Advertisement

அத்தியாயம் – 21
“என்ன பேசப்போறேன்னு உனக்கு கேட்க விருப்பமில்லையா மிதிலா” என்றார் வேணுகோபால் அமைதியை உடைத்து.
“பேசணும்ன்னு சொன்னது நீங்க தானே. அப்போ நீங்களே சொல்லட்டும்ன்னு தான் பேசாம இருக்கேன்” என்றார் அவர் பதிலாய்.
“மனசே சரியில்லை மிதிலா. நான் செஞ்சது செய்யறது எல்லாம் சரியா தப்பான்னு மனசு கிடந்து அடிச்சுக்குது”
“என்னாச்சு தனுஷ் கல்யாணத்தை பத்தி ஏதோ சொன்னீங்களே அந்த கவலையா”
வேணுகோபால் தான் புவனாவிற்கும் மாறனிற்கும் நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தியிருந்தார். அதற்கு காரணமும் உண்டு. அது தனக்கும் யாகாஷுக்கும் மட்டுமே தெரியும். மகனுக்கு லேசுபாசாய் விஷயம் தெரியும் என்பதறிவார்.
வேறு யாரிடமும் அதைப்பற்றி அவர் மூச்சுவிட்டிருக்கவில்லை. தன் மகன் திருமணம் பற்றிய பேச்சின் போது தான் மிதிலாவிடம் நடந்ததை முழுதாய் உரைத்திருந்தார்.
 
அதன்பொருட்டு தான் அவரும் வேணு அதை நினைத்து வருந்துக்கிறாரோ என்று எண்ணிஅப்படி விசாரித்திருந்தார்.
“தேவா கல்யாணத்தை பொறுத்தவரை எனக்கு எந்த கவலையும் இல்லை. அது எல்லாருக்குமே நல்லது தான்”
“அப்புறம் என்ன கவலை உங்களுக்கு”
“நான் ரொம்ப தனிமையா பீல் பண்ணுறேன் மிதிலா” என்று அவர் சொல்லவும் மிதிலாவிற்கு அதை எப்படி எடுத்துக்கொள்வது என்று புரியவில்லை.
இவர் ஒருவேளை தன் அருகாமையை விரும்புகிறாரோ என்று காதல் கொண்ட மனம் ஒரு நொடி துள்ளினாலும் மறுநொடியே அந்நினைப்பு அவரை தூக்கிவாரிப் போடச் செய்தது.
‘அவரே பேசட்டும் தானாய் எதையும் கேட்டு வைக்கக்கூடாது’ என்று முடிவெடுத்தவராய் வேணுகோபாலையே பார்த்தார்.
சில நொடி மௌனமாகவே கழிந்தது. மிதிலா எதுவும் கேட்பாரென்று அவர் இருக்க அவர் பேசட்டும் என்று மிதிலா இருந்தார்.
வேறு வழியில்லாமல் மிதிலாவே ஆரம்பித்தார். “ஏன் வேணு உன்கூட தனுஷ், புவனா, யாகாஷ் எல்லாரும் தானே இருக்காங்க. ஏன் இந்த மாதிரி ஒரு உணர்வு” என்று சொல்லி கவனமாய் தன் பெயரை தவிர்த்தார் அங்கு.
“எல்லாரும் இல்லைன்னு நான் எப்போ சொன்னேன்”
“அப்போ நீங்க சொன்னதுக்கு என்ன அர்த்தம். தனியான உணர்வு எப்போ வரும், தன்னோட யாருமே இல்லைன்னா தானே” என்று விளங்க கேட்டார் மிதிலா.
