Advertisement

அத்தியாயம் – 20
தனுஷ் வெளியே கிளம்பிச் சென்றதும் பாலாஜி குழப்பம் தீராதவனாய் சுற்றிக் கொண்டிருந்தான். ‘நமக்கு ஏன் இது முன்னமே தோன்றாமல் போய்விட்டது. பேசாம அக்காகிட்டவே கேட்போம்’ என்று எண்ணி அவளை தனியே அழைத்தான்.
“என்னடா ஒழுங்கா படிக்கறியா??”
“ஹ்ம்ம் அதெல்லாம் படிக்கறேன்”
“என்ன காரியம் ஆகணும் உனக்கு என்கிட்ட”
“எதுக்கு அப்படி கேட்குறே??”
“அந்த மாதிரி நேரத்துல தானே நீ என்னை தனியா கூப்பிடுவ, சொல்லு என்ன பண்ணி வைச்சே”
“நான் எதுவும் பண்ணலை. எனக்கு ஒரு விசயம் தெரியணும்” என்று மிகசீரியசாக அவன் பேச விளையாட்டை விடுத்து அவனை கவனித்தாள் புவனா.
“சொல்லு”
“உனக்கு… உனக்கு இவரை பிடிச்சி தான் கல்யாணம் பண்ணியா”
“உனக்கு எதுக்கு இதெல்லாம் இப்போ”
“நீ இப்போ சொல்லப் போறியா இல்லையா??”
“நான் கேட்டதுக்கு நீ முதல்ல பதில் சொல்லு”
“எனக்கு தெரிஞ்சுக்கணும். நீ எப்படி மாறன் மாமாவை மறந்திட்டு இவரோட இருக்கேன்னு எனக்கு புரியலை. மாறன் மாமா எவ்வளோ நல்லவங்க, அவங்க எங்க போனாங்கன்னே தெரியலை”
“அவங்களுக்கு என்னாச்சோ ஏதாச்சோ எதுவும் தெரியலை. நீ என்னடான்னா அப்பா சொன்னாருன்னு இவரை கல்யாணம் பண்ணிக்கிட்ட, என் சந்தோசமா தான் இருக்கியா” என்ற தம்பியின் கேள்வியில் அவளுக்கு லேசாய் கண்ணீர் அரும்பியது.
தன் உடன் பிறந்தவனுக்கு தன் மீதான அக்கறையில் பெருமையில் அவளுக்கு விழிகள் கலங்கி போயிருந்தது.
“சொல்லுக்கா இவரை உனக்கு பிடிச்சிருக்கா??”
“ஹ்ம்ம்…”
“நீ பொய் சொல்றே, அப்பா கட்டி வைச்சுட்டார்ன்னு வேண்டா வெறுப்பாய் வாழ பழகிட்ட அப்படித் தானே”
“நிச்சயமா இல்லைடா”
“அப்போ நீ மாறன் மாமாவை விரும்பலைன்னு சொல்றியா”
“மாறன் மாமாவை நான் எப்பவும் விரும்பினதில்லை”
“அப்போ எதுக்கு கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்ட”
“வீட்டில பார்த்த மாப்பிள்ளை அதனால சரின்னு சொன்னேன்”
“உனக்கு மாமா மேல கொஞ்சம் கூட காதலோ அன்போ வரலைன்னு சொல்றியா. இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு”
“இங்க பாரு, உனக்கு இவ்வளவு விளக்கம் சொல்லணும்ன்னு எனக்கு தேவையில்லை. ஆனாலும் உனக்கு புரியறவிதமா சொல்றேன் நல்லா கேட்டுக்கோ”

“மாறன் மாமா ஒண்ணும் ரொம்ப நல்லவர் எல்லாம் இல்லை”
“அவர் லெட்டர் எழுதி வைச்சுட்டு ஓடிப்போனதை பத்தி சொல்றியா. யாரோ அவரை பயமுறுத்தி அப்படி செய்ய வைச்சு இருக்காங்க. அவரே என்கிட்ட சொன்னாரு”
“அன்னைக்கே எனக்கு சந்தேகம் தான் அவர் அப்படி செய்யக்கூடிய ஆளெல்லாம் இல்லைன்னு”
“கொஞ்சம் வாயை மூடு பாலாஜி. நான் சொல்றதை கேளு. அந்த மாறன் நிஜமாவே சரியானவர் இல்லை, எப்படின்னு எல்லாம் கேட்காத எனக்கு அதெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது”
“கல்யாணத்தப்போ கூட நான் அம்மாகிட்ட சொன்னேன் எனக்கு இந்த கல்யாணம் வேணாம்ன்னு. மாறன் மாமா வேணாம்ன்னு நான் சொன்னேன்”
“என்ன சொல்றே நீ??”
