Advertisement

அத்தியாயம் – 16
 
தனுஷ் அவளை தன் வண்டியில் ஏற்றிக்கொண்டு கோவை சென்றுக் கொண்டிருந்தான் அவளை அலுவலகத்தில் விடுவதற்காய்… அவன் தினசரிகளில் அதுவும் ஒன்றென ஆக்கி வைத்திருந்தாள் அவன் மனையாள்.
 
முடியாது என்று அன்று சொன்னவன் தானே கூட்டிச் செல்கிறேன் என்று சொல்ல வைத்த அவளின் மீது அவனுக்கு இன்னமும் கோபம் இருந்தது.
 
அன்று அவ்வளவு சீன் கிரியேட் செய்துவிட்டாள் அவன் தந்தையின் முன்பு. அன்றைய நாள் அவன் நினைவிற்கு வந்து போனது. திங்கள் காலை எழுந்து வந்தவள் சோகமாய் வெளி சோபாவில் அமர்ந்திருந்தாள்.
 
வேணுகோபால் வங்கிக்கு செல்வதற்கு பரபரப்பாய் கிளம்பிக் கொண்டிருந்தார். அவள் அமர்ந்திருப்பதை கண்டார் ஆனால் ஒன்றும் கேட்கவில்லை.
 
அன்று மாதத்தின் முதல் நாள் என்பதால் வங்கியில் கூட்டம் அதிகமிருக்கும் என்று அவருக்கு தெரியும். பென்ஷன் எடுக்கவென்று முதல் நாளே வங்கிக்கு படையெடுக்கும் ஓய்வூதியதாரர்கள் அதிகமென்பதால் நேரமாய் கிளம்ப ஆயத்தமானார்.
 
காலை உணவிற்காய் சமையலறை செல்லும் தருவாயில் தான் மீண்டும் மருமகளை பார்த்தார். அதே சோபாவில் இன்னமும் அமர்ந்திருந்தாள் அவள் அதே பாவத்தில்.
 
“என்னம்மா இன்னைக்கு முதல் நாள் ஆபீஸ் போகணும்ன்னு சொன்னே?? இன்னும் கிளம்பாம இங்கவே உட்கார்ந்து இருக்கியே?? என்னாச்சும்மா??” என்று கேட்டுக் கொண்டே அவளருகில் வந்தார்.
 
“ஒண்ணுமில்லை மாமா யோசிச்சுட்டு இருக்கேன்…”
 
“யோசிக்கறியா எதைப்பத்திம்மா??”
 
“ஹ்ம்ம்… அது ஒண்ணுமில்லை மாமா, அதை விடுங்க உங்களுக்கு டைம் ஆச்சுல… இருங்க தோசை ஊத்தி தர்றேன்…” என்று சமையலறை நோக்கி விரைந்தாள்.
 
“அதெல்லாம் இருக்கட்டும்மா… நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லு முதல்ல…”
 
“ஒண்ணும் பெரிய விஷயமில்லைங்க மாமா… வேலைக்கு போகலாமா வேணாமான்னு ஒரு யோசனை…”
 
“உனக்கு பிடிச்ச வேலைன்னு தேவா சொன்னானேம்மா…”
 
‘இதெல்லாம் அவருக்கு நல்லா ஞாபகமிருக்காமா…’ என்று லேசாய் மனதிற்குள் ஒரு குமைச்சல் அவளுக்கு.
 
“ஹ்ம்ம் ஆமாங்க மாமா…”
“அப்புறம் ஏன் வேணாம்ன்னு சொல்றே??”
 
“இல்லை எனக்கு நாளையில இருந்து காலையில் எட்டு மணி ஷோன்னு சொன்னாங்க… அவ்வளவு சீக்கிரம் எல்லாம் என்னால போக முடியாது…”
 
“தவிர இது சென்னை மாதிரி இருந்தா நான் வேற ஷோ மாத்தி வாங்கி இருப்பேன்… நானே இப்போ அங்க இருந்து இங்க மாற்றல் வாங்கி வந்திருக்கேன், அவங்க என்ன சொல்றாங்களோ அதை தானே மாமா நான் செய்யணும்…”
 
அவள் இப்போது சொன்னதிற்கும் வேலையை விடுவதாய் யோசிப்பதற்கும் என்ன சம்மந்தம் என்று அவருக்கு இன்னமும் புரியவில்லை.
 
