Advertisement

அத்தியாயம் – 23
“என்னம்மா சொல்றே?? நீ என் கூட வர்றியா?? புரிஞ்சு தான் பேசறியாம்மா. இங்க தேவா தனியா இருப்பான்ம்மா. நான் என்ன அங்கவே செட்டில் ஆகப்போறேன்னா சொல்றேன்”
“ஒரு வருஷத்துல திரும்பி வந்திடுவேன்ம்மா” என்றார்.
“உங்களுக்கு உடம்பு வேற சரியில்லை மாமா. நீங்க தனியா இருக்கறது எல்லாம் சரியா வராது. நான் உங்ககூட வருவேன்” என்றாள் பிடிவாதமாய்.
“நான் நல்லா தான் இருக்கேன். நீங்க எல்லாம் எனக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி சொல்லியே நான் பேஷன்ட் ஆகிடுவேன் போல” என்று சட்டென்று எரிச்சலாக சொல்லிவிட்டார் அவர்.
பின் தான் பேசிய தொனி தவறென்று புரிய “சாரிம்மா” என்றார் மருமகளிடம்.
“மாமா நீங்க அவர்க்கு எவ்வளவு முக்கியம்ன்னு எனக்கு தெரியும். எனக்கும் நீங்க அப்படி தான். உங்களால தான் இன்னைக்கு என்னோட வாழ்க்கை காப்பாத்தப்பட்டிருக்கு”
“உங்களால தான் எனக்கு ஒரு நல்ல வாழ்க்கையும் நான் விரும்பின மாதிரி அமைஞ்சு இருக்கு” என்றாள் அவள்.
அவர் திடுக்கிட்டு அவளை நிமிர்ந்து பார்த்தார். “என்ன மாமா பார்க்கறீங்க, நீங்க மட்டும் அன்னைக்கு மாறன் மாமா கூட நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்தலைன்னா என்னாகியிருக்கும்”
‘இது எப்படி இவர்களுக்கு தெரியும்’ என்ற பதட்டம் வந்தது அவருக்குள். தன்னை தப்பாக நினைத்துக் கொள்ளக்கூடாதே’ என்று கண்டதும் யோசிக்க ‘இல்லையே இவள் நான் அவளை காப்பாற்றியதாகத் தானே சொன்னாள். என்னாகியிருக்கும்’ என்று எண்ணி அவளைப் பார்த்தார்.
“தெரியும் மாமா. மாறன் மாமாபத்தி தெரிஞ்சு நீங்க கல்யாணத்தை நிறுத்தினது, எங்களை சேர்த்து வைச்சது எல்லாம் தெரியும்”
“என்ன மாமா அப்படி பார்க்கறீங்க எங்களுக்கு எப்படி தெரியும்ன்னா. கல்யாணத்தை நிறுத்தின விஷயத்தை மாறன் மாமா மூலமா தான் தெரிஞ்சுக்கிட்டேன். எங்க கல்யாண விஷயம் யாகாஷ் அண்ணா சொன்னாங்க”
“நாலு நாள் முன்னாடி என்ன நடந்துச்சுன்னு உங்களுக்கு தெரியுமா. அந்த மாறன் இங்க வந்தான், நீங்க கூட மருதமலை போயிருந்தீங்களே அன்னைக்கு…” என்றவள் அன்றைய நிகழ்வை அவரிடம் பகிர்ந்தாள்.
——————–
“நீங்க இங்க எதுக்கு வந்தீங்க??” என்று அதிர்ந்து விலகினாள் அவள்.
மனம் ஏதோ அசம்பாவிதம் என்று எடுத்துரைக்க அவளின் அடுத்து என்ன என்ற ஆராய்ச்சியை அவன் அவளை தன் புறம் இழுத்து அணைக்க முற்பட்டபோது முற்றிலும் தொலைந்தது.
எதுவும் யோசிக்க திராணியில்லாமல் வேலை நிறுத்தம் செய்திருந்தது மூளை. “என்ன பண்றீங்க” என்றவள் ஒரு ஆவேசத்தில் அவனை அப்படியே ஒரு உதறு உதறினாள்.