“உண்மை தான் சொல்றேன். அப்புறம் தான் அப்போ என்னென்னவோ நடந்து எனக்கும் அவர்க்கும் கல்யாணம் ஆச்சு”
“அவரை எனக்கு பிடிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்”
“அப்போ நீ அவரை கல்யாணம் பண்ணிக்க தான் மாறன் மாமா கூட நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்துனியா??”
“முட்டாள் மாதிரி பேசாத பாலாஜி. கல்யாணம் நின்னதுக்கு காரணம் நானில்லை. ஆனா எனக்கு தேவாவை பிடிக்கும், அவரை மட்டும் தான் பிடிக்கும்”
“அப்புறம் மாறன் மாமா சொல்றதை எல்லாம் நம்பாத. அவரு சரியில்லாதவரு, கல்யாணத்துக்கு முன்னாடியே என்கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தாரு. இப்போ போன வாரம் என்னை நேர்ல பார்க்க வந்திட்டு திரும்பவும் என்கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தார்”
“இனி அவரோட உனக்கு எந்த பேச்சு வார்த்தையும் வேணாம் அவ்வளவு தான் சொல்லிட்டேன்” என்றாள் தீர்க்கமாய்.
பாலாஜி மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. அமைதியாய் சென்றுவிட்டான். மாலை தனுஷ் அவளை அழைத்துச் செல்ல வந்திருந்தான்.
அப்போது பாலாஜியை தனியே வெளியே கூட்டிச் சென்றான். “என்ன மச்சான் கேட்டியா உங்கக்காகிட்ட”
“ஒண்ணும் கேட்கலை” என்றான் முகத்தை திருப்பி
“அப்போ கண்டிப்பா கேட்டிருக்க”
“ஆமா கேட்டேன், அவ என்னவோ லூசு மாதிரி உங்களைத் தான் பிடிச்சிருக்கு. உங்களை மட்டும் தான் பிடிச்சிருக்குன்னு சொல்றா” என்று அவன் சொல்லவும் உள்ளே மழைச்சாரல் அடித்தது அவனுக்கு.
“அப்புறமும் உனக்கு என் மேல என்ன துவேஷம் பாலாஜி”
“நீங்க தான் இந்த கல்யாணத்தை நிறுத்தி எங்கக்காவை கல்யாணம் பண்ணிக்க ஏதோ செஞ்சிருக்கீங்கன்னு தோணுது எனக்கு. மாறன் மாமாவை எனக்கு ரொம்ப வருஷமா தெரியும் அவர் அப்படி கிடையாது” என்று பாலாஜி சொல்லவும் தனுஷின் முகம் லேசாய் கருத்தது.
திருமண விஷயத்தில் அவன் எதுவும் செய்யவில்லை என்றாலும் அதற்கு காரணம் ஏதோவொரு விதத்தில் தன் தந்தை என்பதால் அவன் முகம் அப்படியானது.
அதை பாலாஜி சுட்டிக்காட்டவும் தானில்லை என்றாலும் தன்னை சேர்ந்தவர்களை சொன்னால் அதை தன்னை சொன்னது போலத்தானே என்று எண்ணி அமைதியானான்.
