Advertisement

அத்தியாயம் – 25
மருதமலை முருகன் கோவில் சன்னதி. தம்பதி சமேதராய் நின்றிருந்தனர் அவர்கள். கண்களை இறுக மூடி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் தங்கள் வேண்டுதலை இறைவனின் முன் வைத்தனர்.
பிரார்த்தனை முடிந்து அவர்கள் அனைவரும் வெளியே வந்து ஓரிடத்தில் அமர்ந்தனர்.
“அப்பா இனி நீங்க நாளைக்கே திருச்சி போகலாம். நான் எதுவும் சொல்ல மாட்டேன்” என்றான் குறுஞ்சிரிப்புடன்.
“தேவா…” என்றார் அவர் பொய்க்கோபத்துடன். அருகில் மிதிலா மிகவும் மலர்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தார். அங்கிருந்த அனைவருக்குமே மனம் மகிழ்ச்சியாக இருந்தது. 
“இருந்தாலும் நீங்க எல்லாரும் என்னை இப்படி தனியா விட்டிருக்கக்கூடாது. அப்பா ஆனாலும் நீங்க ரொம்ப மோசம், எனக்கு தானே முதல்ல பொண்ணு பார்த்தீங்க…”
“இப்போ நீங்க எல்லாம் ஆளாளுக்கு ஜோடி போட்டாச்சு. என்னை மட்டும் டீல்ல விட்டு” என்று சொல்லியது வேறுயாருமல்ல நம் யாகாஷ் தான்.
“டேய் அதான் உன் ஜோடி உன் பக்கத்துல இருக்குல. ஹோட்டல்க்கு சாப்பிட வந்த லேடி இன்ஸ்பெக்டரை கரெக்ட் பண்ணிட்டு பேச்சாடா பேசுறே” என்றான் தனுஷ்.
“நீங்க எல்லாம் லைசென்ஸ் வாங்கிட்டீங்க. நான் இப்போ தானே எல்எல்ஆர் வாங்கி இருக்கேன்” என்றான் அவன்.
யாகாஷுக்கும் அவன் விரும்பிய பெண்ணான லேடி இன்ஸ்பெக்டர் தனுஜாவிற்கும் நிச்சயம் செய்திருந்தனர். இன்னும் ஒரு மாதத்தில் திருமண தேதியும் முடிவாகியிருந்தது. 
“என்னம்மா சைலென்ட்டா இருக்கீங்க??” என்று மிதிலாவை பார்த்து கேட்டான் தனுஷ்.
“என்ன பேசன்னு தெரியலை தனுஷ்…” என்றார் அவர்.
“ஆன்ட்டி… சரி சரி மறந்திட்டேன் அத்தை என்ன பேசன்னு யோசிக்காம உங்க மனசுல இருக்கறதை ஷேர் பண்ணுங்க…”
“உள்ளவே வைச்சு வைச்சு தானே எங்களுக்கு எதுவும் தெரியாம போச்சு…” என்றாள் புவனா.
“சக்தி” என்று அதட்டினான் தனுஷ்.
“அம்மா ரிலாக்ஸா இருங்க… இங்க யாரும் உங்களை தப்பா நினைக்க மாட்டாங்க… நீங்க நீங்களா இருங்க, இது நீங்க ஆசைப்பட்ட வாழ்க்கை, ரொம்ப காலதாமதம் தான் ஆனா உங்களுக்கு கிடைச்சிருக்கு”
“உங்க தவத்தோட பலன் அதை சந்தோசமா அனுபவிங்கம்மா” என்றான் அவன் ஆத்மார்த்தமாய்.
மிதிலாவிற்கு இன்னமும் சங்கோஜம் போகவில்லை. இத்தனை வயதிற்கு பிறகு தனக்கு திருமணமா என்ற கூச்சம், மகன் மருமகள் என்றிருக்கும் வேணுகோபாலை கரம் பிடித்தோமா எவரேனும் எதுவும் நினைப்பார்களோ என்ற எண்ணம் எல்லாம் சேர்ந்து மனம் நிறைந்த வாழ்க்கை என்றாலும் கொஞ்சம் கவலை அவரை தொற்றிதானிருந்தது.
மேற்கொண்டு பேசி அவரை சங்கடத்துக்குள்ளாகாமல் வேறு பேச்சிற்கு தாவினான் தனுஷ். “அப்பா நாளைக்கு கார் சொல்லியிருக்கேன் நீங்க திருச்சி போக… நாங்க பின்னாடியே ரெண்டு மூணு நாள் கழிச்சு வர்றோம்” என்றான்.
