Advertisement

அத்தியாயம் –4

 

 

சபையில் எல்லோரும் அமர்ந்திருக்க நடுவில் அமர்ந்திருந்த பெரியவர் தொடர்ந்தார். “பொண்ணோட தாய்மாமாவை சம்மதம் கேட்கணும், ஆனா இங்க அவரே அவர் மகனுக்கு பொண்ணு கேட்க உட்கார்ந்திருக்காரு என்று அவர் சொல்ல “மன்னிக்கணுங்க நான் கொஞ்சம் பேசணும் என்றார் ராஜேந்திரன்.

 

 

“இப்போ நான் தாய்மாமனா பேசறேங்க, என் மருமகளுக்கு என் பிள்ளையவே கட்டிக் கொடுக்கணும் விரும்பறேங்க. மீனாவை எங்க மகளா இனி நாங்க பார்த்துக்குவோம். பொண்ணுக்கு தாய்மாமனா எனக்கு பரிபூரண சம்மதங்க

 

 

“நம்ம ராசேந்திரனே தாய் மாமனாவும் பேசிட்டாப்புல, இனி என்னப்பா, பொண்ணை கூப்பிட்டு பூவைச்சுடலாம்ல என்றார் அவர். நிலைமை கைமீறி போவதை பார்த்த கதிருக்கு நெஞ்சு காய்ந்து நாக்கு உலர்ந்தது.

 

 

“அண்ணே என்று சொல்லி சுஜய்யின் கையை பிடிக்க அவன் கொடுத்த அழுத்தம் அவனுக்கு தெம்பை தர “அய்யா ஒரு நிமிஷங்க எனக்கு கொஞ்சம் பேசணும்

 

 

“என்னப்பா பேசப் போற அதான் உங்கப்பாரு எல்லாமே பேசிட்டாரே என்றார் அவர்.

 

 

“இல்லைங்க எனக்கு இங்க ஒண்ணு சொல்லணும், இந்த கல்யாணத்துல எனக்கு இஷ்டமில்லைங்க. எனக்கு பசும்பொன் எப்படியோ அப்படி தான் மீனாவும், தயவு செய்து இந்த கல்யாண பேச்சை இதோட விட்டுடலாமே

 

 

“ஏய் என்னடா பேசுற, அன்னைக்கு உன் சம்மதம் கேட்டு தானே நாம பேசினோம். என்னடா இங்க வந்து விளையாடிட்டு இருக்க என்று ராஜேந்திரன் குரலெடுத்து கத்த ஆரம்பிக்க “பொறு ராசேந்திரா, கதிரேசன் என்ன பேசணுமோ அதை பேசட்டும், ஏன்பா இந்த காதல் கீதல் எதுவும் பண்ணுறியா என்றார் அப்பெரியவர்.

 

 

“அய்யோ அப்படி எல்லாம் இல்லைங்கய்யா. எனக்கு மீனாவை கல்யாணம் பண்ணிக்கற எண்ணம் எல்லாம் இல்லைங்க. எனக்கு மீனாவும் பசும்பொன்னும் ஒரே மாதிரி தாங்க நினைக்க தோணுது.

 

 

“வேற எதுவும் சொல்றதுக்கு இல்லைங்க, இந்த கல்யாணம் வேணாம்ங்க, அன்னைக்கு எல்லாரும் வந்து என் கால்ல விழாத குறையா கேட்ட போது அவங்களை அப்போதைக்கு கஷ்டப்படுத்த வேணாம்னு தான் சரின்னு சொன்னேன்.

 

 

“அப்பவும் ஒரு வருஷம் ஆகட்டும்னு நான் நாளை கடத்தினேன், இப்படி திடுதிப்புன்னு இங்க வந்து நிற்கற மாதிரி ஆகும்ன்னு நான் நினைக்கலைங்க

 

 

“என்னப்பா புரியாம பேசிக்கிட்டு இருக்க, நீ சரின்னு சொல்லிட்டு போய்ட்ட. இப்போ அந்த பொண்ணு மனசுல ஒரு ஆசை வந்திருக்கும்ல. அதோட நிலைமையை நினைச்சு பார்த்தியா நீ. இப்ப வந்து இப்படி பேசிக்கிட்டு கிடக்க என்றார் பெரியவர்.

 

 

வேகமாக உள்ளிருந்து வந்தாள் மீனா. “எல்லாரும் என்னை மன்னிச்சுக்கணும், குறுக்க பேசறேன்னு நினைக்க வேண்டாம். கதிரேசன் சொன்னது தான் எனக்கும் தோணுச்சுங்க, எனக்கு ஒரு உடன்பிறப்பு இருந்தா எப்படி இருக்குமோ அப்படிதாங்க கதிரேசனும் எனக்கு

 

 

“அன்னைக்கு யாருமே இதை புரிஞ்சுக்காம அவன் கால்ல விழ போய் அவங்க கஷ்டப்படுறது பார்க்க முடியாம நாங்க இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டோம். எங்களை நீங்க சேர்த்து வைச்சா எங்களால நிச்சயம் கணவன் மனைவியா வாழ முடியாதுங்க. நான் யாரை வேணாலும் கட்டிக்கறேன், ஆனா கதிரேசனை என்னால கட்டிக்க முடியாதுங்க என்றாள் தெளிவாக.

 

 

மீனாவின் அன்னை மாலதியோ பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தார். கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது, “இல்லைங்க இவங்க சொல்ற மாதிரி இந்த கல்யாணத்தை நிறுத்த முடியாதுங்க. என் மருமகளை பத்தி ஊரே தப்பா பேசுதே. நாங்க பார்த்த ரெண்டு மாப்பிள்ளையும் அவங்கவங்க முடிவை அவங்களே தேடிகிட்டாங்க

 

 

“ஆனா பழியை எங்க பொண்ணு தாங்க சுமக்குறா, ஒரு தாய்மாமனா என் மருமகளோட பழியை தீர்க்க முடிவு பண்ணி தான் என் மகனை கட்டி வைக்க முடிவு பண்ணேன். இதுல என்னங்க தப்பு இருக்கு என்று அவர் கருத்தை முன்னிறுத்தினார் அவர்.

