Advertisement

அத்தியாயம் – 17
 
அவள் முகம் இருண்டதை கண்டவர் “என்னாச்சும்மா??” என்று அவளை லேசாய் உலுக்க தன்னை இயல்பாய் காட்டிக் கொண்டாள் அவள்.
 
“ஒண்ணும்… ஒண்ணுமில்லை ஆன்ட்டி”
 
“அப்போ என்னவோ இருக்கு??”
 
“அதெல்லாம் இல்லை… என்னைப் பத்தியே கேட்டுட்டு இருக்கீங்க… உங்களைப்பத்தி ஒண்ணுமே சொல்லலையே…” என்று பேச்சை மாற்றினாள் அவள்.
 
“என்னைப்பத்தி சொல்ல எதுவுமில்லைம்மா… கூட பிறந்தவர் ஒருத்தர் இருக்காரு, அம்மா அவரோட தான் இருக்காங்க… நானும் அவங்களோட தான் இருந்தேன், எங்களுக்குள்ள கொஞ்சம் டர்ம்ஸ் சரியில்லை… அதான் தனியா வந்திட்டேன்…” என்று முடித்துவிட்டார் அவர்.
 
“சரி என்னைப்பத்தி நான் சொல்லிட்டேன்… திடிர்னு உன் முகம் ஏன் மாறிச்சு… உங்க காதல் கதை என்கிட்ட சொல்லக்கூடாதா??”
 
“ஆன்ட்டி எங்க கல்யாணம் எப்படி நடந்துச்சுன்னு யாரும் உங்களுக்கு சொல்லலைன்னு நீங்க சொல்றதை நான் நம்ப மாட்டேன்” என்றாள் ஒரு மாதிரி குரலில்.
 
“நான் அப்படி கண்டிப்பா சொல்லவே மாட்டேன்…”
 
“அப்புறம் காதலான்னு கேட்கறீங்களே…”
 
“இல்லைங்கற விதமா நீ சொன்னாலும் இருக்குன்னு உன்னோட பேச்சும் என்னோட ஆழ்மன உணர்வும் அழுத்தமா சொல்லுது ஏதோ இருக்குன்னு… உனக்கு அதைப்பத்தி பேச விருப்பமில்லைன்னு தெரியுது சரி நாம அந்த பேச்சை விட்டிருவோம்…” என்றார்.
 
பின் இருவரும் இயல்பாய் வேறு விஷயங்கள் பேசினர். வேணுகோபால் எட்டு மணி போல வீட்டிற்கு வர அவரைப் பார்த்துவிட்டே மிதிலாவும் வீட்டிற்கு கிளம்பினார்.
 
வாசல் வரை வந்து புவனா வழியனுப்ப வெளியில் சென்றவர் என்ன நினைத்தாரோ திரும்பி வந்து “உன்கிட்ட ஒண்ணு மட்டும் சொல்லணும்ன்னு ஆசைப்படுறேன்…”
 
“சொல்லுங்க ஆன்ட்டி”
 
“நான் அட்வைஸ் பண்ணறேன்னு நினைக்காதே… இது நிச்சயமா அட்வைஸ் இல்லை, என்னோட அனுபவம்ன்னு வேணும்ன்னா சொல்லலாம்…”
 
“உன் மனசுல தனுஷ் மேல காதல் இருந்தா அதை மறைக்காம அவன்கிட்ட சொல்லிடு… உங்களுக்குள்ள என்ன கோபமோ என்ன சண்டையோ என்ன மனஸ்தாபமோ எனக்கு தேவையில்லை…”
 
“இப்போ ஒரு முடிவெடுத்து சென்னையில இருந்து இங்க வந்தே பாரு… அது மாதிரி தான் இனி நீ இருக்கணும்… அவனுக்கு நீ யாருங்கறதை உணர்த்திட்டே இருக்கணும்…”
 