“எதுக்கு தேவா ரெண்டு செலவு நீங்களும் எங்களோடவே வரலாமே” என்றார் அவர்.
“இல்லைப்பா இங்க கொஞ்சம் வேலை இருக்கு அதை எல்லாம் முடிச்சு வைச்சுட்டு நானும் சக்தியும் மட்டும்… நல்லா கேளுங்க நானும் சக்தியும் மட்டும் தான் வர்றோம்” என்று அழுத்தி சொன்னதில் யாகாஷ் காண்டானான்.
“அதானே எப்பவும் போல என்னை கழட்டிவிட்டுட்டு நீங்க மட்டும் தானே ஒண்ணு கூடுவீங்க… நல்லாயிருங்க எல்லாரும்” என்று சாதாரணமாய் அவன் சொன்னாலும் அதில் லேசாய் வருத்தம் இருந்ததை வேணு புரிந்துக் கொண்டு தன் மகனை முறைத்தார் இப்போது.
அவன் அவரிடம் பார்வையாலேயே மன்னிப்பை வேண்டினான். “யாகாஷ் அவன் பொண்டாட்டியோட இப்போ வருவான். உனக்கும் தனுஜாக்கும் கல்யாணம் ஆனதும் நீங்க ரெண்டு பேரும் அங்க வந்து ஒரு மாசம் இருக்கீங்க ஓகே தானே” என்றார் அவர்.
அவரின் பேச்சு யாகாஷை பெறாத பிள்ளை என்று தோன்ற வைக்காமல் அவர் பெற்ற பிள்ளையாக பாவிப்பது புரிந்தது அனைவருக்கும். தனுஜாவுக்கு கூட இதெல்லாம் பார்த்து பிரம்மை தான்.
யாரோ எவரோ என்றில்லாமல் அனைவரும் ஒன்றாய் அவனை ஏற்றுக் கொண்டது அவனுக்கு கிடைத்த வரமே என்று தான் எண்ணினாள் அவள்.
——————–
காரில் வேணுகோபாலும் மிதிலாவும் திருச்சியை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்தனர். “உங்களுக்கு என் மேல கோபமில்லையா வேணு??”
“எதுக்கு கோபப்படணும்??”
“சொல்லாம கொள்ளாம ஊட்டிக்கு போயிட்டனே”
“உன்னோட மனநிலையை என்னால புரிஞ்சுக்க முடியுது மிதிலா”
“இருந்தாலும் நான் அப்படி ஓடி ஒளிஞ்சிருக்க கூடாது. தனுஷ் தேடி வரலைன்னா என்னாகியிருக்கும்”
“ஒண்ணும் ஆகியிருக்காது. அவன் உன்னை ஊட்டில இருந்து கூட்டிட்டு வரும் போதே கணக்கு போட்டு தான் கூட்டி வந்திருப்பான்னு நினைக்கிறேன்”
“அவன் அம்மா ஆசைப்படி நான் கல்யாணம் பண்ணிக்கறது தான் ஒரே குறிக்கோள் அவனுக்கு. உன் மனசுல உள்ள ஆசையை தெரிஞ்சுக்கிட்டவன் உன்னை என்னோட சேர்க்கணும்ன்னு நினைச்சிருக்கான்”
“எனக்கு ரொம்ப ஆச்சரியமாயிருக்கு வேணு, எல்லாரும் என்னை இயல்பா ஏத்துக்கிட்டாங்க. அதுவே எனக்கு பெரிய நிம்மதியும் சந்தோசமும் கொடுக்குது” என்றார் உள்ளார்ந்து
“புவனா படிச்ச பொண்ணு அவளுக்கு என்னை ஏத்துக்கறது எல்லாம் பெரிய விஷயமே இல்லை. ஆனா அவங்க அப்பா அம்மா எல்லாம் என்னை இயல்பா உணர வைச்சாங்க வேணு”
“அதெல்லாம் என்னால நம்பவே முடியலை. நீங்க கோவில்ல வைச்சு அப்படி கேட்டதும் முதல்ல சந்தோசமா இருந்துச்சு. அப்புறம் எனக்கே என்னை நினைச்சு அசிங்கமா இருந்துச்சு”
“கல்யாணம் ஆகி மகன் மருமகள்ன்னு இருக்கவர் வாழ்க்கையில போய் விளையாடப் போறியான்னு என் மனசாட்சி என்னை கேள்வி கேட்டுச்சு அதான் சொல்லாம கொள்ளாம வேலையை விட்டுட்டு ஊட்டிக்கே போயிட்டேன்”
“அங்க போய் அம்மாகிட்ட மட்டும் விஷயத்தை சொன்னேன். அவங்க சந்தோசப்பட்டாங்க, ஆனா நான் அதெல்லாம் நடக்காதுன்னு சொல்லவும் அவங்களுக்கு ரொம்ப வருத்தம்”
“தனுஷ் வந்து என்னை கூட்டிட்டு போனப்போ தான் அவங்க முகத்துல நிம்மதியை பார்த்தேன். நம்ம கல்யாணத்தை அவங்க நேர்ல பார்த்தப்போ அவ்வளோ சந்தோசப்பட்டாங்க தெரியுமா” என்றார் அவர்.