“அதுனால என்னம்மா உனக்கு அந்த ஷோ பண்ண பிடிக்கலையா??”
 
“அப்படி இல்லைங்க மாமா… எட்டு மணி ஷோன்னா நான் காலையில ஏழு ஏழரை மணிக்கெல்லாம் அங்க இருக்கணும்…”
 
“உங்களுக்கே தெரியும் இங்க இருந்து அங்க போக எவ்வளவு நேரமாகும்ன்னு… நான் பஸ் விட்டு இறங்கி உள்ள அவ்வளவு தூரம் நடந்து போகணும்…”
 
“அதான் யோசனையா இருக்கு மாமா… அவசரப்பட்டு இங்க மாற்றல் வாங்கிட்டமோன்னு… பேசாம வேலையை விட்டுடலாமா இல்லை வேற வேலை தேடிக்கலாமான்னு யோசனை…”
 
“இவ்வளவு தானாம்மா நான் கூட என்னவோ ஏதோன்னு நினைச்சுட்டேன்… இதெல்லாம் ஒரு கவலையா விட்டுத்தள்ளும்மா…”
 
“இன்னைக்கே உனக்கு ஒரு வண்டி வாங்கிடலாம் நீ அதுலவே போயிட்டு வந்திடு…”
 
“மாமா எனக்கு வண்டி ஓட்டத் தெரியாதுங்க மாமா…”
 
உள்ளே படுத்திருந்த தனுஷுக்கு அவள் பேச்சு மொத்தமும் கேட்கத்தான் செய்தது. அப்படியே ஒரு பக்கெட் தண்ணியை பிடித்து அவள் தலையில் கவிழ்த்துவிடும் ஆத்திரம் அவனுக்கு.
 
‘நான் தான் கூட்டிட்டு போகணும்ன்னு முடிவு பண்ணியே தான் இவ இவ்வளவும் செய்யறா… இன்னும் எவ்வளவு தூரம் தான் போகுதுன்னு பார்ப்போம்…’ என்ற எண்ணத்தில் கண்ணை திறவாமல் படுத்திருந்தான் அவன்.
 
“நான் உனக்குன்னு ஒரு ஆட்டோ பேசிடறேன்ம்மா நீ அதுலவே போய் வந்துக்கலாம்…” என்று அவர் சொல்ல தனுஷோ தன் தந்தைக்கு ஒரு சபாஷ் போட்டுக்கொண்டான் மனதில்.
 
அவர் இவ்வளவு தூரம் சொல்லியும் மருமகளின் முகம் தெளியாதது கண்டு “என்னம்மா ஆட்டோல போக உனக்கு பயமா??”
 
“அதெல்லாம் இல்லீங்க மாமா… அவ்வளவு தூரம் ஆட்டோலவுல போனா எவ்வளவு செலவு, அது எதுக்குன்னு தான் யோசிக்கறேன்… பேசாம நான் வேலையை விட்டிர்றேன் மாமா…” என்றாள் மீண்டும் முதலில் இருந்து.
 
பொறுத்து பொறுத்து பார்த்து பொங்கியவனாக அறையில் இருந்து எழுந்து வந்தான் தனுஷ். எப்படியும் இன்னும் சற்று நேரத்தில் தன் தந்தையின் வாயில் இருந்து அந்த வார்த்தை தான் வரும் என்று தெரிந்து போனது அவனுக்கு.
 
அவர் சொல்லி ஒன்றை மறுக்கவும் அவனால் முடியாதென்பதால் அவனாகவே முன் வந்து அவளிடம் “அப்போ நான் வேணா தினமும் உன்னை கூட்டிட்டு போய் விட்டுட்டு வரட்டுமா??” என்று சொல்ல அவள் முகம் பிரகாசமாய் ஒளிவிட்டு எரிந்தது.
 
அதை கண்டும் காணாமல் கண்ட வேணுகோபாலுக்கு அதன் பின்னே தான் விஷயமே புரிந்தது. லேசாய் சிரித்துக் கொண்டவர் “என்னம்மா இப்போ ஓகே தானே??” என்று கேட்டு வைத்தார் மருமகளிடம்.
 
“டபுள் ஓகே மாமா…” என்று தன்னை மீறி உற்சாகமாய் அவள் சொல்லிவிட அதை ஒரு முறைப்புடனே பார்த்து பல்லைக் கடித்தவாறே தன்னறைக்கு சென்று கிளம்பலானான் அவன்.
 
