Advertisement

அத்தியாயம் –3

 

 

“ஹலோ எங்கயா வேடிக்கை பார்க்குற, உன்னை கூப்பிட்டா வேற எங்கயோ பார்க்குற, லூசா நீ என்றாள் அந்த பெண். “இல்லை நீங்க யாரையோ பேரு சொல்லி கூப்பிட்ட மாதிரி இருந்தது, அதான் பார்த்தேன் என்றான் சுஜய்.

 

 

“உன்னை தான் சொட்டை மண்டைன்னு கூப்பிட்டேன் வேற யாரையும் இல்லை. இப்படி நடக்குற வழியில வண்டியை நிறுத்தி வைச்சுட்டு நீ இந்த பக்கமும் அந்த பக்கமும் சுத்தி சுத்தி வந்து படம் புடிச்சுட்டு இருக்க, நாங்க எப்படி நடந்து போறதாம் என்றாள் அவள்.

 

 

“என் பேரு சொட்டை மண்டை இல்லைங்க என் பேரு சுஜய்,  நீங்க ஏன் அப்படி கூப்பிட்டீங்க என்றான் அவனும் விடாமல். “இம்ம் உன் முன் மண்டையில காலியா தானே இருக்கு, உன்னை சொட்டை மண்டைன்னு கூப்பிடாம சூர்யா, அஜித்ன்னா கூப்பிட முடியும்

 

 

“யோவ் உன்னை வழியை விடச்சொன்னா என்கிட்ட தேவை இல்லாத கதை எல்லாம் பேசிட்டு வழியை விடுய்யா என்றாள் அவள். சுஜய்யோ அவள் பேசியதில் அதிர்ந்து நின்றிருந்தான். இதுவரை யாரும் அவனை இப்படி பேசியதே இல்லை.

 

 

சுஜய்க்கு அவன் தாய் மாமன்கள் போன்ற தலை முடி, அவன் கல்லூரி படிக்கும் போதே அவன் முன்னிச்சி தலைமுடி கொட்டிவிட்டது. டெல்லியில் இது பற்றி யாரும் அவனை கேலி செய்து பேசியதில்லை, முதன் முறையாக வழியில் செல்லும் பெண்ணொருத்தி இப்படி பேசியதில் சற்றே திகைத்து போனான் அவன்.

 

 

“என்னய்யா திரு திருன்னு முழிக்கிற நீ என்ன ஜப்பான்ல இருந்தா வந்திருக்க, நான் என்ன பேசுறேன்னு உனக்கு புரியலை என்று அவள் சொல்ல “இல்லைங்க டெல்லில இருந்து வர்றேன் என்றான் அவன். “இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. இவரு பெரிய பாரதிராஜா வழியை மறிச்சு நின்னுகிட்டு படம் எடுத்துகிட்டு இருக்காரு. வழியை விடேன்ய்யா என்றாள் அவள் மீண்டும்.

 

 

அதற்குள் கதிர் வேகமாக அந்த இடத்திற்கு வர “என்ன மீனா நீ எங்க இங்க, என்ன பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்க இங்க என்றான் அவன். “இம் இங்க சினேகிதி ஒருத்தியை பார்க்க வந்தேன். இந்த சொட்டை மண்டை வழியை மறிச்சுக்கிட்டு நிக்குது

 

 

“பட்டிக்காட்டான் முட்டாய் கடையை பார்த்தா போல பார்த்துக்கிட்டு நிக்கறதை பாரு என்றாள் அவள். “மீனா கொஞ்சம் வாயை மூடு, நான் எங்க சாரை ஊர்ல இருந்து கூட்டிட்டு வர்றேன்னு சொன்னேன்ல, இவர் தான் நான் வேலை செய்யற ஆபீஸ் முதலாளி, நம்ம ஊர் திருவிழாக்கு கூட்டிட்டு வந்திருக்கேன்

 

 

“நீ என்னென்னமோ பேசிட்டு இருக்க, கொஞ்சம் வாயை அடக்கி பழகு மீனா என்றான் அவன். “இவர் முதலாளின்னா உனக்கு, எனக்கில்லை எனக்கென்ன பயம் இவர்கிட்ட என்று முகவாயை இடித்தாள் அவள். “சரி போய் வண்டில ஏறு, வீட்டில விடறேன்

 

 

“அண்ணே நீங்க இவ பேசினதை எதுவும் மனசுல வைச்சுக்காதீங்க, இவ எப்போமே இப்படி தான் ஏட்டிக்கு போட்டியா பேசுவா. மன்னிச்சுடுங்க அண்ணே என்று அவள் சார்பாக அவனிடம் மன்னிப்பு வேண்டினான். சுஜய் அவளை திரும்பி பார்க்க அவளோ எதுவுமே நடக்காதது போல் காரின் பின்பக்க கதவை திறந்து ஏறினாள்.

 

 

“விடு கதிர் நான் எதுவும் தப்பா எடுத்துக்கலை, போகலாம் என்றான் சுஜய். ஒருவழியாக அவர்கள் வீடு வந்து சேர்ந்தனர். மீனா வண்டியில் இருந்து இறங்கி நேரே உள்ளே சென்றுவிட்டாள். “வாங்கண்ணே உள்ளே போகலாம் என்ற கதிர் அவன் உடைமைகளை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

 

 

மீனாட்சி வாசலுக்கே வந்து அவனை வரவேற்றார், சுஜய் அவரை பார்த்து கைகூப்பினான். “அண்ணே இவங்க தான் பாட்டி என்றான் கதிர். “இம்ம் தெரியுது கதிர் போட்டோல காட்டியிருக்கியே என்றவன் மீனாட்சியின் பாதம் தொட்டு வணங்கினான்.

 

 

“என்னய்யா இது என் காலை தொட்டு கும்பிட்டுகிட்டு நல்லாயிருய்யா என்றார் மீனாட்சி. “பாட்டி அங்க ஊர்ல எல்லாம் இப்படி தான் பாட்டி என்றான் கதிர். அவர்கள் உள்ளே நுழைய கதிரின் அன்னை காமாட்சியும் எதிரில் வந்து அவனை அன்புடன் வரவேற்றார் அவரையும் வணங்கினான் சுஜய்.

