Advertisement

அத்தியாயம் – 24
யாகாஷ் காலணியை வீசி எறியாத குறையாய் கழற்றிவிட்டு அவசர அவசரமாய் உள்ளே ஓடிவந்தான்.
வந்தபின்னே தான் அவனுக்கு புரிந்தது தனுஷ் தன்னை எதற்கு அழைத்தான் என்று.
“இவன் எதுக்குடா இங்க வந்தான். கட்டில்ல வந்து சொகுசா படுத்திருக்கான்” என்றவனுக்கு அப்போது தான் தனுஷை கட்டிக்கொண்டு கதறும் புவனா கண்ணில்ப்பட்டாள்.
“என்னாச்சு தனுஷ்??”
“இவன் யாருன்னு உனக்கு தெரியுமா??” என்றான் அவன் அழுத்தமாய்.
“இவன் தான் அவன்… அதாவது புவனாவுக்கு பார்த்த மாப்பிள்ளை”
“எப்படி தெரியும் உனக்கு”
“நானும் தானே அன்னைக்கு கல்யாணத்துக்கு போனேன் அப்பா கூட”
“வேற என்னெல்லாம் தெரியும் உனக்கு. அதையும் சொல்லு” என்றான் தனுஷ். அவன் முன்னமே ஊகித்த விஷயம் இப்போது தானே வெளியே வருகிறது.
“டேய் அதை நான் சொல்றதுக்கு முன்னாடி நீ எனக்கு பதில் சொல்லு” என்றான் யாகாஷ்.
“என்ன??”
“இவனை நீ நல்லா பார்த்தியா??”
‘இப்போ அது ரொம்ப முக்கியமா’ என்பதான பார்வைப் பார்த்தான் மற்றவன்.
“பதில் சொல்லு தனு, பார்த்தியா பார்க்கலையா”
“அதான் இவன் யாருன்னு எனக்கு தெரியுமே…”
“அப்போ நீ இவனை சரியா பார்க்கலைன்னு சொல்லு. உனக்கு ஞாபகம் இருக்கா நாம சென்னையில ஒரு ஹோட்டல்ல வொர்க் பண்ணோமே அங்க ஒருத்தன் ட்ரக்ஸ் யூஸ் பண்ணிட்டு சாப்பிட வந்த பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்க பார்த்தான்னு நீ அடிச்சியே”
‘இவன் என்ன சொல்றான்’ என்று பார்த்தவன் இப்போது திரும்பி கட்டிலில் முனகிக் கொண்டிருந்தவனை நன்றாய் பார்த்தான்.
“அதுக்கு அப்புறம் அவன் நம்ம ஹோட்டல்ல ஒரு பொண்ணோட வந்து தப்பா இருந்தது, தெரிஞ்சு போலீஸ் கேஸ் கூட ஆச்சே. நீயும் நானும் கூட போய் சாட்சி சொன்னோம் நினைவிருக்கா. அவன் தான்டா இவன்”
“கல்யாணத்துல இவனை பார்த்ததுமே எனக்கு தெரிஞ்சு போச்சு. பதறிப்போய் அப்பாக்கிட்ட விபரம் சொன்னேன். அப்புறம் அவரும் நானும் தான் சேர்ந்து கல்யாணத்தை நிறுத்தினோம்”
“அப்போக்கூட இவன் லேசுல கிளம்ப மாட்டேன்னு சொன்னான். நான் உடனே சென்னையில நம்ம வேலை பார்த்த ஹோட்டல்க்கு போன் பண்ணி நம்ம சூர்யாகிட்ட எப்ஐஆர் காபி, நாம கம்பிளைன்ட் கொடுத்த காபி, இவன் தங்கியிருந்த ப்ரூப் எல்லாம் எனக்கு உடனே அனுப்ப சொன்னேன்”
“அவனும் அனுப்பினான். நம்மக்கிட்ட ப்ரூப் இருக்குன்னதும் தான் இவன் வெளியவே போனான்டா” என்று முழுதாய் சொல்லி முடித்திருந்தான் அவன்.
புவனாவும் அவன் சொன்னதை கேட்டுக் கொண்டுதானிருந்தாள். இவ்வளவு நடந்திருக்கிறதா என்று திகைப்பும் அவளுக்கு சேர்ந்துக் கொண்டது.