“உங்க அண்ணா ஏன் கல்யாணத்துக்கு வந்து எட்டிப்பார்த்திட்டு போனதோட சரி. திரும்ப வரலை”
“அவனுக்கு குற்றவுணர்ச்சி, தனுஷ் முன்னாடி தான் உங்களை கண்டபடி பேசினான். அதான் அப்படின்னு நினைக்கிறேன்”
“தேங்க்ஸ் மிதிலா” என்றார் அவர் இப்போது.
“எதுக்கு வேணு??”
“நான் ரொம்பவே பயந்திட்டேன். உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டோம்ன்னு, நீ சொல்லாம கொள்ளாம போனதும் ரொம்பவும் கஷ்டமா போச்சு”
“எனக்கு தனியா எங்காச்சும் போய்டணும் போல இருந்துச்சு. அதான் உடனே திருச்சிக்கு ட்ரான்ஸ்பர் கேட்டேன். ஆனா இந்த தனுஷ் என்னை ஊர்லவே இருக்க வைச்சு உன்னையும் சமாதானப்படுத்தி கூட்டிட்டு வந்து நம்ம ரெண்டு பேரும் ஒண்ணாவே திருச்சி போக வைச்சிருக்கான் பாரு…”
“என்னோட பையனை நினைச்சு ரொம்ப பெருமையா இருக்கு” என்றவரை முறைத்தார் மிதிலா.
“நம்மோட பையன்னு சொல்லலாமே” என்று சொல்ல மகிழ்ச்சியாய் அவரை தன் தோளோடு சேர்த்தணைத்துக் கொண்டார் வேணுகோபால்.
——————
“மேடம் என்ன யோசனை??”
“இல்லை மாமாவும் அத்தையும் பார்க்கும் போது அவ்வளவு திருப்தியா இருந்துச்சு. எவ்வளவு மலர்ச்சில அவங்க முகத்துல” என்றாள் சிலாகித்து.
“ஹ்ம்ம் ஆமா ரொம்ப வருஷம் கழிச்சு அப்பா இவ்வளோ சந்தோசமா பார்க்கறேன். கண்டிப்பா அதுக்கு மிதிலாம்மாவும் ஒரு காரணம்” என்றான்.
“சரி நீ உண்மையாவே என்ன யோசிச்சுட்டு இருந்தே அதை சொல்லு இப்போ”
‘கண்டுப்பிடிச்சுட்டானா’ என்று எண்ணி உதட்டை கடித்துக் கொண்டாள்.
“உனக்கு கடிக்கணும்ன்னா சொல்லு நான் ஹெல்ப் பண்றேன். நீயா எல்லாம் அதை செய்ய வேணாம்” என்றவன் அவள் கீழுதடை பிடித்து அருகிழுத்தவன் லேசாய் கடித்தான்.
“அவுச்… விடுங்க” என்று அவன் கையை தட்டிவிட்டாள்.
“சரி சொல்லு உனக்கு என்ன யோசனை…”
“அதை அப்புறம் சொல்றேன் அதுக்கு முதல்ல நீங்க இதை சொல்லுங்க”
“என்ன??”
“நீங்க அன்னைக்கு மருதமலைக்கு போயிட்டு வேண்டுதல் செஞ்சுட்டு வந்தீங்களே, அது எதுக்குன்னு இன்னும் சொல்லவேயில்லையே”
“அது மட்டும் தான் உனக்கு தெரிஞ்சுக்கணுமா…”
“வேற ஒண்ணும் தெரிய வேண்டி இருக்கு…”
“எப்எம்மா??”
“ஹ்ம்ம் ஆமாம்…”
“முதல்ல எப்எம் பத்தி சொல்லிடறேன். ஸ்டேஷன் ஹெட் என் வாய்ஸ் பிடிச்சு போய் கேட்டார். எனக்கும் சரி பண்ணா என்னன்னு ஒரு ஆர்வம் ஓகே சொல்லிட்டேன்”
“அதை ஏன் என்கிட்ட சொல்லலை??”
“நீ கூட தான் சென்னைக்கு போனே, என்கிட்ட சொல்லிட்டா போனே??”