 

 

“ராசேந்திரா நீ சொல்றது எல்லாமே சரி தான், ஆனா சம்மந்தப்பட்ட ரெண்டு பேருக்கும் இதுல விருப்பம் இல்லை. நாம அவங்களை கட்டாயப்படுத்த முடியாது, உங்க வம்சம் தழைக்கணும், விருப்பமில்லாம இவங்க கல்யாணம் நடந்தா இதெல்லாம் நடக்குமா

 

 

“இப்போ நீங்க கல்யாணம் நடக்கலைன்னு கஷ்டப்படுறீங்க. இவங்க கல்யாணம் நடந்தா நீங்க நாளைக்கு இதை விடவும் கஷ்டப்படுவீங்க அவங்களை நினைச்சு. அது தான் நடக்கணும்னு நினைக்கிறியா ராசேந்திரா

 

 

“அதுனால நாம இந்த கல்யாண பேச்சை இதோட நிறுத்திக்குவோம். நம்ம மீனாவுக்கு என்ன தங்கமான பொண்ணு, இங்கயே சொந்தங்கள் எல்லாம் இருக்காங்க தானே அவங்கள்ள ஒரு பையனா பார்த்து முடிவு பண்ணிடுவோம்

 

 

“அப்போ நடராஜா உங்க பையனும் இந்த பொண்ணுக்கு தூரத்து முறையாகுதே, நீங்க என்ன சொல்றீங்க. ரொம்ப நல்ல பொண்ணுங்க என்று அவர் மீண்டும் எதையோ பேச ஆரம்பிக்க அந்த நடராஜனோ “என்னய்யா புரியாம பேசுறீங்க. என் மகனுக்கு ராசிங்காபுரத்தில பொண்ணு முடிவு பண்ணி பரிசமும் போட்டாச்சுங்க என்றார்.

 

 

“நம்ம ராணி கூட இங்க தானே இருக்கு, என்ன ராணி உன் மகன் அய்யாசாமியை நம்ம மீனாவுக்கு பேசலாமே. அவனும் முறைப்பையன் தானே என்றார் பெரியவர்.

 

அந்த ராணியோ “என்னங்க இப்படி சொல்லிட்டீங்க என் மகனுக்கு முத்துதேவன்பட்டில பொண்ணு பார்த்து ரெண்டு மாசம் ஆச்சுங்க. இன்னும் மூணு மாசத்துல அவனுக்கு கல்யாணம் வைக்கலாம் நினைச்சுட்டு இருக்கேன். இப்ப போய் இப்படி கேட்டுக்கிட்டு இருக்கீங்க என்றுவிட்டார் அவர்.

 

அங்கிருந்த அய்யாசாமியோ ‘நமக்கு தெரியாம இந்த அம்மா எப்ப போய் பொண்ணு பார்த்திட்டு வந்திச்சு, இன்னும் மூணு மாசத்த்கிலா கல்யாணம்ன்னு வேற சொல்லுது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

 

 

‘இந்த மீனாட்சியை பழிவாங்க இது தான் நல்ல சந்தர்ப்பம், எத்தனை முறை இவ என்னை கைநீட்டி அடிச்சிருப்பா, இவளை சும்மா விடக்கூடாது ஊர் முன்னாடி இவளை அவமானப்படுத்தி பழிக்கு பழி வாங்கணும் என்று முடிவெடுத்தான் அய்யாசாமி.

 

 

“யம்மா நீ எதுக்கு பொய் சொல்லிக்கிட்டு இவளை கட்டிக்கணும்ன்னு எவன் நினைச்சாலும் அவன் செத்து தானே போறான். அதை சொல்லுங்கம்மா, உண்மை சொல்லி வேணாம்ன்னு சொல்லுங்க

 

 

“இல்லன்னா இவங்களுக்கு எப்படி அது புரியும், இதுல இவளுக்கு இவ தான் அதிகம் இந்த ஊர்ல படிச்சிட்டோம்ன்னு நினைப்பு வேற. இந்த உலக அழகியை

கட்டிக்க அவனவன் வரிசையில நிப்பான்னு வேற இவளுக்கு நினைப்பு என்று சொல்லி அவன் வன்மத்தை எல்லாம் அங்கு தீர்த்துக் கொண்டிருந்தான் அவன்.

 

 

சுஜய்க்கு வந்த ஆத்திரத்தில் அவனை நாலு அறை நன்றாக அறைய வேண்டும் என்று தோன்றியது. இவன் தானே அவளிடம் தினமும் அடி வாங்குவான் என்று அவள் அன்று சொன்னாள், இந்த பெண்ணை பழிவாங்க இப்படி எல்லாம் பேசுகிறான் போலும் என்று நொடியில் அவனுக்கு புரிந்தது.

 

 

ஆளாளுக்கு அவளை வைத்து கூறு போட்டுக் கொண்டிருக்க அங்கு நின்றிருந்தவளின் நிலையோ பரிதாபமாய். கதிரேசனுக்கு மட்டும் நிச்சயம் அப்படி தோன்றியிராவிட்டால் அவன் கண்டிப்பாக அவளை திருமணம் செய்து கொண்டிருப்பான்.

 

 

அவள் இப்படி சபையில் வருத்தத்துடன் நின்றிருப்பது அவனுக்குமே வேதனையாக இருந்தது. மீனாவுக்கோ சந்தையில் விலை போகாத மாட்டை ஏதேதோ சொல்லி விலை பேசுவது போல் இருந்தது அக்கணம். இதற்கிடையில் அய்யாசாமி வேறு ஏதோ சொல்ல அவனை அப்புறம் கவனிக்க வேண்டும் என்று மனதிற்குள் கருவினாள் அவள்.