இதோ இன்றும் அவளை விட்டுச்செல்ல தான் அவ்வளவு தூரம் வந்திருந்தான் அவன். வண்டியை அவள் அலுவலகத்தின் வாயிலில் சென்று நிறுத்த “ப்ளீஸ் ப்ளீஸ் இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆகிட்டு என்னை உள்ள கொண்டு போய் விட்டுடுங்களேன்…”
 
“அவ்வளோ தூரம் நடந்து போக டைம் ஆகிடும்…” என்று அவள் சொல்ல அவனுக்கு கோபம் வந்தது. அதை பைக்கின் உதைப்பில் காண்பித்து உள்ளேயே ஓட்டிச் சென்றான்.
 
அவள் இறங்கவும் “என்னங்க இன்னைக்கு ஈவ்னிங் மட்டும் வந்து என்னை பிக்கப் பண்ணிக்கறீங்களா??”
 
அவளை நிமிர்ந்து பார்த்தவன் “என்ன தான் உன் பிரச்சனை?? தினமும் உனக்கு டிரைவர் வேலை பார்க்க வைக்குறது பத்தலையா உனக்கு…”
 
“முழு நேரமும் அதே வேலையா நான் இருக்கணும்ன்னு நினைக்கறியா நீ??”
 
“நான் ஒண்ணும் அப்படி சொல்லலை…”
 
“வேற எப்படிடி சொன்னே??” என்று அடிக்குரலில் கோபமாய் அவன் சொல்ல “இல்லை இன்னைக்கு ஒரு ஸ்பெஷல் டே அதான் உங்ககூட கொண்டாடலாம்ன்னு…” என்று இழுத்தாள்.
“எனக்கு எந்த கொண்டாட்டத்துலையும் கலந்துக்கற மூட் எல்லாம் இல்லை. உனக்கு வேணும்னா நீயே கலந்துக்கோ… இதான் கடைசி என்னை இனிமே ஈவினிங் வந்து பிக்கப் பண்ணிக்கோ, அங்க வா இங்க வான்னு சொன்ன அவ்வளவு தான் சொல்லிட்டேன்…” ரௌத்திரமாய் மொழிந்துவிட்டு சென்றுவிட்டான்.
 
கண்ணில் சட்டென்று நீர் நிறைந்து போனது அவளுக்கு. அன்றோ அவள் வேண்டாம் என்றுவிட்டிருந்தாள், இன்றோ அவன் எதுவுமே வேண்டாமென்ற எண்ணத்தில் இருக்கிறான். காலம் மாறிப்போனது, மாற்றம் இன்னமும் வரும் அதுவரை அவள் பொறுத்து தானே ஆகவேண்டும்.
 
விழிநீரை புறங்கையால் துடைத்தவள், ஒரு பெருமூச்சுடன் உள்ளே சென்றாள். இருக்கையில் வந்து அமர்ந்தவளுக்கு அவள் சொன்ன முக்கிய நாள் எதுவென கண்ணில் வந்து.
 
ஆம் இன்று அவர்கள் இருவரும் முதன் முதலில் சந்தித்த நாள். அவள் வேலை தேடி முதன் முதலாய் சென்ற தினமும் அதுவும் ஒன்றாகிற்றே… அவளால் மறக்க முடியுமா என்ன…
 
ஏனோ அதை அவனுடன் சேர்ந்து கொண்டாடும் ஓர் எண்ணம் அவளுக்கு. அவளுள் அவன் நம்பிக்கையை விதைத்த நாளும் அன்று தானே, அதெப்படி அவளால் மறக்க முடியும்.
 
ஆனால் இன்றைய அவன் முகம் திருப்பல் எல்லாம் அவள் மனதை வலிக்கச் செய்வதாய் இருந்தாலும் அதெல்லாம் தன்னால் தான் என்று அவள் உணராமலில்லை.
 
அவளின் தொடங்க வேண்டிய நிகழ்ச்சி ஆரம்பிக்க இன்னமும் அரைமணி நேரமிருந்தது. அதற்கு வேண்டியதெல்லாம் முதல் நாளே அவள் தயார் செய்து வைத்திருந்ததால் எண்ணங்கள் சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்வில் பயணித்தது.
 