அதை அவன் எதிர்பார்த்திராததால் கொஞ்சம் தடுமாறி கீழே விழுந்திருந்தான். அதில் அவன் கோபம் கண்மண் தெரியாமல் ஏறியது.
“ஏய் என்னையாடி தள்ளிவிடுற” என்றவன் வேகமாய் எழுந்து அவளை நோக்கி வந்தான்.
அவளோ வேகமாய் அடுப்பை நோக்கிச் சென்றவள் அதில் வைத்திருந்த பாலை அப்படியே தூக்கி அவன் மேல் கவிழ்த்துவிட்டாள். அவனின் கோபம் நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டே இருந்தது அவளின் எதிர்ப்பில்.
“உன்னைப் பேசி கூட்டிட்டு போகணும்ன்னு தான் நினைச்சுட்டு இருந்தேன். இனி அதுக்கெல்லாம் வழியில்லை…” என்று சொல்லிக்கொண்டே மூர்க்கமாய் அவளை நோக்கி வந்தான்.
அவள் இன்னமும் அடுப்பின் அருகிலேயே நின்றிருக்க அவளை நோக்கி நீட்டிய அவன் கரத்தை பற்றி அவள் அணைக்காமல் விட்டிருந்த அடுப்பில் புறம் திருப்பிவிட்டாள்.
கையை சட்டென்று பின்னுக்கிழுத்தவன் வலியில் சில நொடி துடிதுடித்தான். அவன் உப் உப்பென்று ஊதிக்கொண்டிருக்க அவள் அடுப்பை அணைத்து அந்த அறையில் இறந்து வெளியேறினாள்.
அவளின் எண்ணம் புரிந்தவன் போன்று அவளுக்கு முன்னேயே வெளியே வந்தவன் “எங்கேடி போறே?? இனி நான் நினைச்சது தான் இங்க நடக்கும். எனக்கு நிச்சயம் பண்ண உன்னை எதுவுமே பண்ணாம அடுத்தவனுக்கு விட்டுக்கொடுக்க நான் என்ன முட்டாள்ன்னு நினைச்சியா”
“எனக்கு இப்போவே நீ வேணும்…” என்று ஏதேதோ பிதற்றியவன். அவன் பாக்கெட்டில் இருந்து எதையோ எடுத்து தனக்குள் ஊற்றிக்கொண்டான்.
ஏற்கனவே அவன் மது அருந்தியிருப்பான் போலும். அவன் வீட்டிற்கு வந்தபோது தொலைவிலேயே நின்று பேசியிருந்தான். அப்போது இந்தளவிற்கு வாடை தெரிந்திருக்கவில்லை அவளுக்கு. தெரிந்திருந்தால் அவனை உள்ளேயே விட்டிருக்க மாட்டாளே. அவன் இப்போது மீதமிருந்ததை எடுத்து வாயில் சரித்துக்கொண்டான்.
அவள் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கிடைத்த கொஞ்சம் இடைவெளியில் வெளியே ஓடிவந்திருக்க அவனுக்கு போதை மட்டுமல்லை கோபமும் தலை வரை ஏறிப்போனது.
“ஏன்டா உனக்கு புத்தி இப்படி போகுது. நீ நல்லா தானே இருந்தே” என்று புவனா கத்த “யாரு சொன்னா நான் நல்லா இருந்தேன்னு” என்றான்.
“உன் மாமனார் தான் என் வாழ்க்கையை கெடுத்தாரு. எவன் எப்படி போனா அந்தாளுக்கு என்ன… என் பழைய கதையை எப்படியோ தெரிஞ்சுக்கிட்டு அதை எல்லாருக்கும் சொல்லிடுவேன்னு மிரட்டி என்னை கல்யாண மண்டபத்தை விட்டு ஒடசொன்னாரு”
“அந்தாழு ஏதோ ஆதாரம் எல்லாம் வைச்சு இழுக்கேன்னு கூட வந்த தடியனை வைச்சு மிழட்டி என்னைய அனுப்பிட்டான்” என்று குழறினான் அவன்.
புவனா அப்படியே அதிர்ந்து நின்றாள். திருமணம் நிற்க மாறன் ஓடிப்போனது தான் காரணம் என்று அவள் நினைத்திருக்க அது தானாய் நடக்கவில்லை நடக்க வைக்கப்பட்டிருக்கிறது என்று மாறன் கூற்றின் மூலம் உணர்ந்தாள்.