“இல்லை அது வேற…”
“எல்லாம் ஒண்ணு தான். நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நாம எப்படி இருந்தோம்ன்னு தான் உனக்கே தெரியுமே. அதுல எங்க இதெல்லாம் சொல்ல நேரம் இருந்திச்சு”
“ஹ்ம்ம் சரி தான்…” என்றவள் ஞாபகமாய் வேண்டுதலை பற்றி மீண்டும் கேட்டாள்.
“மறக்க மாட்டே போல விடாம கேட்குறே. அது அப்பாவுக்காக, அவங்களுக்கும் மிதிலாம்மாவும் ஒண்ணா சேரணும்ன்னு நினைச்சு தான் போய் மொட்டை போட்டுட்டு வந்திட்டேன்”
“அவங்க கல்யாணம் நடக்கணும்ன்னு என்னெல்லாம் செஞ்சிருக்கீங்க. நீங்க நிஜமாவே ரொம்ப கிரேட் தாங்க…”
“மாமாவை ஊருக்கு போகவிடாம செஞ்சு அந்த கேப்ல மிதிலா ஆன்ட்டியையும் கண்டுப்பிடிச்சு இங்க வரவைச்சு இதோ இப்போ கல்யாணமும் முடிஞ்சது. எப்படிங்க??” என்றாள்
“அப்பாக்கும் ஆன்ட்டிக்கும் நடுவில ஏதோ பிரச்சனையா இருக்கும்ன்னு எனக்கு முத முதல்ல தோணினது மாறன் இங்க வந்திருந்தப்போ தான்”
“என்ன சொல்றீங்க நீங்க”
“அன்னைக்கு அப்பா வழக்கத்துக்கு மாறா மருதமலைக்கு போனது…”
“கோவில்க்கு எப்பவும் போறது தானே…”
“ஆனா கோவில்க்கு போனதைப்பத்தி மட்டும் சொல்லலை. போனவர் வீட்டுக்கு வர்றதுக்கு அவ்வளவு நேரம் ஆகியிருக்க தேவையில்லை. தவிர அன்னைக்கு அப்பாவுக்கு உடம்பு வேற சரியில்லாம போச்சு”
“உனக்கும் ஞாபகம் இருக்கும்ன்னு நினைக்கிறேன்”
“ஹ்ம்ம்…” என்றவளுக்கு அன்றைய நாளின் நினைவில் முகம் சுருங்கியது.
“சக்தி… ப்ளீஸ் அதெல்லாம் நினைக்காதேன்னு உனக்கு எத்தனை முறை சொல்றது”
“மறக்க முடியலையே” என்றவளின் நினைவில் மாறன் வந்து சென்ற அன்றைய நாள் நிழலாடியது.
——————–
மாறனை அவன் அன்னை அழைத்து சென்ற பின்னே அவளின் வீட்டினரும் அடுத்ததாய் கிளம்பியிருந்தனர்.
அவர்கள் சென்ற பின்னும் கூட புவனா தனுஷை விட்டு நகரவேயில்லை. திடீரென்று ஆவேசம் வந்தது போல் “தேவா நான் குளிக்கணும், அழுக்கு அவன் என் மேல விழுந்துட்டான்…” என்றவள் வேகமாய் குளியலறை நோக்கிச் சென்றாள்.
ஷவரை திறந்துவிட்டு அதனடியில் அப்படியே நின்றிருந்தாள். பரபரவென்று உடலை தேய்த்தாள். ஏனோ அவள் மேல் மாறன் மேல் வீசிய மதுவாடை வீசிய உணர்வு அவளுக்கு.
சோப்பை எடுத்து கிட்டத்தட்ட கரைத்திருந்தாள். அத்தனை நேரம் சோப்பை மீண்டும் மீண்டும் தன் மேல் தேய்த்தாள்.
மாற்றுடை கூட எடுத்துக் கொள்ளாமல் புவனா இப்படி உள்ளே சென்றுவிட்டாளே என்று எண்ணிய தனுஷ் அவளுக்காய் வெளியே காத்திருந்தான்.
வெகுநேரமாய் அவள் வராதது கண்டு “சக்தி ப்ளீஸ் கதவை திற. நீ டிரஸ் கூட எடுத்திட்டு போகலை. இந்த டவலை வாங்கிக்கோம்மா. டிரஸ் எடுத்து கட்டில் மேல வைச்சிருக்கேன்” என்று வெளியில் இருந்து அவன் கத்தினான்.
அவன் குரல் அவளுக்கு கேட்கவில்லை போலும், ஷவரில் இருந்து நீர் விழுந்துக் கொண்டிருந்த சத்தத்தில்.