 

 

குனிந்து கதிரின் காதில் முணுமுணுத்தான் சுஜய், “என்ன கதிர் என்னை பத்தி ஏற்கனவே உங்க வீட்டில சொல்லிட்டியா என்றான் அவன். “ஆமாண்ணே உங்களை பத்தி வீட்டில நெறைய சொல்லியிருக்கேன் என்றான் அவனும் பதிலுக்கு.

 

 

“கதிரேசா தம்பியை மாடில இருக்கற ரூமுல தங்கவைய்யா என்றவர், “அய்யா நீங்க மேல போய் ரெஸ்ட் எடுங்க, நான் டிபன் மேல கொடுத்து அனுப்பறேன் என்றார் அவர். “சரிங்க பாட்டி என்று அவரிடம் தலையசைத்து கதிரின் பின்னால் சென்றான் சுஜய்.

 

 

இதுவரை யார் வீட்டிலும் தங்கியதேயிராத சுஜய் முதன் முறையாக கதிரின் ஊருக்கு வந்து அவன் வீட்டில் தங்குகிறான். டெல்லியில் அவன் மாமா வீட்டிற்கு சென்றால் கூட அவன் அவர்கள் வீட்டில் எல்லாம் தங்கியதே இல்லை.

 

 

இது முற்றிலும் புதிதாக தோன்றியது அவனுக்கு, கதிர் அவனை அந்த அறையில் தங்க வைத்துவிட்டு கிழே இறங்கி சென்றுவிட்டான். முற்றம் வைத்து கட்டப்பட்டிருந்த அழகிய கிராமத்து வீடு அது. அங்கிருந்த சன்னலை மெதுவாக திறந்தவன் கண்களில் பசுமை கண்ணுக்கு தெரிய தூரத்தே மலையும் அதை சூழ்ந்த பனிப்புகையும் தெரிந்தது.

 

 

கண்ணார அதை கண்டு ரசித்தவன் அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தான். இப்படி வித்தியாசமான வீட்டை அவன் டில்லியில் பார்த்ததில்லை. மரக்கதவு, மரபீரோ, மர அலமாரி, மரத்திலான மேசை, மரத்திலான தூண்கள் என்று இருந்த அந்த வீடு அவனுக்கு பிடித்தது.

 

 

சற்று சாய்ந்தாற்போல் அமர்ந்தவன் லேசாக அடித்த காற்றில் தன்னை மீறி அவன் உறங்கியிருந்தான். எவ்வளவு நேரம் உறங்கியிருப்பானோ கதிர் வந்து அவனை தட்டி எழுப்ப பதறி எழுந்து அமர்ந்தான் அவன். “கதிர் ரொம்ப நேரம் தூங்கி போயிட்டேன் சாரி என்றான் சுஜய்.

 

 

“அதெல்லாம் ஒண்ணுமில்லை அண்ணே, நீங்க இன்னும் காலை சாப்பாடு சாப்பிடவே இல்லை. மணி மதியத்தை தொட்டிருச்சு, அதான் பாட்டி உங்களை எழுப்பி சாப்பிட கூட்டிட்டு வரச்சொன்னாங்க. காலையில நல்லா அசந்து தூங்கிட்டீங்க அதான் எழுப்ப மனசு வரலைண்ணே என்றான் கதிர். “என்னது மதியமா அடக்கடவுளே எவ்வளவு நேரம் தூங்கியிருக்கேன்

 

 

“கதிர் மறந்துட்டேன் என்றவன் அவன் எல்லோருக்கும் எடுத்து வந்த உடைகள் அடங்கிய பையை அவனிடம் கொடுத்தான். “என்னதுண்ணே இது என்று அவன் கேட்க “முதல் முதலா நான் இப்படி ஒருத்தர் வீட்டுக்கு வந்திருக்கேன், கெளதம்கிட்ட கேட்டேன் அவன் தான் சொன்னான் திருவிழாக்கு போறதுனால எல்லாருக்கும் துணி எடுத்து போக சொல்லி அதான் எடுத்தேன் கதிர்

 

 

“இதை எல்லாருக்கும் கொடுத்திடு நான் வாங்கி கொடுத்ததா சொல்லாதே, நீ வாங்கி கொடுத்ததா சொல்லி கொடுத்திரு. நான் கொடுத்தா யாரும் வாங்க தயங்குவாங்க, ப்ளீஸ் கதிர் வேணாம்னு சொல்லிடாதே என்றான் சுஜய்.

 

 

“அண்ணே நீங்க எதுக்கு துணிமணி எல்லாம் எடுத்திட்டு நாங்க உங்களுக்கும் சேர்த்து எடுத்திருக்கோம், நீங்க என்னடான்னா எங்களுக்கு எடுத்து வந்திருக்கீங்க. சரி நானே இதை எல்லாருக்கும் கொடுத்திர்றேன் என்றவன் முடிப்பதற்குள் சுஜய் ஏதோ சொல்ல வர “கண்டிப்பா நானே வாங்கி தந்தேன்னு சொல்லி கொடுத்துடுறேன் போதுமாண்ணே என்றதும் தான் சுஜய்யின் முகம் மலர்ந்தது.

 

 

“அப்புறம் கதிர் நான் குளிக்கணும், குளிச்சுட்டு சாப்பிடுறேனே என்றவனை கதிர் பின்கட்டுக்கு அழைத்துச் சென்றான். “இங்க குளிங்கண்ணே, நாளைக்கு வேணா நாம ஆத்துக்கு போய் குளிக்கலாம் என்றுவிட்டு கதிர் அங்கிருந்து நகர்ந்தான்.

 

 

இதென்ன பாத்ரூம்ல மேல ஓலை போட்டிருக்காங்க, சுற்றி சுற்றி பார்த்தவன் அங்கிருந்த கொடியில் துண்டை போட்டுவிட்டு வளாவி வைத்திருந்த வெந்நீரில் குளித்தான். இதமான சூட்டுடன் இருந்த வெந்நீர் உடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்க வேகமாக குளித்து வெளியில் வந்தான்.

