Advertisement

அவன் தந்தையின் அறையில் அவர் அனத்திக் கொண்டிருந்தார். அவர் அன்றைய நாள் முழுக்க வெளியிலேயே இருந்திருக்கிறார். அதிக வெயில் அவருக்கு ஒத்துக்கொள்ளவில்லை.
உடலை ஏதோவொரு விதத்தில் அது வருத்த தன்னையும் மீறி உறக்கத்தில் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்.
‘படுத்ததும் தூங்கிட்டாரு’ என்று எண்ணியவாறே அவர் அருகே வந்தான் தனுஷ். அவர் உறக்கத்தில் சாரி மிதிலா என்று முணுமுணுக்க அவனுக்கு தூக்கிவாரி போட்டது.
‘என்ன நடந்ததோவென்று’ எண்ணியவனுக்கு ஒரே நாளில் இத்தனை மனபாரம் அவனால் தாங்க முடியவில்லை. அது அவன் மனதையும் வருத்தியது அவரை ஆசுவாசப்படுத்த அவர் நெற்றியில் கை வைத்து வருடிக் கொடுக்க முனைந்தான்.
தலை லேசாய் சூடு கண்டதுமே அவனுக்கு கொஞ்சம் பதட்டம் பிடித்துக் கொண்டது. உடனே யாகாஷுக்கு அழைத்து டாக்டரை அழைத்துவருமாறு கூறியிருந்தான்.
அவர் வந்து பரிசோதித்து ஊசி போட்டு சென்றிருந்தார். அவருக்கு கஞ்சி காய்ச்சி கொடுத்து மாத்திரை கொடுத்து அவரை ஒருவாறு மீண்டும் படுக்க வைத்தபிறகு தான் புவனாவின் நினைவு வர அவர்கள் அறைக்கு சென்றான்.
நல்ல வேளையாக அவள் உறங்கி விட்டிருந்தாள். இரவு உணவை ஹோட்டலில் இருந்து அவளுக்கு கொண்டு வரச்செய்து அவளை எழுப்ப பதறியடித்து எழுந்தாள் அவள்.
மாறன் சோபாவில் அவள் மேல் விழுந்தது மீண்டும் மீண்டும் அவள் மனக்கண்ணில் வர “குளிக்கணும், நான் குளிக்கணும்” என்று அரற்றினாள் அவள்.
அவளை இழுத்து தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டான். யாகாஷுக்கு அழைத்து மீண்டும் வீட்டுக்கு வரச்சொன்னான்.
“என்னடா என்னாச்சு… மறுபடியும்”
“இரு வர்றேன்” என்றவன் “சக்தி நீ முதல்ல சாப்பிட்டு கொஞ்சம் அமைதியா இரு. அப்பாக்கு வேற உடம்பு சரியில்லைல நான் பார்த்திட்டு வந்திடறேன்”
“நானும் வர்றேன்ங்க” என்றவள் பின் “வேணாம் வேணாம் நான் டர்டி ஆகிட்டேன்” என்றாள்.
“சக்தி” என்று அவன் கண்டிப்பாய் பார்க்க வாயை மூடிக்கொண்டாள்.
அவளை அறையில் விட்டு வெளியில் வந்தான். பின் நண்பனிடம் நடந்ததை சுருங்கச் சொன்னான்.
“இவளை கண்ட்ரோல் பண்ணவே முடியலை. அப்பாக்கு வேற உடம்பு சரியில்லை. ரெண்டு பேருமே ரொம்ப ரெஸ்ட்லெஸா இருக்காங்க…”
“என்னால முடியலைடா. நான் இவளை அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். காலையில இவளை எப்படியாச்சும் சமாதானபடுத்தி கூட்டிட்டு வந்திடறேன்”
“நீ அப்பாவை பார்த்துக்கோடா”
“லூசாடா நீ… இதுக்கு எதுக்கு எனக்கு இவ்வளவு விளக்கம் எல்லாம் கொடுக்கறே. பார்த்துக்கோன்னா பார்த்துக்க போறேன், நம்ம அப்பாடா பார்த்துக்க மாட்டேனா. நீ போயிட்டு வா…”
“ஆனா அங்க போனா மட்டும் சரியாகிடுமாடா…”
“அதில்லைடா இவ எப்போ கத்துவா என்ன பண்ணுவான்னு எனக்கே புரியலை. இவளால அப்பா டிஸ்டர்ப் ஆகிடக் கூடாது. அதான் அங்க போறேன்”
“நீ சொல்றதும் சரி தான். ஆனா அப்பா எழுந்து உன்னைக் கேட்டா” என்ற யாகஷுக்கு “அதுக்கு முன்னாடியே நான் வீட்டுக்கு வந்திடுவேன்டா” என்றான் தனுஷ்.