“இவனை ஏன்டா இப்படி போட்டு வைச்சிருக்கே. அடிச்சு துவைக்க வேண்டியது தானே” என்றான் யாகாஷ் இன்னமும் கோபம் தீராமல்.
“அதெல்லாம் ஆல்ரெடி அடிச்சாச்சு. இனிமே நான் துவைக்க எதுவுமில்லை. இனி அடிக்க வேண்டியவங்க தான் அடிக்கணும்” என்றான் தன் மீது இன்னமும் சாய்ந்து அழுதுக் கொண்டிருந்தவளை பார்த்து.
“நான் சூடா பாலை எடுத்து அவன் மேல ஊத்திட்டேன். அடுப்புல அவன் கையை இழுத்து வைச்சுவிட்டுட்டேன். அந்த கோபம் எல்லாம் சேர்ந்து அவன்…” என்றவள் கண்ணீர் நிற்காமல் ஓடியது.
“நீ என்னடா பெரிய புத்தன் மாதிரி பார்த்திட்டு இருக்கே. நம்ம புவனாவை அவன் இந்த பாடுப்படுத்தி இருக்கான். பேசாம இருக்கான் பாரு” என்று நண்பனை திட்டிய யாகாஷ் வேண்டுமட்டும் மாறனை அடித்தான்.
“நான் வேற அடிச்சிருக்கேன். அவளும் வேற அடிச்சிட்டால விடுடா…” என்று நண்பனுக்கு சொன்னவன் “உனக்கு அவனை அடிக்கணுமா” என்றான் அவளை தன்னிடமிருந்து பிரித்து.
“வேணாம்… எனக்கு அவனை அடிக்கக் கூட தொடப்பிடிக்கலை. அருவருப்பாய் இருக்கு…” என்றாள்.
“தனுஷ் இவனை போலீஸ்ல ஒப்படைச்சுடலாம்” என்றான் யாகாஷ் தீவிரமாய்.
“வேணாம்… நான் மாமாக்கு சொல்லிட்டேன் அவர் இங்க தான் வந்திட்டு இருக்காரு. இனிமே இவன் எப்பவும் எங்க வாழக்கையில திரும்பி வரக்கூடாது. அவர் வந்து இவனை என்ன பண்ணுறதுன்னு முடிவு பண்ணட்டும்” என்றான் தனுஷ்.
“நீ ஏன்டா இப்படி இருக்க, எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு இவனை எல்லாம் கொன்னாக் கூட தப்பில்லைன்னு தோணுது”
“வேகம் விவேகம் இல்லை யாகாஷ். எனக்கு இவன் இனி எப்பவும் தொல்லைப் பண்ணக்கூடாது அது தான் வேணும்” என்றவன் குறிப்பாய் புவனாவை பார்த்தான்.
வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. சக்திவேல் தன் குடும்பத்தினருடன் உள்ளே வந்தார். நடந்தை தன் மருமகன் மூலமும் யாகாஷ் மூலமும் கேள்விப்பட்டவர் மகளின் அழுகை பார்த்து தாங்காதவராய் அவரும் மாறனை கன்னாபின்னாவென்று அடித்துவிட்டார்.
போலீஸ் கம்பிளைன்ட் கொடுக்கலாம் என்று பேச்சு வர தனுஷ் வேண்டாமென்று விட்டான். “வேணாம் மாமா… அவங்க ரெண்டு பேரும் இனி எங்க வழியில வர மாட்டோம்ன்னு எழுதி கையெழுத்து போட்டு கொடுக்க சொல்லுங்க”
“நான் கம்பிளைன்ட் கொடுக்க விரும்பலை. மேல மேல எந்த துவேஷமும் யாருக்கும் வேண்டாம். ஆனா எங்க ஹோட்டல்க்கு ரெகுலர் கஸ்டமர் தெரிஞ்ச போலீஸ் ஒருத்தர் இருக்கார். அவர் முன்னாடி எனக்கு எழுதி கொடுக்க சொல்லுங்க” என்று முடித்துவிட்டான்.