மிகவும் அவமானமாக உணர்ந்தாள் அவள், எதற்கும் எப்போதும் அவ்வளவாக கலங்காத அவளின் கண்களில் நீர்மணியாக கோர்க்க அது வழிந்து விடுமோ என்று எண்ணியவள் கண்ணை அங்குமிங்கும் உருட்ட, முடியாமல் அவள் விழிகளில் நீர் கசிந்து வழிந்தது.

 

 

மெதுவாக கண் மூடி திறந்த அவளின் நிலையை சுஜய்யும் பார்த்துக் கொண்டு தானிருந்தான். அங்கிருந்த எல்லோர் மீதும் கோபம் வந்தது அவனுக்கு என்ன மனிதர்கள் இவர்கள் ஒரு பெண்ணை நிற்க வைத்து நீ கட்டிக் கொள் நீ கட்டிக் கொள் என்று அவளை கூறு போட்டு விற்கின்றனர்.

 

 

ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள், நாக்கில் நரம்பில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வீட்டு பெண் என்றால் இப்படி எல்லாம் பேசுவார்களா என்று ஏதேதோ எண்ணியவனுக்கு அவளின் துயரை எப்படியாவது துடைக்க வேண்டும் என்று தோன்றியது.

 

 

‘இந்த பெண்ணுக்கு என்ன குறை எதற்காக இவளுக்கு இந்த நிலைமை, இவர்கள் எல்லோரிடமும் ஏன் கெஞ்ச வேண்டும். பேசாமல் இந்த பெண்ணை நானே திருமணம் செய்து கொண்டாள் என்ன என்ற எண்ணம் தோன்றிய அந்த கணம் சுஜய் சுதாரித்தான்.

 

 

‘எனக்கு ஏன் இப்படி எண்ணம் தோன்றியது என்று ஒரு புறமும் ‘அதில் என்ன தவறு என்று மறுபுறமும் தோன்ற அந்த நிமிடம் எந்த முடிவும் எடுக்க முடியாமல் தவித்தான் அவன்.

 

 

அவனுக்கு இது சரியா தவறா என்று இருவேறு விதமாக குழப்பம் மேலிட எப்போதும் இது போல் அவன் குழம்ப நேரத்தால் கண் மூடி இறந்த தந்தையையும் அன்னையையும் கண் முன் கொண்டு வந்து அவன் மனதார அவர்களிடம் பேசுவான்.

 

 

இப்போதும் அதையே அவன் செய்ய கண் திறவும் போது அவன் ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.கதிரேசனை அழைத்தான், “கதிர் எதுக்கு எல்லார்கிட்டயும் இப்படி அந்த பொண்ணை கட்டிக்க சொல்லி கெஞ்சணும், நானே அவங்களை கல்யாணம் பண்ணிக்கறேன் என்றான் அவன்.

 

 

“அண்ணே நீங்க என்ன சொல்றீங்கன்னு புரிஞ்சு தான் சொல்றீங்களா என்று கதிர் சொல்ல “ஆமாம் என்றான் அவன். மெதுவாக தொண்டையை கனைத்துக்கொண்டு “எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா

 

 

“நான் கொஞ்சம் பேசணும் என்றான், “யாருய்யா நீங்க என்ன பேசப் போறீங்க என்றார் ஊர் பெரியவர். “தயவு செய்து நீங்க எல்லார்கிட்டயும் கெஞ்சுவதை நிறுத்துங்க

 

 

“ஏதோ சந்தையில் மாட்டை விக்கற மாதிரி அவங்களோட நல்லது கெட்டது சொல்லிட்டு இருக்கீங்க, இதுக்கு மேல நீங்க அவங்களை அவமானப்படுத்த வேண்டாம். நீங்க யார்கிட்டயும் இனி கெஞ்ச வேண்டாம், நான் மனசார சொல்றேன். உங்க எல்லாருக்கும் சம்மதம்ன்னா நானே இந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கறேன்

 

 

“அப்புறம் அவர் சொன்ன மாதிரி இவங்களை கட்டிக்க எனக்கு எந்த பயமும் இல்லை. கோழைங்க தான் இதுக்கெல்லாம் பயப்படுவாங்க, நான் கோழையில்லை, இதுக்கு முன்னாடி இவங்களுக்கு நிச்சயம் பண்ணவங்க இறந்து போனது தற்செயலான ஒரு விஷயம்

 

 

“அந்த ரெண்டு பேரும் இறந்ததுக்கு அவங்க மட்டுமே காரணம், இதுல இவங்களை எல்லாரும் குறை சொல்றது ரொம்பவும் முட்டாள் தனமா இருக்கு. இப்படி ஆளாளுக்கு இவங்களை பேசுறதும் நல்லாயில்லை

 

 

அவள் மனதில் தோன்றியதை அவன் பேசுவதை வேடிக்கை பார்த்தவள் சுஜய் நானே திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னதை ஒரு அதிர்வுடன் கேட்டு நின்றுக் கொண்டிருந்தாள். அவன் பேசும் போது அவ்வூர் பெரியவர் இடையிட்டார்.

 

 

“நீங்க என்ன கேட்க போறீங்கன்னு எனக்கு தெரியும், நான் யாரு என்னன்னு கேட்க போறீங்க. நான் வெளியூர்காரன் தான் இந்த ஊர்க்காரன் இல்லை.நான் டெல்லியில இருக்கேன். என்னோட பேரு சுஜய், அப்பா பாண்டியன், அம்மா தீபிகா.

