Advertisement

அத்தியாயம் – 18
 
தான் அன்று ஹோட்டலுக்கு வரமுடியாது என்றுவிட்டு யாகாஷின் பொறுப்பில் அதைவிட்டு அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து குளித்து எங்கோ கிளம்பிச் சென்றிருந்த தனுஷ் நேரம் பத்தாகியும் வீட்டிற்கு வந்திருக்கவில்லை.
 
எங்கே செல்கிறோம் எதற்கு என்று யாரிடமும் சொல்லியிருக்கவில்லை அவன். புவனாவிற்கே அவள் காலை ஆறரை மணி அளவில் எழும் போது தான் தெரியும்.
 
அப்போதும் கூட அவன் ஹோட்டலுக்கு சென்றிருக்கிறான் என்று தான் எண்ணியிருந்தாள். அதனால் அவனை அவள் தேடவேயில்லை. அன்று அவளுக்கு விடுமுறை தினம் என்பதால் மெதுவாய் குளித்து முடித்து சமையலறைக்கு சென்றாள்.
 
தன் மாமனாருக்கும் தனக்குமாய் காலை உணவை தயாரித்தாள். ஹோட்டலுக்கு சென்றுவிட்டால் தனுஷும் யாகாஷும் காலை உணவே அங்கேயே உண்டுவிடுவார்கள்.
 
வீட்டில் இருந்தால் புவனா அவர்களுக்கும் சேர்த்தே தான் சமைப்பாள். வேணுகோபால் காலை உணவை உண்டு முடித்து ஹோட்டலுக்கு சென்றுவிட்டார். அவருமே தனுஷை பற்றி ஒன்றும் விசாரிக்கவில்லை அவளிடம். புவனா வீட்டில் தனியாகத் தானிருந்தாள்.
பேருந்தில் வந்துக்கொண்டிருந்த தனுஷின் மனம் சென்ற வாரம் நடந்தவைகளை அசைப்போட்டது. புவனாவும் தனிமையில் அதை தான் யோசித்துக் கொண்டிருந்தாள். மாறன் வந்தது பின் நடந்தது எல்லாம் நிழலாடியது.
 
புவனா வெகு நேரமாய் உக்கடம் பேருந்து நிலையத்தில் காத்திருக்க பேருந்து தான் வந்தபாடில்லை. வழியில் எங்கோ சாலைமறியல் என்று பேசிக்கொண்டார்கள். பேருந்து வருவதற்கு நேரமாகும் என்பதாகத் தான் இருந்தது பேச்சு.
 
வீட்டிற்கு போன் செய்யலாம் என்று நினைத்து போனை பார்க்க அதில் சிக்னல் சுத்தமாய் இல்லை. அவள் போனில் இது ஒரு தொல்லை பழைய போனை இன்னும் மாற்றாமல் வைத்திருந்தாள்.
 
அது அவ்வப்போது சிக்னல் கிடைக்காமல் தொல்லை கொடுத்தது. அதை சர்வீஸ் செய்யும் விலைக்கு புது போனே வாங்கிவிடலாம் போல. சென்ற வாரம் அதை சர்வீஸ் கொடுத்த போது கடைக்காரன் சொன்ன பழுது விலையை கேட்டு அவள் அப்படித்தான் நினைத்திருந்தாள்.
 
அடுத்த வாரம் போல வாங்கிக்கொள்ளலாம் என்று சாவதானமாய் அப்போது இருந்தாள். இன்றல்லவோ புரிகிறது இதில் எல்லாம் தாமதம் கூடாது என்று. ஆட்டோவில் செல்லலாம் என்றாலும் அவனும் இன்றைய நாளை மனதில் வைத்து கொள்ளையடிக்கத் தான் பார்ப்பான் என்று அவளுக்கு தெரியும்.
மெயின் ரோட்டில் பிடித்தால் அதிகம் காசு கேட்பான் என்று எண்ணித்தான் இந்த வழியே வந்தாள். ஆட்டோ கிடைத்தால் ஆட்டோவில் செல்லலாம் அல்லது இப்படியே பொடி நடையாய் நடந்தே வீட்டிற்கு சென்றுவிட வேண்டியது தான் என்று நினைத்தாள்.
 