 

 

பின்கட்டிலே நின்றிருந்த கதிர் அவனை வீட்டுக்குள் அழைத்து சென்றான். “அண்ணே இன்னைக்கு எல்லாமே வெஜ் தான், நாளைக்கு தான் கறி சாப்பாடு. சாப்பிடுங்கண்ணே என்றான் அவன். “ஆமாமய்யா நாளைக்கு கோவில்ல ஆடு வெட்டின பிறகு தான் நாங்க கறி சாப்பாடே சமைப்போம். அது வரைக்கும் இப்படி தான் என்றார் மீனாட்சி. “அதனாலென்ன பாட்டி, நான் இது வேணும் அது வேணும்ன்னு எல்லாம் நினைக்கிற ஆளு இல்லை. பசிக்கு மட்டுமே சாப்பிடுற ஆளு என்றான் சுஜய்.

 

 

“அப்படி எல்லாம் சொல்லக் கூடாதுய்யா, இந்த வயசுல பசிக்கு சாப்பிடுறது முக்கியம் தான் ஆனா ருசியாவும் சாப்பிடணும். இப்போவே சாமியார் போல பேசுறியே, இன்னும் உனக்கு வாழ்க்கையில எவ்வளவோ இருக்கே என்றார் மீனாட்சி.

 

 

“அண்ணே அப்பா வந்திருக்காங்க என்று கதிர் சொல்ல, மரியாதையாக எழுந்து நின்றான் சுஜய். அவரை பார்த்து கைகூப்பி காலில் விழுந்தவனை “அய்யோ என்ன தம்பி இதெல்லாம் நல்லாயிருங்க என்றவர் அவன் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார்.

 

 

மாடத்தில் இருந்த விபூதியை எடுத்து அவன் நெற்றில் வைத்துவிட்டார். “நம்ம வீட்டு பிள்ளைங்களுக்கு இந்த பழக்கமெல்லாம் எப்போ தான் வரப்போகுதோ என்றுவிட்டு கதிரை ஒரு பார்வை பார்த்தார். “அதெல்லாம் டெல்லி பழக்கம் நம்ம ஊருல இப்படி பழக்கம் ஒண்ணுமில்லையே பாட்டி என்றான் அவனும் பதிலுக்கு.

 

 

“உட்காருங்கய்யா சாப்பிடுங்க என்று சுஜய்யை அமரச் சொன்னார்.

 

 

மீனாட்சி பேரனின் காதில் “கதிரேசா அந்த தம்பி என்ன சிவிர்ன்னு இருக்கு, எம்புட்டு கலரு, எம்ஜியாரு கலரா இருக்குய்யா.

 

 

“பாட்டி அவரு அவங்க அம்மா கலரு, அவங்க அப்பா நம்ம மாதிரி நிறம் தான்

 

 

“ஆத்தா எனக்கும் சோறு போடு என்று ராஜேந்திரனும் அங்கேயே அமர்ந்தார்.

 

 

“பாட்டி இந்த பசும்பொன் எங்க போனா அவளை ஆளையே காணோம் என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்தாள் அவள்.

 

 

“என்னண்ணே என்னை தேடுறாப்புல இருக்கு, இவங்க தான் உங்க முதலாளியா. வாங்கண்ணே எப்படியிருக்கீங்க, வீட்டில எல்லாரும் நல்லாயிருக்காங்களா என்றாள் பசும்பொன். “ஹேய் பசும்பொன்னு கொஞ்சம் பேசாம இரு என்றான் கதிர்.

“நல்லாயிருக்கேன்மா, நீ என்ன படிக்கிற சுஜய். அவனை கண்டதும் உரிமையாக அண்ணா என்று அழைத்து வெள்ளந்தியாக பேசி அவன் நலம் விசாரித்த அவளை அவனுக்கு மிகப்பிடித்தது.

 

 

“படிக்கிறேனா, போங்கண்ணா நீங்க வேற. நான் எட்டாவது படிச்சதே பெரும்பாடு, அதுக்கு பிறகு வேற ஊருக்கு தான் போய் படிக்கணும். எங்கண்ணன் அதெல்லாம் வேற ஊருக்கு போய் ஒண்ணும் படிக்க வேணாம்னு சொல்லிட்டான். அப்புறம் என்ன எல்லாரும் அதோட வீட்டில இருக்க வைச்சுட்டாங்க. இப்போ வீட்டில சும்மா தான் இருக்கேன்.

 

 

சாப்பிட்டு சுஜய் அறைக்கு செல்ல கிளம்பும் போது எதிரில் மீனாட்சி வந்தாள். வந்தவள் ஒரு அவனை முறைத்தவாறே உள்ளே சென்றாள். “அத்தே மாவு இடிக்க போறேன் உங்களுக்கும் இடிக்கணுமான்னு கேட்டுட்டு போகலாம்ன்னு வந்தேன்.

 

 

“ஆமா மீனா பின்னாடி திண்ணையில அரிசியை காயப்போட்டிருக்கேன் அடுக்கு சட்டி அங்கேயே இருக்கும், அதுல போட்டு இடிச்சு கொண்டு வந்திடு, போகும் போது பசும்பொன்னையும் கூட்டிட்டு போ என்றார் அவர் பதிலுக்கு.

 

 

“அத்தை உங்ககிட்ட பேசணும் நீங்களும் வாங்க என்று அவரையும் கையோடு அழைத்துக் கொண்டு பின்கட்டுக்கு வந்தாள் அவள்.

 

 

“என்ன மீனா என்ன விஷயம் என்றவரிடம், அவள் அரிசியை எடுத்து அடுக்கு சட்டியில் வைத்துக் கொண்டே “ஏன் அத்தை உங்களுக்கு நான் மருமகளா வர்றது இஷ்டமாஎன்றாள்.

 

 

“என்ன மீனா எதுக்கு இப்படி எல்லாம் கேட்குற, நீ மருமகளா வர்றதுக்கு நான் கொடுத்து வைச்சிருக்கணும்காமாட்சி.

 

 

“நீங்க சொல்றது எனக்கு சந்தோசமா தான் இருக்கு அத்தை,நீங்க கதிருக்கு முன்னாடி ஒரு பிள்ளையை பெத்திருந்தா அவரையே சந்தோசமா கட்டியிருக்கலாம்

 

 

“ஏன் மீனா உனக்கு கதிரை கட்டிக்க விருப்பமில்லையா என்றார் அவர்.