 

 

“நான் இந்த ஊர்ல பிறக்காம இருந்திருக்கலாம், ஆனா எங்கப்பாவுக்கு தமிழ்நாடு தான் சொந்த ஊர். அவங்க சொந்தபந்தம் எல்லாம் மதுரை, தேனி பக்கம் தான் இருக்கறதா சொல்லியிருக்காங்க

 

 

“என் அம்மா என்னோட சின்ன வயசிலேயே இறந்துட்டாங்க, அப்பா இப்போ ரெண்டு வருஷத்துக்கு முன்ன இறந்து போனார். அம்மாவும் அப்பாவும் காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டதால எங்க அப்பாவோட சொந்தம் எல்லாம் விலக்கி வைச்சுட்டாங்க

 

 

“அப்பா அதுக்கு அப்புறமும் பல முறை வந்து மன்னிப்பு கேட்டும் அவங்க ஏத்துக்கலை. அம்மாவோட சொந்தம் அவங்களை ஏத்துக்கிட்டாங்க, எனக்கு இப்போ சொந்தம்ன்னு சொல்லிக்க அவங்க தான் இருக்காங்க

 

 

“அம்மாவோட அண்ணணும், தம்பியும் அவங்க குடும்பமும் தான் இப்போ என்னோட சொந்தம். இதை தவிர டெல்லியில ஒரு கம்பெனி வைச்சு நடத்திட்டு வர்றேன் ஹைடெக் டிஜிட்டல் சர்வீஸஸ் எங்கப்பா ஆரம்பிச்சது அதை இப்போ நான் தான் பார்த்துக்கறேன்.

 

 

“அங்க எங்களுக்கு ஒரு சொந்த வீடு இருக்கு, அங்க மட்டுமில்லை சென்னையிலயும் ஒரு வீடும் ஆபீஸ் இருக்கு. இதெல்லாம் என் பெருமையை சொல்றதுக்காக நான் சொல்லலை ஒண்ணுமில்லாதவனுக்கு உங்க பொண்ணை கொடுக்கறதா நீங்க நினைக்கக் கூடாது இல்லையா அதுனால தான் இதையெல்லாம் சொல்லிட்டு இருக்கேன்.

 

 

“இதுல என்னோட வீட்டு முகவரி, அலுவலக முகவரி ரெண்டும் இருக்கு, என்னை பத்தி நீங்க விசாரிக்கணும்னா தாராளமா விசாரிங்க. என்னடா இப்படி திடுதிப்புன்னு கேட்டுட்டேன்னு நினைக்க வேண்டாம்

 

 

“உங்க பொண்ணை நிச்சயம் நான் நல்லா பார்த்துக்குவேன், உங்களுக்கு என் மேல நம்பிக்கை இருந்தா நீங்க என்னை நம்பி உங்க பொண்ணை கொடுங்க. அப்புறம் நான் இங்க இருந்தா உங்களால எதுவும் யோசிக்கவோ பேசவோ முடியாது. நான் தேனில தான் ஓர் ஹோட்டல் தான் தங்கி இருக்கேன், நான் கிளம்பறேன். நீங்க யோசிச்சு உங்க முடிவை சொல்லுங்க

 

 

“அப்புறம் நாங்க இங்க இன்னும் மூணு நாள் தான் இருப்பேன், உங்க முடிவை அதுக்குள்ளா சொன்னா எனக்கு வசதியா இருக்கும். நான் ஊருக்கு போறதா இருந்தா இங்க இருந்து கல்யாணம் முடிச்சுட்டு தான் போக முடியும்”.

 

 

“நான் இப்படி கேட்டது உங்களுக்கு எதுவும் தப்பாக தோன்றியிருந்தால்  என்னை மன்னிச்சுடுங்க. நான் போயிட்டு வர்றேங்க, கதிர் நான் கிளம்பறேன், எதுவா இருந்தாலும் எனக்கு ஒரு போன் பண்ணு என்று அவனிடம் தனியாக சொல்லிக் கொண்டு அவன் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டான். அப்பெரியவரோ திகைத்து அமர்ந்திருந்தாலும் சட்டென்று சுதாரித்தார்.

 

 

“கதிரேசா இந்த தம்பி யாரு என்று விசாரித்தார். “அய்யா அவங்க ஆபீஸ்ல தான் நான் வேலை பார்க்கறேன். ரொம்ப நல்ல மனுஷன் அவரு என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ராஜேந்திரன் மகனை முறைக்க அவன் வாயை மூடிக் கொண்டான்.

“ராசேந்திரா எனக்கென்னமோ அந்த தம்பியை பார்த்தா ரொம்ப நல்ல மாதிரியா தெரியுது. மோகனு உனக்கும் தான் சொல்றேன், இது உம் பொண்ணு வாழ்க்கை யோசிச்சு முடிவெடுங்க

 

 

“எனக்கு அந்த தம்பி பேசினதுல எந்த பொய்யும் இருக்கறதா தெரியலை, வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா அந்த தம்பி மனசுல பட்டதை அப்படியே கேட்டுட்டு போறார். அவங்க அப்பா பேரை பார்த்தா நம்ம வகையறா ஆளுங்க மாதிரி தான் தெரியுது

 

 

“நீங்க எல்லாரும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வாங்க. உங்களுக்கு சரின்னு பட்டா நாம அந்த தம்பிகிட்ட பேசுவோம் என்று சொல்லி எல்லோரும் கலைந்து சென்றனர். ராஜேந்திரனுக்கு இருந்த கோபத்தில் பாய்ந்து வந்து மகனின் சட்டையை கொத்தாக பற்றினார்.