“என் மனசு தனியா பீல் பண்ணுது மிதிலா. நான் அதைத்தான் சொன்னேன். என் மனைவி இறந்தப்போ கொஞ்ச நாள் இப்படி ஒரு உணர்வோட தான் இருந்தேன்”
“நெஞ்செல்லாம் வலிக்கற மாதிரி இருக்கும், வெறுமையான உணர்வு. அவளோடவே நானும் போயிருக்கலாம்ன்னு கூட தோணியிருக்கு”
“ச்சோ என்ன வேணு இது” என்ற மிதிலாவிற்கு அவர் பேசியது கஷ்டமாயிருக்க அவரின் கையை ஆறுதலாய் பற்றினார் தன்னையுமறியாமல்.
வேணுகோபால் அதை தான் பார்த்தார். சில மணித்துளிகள் அவர் கரங்களின் மீதிருந்த மிதிலாவின் கரத்தையே பார்த்துக் கொண்டிருந்தவர் நிமிர்ந்து இப்போது மிதிலாவை பார்த்தார்.
“என்னை கல்யாணம் பண்ணிக்கறியா மிதிலா” என்று சட்டென்று போட்டு உடைத்துவிட்டார் அவர்.
மிதிலா சிலையென அமர்ந்துவிட்டார். இதை அவர் முற்றிலும் எதிர்பார்த்திருக்கவில்லை.
என்ன சொல்லவென்று தோன்றவில்லை, பிரம்மை பிடித்தது போல் தான் அமர்ந்திருந்தார் இன்னமும்.
“எனக்கு தெரியும் மிதிலா நான் கேட்கறது தப்புன்னு. இந்த எண்ணம் எனக்கு தோணி ரொம்ப நாளாச்சு. உன்னை தேவா இங்க கூட்டிட்டு வந்த புதுசுல நான் இப்படி நினைக்கலை”
“ஆனா நாள் போகப்போக என்னோட பீலிங்க்ஸ் எல்லாம் என்னையறியாம உன்கிட்ட சொல்லியிருக்கேன்”
மிதிலா சுயவுணர்வு பெற்றவராய் “அது நான் உங்களோட பிரண்டுன்னு நினைச்சு ஷேர் பண்ணியிருப்பீங்க”
“நானும் ஆரம்பத்துல அப்படி நினைச்சு தான் என்னை நானே சமாதானம் செஞ்சுக்கிட்டேன். ஆனா அது அப்படியில்லைன்னு ஒவ்வொரு முறையும் எனக்கு தோணும்”
“இந்த வயசுல போய் இதெல்லாம் தேவையான்னு கூட நினைச்சேன். எனக்கு உன்கிட்ட இப்படி கேட்டதுல வருத்தமெல்லாம் இல்லை. என் பையன் எதுவும் சொல்லிடுவான் மருமக எதுவும் சொல்லிடுவான்னு எல்லாம் நான் நினைக்கலை”
“நீ… நீ என்ன சொல்லிடுவியோன்னு தான் பயந்தேன். எப்போ உனக்கும் என்னைப் பிடிக்கும்ன்னு எனக்கு தோணிச்சோ அப்போவே மனசுல இருக்கறதை உன்கிட்ட சொல்லணும்ன்னு முடிவு பண்ணேன், இதோ சொல்லிட்டேன்”
“வேணு எனக்கு புரியலை. நீங்க என்ன நினைச்சுட்டு இப்படி பேசறீங்கன்னு. அன்னைக்கு நான் டீ போடுறதை பத்தி பேசினப்போ சொன்னதை மனசுல வைச்சு சொல்றீங்கன்னு நினைக்கிறேன்”
“அது ஏதேச்சையா நான் சொன்னது. தவிர எனக்கு இதுல உடன்பாடு இருக்கும்ன்னு நீங்களா எப்படி முடிவு செய்யலாம்”
“முடிவு செய்யலை மிதிலா எனக்கு சொல்லணும்ன்னு தோணிச்சு அவ்வளவு தான். இதை நீ கன்சிடர் பண்ணா சந்தோசம், இல்லைன்னாலும் சந்தோசம் தான்”