திடீரென்று வீட்டிற்கு வந்திறங்கிய மருமகனையும் மகளையும் கண்டு என்னவோ ஏதோவென்று பதறினர் வீட்டினர்.
தன் மாமனாரை அழைத்து மெதுவாய் விஷயத்தை சொன்னவன் “நான் இவளை மேல ரூமுக்கு கூட்டிட்டு போறேன் மாமா… நாளைக்கு பேசிக்கலாம்” என்று முடித்துவிட்டு அவளை அழைத்துக்கொண்டு அறைக்கு சென்றான்.
“இப்போ எதுக்கு இங்க வந்தோம்”
“நீ தான் ரொம்ப ஆர்பாட்டம் பண்ணுறியே, அதான் உன்னை இங்க விட்டுட்டு போகலாம்ன்னு வந்தேன்…”
“அப்போ… அப்போ நீங்க என்னை வெறுத்திட்டீங்களா” என்று குரல் கரகரக்க கேட்டாள்.
“முட்டாள் மாதிரி பேசாதே சக்தி. என்னால எப்பவும் உன்னை வெறுக்க முடியாது. நீ ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கோ மாறன் வந்தது போனது எல்லாம் நீ மறக்கணும். மறந்தே ஆகணும், பஸ்ல போகும் போது எத்தனை பேர் தெரிஞ்சோ தெரியாமலோ இடிச்சுட்டு போறாங்க”
“அப்படி நினைச்சுக்கோ. நடந்ததுல உன் தப்பு துளி கூட இல்லை புரிஞ்சுதா” என்றான்.
“இவர் வேணுமின்னே தானே அப்படி செஞ்சார். பஸ்ல இடிக்கறவங்க முகம் பெரும்பாலும் நமக்கு தெரியாது, அவங்க யாரு என்னன்னு கூட தெரியாது. ஆனா இது அப்படியில்லையே”
“இனிமே நீ எப்பவும் மாறனை பார்க்கவே மாட்டே போதுமா. அதுக்கு நான் கியாரண்டி”
“ஆனா ஒண்ணு அப்படியே நீ அவனைப் பார்த்தாலும் கடந்து போக கத்துக்கணும். நமக்கு பிடிச்சவங்க பிடிக்காதவங்க எல்லாருமே இருக்கத் தான் செய்வாங்க”
“பிடிக்காதவங்களை நாம அவாய்ட் தானே செய்வோம். அப்படி செய் ஓகே வா…”. அவன் சொல்லியதெல்லாம் புரிந்தது போல மண்டையை மண்டையை உருட்டினாள். பின் மெதுவாய் வந்து அவன் நெஞ்சின் மீது சாய்ந்துக் கொண்டாள்.
“சக்தி…”
“ஹ்ம்ம்…”
“இப்போ எதுக்கு இங்க வந்து சாஞ்ச”
“ஏன் சாயக்கூடாதா?? இது என்னோட இடம்” என்றவள் அவனை இன்னமும் இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள்.
“இது மட்டும் தான் உன்னோட இடமா… இது கூட உனக்கு தான் சொந்தம்” என்றவன் தன் உதட்டை ஈரப்படுத்தி காண்பிக்க அவள் முகம் சிவந்து அவன் மார்பில் இன்னமும் ஒண்டினாள்.
“சக்தி…”
“என்ன??”