 

 

“உன்னை இங்கேயே வெட்டி போட்டா தான்டா என் மனசு ஆறும் என்றவர் அவனை ஓங்கி அறைந்தார். “நீ கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்ற, உன் கூட ஊர்ல இருந்து கையோட ஒருத்தனை கூட்டிட்டு வருவா, அவன் என்னமோ நான் கட்டிக்கறேன்னு சொல்றான்

 

 

“என்னடா இதெல்லாம் பேசி வைச்சுட்டு நடக்குதா. முதல்ல கேட்கும் போது ரெண்டு பேரும் சரின்னு சொல்லிட்டு இப்போ வந்து ஊர் பெரியவங்க முன்னாடி எங்களை அவமானப்படுத்திட்டீங்கள்ள. இப்போ உங்களுக்கு சந்தோசமா என்று கர்ஜனை செய்தார் அவர்.

 

 

வேகமாக அவர் அருகில் வந்த மீனா “என்ன மாமா எங்களை குத்தம் சொல்றீங்க. அப்போ எங்க ரெண்டு பேருக்கும் சொல்லாம திடுதிப்புன்னு எங்களை கொண்டு வந்து சபையில நிக்க வைச்சீங்களே அது யாரோட தப்பு

 

 

“அது உங்களோட தப்பு, அன்னைக்கு எல்லாருமா சேர்ந்து இவனோட கால்ல விழுந்தீங்க. அவன் என்ன செய்வான் குடும்பத்துக்காக சரின்னு சொன்னான், ஒரு வருஷம் டைம் கேட்டான் எதுக்கு. ஒரு வேளை இந்த ஒரு வருஷத்தில் எங்க மனசு இல்லை உங்க மனசு மாறலாம்ன்னு தான்

 

 

“எங்க மனசும் மாறலை உங்க மனசும் மாறலை, இன்னைக்கு இப்படி ஒண்ணு நடக்க போகுதுன்னு எங்க ரெண்டு பேருக்குமே தெரியாம பண்ணியிருக்கீங்க. அப்படி நீங்க முதல்லேயே சொல்லியிருந்தா இப்படி ஊர் முன்னாடி எங்களுக்கும் சொல்ல வேண்டி இருந்திருக்காது

 

 

“அப்போ என்னம்மா சொல்ல வர்றே, அந்த தம்பி உன்னை கல்யாணம் பண்ணிக்கறேன்னு கேட்டுச்சே அதுக்கும் சரின்னு சொல்லுறியா.

 

 

“நாங்க அவமானப்படுத்திட்டோம்ன்னு சொன்னீங்க நான் அதுக்கு தான் பதில் சொன்னேன். மத்தப்படி கல்யாணத்தை பத்தி நீங்க என்ன முடிவெடுத்தாலும் நான் அதுக்கு குறுக்க நிக்க மாட்டேன்

 

 

“அதான் நாங்க எடுத்த முடிவை வேண்டாம்ன்னு சொல்லிட்டீங்களே, இப்போ மட்டும் என்ன சொல்லப் போறீங்க

 

 

“மாமா அதுக்கு உங்களுக்கு நாங்க ரெண்டு பேருமே சபையில விளக்கம் கொடுத்திட்டோமே. எங்க ரெண்டு பேருக்குமே அப்படி ஒரு எண்ணம் வந்திருக்கவே இல்லை. அது தான் உண்மை புரிஞ்சுக்கோங்க

 

 

அங்கு நடப்பதை எதுவும் செய்ய இயலாமல் பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சி உள்ளே அறையில் படுத்திருந்த ஈஸ்வரன் குரல் கொடுக்க வேகமாக உள்ளே சென்றார். “வெளிய கூட்டி போ என்றவரை மெதுவாக தாங்கி வெளியில் கூட்டி வந்தார்.

 

 

“இங்க நடந்தது எல்லாம் நான் கேட்டுட்டு தான் இருந்தேன். இப்போ என் பேத்திக்கு கல்யாணம் நடக்கணும், நாமளா தேடி பிடிச்சு பார்த்த எந்த மாப்பிள்ளையும் என் பேத்திக்கு சரியா அமையலை. தானா வந்த வரனை ஏன் நாம தட்டி கழிக்கணும்

 

 

“அந்த தம்பிக்கே நம்ம வீட்டு பொண்ணை கொடுத்திடலாம், இந்த கல்யாணத்தோட பசும்பொன் கல்யாணமும் சேர்த்து வைச்சுட்டா ரெண்டையும் பார்த்திட்டு நான் நிம்மதியா கண்ணை மூடுவேன் என்று அவர் திக்கி திக்கி பேசி முடித்து மூச்சு வாங்கினார்.

 

 

காமாட்சி அவருக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க மீனாட்சி அதை வாங்கி அவருக்கு புகட்டினார். கைத்தாங்கலாக அவரை தாங்கியவர் அங்கிருந்த கட்டிலில் ஈஸ்வரனை அமர்த்தினார்.“மாப்பிள்ளை நாங்க முடிவேடுக்குறோம்ன்னு நினைக்காதீங்க, நீங்க தான் இதுல சம்மதம் சொல்ல வேண்டியவர். நீங்க என்ன சொல்றீங்க என்றார் மீனாட்சி.

 

 

அவரோ “எனக்கு என் பொண்ணுக்கு கல்யாணம் நடக்கணும், ஊர்ல அவனவன் நாக்கு மேல பல்லு போட்டு பேசுறாங்க, என் பொண்ணுக்கு என்ன குறை. அவ மகாராணி அவளை யாரும் தப்பா பேசுறதை பார்க்க என்னால முடியலை. எனக்கு அவளோட கல்யாணம் நடக்கணும் அது மட்டும் தான் முக்கியம். எனக்கு இந்த கல்யாணத்துல முழு சம்மதம் என்றார் அவர்.