 

 

“ஏன் அத்தை உங்களுக்கு உங்க தம்பி மக தேனுவை கதிருக்கு கட்டி வைக்கணும்னு ஆசை இல்லையா? என்று பதில் கேள்வி வைத்தாள் அவள். “அ… அது… அதெல்லாம் நடக்காது மீனா, எனக்கு நீயும் தேனுவும் ஒண்ணு தான். நீ எனக்கு மருமகளா ஆகறதுல எனக்கு பரிபூரண சம்மதம். அவ தம்பி மகளா இருந்தா நீ எனக்கு அண்ணன் மகள் என்றார் அவர் சிரித்துக் கொண்டே.

 

 

“என்னமோ போங்க அத்தை, என்ன நடக்குதோ பார்ப்போம். ஆமா உங்க தம்பி குடும்பம் எப்போ வருது, ஆளையே காணோம். இந்த தேனு ஒரு நாள் முன்னக்கூட்டி வந்திர்றேன்னு சொன்னா. இங்க இருக்க போடியில இருந்து வர்றதுக்கு நேரமாகுதோ… என்றாள் அவள்.

 

 

“வாயாடி அவங்க கிளம்பிட்டாங்க இங்க தான் வந்திட்டு இருக்காங்க, இன்னும் சித்த நேரத்துல வந்திடுவாங்க சரியா

 

 

“சரி அத்தை நான் போய் மாவை இடிச்சுட்டு வர்றேன். ஆமா அத்தை உங்க வீட்டுக்கு விருந்தாளி வந்திருக்காங்க போல நல்லா வெள்ளாடு மாதிரி

 

 

“ஆமா வந்திருக்காங்க ஏன்டி அவங்களை அப்படி சொல்ற

 

 

“அவரு ஆளும் மூஞ்சியும், பார்க்க லட்சணமா மீசை வைக்காம இவர் எல்லாம் ஒரு ஆளா. நம்ம ஊருல பாருங்க அவனவன் காது வரைக்கும் மீசை வைச்சுட்டு திரியறான், பார்க்க எப்படி இருக்கு. அது தானே ஆம்பளைக்கு அழகே என்றவள் சற்று மேலே நிமிர்ந்து பார்த்திருந்தால் வாயை மூடியிருந்திருப்பாள்.

 

 

சாப்பிட்டதும் சற்றே நடக்கலாம் என்று மாடி அறையில் இருந்து வெளியில் வந்தவன் வெட்ட வெளியில் உலாவிக் கொண்டிருந்தான். கிழே பேச்சுக் குரல் கேட்க மாடியில் இருந்து எட்டிப்பார்த்தான், மீனா காமாட்சியுடன் பேசுவது அக்கணம் அவன் காதில் விழுந்தது.

 

 

‘என்ன தான் வேணும் இவளுக்கு காலையில என்னை பார்த்து சொட்டை மண்டைன்னு சொன்னா, இப்போ மீசை இல்லைன்னு சொல்றா. ஏன் நான் இப்படி நல்லாயில்லையா. அதுவரை அவன் தன் வெளித்தோற்றம் குறித்து இப்படி யோசித்ததே இல்லை.

 

 

அங்கிருந்த கண்ணாடி பதித்த மரபீரோவின் முன் நின்று அவனை பார்க்க, ‘ஆமாம் முன் மண்டை ஏறியிருக்கிறது, இதற்கு நான் எதுவும் செய்ய முடியாது, அது ஜீன் வழி வருகிறது. இம்ம் மீசை, மீசை வைத்தால் எனக்கு நன்றாக இருக்குமா

 

 

‘அப்பா, அப்பாகூட மீசை வைத்திருந்தார், ஆனால் எனக்கு ஏன் இது தோன்றவே இல்லை. டெல்லியில் பெரும்பாலானோர் இப்படி இருப்பதால் அப்படியே இருந்துவிட்டேனா என்று ஆராய்ச்சி செய்தவன், ச்சே யாரிந்த பெண் இவள் ஏதோ சொன்னாள் என்று இங்கு வந்து நிற்கிறோமே என்று நினைத்துக் கொண்டவன் கட்டிலில் சரிந்தான்.

 

 

சற்றே ஓய்வெடுத்தவன் மாலையில் கதிர் வந்து அழைக்க இருவருமாக மொட்டை மாடியில் நின்று வெளியில் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

 

“அண்ணே இன்னைக்கு ரொம்ப விசேசமா இருக்கும் பாருங்க, இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க இருக்கற குமரிங்க, கல்யாணம் ஆனா பொம்பளைங்க எல்லாம் ஒண்ணு சேர்ந்து முளைப்பாரியை சுத்தி கும்மி அடிச்சு பாட்டு எல்லாம் பாடுவாங்க

 

 

“பார்க்க ரொம்ப அழகா இருக்கும் என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே தாவணி பெண்கள், புடவை அணிந்த பெண்கள் என்று எல்லோரும் முளைப்பாரியை தூக்கிக் கொண்டு வந்தனர், அதை நடுவில் வைத்து சுற்றி நின்று எல்லோரும் கும்மி அடித்து பாட்டு பாட சுஜய் அதை அவசரமாக அவன் ஹேண்டி கேமில் பதிவு செய்தான்.

 

 

மீனாவும் அப்பெண்களுடன் சேர்ந்து கும்மி அடுத்து பாட்டு பாட அவளை வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருந்தான். “கதிர் தேனு வீட்டுல இருந்து வரலையா என்றான் சுஜய்.

 

 

“இம் தெரியலை, ஆளையே காணோம். ஒரு நிமிஷம் இருங்க நான் மீனாவையே கேட்குறேன் என்றவன் “மீனா… மீனா என்று மேலே இருந்தவாறே அழைத்தான்.

 

 

“என்ன என்று கீழே இருந்தவாறே கேட்டவளை மேலே வருமாறு அவன் அழைக்க வேகமாக படியேறி மேலே வந்தாள். “என்ன எதுக்கு என்னை கூப்பிட்டேஎன்றவளிடம் “ஆமா உன் கூட ஒரு வாலு இருக்குமே அது எங்க என்றான் கதிர்.

 

 

“என்னடா கொழுப்பா, கூட உனக்கு ஒரு ஆளு இருக்குன்னு என்கிட்ட வம்பு பண்றியோ என்று அவள் எகிற “மீனா அதெல்லாம் ஒண்ணுமில்லை, நான் வாலுன்னு சொன்னது உன் தங்கச்சி தேனுவை, எங்க அவளை ஆளையே காணோம் என்று சாதாரணமாக கேட்பது போல் கேட்டான்.