“என்னடா நாமே தான் போய் பேசணுமா அவங்க பேச மாட்டாங்களான்னு ஒரு நிமிஷம் உன்னோட ஈகோ முன்னாடி வந்தாலும் வாழ்க்கையில தோத்துப் போய்டுவம்மா…”
 
“கடவுள் புண்ணியத்துல தனுஷ் விரும்பின நீயே அவனோட வாழ்க்கையில வந்திட்ட, உனக்குள்ளும் அவனுக்கான நேசம் இருக்குன்னா அதை நேரடியா சொல்ல தயக்கமா இருந்தா அதை அவனுக்கு புரியவை…”
 
“விலகிப்போனாலோ சொல்லாம போனாலோ எதுவுமே யாருக்குமே புரியாம போய்டும்…” என்று அவர் முடிக்கும் போது அவரிடமிருந்து ஒரு பெருமூச்சும் விழிகளிரண்டும் ஈரமாயும் இருந்ததை அவளால் உணர முடிந்தது.
 
மிதிலாவிற்கு வாய் மொழியாய் பதில் சொல்லாவிடினும் தலையசைத்து பதிலிறுத்தாள் அவள். அவரிடம் பேசிய பிறகு தான் மனதில் லேசாய் ஒரு தெளிவு பிறந்தது அவளுக்கு.
 
அதன்பின்னே தான் தனுஷின் வாய் மொழியாகவே அவளை அலுவலகம் கொண்டு விட ஒத்துக்கொள்ள செய்திருந்தாள்.
இன்று கூட அவனை அழைத்தது அவனிடம் மனம்விட்டு பேசுவதற்காகத் தான். அவன் தான் கோபமாய் சென்றுவிட்டானே, என்னவென்று கூட கேட்காமல் சென்றுவிட்டான்.
 
அவள் யோசனையிலே உழ “ஹலோ மேடம் எந்த லோகத்துல இருக்கீங்க??” என்ற குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள்.
 
பேசியவள் அதே ஸ்டேஷனில் அவளுடன் வேலைப்பார்க்கும் தியா. புவனா கோவைக்கு வந்ததில் தியாவின் வசமிருந்த இரண்டு ஷோக்கள் இப்போது புவனாவிடத்தில்.
 
தியாவுக்கு வேறு ஷோவை மாற்றிக் கொடுத்துவிட்டனர். பரபரப்பான நேரம் என்று சொல்லப்படுகிற பீக் ஹவர்ஸ் ஷோக்கள் தான் எப்போதும் அதிக ரேட்டிங் கிடைக்கும்.
 
அது தன் கைமாறியதில் புவனாவின் மீது லேசாய் ஒரு கடுப்பு அவளுக்கு உண்டு. “இப்படி கனா கண்டுட்டு இருந்தா யார் ஷோ பண்றதாம்… நானெல்லாம் நேரா நேரத்துக்கு ஷோ பண்ணுவேன்…”
 
“எங்க இருந்து தான் வருவீங்களோ இப்படி பண்ற உங்களுக்கு தான் இப்படி ஷோ எல்லாம் கிடைக்குது…” என்று சொல்லி அவளை கடந்து சென்றாள்.
 
தலையை லேசாய் உலுக்கிக் கொண்ட புவனா மேஜை இழுப்பறையை திறந்து அவள் முதல் நாளே தயார் செய்து வைத்திருந்த நிகழ்ச்சி குறிப்புகளை எடுத்துக்கொண்டு அந்த அறைக்கு சென்றாள்.
 
அடுத்த ஒரு மணி நேரமும் சென்றதே தெரியவில்லை. வெளியில் வந்தவள் கபேக்கு சென்று தனக்காய் சூடாய் காபியை கலந்துக்கொண்டு வந்து அங்கிருந்த காலியிருக்கை ஒன்றில் அமர்ந்தாள்.
 
“ஹாய் புவி…” என்று வந்து சேர்ந்தான் உடன் வேலை பார்க்கும் சந்தர் என்பவன்.
 
“என் பேரை எதுக்கு நீங்க சுருக்கி கூப்பிடறீங்க??” என்று முறைத்தாள்.
 