 

 

ராஜேந்திரன் இன்னும் வீம்பாகவே இருந்தார். “அப்பா நான் சொல்றதை கேளுங்க, அவர் இப்படி கேட்பார்ன்னு நான் சத்தியமா எதிர்பார்க்கலைப்பா. ஏன் அவரும் கூட எதையும் திட்டம் போட்டு செய்யலைப்பா. நானும் எந்த திட்டமும் போடலை, நம்ம மீனாவை வைச்சு ஆளாளுக்கு பேசும் போது எனக்கும் கோபம் வந்துச்சு

 

 

“எனக்குள்ள இப்படி சகோதர பாசம் மட்டும் வந்திருக்கலைன்னா சத்தியமா சொல்றேன்ப்பா, நான் மீனாவை கல்யாணம் பண்ணியிருந்திருப்பேன். மீனா யாருப்பா நம்ம வீட்டு பொண்ணு அதுக்கு ஒரு அவமானம் வர்றது என்னாலே தாங்க முடியலை

 

 

“அதை பார்த்திட்டு இருந்த அவரும் தாங்க முடியாம தான் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கார். நம்ம வீட்டு பொண்ணு பல பேர் இருக்க சபையில அவமானப்படக் கூடாதுன்னு அந்த அவமானத்தை துடைக்க தன்னாலான முயற்சி எடுத்திருக்கார்

 

 

“நம்ம மீனாவோட அவமானத்தை துடைக்கணும் அவருக்கு என்னப்பா தலையெழுத்து, ஆனாலும் அவர் அதை செய்ய நினைச்சு இருக்கார். நிச்சயம் அவர் நம்ம மீனாவை நல்லா பார்த்துக்குவார்

 

 

“நமக்கு விருப்பம் இருந்தா சரின்னு சொல்லுவோம், இல்லன்னா வேண்டாம்ன்னு சொல்லுவோம். அதை விட்டு அவர் கேட்டது தப்புன்னு சொல்லாதீங்கப்பா. உங்களுக்கு ஒண்ணு தெரியுமா நான் டெல்லியில எங்கயோ ஒரு இடத்துல தங்கிட்டு இருக்கறதா தான் நீங்க எல்லாரும் நினைச்சுட்டு இருக்கீங்க

 

 

“அங்க நான் தங்கிட்டு இருக்கறது அவரோட வீட்டில தான். அங்க வேலைக்கு போன புதுசுல எனக்கு அந்த ஊரு ஒத்துக்காம வேலையும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்னு ஊருக்கே வந்திடலாம்ன்னு வெறுத்து போய் இருந்தவனை, அப்பாவும் பிள்ளையும் சேர்ந்து தான் மாத்தினாங்க

 

 

“என்னை அவங்க வீட்டுக்கு கூட்டி போய் என்னை என்னனென்னவோ சமாதானம் செய்து அங்கேயே தங்க வைச்சாங்க. வீட்டு சாப்பாடு கிடைக்க ஏற்பாடு செஞ்சாங்க, அவங்க வீட்டிலேயே தான் நான் சாப்பிட்டு தங்கி இருந்தேன்

“என்னை யாரோவா நினைச்சு அவங்க பேசாம விட்டிருக்கலாம், எனக்கென்னன்னு போயிருக்கலாம். ஆனா என்னை அவங்க பிள்ளை மாதிரி பார்த்துக்கிட்டாங்க. என்கிட்ட அவங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அவங்க ரொம்ப நல்ல மாதிரி, இத்தனை நாள் நான் அவங்க கூடவே இருந்திருக்கேன்

 

 

“நீங்க என்னை எந்த அளவுக்கு நம்புவீங்களோ அதைவிட அதிகமா அவரை நீங்க நம்பலாம். இதுக்கு மேல நான் சொல்றதுக்கு எதுவுமில்லைப்பா. அப்புறம் மாமா அத்தை நான் அப்பாவை சமாதானப்படுத்த இதை சொல்லலை. அந்த சாரை பத்தி நீங்க தெரிஞ்சுக்கணும்ன்னு தான் சொன்னேன்

 

 

அங்கு அமைதி நிலவ மீனாட்சி “என்ன எல்லாருக்கும் இன்னும் யோசனை, அதான் உங்கப்பாவே சொல்லிட்டாங்களே இந்த கல்யாணம் நடக்கட்டும்ன்னு. உங்கப்பா சொன்னா சரியாவே இருக்கும், பெரும்பாலும் உங்கப்பா ஒரு முடிவெடுத்தாலோ எதுவும் சொன்னாலோ அது அப்படியே நடந்திருக்கு

 

 

“இது வரைக்கும் பார்த்த ரெண்டு மாப்பிள்ளைக்கும் உங்கப்பா எதுவுமே சொன்னதில்லை. என்னமோ இந்த கல்யாணம் நடக்கணும்ன்னு அவர் நினைக்கிறார், எனக்கும் அது தான் சரின்னு படுது. அவர் சொன்ன மாதிரி கல்யாணத்தை ஏற்பாடு பண்ணுங்க

 

 

“பசும்பொன்னுக்கும் மாப்பிள்ளை தயாரா தான் இருக்கார், ஒரு எட்டு அவங்ககிட்டயும் பேசிட்டு ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணாவே நடத்திடுவோம் என்றார்.

 

 

“ராசேந்திரா இன்னும் என்ன யோசனை உனக்கு என்றவரிடம் “இம் ஒண்ணுமில்லைம்மா கல்யாணத்தை நாம முத குறிச்ச தேதியிலேயே வைச்சுக்கலாமான்னு யோசிச்சுகிட்டு இருந்தேன். என்ன அப்படி பார்க்கறீங்க, நீங்க வேணா உங்கப்பா பேச்சை கேட்காமல் இருக்கலாம். எங்கப்பா பேச்சை கேட்டு தான் எங்களுக்கு பழக்கம் என்றார் அவர் நறுக்கு தெரித்தாற்போல்.