“கடைசியா ஒண்ணு சொல்றேன் மாமா. நான் இப்போ தேவையில்லாத பிரச்சனை வேணாம்ன்னு தான் நினைக்கிறேன். ஆனா இவன் திரும்ப எங்க வழியில வந்தா நான் இவனை கொல்லவும் தயங்க மாட்டேன்” என்று முகம் கடுக்கவே சொன்னான் அவன்.
“கேட்டியா?? அவரா இருக்கவே உன் மகனை விடுறேன்னு சொல்றார். நான் நிச்சயம் கொன்னு தான் போட்டிருப்பேன். அவர் கேட்டதை எழுதிக் கொடுத்திட்டு உன் மகனை கூட்டிட்டு எங்கயாச்சும் போய்டுங்க” என்று தன் உடன்பிறந்தவளிடம் கடுமையாகவே கூறினார் அவர்.
அதன்பின் அவர்கள் அவன் கேட்டதை செய்திருக்க மாறனை இழுத்துக்கொண்டு போனார் அவன் அன்னை. பாலாஜிக்கு தனுஷை பார்க்க அப்படியொரு சங்கடமாயிருந்தது.
ஒருவழியாய் அவர்கள் எல்லாரும் கிளம்பினர். பாலாஜி தனுஷின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான். “என்ன பாலாஜி இதெல்லாம், எழுந்திரு. நீ எதையும் தெரிஞ்சு பண்ணலை விடு…” என்றான் அவன்.
“அப்பா இல்லையா மாப்பிள்ளை” என்றார் சக்திவேல் அப்போது தான் நினைவு வந்தவராய்.
“அவர் காலையிலேயே கோவில்க்கு போனார். இன்னும் வீட்டுக்கு வரலை மாமா…”
“உங்கப்பா எங்க குடும்பத்தையே காப்பாத்தியிருக்கார் மாப்பிள்ளை. அவரை பார்த்திட்டு நாங்க கிளம்பறோம்” என்று அவர் சொல்ல “வேணாம் மாமா அவருக்கு இப்போ நடந்த கலவரம் எதுவும் தெரிய வேணாம்”
“ஏற்கனவே எங்களை நினைச்சு அவர் ரொம்ப கவலையா இருக்காரு. நான் அப்பாகிட்ட பேசிக்கறேன் நீங்க இன்னொரு நாள் வந்து அவரை பாருங்க” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தான்.
——————–
“ஏன்மா அன்னைக்கே இதை நீங்க என்கிட்ட சொல்லலை??” என்றார் அவர் கவலை தோய்ந்த முகத்துடன்.
“நீங்களே ரொம்ப டல்லா வீட்டுக்கு வந்தீங்க. தவிர அன்னைக்கு நைட் உங்களுக்கு லேசா காய்ச்சல் வேற அடிக்கவும், இவர் தான் இப்போ எதுவும் சொல்ல வேணாம். அப்பா சரியாகட்டும் நான் பேசிக்கறேன்னு சொல்லிட்டார் மாமா…”
ஏனோ அந்த பதில் அவருக்கு சமாதானமாய் படவில்லை. மருமகளிடம் அதற்கு மேல் கேட்க முடியவில்லை. இது மகனிடம் பேச வேண்டிய விஷயம் என்றறிந்து அமைதியானார்.
“மாமா ப்ளீஸ் மாமா நானும் ஊருக்கு உங்க கூட வர்றேன்” என்றாள் மீண்டும்.
அவரோ அதைவிட்டு “ஏன்மா நான் கல்யாணத்தை நிறுத்தினதுல உனக்கு எதுவும் வருத்தமில்லையே”
“என்ன மாமா பேசறீங்க, நீங்க என் வாழ்க்கையை காப்பாத்தியிருக்கீங்கன்னு நான் சொன்னேனே மாமா… தவிர உங்க மகனோட என்னை சேர்த்து வைச்சிருக்கீங்க, நான் ஜென்ம ஜென்மத்துக்கும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன் மாமா” என்றாள் வெகுவாய் நெகிழ்ந்து.