“இந்த காபியை விட நீங்க சூடா இருக்கீங்க போல…”
 
“ஹலோ மேடம் ஜோக் சொன்னா சிரிக்கணும் அதுக்கும் முறைக்கறீங்க…” என்று அவன் சொன்னதை ஜோக் என்று சொல்லி அவனே சிரித்துக் கொண்டான். கடுப்பாய் பார்த்து வைத்தாள் புவனா.
 
“இப்போ உங்களுக்கு என்ன வேணும்??”
 
“காலையிலவே உங்களை கேட்கணும்ன்னு நினைச்சேன், நீங்க ஷோக்கு போய்டவே மறந்து போயிட்டேன்…”
 
“என்ன கேட்கணும்ன்னு நினைச்சேன்னு கேட்க மாட்டீங்களா??”
 
“ஷப்பா உங்களுக்கு என்ன தான் வேணும்… நீங்க கேட்க வந்ததை கேட்காமலா போகப் போறீங்க… சீக்கிரம் கேளுங்க எனக்கு தலையை வலிக்குது…” என்றாள்.
 
“காலையில நீங்க வண்டியில வந்தீங்களே அவரு…”
 
“அதை கேட்கத்தான் வந்தீங்களா…”
 
“ஆமா… அவரு உங்களுக்கு என்ன வேணும்??”
 
“அதை எதுக்கு நான் உங்ககிட்ட சொல்லணும்…”
 
“நம்ம காம்படிட்டர் அவரை கூட வந்து இறங்குறீங்க தெரிஞ்சுக்க வேணாமா…”
 
“என்ன?? என்ன சொன்னீங்க இப்போ??”
 
“உங்களுக்கு அவரை தெரியாதா… அவர் தான் டிடி, இங்க அவரோட நைட் ஷோ ரொம்ப பேமஸ்… நானே அந்த வாய்ஸ்ல மயங்கி அந்த ஷோ கேட்டிருக்கேன்…”
 
“அதே போல ஷோ பண்ணவும் ட்ரை பண்ணேன்… எங்க அவரு என்னமோ பண்றாரு… ஆமா அவரு யாருன்னு நீங்க சொல்லவே இல்லையே… உங்க பிரண்டா அவரு…” என்றான் அவன் ஆர்வமாய்.
 
“ஹஸ்பன்ட்”
 
“வாட்??” என்றான் அவன் அதிர்ச்சியாய்.
 
“யூவர் சோ லக்கி… யூ போத் ஆர் லக்கி… ரெண்டு பேருக்குமே யூனிக் வாய்ஸ் எப்படி அது??” என்று அவன் ஏதேதோ பேசிக்கொண்டே இருக்க அதெல்லாம் எதுவும் அவள் காதில் விழவேயில்லை.
 
அப்போ நான் சென்னையில இருக்கும் போது எனக்கு போன் பண்ணது அவர் தானா… அவர் அன்னைக்கு பேசினது எதுவும் எனக்கு மறக்கலை… இன்னமும் அவர் மனசுக்குள்ள நான் இருக்கேன்…’
 
‘அப்புறம் எதுக்கு என்கிட்ட மறைக்குறாரு?? கொண்டு வரேன் அவருக்குள்ள என் மேல இருக்க அந்த பிரியத்தை வெளிய கொண்டு வர்றேன்… என்னையும் அவருக்கு புரியவைக்குறேன்…’ என்று மனதிற்குள்ளாக பேசிக்கொண்டாள்.
 
வெகுநேரமாக சந்தர் “மேடம்… மேடம்…” என்றது அவள் காதில் விழுந்திருக்கவேயில்லை. அவன் தலையில் அடித்துக்கொண்டு எழுந்தும் சென்றிருந்தான்.
 
‘யாருமே இதைப்பத்தி ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லவேயில்லை…’ என்ற மனத்தாங்கலும் லேசாய் எழத்தான் செய்தது அவளுக்கு.
 