 

 

‘இப்போ கூட யாருக்கும் என்கிட்ட சம்மதம் கேட்கணும்னு தோணவே இல்லையே என்று நினைத்துக்கொண்டாள் மீனா. “அப்போ நாம அந்த தம்பியை நேர்ல பார்த்து பேசிட்டு வந்திடலாமே. மேற்கொண்டு அவரை பத்தி எதுவும் விசாரிக்கணும்ன்னா விசாரிச்சுக்கலாம், என்ன சொல்றீங்க மச்சான் என்றார் ராஜேந்திரன் ராஜ் மோகனை பார்த்து.

 

 

“திலகா முருகேசன் மச்சான்கிட்டயும் சொல்லிடு இங்க நடந்தது எல்லாம், நீ பேசிட்டு கொடு நாங்களும் பேசிடறோம். மாப்பிள்ளையை பார்க்க அவரும் வரணும், அவரை நேரா போடில இருந்து தேனிக்கு வரச் சொல்லிடுவோம் என்று அவர்பாட்டுக்கு பேசிக் கொண்டேயிருந்தார்.

 

 

அன்று மாலையே எல்லோரும் கிளம்பி அவர்கள் சம்மதத்தை சுஜய்யிடம் தெரிவிக்க தேனி கிளம்பிச் சென்றனர். அவன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு செல்ல ராஜேந்திரன் மகனிடம் “இந்த ஹோட்டல்லயா தங்கியிருக்கார் என்று கேட்டார்.

 

 

“ஆமாப்பா நம்ம தேனில இந்த ஹோட்டல் தான் கொஞ்சம் பெரிசு, நான் தான் அவருக்கு இங்க ரூம் போட்டு கொடுத்தேன் என்றான் கதிர். ‘உண்மையாவே பெரிய ஆளு தான் போல என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டார் ராஜேந்திரன்.

 

 

கதிர் கிளம்பும் முன் அவர்கள் வரப்போகும் விஷயத்தை பற்றி சுஜய்க்கு போனில் தகவல் தெரிவித்திருக்க அவன் அங்கு வரவேற்ப்பரையிலே காத்திருந்தான் அவர்கள் வருகையை நோக்கி.

 

 

வந்தவர்களை வரவேற்று அங்கிருந்த உணவகத்திற்கு அழைத்துச் சென்றான். எல்லோருக்கும் ஜூஸ் சொல்லிவிட்டு சிறிது நேரம் கழித்து எடுத்து வரச்சொல்லி விட்டு அவர்களை பார்த்தான்.

 

 

எல்லோருமே ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தனர், என்ன பேசுவது எப்படி ஆரம்பிப்பது என்று முழிக்க, திலகவதியின் கணவர் முருகேசன் பேச்சை ஆரம்பித்தார்.

 

 

“நான் உங்க சின்ன மாமா தான் மாப்பிள்ளை, எல்லாரும் கொஞ்சம் பேச தயங்குறாங்க. நானே சொல்லிடுறேன், எங்க எல்லாருக்கும் முழு சம்மதங்க உங்களுக்கு பொண்ணு கொடுக்க, உங்க வீட்டில இருந்து முறைப்படி வேற யாரும் வந்து பேசுவாங்களா என்றார்.

 

 

“இல்லைங்க மாமா எனக்கு சொந்தம்னு இருக்கறது என்னோட ரெண்டு மாமாவும் தான். நாம கல்யாண தேதி முடிவு பண்ணிட்டு அவங்களை வரச் சொன்னா அவங்க வந்திடுவாங்க

 

 

“இல்லைங்க மாப்பிள்ளை அது முறையா இருக்காதுங்க வேணுமின்னா ஒண்ணு செய்வோம், அவங்களை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வரச் சொல்லிடுங்க, நாம முதல்ல பரிசம் போட்டுடுவோம், அப்புறம் ஏற்கனவே குறிச்ச தேதியில கல்யாணம் நடத்திடலாம்

 

“அப்படியே ஆகட்டும் மாமா, நான் அவங்களை நாளைக்கே கிளம்பச் சொல்லறேன் அவங்க ரெண்டு நாள்ல வந்திடுவாங்க, சரிங்களா

 

 

“அப்புறம் மாப்பிள்ளை ஏற்கனவே குறிச்ச தேதிக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. அந்த தேதி உங்களுக்கு பரவாயில்லைங்களா இல்லை வேற தேதி பார்க்கலாங்களா

 

 

“அதெல்லாம் எதுவும் மாத்த வேண்டாம் மாமா என்றான்.

 

 

“என்ன அண்ணே உங்களுக்கு எதுவும் கேட்கணுமா நான் சொன்னது எல்லாம் சரி தானே, என்ன மச்சான் உங்களுக்கு எதுவும் ஆட்சேபனை எதுவும் இருக்கா முருகேசன்.

 

 

ராஜ் மோகன் தயங்கியவாறே ஆரம்பித்தார், “இல்லை தப்பா எடுத்துக்காதீங்க மாப்பிள்ளை, நீங்க கல்யாணம் முடிச்சதும் டெல்லிக்கு தான் போய்டுவீங்களா என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூறினார்.