“எதுவா இருந்தாலும் உன் முடிவு தான். உன்னை கட்டாயப்படுத்த விரும்பலை நான் இந்த விஷயத்துல”
“ஆனா கடைசியா ஒண்ணு சொல்லணும். என் மனசார சொல்றேன், இதை சொல்ல நான் வெட்கப்படலை. என் மனைவிக்கு பிறகு ஒரு பொண்ணு என் மனசுக்குள்ள நுழைஞ்சு இருக்கான்னா அது நீ தான்”
“ஏன் உங்களுக்கு என்னை முன்னமே தெரியாதா அப்போ இதெல்லாம் உங்களுக்கு தோணலையான்னு நீ கேட்கலாம். அதுக்கு என்கிட்ட பதில் இல்லை”
“உங்களுக்கு வேற ஆளே கிடைக்கலையா வேணு. என்னை பார்த்து ஏன் இப்படி கேட்டீங்க”
“இது நான் எதிர்பார்த்த கேள்வி தான். நான் முழுசா சொல்லி முடிக்கறதுக்குள்ள நீ கேள்வி கேட்டா எப்படி மிதிலா. இத்தனை வருஷத்துல நான் எந்த பொண்ணையும் கடந்து வரலைன்னு நினைக்கறியா நீ”
“எல்லாரையும் கடந்து தான் வந்திருக்கேன். என் மனைவியோட ஆசை நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணுங்கறது அதை கூட நான் செய்யலை”
“ஏன்னா எனக்கு தோணலை. என் பையனை வளர்க்கணும் அவன் ஆளாகணும் இப்படி எண்ணங்கள் தான் அப்போ மனசுல இருந்துச்சு. தவிர என் மனைவியை மறந்து இன்னொரு கல்யாணத்தை நான் விரும்பலை”
“இப்போ மட்டும் உங்க…”
“என்ன கேட்க போறே இப்போ மட்டும் உங்க மனைவியை மறந்திட்டு இன்னொரு கல்யாணம்ன்னு தானே கேட்கப் போறே”
“அவளை மறந்திட்டேன்னு யார் சொன்னது. அவ எப்பவும் என் மனசுல இருக்க தான் செய்யறா, அவளோட வாழ்ந்த அந்த நாட்களை என்னால இப்பவும் மறக்க முடியாது தான்”
“அவளுக்கு பின்னாடி என்னையறியாம நீ இப்போ நுழைஞ்சுட்ட, இப்போ நீங்க ரெண்டு பேருமே என் மனசுல இருக்கீங்க”
“ஒருத்தி தெய்வமா இருக்கா. நீ என் தோழிங்கற எல்லையை தாண்டி இருக்க அவ்வளவு தான். என்னோட தனிமைக்கு தான் நான் உன்னைத் தேடுறேன்னு நினைக்க வேண்டாம்”
“இது நிச்சயம் வேற மாதிரி இல்லைன்னு நீ புரிஞ்சுக்கணும் மிதிலா. நான் சொல்ல வர்றது உனக்கு புரியுது தானே.” என்று அவர் சொல்லும் போது மிதிலாவிடத்தில் அப்படியொரு இறுக்கம்.
“என… எனக்கு உன் கையை பிடிச்சுட்டு விடிய விடிய பேசணும், ஒண்ணா கைக்கோர்த்து நடந்து போகணும். நம்மோட மிச்ச காலத்தை ஒருத்தருக்கொருத்தர் ஒண்ணா இருந்து பகிர்ந்துக்கலாம்ன்னு சொல்ல வர்றேன்”
மிதிலா அவர் சொன்ன அத்தனையும் கேட்டு கல்லாகவே அமர்ந்திருந்தார். எந்த பதிலும் சொல்லவேயில்லை.
பின் என்ன நினைத்தாரோ கையில கட்டியிருந்த வாட்சை பார்த்தவர் “நான் கிளம்பறேன்” என்று எழுந்திருந்தார்.
“நானும் வர்றேன்” என்று பின்னோடே எழுந்தார் வேணுகோபால்.
