Advertisement

அத்தியாயம் – 22
“இன்னும் என் மேல உங்களுக்கு கோவமா??” என்று நேரடியாகவே கேட்டுவிட்டாள்.
“கோவம் எதுக்கு??”
“அப்போ ஏன் ஒண்ணுமே பேச மாட்டேங்கறீங்க??”
“நாம பேசியே ஆகணுமா இப்போ??”
“என்கிட்ட உங்களுக்கு பேச ஒண்ணுமில்லையா??”
“நாம பேசினதே இல்லையா என்ன??”
“இதென்ன நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்டா நீங்க பதிலுக்கு என்னை கேள்வி கேட்டுட்டே இருக்கீங்க… நான் கேட்டதுக்கு மட்டும் நீங்க ஒரு பதிலும் சொல்லலையே…”
அவளிடம் இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்டு விளையாடுவது கூட ஒரு சுவாரசியமாய் இருக்க படுத்துக்கொண்டே பதிலிறுத்தவன் இப்போது எழுந்து அமர்ந்திருந்தான்.
அவன் மனம் லேசாகி இருந்தது இப்போது, இதழோரம் ஒரு குறுஞ்சிரிப்பும் அதை அவளறியாமல் மறைத்தவாறே “சரி நீ கேட்ட எல்லா கேள்விக்கும் நான் பதில் சொல்றேன், ஆனா அதுக்கு முன்னாடி நான்…” என்று நிறுத்தினான்.
“ஹ்ம்ம் அதுக்கு முன்னாடி??”
“எனக்கொரு பதில் வேணும்…”
“ஹ்ம்ம் கேளுங்க சொல்றேன்…”
“இது கேக்குறது இல்லை…” என்றவனின் பார்வை மாற்றம் அவள் உணரவில்லை, புரியாமல் அவனை ஏறிட்டாள்.
“அப்படின்னா??”
“உனக்கு ஓகேவான்னு முதல்ல சொல்லு…”
“எதுக்கு ஓகேவான்னு கேட்கறீங்க??”
“நீ சரின்னு சொல்லு நான் சொல்லுறேன்…”
“ஹம்… ஹ்ம்ம் சரி…” என்று அவள் சொல்லவும் தன்னிருகரங்களால் அவள் முகம் பற்றினான்.
இவ்வளவு நேரம் அவன் என்ன சொல்ல வந்தான் என்று புரியாதவளுக்கு ஏதோ புரிவது போல இருந்தாலும் கொஞ்சம் மிரட்சியுடனே அவனை பார்த்தாள்.
“பயமாயிருக்கா??”
அவள் தலை தன்னையுமறியாமல் இல்லையென்று ஆடியது.
“பயமாயிருந்தா பரவாயில்லை கண்ணை மூடிக்கோ…” என்றுவிட்டு அவன் இதழ்கள் அவளிதழை அணைத்திருந்தது.
அவளிடமிருந்து எந்தவொரு எதிர்ப்போ சுணக்கமோ இல்லாது போக இருவரும் ஒருவருக்குள் மற்றவர் முழுகிக் கொண்டிருந்தனர்.
அவளை வம்பிழுக்கவே ஆரம்பித்தது அவனிதழ்களின் உரசல் அதரத்தில் மட்டுமல்லாது அவள் முகமெங்கும் ஊர்வலம் சென்றது.
அத்துடன் அது முடியவில்லை இதழில் ஆரம்பித்த விளையாட்டு பின் அவர்களின் உறவில் முடிந்து இனிய இல்லறம் ஆரம்பமாகியிருந்தது அவர்களுக்குள்.
காலையில் சோம்பலாய் கண் விழித்த புவனா கைபேசி எடுத்து நேரம் பார்க்க அது எட்டை தாண்டியிருந்தது கண்டு பதறி எழுந்து அமர்ந்தாள்.
இரவில் நடந்தது எல்லாம் கண் முன் வர அருகில் இருந்தவனை அவள் தேட அவன் எப்போதோ எழுந்து வெளியேறியிருந்தான்.
நடந்ததெல்லாம் கனவாக இருக்குமோ என்று யோசித்தவளுக்கு தன்னிலை அவள் எண்ணம் பொய்யென்றுரைத்தது.