இப்போது அவன் கதவை வேகமாய் உடைக்காத குறையாக தட்டியிருக்க ஒருவாறு கதவை திறந்து அவன் நீட்டிய துவாலையை வாங்கிக் கொண்டாள்.
அவளை அங்கேயே விட்டு அவன் அறைக்கதவை லேசாய் சாற்றிக்கொண்டு வெளியில் வர அப்போது தான் வேணுகோபால் சோர்வுடன் உள்ளே நுழைந்துக் கொண்டிருந்தார்.
“அப்பா…”
“தேவா… இந்த நேரத்துல வீட்டில இருக்கே”
அவர் கேள்விக்கு பதில் சொல்லாமல் “நீங்க எங்கேப்பா போனீங்க??” என்றான் அவன்.
“கோவில்க்கு போனேன்”
“அது காலையில போனீங்க. இப்போ தான் வர்றீங்களா??”
“ஹ்ம்ம் ஆமாம் மனசுக்கு ஒரு மாதிரி இருந்துச்சு. அதான் அங்கவே கொஞ்ச நேரம் இருந்திட்டு வந்தேன்” என்றார் நலிந்த குரலில்.
தனுஷும் அதற்கு மேல் அவரை தூண்டி துருவவில்லை.
“தேவா எனக்கு ஒரு காபி கிடைக்குமா”
“இதோப்பா” என்றவன் சமையலறை நுழைந்திருந்தான். தந்தைக்கு மட்டுமல்லாது தன் மனைவிக்கும் தனக்குமே சேர்த்து போட்டுக் கொண்டு வந்தான். எல்லோருக்குமே அந்த நேரம் அது தேவையாக இருந்தது.
“தேங்க்ஸ்பா…” என்றவர் அதை வாங்கி பருகினார்.
“நான் போய் படுக்கறேன் தேவா. நைட்க்கு எனக்கு சாப்பிட எதுவும் வேண்டாம். கோவில்ல பிரசாதம் சாப்பிட்டேன், அதுவே வயிறு டொம்ன்னு இருக்கு” என்று உள்ளே சென்று விட்டார்.
‘என்னாச்சு இந்த அப்பாக்கு. அவன் சொன்ன மாதிரி…’ என்று அவன் யோசித்துக் கொண்டிருந்த வேளை அவர்கள் அறையில் புவனா அழும் குரல் கேட்டது.
கையில் இருந்த காபி கோப்பையுடன் அவர்கள் அறைக்குள் நுழைந்தான்.
“சக்தி அழறதை முதல்ல நிறுத்து. எதுவும் தப்பா நடந்திடலை தானே. அப்புறம் ஏன் அழறே. இந்தா… இந்த காபியை கொஞ்சம் குடி, உனக்கு பெட்டரா இருக்கும்” என்றவன் வலுக்கட்டாயமாய் அவளிடம் ஒரு கோப்பையை திணித்தான்.
தானும் ஒன்றை எடுத்துக்கொண்டு அங்கேயே அமர்ந்தான்.
“நீங்க மட்டும் வரலைன்னா என்னாகியிருக்கும்” என்றவளின் விழிகளில் கண்ணீர் மீண்டும் பெருக்கெடுத்தது.
“நாம யாருக்கும் எந்த கெடுதலும் செய்யலை. நமக்கு எந்த கெடுதலும் நடக்காதுன்னு நீ நம்பு. நான் எப்பவும் அதைத் தான் நம்புறேன்…” என்று சமாதானம் செய்தான்.
“மாமா… மாமா குரல் கேட்டுச்சே. அவங்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சு போச்சா… என்ன சொன்னாங்க” என்றாள்.
“இல்லை நான் அப்பாகிட்ட எதுவும் சொல்லலை. அவங்க கொஞ்சம் டல்லா இருக்காங்க. உடம்பு சரியில்லாத போல தோணுது. இப்போ எதுவும் பேச வேண்டாமே”
“நீயா அப்பாகிட்ட போய் எதுவும் சொல்லிட்டு இருக்காதே” என்று அவளிடமும் சொன்னான்.
“தெரியாம போய்டுமா என்ன”
“அதை நானே சொல்லிக்கறேன் ஓகேவா”
“ஹ்ம்ம்…”
“நைட்க்கு போய் ஏதாச்சும் ரெடி பண்ணுறேன். நீ ரெஸ்ட் எடு, அப்பாவை பார்த்திட்டு அப்புறம் போய் அதை செய்யறேன்” என்று அவள் கையில் இருந்த காலி கோப்பையை எடுத்துக்கொண்டு வெளியேறினான்.

Advertisement