“நான் தனியாவே போய்க்கறேன்”
“இதை தான் உன் பதிலா நான் எடுத்துக்கணுமா” என்றார் வேணு அழுத்தந்திருத்தமாய்.
மிதிலா பதிலேதும் சொல்லாமல் ஒரு பார்வை வீசிச்சென்றவர் கிளம்பியே விட்டார்.
——————–
தனுஷ் ஹோட்டலுக்காய் ஓரிடத்தில் மொத்தமாய் காய்கறிகள் வாங்குவதற்கு புதிதாய் ஒருவரிடம் பேசியிருக்க இவன் அந்த இடத்தை நேரில் கண்டுவரச் சென்றிருந்தான்.
வேணுகோபாலும் காலையிலேயே மருதமலை செய்வதாக சொல்லிவிட்டு சென்றிருக்க அன்று விடுமுறை தினமாதலால் புவனா வீட்டில் தனியே இருந்தாள்.
தனுஷ் ஹோட்டலில் இருந்தால் மதியம் ஒருமுறை மாலை ஒரு முறை என்று வீட்டிற்கு வந்து செல்வான். அவளிருக்கும் போது தான் அப்படி செய்வான், அதை அவளறியாள்.
அவன் எப்போதும் அப்படித்தான் செய்வான் என்றே எண்ணியிருந்தாள். எப்எம்மில் ஏதோ பழைய பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது. 
அதைக்கேட்டுக் கொண்டே மதிய உணவை செய்துக் கொண்டிருந்தாள். வேணுகோபால் சற்று முன்னர் தான் அவளுக்கு அழைத்திருந்தார் அவர் வருவதற்கு தாமதம் ஆகுமென்று.
“என்னாச்சு இந்த மாமாக்கு ஆளே டல்லா இருக்காங்க. காலையில கோவிலுக்கு கிளம்பி போனாங்க. இந்நேரம் வீட்டுக்கே வந்திருக்கணும். வர்றதுக்கு லேட்டாகும்ன்னு சொல்றாங்க”
“இவர் என்ன தான் பண்ணுறாரோ தெரியலை. அப்பாவை கூட கவனிக்காம அப்படி என்ன தான் அந்த ஹோட்டல்ல இருக்கோ” என்று வீட்டில் யாருமில்லாததால் சத்தமாகவே பேசிக்கொண்டாள்.
வாசலில் அழைப்பு மணி கேட்க தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு. தேவா வந்திருப்பானோ என்று அவள் வேறு சத்தமாய் பேசினாளே என்ன நினைப்பானோ என்று எண்ணியவாறே சமையலறையில் இருந்து வெளியே வந்தவள் வாசலில் நின்றிருந்தவனை பார்த்து முகம் சுளித்தாள்.
‘இவன் எதுக்கு இங்க வந்திருக்கான்’ என்று நினைத்தவாறே அப்படியே நின்றிருந்தாள். வந்தது மாறன் அவனை பார்த்து தான் அப்படி நின்றாள்.
“என்ன புவி கதவை திறக்க மாட்டியா?? நான் என்ன உன்னை கடிச்சா திங்கப்போறேன். உன்கிட்ட மன்னிப்புக் கேட்க தான் உன் வீடு தேடி நானே வந்தேன். அன்னைக்கு நான் பண்ணது ரொம்ப தப்பு”
“வீட்டுக்கு போய் அம்மாகிட்ட சொன்னேன், அவங்க என்னை திட்டினாங்க. ஏற்கனவே மாமா என் மேல கோவமா இருக்காங்க இதுல நான் இப்படி பண்ணேன்னு தெரிஞ்சா கொஞ்சம் கூட என்னை மன்னிக்கவே மாட்டாங்கன்னு சொன்னாங்க”
“அதான் உன்னை நேர்ல பார்த்து மன்னிப்பு கேட்க வந்தேன் புவி” என்றான் அவன் முகத்தை அப்பாவியாய் வைத்துக்கொண்டு.