அவசரமாய் எழுந்து அவள் குளித்து வெளியில் வரவும் அவன் கையில் காபியுடன் உள்ளே வந்தான். “சூடா இருக்கு, குடிச்சிட்டு பேசுவோம்” என்றான் அவள் அவனிடம் பேச விரும்புவது புரிந்து.
“தேங்க்ஸ்”
“இந்த தேங்க்ஸ் எதுக்குன்னு தெரிஞ்சுக்கலாமா” என்றவனின் பார்வையில் குறும்பு மின்ன அவள் தலைகுனிந்தாள் காபியை குடிக்கும் சாக்கில்.
குடித்து முடித்து நிமிர்ந்தவள் “காபிக்கு தேங்க்ஸ்” என்றாள் காபியில் அழுத்தம் கொடுத்து.
“இப்போ தேங்க்ஸ் காபிக்குன்னு புரிஞ்சுது, அப்போ முதல்ல சொன்னது??”
“உங்களை…” என்று சொல்லி அவன் கையில் லேசாய் குத்தினாள்.
“சரி நேத்து நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் ஒண்ணும் சொல்லவேயில்லையே…”
“நீங்க தான் கேள்வியே கேட்கவேயில்லையே??”
“நான் தான் கேட்டனே??”
“இல்லைங்க…”
“சரி நேத்து கேட்டதை விடு, மறுபடியும் கேட்கறேன்…” என்றவன் அவள் கையில் இருந்த கோப்பையை வாங்கி கட்டிலின் அருகில் இருந்த மேஜையில் வைத்தான்.
அவளையும் சுவற்றோரம் சாய்த்து நிற்க வைத்தவன் அவளை நெருங்கி நின்றிருக்க அவளுக்குள் குறுகுறுவென்றிருந்தது.
சட்டென்று குனிந்து அவள் இதழில் இதழொற்றி எடுத்தான். “இப்போ நீ பதில் சொல்லணும், எங்கே நான் கேள்வி கேட்ட மாதிரியே நீ பதில் சொல்லு பார்ப்போம்…” என்று அவன் சொல்ல ‘அடப்பாவி’ என்றவனை பார்த்தாள் அவள்.
“உங்களை… பதிலா சொல்லணும் இருங்க…” என்றவள் சுற்றுமுற்றும் எதையோ தேட சுதாரித்தவன் சற்றே நகர கட்டிலில் இருந்த தலையணை அவள் கைக்கு அகப்பட எடுத்து அவனை நோக்கி வீச அவன் கட்டிலின் மீதேறி நின்றிருந்தான் இப்போது.
“அடிப்பாவி அடிக்காதேடி, இதெல்லாம் அநியாயம் ஒரு கேள்வி கேட்டது குத்தமா அதுக்கு பதில் தெரியலைன்னா சொல்லியிருக்கலாம்ல அதையும் நானே சொல்லிக் கொடுத்து இருப்பேன்ல…” என்று மேலும் மேலும் அவளை வம்பு வளர்த்தான்.
‘அய்யோ இவன் என்ன இப்படி எல்லாம் பேசுகிறான், மானம் போகிறது…’ என்ற எண்ணம் அவளுக்கு தோன்றிய போதும் மனம் அதை மிகவும் மகிழ்வாகவும் நெருக்கமாகவும் உணர்ந்தது.
அவசரமாய் கடவுளிடம் ஒரு வேண்டுதலை வைத்தாள். ‘எங்களை இனி இப்படியே சந்தோசமாய் வைத்திரு’ என்று. பின் அவனை விரட்டவும் அவள் மறக்கவில்லை.
அவன் வெளியே ஓடிவர “அப்பா இவ என்னை அடிக்கறா??” என்று சமையல் அறையில் இருந்து வெளியில் வந்தவரிடம் அவன் சொல்ல அவர்கள் அறையில் இருந்து வெளியில் வந்தவள் மாமனாரை கண்டதும் அப்படியே நின்றுவிட்டாள்.