“கிஸ் கொடுக்க போறேன்…”
“என்னது” என்று நிமிர்ந்து பார்த்தாள்.
“இது போதும்” என்றவன் அவள் முகத்தை தன்னருகே இழுத்து அவள் இதழணைத்தான். நீண்ட முத்தம் நெடிய அந்த முத்தம் இருவரின் உள்ளக் கொதிப்பை அடக்கி முற்றிலுமாய் போக்கி மனதை லேசாக்கியிருந்தது.
மறுநாள் அவர்கள் அங்கிருந்து கிளம்புவதற்கு முன் கனியமுது தன் மகள் வேண்டுமென்றே திருமணத்தை நிருத்தியிருப்பாளோ என்று அவர் பேசியதற்காய் மகளிடம் மன்னிப்பை கோரினார். பாலாஜி அவர்கள் இருவரிடமுமே மன்னிப்பை கேட்டான்.
———————–
“ஹலோ மேடம்?? என்னா பிளாஷ்பேக்கா?? போதும் வாங்க” என்று அவளுக்கு மட்டும் சொல்லியிருக்கவில்லை தனக்கும் சேர்த்தே தான் சொல்லிக் கொண்டான்.
“அப்புறம் எப்படி கண்டுப்பிடிச்சீங்க மிதிலா அத்தையை”
“அதான் சொன்னேன்ல மாறன் வந்த அன்னைக்கு தான் ஒரு சின்ன சந்தேகம் ஆரம்பிச்சது. அப்பா உடம்பு சரியில்லாம உளறினது”
“தவிர அந்த மாறன் கூட ஏதோ முணுமுணுத்தான். உன் அப்பா கூட ஒரு பொண்ணோட சுத்துறார்ன்னு…”
“எப்போ?? எப்போ சொன்னான்??” என்று பரபரப்பானாள் அவள்.
“மாமாவும் அத்தையும் வந்திருந்தப்போ உன்னை அவங்ககிட்ட விட்டிருந்தேன்ல. மாறன்கிட்ட எழுதி வாங்கிட்டு இருக்கும் போது அவன் சொன்னது தான்… அப்போ அந்த ரூம்ல நான், அவன், என்னோட அந்த போலீஸ் பிரண்ட் தான் இருந்தோம்”
“அதுக்கு அப்புறம் நடந்தது தான் உனக்கே தெரியுமே. அப்பாகிட்ட மிதிலாம்மா பத்தி விசாரிச்சா பிடிக்கொடுக்காம பதில் சொன்னாங்க…”
“சோ யோசிச்சேன், அவங்க எங்க போயிருப்பாங்கன்னு. யாருமே வேண்டாம்ன்னு சொன்னாலும் பெத்த தாயை யாராலும் விட்டுக்கொடுக்க முடியாதுல. அவங்க நேரா அவங்கம்மாகிட்ட போயிருப்பாங்கன்னு அங்கேவே போயிட்டேன்”
“எப்படியோ இனி எல்லாம் சுகம் தானே”
“இனி எல்லாம் சுகம் இல்லை, இனி எல்லாம் சுபம் தான்னு சொல்லு”
—————–
தனுஷ் கோவைப்புதூரில் இருந்த அறுசுவை உணவகத்தை முழுவதுமாக யாகாஷின் பொறுப்பில் விட்டுவிட்டான்.
கடையை அவன் பெயருக்கே மாற்றிக் கொடுத்துவிட்டான்.
“எதுக்குடா இதெல்லாம் நான் இதுல எந்த முதலீடும் போடலையேடா, உழைப்பை தவிர”
“அது பெரிய முதலீடு இல்லையாடா. நீ இங்க பார்த்துக்கோடா நான் புவனாவை கூட்டிட்டு ஊட்டிக்கு போகலாம்ன்னு இருக்கேன். அங்க இருக்க நம்ம அறுசுவை உணவகத்தை பார்த்துக்க போறேன்”
“அப்பா, அம்மா எதுவும்”
“லூசாடா நீ அவங்க என்ன சொல்லுவாங்கன்னு நீ நினைக்கிறே, இந்த ஐடியா கொடுத்தது மிதிலாம்மா. அவங்களுக்கு ஐடியா கொடுத்தது எங்க வீட்டம்மா” என்றான்.