அதே எண்ணத்தில் தான் அந்த வழியே நடக்கவாரம்பித்திருந்தாள். பொறுமையாய் அவள் நடந்துக் கொண்டிருக்க அவளருகே ஒரு கார் வந்து நின்றதுவோ அல்லது அதில் இருந்து ஒருவன் இறங்கி வந்ததுவோ அவள் கவனிக்கவேயில்லை.
 
“புவி…” என்ற குரல் தான் அவள் நடையை நிதானப்படுத்தி நிற்க செய்திருந்தது.
 
‘யாருடா அது என் பேரை சொல்லி கூப்பிடுறாங்க’ என்று திரும்பி பார்த்தவள் அங்கு மாறனை கண்டதும் முகம் இறுகி நின்றாள்.
 
நெற்றி சுருங்கியது, முகம் கடுமையாகியது. உள்ளே யோசனைகள் இவன் எதற்கு இங்கு வந்தான் என்னைப்பார்க்க என்று கன்னாபின்னாவென்று ஓடியது. எதையும் அவள் வாய்மொழியாக்கவில்லை. என்னவென்று கூட கேட்கவில்லை, வெறுமே அவனை முறைத்திருந்தாள்.
 
“நீ கோவமா இருக்கேன்னு எனக்கு தெரியும் டியர்… நான் அன்னைக்கு அப்படி போனது தப்பு தான், ஆனா உனக்கு தெரியுமா அன்னைக்கு நானா போகலை… என்னை போக வைச்சாங்க…”
‘டியரா இவனை…’ என்று பல்லைக்கடித்தவள் ‘இதென்ன இவன் போக வைச்சாங்கன்னு சொல்றான்… என்ன உளர்றான் இவன்??’ என்று பார்த்தாள்.
 
“ஆமா புவிம்மா என்னை போக வைச்சாங்க…”
 
அவள் அப்படியா என்ற பார்வை கொடுத்து எதுவுமே கேட்காதது போல அவனை பார்த்தாள்.
 
“ஏன் புவி என்கிட்ட பேச மாட்டேங்குற?? நான் எதுவும் பண்ணலை புவி… என்னை நம்பும்மா, எனக்கு தெரியும் நான் போனதும் உனக்கு யாரையோ கட்டி வைச்சுட்டாங்களாமே…”
 
“உனக்கு பிடிக்காத வாழ்க்கையை நீ ஏன் வாழணும் புவிம்மா… அதான் உன்னை என்னோட கூட்டிட்டு போகலாம்ன்னு வந்தேன்…” என்று அவசர அவசரமாய் சொல்லி முடித்தான் அவன்.
 
சற்றும் யோசிக்கவில்லை அவள் ஓங்கி அறைந்திருந்தாள் அவனை. “என்னை என்ன நினைச்சுட்டு இருக்கே நீ?? நீ கூப்பிட்டா நான் அப்படியே வந்திடுவேன்னா…”
 
“உன் வேலை எல்லாம் என்கிட்ட காட்டாத, ஒழுங்கா அன்னைக்கு ஓடிப்போன மாதிரி இப்பவும் இங்க இருந்து ஓடிரு…” என்றாள்.
 
“ஹேய் நீ என்ன லூசாடி இவளோ சொல்றேன் உனக்கு புரியலையா… அன்னைக்கு என்னை மிரட்டி போக வைச்சாங்க…” என்றவன் அருகில் யாருமில்லா தைரியத்தில் அவள் கையை பிடித்தான்.
 
“கையை விடுடா…”
 
“முடியாது… நான் சொல்றதை நீ கேக்குற வரை விட முடியாது…”
 
“நீ சொல்றதை நான் ஏன் கேக்கணும்??”
 