தனக்கு அவர் எவ்வளவு பெரிய நன்மை செய்திருக்கிறார் என்று எண்ணி அவளுக்கு அவரின் மேல் மரியாதை பல மடங்கு ஏறியது.
அவள் யோசித்துக் கொண்டிருந்த அந்த நொடியை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி புவனாவை தன் பிடியில் கொண்டு வந்தான் மாறன். அவளை அப்படியே அங்கிருந்த சோபாவில் சரித்து அவள் மேல் அவன் சாய “என்னை விட்டுடு” என்று அவள் கெஞ்ச ஆரம்பித்தாள்.
அவன் பிடி இரும்பு பிடியாக இருந்தது. அவனை அசைக்கக்கூட அவளால் முடியவில்லை. அருவருப்பாய் உணர்ந்தாள்.
அப்படியே கண்களை இறுக்க மூடியவள் அவனை அப்படியே பிடித்து கீழே தள்ளினாள்…
தனுஷ் காய்கறி மொத்தமாக வாங்குவதற்காக சென்றிருந்தான். பொள்ளாச்சியை தாண்டி ஆழியாருக்கு செல்லும் வழியில் இருந்தது அந்நபரின் தோட்டம்.
பாதி தூரத்திற்கும் மேல் சென்ற பிறகு அந்த நபர் அழைத்து தான் வேறு ஒரு அவசர வேலையாக வெளியூர் செல்வதாகவும் இரண்டு மூன்று நாளில் திரும்பி வந்துவிடுவதாகவும் நான்கு நாட்கள் கழித்து அவனை வருமாறு சொல்லியிருக்க கொஞ்சம் கடுப்பாகிப் போனது அவனுக்கு.
யாகாஷ் வேறு அவரைப்பற்றி நல்ல விதமாக சொல்லியிருக்க வேறொன்றும் சொல்லாமல் சரியென்று வைத்துவிட்டான்.
அவ்வளவு தூரம் சென்ற பிறகு திரும்பி செல்வது தான் அவனுக்கு எரிச்சலாக இருந்தது. பிறகு அவன் மனதில் அவருக்கு என்ன அவசரமோ என்று நினைத்து மனதை சமாதானப்படுத்திக் கொண்டான்.
வீடு செல்லும் வழியாக வண்டியை திருப்பி ஓட்டினான். முதலில் ஹோட்டலுக்கு செல்லலாம் என்று எண்ணியவன் முதல்ல வீட்டுக்கு போயிட்டு அப்புறம் போவோம் என்று தன் முடிவை மாற்றிக்கொண்டான்.
வரும் வழியிலேயே யாகாஷுக்கு அழைத்து இன்று அவன் அந்த தோட்டத்திற்கு செல்லவில்லை என்ற விபரத்தை உரைத்திருந்தான். இதோ வீட்டிற்கு வந்துவிட்டான்.
வண்டியை வாயிலில் நிறுத்தி உள்ளே வர கதவு அடைக்கப்பட்டிருந்தது. எப்போதுமே வீட்டில் ஆள் இருக்கும் போது கிரில் கதவு மட்டுமே பூட்டப்பட்டிருக்கும்.
அடுத்திருக்கும் கதவு லேசாய் ஒருக்களித்து தான் வைத்திருப்பர். ‘இன்னைக்கு சக்திக்கு லீவ் தானே அப்புறம் ஏன் கதவு சாத்தியிருக்கு. எங்கயும் வெளிய போயிட்டாளா…’
‘அப்போ கூட அப்பா இந்நேரம் வீட்டுக்கு வந்திருப்பாரே. காலையிலேயே கோவிலுக்கு போனாரு’ என்று எண்ணிக்கொண்டே உள்ளே நுழைந்தான்.
வீட்டின் வாயிலில் இன்னொரு காலணி இருப்பதை கண்டான். ‘யாரோ வந்திருக்காங்க’ என்று நினைத்துக் கொண்டவனுக்கு உள்மனம் ஏதோ எச்சரிக்கை செய்தி விடுக்க கதவை தட்டலாமா வேண்டாமா என்ற யோசனை அவனுக்கு.