தனுஜாவிற்கு இது என்ன மாதிரியான உறவு அண்ணன் தம்பி போல பழகும் நண்பர்கள் கேட்கவே விசித்திரமாக இருந்த போதும் அவர்களின் உறவு எப்போதும் போல் இப்போது அவளை ஆச்சரியப்படுத்தியது. அவள் அவர்கள் இருவரையும் சந்தோசமாகவே பார்த்துக் கொண்டிருந்தாள்.
யாகாஷ் திடீரென்று சோகமாக முகத்தை வைத்துக் கொண்டான். மற்ற இருவருமே அதைக்கண்டு பதறினர். “என்னாச்சு யாகாஷ்??” என்றான் அவன்.
“இல்லை நீ கொடுத்து வைச்சவன். ஜாலியா ஊட்டிக்கு போறே, நல்ல கிளைமேட். என்ஜாய் பண்ணுவ, என்னை மட்டும் இங்க மாட்டிவிட்டுட்டியே”
“அடிங்க” என்று அவனுடைய இரண்டு தனுக்களும் அவனை மொத்தினர்.
தனுஷ், புவனாவை அழைத்துக்கொண்டு ஊட்டிக்கு சென்றுவிட்டான் உடன் வேணுகோபாலும் மிதிலாவும் அவர்களுடன் சென்றனர்.
அங்கு சென்றும் அவர்கள் எப்எம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை விடவில்லை. பாருங்களேன் என்ன செய்கிறார்கள் என்று.
சில மாதங்களுக்கு பின்
———————————————-
“ஹாய் ஹலோ… வெல்கம் டு த ஷோ ஆசையை காத்துல தூத்துவிட்டு நாங்க உங்க ஆர்ஜே பீஎஸ் பேசறேன்” என்று சக்தி உற்சாகக் குரலில் ஷோவை ஆரம்பித்தாள்.
“சில நேயர்கள் சென்னையில என்னோட இந்த ப்ரோக்ராம் கேட்டிருக்கலாம். இனி நம்ம ஊட்டியில இருந்து இந்த ப்ரோகிராம் கேட்க போறோம். வாங்க நம்ம முதல் நேயர்கிட்ட பேசலாம்” என்று அவள் பேசிக் கொண்டிருந்தாள்.
ஒரு மணி நேரம் சென்றதே தெரியவில்லை. நிகழ்ச்சி முடியும் தருவாயில் “நேயர்களே இப்போ எனக்கு பிடிச்ச ஒரு பாடலை ஒலிக்க விடப்போறேன். என்னோட சேர்ந்து நீங்களும் கேளுங்க” என்று சொல்லி நிகழ்ச்சியை முடித்தாள் அவள்.
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
என் நேரமும் உன் ஆசைபோல்
பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ!!
“இந்தா இந்தம்மா ஆரம்பிச்சுட்டாங்கல இதுக்கு நம்ம தலைவர் இப்போ இசைப்பாட்டு போடுவாரு பாரு இன்னும் கொஞ்ச நேரத்துல அடுத்த ப்ரோக்ராம் அவரோடது தான்” என்று தன் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தான் யாகாஷ்.
“இதுக ரெண்டுத்துக்கும் கல்யாணம் பண்ணி வைச்சதே வேஸ்ட். இப்படி எப்எம்லவே குடும்பத்தை நடந்தினா புள்ளைக்குட்டி எல்லாம் எப்படி பிறக்கும் விளங்கிடும்” என்றான் தொடர்ந்து.
“நேயர்களுக்கு இரவு வணக்கம். நான் உங்க தனுஷ் பேசறேன், இது உங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சி இரவின் குளிரில் நிலவின் மடியில்”
“நேயர்கிட்ட பேசுறதுக்கு முன்னாடி நாம முதல்ல ஒரு பாட்டை கேட்போம், பின் பேசுவோம் நம் நேயர்களுடன். இணைப்பில் இருங்கள்” என்றவன் புவனாவின் பாட்டிற்கு தன் பதிலை கொடுத்தான்.