“நான் நல்லவன்னு நீ புரிஞ்சுக்கணும்… கல்யாணத்துக்கு முதல் நாள் என்ன ஆச்சுன்னா…”
 
“என்ன சொல்லு?? என்ன ஆச்சு?? உன்னை யாரு போக சொன்னாங்க?? எதுக்கு போக சொன்னாங்க?? அதை சொல்லு முதல்ல”
 
“அது… அது வந்து அவங்க மிரட்டினாங்கன்னு சொல்றேன்ல உனக்கு புரியலையா…”
 
“என்னன்னு சொல்லி உன்னை மிரட்டினாங்க??”
 
“மிரட்டுறவங்க என்ன வேணா சொல்வாங்க, அதெல்லாம் இப்போ எதுக்கு?? என்ன விபரம் ஏதுன்னு உன்கிட்ட அப்புறம் சாவகாசமா சொல்றேன் புவி புரிஞ்சுக்கோ…” என்றவன் கரம் இன்னமும் அழுத்தமாய் அவள் பிடியை இறுக்கியது.
 
“டேய் விடுடா என்னை… மிரட்டிநாங்களாம் இவன் எங்கயோ ஓடிப்போய்ட்டானாம்… நீ மிரட்டலுக்கு எல்லாம் பணிஞ்சு போற ஆளா என்ன… கோழை மாதிரி ஓடி போயிட்டு உன் தைரியத்தை இப்போ என்கிட்ட காட்டுறியா…” என்றவளுக்கு எங்கிருந்து தான் அவ்வளவு வேகம் அவளுக்கு வந்ததோ அவனை அப்படியே அவள் உதற முதலில் அதிர்ந்தவன் உடனே சுதாரித்து அவளிரு கரங்களையும் தன் ஒரே கரத்தால் அடக்கி அவளை இழுத்து செல்ல முயன்றான்.
 
அப்போது அவன் எதிரே வந்து நின்றது ஒரு வண்டி. அவன் நிமிரவும் “புவனா மூச்சை இழுத்துப்பிடி…” என்ற பரிட்சயமான பெண் குரலில் அவள் சொன்னதை கேட்க அவனும் அந்நொடி சுதாரித்து மூச்சை அடக்கப் போக அவரோ அவன் எதிர்பாரா வண்ணம் மிளகாய்த்தூளை கொஞ்சம் எடுத்து புவனாவின் மீது படாதவாறு அவன் முகத்தின் மீது போட்டார்.
 
கண்களில் அது விழுந்துவிட அதில் துடித்தவன் புவனாவின் பிடியை தளர்த்தினான். அதில் அவள் சற்று நகர்ந்து ஸ்கூட்டியின் புறம் வந்திருந்தாள்.
 
“தேங்க்ஸ் ஆன்ட்டி, நீங்க… நீங்க இங்க எப்படி ஆன்ட்டி??”
 
“உன்னைத்தேடி தான் வந்தேன்மா… தனுஷ் கூட உன்னைத்தேடி மெயின் ரோடெல்லாம் அலைஞ்சுட்டு இருக்கான்… நான் எதுக்கும் இப்படி சின்ன ரோட் பக்கம் பார்க்கலாமேன்னு வந்தேன்… நீ இங்க இருக்கம்மா…”
 
“சரி உடனே கிளம்பு நாம வீட்டுக்கு போவோம்…” என்றார் அவர்.
“ஆன்ட்டி ஒரு நிமிஷம் அவர்க்கு போன் பண்ணி சொல்லிட்டு கிளம்புவோமே…” என்று சொன்னவளை அர்த்தமாய் பார்த்தவர் “நாம இப்போ இங்க இருந்து கிளம்புறது அவசியம், கொஞ்சம் தூரம் போயிட்டு போன் பண்ணி சொல்லிக்கலாம்…” என்றவர் கண்களை கசக்கிக் கொண்டிருந்த மாறனை குறிப்பு காட்டினார் அவளிடத்தில்.
 