வேறொன்றும் அவனிடத்தில் மேற்கொண்டு பேச்சை வளர்த்தாமல் புவனாவை அழைத்துக்கொண்டு அவன் வீட்டிற்கு சென்றுவிட்டான்.
——————–
“ஹலோ மிதிலா, வேணு பேசறேன்…”
“சொல்லுங்க வேணு…”
“நாளைக்கு நீ ப்ரீயா??”
“என்ன விஷயம் வேணு?? எனக்கு நாளைக்கு ஆபீஸ் இருக்கே…”
“ஓ!!”
“ஹலோ!! வேணு!! ஹலோ!! இருக்கீங்களா??”
“ஹான் இருக்கேன் மிதிலா…”
“என்ன விஷயம் வேணு?? நான் இப்போ வேணா கிளம்பி வரட்டுமா…”
“இல்லை வேணாம் மிதிலா, உன் கூட கொஞ்சம் பேசணும் அதான் கேட்டேன்…”
“ஹ்ம்ம்…” என்று யோசித்த எதிர்முனை பின் “எதுவும் பிரச்சனையா வேணு??” என்றது.
“இல்லையில்லை அப்படியெல்லாம் எதுவுமில்லை… எனக்கு தான் மனசு கொஞ்சம் சரியில்லை…”
“நான் இப்போவே கிளம்பி வர்றேன்” என்றார் மிதிலா.
“அச்சோ அதெல்லாம் வேணாம் மிதிலா… உன்கிட்ட பேசினா நல்லாயிருக்கும்ன்னு தோணுச்சு… நாளைக்கு இல்லையினா என்ன இன்னொரு நாள் பேசிக்கலாம்… உனக்கு லீவ் இருக்க அன்னைக்கு சொல்லு பேசுவோம்…”
“வேணு என்னன்னு சொல்லுங்களேன், எனக்கு பயமா இருக்கு. திரும்ப நெஞ்சு வலி எதுவும் இருக்கா…”
“மிதிலா ப்ளீஸ் என்னை பேஷன்டா ட்ரீட் பண்ண வேண்டாம்… நிஜமாவே உன்கிட்ட பேசணும்ன்னு நினைச்சேன், வேற எதுவும் இல்லை…”
“வேணு உங்களுக்கு நாளைக்கு பேங்க் இருக்குமே??” என்றார் கேள்வியாய்.
“ஆமா இருக்கு… உனக்கு லீவ்வா இருக்கும்ன்னு நினைச்சு நான் லீவ்க்கு சொல்லிட்டேன்… இப்போ என்ன அதை கேன்சல் பண்ணிக்க சொல்லிடறேன், இல்லையின்னா தேவா கூட ஹோட்டல்க்கு போய்டறேன்”
“நோ… நோ… அப்படி எதுவும் செய்ய வேணாம்…” என்று சொல்லி நிறுத்தியவர் சற்றே யோசிப்பது புரிந்தது வேணுவிற்கு.
“நான் நாளைக்கு வர்றேன், லீவ் சொல்லிட்டு வர்றேன்… காலையில ஒரு பத்து மணி போல உங்க வீட்டில இருப்பேன் ஓகே தானே…”
“தேங்க்ஸ் மிதிலா!!” என்றவர் “வீட்டுக்கு வேணாம் மிதிலா, மருதமலைக்கு போகலாம்…”
‘என்ன மருதமலைக்கா?? என்னாச்சு இந்த வேணுவுக்கு’ என்ற யோசனை உள்ளே ஓடியது மிதிலாவிற்கு.
“கோவில்க்கா எதுவும் விசேஷமா வேணு??”
“இல்லை மிதிலா அதெல்லாம் இல்லை… மனசு ஒரு மாதிரியா இருக்குன்னு சொன்னேன்ல அதான் கோவில்க்கு போகலாம்ன்னு…”
“சரி போகலாம்… யாரெல்லாம் போகப் போறோம்??”