——————–
 
அவள் சென்னையில் இருந்து வந்து இரண்டு நாட்கள் ஓடியிருந்தது. இன்னமும் தனுஷ் அவளிடத்தில் எதுவும் கேட்கவேயில்லை. அவள் எதுவும் சொல்ல வந்தாலும் கேட்காதது போல சென்றுவிடுவான்.
 
வருகின்ற திங்கள் முதல் அவள் கோவையில் உள்ள அவர்களின் பண்பலைவரிசையில் சேர வேண்டும். அவளின் மாமனாரிடத்தில் மட்டும் லேசுபாசாய் விஷயத்தை சொல்லியிருந்தாள் அப்போது.
 
சனிக்கிழமை மாலை வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க உள்ளிருந்தவள் வெளியில் வந்து கதவை திறந்தாள். அங்கு நடுத்தர வயதுடைய பெண்மணி ஒருவர் நின்றிருந்தார்.
 
“நீங்க… நீ புவனா தானேம்மா…”
 
அவளுக்கு அவரை தெரியாமல் போனாலும் “ஆமா… நான் தான்… நீங்க??” கண்ணைச் சுருக்கி.
 
“மிதிலா…”
 
“ஓ… ஆனா…”
 
“வேணுவோட பால்ய சினேகிதி இங்க பக்கத்துல தான் ரூம் எடுத்து தங்கியிருக்கேன்… நீ ஊர்ல இருந்து வந்திருக்கேன்னு வேணு சொன்னாங்க, அதான் பார்த்திட்டு போகலாம்ன்னு வந்தேன்…”
 
“சாரி வெளியவே நிக்க வைச்சு பேசிட்டு இருக்கேன்… உள்ள வாங்க… மாமா இப்போ ஹோட்டல்ல இருப்பாங்க” என்று வழியை விட்டவள் சோபாவில் அமருமாறு அவரிடம் சொல்ல அவரும் அமர்ந்திருந்தார்.
 
“தெரியும்மா, உன்னைப் பார்க்கத் தான் வந்தேன்… வேணுவோட மருமகளை நான் பார்க்கணும்ன்னு தோணிச்சு அதான்…”
 
லேசாய் புன்னகைத்தவள் “உங்களுக்கு காபியா?? டீயா??
 
“உனக்கு என்ன பிடிக்குமோ அதே போடும்மா…”
 
“உங்க விருப்பம் சொல்லுங்க ஆன்ட்டி”
 
“கிளைமேட் சில்லுன்னு இருக்கு சூடா ஏலக்காய் டீ போட்டு ரெண்டு பஜ்ஜி கார சட்னி வைச்சு சாப்பிடுவோமா…” என்று அவர் சொன்ன தினுசில் அவளுக்குமே ஆசையாகி போனது.
 
அவர் சகஜமாய் அவளுடன் உரையாடியவாறே அவர் சொன்னதை செய்ய அவளுக்கு உதவ இருவரும் பேசிக்கொண்டே வேலையை முடித்திருந்தனர்.
 
அவர்கள் செய்தவைகளை தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு வந்து ஹாலில் அமர்ந்தனர். புவனாவிற்கு அவருடன் பேசுவது பிடித்திருந்தது.
 
வெகு இயல்பாய் மற்றவரை கவரும் வண்ணம் பேசும் கலை அனைவருக்கும் வருவதில்லை, சிலருக்கு தான் அது வரும்… அவர் பேச்சு அவளை கவர்ந்தது.
 
அவளுக்கு நெருங்கிய தோழிகள் என்று அதிகம் பேர் இருந்ததில்லை. அம்மா மட்டுமே எல்லாம் அவளுக்கு, அவருடன் மட்டுமே அதிகம் பகிர்வாள்.
 
அவரிடமும் சில விஷயங்களை பேச முடியாதல்லவா அதெல்லாம் எப்போதும் அவள் மனதின் உறைவிடத்தில் தான்…
 
மிதிலாவை பார்த்து சில மணித்துளிகள் தான் ஆனபோதும் அவரின் இயல்பான பகட்டில்லாத பேச்சு அவளை ஈர்த்தது. ஏனோ அவரிடம் மனம்விட்டு பேச முடியும் போன்ற உணர்வு, அவரை நெருக்கமாக உணர்ந்தாள் அக்கணம்.
 
“என்னைப்பத்தி தனுஷ் உன்கிட்ட ஒண்ணுமே சொல்லலையாம்மா??” என்று ஆரம்பித்தார்.
 
