கு இப்படி எல்லாம் பேசறீங்க. நான் சீக்கிரமே வந்திர்றேன் என்றவன் போனை வைத்தான்.

 

 

கதிரின் மனசு கனத்து போயிருந்தது. அவன் எண்ணம் பின்னோக்கி சென்றது. கல்லூரி முடித்ததும் வேலைக்காக சென்னை சென்றான். சிறிது நாட்கள் சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு தானாக தேடி வந்தது டெல்லியில் இருந்து வேலை வாய்ப்பு.

நண்பர்களிடம் விசாரித்ததில் பெரிய கம்பெனி தான் என்று சொல்ல அவனும் ஊரில் இருக்கும் எல்லோரையும் சமாதானம் செய்து அந்த வேலைக்காக டெல்லி பயணமானான்.

 

 

முதலில் அவனுக்கு அங்கு பழக சற்றே சிரமமாக இருந்தது. என்ன தான் ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் அவனால் அங்கு இயல்பாக பேச முடியவில்லை. பயந்துக் கொண்டே தட்டுத்தடுமாறி எப்படியோ அங்கு ஒரு மாதம் இருந்தவனுக்கு அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியவில்லை. பேசாமல் ஊருக்கு போய்விடலாம் என்று அவனுக்கு தோன்ற ஆரம்பித்தது.

 

 

ஒரு நாள் இடைவேளையின் போது தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவனின் அருகில் வந்து நின்றான் சுஜய். அவன் தோளை மெதுவாக அவன் தட்ட நிமிர்ந்த கதிரேசன் “சார் சொல்லுங்க சார் என்று எழுந்து நின்றான்.

 

 

“மரியாதை எல்லாம் மனசுல இருக்கட்டும், என்னாச்சு கதிர் எதுக்கு இங்க வந்து தலையை பிடிச்சுட்டு உட்கார்ந்திருக்க என்றான் அவன். “இல்லை சார் நான் வேலையை விட்டுட்டு ஊருக்கு போய்டலாம்ன்னு நினைக்கிறேன் என்றான் அவன்.

 

 

அதுவரை ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்தனர் இருவரும். “ஏன் கதிர் இந்த ஊர் பிடிக்கலையா என்று தமிழில் கேட்கவும், “சார் உங்களுக்கு தமிழ் தெரியுமா, இங்க யாரை பார்த்தாலும் ஹிந்தில தான் பேசுறாங்க

 

 

“நம்ம ஆபீஸ்ல ஒண்ணு ஹிந்தி இல்லைன்னா இங்கிலிஷ்ல தான் பேசுறாங்க. தமிழோட அருமை அதை பேச முடியாம இருக்கறப்ப தான் எனக்கு உணருது சார். நீங்க தமிழ் பேசுறது எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா சார்

 

 

“அதெல்லாம் இருக்கட்டும் கதிர், நீ எதுக்கு வேலை விட்டு போகணும்னு நினைக்கிற. தமிழ் பேச முடியலைன்னா என்றான் சுஜய். “இல்லை சார் எனக்கு இங்க சாப்பாடும் ஒத்துக்கலை. தினமும் சப்பாத்தி சாப்பிட என்னால முடியலை

 

 

“தென்தமிழ் நாடு சாப்பாடு இங்க விலை அதிகமா இருக்கு. தினமும் சாப்பிட கஷ்டம் சார், அதான் ஊருக்கு போயிடலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன் என்றான் கதிர். “இது ஒரு பெரிய விஷயமில்லையே கதிர், சரி ஒண்ணு பண்ணுவோம். இன்று மாலை வேலை முடிந்ததும் நீ கிளம்பி இரு நான் உன்னை ஒரு இடத்திற்கு அழைத்து செல்கிறேன் என்றான் சுஜய்.

 

“அய்யோ சார் எதுக்கு சார், அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நான் ஊருக்கு போய்டறேன் சார் என்றான் அவன். “நீ எதுவும் பேச வேண்டாம் கிளம்பி தயாரா இரு, நான் வர்றேன் இப்போ நீ வேலையை பாரு என்றுவிட்டு அங்கிருந்து அவன் நகர்ந்தான்.

 

 

அன்று மாலை அவனை அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டிற்கு சென்றான். பாண்டியன் அந்நேரம் வீட்டில் இருந்தார். மகன் இதுவரை இப்படி யாரையும் வீட்டிற்கு அழைத்து வந்திராததால் அவனை வித்தியாசமாக பார்த்தார். அதுவும் அலுவலகத்தில் வேலை செய்பவனை அவன் வீட்டிற்கு அழைத்து வந்ததே கிடையாது.