அவளும் புரிந்தவளாக வண்டியில் ஏறி அமர அவ வண்டியை திருப்பிக்கொண்டு மெயின் ரோடின் வழியே திருப்பினார்.
 
சற்று தூரம் சென்றதும் வண்டியை நிறுத்தி போனில் தனுஷிற்கு தகவல் சொல்ல அவன் புவனாவுடன் பேச வேண்டுமென்றான்.
 
பின்னே திரும்பி போனை அவளிடத்தில் கொடுத்தார். “உன் புருஷன் உன்கிட்ட பேசணுமாம்…” என்று உதட்டசைவில் சொன்னவர் அவளை பேசுமாறு சைகை செய்தார்.
 
“ஹலோ…” என்று இவள் சொல்லும் முன்னே “சக்திம்மா உனக்கு ஒண்ணுமில்லைல…” என்றான் பதட்டமான குரலில்.
 
“இல்லை நான் நல்லா இருக்கேன்…”
 
“சரி நீங்க இப்போ எங்க இருக்கீங்க??”
 
புவனாவோ சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மிதிலாவை அழைத்தாள், அவரும் “என்ன புவனா??” என்றிருந்தார்.
 
“எங்க இருக்கோம்ன்னு கேக்குறாங்க??”
 
“போனைக் கொடு” என்றவரிடம் அவன் அதே கேள்வியை கேட்டுவிட்டு மேலும் தான் அங்கு வருவதாக சொல்லவும் “தனுஷ் சொல்றதை கேளு, நாங்க வந்திடறோம்…”
 
“இங்க ரொம்ப நேரம் நிக்கறது சேப் இல்லை… நாங்க கிளம்பியாச்சு, புவனாவை நான் பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு வர்றேன், நீயும் நேரா அங்க வந்திடு பேசலாம்…” என்றார்.
 
“அங்க வேற எதுவும் பிரச்சனையா??”
 
“நேர்ல வந்து சொல்றேன்…” என்று மீண்டும் ஒரு முறை அழுத்தமாய் சொல்லிவிட்டு அவன் பதிலை எதிர்பாராமல் வைத்துவிட்டார் அவர்.
 
ஒருவழியாய் அவர்கள் வீடு வந்து சேர பின்னோடே வண்டியை வேகமாய் ஓட்டி வந்திருந்தான் தனுஷ்.
 
ஸ்கூட்டியில் இருந்து இறங்கி அவர்கள் உள்ளே செல்லும் முன் வண்டியை கேட்டிற்கு வெளியில் அப்படியே சைட் ஸ்டான்ட் மட்டும் போட்டு நிறுத்திவிட்டு வந்திருந்தான்.
 
அவர்கள் இருவரும் வீட்டிற்குள் நுழையும் முன்னேயே இவன் வரும் அரவம் கேட்டு மிதிலா மெல்ல திரும்பி பார்க்க புவனாவும் திரும்பி பார்த்தாள்.
 
உள்ளே சென்று பேசிக்கொள்ளலாம் என்று அவள் மிதிலாவின் பின்னோடு நுழைய “சக்தி ஒரு நிமிஷம் நில்லு” என்ற குரல் அவளைத் தடை செய்தது. அவள் என்னவென்று திரும்பும் முன்னேயே வேகமாய் வந்து அவளை பின்னிருந்து அணைத்திருந்தான்.
 
அதற்குள் மிதிலா அவர்களை கண்டும் காணாமல் உள்ளே சென்றுவிட்டிருந்தார். அவன் நெஞ்சத்தின் படபடப்பை அவளால் உணரமுடிந்தது. அவன் இதயம் வேகமாய் துடித்துக் கொண்டிருந்தது.
 