 

 

“இங்க பக்கத்துல எங்கயும் இருக்க மாட்டீங்களா, நாங்க நினைச்சதும் வந்து உங்களை பார்க்க முடியாதா

 

 

“என்ன மாமா டெல்லி என்ன வெளிநாட்டுலய இருக்கு, இங்க உள்ளூர் தானே. ரயில்ல கிளம்புனீங்கன்னா ரெண்டு நாள்ல வந்திட போறீங்க. இதுக்கு போய் வருத்தப்பட்டுக்கிட்டு, அப்புறம் நீங்க இவ்வளவு கவலைப்படுறதுனால சொல்லறேன்

 

 

“நான் கல்யாணம் பண்ணிகிட்டா தமிழ்நாட்டு பொண்ணு தான் கட்டிக்குவேன்னு எங்கப்பாகிட்ட சொல்லியிருந்தேன். அதுனால தான் அப்பா சென்னையில ஓர் ஆபீஸ் தொடங்கி வீடும் வாங்கினாங்க

 

 

“டெல்லியில கொஞ்ச நாட்கள் இருக்க வேண்டி இருக்கும், அங்க கொஞ்சம் வேலை எல்லாம் முடிச்சுட்டு அப்புறம் சென்னை வந்து அங்கேயே நிரந்தரமா குடியேறிடுவோம்

 

 

“டெல்லியை விட உங்களுக்கு சென்னை பக்கம் தானே மாமா, இப்போ உங்களுக்கு ஒண்ணும் வருத்தமில்லையே

 

 

அவர் முகம் திருப்தியில் மலர்வது தெரிந்தது. “சந்தோசங்க மாப்பிள்ளை என்றார் வாய்விட்டு. “என்ன மாமா உங்களுக்கு எதுவும் கேட்கணுமா என்று ராஜேந்திரனை பார்த்து முருகேசன் கேட்க “இல்லை மச்சான் எதுவும் கேட்கறதுக்கு இல்லை என்றார்.

 

 

“அப்புறம் மாமா நீங்க தான் மாப்பிள்ளைக்கு அப்பா ஸ்தானத்தில இருந்து கல்யாணம் முடிக்கணும். பொண்ணுக்கு தாய் மாமா நீங்க தான் உங்களுக்கு வேற எதுவும் ஆட்சேபனை இருக்கா– முருகேசன்.

 

 

“எனக்கு பூரண திருப்தி மச்சான், இனி அவர் என்னோட மூத்த மகன் இந்த கல்யாணம் இனி எங்க பொறுப்பு – ராஜேந்திரன்.

 

 

“கேட்குறேன்னு தப்பா நினைக்காதீங்க, எனக்கு இந்த ஊர் பழக்க வழக்கம் எல்லாம் எதுவும் தெரியாது. கல்யாணத்துக்கு நான் என்ன செய்யணும்னு சொன்னீங்கன்னா நான் அதெல்லாம் செஞ்சிடுவேன்– சுஜய்

 

 

“அண்ணே அதெல்லாம் ஒண்ணும் கவலைப்பட வேண்டாம், நாங்க இருக்கோம். எல்லாரும் சேர்ந்து பார்த்துக்கலாம், எப்படியும் நம்ம வீட்டிலையும் பசும்பொன்னுக்கும் சேர்த்து தான் கல்யாணம் வைச்சு இருக்கோம், என்ன செய்யணுமோ எல்லாம் சேர்த்தே பண்ணிக்கலாம்– கதிரேசன்.

 

 

எல்லோரும் ஜூஸ் குடித்துவிட்டு கிளம்ப சுஜய் எல்லோருக்கும் டிபனும் சேர்த்து சொல்லியிருக்க சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து அவர்கள் கிளம்பினர்.

 

 

கதிரேசன் சற்று தேங்க “என்ன கதிர் என்ன விஷயம் என்கிட்ட எதுவும் கேட்கணுமா– சுஜய்

 

 

“அண்ணே மீனா அன்னைக்கு உங்ககிட்ட நடந்துக்கிட்டது எதுவும் மனசில வைச்சிக்காதீங்கண்ணே. மீனா ரொம்ப நல்ல பொண்ணு, தப்புன்னு தெரிஞ்சா சும்மா இருக்காது அது போல அவ மேல தப்பு எதுவும் இருந்தா உடனே மன்னிப்பு கேட்கவும் தயங்கமாட்டா– கதிரேசன்

 

 

அவன் பேச்சில் இடைமறித்த சுஜய் “ஏன் கதிர் அன்னைக்கு நடந்ததுக்கு நான் பழி வாங்குறேன்னு நினைக்கிறியா என்றான்.

 

 

“அய்யோ அப்படி எல்லாம் இல்லைண்ணே, எனக்கு உங்களையும் தெரியும் மீனாவையும் தெரியும். அன்னைக்கு நடந்த தப்புக்கு மீனா தான் காரணம், அது தப்புன்னு தெரிஞ்சதும் ஒண்ணுக்கு ரெண்டு தடவை அவ உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுட்டா

“நீங்க அதையெல்லாம் மனசுல வைக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும், இருந்தாலும் மீனாவை பத்தி நீங்க தெரிஞ்சுக்கறதுக்கா தான் நான் இதையெல்லாம் சொன்னேன், வேற எதுவுமில்லைண்ணே நீங்க தப்பா எடுத்துக்காதீங்க– கதிரேசன்.

 

 

“மீனுவை யாரும் எதுவும் சொல்ல வேண்டாம், இனி நான் அவளோட பழகி அவளை பத்தி தெரிஞ்சுக்கறேன். சரியா கதிர், அப்புறம் உங்க மீனாவை நான் கண்டிப்பா ரொம்ப பத்திரமா கண்ணு கலங்காம பார்த்துக்கறேன் போதுமா என்றான் சிரிப்புடன்.

 

 

“அந்த நம்பிக்கை எங்க எல்லாருக்குமே இப்போ இருக்குதுண்ணே, உங்க பேச்சு எல்லாருக்குமே பிடிச்சிருக்கு. தாத்தாவே இந்த கல்யாணம் நடக்கணும்ன்னு சொல்லிட்டாங்கன்னா பாருங்களேன்– கதிரேசன்

 

 

“தாத்தா சொன்னாங்களா என்றான் சுஜய் ஒரு மாதிரி குரலில், “ஆமாம் என்றவன் வீட்டில் நடந்த பேச்சு வார்த்தையை அப்படியே சொன்னான்.

 

 

 

  • காற்று வீசும்

Advertisement