“உங்க சண்டைக்கு நான் வரமாட்டேன்ப்பா, நீ இவனை அடிச்சாலும் உதைச்சாலும் நான் எதுவும் கேட்க மாட்டேன்ம்மா…”
“தேவா உன்னை அடிச்சு வளர்க்க எம் பொண்டாட்டி தான் இல்லை… உம் பொண்டாட்டிகிட்டயாச்சும் நல்லா அடி வாங்குடா மகனே…” என்றார் அவர்.
“அப்பா நீங்க ரொம்ப மோசம்…” என்றான் அவன்.
“சாப்பிட்டீங்களா மாமா”
“இப்போ தான்மா சாப்பிட்டேன்”
“சாரி மாமா எழுந்துக்க லேட் ஆகிடுச்சு” என்றாள் சங்கடமாய்.
“அதனாலென்னமா… நீ இன்னைக்கு ஆபீஸ் போகலையாம்மா”
“இல்லை மாமா போகலை, லீவ் சொல்லிட்டேன்…”
“நல்லது…” என்றவர் “பேசாம ரெண்டு பேரும் கோவில்க்கு போயிட்டு வாங்களேன், ஏன் தேவா கூட்டிட்டு போயேன்டா… நீங்க சேர்ந்தாப்புல எங்கயும் போனதில்லையே…”
“இல்லைப்பா யாகாஷ் ஹோட்டல் போயிருக்கான். நான் மார்கெட் போயிட்டு காய்கறிக்கு எல்லாம் சொல்லிட்டு ஹோட்டல் போகணும். ரெண்டு நாள் முன்னாடியே போக வேண்டியது, மீட்டிங் கேன்சல் ஆனதுனால தான் என்னால வீட்டுக்கு வந்திட்டேன்” என்று அவன் சொல்லி முடிக்கும் போது புவனாவின் முகம் இறுகியது.
அன்றைய நாளை நினைத்து வருந்துகிறாள் என்று அவனுக்கு புரிந்தது. தான் மட்டும் அந்த நேரத்தில் வீட்டிற்கு வரவில்லை என்றால் என்னவாகியிருக்கும் என்று அவனுக்குமே கலக்கமாகவே இருந்தது அப்போது.
 
“உங்களுக்கு தினமும் தான் வேலையிருக்கும். ஒரு நாள் எல்லாம் ஒதுக்கி வைச்சுட்டு போயிட்டு வாயேன்டா” என்றார் அவர்.
“ஹ்ம்ம் போகலாம்ப்பா…” என்றான் தன் மனைவியின் கவலையான முகத்தை பார்த்துக்கொண்டே
“அப்பா மிதிலா ஆன்ட்டி ஒரு வாரமாவே பார்க்கலையே”
“தெரியலையே” என்றார் அவர் பதிலாய்.
“போன் பண்ணேன்ப்பா எடுக்கவே இல்லை. அப்புறம் சுவிட்ச் ஆப்ன்னு வந்திருச்சு” என்றான்.
“ஓ!!” என்றார் அவர் ஒற்றைச் சொல்லாய்.
தனுஷின் பார்வை தன் தந்தையை துளைத்தது. இவர் ஏன் இப்படி இருக்கிறார் என்று. தான் ஆசைப்பட்டது நடந்துவிட்டதோ அதில் ஏதும் சொதப்பல் ஆகிவிட்டதோ என்று தோன்றியது அவனுக்கு.
அதை எப்படி தெரிந்து கொள்வது என்று அவன் யோசிக்க அடுத்து அவன் தந்தை சொல்லப் போகும் விஷயம் புரிந்ததுமே தெரிந்து கொண்டான் எதுவோ நடந்திருக்கிறது என்று.
“நான் திருச்சிக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு போகலாம்ன்னு இருக்கேன்” என்றார் அறிவிப்பாய்.
“என்னப்பா சொல்றீங்க?? ரிடையர்மென்ட் லைப் இனி இங்க தான்னு சொன்னீங்களேப்பா. அதனால தானே நானும் இங்க வந்தேன். இன்னும் ஒரு வருஷத்துல வாலண்டரி ரிடையர்மென்ட் வாங்குறேன்னு சொன்னீங்களேப்பா”
“இப்போ நீங்க போறேன்னு சொன்னா என்ன அர்த்தம். நான் அங்க வந்து திரும்ப முதல்ல இருந்து எல்லாமே ஆரம்பிக்கணுமேப்பா” என்று மகன் சொல்லவும் அவருக்கு என்னவோ போலானது.