அவன் அவ்வளவு தூரம் சொல்லவும் புவனா கொஞ்சமே கொஞ்சம் அவனை நம்பியிருக்க க்ரில் கதவு வரை சென்றுவிட்டாள்.
“சரி புவி வந்தாச்சு மன்னிப்பு கேட்டாச்சு. நீ என்னை நம்பலைன்னு தெரியுது, நான் கிளம்பறேன்” என்று அவன் திரும்பி நடக்கப் போக புவனா இப்போது இன்னும் கொஞ்சம் அவனை நம்பி ஏமாந்து கதவை திறந்திருந்தாள்.
“உள்ள வாங்க மாமா” என்று அழைத்தாள்.
அவன் வரவும் சோபாவை காட்டி அவனை அமரச் சொன்னாள். “தேங்க்ஸ் புவி, எங்கே நீ என்னை மன்னிக்கவே மாட்டியோன்னு பயந்திட்டேன்” என்றான்.
அவன் ஏற்கனவே திட்டமிட்டு தான் அங்கு வந்திருந்தான். அவனுக்கு அவள் வீட்டில் யாருமில்லை என்ற விஷயம் தெரிந்திருந்தது.
வேணு காலையிலேயே கிளம்புவதை பார்த்திருந்தான். அதுவும் அவர் அன்று அவனை அடித்த மிதிலாவுடன் கிளம்பிச் செல்வதை கண்டுக்கொண்டான்.
‘பெருசு வாழுது’ என்று வேறு சொல்லிக்கொண்டான் மனதிற்குள். புவனாவின் கணவன் அருகில் தான் ஹோட்டல் வைத்திருக்கிறான் என்ற தகவலும் அவனுக்கு அத்துப்படி.
எல்லாம் பாலாஜியை கைக்குள் போட்டுக்கொண்டு தெரிந்தது தான். தனுஷ் ஹோட்டலில் இல்லை என்பதையும் அங்கு ஹோட்டலுக்கு யாரோ போல் காபி அருந்தச் சென்றவன் பார்த்திருந்தான்.
எல்லாம் யோசித்து தான் மனதிற்குள் ஏதோ திட்டம்தீட்டி புவனாவை தன் வசப்படுத்தி அழைத்துச் செல்வது அல்லது தனக்கு உடண்படுத்துவது என்று தான் வந்திருந்தான்.
“புவி உன் கையால ஒரு காபி போட்டுத் தரமாட்டியா எனக்கு. உன் கையால காலம் முழுக்க சாப்பிடப் போறேன்னு கனவு கண்டேன். அதெல்லாம் தான் என்னென்னவோ ஆச்சு” என்று சொல்லி பெருமூச்சுவிட்டுக் கொண்டான்.
புவனாவிற்கு அவனை உள்ளே அழைத்து தவறோவென்று மனம் சொன்னது. ஏனோ அது கன்னாபின்னாவென்று அடித்துக் கொண்டது.
இவன் இங்கிருந்து கிளம்பினால் போதும் என்றிருந்தது அவளுக்கு. காபி தானே போட்டுக் கொடுத்து முதலில் அவனை வெளியே அனுப்பிவிட வேண்டும் என்று எண்ணி “அதுக்கென்ன மாமா இதோ போட்டுத் தர்றேன்” என்று சமையலறை நுழைந்தாள்.
அதை தனக்கு சாதகமாய் எடுத்துக்கொண்டவன் மெதுவாய் பூனைப் போல நடந்துச் சென்று கிரில் கதவை சாத்தி தாழிட்டவன் அடுத்திருந்த மரக்கதவை பூட்டி சாவியை தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.
“என்ன டியர் காபி போடுறியா?? எனக்கு காபி சாப்பிடுற மூட் எல்லாம் போச்சு. இப்போ உன்னையே சாப்பிடுற மூட்ல இருக்கேன்” என்று அவள் பின்னே நெருக்கமாய் வந்து அவன் சொல்ல அவளுக்கு தூக்கி வாரிப்போட்டது.

Advertisement