அதன்பின் அவர் வேறு ஒன்றும் பேசவில்லை தன்னறைக்கு சென்றுவிட்டார். தனுஷும் கோவமாக இருந்ததால் அன்று இரவு வீட்டிற்கு வந்தபின் தந்தையை பற்றி மனைவியிடம் விசாரித்தானேயொழிய அவரிடம் எதுவும் பேசியிருக்கவில்லை.
மறுநாள் வங்கிக்கு சென்று வீட்டுக்கு வந்தவர் தன்னறையில் புகுந்துக்கொண்டு அதையும் இதையும் உருட்டிக் கொண்டிருந்தார்.
புவனா அவ்வப்போது எட்டிப்பார்த்தாலும் ஒன்றும் கேட்கவில்லை அவரிடம். தன் கணவன் சொல்லியே சென்றிருந்தான் அவரை எதுவும் கேள்வி கேட்காதே அப்படியே விட்டுவிடு என்று.
அதனால் அவளும் அவர் தேவைகளை கவனித்தாள் அவரை உபசரித்து நன்றாகவே பேசினாள். ஆனால் அதிகமாய் எதுவும் பேசவில்லை அவரிடம்.
இரவு உணவு உண்டுவிட்டு எப்போதும் ஒன்பது மணிக்கே மாத்திரை போட்டு உறங்கிவிடும் அவர் அன்று உறங்காமல் விழித்திருந்தார். எதுவும் கேட்க வேண்டாம் என்று எண்ணினாலும் அவளுக்கு மனது கேட்கவில்லை.
“என்னாச்சு மாமா உடம்புக்கு எதுவும் செய்யுதா. தூங்காம இருக்கீங்களே” என்றாள் அக்கறையாய்.
“இல்லைம்மா தேவா வரட்டும்ன்னு தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்”
“நான் போன் பண்ணி உடனே வரச்சொல்றேன் மாமா அவரை” என்றாள் அவள்.
“வேணாம்மா இது அவன் ஸ்டேஷன்ல இருக்க நேரம். அவன் ப்ரோகிராம் போயிட்டு இருக்கும்ல இப்போ டிஸ்டர்ப் பண்ண வேணாம்” என்றார் அவர்.
‘இவர் என்ன சொல்றார், என்ன ப்ரோகிராம் என்ன ஸ்டேஷன். அப்போ இவரும்…’ என்று அவள் யோசிக்க ‘ஓ அன்னைக்கு கூட நம்ம ஸ்டேஷன்ல சந்தர் சொன்னாரே இவர் இன்னொரு எப்எம்ல வேலை பார்க்கறார்ன்னு’ என்ற நினைவு வந்தது அவளுக்கு.
‘இன்னும் அவரா என்கிட்ட சொல்லவேயில்லை’ என்று மனதிற்குள் அவனுக்கு அர்ச்சனை செய்தாலும் தன் மாமனார் இன்னமும் தன் கணவனுக்காய் காத்திருப்பது கண்டு மெதுவாய் அவர்கள் அறைக்குள் சென்றாள்.
அவர் வேண்டாமென்ற போதும் தனுஷுக்கு அழைத்துவிட்டாள். “சொல்லு சக்தி இந்த நேரத்துல கூப்பிட்டு இருக்க”
“எப்போ வருவீங்க?? எங்க இருக்கீங்க??”
“நான் வர்றதுக்கு இன்னும் ஒன் ஹவர் ஆகும். நான் எங்கே இருக்கேன்னு உனக்கு தெரியாதா” என்றான் நமுட்டு சிரிப்போடு.
அவன் குரலில் சிரிப்பு தெரிவதை உணர்ந்தவள் “தெரியும் எங்க இருக்கீங்கன்னு நல்லாவே தெரியும். அதுக்கு உங்களுக்கு தனியா கச்சேரி இருக்கு. இப்போ ஒரு முக்கியமான விஷயம்” என்றாள்.
“என்னாச்சும்மா…”
“மாமா தூங்காம உங்களுக்காக காத்திட்டு இருக்கார். ஏதோ பேசணும்ன்னு வெயிட் பண்ணுற மாதிரி இருக்கு. நீங்க சீக்கிரம் வீட்டுக்கு வாங்களேன்” என்றாள்.
“இப்போவேவா…” என்று யோசித்தவன் “கொஞ்ச நேரத்துல திரும்ப கூப்பிடறேன்” என்று சொல்லி வைத்துவிட்டான்.