தன்னை தனியே விடாது தன்னோடே இருக்க வேண்டும் என்று நினைக்கும் மகனை குறித்த பெருமிதம் ஒரு நொடி வந்து போனது அவர் முகத்தில்.
“எனக்கு நம்மோட சொந்த ஊர்ல கொஞ்ச நாள் இருக்கணும்ன்னு ஆசை. அதான் அங்க போகலாம்ன்னு ரிடையர்மென்ட் ஆனதும் இங்க வந்திடறேன். நீங்க இங்கவே இருங்க” என்று மகனுக்கு சமாதானம் சொன்னார் அவர்.
“அப்பா…” என்றான் அவரை முகத்தை நேருக்கு நேர் பார்த்து.
புவனா அங்கு என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்த்தாள். இருவருமே பூடகமாய் ஏதோ பேசுவது புரிந்தது, ஆனால் என்னவென்று அவளுக்கு புரியவில்லை.
வேணுகோபால் மகனின் முகத்தை பார்க்காது வேறு புறம் திரும்பினார்.
“அப்பா…” என்றான் இம்முறை அழுத்தமாக.
“என்னப்பா”
“நீங்க எங்கயும் போகவேண்டாம்”
“இல்லை தேவா நான் முடிவு பண்ணிட்டேன். ட்ரான்ஸ்பர் ஆர்டர் நாளைக்கு வந்திடும்”
“என்ன?? அப்போ என்னைவிட்டு போகணும்ன்னு முடிவு பண்ணிட்டீங்க அப்படித்தானே”
“உன்னைவிட்டு நாங்க தேவா போகப்போறேன். நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நாள் தனியா சந்தோசமாயிருங்க. நான் ஒரு வருஷம் தானே அங்க இருக்க போறேன்”
“லீவு விட்டதும் முதல்ல கிளம்பி இங்க தான் வருவேன்” என்றார் அவர்.
தனுஷ் வேறு எதுவும் பேசவில்லை. தந்தையை எதிர்த்து பேசுவது போலாகும் என்று எண்ணி பேச்சை அத்துடன் முடித்துக் கொண்டான்.
அவன் முகம் கோபத்தில் ஜிவ்வென்றிருந்ததை அங்கிருந்த மற்ற இருவருமே உணர்ந்தனர். “நான் கிளம்பறேன்” என்று பொதுவாய் உரைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
அவன் சென்றதும் வேணுவிடம் “ஏன் மாமா என் மேல எதுவும் கோபமா உங்களுக்கு?? இல்லை எங்க ரெண்டு பேரு மேலயும் கோபமா இருக்கீங்களா?? எங்களை விட்டு எதுக்கு தனியா போகறீங்க??”
“என்னாச்சு மாமா என்ன பிரச்சனைன்னு என்கிட்ட சொல்லக்கூடாது. உங்க மருமகன்னு நினைச்சா சொல்ல வேண்டாம், மகளா நினைச்சா சொல்லுங்க மாமா” என்றாள் அவள்.
“என்னம்மா நீயும் இப்படி பேசறே… உங்க மேல எனக்கு என்ன கோபம் இருக்கப்போகுது. பிரச்சனை எல்லாம் ஒண்ணுமில்லைம்மா புவனா. என் மனைவியோட நான் வாழ்ந்த ஊருக்கு போகணும்ன்னு ஒரு ஆசை”
“அதனால தான் அங்க போகணும்ன்னு நினைக்கிறேன். வேற எதுவும் காரணமில்லைம்மா”
“ஹ்ம்ம் அப்போ சரி மாமா” என்றாள்.
அவர் ஹப்பா என்று ஆசுவாசப்பட “நீங்க கிளம்பும் போது நானும் உங்கக்கூட வர்றேன். இவர் வார வாரம் அங்க வந்து நம்மளை பார்த்துக்கட்டும்” என்று சொல்ல வேணுகோபால் ‘இது என்ன’ என்பது போல் அமர்ந்துவிட்டார்.

Advertisement