மல்லிகை மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே
வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதடி மீனே 
என்ற பாடல் ஒலித்தது.
“பாட்டை பாரேன் அவ மல்லிப்பூ பாட்டு போட்டாளாம் பதிலுக்கு இவரும் மல்லிப்பூ பாட்டு போடுறாராம். நான் நினைக்கிறேன் இதுகளுக்கு கிறுக்கு பிடிச்சிருக்குன்னு. இங்க என்ன பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியா நடக்குது” என்று மீண்டும் அங்கலாய்த்தவன் யாகாஷே தான்.
“அனேகமா நாம தான் முதல்ல குழந்தை பெத்துக்க போறோம் பாரேன்…” என்று தொணதொணத்துக் கொண்டிருந்தான் அவன்.
“யோவ் உனக்கு தான்யா கிறுக்கு பிடிச்சிருக்கு. நீ இப்படியே பேசிட்டு இருந்தே நமக்கு இப்போ மட்டுமில்லை எப்போமே குழந்தை பிறக்காது”
“இனி நீ இப்படி விடிய விடிய எப்எம் கேட்டுட்டே இருந்தேன்னு வை, நாளையில இருந்து நான் நைட் டியூட்டி போய்டுவேன். நீ தனியா தான் படுக்கணும்” என்றார் தனுஜா.
“அச்சோ தஜூ அப்படியெல்லாம் சொல்லிராதடி என் தங்கம். மாமா தாங்க மாட்டேன்”
“தஜூன்னு கூப்பிடாதீங்கன்னு சொன்னா கேட்க மாட்டீங்களா”
“தனுன்னு கூப்பிட்டா தனுஷை கூப்பிடுற மாதிரி இருக்கு உனக்கு ஸ்பெஷல் நேம் வேணாமா” என்றவன் அதற்கு மேல் அவளை பேசவிடவில்லை.
——————
“சக்தி…”
“ஹ்ம்ம்”
“சக்தி”
“ஒரு நிமிஷம், அதென்ன நீங்க மட்டும் சக்தின்னு என்னை கூப்பிடுறீங்க. ஸ்பெஷலா கூப்பிட ட்ரை பண்றீங்களோ”
“அதெல்லாம் இல்லை என்னோட உலகம் நீ மட்டுமில்லை, அப்பா, அம்மா எல்லாரும் தான். ஆனா இந்த உலகம் இயங்க எனக்கு சக்தி வேணும்ல அந்த சக்தி என்னோட சக்தி நீ தான்… சோ எனக்கு நீ சக்தி…”
“ஆஹான்”
“பூ வைக்கலையா”
“எதுக்கு??”
“எந்நேரமும் பூச்சூடிகொள்ளவோன்னு சொன்னே”
“அது பாட்டு…”
“அதெல்லாம் போங்கு மரியாதையா பூ வைச்சுட்டு வா” 
“இப்போ எங்கே போய் வாங்க…”
“ஏன்டி இவ்வளவு சின்ன ரூம்ல நான் வாங்கி வைச்சிருக்க மல்லிப்பூ வாசம் உனக்கு அடிக்கவே இல்லையா”
“அடிக்குது அடிக்குது, அதை கொடுக்க வேண்டிய ஆள் கொடுத்தா தானே நல்லா இருக்கும்” என்று சொன்னவள் அவன் கொடுத்த பூவை மறுக்காமல் வாங்கி தலையில் சூடிக்கொண்டாள்.
பூவை சூடிக்கொண்ட பூவையை தனுஷ் தன்வசப்படுத்திக் கொண்டான்.
இவர்கள் எப்போதும் போல் அவர்களின் ஆசையை இப்படி தான் காற்றில் தூதுவிட்டு தங்கள் காதலை வளர்த்துக் கொண்டிருப்பர். நாம் இவர்களை இங்கேயே விட்டு கிளம்புவோம்.
நன்றி

Advertisement