‘ஆமா நீ எல்லார்க்கூடவும் ரொம்ப அன்னியோன்யமா இருந்துட்ட, பெரிசா அவங்களை குறை சொல்ல வந்துட்டே’ என்று அவள் மனமே அவளை திட்டிக்கொள்ளவும் தவறவில்லை.
 
மாலை அவள் கிளம்புவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தனுஷ்க்கு போன் செய்தாள். ஏதோ வேலையாய் இருந்தவன் அதை கவனித்திருக்கவில்லை. மீண்டும் ஒரு அழைப்பை கொடுத்தாள்.
 
“டேய் தனு உன் போன் அடிக்குதுடா…” என்று யாகாஷ் சொல்லவும் தான் ஏப்ரானின் பாக்கெட்டில் வைத்திருந்த கைபேசியை எடுத்தான்.
 
அழைப்பு அவன் மனைவியினிடத்தில் இருந்து என்றதும் எடுக்கலாமா வேண்டாமா என்ற எண்ணத்தில் அவனிருக்க அழைப்பு மீண்டும் எடுக்கப்படாமலே ஓய்ந்தது.
 
‘திரும்பவும் பண்ணா எடுக்கலாம்…’ என்றுவிட்டு மீண்டும் பாக்கெட்டில் அதை போட்டுவிட்டு வேலை பார்க்கலானான்.
 
மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த வேணுகோபால் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு ஹோட்டலுக்கு செல்வார் எப்போதும்.
 
அன்றும் ஆறு மணியளவில் சென்றவர் ஒன்பதரை மணி போல வீட்டிற்கு வர அவர் வரும் முன்னே வீட்டிற்கு வந்திருக்கும் புவனா இன்னமும் வந்திருக்கவில்லை.
 
உடனே அவள் கைபேசிக்கு அழைப்பு விடுத்தார். அது தொடர்புக்கு அப்பால் உள்ளது என்று சொல்ல லேசாய் ஒரு பயம் கொடுத்தது அவருக்கு.
உடனே தனுஷுக்கு போன் அடித்தார். அழைப்பை உடனே ஏற்றவன் “சொல்லுங்கப்பா” என்றான்.
 
“ஏன்பா மருமக உனக்கு போன் எதுவும் போட்டுச்சாப்பா??”
 
“ஆமாப்பா போட்டா, நான் வேலையா இருந்தேன் எடுக்கலை…”
 
“நீ திரும்ப போன் பண்ணலையா??”
 
“இல்லைப்பா பண்ணணும் இனிமே தான்… என்னாச்சுப்பா??”
 
“என்ன தேவா இப்படி பொறுப்பில்லாமல் பதில் சொல்றே?? என்ன அவசரம்ன்னு தெரியலை உனக்கு போன் பண்ணியிருக்கா நீ எடுக்காம இருந்தா என்ன அர்த்தம்…”
 
“இன்னும் புவனா வீட்டுக்கு வேற வரலை… போன் பண்ணா நாட் ரீச்சபிள்ன்னு வருது…” என்று பொரிய ஆரம்பித்தார்.
 
தனுஷுக்குமே உள்ளே பகீரென்றது. தன் கலக்கத்தை தனக்குள் புதைத்துக் கொண்டவன் “ஒண்ணுமிருக்காதுப்பா, பஸ் எதுவும் கிடைச்சு இருக்காது… நான் போன் பண்ணி பார்க்கறேன்… நீங்க கவலைப்படாதீங்கப்பா…” என்று சொல்லி போனை வைத்தவன் அடுத்து புவனாவிற்கு தான் அழைத்தான்.
 
அவன் தந்தை சொன்னது போலவே அது தொடர்புக்கு அப்பால் உள்ளது என்று சொல்ல மீண்டும் மீண்டும் அழைத்து சோர்ந்தான்.
 
தன் ஒட்டுமொத்த சக்தியும் அந்த கணத்தில் இழந்தது போன்ற ஒரு உணர்வு அவனுக்கு. யாகாஷ் இவனின் ஓய்ந்த தோற்றம் கண்டு அருகே வந்தான்.
 