 

“அதுக்கு தான் இவ்வளவு பில்டப்பா, அவ அப்பமே வந்துட்டா. எங்க வீட்டில தான் இருக்கா. ஆமா அவளை ரொம்ப ஆர்வமா தேடுறியே என்ன விஷயம், மாமாகிட்டயும் பாட்டிக்கிட்டயும் சொல்லணுமாஎன்றுஒரு மாதிரி குரலில் அவள் சொல்ல கதிரின் முகம் சட்டென்று மாறியது.

 

 

“இல்லை மீனா சும்மா தான் கேட்டேன், அண்ணே நான் இதோ பக்கத்துல போயிட்டு வந்திர்றேன் என்றுவிட்டு கிழே இறங்கி சென்றுவிட்டான். மீனாவும் கீழே இறங்க போக “ஒரு நிமிஷம் என்றான் சுஜய். என்ன என்பது போல் அவனை பார்த்தாள் அவள்.

 

 

“ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே, கதிர் இப்போ என்ன தப்பா கேட்டுட்டான்னு அவனை அப்படி கேட்டீங்க. பாவம் அவன் முகமே மாறி போச்சு சுஜய்.

 

 

“உங்க வேலை என்னமோ நீங்க அதை மட்டும் பாருங்க, இது எங்க விஷயம் அனாவசியமா நீங்க மூக்கை நுழைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவளுமே வேகமாக கிழே இறங்கி சென்றுவிட்டாள்.

 

 

‘இது உனக்கு தேவையா என்று அவனே அவனை கேள்வி கேட்டுக் கொண்டு அவன் மடிக்கணினியை எடுத்து வைத்துக் கொண்டு அவன் அலுவலக வேலையை பார்க்க ஆரம்பித்தான்.எவ்வளவு நேரம் சென்றிருக்குமோ வாசலில் நிழலாட நிமிர்ந்து பார்த்தான்.

 

 

கதிர் லேசான தள்ளாட்டத்துடன் நின்றிருந்தான். “அண்ணே சாரிண்ணே தப்பு பண்ணிட்டேன் என்று வந்து நின்றவனை கட்டிலில் அமர வைக்க அவனோ பிடிவாதமாக “நான் தரையில தான் படுக்கணும் நீங்க எப்படி வசதியா இருந்தவரு

 

 

“ஏன் கதிர் நீ குடிப்பியா என்று சுஜய் கேட்க “எப்பவாச்சும் சாப்பிடுவேன் மனசு சரியில்லை குடிச்சிட்டேன். தப்புதாண்ணே இனி இப்படி செய்ய மாட்டேன். உங்களை வேற கஷ்டப்படுத்திடேன்

 

 

“உங்களை போய் இந்த வீட்டில கொண்டு வந்து இருக்க வைச்சுட்டேனே, அண்ணே நான் வேணா தேனில பெரிய ஹோட்டல்ல புக் பண்ணவா. உங்களுக்கு இங்க கஷ்டமா இல்லையே.

 

 

“இந்த மீனா வேறரொம்ப பேசுறாண்ணே, காலையில உங்களை பேசினா, இப்போ என்னை பேசுறா. நான் என்ன தப்பா கேட்டேன், நான் எதுக்கும் ஆசைப்பட கூடாதாண்ணே என்று மனதில் இருந்ததை எல்லாம் கொட்டிக் கொண்டிருந்தான் அவன் குழறலாக.

 

 

“கதிர் பேசாம படு, இப்போ எதுவும் பேச வேண்டாம். நாளைக்கு காலையில பேசிக்கலாம் சரியா. நான் சொன்னா நீ கேட்பே தானே படு என்று சொல்லிவிட்டு விளக்கணைத்து அவன் படுக்கும் வரை பார்த்தவன் மெதுவாக எழுந்து வெளியில் வந்து நடை பயின்றான்.

 

 

‘நாம வேற இங்க வந்தது தேவையில்லாததோ, எப்படியாச்சும் நாளைக்கே ஊருக்கு கிளம்பிடணும். காலையில கதிர் எழுந்ததும் வேலை இருக்கறதா  சொல்லிட்டு கிளம்பிட வேண்டியது தான் என்று யோசித்துக் கொண்டவன் சுர்ஜித்துக்கு போன் செய்து அன்றைய நிலவரத்தை கேட்டறிந்தான்.

 

 

இரவு விடியலுக்கு தயாரான வேளையில் சுஜய்யை யாரோ எழுப்ப அலங்க மலங்க விழித்து பார்த்தான் அவன். “என்ன கதிர் என்னாச்சு, எதுவும் பிரச்சனையா என்றான் அவன்.

 

 

“அண்ணே என் கூட வாங்க இப்போ எங்க ஊர்ல எல்லாரும் மாவிளக்கு எடுத்திட்டு போவாங்க. பார்க்க ரொம்ப அழகா இருக்கும். அதுக்கு தான் உங்களை எழுப்பினேன் என்றான் அவன்.

 

 

“நீங்க இதெல்லாம் டெல்லில பார்க்க முடியாதுல்ல வாங்கண்ணே என்றதும் “ஆமா நீ எப்படி எழுந்தே நேத்து… என்று சுஜய் இழுக்க “தெளியலையோன்னு பார்க்குறீங்களாண்ணே, திருவிழாவுக்கு வந்தா எனக்கு தூக்கமே வராது எப்போதுமே. நேத்து அந்த வேலை செய்ய போய் தூங்கிட்டேன். நான் முழிச்சு ரொம்ப நேரம் ஆகுதுண்ணே

 

 

“அப்போவே எழுந்து குளிச்சு தயாராகிட்டு தான் வந்து உங்களை எழுப்பறேன், அ… அப்புறம் அண்ணே நான் எதுவும் தப்பா பேசியிருந்தா சாரிண்ணே என்று அவன் சொல்ல

 

 

“அதெல்லாம் ஒண்ணுமில்லை கதிர், ஆனா ஒண்ணு இனி எந்த கஷ்டம் வந்தாலும் நீ குடிக்க கூடாது எனக்கு அது தான் வேணும். நீ குடிக்கறதுனால உன் பிரச்சனைகள் தீர்ந்திட போறது இல்லை, அது நிரந்தர தீர்வும் இல்லை, உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்என்று சுஜய் சொல்ல “கண்டிப்பாண்ணே இனி இப்படி நடக்காது என்றான் மற்றவன் பதிலுக்கு.