“இல்லை ஆன்ட்டி எதுவும் சொல்லலை…” என்று சொன்னவளுக்கு ‘அவர் என்கிட்ட பேசினா தானே…’ என்ற ஆதங்கம் எழாமலில்லை.
 
“ஓ!!” என்று யோசனையானவர் “ஆமா நீ வர்றேன்னு தனுஷ் கூட என்கிட்ட சொல்லவேயில்லை, வேணுவும் சொல்லலை… இன்னைக்கு காலையில் வேணுகிட்ட பேசும் போது தான் தெரியும் நீ வந்த விஷயம்…” என்று குறை போல் சொன்னார்.
 
“நான் திடிர்னு வந்து இறங்கிட்டேன் ஆன்ட்டி, யார்கிட்டையுமே சொல்லலை. சென்னையில நான் மட்டும் தனியா வேலை பார்க்க ஒரே போர்… அதான் இங்க வேலையை மாத்திட்டு வந்திட்டேன்…”
 
“உன்னைப்பத்தி கேள்விப்பட்டிருக்கேன், ஆனா நான் உன்னோட ப்ரோக்ராம் எதுவும் கேட்டதேயில்லை…”
 
“இனிமே கேட்கலாம் ஆன்ட்டி, என்ன ப்ரோக்ராம் டைமிங் எல்லாம் நான் போய் வேலையில ஜாயின் பண்ணதும் உங்களுக்கு சொல்றேன்…”
 
“மத்த எல்லாரும் கேட்டு இருக்காங்களா உன்னோட ப்ரோக்ராம்?? அதாவது இங்க வீட்டில இருக்கவங்களை கேட்கிறேன்…”
 
“மாமா பத்தி தெரியலை… ஆனா அவர் எனக்கு போன் பண்ணி நெறைய டைம் பேசி இருக்கார்…” என்று சொல்லும் போது அவள் குரலில் அப்படி ஒரு நெகிழ்ச்சி இருந்ததை அவர் உணர்ந்தார்.
 
“இவ்வளவு எக்சைட் ஆகுறேன்னே நீ தனுஷ் பத்தி தானே சொல்றே” என்று அவர் சொல்லவும் அவள் முகம் லேசாய் வெட்கத்தை பூசிக் கொண்டது.
 
ஏனோ அவள் பேச்சின் ஆரம்பித்திலேயே அவருக்கு புரிந்து போனது, தனுஷுக்கும் அவளுக்கும் இடையில் ஒரு இடைவெளி இருப்பது. அவர்கள் திருமணம் பற்றிய நிகழ்வுகள் வேணுகோபாலின் மூலம் அறிந்திருந்தார்.
 
தனுஷ் அதிகம் புவனா பற்றி பேசியதில்லை. வேணுவின் மூலமே சில விஷயம் அவருக்கு அரசல்புரசலாய் புரிந்தது.
 
அவளை போட்டு பார்ப்போம் என்றே அவளிடம் மெதுவாய் பேச்சுக் கொடுக்க அவளறியாமல் அவள் உணர்வுகள் வெளியில் வந்ததை உன்னிப்பாய் கவனித்தார் அவர்.
 
“நிஜமாவா என்ன பேசுவீங்க??”
 
“அவர் நான் நடத்தின நிகழ்ச்சிக்கு பல முறை  போன் பண்ணியிருக்கார் ஆன்ட்டி…”
 
“எவ்வளவு பேர் பேசி இருப்பாங்க, தனுஷ் மட்டும் உனக்கு எப்படி ஞாபகம் இருக்கு…”
“அவர் வாய்ஸ் ரொம்ப யூனிக் ஆன்ட்டி, எனக்கு அந்த குரல் ரொம்ப பிடிக்கும்… அதுனால அந்த குரலை என்னால எப்பவும் மறக்க முடியாது…” என்று தன்னை மறந்து சொல்லிக் கொண்டிருந்தாள்…
 
அவள் சொல்லிய விதம் மிதிலாவுக்கும் ஏதேதோ நினைவுகள் ஆக்கிரமிக்க தன்னைக் கட்டுப்படுத்தியவராக அவர் புவனாவின் பேச்சை கவனிக்க ஆரம்பித்தார்.
 
“ஆஹா!! அப்போ ஒரே லவ்ஸ் தான் போல…” என்று அவர் சொன்னதும் அவள் முகம் சட்டென்று இருண்டது.

Advertisement