அவன் வேலை செய்யும் எப்எம் ஸ்டேஷனில் அவனின் மேலதிகாரியை சந்தித்து அவசரமாய் தான் கிளம்ப வேண்டிய நிர்பந்தம் என்று சொல்ல எப்போதும் இது போல பாதியில் எல்லாம் விட்டுச்செல்லாதவன் புதிதாய் கேட்கிறான் என்றால் அவன் அவசரம் பெரிது என்று உணர்ந்தவராய் அவனுக்கு அனுமதி கொடுத்தார்.
அப்போதும் அவன் மீண்டும் சென்று அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு நிகழ்ச்சியை நாளை தொடருவதாக சொல்லி பின் கிளம்பிவிட்டான் வீட்டிற்கு.
அடுத்த அரைமணியில் அவன் வீட்டிலிருந்தான். புவனாவிற்கு தான் வீட்டிற்கு வருவதாய் கிளம்பும் முன் மெசேஜ் செய்திருந்தான்.
அவன் நேரமாக வீட்டிற்கு வந்ததுமே வேணுகோபாலிற்கு புரிந்து போனது அது தன் மருமகளின் வேலை என்று.
வந்ததுமே தன் தந்தையின் முன்னே தான் வந்து அமர்ந்தான் அவன் “சொல்லுங்கப்பா” என்றவாறே.
“நீ போய் ரெப்ரெஷ் பண்ணிட்டு வா தேவா. சாப்பிட்டியா??” என்றார்.
“சாப்பிட்டு தான் ஸ்டேஷன்க்கு போனேன்ப்பா… நீங்க சொல்லுங்க” என்றான் அவன் விடாபிடியாய்.
அவன் விடமாட்டான் என்றுணர்ந்தவர் “ட்ரான்ஸ்பர் ஆர்டர் வந்திடுச்சு. வர்ற ஒண்ணாம் தேதி நான் அங்க ரிபோர்ட் பண்ணணும்” என்றார்.
“சரி…” என்றான் வெறுமையாய்.
“நாளைக்கே ஊருக்கு கிளம்பலாம்ன்னு இருக்கேன்”
“என்ன அவசரம் அதான் பத்து பதிமூணு நாள் இருக்கே… உடனே கிளம்பணும்ன்னு என்ன அவசரம்”
“அங்க போய் வீடு எல்லாம் செட் பண்ணணும். அதான் நாளைக்கே கிளம்பினா சரியா இருக்கும்ன்னு கிளம்பறேன்”
“வீடு செட் பண்ண என்ன இருக்கு. நம்ம வீடு அங்க தானே இருக்கு”
“போய் கிளீன் பண்ண வேண்டாமா??”
“நீங்க கிளீன் பண்ணப்போறீங்களா அதெல்லாம் வேண்டாம். நான் என் பிரண்ட்கிட்ட சொல்லி எல்லாம் ரெடி பண்ணி வைக்குறேன் அங்க. நீங்க இப்போவே போக வேணாம்”
“இல்லை நான் நாளைக்கே ஊருக்கு போகப்போறேன்” என்றார் சிறுபிள்ளையின் பிடிவாதக்குரலில்.
“அப்பா…” என்று அதட்டலாய் ஆரம்பித்தவன் சட்டென்று தணிந்து “ப்ளீஸ்ப்பா நான் சொல்றதை கேளுங்க… நாளைக்கே ஊருக்கு கிளம்பறேன்னு சொல்றீங்க. எங்களுக்கு கஷ்டமா இருக்காதா… ப்ளீஸ்… ப்ளீஸ்ப்பா ஒரு ஒரு வாரம் எங்களோட இருக்க மாட்டீங்களா ப்ளீஸ்ப்பா…” என்றான் கெஞ்சும் குரலில்.
மகனின் இந்த கெஞ்சல் அவருக்கு புதிது. இப்படி செய்கிறவனில்லை அவன் என்று தோன்ற சரியென்றுவிட்டார் அவனிடம்.
“தேங்க்ஸ்ப்பா…” என்றான் உளமார.
“நீங்க போய் படுங்கப்பா” என்று சொல்ல அவரும் எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.