 

 

அவனுடைய நண்பன் கௌதமை தவிர வீட்டிற்கு வேறு யாரும் வந்ததேயில்லை. “வாப்பா என்று வரவேற்றார் அவர், கதிரோ கூச்சத்தில் நெளிந்தான். “வணக்கம் சார் என்று அவன் தமிழில் பேச அவரும் பதில் வணக்கம் கூறினார்.

 

 

“உள்ள வா கதிர் உட்காரு, நான் ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்திடுறேன் என்றவன் உள்ளே செல்ல பின்னோடு பாண்டியன் சென்றார். இருவருமாக ஐந்தே நிமிடத்தில் வெளியில் வர “ராமு அண்ணா என்று அழைத்தான் கதிர். “இவர் கதிர் நம்ம ஆபீஸ்ல தான் வேலை பார்க்குறார், எனக்கு தம்பி மாதிரின்னு வைச்சுக்கோங்களேன்

 

 

“இன்னைக்கு இங்க தான் சாப்பிட போறான், இன்னைக்கு மட்டும் இல்லை இனிமே அவனுக்கு உங்க கையால தான் சாப்பாடு என்றான் அவன். கதிர் எதுவும் விளங்காமல் அவனை பார்த்தான். “சார் என்றான் அவன். “சும்மா அண்ணான்னு கூப்பிடு கதிர், நீ இனிமே இங்கேயே தங்கிக்கலாம், ராமு அண்ணா ரொம்ப நல்லா சமைப்பாங்க என்றான் சுஜய்.

 

 

“சார் அதெல்லாம் வேணாம் சார், அய்யோ என்ன சார் இப்படி சொல்றீங்க என்று பதறினான் கதிர். “கதிர் அவன் சரியா தான் சொல்றான்பா, நீ நம்ம ஊர்க்காரன் இங்க வேலைக்கு வந்து தனியா தத்தளிக்கிற உனக்கு எங்களாலான ஒரு உதவி அவ்வளோ தான்

 

 

“அதுவும் இல்லாம நீ இங்க சும்மா ஒண்ணும் தங்க வேணாம், பேயிங் கெஸ்ட்டா தங்கிக்கோ. என்ன சுஜய் நான் சொல்றது சரி தானே என்றார் பாண்டியன். “அப்பா காசு எல்லாம் எதுக்கு என்று அவன் அவரை பார்க்க பதிலுக்கு அவர் மகனை அர்த்தத்துடன் பார்த்தார்.

 

 

“இல்லை சார் இதெல்லாம் சரியா வராது என்று அவன் மறுக்க, சுஜய்யோ “ஒண்ணும் சொல்ல வேணாம் கதிர், உனக்கு இங்க தங்க இஷ்டமில்லைன்னா நீ ராமு அண்ணாவோட தங்கிக்கோ. அவங்களும் உன்னை அவங்க பிள்ளையா பார்த்துக்குவாங்க. அவங்க வீடு இங்க பின்னாடி தான் இருக்கு என்று கதிரை பார்த்து சொன்னவன் இப்போது ராமுவை பார்த்து “என்ன அண்ணா பார்த்துக்குவீங்க தானே, லட்சுமி அண்ணி நீங்களும் தான் கதிரை பார்த்துக்குவீங்க தானே என்றான் சுஜய்.

 

 

“அதென்ன தம்பி இப்படி கேட்டுட்டீங்க நீங்க சொன்னா நாங்க செய்ய மாட்டோமா. தம்பியும் உங்களை போல தானே எங்களுக்கு என்று ராமு சட்டென்று அவருடைய சம்மதத்தை கூற வழக்கம் போல் லட்சுமி அவருக்கு ஆமாம் என்று பதில் கொடுத்தாள்.

 

 

கதிருக்கு சம்மதிப்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை. அன்று இரவு அங்கேயே சாப்பிட்டுவிட்டு அடுத்த வாரம் முதல் அங்கு வந்து தங்குவதாக கூறிவிட்டு சென்றான். அவன் ஊருக்கு கிளம்புவதற்கு முன் பாண்டியனுக்கு நெஞ்சு வலி என்று மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.

 

 

இப்போது அவர் உயிருடன் இல்லை என்பது அவனுக்கு வேதனையாக இருந்தது, சுஜயும் அவரும் பேசும் போது தந்தை மகன் போல் அல்லாது நண்பர்கள் போல் இருக்கும், சமயத்தில் அவனையும் அவர்கள் பேச்சில் இணைத்து எல்லோருமாக சந்தோசமாக பேசிக் கொண்டிருப்பர்.

சீக்கிரமே ஊருக்கு கிளம்ப வேண்டும், யாருமற்ற அந்த வீட்டில் சுஜய்க்கு தான் சென்று ஆறுதலாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு வயல்பட்டிக்கு வண்டி ஏறினான் கதிரேசன்.

 

 

 

  • காற்று வீசும்

Advertisement