அந்நேரத்தில் உள்ளே ஏதோ தடபுடவென்று சத்தம் வேறு கேட்டது. அவன் மிகுந்த கவனமாக அதை கவனித்தான். பின் வீட்டின் பக்கவாட்டுக்கு சென்று திறந்திருந்த சமையலறை சன்னல் வழியாக எதுவும் தெரிகிறதா என்று பார்த்தான். ஒன்றும் தெரியவில்லை.
உள்ளே ஏதோ விபரீதம் என்று மட்டும் தோன்றியது. தாமதிக்க வேண்டாம் உள்ளே செல்வோம் என்று எண்ணியவன் அவனின் பைக் சாவியோடு எப்போதும் இருக்கும் வீட்டின் இன்னொரு சாவியைக் கொண்டு கதவை திறந்தான்.
மாறன் ஏதோ சத்தம் கேட்டு கொஞ்சம் சுதாரித்தவன் புவனாவை இழுத்துக் கொண்டு படுக்கையறை நோக்கிச் சென்றான்.
அவன் கதவை மூடப்போகவும் தனுஷ் உள்ளே ஓடிவந்தவன் வேகமாய் ஓங்கி கதவை தள்ள அதில் தடுமாறி மாறன், புவனா இருவருமே கட்டிலில் விழுந்தனர்.
புவனாவிற்கு தனுஷை கண்டதும் உயிரே வந்தது போல் இருந்தது. மாறனிடம் மாட்டிக்கொண்ட நொடி இனி அவ்வளவு தான் என்ற நிலைமையில் அவள் எண்ணியது இது தான், தான் இனி உயிரோடு இருக்கக்கூடாது என்று.
வேகமாய் எழுந்து ஓடிவந்தவள் “தேவா… தேவா… தேவா…” என்று அவனை அணைத்துக் கொண்டு கதறினாள். அவளின் அழுகை அவனை ஆத்திரமூட்டியது.
அங்கிருந்தவன் யாராய் இருக்கும் என்ற அனுமானம் அவனுக்கு இருந்த போதும் அதை புவனாவிடத்தில் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டான் தனுஷ்.
“இது…”
“மாறன் மா… மா… என்கிட்ட தப்.. தப்பா…” என்றவள் அப்படியொரு அழுகை அழுதாள். அவளுக்கு மாறன் இன்னமும் அவள் மேலே விழுந்து கிடப்பது போன்ற எண்ணமே. நினைக்கவே அருவருக்க விடாமல் அழுதாள் அவள்.
எந்தளவிற்கு அவள் மனம் பாதித்திருந்தால் இப்படியொரு அழுகை வரும் என்று எண்ணியவனின் கோபம் முழுக்க மாறனின் மீதிருந்தது. ஆனாலும் அவனை ஒன்றும் செய்யவில்லை அவன்.
மாறன் ஏற்கனவே நிறைய குடித்திருந்ததாலும் போதாதிற்கு புவனா வேறு அவனை காயப்படுத்தியிருக்க இப்போது தனுஷ் கதவை ஓங்கி அடித்ததில் கதவு முட்டி அப்படியே சரிந்திருந்தான் கட்டிலில். அதில் அரைகுறையாய் முனகியவாறே படுத்திருந்தான்.
புவனாவின் அழுகை இன்னும் ஓயாமல் இருக்க அதில் அவள் சொன்ன என்னை தப்பா என்று அவள் முடிக்காமல் விட்டது அவனுக்குள் அப்படியொரு ரௌத்திரத்தை கொடுத்தது.
சட்டென்று எட்டி படுத்திருந்தவனின் காலில் ஒரு உதைவிட்டான் அவன். திடீரென்ற அவன் தாக்குதலில் சடாரென்று எழுந்து அமர்ந்தான் மாறன்.
“ஏய் என்னையாடா அடிச்சே, உன்னை என்ன பண்ணுறேன் பாரு…” என்று எழுந்து இவனை நோக்கி வர புவனாவை தள்ளி நிறுத்திய தனுஷ் அவன் முகத்திலேயே ஒரு குத்துவிட்டான்.