 

சுஜய் எழுந்து சென்று அங்கிருந்த செம்பில் இருந்த தண்ணீரை எடுத்து முகத்தில் அடித்து கழுவியவன் துண்டை எடுத்து துடைத்துக் கொண்டு அவனடைய ஹேண்டி கேமையும் கையில் எடுத்துக் கொண்டான்.

 

 

“அண்ணே நாம என்னோட சினேகிதன் வீட்டு மொட்டை மாடியில இருந்து பார்க்கலாம். அப்போ தான் எல்லா தெருவில இருந்து கொண்டு வர்றதும் பார்க்க அழகா இருக்கும் என்று சொல்லி அவனை அவன் நண்பன் வீட்டு அழைத்து சென்றான்.

 

 

அங்கு ஏற்கனவே நான்கு பேர் இருக்க சுஜய்யோ இயல்பாக அவர்களுடன் ஒன்ற முடியாமல் தவித்தான். நண்பர்கள் பேசிக் கொண்டிருக்க அவன் வெளியில் வேடிக்கை பார்க்க தயார் ஆனான். இடையிடையில் கொட்டு சத்தம் கேட்க கதிர் அவனுக்கு விளக்கினான்.

 

 

கொட்டு சத்தம் கேட்ட பின் தான் எல்லோரும் தயார் ஆகி வருவர் என்று அவன் கூற ஆர்வமுடன் அவனும் வேடிக்கை பார்த்தான். மாவிளக்கை தலையில் தூக்கிக் கொண்டு பெண்கள் வர அந்த இருளுக்கு ஒளியாய் பெண்கள் சுமந்து வரும் மாவிளக்கு, சுஜய்க்கு பார்க்க பார்க்க தெவிட்டவில்லை.

 

 

அவன் ஹேண்டி கேமில் அதை பதிவு செய்து கொண்டிருந்தான், அவனுக்கு கிழே சென்று பார்க்கும் ஆவல் உந்த கதிரிடம் சொல்லிவிட்டு கிழே சென்று வாசலில் நின்று பார்த்தான். தூரத்தே மீனாவும் தலையில் மாவிளக்கை சுமந்து வருவதை பார்த்தான்.

 

 

‘இந்த நேரத்துல இவ்வளவு நகை எல்லாம் போட்டுட்டு இப்படி அலங்காரம் பண்ணிட்டு வர்றா என்று மனதிற்குள் எண்ணம் ஓட அப்போது தான் கவனித்தான், எல்லோருமே திருவிழாவிற்காய் அலங்கரித்து வந்திருப்பதை. கூட்டம் கூட்டமாக நகர்ந்துவந்தவர்கள் மேலும் யாரும் நகராததால் அங்கேயே தேங்கி அவனருகில் வந்து நின்றிருந்தனர்.

 

 

மீனா அவனை கவனிக்கவில்லை, சுஜய்யும் சற்றே இருள் சூழ்ந்த இடத்தில் நின்றிருந்ததால் அவளுக்கு தெரியவில்லை. அவளுடன் நின்றிருந்த தேனுவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

 

 

“என்ன தேனு இந்த வருஷம் அத்தைக்கு முடியலை, பசும்பொன்னும் கால்ல சுளுக்குன்னு எடுக்க முடியாம போச்சு, அதுனால நீ மாவிளக்கு எடுக்குற அடுத்த வருஷம் மருமகளா எடுப்பியா என்றாள் மீனா.

 

“என்னக்கா விளையாடுறியா அடுத்த வட்டம் நீ தான் மாவிளக்கு எடுப்ப நான் எப்படி எடுப்பேன்– தேன்மொழி.

 

 

“ஏன் தேனு உனக்கு உன் மாமன் கதிர் மேல எந்த விருப்பமும் இல்லையா

 

 

“என்னக்கா நீ என்னென்னமோ பேசுற என்னாச்சு உனக்கு என்றாள் மற்றவள்.

 

 

“எனக்கு உன்னை தெரியும் உண்மையை சொல்லு என்றாள் மீனா.

 

 

“என்ன தெரியும் உனக்கு எனக்கு எந்த எண்ணமுமில்லை, திருவிழா முடிஞ்சதும் உனக்கும் கதிரு மாமாக்கும் கல்யாணம். இப்போதைக்கு அது தான் என் மனசுல ஓடுது என்று வார்த்தையை விட்டாள் தேனு.

 

 

“என்ன சொல்ற தேனு, கதிருக்கும் எனக்கும் திருவிழா முடிஞ்சதும் கல்யாணமா யார் சொன்னா உனக்கு. இதை பத்தி என்கிட்ட யாருமே என்கிட்ட சொல்லவே இல்லையே என்று கோபமானாள்.

 

 

“அக்கா… அக்கா… நான் தான் இதை உன்கிட்ட சொன்னேன்னு சொல்லிடாதேக்கா, வீட்டில எல்லாரும் பேசிட்டு இருந்ததை கேட்டு தான் சொன்னேன்

 

 

“நான் தான் உனக்கு சொன்னேன்னு தெரிஞ்சா எல்லாரும் என்னை கொன்னே போடுவாங்க, ப்ளீஸ்க்கா யார் கிட்டயும் எதுவும் கேட்காதேக்கா என்று தேனு அழுத்து விடுவாள் போன்று இருக்க “சரி அதை விடு தேனு, நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லு என்றாள் மீனா விடாமல்.“எதுக்குக்கா பதில் சொல்ல சொல்ற என்றாள் தேனு.

 

 

“உனக்கு கதிரை பிடிச்சிருக்கா இல்லையா, வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா பதில் சொல்லு என்றாள் மீனா. தேன்மொழியின் கண்கள் குளம் கட்டியது “சொல்லுடி கேள்வி கேட்டா கண்ணுல தண்ணி விடுற சொல்லு என்று அரட்டினாள் அவள்.

 

 

“மாமனை எனக்கு பிடிக்கும் ஆனா… என்று அவள் முடிப்பதற்குள் “சரி விடு நான் பார்த்துக்கறேன் என்றவள் அதன் பின் அமைதியாகவே சென்றாள்.