“தனு என்னாச்சுடா??”
 
“ச… சக்தி இன்னும் வீட்டுக்கு வரலையாம்டா… அப்பா போன் பண்ணார்… அவளுக்கு போன் போட்டா லைன் போகலைடா…”
 
“எனக்கு ஈவினிங் போன் பண்ணாடா நான் அப்போ எடுக்கலை… கோவமா இருப்பாளோ அதுல எதுவும் தப்பா…”
 
“டேய் லூசு மாதிரி உளறாத, கோவமா இருந்தா யாரும் தப்பா முடிவு எடுப்பாங்களா… அதெல்லாம் இருக்காது பஸ் கிடைச்சு இருக்காது… நீ அவ ஆபீஸ்க்கு வேணா போன் பண்ணி பாரேன்…” என்று யாகாஷ் சொல்லவும் தான் அவனுக்குமே அது தோன்றியது.
 
உடனே அவள் அலுவலக எண்ணைத் தேடி அதற்கு போன் செய்தான். அங்கு அவள் முன்னமே கிளம்பிவிட்டாள் என்ற தகவல் மட்டுமே கிடைத்தது.
 
அவள் கிளம்பியதாக அவர்கள் சொல்லிய நேரப்படி பார்த்தால் அவள் இரண்டு மணி நேரத்திற்கு முன்னமே வீட்டிற்கு வந்திருக்க வேண்டும். இன்னமும் வரவில்லை என்பது அவனுக்கு அப்படியொரு கிலி உணர்வை கொடுத்தது.
 
தான் வேறு காலையில் அவளை திட்டிவிட்டோம் என்ற குற்றவுணர்வு அவனை கொன்றது. “யாகாஷ் நீ பார்த்துக்கோ, முடியலைன்னா கடையை மூட்டிட்டு வீட்டுக்கு போ… நான் போய் அவளை தேடிட்டு வர்றேன்…” என்று தன் பைக் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.
 
“டேய்… டேய்…” என்று யாகாஷ் அழைக்கும் குரலை கூட பொருட்படுத்தாது கிளம்பிச் சென்றே விட்டான் அவன்.
 
உக்கடம் பேருந்து நிலையத்திற்கு சென்றவன் அதை முழுவதுமாய் அலசி முடித்துவிட்டான். அவள் எங்கேயும் கண்ணில்படவில்லை.
 
‘கடவுளே அவளுக்கு எதுவும் ஆகியிருக்கக்கூடாது… எனக்கு அவ வேணும், அவளை என் கண்ணுல காட்டிடு முருகா…’ என்று ஓயாது மனதில் அவள் கிடைக்கவேண்டும் என்ற வேண்டுதலை தொடுத்த வண்ணமிருந்தான்.
 
இதற்கு நடுவில் வேணுகோபால் வேறு போன் செய்து அவனை காய்ச்சி எடுத்தார். அவன் பிறந்ததில் இருந்து இத்தனை வருடங்கள் வரை அவரிடம் இப்படி ஒரு ஏச்சு அவன் வாங்கியதேயில்லை.
 
அதைக்கூட கேட்டுக்கொண்டான் தனக்கு இது வேண்டும் என்று. எல்லாம் என்னால் தான்  என்று மனம் ஓயாது ஓலமிட்டது.
 
இவன் இங்கு புலம்பிய வண்ணமிருக்க இவனை தவிக்கவிட்டவளோ உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வருவதற்கு தாமதமானதால் வீட்டிற்கு நடந்தே சென்றுக் கொண்டிருந்தாள்.
 
அவன் மெயின் ரோட்டின் வழியே வந்திருக்க இவள் வேறு வழியில் நடந்து சென்றிருந்தாள். அவள் முன்னே கார் ஒன்று வந்து நிற்க அதிலிருந்து அவள் அத்தை மகன் மாறன் இறங்கி வந்தான் அவளை நோக்கி…

Advertisement