அதில் அவன் மூக்கில் இருந்து லேசாய் ரத்தம் கசிய ஆரம்பித்தது. படார் படாரென்று அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்துக் கொண்டிருந்தவனின் செயல் புவனாவை கலவரப்படுத்த அவன் சட்டையை பிடித்து இழுத்தாள் அவள்.
“வேணாம்ங்க விட்டுடுங்க…” என்றவள் தனுஷை மீண்டும் இறுக்கி அணைத்துக் கொண்டவள் இம்மியளவும் விலகியிருக்கவில்லை. அவன் தன் போனை கையில் எடுத்தான்.
“யாகாஷ் எங்கே இருக்கே??”
“ஓகே. இப்போ நீ உடனே வீட்டுக்கு வர்றே. என்ன வேலையா இருந்தாலும் தூக்கிப்போட்டு இப்போ வீட்டுக்கு வா…” என்று கத்தினான் அவன்.
எதிர்முனையில் இருந்த யாகாஷுக்கும் பதட்டம் தொற்றிக் கொண்டது. என்னவோ ஏதோவென்று பயந்தவன் ஹோட்டலில் ஒருவரை துணைக்கு வைத்துவிட்டு வண்டியை கூட எடுத்துக்கொள்ளாமல் வேகமாக ஓடியே வந்தான் வீட்டிற்கு.
அதற்குள் தனுஷ் மீண்டும் அழைப்பை விடுத்தான். “மாமா தனுஷ் பேசறேன்…”
“சொல்லுங்க மாப்பிள்ளை”
“உங்க அக்காவா தங்கையா மாறனோட அம்மா இருக்காங்கல அவங்களை கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு வாங்க. அந்த மாறன் இங்க தான் இருக்கான், உடனே வாங்க மாமா…” என்று சொல்லி போனை வைத்துவிட்டான்.
‘என்னடா இது போன் பண்ணாரு என்னவோ சொல்லிட்டு வைச்சுட்டாரு. என்னாச்சு’ என்ற பதைப்பு அவருக்கு.
உடனே வீட்டிற்கு அழைத்து தன் மனைவியிடம் பேசினார். “மாப்பிள்ளை போன் பண்ணார்” என்று சொல்லி நடந்ததை சொல்ல அவர்களுக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.
ஏதோ பிரச்சனை என்ற அளவில் புரிய உடனே மாறனின் அன்னைக்கு அழைத்து வீட்டிற்கு வரச்சொன்னார்.
அதற்குள் அவரும் வீட்டிற்கு வந்திருக்க பாலாஜியும் அப்போது வீட்டில் தானிருந்தான். ‘அப்பா என்ன இந்நேரம் வீட்டுக்கு வந்திருக்காரு’ என்று நினைத்தவன் எதுவும் கேட்கவில்லை.
“என்னங்க மாப்பிள்ளைக்கு திரும்பவும் போன் பண்ணி என்ன விஷயம்ன்னு கேளுங்களேன். எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க” என்றார் கனியமுது.
“அவர் பேசின குரலே எனக்கு ரொம்ப கவலையா இருக்கு. திரும்பவும் அவர்கிட்ட பேசவே எனக்கு பயமா இருக்கு கனி. ஏதோ கோபமா இருக்கார்ன்னு மட்டும் புரியுது”
“இந்த மாறன் இவ்வளவு நாளா எங்க போனான்னே தெரியலை. இப்போ எதுக்கு அவன் புவனா வீட்டுக்கு போனான். எனக்கு அதை நினைச்சு தான் கவலையா இருக்கு” என்றார் அவர்.
பாலாஜி தந்தை சொன்னதை கேட்டு அதிர்ந்து போனான். “என்னங்க அந்த மாறன் சரியில்லைங்க”
“அதான் நமக்கு தெரியுமே, இல்லைன்னா கல்யாணத்தை நிறுத்திட்டு ஓடியிருப்பானா” என்றார் அவர்.
“அதில்லைங்க அவன் கல்யாணத்துக்கு முன்னாடியே நம்ம பொண்ணுக்கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணியிருக்கான்…” என்று தட்டுத்தடுமாறி சொல்லிவிட்டார் அவர்.