பின் அவன் தங்களறைக்கு சென்று குளித்து வேறு உடைமாற்றி வந்தவன் கட்டிலில் அமர்ந்திருந்த தன் மனைவியினருகில் சென்று அமர்ந்தான்.
“என்ன மேடம் நீங்க தூங்காம என்ன பண்றீங்க??” என்றவன் அவளை இழுத்து தன் மேல் சாய்த்துக் கொண்டான்.
அவனிடமிருந்து திமிறியவள் சற்று தள்ளி அமர்ந்தாள். “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்”
“நீயுமா??”
“ஹ்ம்ம் ஆமாம்…”
“சொல்லு என்ன தெரியணும் உனக்கு”
“என்ன நடக்குது இங்க??”
“என்ன நடக்குது??” என்றான் அவனும்.
“மாமாக்கும் உங்களுக்கும் நடுவுல என்ன நடக்குது…”
“அதை தெரிஞ்ச்சு நீ என்ன பண்ணப் போறே??” என்று அவன் சொல்ல கோபமானாள் அவள்.
“சரி சரி, கோபம் வேணாம். சொல்லு உனக்கு என்ன தெரியணும்…”
“எனக்கு ரெண்டு விஷயத்துக்கு பதில் தெரியணும்”
“என்ன அது??”
“மாமாக்கு என்னாச்சு… அதாவது என்ன பிரச்சனை??” என்று அவள் கேட்க அவன் அமைதியாக இருந்தான்.
“இல்லை நான் ஒண்ணு கேட்பேன்”
“கேளு” என்று ஊக்கினான்.
“மாமாவுக்கும் மிதிலா ஆன்ட்டிக்கும் எதுவும் பிரச்சனையா??” என்று அனுமானமாய் கேட்டு முடித்திருந்தாள் அவள்.
தன் கணவன் இரண்டொரு நாளுக்கு முன் தன் மாமனாரிடம் மிதிலாவை பற்றி கேட்டதையும் அதற்கு அவர் சொன்ன பதிலையும் வைத்து தான்  ஏதோ தோன்ற அப்படி கேட்டிருந்தாள்.
அவளின் இந்த அனுமானத்தில் அவன் சற்று வியந்து தான் போனான். “சக்தி நீ இதை தப்ப…”
“ச்சே… ச்சே… வாயை மூடுங்க… நான் ஏன் தப்பா நினைக்கப் போறேன். எனக்கு அப்படில்லாம் எந்த எண்ணமும் இல்லை. ஆனாலும் இப்படி ஒரு பிரச்சனையை நான் எதிர்ப்பார்க்கலை”
“எனக்கு இது அதிர்ச்சி தான். ஆனா தப்பா நினைக்கற அளவுக்கு என்ன இருக்கு…”
“உனக்கு நான் நினைக்கறது புரியலை சக்தி…” என்றான்.
“நீங்க என்ன புரிஞ்சு கேட்டீங்களோ அதை புரிஞ்சு தான் நானும் பதில் சொன்னேன். மாமா அவங்களை அத்தையா கூட்டிட்டு வந்தாலும் நான் தப்பா நினைக்க மாட்டேன்” என்று அவள் உடைத்து சொல்ல மனைவியை இழுத்து அவனுக்கு தோன்றிய இடத்தில் எல்லாம் முத்தம் கொடுத்தான் அவன்.
அவளும் திமிறாமல் அவனுக்கு இசைந்து கொடுத்தாள். “லவ் யூ சக்தி… லவ் யூ சோ மச்… நான் உனக்கு எப்படி புரிய வைக்கப் போறேன்னு கொஞ்சம் பயந்து தான் இருந்தேன்”
“நீ… நீ இப்படி சொல்வேன்னு நினைக்கவே இல்லை சக்தி… லவ் யூ… லவ் யூ…” என்று விடாமல் சொன்னவன் அவளின் அடுத்த கேள்வியை அவளை கேட்கவே விடவில்லை.
இரவு முழுதும் லவ் யூ லவ் யூ என்று இடைவிடாமல் சொல்லிக் கொண்டிருந்தவன் அவளிடம் தன்னை தொலைத்துக் கொண்டிருந்தான்…

Advertisement