“உன்கிட்ட தானே தனியா பேசணும்ன்னு சொன்னேன்… அப்புறம் யாரெல்லாம் வருவாங்கன்னு கேட்கறே?? நாம ரெண்டு பேரு தான் போகப் போறோம்… காலையில நீ ஒரு எட்டு மணிக்கு தயாரா இரு, நானே வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கறேன்” என்றார் அவர்.
“வேணாம் வேணு. நான் நேரா கோவிலுக்கு வந்திடறேன்” என்றார் அவர்.
“நானும் தானே வரணும், ரெண்டு பேரும் சேர்ந்தே போய்டலாம்”
“இல்லை அது…”
“கார் புக் பண்ணியிருக்கேன் அதுல போய்டலாம்” என்று முடித்துவிட்டார் அவர்.
‘இதென்ன வேணு பேச்செல்லாம் புதுசா இருக்கு. தனுஷ்கிட்ட கார் இருக்கும் போது எதுக்கு கார் புக் பண்ணி போகணும்ன்னு அதுவும் என்கூட’ என்று இரவெல்லாம் ஒரே யோசனை மிதிலாவிற்கு.
பொழுதும் புலர்ந்துவிட்டது. மிதிலா குளித்து முடித்து தனக்கு பிடித்த கரும்பச்சையில் பார்டரில் வெந்தய நிறம் கொண்ட அந்த சில்க் காட்டன் புடவையை அணிந்து தயாராகி இருந்தார்.
காலை உணவு சாப்பிட்டு கிளம்ப வேண்டுமா இல்லையா என்ற யோசனையோடு அப்படியே அமர்ந்துவிட வெளியில் கார் ஹார்ன் சத்தம் கேட்டது.
சரி இன்னைக்கு பாஸ்டிங்ன்னு நினைச்சுக்க வேண்டியது தான் என்று எண்ணியவாறே தன் ஹேண்ட்பேக் எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு கதவை பூட்டி வெளியில் வந்தார்.
“ரெடியாகிட்டியா… இனிமே தான் ரெடி ஆகப்போறியோ போன் கூட பண்ணலையேன்னு நினைச்சுட்டு இருந்தேன்” என்றார் வேணு வண்டியில் இருந்தவாறே.
“உட்காரு மிதிலா” என்று அவர் சொல்ல காரின் பின்னிருக்கை கதவை திறந்து உள்ளே அமர்ந்தார் மிதிலா.
“தம்பி நானும் பின்னாடி உட்கார்ந்துக்கறேன்” என்று டிரைவரிடம் சொல்லிவிட்டு அவரும் இறங்கி பின்னே வந்து அமர மிதிலாவிற்கு ‘என்னடா நடக்கிறது’ என்று திக்கென்று அமர்ந்திருந்தார்.
பொதுவான பேச்சுக்களையே இருவரும் பேசிக்கொண்டு வந்தனர். ‘அப்பா நாம பயந்த மாதிரி எதுவுமில்லை’ என்று மெல்ல ஆசுவாசமானார் மிதிலா.
கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து மனமார தங்களின் வேண்டுதல் வைத்து இருவரும் வெளியே வந்தனர். அதுவரையிலும் கூட எந்த பேச்சுமில்லை.
“இங்க கொஞ்ச நேரம் உட்காருவோம்” என்று வேணுகோபால் சொல்ல இருவரும் அமர்ந்தனர்.
சிறிது நேரம் அமைதியில் கழிந்தது. மிதிலாவும் ஒன்றும் கேட்கவில்லை.
“என்ன பேசப்போறேன்னு உனக்கு கேட்க விருப்பமில்லையா மிதிலா” என்றார் வேணுகோபால் அமைதியை உடைத்து.
“பேசணும்ன்னு சொன்னது நீங்க தானே. அப்போ நீங்களே சொல்லட்டும்ன்னு தான் பேசாம இருக்கேன்” என்றார் அவர் பதிலாய்.
“என்னை கல்யாணம் பண்ணிக்கறியா மிதிலா” என்று சட்டென்று போட்டு உடைத்துவிட்டார் அவர்.
மிதிலா சிலையென அமர்ந்துவிட்டார்.

Advertisement