“என்ன??” என்ற சக்திவேலுக்கு மனைவியின் மீது அவ்வளவு ஆத்திரம் வந்தது.
“இதை ஏன் என்கிட்ட முன்னாடியே நீ சொல்லைலை” என்று கத்தினார்.
“அது… அது வந்து கட்டிக்கபோற பொண்ணு தானேன்னு தொட்டு பேசியிருப்பாருன்னு நினைச்சுட்டேங்க. எனக்கு என்ன தெரியும் அவன் சரியில்லைன்னு” என்று அவர் அழ ஆரம்பித்தார்.
பாலாஜிக்கு மாறனின் எண்ணம் இப்போது புரிய அப்படியொரு கோபம் வந்தது அவனுக்கு. அதை கவனித்துவிட்ட சக்திவேல் “நீ எதுவும் என்கிட்ட மறைக்கறியா??” என்றார்.
அவர் அப்படி கேட்கவும் பாலாஜிக்கு நடுங்கியது. ‘அய்யோ இதற்கு நானும் ஒரு காரணமாகிவிட்டேனா என்று’ 
“நான் கேட்டுட்டே இருக்கேன் நீ என்ன யோசனையில இருக்க??” என்றார் அவர்.
“அப்பா… அது… இல்லைப்பா… வந்து… அப்படி பார்க்காதீங்கப்பா… மாறன் மாமாவை நான் கொஞ்ச நாள் முன்னாடி பார்த்தேன்ப்பா…”
“எப்போ பார்த்தே?? ஏன் என்கிட்ட சொல்லலை??” என்று கர்ஜித்தார் அவர்.
“ஒரு நாள் காலேஜ்விட்டு வீட்டுக்கு வர்ற வழியில பார்த்தேன்ப்பா. அவர் தானா கல்யாணம் வேணாம்ன்னு போகலைன்னும் யாரோ அவரை மிரட்டி போக வைச்சாங்கன்னும் சொன்னார்”
“நானும் நம்ம மாமா சொல்றது உண்மைன்னு நினைச்சுட்டேன்ப்பா… வீட்டுக்கு வாங்கன்னு கூட சொன்னேன், நீங்க கோபமா இருப்பீங்கன்னும் அத்தையோட வீட்டுக்கு வந்தா தான் உங்களை சமாதானப்படுத்த முடியும்ன்னு சொல்லிட்டு போய்ட்டார்”
“அப்பா எனக்கு இன்னொன்னு ஞாபகம் வருதுப்பா. அக்கா கூட சொன்னா, மாறன் மாமா அவகிட்ட தப்பா பேசுறாங்க, தப்பா நடந்துக்கறாங்கன்னு. அன்னைக்கு இங்க நம்ம வீட்டுக்கு வந்தப்போ சொன்னப்பா… நான் தான் அவளை நம்பலை…” என்று சொன்னவனின் கண்கள் கலங்கியிருந்தது.
“ஆக இந்த வீட்டில நான் சும்மா தான் இருக்கேன். எனக்கு தெரியாம இவ்வளவு நடந்திருக்கு. இன்னும் என்னெல்லாம் நீங்க மறைச்சு வைச்சு இருக்கீங்க. எல்லாரும் சொல்லித் தொலைங்க” என்று அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே மாறனின் அன்னை வந்துவிட்டார்.
“இங்க பாரு உன் பையனால என் பொண்ணு வாழ்க்கைக்கு ஏதாவது ஒண்ணுன்னு வை. அவனை வெட்டி போட்டிருவேன் நானு…” என்று அவரிடமும் பாய்ந்தார் அவர்.
அவர் சொல்லியிருந்த காரும் வந்திருக்க அவர்கள் வண்டியில் ஏறினர். “என்னங்க நானும் வர்றேன்” என்ற மனைவியை முறைத்தார் அவர்.
“அப்பா ப்ளீஸ் எங்களையும் கூட்டிட்டு போங்க…” என்று பாலாஜியும் சொல்ல இருவரையும் முறைத்தவர் வேறொன்றும் சொல்லவில்லை. அதையே சம்மதமாய் எடுத்துக் கொண்டு அவர்களும் வண்டியில் ஏறினர்.

Advertisement