எவ்வளவு நேரம் சென்றிருக்குமோ வெளி கேட்டின் கதவு திறக்கப்படும் சத்தத்தில் சுய உணர்விற்கு வந்தவன் சற்று விலகி நின்றான்.
 
கதவை திறந்துக்கொண்டு யாகாஷ் தான் வந்துக் கொண்டிருந்தான். “ஏன்டா கிளம்புனது தான் கிளம்புன இந்த ஏப்ரானை கழட்டி வைச்சுட்டு போயிருக்க கூடாதா… நான் கூப்பிட கூப்பிட நீ பாட்டுக்கு போயிட்டே இருக்க…” என்றவன் சொல்லவும் தான் தனுஷிற்கு அப்படியே கிளம்பிச் சென்றது ஞாபகம் வந்தது.
 
யாகாஷ் இப்போது புவனாவை பார்த்தான். “பத்திரமா வந்துட்டியாம்மா… என்னாச்சு ஏன் இவ்வளவு லேட்??” என்றான்.
“அதை உள்ள போய் பேசிக்கலாம், இங்கவே பேசணுமா…” என்று சிடுசிடுப்பாய் சொன்னான் தனுஷ். அவன் பேச்சைக் கேட்டு புவனா உள்ளே செல்ல “உள்ள செய்ய வேண்டியது எல்லாம் இவங்க வெளியவே செய்வாங்களாம், நாங்க கேள்வி கேட்டது தான் தப்பாமாம்…” என்று முணுமுணுத்தது யாகாஷே தான்.
 
“அதெல்லாம் அப்படி தான்… நீ ஏன் அதெல்லாம் பார்க்கறே… ஆமா இந்த நேரத்துல நீ எதுக்கு இங்க வந்தே?? ஹோட்டலை அதுக்குள்ளே மூடிட்டியா??” என்று தொடர்ந்தான் தனுஷ்.
 
“நீ தானே மூடிட்டு ஹோட்டலை மூடிட்டுன்னு  சொல்ல வந்தேன்டா… அதுக்குள்ளே முறைப்பியே… ஹோட்டலை மூடிட்டு வீட்டுக்கு போன்னு சொன்னே, அதான் நானும் கிளம்பி வந்துட்டேன்… நீ வேற டென்ஷனா கிளம்புனியா, சரி அப்பா தனியா இருப்பாங்கன்னு தான் வந்தேன்டா…” என்று முதலில் கிண்டலாய் ஆரம்பித்து பின் அப்பாவிற்காக என்று சொல்லி முடித்தான்.
 
“மிதிலா ஆன்ட்டி தான் அவளை கூட்டிட்டு வந்தாங்க… என்னாச்சு எனக்கும் தெரியலை, சரி வா உள்ள போய் என்னன்னு கேட்போம்…” என்று நண்பனுக்கு பதில் கொடுக்க இருவருமாய் உள்ளே சென்றனர்.
 
அங்கு மிதிலா ஏற்கனவே வேணுகோபாலிடம் நடந்ததை சொல்லிக் கொண்டிருக்க மாறன் என்ற பெயர் கேட்டு தனுஷ் யோசித்தான். ‘மாறன் இந்த பேரை நாம ஏற்கனவே கேட்டு இருக்கோமே’ என்று.
 
புவனா வரும் வழியிலேயே மிதிலாவிடம் எல்லாம் சொல்லியிருக்க அதை தான் அவர் அவ்வளவு நேரமும் தனக்கு தெரிந்த வரை வேணுகோபாலிடம் சொல்லியிருந்தார்.
 
வேணுகோபாலோ இப்போது புவனாவை நோக்கி “ஏன்மா மாறன் உன்கிட்ட என்ன சொன்னான்??” என்றார். அவர் குரலில் ஏதோ பதட்டம் தோன்றியதோ என்பது போல் உணர்ந்தார் மிதிலா.
 
வேணுகோபாலை நோக்கி ஒரு பார்வையை கொடுத்த யாகாஷும் புவனா என்ன சொல்வாள் என்று எதிர்பார்ப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்.
 