 

 

‘இவ எப்படிப்பட்ட பொண்ணு என்ற சிந்தனை சுஜய்க்குள் வர ஆரம்பித்தது. மாலை என்னவென்றால் கதிரை ஏதோ சொல்கிறாள், இப்போது இந்த பெண்ணை அதட்டி உருட்டி உண்மையை வாங்கிவிட்டாள். அவனுக்கு மீனா புதிதாக தெரிந்தாள் புதிராகவும் தான்.

 

 

அன்று முழுவதும் முளைப்பாரி தூக்குவது, அக்னிசட்டி எடுப்பது, பொங்கல் வைப்பது, ஆடு வெட்டுவது என்று ஒரே களேபரமாகவே பொழுது சென்றது. மீனா அக்னிசட்டி எடுக்க மாடியில் நின்று கொண்டு அதை வேடிக்கை பார்த்தான் சுஜய். சுஜய்க்கு எல்லாமே புதிதாக இருந்தது. அன்றைய பொழுது வேகமாகவே ஓடியது.

 

 

அந்த கொட்டு சத்தம் அவன் காதுகளில் கேட்டுக் கொண்டே இருந்தது அன்று முழுவதும். மறுநாள் காலை கதிரும் அவனுமாக ஆற்றுக்கு சென்று குளிக்கலாம் என்று கிளம்பினர். வழியில் யாரோ கதிரை பார்த்து பிடித்துக் கொள்ள அந்த நேரம் பார்த்து பசும்பொன், மீனா தேனு வந்தனர்.

 

 

“ஹேய் பசும்பொன் அண்ணனை ஆத்துக்கு கூட்டிட்டு போறியா, பார்த்து சூதானமா போங்க இந்த குமாரு பேச ஆரம்பிச்சா விடவே மாட்டேங்குறான் என்று பசும்பொன்னை பார்த்து சொன்னவன், சுஜய்யை “அண்ணே நீங்க இவங்க கூட போயிட்டே இருங்கண்ணே நான் பின்னாடியே வந்திடுறேன் என்றான் கதிர்.

 

 

“சரி கதிர் நீ போயிட்டு வா நான் தங்கச்சியோட போறேன் என்றான் சுஜய். மீனாவோ அவனை பார்த்து முறைத்துக் கொண்டே வந்தாள். பசும்பொன் சுஜய்யுடன் பேசிக் கொண்டே வந்தாள். பசும்பொன் அவனுக்கு குளிக்குமிடம் காட்டிவிட்டு அவள் அப்புறம் மீனா தேனுவுடன் சென்றாள்.

 

 

அழகான முல்லையாற்றில் சில்லென்று ஓடும் நீரில் சரிவான அந்த இடத்தில் அமர்ந்து குளிப்பது சுகமாக தோன்றியது அவனுக்கு. சற்று நேரம் நீரில் நீந்தி குளித்தவன் உடை மாற்றிக் கொண்டு வந்தான். சற்று தள்ளி பசும்பொன்னும் இன்னொரு பெண்ணும் அலறும் குரல் கேட்க குரல் வந்த திசை நோக்கி சென்றான் சுஜய்.

 

 

“என்னாச்சு பசும்பொன் எதுக்கும்மா கத்துற என்றான் சுஜய். “அண்ணே அந்த பக்கம் பாம்பு இருக்கு இந்த மீனா சொன்ன கேட்காம அது பக்கத்துல போய் நிக்குறா, அது இப்போ படமெடுத்து நிக்குதுண்ணே, பயமா இருக்கு என்றாள் பசும்பொன்.

 

 

“நீ கத்தினா பாம்பு மிரளும், நீங்க ரெண்டு பேரும் பேசாம இருங்க. நீங்க தான் பயப்படுறீங்க அவங்களுக்கு பயம் இருக்க மாதிரி தெரியலையே என்றவன் மீனாவின் அருகில் செல்ல பயத்தில் அவள் அலறவில்லை என்றாலும் அவள் முகம் பயத்தில் வெளுத்திருந்தது.

 

 

அவளருகில் சென்றவன் சட்டென்று அவள் இடுப்பில் கைக்கொடுத்து அவளை தன்பக்கம் வேகமாக இழுத்துவிட பாம்பு சர்ரென்று வேறு புறம் சென்றுவிட்டது. பாம்பு சென்றதும் அவன் அவளை விட பளார் என்ற சத்தம் மட்டுமே கேட்டது.

 

 

“யோவ் எதுக்குய்யா என்னை தொட்ட அறிவில்லை உனக்கு என்று கத்தினாள் மீனாட்சி. அவன் முகம் ரத்தமென சிவந்து போக வேகமாக ஓங்கிய கைகளை கிழே இறங்கினான்.

 

 

“அண்ணே மன்னிச்சுடுங்கண்ணே அவ பண்ண தப்பு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்னே என்று பசும்பொன் மன்னிப்பு வேண்ட “ஆமாங்க அக்கா செஞ்சது தப்பு தான் மன்னிடுங்க என்றாள் தேனுவும்.

 

 

மீனாவுக்கும் அவள் செய்தது தவறென்று பட “சாரி என்று சொல்லிவிட்டு வேகமாக அந்த இடத்தை காலி செய்தாள். ஒருவழியாக அவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்த பின்னே வந்து சேர்ந்தான் கதிர். சுஜய்யின் கன்னத்தில் விரல் தடம் இருப்பதை பார்த்து அவனை விசாரிக்க அவனோ ஒன்றுமில்லை என்று எதுவும் கூற மறுத்துவிட்டான்.

 

 

கதிர் அவன் தங்கையை அழைத்து விபரம் கேட்க மீனாவின் மேல் அவன் கோபம் திரும்பியது. அந்நேரம் எதையோ கொடுக்க மீனா அங்கு வர “மீனா இங்க கொஞ்சம் வா என்று அழைக்க “என்ன என்று வந்து நின்றாள் அவள். “என்ன இது என்று அவளை கேட்க அவள் யோசனையோ ‘அய்யோ நான் அடிச்சா இவருக்கு கன்னம் சிவந்து போச்சு

 

 

‘இந்த அய்யாசாமியும் தான் என்கிட்ட தினமும் அடிவாங்குறான் அவனுக்கு இப்படி எதுவும் ஆகறதில்லையே. அவன் சரியான கருவாப்பய அதான் தெரியலை போல என்று நினைத்துக் கொண்டிருந்தாள். “மீனா நான் கேட்டுட்டே இருக்கேன் உனக்கு என்ன யோசனை என்றான் கதிர் மீண்டும்.