“இல்லை மாமா அவன் ஏதோ உளறிட்டு இருந்தான். அவனா கல்யாணம் வேணாம்ன்னு போகலையாம், யாரோ போக வைச்சதா சொன்னான்”
 
“எனக்கு பிடிக்காத கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்கன்னு சொல்லி என்னை அவனோட வரச்சொல்லி என்கிட்ட வம்பு பண்ணான் மாமா…” என்று அவர் கேள்விக்கு பதில் சொன்னவள் மெதுவாய் தன்னவனை பார்க்க அவனுக்கு இப்போது தான் விஷயமே புரிந்தது.
 
மாறன் யார் என்பதும் வழியில் என்ன நடந்தது என்பதும். அவன் காதில் அவள் சொன்ன ‘பிடிக்காத கல்யாணம்’ என்பதே ஓடிக் கொண்டிருந்தது. அவன் முகமோ இறுகிப்போய் கடினமாய் மாறியிருந்ததை கண்டதும் புவனாவிற்கு திக்கென்றிருந்தது.
தெரிந்தோ தெரியாமலோ இப்போது தான் தனுஷ் அவளிடம் இளக்கமாய் நடந்திருந்தான். மாறன் பேச்சு வந்து இப்படி அவன் முகம் மாறியதே என்றிருந்தது அவளுக்கு.
 
அவள் மாறனை பற்றி முன்பே சொல்லியிருக்கவில்லை என்ற கோபம் அவனுக்கு ஏற்கனவே இருந்தது. தன்னை எங்கேயும் அவள் மனம் நினைத்திருக்கவில்லை என்ற வருத்தமும் அவனுக்குண்டு என்பதை அவளறியாள்.
 
இதில் மீண்டும் மாறன் பற்றி பேச்சும் அவனே நேரே வந்ததும் புவனாவை பார்த்து பேசி சென்றிப்பதும் எல்லா அவனை குழப்பியது. அவனுக்கு இருந்தது சந்தேகமல்ல, சங்கடம் மட்டுமே.
 
மாறன் அப்படி செல்லாமல் இருந்திருந்தால் அவள் வாழ்க்கை அவனுடன் தானே என்ற சங்கடம் தான் அவனுக்கு அதிகமிருந்தது.
 
அவளின் பேச்சை மனதில் ஓட்டிப் பார்த்தவனுக்கு எதுவோ ஒன்று புரிந்தும் புரியாதது போலிருக்க சட்டென்று திரும்பி யாகாஷை பார்த்தான்.
 
அவன் பார்வை வேணுகோபாலிடம் என்பதை கண்டு அவரை திரும்பி பார்க்க அவர்களிருவரின் கண்களும் ஏதோ பேசிக்கொள்வதாகவே அவனுக்குப்பட்டது.
 
அதை கண்டவனது மனம் யோசனையானது. மிதிலாவும் அவர்களை கண்டுகொண்டு தானிருந்தார். இதில் புவனா மட்டுமே எதையும் உணராமல் இருந்தாள்.
 
அவளின் கவலை அனைத்தும் தனுஷை சுற்றியே இருந்தது. அவனை எப்படி மலையிறக்க என்றிருந்தாள் அவள்…
 
நினைவு பாதியிலேயே கலைந்தது நடந்துனரின் குரலில். பேருந்தை விட்டு இறங்கியவன் ஆட்டோ பிடித்து வீடு வந்திருந்தான் இப்போது.
 
வீட்டிற்கு வந்தவனை பார்த்து அதிர்ந்து நின்றிருந்தாள் புவனா. “என்னாச்சு?? எதுக்கு இப்படி??” என்றாள் அதே குரலில்.
 
“வேண்டுதல்…” என்று ஒற்றைச்சொல்லாய் முடித்தவன் மருதமலை சென்று மொட்டை போட்டு வந்திருந்தான்…

Advertisement