 

 

“நீ பண்ணது தப்புன்னு உனக்கு தெரியலை, இப்படி தான் வீட்டுக்கு வந்தவங்களை அவமானப்படுத்துவியா என்று அவன் கூற அவள் இன்னமும் யோசனையில் இருப்பதாக தோன்ற அவளை உலுக்கினான். “என்ன கதிர் என்ன கேட்ட என்று அவள் கேட்க அவன் மீண்டும் கூறினான்.

 

 

“உனக்கு என்ன யோசனை என்றான் அவன். அவள் மனதில் நினைத்ததை சொல்ல சுஜய்யால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. இவன் என்ன கேட்டுக் கொண்டிருக்கிறான் இவளோ இப்படி யோசனை செய்து கொண்டிருக்கிறாளே என்று சிரித்தான் அவன்.

 

 

“இங்க பாரு உங்க சாரே சிரிச்சுட்டார் என்னை ஆளை விடு, நான் பண்ணது தப்பு தான் மன்னிச்சுடுங்க மேலும் உதவி செய்தவருக்கு உபத்திரவம் செய்த அவள் முட்டாள்தனத்தை எண்ணி அவள் தலையில் குட்டிக் கொண்டாள்.

 

 

மீண்டும் அவனை நோக்கி “நான் வேணுமின்னே செய்யலை யாராச்சும் என்னை முறைச்சு பார்த்தாலே அவனை அடிச்சிருக்கேன். இ… இவர் தொட்டதும்… தப்பு தான்… ம…மன்னிச்சுடுங்க என்று மீண்டும் ஒரு முறை அவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அவள் நகர்ந்தாள்.

 

 

இரண்டு நாட்களாக சுஜய் ஊருக்கு போகும் விஷயம் பற்றி கதிர் அங்குமிங்கும் திருவிழாவில் அலைந்து கொண்டிருந்ததில் சொல்ல முடியாமல் போக அன்று இரவு கரகம் தூக்கி திருவிழா இனிதே முடிந்ததும் ஆடலும் பாடலும் பார்க்கும் போது அவனிடம் கூற கதிரோ இன்னும் பத்து நாட்கள் இருந்து விட்டு தான் போக வேண்டும் என்று அடம் பிடித்தான்.

 

 

சுஜய் எப்படியோ ஒருவழியாக அவனை சமாதானப்படுத்தி இரண்டு நாளில் கிளம்பவது என்று முடிவானது. கதிருக்கு வருத்தமாக இருந்த போதிலும் ஒரு குழுமத்தின் முதலாளியை பிடித்து வைக்க இயலாது என்று உணர்ந்தவன் மேலும் எதுவும் சொல்ல முடியாது போனது.

 

 

சுஜய்யும் டிக்கெட் எடுக்க மற்றும் மேலும் சில வேலைகள் இருந்ததால் அன்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு தேனியில் சென்று ஹோட்டலில் தங்கிக் கொண்டான். கதிர் உடன் வந்து அவனுக்கு உதவிகள் செய்து கொடுத்துவிட்டு சென்றான்.

 

 

இரண்டு நாளில் அவன் ஊருக்கு செல்வதால் மறுநாள் சுஜய்யை வீட்டிற்கு வந்து விருந்து சாப்பிட்டு போகுமாறு சொல்ல அவனும் கிளம்பி வந்திருந்தான். சாப்பிட்டு முடித்தவன் மாடியில் உலாவிக் கொண்டிருக்க கதிர் வேகமாக மாடியேறி வந்தவன் “அண்ணே என்று பதறி நின்றான்.

 

 

 

“என்ன கதிர் என்ன விஷயம் எதுக்கு இந்த பதட்டம் சுஜய்.

 

“இல்லை இன்னைக்கு எனக்கு கல்யாணத்துக்கு நாள் குறிக்க போறாங்கண்ணே. இப்போ தான் அப்பா சொன்னாரு

 

 

“நான் ஊருக்கு கிளம்பறதுக்குள்ள கல்யாணம் முடிச்சு மீனாவையும் டெல்லி கூட்டிட்டு போய்டணும் சொல்றாங்க. எனக்கு என்ன பண்றதுண்ணே தெரியலை என்று பதட்டமாக அவன் பேசிக் கொண்டிருக்க ராஜேந்திரன் மாடியேறி வந்தார்.

 

 

“வாங்கப்பா என்றான் சுஜய். “தம்பி இன்னைக்கு கதிரேசனுக்கு கல்யாணம் முடிவு பண்ணலாம்னு இருக்கோம் நீங்களும் எங்களோட வாங்க தம்பி என்று வீட்டு மனிதராக அவனுக்கு அழைப்பு விடுக்க அவனும் சரியென்று தலையசைத்தான்.

 

 

அவரும் கிழே இறங்கி சென்று விட “அண்ணே எனக்கு பயமாயிருக்கு என்ன பண்ணுறதுன்னே புரியலை என்று கூற சுஜய்யோ “யாருமே உனக்காக பேச முடியாது கதிர். இது உன் உன் வாழ்க்கை நீ தான் பேசணும் அப்படி இல்லன்னா அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்

 

 

“சரி வா போகலாம் என்று அவனையும் இழுத்துக் கொண்டு சென்றான். அந்த ஊர் பெரிய மனிதர்கள் இவர்கள் வீட்டு ஆட்கள் என்று எல்லோரும் இருபுறமாக பிரிந்து உட்கார்ந்திருந்தனர்.

 

 

நடுவில் அமர்ந்திருந்த பெரிய மனிதர், “நம்ம ராஜ்மோகன் மாலதியோட ஒரே பொண்ணு மீனாட்சியை ராசேந்திரன் காமாட்சியோட ஒரே மகன் கதிரேசனுக்கு பெண் கேட்டு வந்திருக்காங்க என்றார்.

 

 

 

  • காற்று வீசும்

 

 

 

 

 

 

 

 

 

Advertisement